![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [185 Issues] [1827 Articles] |
Issue No. 185
![]() இதழ் 185 [ ஜூலை 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தருமசம்வர்த்தினி விமானம் ஒரு தள வேசரமாய்த் துணைஉபானம், உபானம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டெழும் தருமசம்வர்த்தினி அம்மன் விமானச் சுவரின் முப்புறக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் கூரையுறுப்புகளுடன் அணைத்துள்ள இக்கோட்டங்களின் தலைப்பாக ஒருதளச் சாலை விமானம் புத்தமைப்பாக இடம்பெற்றுள்ளது. அதன் கருவறையில் கிழக்கில் மட்டும் கந்தருவத்தலை. அம்மன் விமானக் கீழ்த்தளம் கருங்கல் கட்டுமானமாக அமைய, கிரீவமும் சிகரமும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. தளக்கூரையின் மேல் கிரீவப் பெருநாசிகைகளில் சுதையுருவினராய்க் கிழக்கில் நான்முகியும் வடக்கில் வைணவியும் மேற்கில் மகேசுவரியும் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் இருக்க சுகாசனத்தில் உள்ளனர். பின்கைகளில் அவரவர்க்குரிய கருவிகள். வேதிகையின் நாற்புறத்தும் சுதை நந்திகள். மூன்றாம் குலோத்துங்க சோழரின் ஆட்சிக்காலத்தில் கைக்கோளரான ஆவத்துக்காத்தாரால் உருவாக்கப்பட்ட இத்திருமுன் கல்வெட்டில் திருக்காமக் கோட்டமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மண்டபங்களின் உட்புறம் திருநடையின் மேற்கில் வாயிலுடன் விரியும் முன்மண்டபக் கிழக்குச்சுவர் தாங்குதளமோ, தூண்களோ பெறாது வெற்றுக் கற்சுவராய் மேலே வாஜனம், வலபி மட்டும் பெற்றுள்ளது. அதன் கிழக்கு வாயிலின் நிலைக்கால்களில் பாம்புப்படமும் மேல் வளரும் தாமரைவரியும் அமைய, மேல், கீழ் நிலைகள் வெறுமையாக உள்ளன. தெற்கிலும் வாயில் பெற்றுள்ள முன்மண்டபக் கூரையைத் தென்வடலாகவுள்ள நான்கு தூண்கள் தாங்குகின்றன. முச் சதுர இருகட்டு உடலுடன் பூமொட்டு, தரங்க வெட்டுப் போதிகைகள் பெற்றுள்ள அவற்றின் முன் நான்முக ஒட்டுத்தூண்கள். இந்த ஒட்டுத்தூண்களின் பலகைகள் மேல் குந்துசிம்மம், மதலை அல்லது கைகளை உயர்த்திய பூதம். இத்தூண்களின் கீழ்ச்சதுரங்களில் பாம்புப்படம். மண்டபக் கூரையை அலங்கரிக்கும் ஓவிய வளையங்களுள் கிழக்கில் ஒன்பான் கோள்களும் மேற்கில் ராசிகளும். நடுவளையத்தில் தாமரைப்பதக்கம். மண்டபக் கூரையின் தென்பகுதியில் இரு பாம்புகள் விழுங்குமாறு நிலவும் அதில் மானும் செதுக்கப்பட்டுள்ளன. ஆடவல்லான் திருமுன் இம்மண்டபத்தின் வடபுறம் சிறிய முகமண்டபம், கருவறை பெற்ற அம்மன் திருமுன்னும் அதன் வலப்புறம் ஆடவல்லான் திருமுன்னும் அமைய, இடப்புறம் பாதுகாப்பு அறை. ஆடவல்லான் திருமுன் மேலுள்ள சுவரில் சிவபெருமானின் ஆனந்ததாண்டவக் கோல ஓவியம். மகரதிருவாசி சூழ ஆடும் இறைவனின் வலப்பாதம் முயலகன் மீது. அரையில் புலித்தோலாடையுடன் விரிசடை கொண்டு ஆடும் அவரது இட முன் கை வேழ முத்திரையில். வல முன் கை காக்க, பின்கைகளில் தமருகம், தீச்சுடர். இறைவனின் வலப்புறம் சிற்றாடையுடன் மாணிக்கவாசகரும் இடப்புறம் ஒரு கை நெகிழ்த்தி ஒரு கையில் மலருடன் உமையும். இத்திருமுன் ஆடவல்லான் பெருமண்டபத் தனியறைக்கு இடம்பெயர்ந்துள்ளார். இடப்புற அறையின் மேலுள்ள சுவரில், திண்டின்மேல் சாய்ந்து சுகாசனத்திலுள்ள சிவபெருமானின் ஓவியம். அவரது பின்கைகளில் மான், மழு. அம்மன் திருமுன் பக்கத்திற்கொன்றாய்ச் சட்டத்தலை பெற்ற இரு நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ள அம்மன் திருமுன் முகமண்டப வாயிலின் இருபுறத்தும் ஒரு கையை உருள்பெருந்தடியிலிருத்தி மற்றொரு கையால் அச்சுறுத்தும் ஓவியக் காவற்பெண்டுகள். அவர்களையடுத்து மேலுமிரு நான்முக அரைத்தூண்கள். இந்நான்கு தூண்களின் மேலுள்ள தரங்கவெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே நான்கு கூடுவளைவுகளுடன் கபோதம். முகமண்டப வாயில் தலைப்பில் சுதைவடிவில் தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் யானைத்திருமகள். பின்னிரு கைகள் தாமரை கொள்ள, முன்னிரு கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். அம்மையின் இருபுறத்துள்ள யானைகள் குடங்களுக்கு மாறாக மலர் கொண்டுள்ளன. தூண்களற்ற முகமண்டபத்தையடுத்துள்ள கருவறையில் தருமசம்வர்த்தினி என்ற பெயருடன் கரண்டமகுடம், குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடையுடன் பின்கைகளில் மலர்கள் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் அருட்குறிப்புகளில் கொண்டுள்ள பிற்சோழர் கால இறைவி. மேற்கு வாயில் மண்டப மேற்குச்சுவரில் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவிய பெருமண்டப வாயில். வாயிலின் இருபுறத்துள்ள சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டங்களில் அடியவர்கள். கோட்டங்களின் தலைப்பாக வெறுமையான மகரதோரணம். இச்சுவரின் கீழ்ப்பகுதியில் பிரதிபந்தத் தாங்குதளத்தின் பிரதிவரியைப் பார்க்கமுடிகிறது. தாங்கு தளத்தின் பிற உறுப்புகள் உயர்த்தப்பட்ட முன்மண்டபத் தரையால் மறைக்கப்பட்டுள்ளன. சுவரின் தென், வடபகுதிகளில் பக்கத்திற்கொன்றாய் அனைத்து உறுப்புகளும் பெற்ற நான்முக அரைத் தூண்கள். அவற்றின் மேலுள்ள போதிகைகள் வண்ணப்பூச்சுப் பெற்ற கூரையுறுப்புகள் தாங்க, கபோதம் நான்கு கூடுவளைவுகள் பெற்றுள்ளது. கூரையுறுப்புகளில் உத்திரம் மாலைத்தொங்கல்களாலும் வலபி தாமரையிதழ்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன. பெருமண்டப வாயிலின் மேற்பகுதியிலுள்ள பேரளவிலான மகரதிருவாசியில் சுதையுருவமாய் யானைத்திருமகள். அர்த்தபத்மாசனத்தில் உள்ள அம்மையின் பின்கைகளில் தாமரைகள். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். இருபுறத்துமுள்ள யானைகள் தாமரைகளில் குடநீரை ஊற்றுகின்றன. யானைத்திருமகளின் இருபுறத்தும் குந்துசிம்மங்கள். அம்மையின் வலப்புறச் சுதைப் பிள்ளையாரின் பின்கைகளில் அக்கமாலை, அங்குசம். வல முன் கையில் தந்தம். இலலிதாசனத்திலுள்ள அவரது இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. இடப்புறம் அர்த்தபத்மாசனத்தில் உள்ள திருமகள் முன்கைகளைக் காக்கும், ஆகூயவரதக் குறிப்புகளில் கொண்டுள்ளார். பின்கைகளில் அக்கமாலை, தாமரை. அம்மையின் இடப்புறத்தே ஓவியமாய்த் தேவியருடன் முருகன் நிற்க, பிள்ளையாரின் இடப்புறம் ஓவியவடிவில் இலிங்கவழிபாடும் இறைஇணையும் தனிஅம்மனும். அடியவர்கள் பெருமண்டப வாயிலின் இருபுறத்துமுள்ள அடியவர்கள் பாதங்களைத் திரயச்ரத்திலிருத்தி இலேசான வாயில் ஒருக்கணிப்பில் இருந்தபோதும் நேர்ப் பார்வையினராய்ச் சடைமண்டலம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, உதரபந்தம், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ளனர். அவர்தம் ஒரு கை கடியவலம்பிதமாக, மற்றொரு கையில் மலர்மொட்டு. இருவருக்குமே தலையின் இருபுறத்தும் சடைப்புரிகள் பரவியுள்ளன. வலஒருக்கணிப்பிலுள்ள வடக்கரினும் இடஒருக்கணிப்பில் புன்னகை மலர நிற்கும் தெற்கர் எழிலார்ந்தவர். அவரது கழுத்தில் கூடுதலாக முத்துமாலை. பெருமண்டபம் முன்மண்டபத்தை இறையகத்தோடு இணைக்கும் பெருமண்டபம் கிழக்கு மேற்காக இருவரிசைகளில் அமைந்த 10 தூண்களைக் கொண்டுள்ளது. சதுரபாதம், எண்முக-பன்முக உடல், தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, வீரகண்டம் என வளரும் இத்தூண்கள் தரங்கவெட்டுப் போதிகைகள் கொண்டு கூரையுறுப்புகள் தாங்குகின்றன. மண்டபத்தை முப்பிரிவுகளாக்கும் இத்தூண்வரிசைக்கு இணையாகத் தென், வடசுவர்களருகே பக்கத்திற்கு நான்கு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்க, மண்டபத் தென்சுவரில் சாளரம். தூண் வரிசைகளுக்கு இடைப்பட்ட பெருமண்டபத்தின் நடுப்பகுதிக் கூரையினும் தென், வடபிரிவுகளின் கூரை சற்றே தாழ்ந்துள்ளது. மண்டப வடகிழக்குச் சுவரருகேயுள்ள திண்ணையில் சேத்ரபாலர், சூரியன், சனீசுவரன் சிற்பங்கள். மண்டபத்தின் நடுவில் இறைவனைப் பார்த்தபடி அமர்நந்தியும் பலித்தளமும். பலித்தளத்தில் கல்வெட்டுப் பொறிப்பு. இடைநாழிகை பெருமண்டபத்தை முகமண்டபத்துடன் இணைக்கும் இடைநாழிகையின் தென்வாயில் அடைபட்டுள்ளது. வடபகுதி அறையாக, அதன் கிழக்குச் சுவரருகுள்ள திண்ணையில் பாலமுருகன் என்ற பெயருடன் ஆடவர் சிற்பம். தென்வாயிலின் சுவரருகே தவ்வைத்தேவி தொகுதியும் மேற்குச் சுவரருகே பிள்ளையார், உதங்கமுனிவர், சந்தானகிருஷ்ணர் சிற்பங்களும் உள்ளன. முகமண்டபம் இடைநாழிகையை அடுத்துள்ள முகமண்டப வாயிலின் நிலைக்கால்களும் மேல்நிலையும் அழகிய கருக்கணி அலங்கரிப்புப் பெற்றுள்ளன. மேல்நிலைக்கு மேலுள்ள கண்டபாதத்தில் தென், வடபார்வையில் அமர்நந்திகள் இரண்டு. வாயிலை அணைத்தவாறு சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் அமைய, மேலே விரிகோணப்போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். உத்திரம் ஓவியத்தொங்கல்கள் கொள்ள, 13 பூதங்களுடன் விளங்கும் வலபியின் பூதவரி வண்ணப்பூச்சுப் பெற்றுள்ளது. கபோதத்தில் இரு கூடுவளைவுகள். மண்டப வாயிலின் இருபுறத்துமுள்ள ஆழமான கோட்டங்களில் சோழக் காவலர்கள். காவலர்கள் வாயில் நோக்கி ஒருக்கணித்துள்ள காவலர் இருவரின் மார்பின் மேற்பகுதியும் முகமும் நேர்நோக்கியுள்ளன. கீர்த்திமுக முகப்புப் பெற்ற சடைமகுடம், அதிலிருந்து பரவித் தோள்வரை நெகிழ்ந்துள்ள சடைக்கற்றைகள், பறவைக் குண்டலங்கள், கோரைப்பற்கள், சரப்பளி, சிம்மமுகத் தோள்வளைகள், பூப்பதக்க முப்புரிநூல், கைவளைகள், அலங்கார உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள இக்காவலர் இருவரில் முத்துமாலையுடன் திகழும் தெற்கர், இடக்கையால் மழுவைப் பிடித்தவாறு வலக்கையால் அச்சுறுத்துகிறார். தாள்செறிகளுடனுள்ள அவரது இடப்பாதம் தரையில் தவழ, வலப்பாதம் மழுவின் கத்திப்பகுதியில். வலமிருந்து இடமாக (பிராச்சீனாவீதம்) முப்புரிநூல் அணிந்துள்ள வடக்கர் வலக்கையை வியப்பில் விரித்துள்ளார். அவரது இடத்தோள் பின் படமெடுத்த பாம்பு. இடக்கையின் மணிக்கட்டுப்பகுதி மழு மேல் தாங்கலாக, கைவிரல்கள் நெகிழ்ந்துள்ளன. அவரது வலப்பாதம் தரையில். இடப்பாதம் மழுவின் கத்திப்பகுதியில். பாதங்களில் கிண்கிணி. முகமண்டபத்தில் தூண்கள் இல்லையென்றாலும் கூரையின் நடுப்பகுதியில் தென்வடலாக நீளும் உத்திரத்தின் கீழ்ப்பகுதியில் அதைத் தாங்குமாறு போலக் குளவும் பட்டையும் பெற்ற விரிகோணத் தரங்கப் போதிகைக் கைகள். மண்டபத்தின் தென், வடசுவர்களையொட்டிச் சிறிய திண்ணைகள். கருவறை மண்டபத்தின் மேற்குச்சுவர் கருவறைக்கான வாயில் பெற்றுள்ளது. இரு சட்டத்தலை நான்முக அரைத்தூண்களின் தழுவலுடனுள்ள எளிய நுழைவாயிலையடுத்துள்ள கருவறையில் வேசர ஆவுடையார் மீது உருளைப்பாணமாய் இலிங்கத் திருமேனியராய்ப் பஞ்சநதீசுவரர். கருவறைக் கூரை அல்லூர்ப் பசுபதீசுவரர் போலன்றிக் கீழ்த்தள அளவில் மூடப்பட்டுள்ளது. சிற்பங்கள் சேத்ரபாலர், சந்திரன் வல முன் கையில் முத்தலைஈட்டியும் இட முன் கையில் தலையோடும் கொண்டு சமபங்கத்திலுள்ள சேத்ரபாலரின் இடத் தோளருகே படமெடுத்த பாம்பு. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், அரும்புச்சரம், முப்புரிநூல், உதரபந்தம், சிலம்புகள் பெற்றுள்ள அவரது பின்கைகளில் வலப்புறம் உடுக்கை, இடக்கைப் பொருள் சிதைந்துள்ளது. அவரை அடுத்து சமபங் கத்திலுள்ள சந்திரனின் கைகளில் மலர்மொட்டுகள். ஒளிவட்டம் சூழ்க் கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள், கழுத்தணிகள், சிலம்பு பெற்றுள்ள அவரைக் கோயிலார் சூரியனாகக் கொண்டுள்ளனர். சனீசுவரன், பாலமுருகன் காகம் பின்னிருக்கக் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், பதக்கமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், பட்டாடை பெற்று முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு நிற்கும் சனீசுவரனின் பின்கைகளில் அம்பு, வில். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், மார்பு-முப்புரிநூல்கள், சரப்பளி, தாள்செறி கொண்டு வலக்கையில் தாமரையேந்தி, இடக்கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ள ஆடவர் வடிவத்தைக் கோயிலார் பாலமுருகனாகக் கொண்டுள்ளனர். சண்டேசுவரரும் பிற சிற்பங்களும் இருக்கையில் சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் இடக்கை தொடையில். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் விளங்கும் அவரது வலக்கையில் மழு. சந்தான கிருஷ்ணராகப் பெயர் சூட்டப்பட்டுள்ள ஆடவர் மண்டலநிலையில் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் வலப்பாதத்தை சூசியிலும் நிறுத்தியுள்ளார். சடைமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், முப்புரிநூல், சிற்றாடையுடனுள்ள அவரது இடக்கை அருட் குறிப்பிலும் வலக்கை பதாகத்திலும் உள்ளன. அவரை அடுத்து நீள்தாடியும் மீசையுமாய் மகாராஜலீலாசனத்திலுள்ள முனிவரின் இடக்கை முழங்கால் மீது. சடைமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூலென மடித்த துண்டு, பட்டாடை பெற்றுள்ள அவரது வலக்கை கடகத்தில். தவ்வைத்தொகுதி சிதைந்துள்ள தவ்வைத்தொகுதியின் இருபுறத்தும் குத்துவிளக்குகள். நடுவில் சுகாசனத்திலுள்ள தவ்வைத்தேவியின் வலக்கை முழங்கால்மீது. கச்சற்ற மார்பகங்களுடன் கரண்டமகுடம், பட்டாடை பெற்றுள்ள அம்மையின் இடக்கையில் மலர். தவ்வையின் வலப்புறம் அவருக்காய் முகம் திருப்பிச் சம்மணத்திலுள்ள மகன் மாந்தனின் வலக்கையில் தடி. இடக்கை முழங்கால் மீது. இடப்புறம் மாந்தனைப் போலவே அமர்ந்துள்ள மகள் அக்னிமாதாவின் இடக்கை முழங்கால் மீது. வலக்கையில் மலர். அங்கும் இங்குமாய்ச் சிதைந்திருந்தபோதும் பதிவாகியுள்ள கல்வெட்டுகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வடகுடிக் கோயில் சோழச் சிற்பங்களை இழந்துள்ளமை பேரிழப்பாகும். வண்ணப்பூச்சுகளாலும் புதிய கட்டமைப்பாலும் சோழர் கால ஆலமர்அண்ணல் பொலிவிழந்துள்ளார். கோட்ட சிவபெருமானும் சுட்டிச் சொல்லுமளவு சீர்மையுடனில்லை. எனினும், எழிலோடு நிற்கும் முகமண்டபக் காவலர்களும் பெருமண்டபத் தெற்குக் காவலரும் ஆவத்துக்காத்தாரின் காமக்கோட்ட நாச்சியாரும் சோழர் கைவண்ணம் காட்டி உள்ளம் குளிர்விக்கின்றனர். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |