![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [185 Issues] [1827 Articles] |
Issue No. 185
![]() இதழ் 185 [ ஜூலை 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
திருப்புத்தூர் சிவகங்கைப் பெருவழியில் ஒக்கூரிலிருந்து பிரியும் கீழப்பூங்குடிச் சாலை திருமலைக்கு வழிவிடுகிறது. கீழப்பூங்குடியில் இருந்து வலப்புறம் பிரியும் பாதையில் 4 கி.மீ. தொலைவு சென்றால் ஒரு கைக்காட்டியைச் சந்திக்கலாம். அதில் அளகைமாநகரி எனக் குறிக்கப்பட்டிருக்கும் திசையில் அரைக் கிலோமீட்டர் பயணித்தால் திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கண்களில் படமாகிறது.
கல்வெட்டுகள் இக்கோயில் வளாகத்திலிருந்து 1924ல் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையால் முப்பத்திரண்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.1 களஆய்வின்போது மேலும் 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.2 இம்முப்பத்தைந்து கல்வெட்டுகளுள் ஒன்றுகூடக் குடைவரை மண்டபத்திலோ, அதன் முகப்புத் தூண்களிலோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் சந்தனப் பலகை, நீர்த்தொட்டிக் கல்வெட்டுகளைத் தவிர்த்துவிட்டால், ஏனைய முப்பத்து மூன்றும் பிற்பாண்டியர் கல்வெட்டுகளாகவே அமைந்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகளோ, விஜயநகர, நாயக்கர் காலக் கல்வெட்டுகளோ இந்த வளாகத்தில் இடம்பெறாமையும் இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள திருக்கோட்டியூரில் அவை இடம்பெற்றுள்ளமையும் எண்ணத்தக்கன. பிற்பாண்டியர் கல்வெட்டுத் தரவுகளின் அடிப்படையில் குடைவரைக்கு முன்னுள்ள வளாகம் அவர்தம் காலத்திலேயே உருவானதாகக் கொள்ளலாம். பாண்டியர் கல்வெட்டுகளுள், 'பூமருவிய திருமாதும் எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி பெற்ற சடையவர்மர் வீரபாண்டியரின் (பொ. கா. 1170-1195) மூன்று கல்வெட்டுகளே3 காலத்தால் முற்பட்டவை. இம்மன்னரின் கல்வெட்டுகள் அருகிலுள்ள திருக்கோட்டியூர்க் கோயிலிலும் இடம்பெற்றுள்ளன. பொ. கா. 1190ல் இருந்து 1218வரை அரசாண்ட, ‘பூவின் கிழத்தி' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்குச் சொந்தக்காரரான முதலாம் சடையவர்மர் குலசேகரர் காலக் கல்வெட்டுகளே இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. பத்துக் கல்வெட்டுகள் மெய்க்கீர்த்தியுடனும் ஆறு கல்வெட்டுகள் மெய்க்கீர்த்தி இல்லாமலும் வெட்டப்பட்டுள்ளன.4 சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டியர் (பொ. கா. 1216-1244) காலக் கல்வெட்டுகள் ஐந்தும்5 பொ. கா. 1218ல் இருந்து 1232வரை அரசாண்டதாகக் கருதப்படும் முதலாம் மாறவர்மர் விக்கிரம பாண்டியரின் கல்வெட்டு ஒன்றும்6 ‘பூமலர் திருவும் பொரு ஜெய மடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்குரிய இரண்டாம் மாறவர்மர் சுந்தர பாண்டியரின் (பொ. கா. 1238 1255) கல்வெட்டுகள் மூன்றும்7 இங்குள்ளன. இவை தவிர, மெய்க்கீர்த்தி அற்ற நிலையில் சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் நான்கு கல்வெட்டுகளைக் காணமுடிகிறது.8 அவரை முதலாம் சடையவர்மர் பராக்கிரமராகக் கொண்டால், ஆட்சிக் காலம் பொ. கா. 1315ல் இருந்து 1334 வரையென அமையும். மன்னர் பெயரற்ற நிலையில் உள்ள கல்வெட்டு, அரச ஆணையாக அமைந்துள்ளது.9 திருமலைக் கல்வெட்டுகளை முழுமையாக ஆராய்ந்த நிலையில் இக்கோயிலின் இருநூறு ஆண்டுக் கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்திருந்தமையை மலை மேலுள்ள ஓவியங்களும் பொ. கா. மு. முதல் நூற்றாண்டளவில் இந்த மலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்தமையைப் பழந்தமிழ்க் கல்வெட்டுகளும் நிறுவினாலும், தொடரான வரலாற்றைப் பெறக்கூடிய அளவிற்குத் தரவுகள் இல்லை. பிற்பாண்டியர் காலத்து நேர்ந்த திருப்பணிகளும் புதிய கட்டுமானங்களும் இப்பகுதியின் பழைமையான சான்றுகளை அகற்றிவிட்டனவோ எனக் கருதவேண்டியுள்ளது. வளநாடு - நாடு பாண்டிய மண்டலம் இரண்டு கல்வெட்டுகளில், ‘பாண்டி மண்டலம்' என்று யகரத்தை இழந்த நிலையில் சுட்டப்பட்டுள்ளது.10 மதுரோதய வளநாடு, கேரளசிங்க வளநாடு எனும் இரண்டு வளநாடுகளே இங்குள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.11 வடகளவழிநாடு, வடகோனாடு, அண்டநாடு, தென்பறப்புநாடு எனும் நாட்டுப் பிரிவுகளையும் மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம், கீழ்க்களக் கூற்றம் எனும் நாட்டுப் பிரிவுகளையும்12 தரும் கல்வெட்டுகள், நாற்பத்தெட்டு ஊர்களின் பெயர்களையும் தருகின்றன. இவ்வூர்ப் பெயர்களைப் பின்னொட்டுகளின் அடிப்படையில் வகைப்படுத்தியபோது பதினான்கு ஊர்ப்பெயர்கள், ‘ஊர்’ என்ற பின்னொட்டுடன் இலங்கியமையை அறியமுடிந்தது. கீழூர், எருக்காட்டூர், குன்றத்தூர், காட்டூர், நாமனூர், வெளியாற்றூர், செவ்வூர், துறுமூர், பூவனூர், நல்லூர், திருக்கோட்டியூர், ஆற்றூர், பெரும்பற்றப்புலியூர், திருப்புத்தூர் எனும் அவற்றுள் நாமனூர், புரவுவரிநல்லூர் என்றும் பெயர் கொண்டிருந்தது.13 எருக்காட்டூர், பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதியில் விளங்கிய ஊராகலாம். அக்குடைவரையில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றிலும் இவ்வூரின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.14 குன்றத்தூர், திருமலையின் மற்றொரு பெயராகும். இக்கோயில் இறைவன் சில கல்வெட்டுகளில் குன்றத்தூர் நாயனார் என்று அழைக்கப்பட்டுள்ளார்.15 நல்லூர் எனும் பின்னொட்டுடன் பத்து ஊர்களை அடையாளப்படுத்த முடிகிறது. வானவன்மாதேவி நல்லூர், ஜயங்கொண்ட நல்லூர், ஸ்ரீவல்லவ நல்லூர், அதிசய பாண்டிய நல்லூர், காளையகால நல்லூர், ஸ்ரீகரண நல்லூர் என்பன அரசத் தொடர்புகளைச் சுட்ட, பாகதேவி நல்லூர், திருஞானசம்பந்த நல்லூர், ஸ்ரீமாகேசுவர நல்லூர் என்பன இறை மற்றும் இறையடியார் தொடர்புகளைக் காட்டுகின்றன. அதிசய பாண்டிய நல்லூர் பிராமணர் குடியிருப்பாக விளங்கியது.16 புலிக்காட்டி நல்லூர் என்று ஒரு கல்வெட்டில் சுட்டப்படும் ஊர்ப்பெயர் மற்றொரு கல்வெட்டில் புலிக்குட்டி நல்லூராக உள்ளது.17 அமரக்குடி மங்கலம், கொத்தமங்கலம், தாமோதர மங்கலம், இராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம் எனும் நான்கு ஊர்களும் மங்கலம் எனும் பின்னொட்டுக் கொண்டு பிராமணர் குடியிருப்புகளாக அடையாளப்படுகின்றன.18 ஐந்து ஊர்கள், 'குடி' எனும் பின்னொட்டுடன் அமைந்த பெயர்களைப் பெற்றுள்ளன. பொதுவக்குடி, கொட்டைக்குடி, பெருங்குடி, சிறுகுடி, பெரியகுடி எனும் அவற்றுள் பொதுவக்குடி மிழலைக் கீழ்க்கூற்றில் அமைந்திருந்தது.19 பல்வேறு பின்னொட்டுகளுடன் கிடைத்திருக்கும் பதினைந்து ஊர்களுள் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள ஒரே ஊராக அளகை மாநகரைக் குறிக்கலாம். இப்போதும் திருமலையை ஒட்டிய சிற்றூராகச் சுருங்கிப் போயிருக்கும் அளகைமாநகரைக் காண முடிகிறது. 'திரு' என்ற அடையுடன் வெண்காடு, பூவணம், ஏகம்பம், கானப்பேர் எனும் நான்கு ஊர்ப்பெயர்கள் உள்ளன. பள்ளம், குரவம், வல்லம், புற்குழி என்பன நான்கெழுத்துப் பெயர்கள். மாடக்குளம், வாணியம்பாடி, தச்சநென்மலி, பொன்பற்றி, மனப்படைவீடு என்பன பல்வேறு பின்னொட்டுகளில் அமைந்த பிற ஊர்ப்பெயர்களாகும். அரசு அலுவலர்கள் பல கல்வெட்டுகள் விற்பனை ஆவணங்களாகவும் அரச ஆணைகளாகவும் உள்ளமையால் பாண்டிய மன்னர்களின் கீழ்ப் பணியாற்றிய உயர் அலுவலர்களின் பெயர்களும் பல்வேறு பணிநிலைகளில் இருந்த பிற அலுவலர்களின் பெயர்களும் கிடைத்துள்ளன. சடையவர்மர் குலசேகரர் ஆட்சியின்போது குலசேகர மூவேந்த வேளார், அழகிய பாண்டிய மூவேந்த வேளார், வீரவிரதர் மூவேந்த வேளார், அறிவாபரண மூவேந்த வேளார், குமணராயர், ஏழகப்பெருமாள், கலிங்கத்தரையர், விளத்தூர்க் கிழவன், பட்டாலகனான குருகுலத்தரையர், ஆடவல்லான் ஆதித்ததேவனான பூழியன், குலசேகர பிரமமாராயர், அழகிய மீகாம பிரமமாராயர் இவர்கள் உயர்நிலை அலுவலர்களாக விளங்கினர்.20 'பூமருவிய திருமாதும்' மெய்க்கீர்த்திக்குரிய சடையவர்மர் வீரபாண்டியரின் ஆட்சிக்காலத்தில் திருமந்திர ஓலைகளாகச் செவ்வூருடையார் வீரபாண்டியரும் குமணராயரும் அமைந்தனர். புரவுவரித் திணைக்கள நாயகங்களாக அரையன் ஸ்ரீவல்லவனான குருகுலராயன், சேந்தநம்பியான வீரபாண்டிய மூவேந்த வேளான், வயிராதராயன், சேந்தன் ஸ்ரீவல்லவனான இராசநாராயண விழுப்பரையன், சங்கரநாராயணன் சுந்தரத் தோளுடையானான கொங்கராயன் ஆகியோர் பணியிலிருந்தனர்.21 தொண்டைமான், பல்லவாண்டார், பழந்தீபராயர் என்பார் பாண்டியர் ஆட்சியில் உயர் அலுவலர்களாக விளங்கினர்.22 பெரும்பாலான கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள களவழி நாடாள்வார்கள் வடகளவழிநாட்டைத் தம் ஆளுகையில் கொண்டிருந்த குறுநில அரசர்களாகலாம். இரண்டு கல்வெட்டுகள் நாடாள்வார் ஒருவரின் ஆணை ஓலைகளாகவே அமைந்துள்ளன.23 அவற்றுள் ஒன்று ஐயங்கொண்டார் ஸ்ரீவல்லவன் எனும் அவரது பெயரையும் தருகிறது. ‘பூமலர் திருவும்' எனும் மெய்க்கீர்த்தியை உடைய மாறவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தில் களவழி நாட்டை ஆண்டவராக எழுக பெருமாள் கண்ணிறைஞ்ச பெருமாள் வெளிப்படுகிறார்.24 களவழி நாடாள்வாரின் கணக்குப் பண்டாரிகளாக இராசசிங்கதேவன், குருகுலராயன், வெண்காடன் நாமனான தெய்வநாயக கச்சியராயன், ஆடவல்லான் ஆதித்ததேவனான பூழியதரையன் என்பார் இருந்தனர்.25 சடையவர்மர் வீரபாண்டியரின் கல்வெட்டொன்று வடகளவழி நாட்டின் கணக்காளர் சுந்தரத் தோளுடையான் சீரிளங்கோவை அடையாளப்படுத்துகிறது.26 வரிகள் பாண்டிய நாட்டில் நிலம் சார்ந்து தண்டப்பெற்ற வரிகளையும் அவை நிலவளம், விளைவு வளம் சார்ந்து தண்டப்பெற்ற வகைமைகளையும் பிறவகையான வரியினங்களையும் திருமலைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. கடமை, குடிமை, அந்தராயம், பொன்வரி, வினியோகம், அச்சு, அச்சுத்தேவை, ஸ்ரீகாரியப்பேறு, உபாதித்தண்டம், சில்வரி, பெருவரி, உம்பளவரி, பறைவரி, இனவரி, மனைவரி, புரவுவரி, புஞ்சைவரி, நாட்டோகரி, கூற்றோகரி, பிற வினியோகங்கள், பள்ளர், பறையர் பெயரால் கொள்ளும் வரிகள், வெட்டிமுட்டைஆள், எச்சோறு, கூற்றரிசி, தறியிறை, செக்கிறை, தட்டொலி, தட்டார் பாட்டம், கடைக்கூட்டிலக்கை, ஆள்தேவை, பாடிகாவல், திருமுகச்சம்படம், சிற்றாயம் எனப் பல்வேறு வரியினங்கள் அக்காலத்தே பெறப்பட்டன. வரிகள் எந்த அளவில் பெறப்பட்டன என்பதற்கும் சில கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. சடையவர்மர் வீரபாண்டியர் காலத்தில் வினியோகம் என்னும் வரியினம் ஒரு மாவுக்கு இருகலம் நெல்லாக அமைய, அந்தராயம் திரமத்துக்கு இராசிப் பணம் ஒன்றாக இருந்தது. ஐப்பசிக் குறுவை விளைவில் ஒருமா நிலத்திற்கு ஒன்றே முக்கால் கலம் நெல்லும் ஆடிக் குறுவை விளைவில் அதே அளவு நிலத்திற்கு ஒன்றரைக் கலம் நெல்லும் வரியாகப் பெறப்பட்டன. தினை, வரகு இவை பயிரிட்ட நிலங்களில் வரியினம் ஒன்றேகால் கலம் நெல்லாக அமைந்தது.27 மாறவர்மர் சுந்தர பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அந்தராயம் திரமம் முக்காலே அரைக்காலாக அமைய, ஆடிக் குறுவைக்கான வரியமைப்பில் வரகு விளைந்த நிலமும் சேர்க்கப்பட்டிருந்தது. எள், தினை இவை பயிரிட்ட நிலங்களில் வரியினம் ஒன்றேகால் கலம் நெல்லாகவும் வினியோகம் ஒரு மா நிலத்திற்குத் தூணி நெல்லாகவும் அமையப் புன்செய் விளைந்த நிலத்திற்கான அந்தராயம் அரைத் திரமமாக இருந்தது.28 வரியாகப் பெரும்பாலும் நெல்லே தண்டப்பெற்றதால் அதை அளக்கக் கோயிலில், ‘காலகண்டதேவன்’ என்ற பெயரில் அமைந்த சிறப்பளவை பயன்படுத்தப்பட்டது. விளைநிலங்களை அளந்து வரி நிர்ணயம் செய்ய, 'கோல் குடிதாங்கி' என்ற பெயரில் அமைந்த நிலஅளவு கோல் வழக்கில் இருந்தது.29 கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் வரி நீக்கப்பட்ட நிலையிலேயே அளிக்கப்பட்டன. அரசு சார்புடையவர்களால் நீக்கப்பட்ட இவ்வரியினங்களைக் கோயிலாரே பெற்று, நிருவாகத்திற்கும் கோயில் சார்ந்த வழிபாடு, படையல் இவற்றிற்கும் பயன்படுத்திக்கொள்ள, கொடையளித்தவர்களே வழிகாட்டல்களைத் தந்துள்ளமையையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அரசாணையாக அமைந்த கல்வெட்டொன்று திருமலைப் பெருமாள் கோயில், சூரதேவ ஈசுவரமுடையார் கோயில், சீவல ஈசுவரமுடையார் கோயில், கண்ணுடைய ஈசுவரர் கோயில் ஆகியவற்றிற்கு உரிய நிலங்களின் மீதான ஸ்ரீகாரியப்பேறு, அச்சுத் தேவை இவை தவிர்க்கப்பட்ட தகவலைத் தருகிறது. திருமலைப் பெருமாள் கோயில் தேவதான நிலங்களான சிங்கநம்பிக் குடிக்காடு, பாண்டியராயர் குடிக்காடு, செட்டிக் குடிக்காடு, தோரனேரி இவற்றிற்கான பொன்வரி, அச்சு இவை தவிர்க்கப்பட்ட தகவலையும் இக்கல்வெட்டால் பெறமுடிகிறது. தாம் தவிர்த்த இவ்வரியினங்கள் கொண்டு கோயில் பூசைகள், திருப்பணி இவற்றை மேற்கொள்ள அரசர் ஆணையிட்டுள்ளார்.30 இது போல் சில வரிகளைத் தேர்ந்து நீக்கியுள்ளாற் போலவே நிலத்தின் மீதான அனைத்து வரிகளையும் நீக்கியுள்ள பாங்கினையும் சில கல்வெட்டுகளில் காணமுடிகிறது. வேளாண்மை நீர்நிலம், நன்செய், புன்செய், வயக்கல் என நிலங்கள் அவற்றின் பாசனவசதி, விளைதிறன் இவற்றிற்கேற்பப் பெயரிடப்பட்டிருந்தன. விளைந்தறியாத நிலத்துண்டுகள் மனித உழைப்பால் விளைநிலம் ஆக்கப்பட்டபோது வயக்கல் என்று பெயரேற்றன. பிள்ளைச்சி வயக்கல், சாத்த வயக்கல், ஸ்ரீகண்டி வயக்கல், அறிந்தவன் விழுப்பரையன் வயக்கல், ஆதித்தன் வயக்கல், பொன்னவில்லியார் வயக்கல், குப்பை நங்கை வயக்கல், பெரியரையன் வயக்கல், பாண்டி வயக்கல், சிங்காண்டி வயக்கல், வாடாதான் தேவன் வயக்கல், காளையார் பேரையன் வயக்கல், காடன் வயக்கல் என்பன அவற்றுள் சில. விளைநிலங்களும் பெயரேற்றிருந்தன. செழியதரையன் நங்கை வயல், சீவலப்பேரையன் புஞ்சை, பொன்னாடாள்வார் குடிக்காடு, சூரதேவநாடாள்வார் பற்று, நாலுதிக்கும் வென்றான் பற்று, பழுவேட்டரையன் எனத் தனியர் பெயர்களிலும் இடையன் குடிக்காடு, வண்ணான் ஏம்பல், தச்சன் துடவல் எனத் தொழிலர் பெயர்களிலும் தாமனேரித் தோட்டம், கோனேரி வயல் என நீர்நிலைப் பெயர்களிலும் சிறுமாணிக்கம், தமராக்கிக் குடிக்காடு எனப் பொதுப்பெயர்களிலும் நிலத்துண்டுகள் குறிக்கப்பட்டமையை அறியமுடிகிறது. இறை, சமயப் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிலப் பகுதிகள் அவ்வப்பெயரை ஏற்றிருந்தன. பிள்ளையார் தேவதானம், நாச்சிக்குழி, திருமடைப்பள்ளிப்புறம், ஞானதேவ முதலியார் மடப்புறம்31 என்பன அவற்றுள் சில. விளையும் பொருள்களுக்கு ஏற்பவும் சில நிலத்துண்டுகள் பெயர் கொண்டிருந்தமையை இலுப்பைச் செய், நாவல் செய், வேப்பஞ் செய், புளியந் துடவல் எனும் அழைப்புகள் நிறுவுகின்றன. இவை தவிர, மேற்குத்தை நாற்றங்கால், தெற்குத்தை நாற்றாங்கால் எனத் திசைச் சுட்டிய நிலத்துண்டுகளும் இருந்தன. ஏரிகளும் குளங்களுமே பெரும்பான்மையான நிலத் துண்டுகளுக்குப் பாசனமளித்தன. தோரனேரி, சிங்கனேரி, மறையன் ஏரி, தாமனேரி, சோலை ஏரி, திருமால் ஏரி, சிற்றெட்டி ஏரி, எட்டி ஏரி எனப் பல ஏரிகள் இருந்தன. அலைவாய்க் குளம், மேலை இரைங்குளம், கோனேரிக்குளம், நாமனூர்க் குளம், பாடகக் குளம், தாமோதர பாடகக் குளம், ஸ்ரீமாகேசுவர நல்லூர்க்குளம், விரைக் குளம், காற்கரைக் குளம், பாற்பார்க் குளம், சிறுவேளங்குளம் எனக் குளங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கதாய் உள்ளமை இப்பகுதியில் வயல் வளம் சிறந்திருந்தமைக்குச் சான்றாகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் இருந்து பல்வேறு வாய்க்கால்கள் அகழப்பட்டு நிலங்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்டமையை அலைவாய்க் குளம் நீளக்கால், வடதலை வாய்க்கால், நடுவில் வாய்க்கால், கோனேரி வயல் வாய்க்கால், வடுகன் வாய்க்கால், வயலுக்குப் பாய்கிற பெரிய மடை, உலையக் குடிக்காட்டு வதி எனும் நீர்வழிப் பெயர்களால் அறியமுடிகிறது. குளங்கள் கரை உடைந்து நீர் வற்றிய காலங்களிலும் பாசனமின்றி நிலங்கள் பாழ்பட்ட சூழல்களிலும் அவை அருளாளர்களால் விலைக்குப் பெறப்பட்டுச் சரிசெய்யப்பட்டமையை இரண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. பராக்கிரம பாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டில் குளங்கள் உடைந்து கீழைப்புற்குழி, மேலைப்புற்குழியான புலிக்குட்டி நல்லூர் நிலத்துண்டுகள் பாழ்பட்டுப்போனதால் அந்நிலங்களைப் பயிர் செய்த குருகுலராயர் குடும்பத்தாரால் தொடர்ந்து நிலவரி செலுத்த இயலவில்லை. அதனால், நிலங்களைக் கடமை முத்துக் காராண்மையாகக் கைக்கொண்ட கோயிலார், நிலங்களைத் திருத்த முடியாமல் சில துண்டுகளைப் புன்செய்ப் போகத்துக்குத் தந்து நிலவாரம் கொண்டு அனுபவித்து வந்த நிலையில், மனப்படைவீட்டைச் சேர்ந்த பெற்றான் இராமனாதேவர் நல்லமங்கை பாகர், அவர் தம்பி எனக்கு நல்ல பெருமாள் இவர்கள் இருவரையும் சந்தித்துக் குளங்களைச் சரிசெய்து, நிலங்களைத் திருத்தி கோயிலுக்கு உரிய வரிகளையும் தந்து உதவுமாறு கேட்க, அண்ணன், தம்பி இருவரும் குளங்களையும் நிலங்களையும் பயிரிடும் உரிமையுள்ள காராண்மைக் காணியாக விலைக்குப் பெற்றனர். அந்த விலைத்தொகை மாணிக்கவாசகர், சம்பந்தர் திருமேனிகளை எழுந்தருளச் செய்யவும் திருமலைப் பெருமாளுக்குச் சூரதேவன் நீர்நிலையிலிருந்து திருமஞ்சனம் எடுப்பாருக்கு உதவவும் கோயில் நடைமுறைகளுக்கான முதலாகவும் வைக்கப் பெற்றது.32 நெல், கரும்பு, இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, வரகு, எள், தினை இவை பெரும்பாலான நிலங்களில் பயிரிடப்பட்டன. ஐப்பசிக் குறுவை, ஆடிக் குறுவை, கோடைப்போகம் எனப் பல பருவ விளைவுகளை மேற்கொண்டனர். விளைதிறன், பாசன வசதி கொண்டு நிலங்களைத் தரம் பிரித்து வரிகளை நிர்ணயம் செய்தனர். நிலமளக்கக் கோல் குடிதாங்கியும் வரியினங்களைப் பெற மரக்கால் காலகண்டதேவனும் பயன்பட்டன. குறிப்புகள் 1. ARE 1924:10 - 41. கல்வெட்டுகளின் பாடங்களைத் தந்துதவிய இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் முதுநிலைக் கல்வெட்டு அலுவலர் முனைவர் சூ. சுவாமிநாதனுக்கு உளமார்ந்த நன்றி. 2. சந்தனக்கல், நீர்த்தொட்டி, குடைவரையின் மறைக்கப்பட்ட படிக்கட்டு இவற்றிலிருந்து இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர் மு.நளினி. 3. ARE 1924 : 11, 23, 24. 4. ARE 1924 : 25, 27 - 29, 32 - 34, 37, 40, புதிய கல்வெட்டு, ARE 1924 : 19 - 21, 26, 30 - 31. 5. ARE 1924 : 10, 13, 14, 17, 18. 6. ARE 1924 : 22. 7. ARE 1924 : 35, 36, 38. 8. ARE 1924 : 15, 16, 39, 41. 9. ARE 1924 : 12. 10. ARE 1924 : 20, 33. 11. ARE 1924 : 23, 30. 12. ARE 1924 : 11, 13, 14, 23, 34, 39. 13. ARE 1924 : 15. 14. ARE 1935-36 : 156. 15. ARE 1924 : 13. 16. ARE 1924 : 29. 17. ARE 1924 : 17, 34. 18. ARE 1924 : 15, 16, 34. 19. ARE 1924 : 11. 20. ARE 1924 : 19, 30. 21. ARE 1924 : 23. 22. ARE 1924 : 12. 23. ARE 1924 : 27, 32. 24. ARE 1924 : 35. 25. ARE 1924 : 36. 26. ARE 1924 : 11. 27. ARE 1924 : 11. 28. ARE 1924 : 18. 29. ARE 1924 : 11. 30. ARE 1924 : 12. 31. ARE 1924 : 15. 32. ARE 1924 : 39. - வளரும் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |