![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [185 Issues] [1827 Articles] |
Issue No. 185
![]() இதழ் 185 [ ஜூலை 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தொல்தமிழர் வாழ்வில், திணைக்குரிய கடவுளர் தத்தம் நிலம்சார்ந்த கருப்பொருட்களோடு வணங்கப்பட்டனர். சங்க இலக்கியங்களின் அகண்ட நிழலில் நின்று நோக்கின், அக்காலத்திற்கும் முந்தைய தமிழர் தொன்மங்களை மேலும் புரிந்துணரவியலும். பண்டைத் தமிழர் அகவாழ்விலும் புறவாழ்விலும் பின்னிப்பிணைந்த முருகன் என்ற முன்னோன் குறித்த நம்பிக்கை மற்றும் சடங்குகள், காலந்தோறும் பெற்ற மாற்றங்களைத் தமிழிலக்கியங்களே விளக்கவல்லன. ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று தொல்காப்பியம் மலையும் மலை சார்ந்த நிலத்தலைவனாக முருகனைக் குறிக்கும். சங்கப் புலவர்கள், முருகன் யாரென்று தெளிவுறப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள். மன்றத்திலிருந்த வேங்கை மலர்களைக் கொணர்ந்து தன் குலத்தின் தொல்தெய்வமான மலைக்கடவுளைத் தலைவி வணங்கியதை ஐங்குறுநூற்றில் காட்டும் கபிலர் (259), குறுந்தொகையில் (87)- மன்றத்திலுள்ள கடம்ப மரத்தில் ‘பேஎ முதிர்க்கடவுள்’ இருப்பதைத் தலைவி கூற்றாக அமைக்கிறார். தொல்முது மலைக்கடவுள் முருகனைச் சங்ககாலத்தவர் எப்படியெல்லாம் வழிபட்டார்கள்? செந்தினையை நீர்த்தெளித்துப் படைத்தார்கள்; ஆரவாரிக்கும் அருவியைப் போன்றொலிக்கும் பல்வகைக் கருவிகளிசைத்து அவனுடைய கடம்ப மரத்தையும் களிற்றையும் பாடினார்கள்; அவித்த அரிசியைப் படைத்து ஆட்டுக்குட்டியைப் பலியிட்டும் வணங்கினார்கள். குன்றக் குறவனோ தன் கடவுளை வேண்டி, ‘எல்வளைக் குறுமகளைப்’ பெற்றெடுக்கிறான். முருகன் கைப்பிடித்த வள்ளியையும் சங்கப்பாடல்கள் குறிக்கத் தவறவில்லை. நற்றிணைத் தலைவன் (82) தலைவியிடம், “முருகனோடிணைந்த வள்ளிபோல நீ என்னுடன் இணைவாயா?” என்று ஏக்கத்துடன் கேட்கிறான். அகமே மையப்பொருளான குறுந்தொகையின் முதல் பாடலில், சேயோனான முருகனின் காட்சிக் களமே சிவப்பில் தோய்ந்திருக்கிறது- செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழற்றொடி சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே! (திப்புத்தோளார், குறுந்தொகை 1) குருதிப்புனல் பாய்ந்தோடும் சிவந்த போர்க்களத்தில் அவுணரையழித்த அம்பும் யானையின் கோடும் குருதிபடிந்து சிவந்திருக்க, தொடியணிந்த சிவந்த நிறத்தினனான முருகனின் குன்றத்தில், குருதிநிறத்த காந்தள் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கின. இது புறப்பாடலா என்று ஐயுறும் வேளையில், “வீரமும் போர்த்திறமும் நிறைந்த முருகனின் நிலத்தில் செங்குருதிக் காந்தள் நிரம்பக் கிடக்கிறது. அதனால் தலைவிக்குக் கையுறையாக நீ கொணரும் காந்தள் பூக்கள் எமக்குத் தேவையில்லை,” என்று தலைவனிடம் கூறி நுட்பமாகச் சிரிக்கிறாள் தோழி. புறப்பாடல்களிலோ, முருகனின் வீரத்தையே அளவுகோலாகக் கொண்டு புலவர்கள் அரசரை வாழ்த்துகின்றனர். குமட்டூர்க் கண்ணனாரின் பதிற்றுப்பத்துப் பாடல் (11), மாக்கடலில் ஒளிந்திருந்த சூரனை வென்று வெற்றி முழக்கத்துடன் தன் களிற்றின்மேல் வெற்றியுலா வந்த முருகனைப்போல்- மாலைகளும் அணிகளும் தாங்கி, வெற்றிதரும் மருப்புடைய (மருப்பு-தந்தம்) குறையில்லா யானையின்மேல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உலா வருவதைப் போற்றுகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் புறநானூற்றுப் பாடல்(56), பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நாற்பெரும் கடவுளரோடு ஒப்பிடுகிறது. தொல்காப்பியர் காட்டும் திணைகள் நான்கினுக்குரிய கடவுளர் புறநானூற்றுக் காலத்துள் சிவன், பலராமன், திருமால், முருகனென்று மாற்றம் பெறுவதையும் காட்டும் பாடலிது. ‘முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்,’ என்று முருகனைப் போல் எடுத்த செயலை முன்னரே முடிக்கும் மன்னரின் சிறப்புப் பண்பைப் பாடுகிறார் புலவர். ‘மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோன்,’ - ஒளிரும் செய்யோனான முருகன், தோல்வியே அறியாதவன்; மயில் கொடியோடு பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவன். பிணிமுகத்தைப் பிங்கல நிகண்டு, 'புட்பொதுப் பெயரு மயிலும் பிணிமுகம்’ என்று மயிலெனவே உரைக்க, யானையென்றும் உரையாசிரியர்கள் சிலர் கூறுவர். முருகாற்றுப்படை, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நான்கு இலக்கியங்களைச் சங்ககால எல்லையின் இறுதிக்கட்ட நூல்களென தமிழ் அறிஞர்கள் ஏற்கின்றனர். “இந்நான்கனுள் புறநானூறும் கலித்தொகையும் சங்கச் சாயலில் தோய்ந்தவை. முருகாற்றுப்படையும் பரிபாடலும் 6ஆம் நூற்றாண்டில் எழுச்சியோடு வெளிப்பட்ட பத்திமை இலக்கியங்களின் முன்னோடிகளாகவும் அதே சமயம் சங்க இழையோட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இலக்கியங்களாகவும் காட்சிதருகின்றன,” என்று டாக்டர் இரா. கலைக்கோவன் கூறுவது (பக்கம் 20, இருண்ட காலமா?) முருகன் கண்ணோட்டத்திலும் சிந்திக்கத்தக்கது. குறிஞ்சி நிலப்பகுதியின் தொன்மைமிகு தலைவனாக அதுவரையில் போற்றப்பட்ட முருகனைப் பரிபாடல் எப்படிக் காட்சிப்படுத்துகிறது? கடுவன் இளவெயினியாரின் பாடலில் (பரி.5), தமிழகத்து மலைக்கடவுளான முருகன் இமயமலையில் சிவனுக்கும் உமைக்கும் பிறந்ததையும் ஆறுமுகனானதையும் விளக்கமாகக் காணமுடிகிறது. அவன் கை ஆயுதங்களைத் தேவர்கள் வழங்க, அனலன் (அக்கினி தேவன்) சேவலும், இந்திரன் மயிலும், யமன் ஆடும் தந்தனர். ‘மன்ற மராஅத்த பேஎ முதிர்க் கடவுள்’ என்ற குறுந்தொகை வரிகள் ‘உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!’ (பரி.5) என்றும் ‘கடம்பு அமர் செல்வன்’ (பரி. 8) என்றும் தொடரக் காணலாம். ஆனால் ஏழுலகும் ஆளும் முருகன்- ‘மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர் செல்வன்’ என்ற புதிய அடையாளம் பெறுகிறார் (ஆசிரியர் நல்லந்துவனார், பரி.8). குன்றம்பூதனாரின் பாடலில் (பரி.9), முருகன் வள்ளியை மணந்த நாளில், ‘ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’- ஆயிரம் கண்களுடைய இந்திரனின் மகளான தேவசேனை மலர்க்கண்களில் கண்ணீர் வடிக்க, அவள் வருத்தம் தணிக்கும் பொருட்டு திருப்பரங்குன்றத்து முகில்கள் மழையைச் சொரிந்தன. முற்சங்கப் பாடல்கள் காட்டும் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்களான பறவை, விலங்கு, ஊர், பூ, மரம், உணவு போன்ற முறைமைகளைத் தாண்டி, துணைக்கண்டம் முழுமைக்கும் பொருந்தும் கடவுளாக முருகனை இணைக்கும் சமய-சமூக மாற்றத்தை இக்காலத்தே காணமுடிகிறது. பன்னிரு திருமுறைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரே சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, தொடக்கத்திலேயே முருகனை - ‘மறுஇல் கற்பின் வாணுதற் கணவன்’ என்று தெய்வயானைக் கணவனாக அறிமுகப்படுத்துகிறது. திருச்சீரலைவாயில் முருகனின் ஆறுமுகங்களைப் போற்றுகையில்தான் பல நூற்றாண்டுகளாய் முருகனின் மனையாட்டியாகத் தமிழரறிந்த குறிஞ்சி நிலத்துக் குறவர் மகள் வள்ளி வெளிப்படுகிறாள். ……………………………..ஒரு முகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே (100-102) முருகனின் அறுபடை வீட்டைப் பாடும் புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குன்றுதோறாடலில் (திருத்தணிகைமலை) கானவரின் குரவைக் கூத்தைக் காட்டுகிறார். அங்கே, சிவந்த நிறத்த முருகன் சிவந்த ஆடையும் கச்சும் கழலுமணிந்து, வெட்சிக் கண்ணிச் சூடி, குழலும் கோட்டும் பல்வேறு இசைக்கருவிகளும் கைக்கொண்டு, மறியும் மயிலும் உடையவனாகச் சேவல் கொடியோனாய், நெடியன் தொடியணிந்த தோளனாக முழவுபோன்ற கைகளைத் தூக்கி ஆடிமகிழ்கிறார். பழமுதிர்ச்சோலையிலோ, சங்கப் பண்பாட்டின் தவிர்க்கவியலாச் சாயலை உணரமுடிகிறது. வெறியாட்டக் களத்தில் சேவற்கொடி பறக்க, முருகனுக்கு மலர்கள் சேர்த்த சிறுதினையும் ஆடும் படைத்து வழிபடுகின்றனர். குன்றக் கடவுள் இல்லாத இடமேது? சதுக்கமும் சந்தியும் மட்டுமல்லாமல் புதுப் பூங்கடம்பிலும் இருக்கிறார். முருகனைக் கண்டு வழிபடும் அடியவர் - ஆல் கெழு கடவுட் புதல்வ! மால் வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!- இழை அணி சிறப்பின் பழையோள் குழவி! வானோர் வணங்கு வில் தானைத் தலைவ! 260 —————————————————— அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக! (269) என்று முருகனைப் போற்றும் வரிகள், பண்டைத் தமிழரின் மண்ணுக்குரிய கடவுளுக்குச் சமய மாற்றத்தால் ஏற்பட்ட இடமாற்றத்தைக் குறிப்பன. கொற்றவை சிறுவன், பழையோள் குழவி, தானைத் தலைவன், மாற்றோர் கூற்றெனப் போற்றப்படும் 'தொன் முதிர் மரபின் புகழுடை’ முருகனின் பல்வேறு பரிமாணங்களில், ‘ஆல் கெழு கடவுட் புதல்வனெனும்’ வடிவமே பத்திமைக் கால இலக்கியங்களில் நிலைநிறுத்தப்படுகிறது. சிவன் முதன்மைத் தெய்வமாக உயர்ந்தோங்கிய ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், சிவ வழிபாட்டில் இணைந்த முருகனின் புத்தொளிப் படிமத்தை அப்பரும் சம்பந்தரும் உவந்தளிக்கின்றனர். முக்கட் செல்வரின் பிள்ளையென்று முருகனை முன்னிறுத்துவதைக் காட்டிலும் சிவபெருமானை முருகவேள் தந்தையென்று விதந்தோதுவதே மேம்பட்டு நிற்பதையும் காணமுடிகிறது. இது, முருகன் பண்டைத் தமிழ்நிலத்தின் தொல்முதிர்க் கடவுளெனும் தாக்கத்தைக் காட்டுவதெனவே கொள்ளவேண்டியுள்ளது. அப்பர் காட்டும் முருகன் சோமாஸ்கந்தர், அத்யந்தகாம பல்லவேசுவரகிருகம் நன்றி: லலிதாராம் இராஐசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு); வரலாறு.காம் குறிஞ்சிக் கடவுள் முருகன் குழந்தை ஸ்கந்தனாக மாற்றம்பெற்று, பல்லவர் கொண்டாடிய சோமாஸ்கந்தரெனும் குடும்பப் புகைப்படத்துள் சிறப்பிடமெய்த அப்பர் பாடல்கள் எவ்வகையில் பங்களித்தன? முருகனுக்குரியவையெனச் சங்கப் பாடல்கள் காட்டும் கடம்ப மரமும் மயிலும் சேவற்கொடியும் முருகனின் அடையாளங்களாக அப்பர் பாடல்களில் சுட்டப்படுகின்றன. முன்னையார் மயிலூர்தி முருகவேள் தன்னையார் (05.016.07) என்றும் கோழிக் கொடியோன் தன் தாதை போலும் (06.089.02) என்றும், அனைவருக்கும் முன்னவரான சிவபெருமான் மயிலூர்தியும் கோழிக் கொடியுமுடைய முருகனின் தந்தையென்று குறிப்பிடுகிறார் நாவுக்கரசர். ஊர் மன்றத்துக் கடம்ப மரத்தில் முருகன் இருந்ததாகக் கொள்ளப்பட்ட குறிஞ்சிநிலத்து நம்பிக்கைத் தொன்மத்தைச் சொன்ன குறுந்தொகைக் காட்சியையும் அப்பரில் காணலாம். உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே (04.075.04) என்பவர், கடம்பன் தாதை கருதுங்காட்டுப்பள்ளி உடம்பினார்க்கோர் உறுதுணை யாகுமே (05.084.06) என்று திருக்காட்டுப்பள்ளி இறைவனைப் போற்றுகிறார். கச்சி மேற்றளியிலோ, கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே (04.043.02) என்று மகனைக் கொண்டு தந்தையை வணங்குகிறார். பத்திமைக் காலமாயினும் நற்றிணையின் 'முருகு புணர்ந்த வள்ளி’யை மறக்கவியலுமா? வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் (06.023.04) என்று திருமறைக்காட்டிலும், குறவிதோண் மணந்த செல்வக் குமரவே டாதையென்று (04.060.03) திருப்பெருவேளூரிலும் வள்ளியை நினைவில்கொண்டு குமரவேள் தந்தையைப் போற்றுகிறார் அப்பர். முருகனின் தந்தையாகச் சிவனைப் பாடினாலும், ‘மாறா வென்றிச் செய்யோனின்'- தோல்வியே காணாத வீரத்திறத்தைக் குறிக்கத்தானே வேண்டும்? குடந்தைக்கீழ்க் கோட்டத்துக் கூத்தனாரைப் பாடுகையில், கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுமென்று (06.075.07) கூரிய வேல் தாங்கிய குமரனின் வீரப்பொலிவைக் காட்டுகின்றன பதிக வரிகள். முருகனின் வீரத்தை உலகறியச் செய்யும் நிகழ்வுகளில் சூரனையழித்தது தலையாயதெனலாம். அப்பர் பாடல்களில் சூரபன்மனுமுண்டு. சமர சூரபன்மாவைத் தடிந்தவேற் குமரன் தாதை (05.064.10), என்று திருக்கோழம்பத்துப் பெருமானைப் பாடுகிறார். திருவதிகைவீரட்டானப் பதிகத்தில் (04.104.05), பண்டைப் பிறப்பிலேயே சிவனை வழிபடாததால் இப்பிறப்பில் பிச்சையேற்றுண்ணும் நிலைக்காளான தன் நிலையெண்ணி வருந்தும் வாகீசர், ‘சூரட்ட வேலவன் றாதை’ என்றே இறைவனை விளிக்கிறார். முருகனுக்கு மட்டுந்தான் தந்தையா சிவபெருமான்? அதற்கும் விடையுண்டு அப்பரிடத்தில். மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் தாதைகாண் (06.065.09) என்று கச்சியேகம்பத்தில் யானைமுகத்தோனையும் சேர்த்துக் கொள்கிறார். திருப்பூவனூரில், வாரணன் குமரன் வணங்குங் கழற்பூரணன் (05.065.10) என்று கூறுமிடத்தில், சிவபெருமானை மக்கள் இருவரும் வணங்குமாறு செய்கிறார். திருப்புறம்பயத்திலும், குமரனும் விக்கின விநாயகனும் இணைந்தே சிவனைப் போற்றுகின்றனர் (06.013.10). கடம்பன், குமரவேள், முருகவேள், வேல்குமரன், வேலவன் என்பதோடு சேந்தனெனும் பெயராலும் முருகனைக் குறிக்கிறார் அப்பர். குமரன் தந்தையென்றே பெரும்பாலும் சிவனார் குறிக்கப்பட்டபோதும், ‘செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்’ (04.043.08) என்று விளிப்புமுறையை மாற்றியும் பாடுகிறார். 'குமரனையும் மகனாக வுடையார் போலுங் குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்’ (06.053.02), என்று திருவீழிமிழலையிலும் அதே முறையைக் காணமுடிகிறது. ‘முக்கணா போற்றி முதல்வா போற்றி; முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி’(06.005.10) என்று, தொன்மங்களும் இலக்கியங்களும் காலங்காலமாகச் சிறப்புடன் போற்றிய முருகனை, இவ்வுலகிற்கு வழங்கியவராகச் சிவனை ஓங்கி நிறுத்துகிறார் திருநாவுக்கரசர். கொற்றவைச் சிறுவ என்றும் பழையோள் குழவியென்றும் முருகாற்றுப்படை கொண்டாடிய தாயையும் மகனையும் சிவனுடன் நாவுக்கரசர் ஒருமித்துக் கொணர்வது திருக்கடம்பூர் பதிகத்தில். நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் (05.019.09) ‘நம்’ கடம்பனென்று பழந்தமிழர் குறிஞ்சிக் கடவுளை உரிமையோடு பாடுபவர், அந்தக் கடம்பனைப் பெற்றவளைப் பாகமாகக் கொண்டவனென்று உரைத்து, எழில்மிகு சிவக்குடும்பத்தைச் சொல்லோவியமாக மிகமிக அழகாகத் தெளிவுபடச் சைவ நெறியாளர்களுக்கு ஓதிச் செல்கிறார். சைவம், சாக்தம், கெளமாரம் என்ற சமயப் பிரிவுகள் மூன்றையும் பத்திமை இலக்கியத்தில் இணைத்துத் தந்த பெரும்பணி அப்பருடையது. இப்படி, பதிகங்களில் வழங்கப்பட்ட சிவக்குடும்பத்தின் சொல்லோவியமே, இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மர் தமிழகக் கோயில்களில் அறிமுகப்படுத்திய ‘சோமாஸ்கந்தர்’ என்ற இறைவடிவம். கற்றளிகளுக்கு முன்னரே தமிழகக் குடைவரைகளில் சோமாஸ்கந்தரை இடம்பெறச்செய்த பெருமை இராஜசிம்மரையே சாரும். ‘சோமாஸ்கந்தர் வடிவம் சிவபெருமான், உமை, முருகன் எனும் சிவக்குடும்பத்தின் படப்பிடிப்பு’, என்று சுவைபட உரைக்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். இராஜசிம்மரின் சோமாஸ்கந்தர் சோமாஸ்கந்தர், மகிஷாசுரமர்த்தினி குடைவரை நன்றி: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 2; வரலாறு.காம் மாமல்லபுரத்துக் குடைவரைகளில் நடத்தப்பெற்ற நீண்ட நெடிய கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அன்னாரின் ஒப்பாய்வுக் கட்டுரைகள் மூன்றும் (டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, மாமல்லபுரம் குடைவரைகள்- ஒப்பாய்வு-1,2,3), தமிழகத்துக் குடைவரைக் கட்டடவியல், சிற்பவியல் குறித்த விரிவான தகவல்களை அளிப்பவை. அக்கட்டுரைத் தொகுதியில், கருவறை இறைவடிவங்களில் சோமாஸ்கந்தர் பற்றிய செய்திகள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன. இராஜசிம்மர் சோமாஸ்கந்தர் வடிவத்தால் பெரிதும் கவரப்பட்டதை, தம் குடைவரையான அதிரண சண்டேசுவரத்தில் அச்சிற்பத்தை- கருவறை, முகமண்டபப் பின்சுவர்க் கோட்டங்கள் என்று மூன்றிடங்களில் இடம்பெறச் செய்தமை கொண்டுணரலாம். கூடுதலாக, ‘மகிடாசுரமர்த்தினியின் நடுக்கருவறையில் பேரளவினதாக அவ்விறைத்தொகுதி அமைந்திருப்பதும் பல புத்தமைப்புகளுடன் விளங்கும் இராமானுஜர் மண்டபத்திலும் நடுக்கருவறையின் சுவர்க்கோட்டத்தில் அத்திருமேனி இடம்பிடித்திருப்பதும் இம்மூன்று குடைவரைகளின் காலத்தையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன,’ என்று கட்டுரையாசிரியர்கள் கூறுகிறார்கள். அப்பரைத் தொடர்ந்த ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், குழந்தை முருகனோடிணைந்த சிவனுமை இணையரின் ஓங்கிய செல்வாக்கையே இது காட்டுகிறது. குடைவரைகளைத் தொடர்ந்து, அத்யந்தகாமத்து மேல்தளக் கருவறையிலும் சோமாஸ்கந்தரை வழங்கும் இராஜசிம்மர், காஞ்சி கைலாசநாதரிலும் பல இடங்களில் படைத்து மகிழ்கிறார். உமையும் ஸ்கந்தனும் இணைந்த சிவ வடிவமே சோமாஸ்கந்தர் (சக-உமா-ஸ்கந்தர்). இறைவடிவத்தின்பால் கொண்ட ஈர்ப்பைச் சிற்பங்கள்வழி காட்டிய இராஜசிம்மர், தமிழ்க்கடவுள் முருகன்பால் கொண்ட மதிப்பை- அதிரண சண்டேஸ்வரமிதமகரோத் இஹ கிரிதனயா குஹகனாஸ்ஹிதோ நியதக்குத்தரதிர்பவது பஷூபதிஹி என்ற சாளுவன்குப்பத்திலுள்ள அதிரண சண்டேசுவரத்து வடமொழிக் கல்வெட்டின்மூலம் வெளிப்படுத்துகிறார். கிரிதனயா/ மலைமகளுக்கும் பசுபதிக்கும் பிறந்த மகனான குகன் அதிரண சண்டேசுவரத்தில் வசிக்கிறார் என்பதே கல்வெட்டின் பொருள். காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்துக் கல்வெட்டிலோ முருகனிடம் கொண்ட பேரன்பைப் பறைசாற்றுகிறார். ‘சுப்ரமண்யனென்றும் குமாரனென்றும் அழைக்கப்படும் குகன் சிவனிடமிருந்து வந்ததைப்போல், உக்ரதண்டனிடமிருந்து பகைவர்களைத் தன் வலிமையால் வென்ற ஶ்ரீ அத்யந்தகாமன் பிறந்தார்’ என்று தன்னைச் சிவனுடைய மகன் முருகனோடு ஒப்பிட்டுக் கொள்ளும் பாங்கு இதை உறுதி செய்கிறது. சோமாஸ்கந்தர், காஞ்சி கைலாசநாதர் நன்றி: லலிதாராம் அரை நாள் பயணம்….அரை மனதுடன்; வரலாறு.காம் பொதுக்காலத்திற்குப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய குறிஞ்சிக் கடவுள் சேயோன், ஏழாம் நூற்றாண்டில் குகனாக மாறிய நெடும்பயணத்தைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இவை. முருக வழிபாட்டின் எழுச்சிமிகு மாற்றப் போக்கைக் குறிப்பதே சோமாஸ்கந்தர் சிற்பம். பழந்தமிழர் கடவுளான முருகன் குகனாக மாறிய நீண்ட நெடும்பயணத்தில், சங்கத்தையும் பத்திமைக் காலத்தையும் இ̀ணைக்கும் தொடரோட்ட வீரராகப் பதிகங்களால் உயிரூட்டிய பெருமை அப்பருடையது. சைவத்தை முதன்மைப்படுத்தும் சமயப் பின்னணியில், மரத்திலும் ஊர்மன்றத்திலும் மனைகள்தோறும் மக்கள் உணர்வோடு ஒன்றுகலந்த கடம்பனைக் கோயிலுக்குள் கூட்டிச் சென்று, சிவனோடு வீற்றிருக்கச் செய்தது பத்திமைக் காலம். வேலன் மீதேறிப் புகுந்த முருகன் உமையின் மடியேறியமர்ந்த சூழலைச் சமூகம் சுவைத்ததும் அக்காலத்தில்தான். தம் வாழ்வியலோடு இணைந்திருந்த முருகன்பால் மக்கள் கொண்டிருந்த பேரன்பை, சைவத்தின் வழிவந்த சமயப் பற்றாக மாற்றியமைக்கத் தம் பாடல்களால் வழிகோலியவர் அப்பர். சங்காலத்து மலை உறை கடவுள் நெடுவேள் முருகனை இன்றுவரையில் பத்திமைச் சமூகம் கொண்டாடும் போக்கு, அவர் காலத்தே ஆணித்தரமாகப் புகுத்தப்பட்ட மாற்றநெறியை ஒட்டியே அமைந்ததைப் பார்க்க முடிகிறது. சங்ககால இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டவை, முருகனின் வீரம் செறிந்த ஆற்றலையும் மிடுக்கையும் காட்டிட, பிற்கால நூல்களான பரிபாடலும் முருகாற்றுப்படையும் புராணங்களோடு தொடர்புபடுத்தி, பிறப்பு முதல் மேலும் பல வீரச் செயல்களைப் பட்டியலிட்டு, மலைக்கடவுளைத் தேவர்கள் வீட்டு மருமகனாகவும் ஆக்குகின்றன. முருகாற்றுப்படை, தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி (287-288) என்று, ஒளி பொருந்திய தெய்வ வடிவில் முருகனை விண்ணைத் தொடும் பேருருவாகக் காட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. எனினும், பேருருவாக வளர்ந்த தன்னிகரற்ற முருகனை அப்பரும் சம்பந்தரும் சிறுகுழந்தையாகத் தந்தை தாயிடையிலும் உமையவள் மடியிலும் எழில் சிறுவனாக அமரச் செய்து அழகு பார்த்ததும், பல்லவர் போற்றிய சோமாஸ்கந்தராகக் கோயில்களில் இன்றுவரை அவ்வடிவம் நிலைபெற்று நிற்பதும், சமய எழுச்சியால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை வெள்ளிடை மலையெனக் காட்டும் பத்திமைக்காலச் சமய மெருகூட்டல் எனலாம். நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி துணை நூல்கள் 1. டாக்டர் இரா.கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு-1,2,3 2. டாக்டர் இரா. கலைக்கோவன், இருண்ட காலமா? 3. டாக்டர் இரா. கலைக்கோவன், அத்யந்தகாமம் 4. சங்க இலக்கியங்கள்- எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |