http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[185 Issues]
[1827 Articles]
Home About US Temples Facebook
Issue No. 185

இதழ் 185
[ ஜூலை 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -3
திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு – சிறப்புக் கூறுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 7
இதழ் எண். 185 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு – சிறப்புக் கூறுகள் - 1
ச. கமலக்கண்ணன்


நம் சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனிச்சிறப்புகளைப் பெற்றிருப்பதுபோல் பழங்குறுநூற்றிலும் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தகுந்த கூறுகளை இவ்வத்தியாயத்தில் காணலாம்.

பருவகாலங்கள்

ஜப்பானில் வசந்தம், கோடை, இலையுதிர், பனி என 4 பருவங்கள் மும்மூன்று மாதங்கள் தவறாமல் வரும். பழந்தமிழ் இலக்கியங்களின் பெரும்பொழுதுகளைப் போலவே பருவகாலங்கள் ஜப்பானிய இலக்கியத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றன. அகத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவியின் உணர்வுகளோடு இவை தொடர்புடையவையாக இருக்கின்றன. பழங்குறுநூறு தொகுப்பில் 32 பாடல்களில் பருவங்கள் வெளிப்படையாகச் சுட்டப்படுகின்றன. அவற்றில் 18 பாடல்கள் இலையுதிர் காலத்தையும் தலா 5 பாடல்கள் வசந்த, கோடை காலங்களையும் 4 பாடல்கள் பனிக்காலத்தையும் குறிப்பிடுகின்றன. அப்பருவங்களில் நடந்த நிகழ்வுகளாகவோ உவமைகளாகவோ சுட்டப்படுகின்றன.

காதலர்களின் பிரிவுத் துயருக்கு இலையுதிர்காலம் உவமையாகக் காட்டப்படுகிறது. பனிக்காலம் முதுமைத் தனிமைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. இலையுதிர்காலத்தில் ஜப்பானில் மேப்பிள் மரங்களின் இலைகள் அடர்சிவப்பாகக் காட்சியளிக்கும். அவற்றை வியந்து சில பாடல்கள் உள்ளன.

வசந்த காலத்தின் தொடக்கத்தில் பூக்கும் சக்குரா (செர்ரிப்பூக்கள்) மலர்களின் அழகை வியந்து சில பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஆசிரியர் தான் காணும் அழகைத் தன் மகன் வந்து காணும் வரை அப்படியே வைத்திருக்க இயலுமா எனச் சக்குரா மரத்திடம் கவிநயமான வேண்டுகோள் வைக்கிறார்.

“இடம் மாறினும் மணம் மாறுமா?” எனும் 61ஆவது பாடலில் அரிதாக மலரும் எட்டடுக்குகள் கொண்ட சக்குரா மலரைப் பற்றிய குறிப்பு வருகிறது. இப்போது காண அரிதாக இருக்கும் இம்மலர் அக்காலத்தில் அதிகமாக இருந்ததா எனத் தெரியவில்லை.

செய்யுள் போட்டிகள்

ஜப்பானின் ஹெய்யான் காலகட்டத்தில் செய்யுள் போட்டிகள் நிறைய நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. நம் சங்கப்பலகை போன்று அரசவையில் தரப்பட்ட தலைப்பில் செய்யுள் இயற்றும் போட்டிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். கி.பி. 946 முதல் 967 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் முராகமியின் அரசவையில் புலவர்கள் அழைக்கப்பட்டு அரசருக்கு இடமும் வலமும் வரிசையாக அமரவைக்கப்பட்டு ஒவ்வோர் இணையாக ஒரே தலைப்பில் பாடல் புனையக்கூறி இரண்டில் சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது. அவ்விரண்டு பாடல்களையும் பல்வேறு நுழைவாயில்களில் இருக்கும் திரைச்சீலைகள் இரண்டிலும் எழுதி வைக்கும் வழக்கமும் இருந்தது. இத்தொடரின் 40 மற்றும் 41ம் பாடல்கள் இதுபோல் அரண்மனையில் ஒரு நுழைவாயிலின் இடது மற்றும் வலது திரைச்சீலைகளில் எழுதப்பட்டிருந்தன. இவ்வாறு திரைச்சீலைகளில் எழுதப்படுவது புலவர்களுக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது. அரசராகவோ அமைச்சராகவோ இருந்து ஓய்வு பெற்றபின் இயற்கைசூழ் இடத்தில் குடில் அமைத்து அங்கிருந்து கவிதை புனைந்து வாழ்ந்தவர்களை இவ்விலக்கியத்தில் காண முடிகிறது. “நெஞ்சம் மறப்பதில்லை” எனும் 55ஆவது பாடலை இயற்றிய புலவர் கின்த்தோ அவ்வாறு வாழ்ந்தவர். அவரது குடில் சமகாலத்திய புலவர்களின் சரணாலயமாக விளங்கியது.

காதல் கடிதங்களைக் கவிதைகளாகப் புனையும் போட்டியும் நடந்திருக்கிறது. இரு எதிர்பாலினக் கவிஞர்களை ஓர் இணையாக வகுத்து ஆளுக்கொரு காதல் கடிதத்தைக் கவிதையாகத் தீட்டவேண்டும். முதலாமவரின் கடிதத்துக்கு இரண்டாமவரின் கவிதை பதிலாக அமையவேண்டும். கி.பி. 1102இல் பேரரசர் ஹொரிகவாவின் அரண்மனையில் நடைபெற்ற இப்போட்டியின்போது ஓர் அணியாகப் பங்குபெற்றவர்கள் 29 வயது நிரம்பிய ஆண்பாற்புலவரும் அவருக்குப் போட்டியாக 70-72 வயது நிரம்பிய ஒரு பெண்பாற்புலவரும். போட்டியில் வென்றவர் பதில் கடிதம் தீட்டிய பெண்பாற்புலவர். இத்தொடரில் அது “காதல்மொழிகள் கடலலை போலே” எனும் 72ஆவது பாடலாக இடம்பெற்றிருக்கிறது.

புலவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடந்ததைப் பல பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. கரின் யென் என்றொரு கவிதை வட்டம் இயங்கியதை “ரத்தக்கண்ணீர்” எனும் 90ஆவது பாடல் குறிப்பிடுகிறது. மறுமொழி கூறும் பாடல்களை உடனடியாகப் போட்டிகளிலோ கூடல்களிலோ இயற்றாமல் பின்பொரு நாளில் தனியாக எழுதும் வழக்கமும் இருந்தது. அதை ஹொன்காதோரி என்பார்கள். அதாவது, மூலப் பாடலின் வழியில் என்று பொருள். மேற்சொன்ன 90ஆவது பாடலும் “உடைகளும் சுமையடி தனிமையிலே” எனும் 91ஆவது பாடலும் இம்முறையில் இயற்றப்பட்டவை ஆகும்.

உவமைகள்

இத்தொகுப்பின் பல பாடல்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது குறிப்பிடப்படுகிறது. ஏதாவதொரு காரணத்திற்காக அழுவதைக் குறிக்கிறது இது. அழும்போது துடைக்கக் கைக்குட்டை உடனடியாகக் கிடைக்காவிட்டால் இயல்பாகச் சட்டையின் கைப்பகுதியால் துடைப்போமல்லவா? அதைத்தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். “அலரினும் கொடிது உண்டோ?” எனும் 65ஆவது பாடலில் அளவுக்கு அதிகமாக அழுவதைச் சட்டைக்கை நைந்து போகுமளவு அது கண்ணீரைத் துடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. “உலராப் பாறையன்ன தீராத்துயரம்” எனும் 92ஆவது பாடல் எந்நேரமும் அழுதுகொண்டே இருக்கும் அளவுக்குத் துயரம் நிறைந்த வாழ்க்கைக்குக் கடலுக்குள் இருக்கும் பாறை எப்போதும் ஈரமாகவே இருப்பதைப் போலச் சட்டைக்கை எப்போதும் காயாமல் இருப்பதை உவமையாகக் கூறுகிறது.

“காதல்மொழிகள் கடலலை போலே” எனும் 72ஆவது பாடலில் காதலைச் சொல்வதற்கும் காதலை நிராகரிக்கவும் என இரண்டுக்குமே கடலலை உவமையாகக் காட்டப்பட்டுள்ளது. இரவில் கரைக்கு வரும் கடலலைபோல உன்னைச் சந்திக்க விரும்புகிறேன் என்ற ஆணுக்கு அதே கடலலை மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும் என அதே உவமையைக் கூறிப் பெண் நிராகரிக்கிறார்.

குழப்பமான மனநிலைக்குச் சிக்கலான கூந்தல் உவமை கூறப்படுவது இத்தொகுப்பின் 80ஆவது பாடலில் (மைக்குழற் செறிவன்ன காதல்) தொடங்கிப் பிற்காலத்தில் பிற இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நேற்றிரவு என் கருங்கூந்தலில் ஏற்பட்ட சிக்கல்கள் எப்போது அவிழும் என்று தெரியாததுபோல் உன் அன்பும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியாது என்று தலைவி அரண்மனைக் காதலின் குறுகிய வாழ்வை எண்ணி ஐயுறுகிறாள்.

இரட்டுற மொழிதல்கள் (சிலேடைகள்)

இத்தொகுப்பில் பல பாடல்கள் இருபொருள்படும் இரட்டுற மொழிதலாக இயற்றப்பட்டிருக்கின்றன. மேலே சொன்ன கடலலை உவமையையும் சட்டைக்கை நனைவதையும் இணைத்து 72ஆவது பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. கடலலை சட்டைக்கையை நனைத்துவிடும் என ஒரு பொருளும் கடலலை மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டபின் பிரிவு அழுகைத் துயரைத் தரும் என இன்னொரு பொருளும் கொண்ட இருபொருட் பாடலாகும் இது.

இத்தொகுப்பின் “தனிவழியில் கவிப்பயணம்” எனும் 60ஆவது பாடலும் “குறுங்கூடலின் நெடுநினைவு” எனும் 88ஆவது பாடலும் முழுக்க இரட்டுற மொழிதலாக அமைந்துள்ளன. பாடல் முழுவதுமாக இல்லாமல் சில சொற்கள் மட்டும் இருபொருள்படக் கீழ்க்கண்ட பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3 - Ashibiki, Yo, Nagashi
9 - Nagame, furu
16 - Matsu, Inaba
20 - Miwotsukushi
21 - Nagatsuki
25 - Kuru, Auzaka, Sane
27 - Wakeru, Izumi
28 - Kare
37 - Tama
51 - Ibuki, Sashimo
89 - Tama
97 - Matsu
100 - Shinobu

இவற்றின் பொருள்களும் இருபொருட்தன்மையையும் அவ்வப் பாடல்களின் விளக்கங்களில் காணலாம்.

தொழில்நுட்பங்கள்

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில தொழில்நுட்பங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. “துயரிலும் குன்றா அன்பு” என்னும் 14ஆவது பாடலில் மொஜிஜுரி எனும் துணிகளுக்கு வண்ணமிடும் முறையும் “மலையாற்றின் இலையணை” என்ற 32ஆவது பாடலில் “ஷிகாரமி” எனப்படும் மதகுகளைப் பயன்படுத்தி விரிகுடாப் பகுதியில் மீன்பிடிக்கும் முறையும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. “பனிவிலகலில் அக்கரை வெண்மை” என்ற 64ஆவது பாடலில் “அஜிரோகி” எனும் இனத்தைச் சேர்ந்த மூங்கில்களைச் சிறிது இடைவெளியுடன் கட்டி ஆற்றின் குறுக்கே வைத்து மீன்களைப் பிடித்த முறை குறிப்பிடப்படுகிறது.

அக்காலத்தில் துணி நெய்யும்போது பயன்படுத்திய ஒரு செயல்பாட்டை “ஊருக்கும் தனிமை துயரமே” எனும் 94ஆவது பாடல் பதிவு செய்கிறது. தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும்.

ஜப்பானியர்களின் உணவில் தவறாது இடம்பிடிக்கும் ஒரு பொருள் கடற்பாசி. இதன் சுவைகொண்ட உப்பைத் தயாரிக்கும் முறை இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. உப்பளங்களிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பது போலவே கடலிலிருந்து பாசிகளைக் கொணர்ந்து கடல்நீருடன் கொதிக்கவைத்து வடிகட்டி அந்நீரைப் பாத்திகளில் இட்டு நீர் ஆவியானபின் எஞ்சும் உப்பைப் பிரித்தெடுக்கும் முறையை “எரிதழல் உள்ளம்” என்ற 97ஆவது பாடல் சுட்டுகிறது.

மருத்துவக் கூறுகள்

சில நோய்களும் மருத்துவ முறைகளும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதியமான் அவ்வைக்கு அளித்த ஆயுள் நீட்டிக்கும் அதிசய நெல்லிக்கனியைப் போல ஜப்பானில் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டிப் பாதுகாக்கும் எழுவகைக் காய்கறிகள் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. “உனக்காக உறைபனியில்” என்ற 15ஆவது பாடலில் வகானா என்றொரு காயைக் காதலிக்காகப் பறித்துவந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

“மறந்ததைக் காற்றும் மறைக்காதே!” எனும் 58ஆவது பாடலில் பெற்ற தாய் ஏதோ காரணத்தால் குழந்தைக்குப் பாலூட்ட இயலாத சூழலில் மாற்றாந்தாயாகப் பாலூட்டும் Wet Nurse எனும் பழக்கம் இருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிசியா என்னும் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து மோக்ஸா என்றொரு மருந்தை எடுத்து அதைத் தோலின் மேற்புறத்தில் அல்லது மிக அருகில் வைத்து எரித்தால் நாட்பட்ட வலிகள் முதலான பல நோய்கள் குணமாவதாக அக்குபஞ்சர் போன்ற கீழ்த்திசை மருத்துவமுறைகள் தெரிவிக்கின்றன. ஜப்பானிலும் இதைப்பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை “வலிவிடுதூது” எனும் 51ஆவது பாடல் மூலம் அறியலாம். மூலிகையின் எரிச்சலைக் காதல்வலியுடன் ஒப்பிடுகிறார் புலவர்.

ஜப்பானில் மார்பகப் புற்றுநோய் பற்றிய குறிப்பு இத்தொகுப்பில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. “ரகசியமானது காதல்” எனும் 89ஆவது பாடலை இயற்றிய இளவரசி ஷிக்கிஷி 10 வயதிலேயே மதப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 20 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மதப்பணிகளிலிருந்து விலகினார். சிகிச்சை காலத்தில் கவிதைகளில் நாட்டம் சென்றதால் புலவரானார். 21 ஆண்டுகள் நோயுடன் போராடி 41ம் வயதில் அதிலிருந்து மீண்டு புத்தமதத்தைத் தழுவினார். பின்னர் 52 வயதுவரை வாழ்ந்தார். இவரது சிகிச்சை காலத்தில் இவருக்கு உடனிருந்து பணிவிடைகள் செய்தவர் இத்தொகுப்பின் ஆசிரியர் தெய்க்கா என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனைக் காதல்கள்

அந்தக்கால ஜப்பானிய அரண்மனைகளில் இருந்தவர்களின் காதலுக்கு ஒரு வாழ்க்கைச் சக்கரத்தை வகுத்து வைத்திருந்தார்கள்.
1. ஒருவருக்கு இன்னொருவர்மீது காதல் பிறப்பது
2. தன் காதலைப் பாடல்களாக இயற்றுவது
3. நேரடியாகக் காதலைச் சொல்லாமல் பாடல்களை அனுப்புவது
4. காதலர் தன் காதலை ஏற்றவுடன் தனிமையில் சந்திப்பது
5. காதல் வாழ்க்கையில் ஏதாவது திருப்பம் ஏற்பட்டுப் பிரிவது

இத்தகைய காதல்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே முடிவுற்றதைப் பல பாடல்களில் காண்கிறோம். ஜப்பானிய இலக்கியங்களில் இன்பியல் முடிவுகள் மிகவும் குறைவு. இடையில் காதலர்கள் ஒன்று சேர்ந்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள். எனவே குறுகியகாலக் காதல் வாழ்க்கையை எல்லாக் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் எதிர்பார்த்தே இருக்கும். “இன்றே இனிய நினைவுடன்” எனும் 54ஆவது பாடலில் தலைவன் தன்னிடமிருந்து எப்படியும் பிரிந்துவிடுவான் என்று தலைவி அன்புடன் இருக்கும்போதே இறந்துவிட விரும்புகிறாள். மேற்சொன்ன காதல் கடிதம் தீட்டும் போட்டியில் வென்ற பாடலும் இதையே கூறுகிறது. “அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு” எனும் 67ஆவது பாடல் குறுகிய காதல் வாழ்வைச் சிறிதுநேரமே வந்துபோகும் கனவுடன் ஒப்பிடுகிறது.

திருமண உறவுமுறைகள்

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட சில உறவுமுறைகள் திருமணத்துக்காக ஏற்கப்பட்டும் விலக்கப்பட்டும் இருக்கும். இதுவரை எந்த நாட்டிலும் கேள்விப்பட்டிராத உறவுமுறைகள் ஜப்பானில் திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்கள் தன் தாயின் சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ளவும் பெண்கள் தன் தந்தையின் சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருந்தது வியப்பைத் தருகிறது. நேரடிப் பேரன் பேத்திகளைத் திருமணம் செய்துகொள்வதும் அனுமதிக்கப்பட்டிருந்தது. காதலர் அல்லது இணையர் பிரிந்த பிறகோ இறந்த பிறகோ மீண்டும் வேறொருவருடன் காதல் கொள்வதும் ஏற்கப்பட்டது. அக்காவும் இரு தங்கைகளும் தந்தையையும் மகனையும் பேரனையும் திருமணம் செய்த நிகழ்வுகளும் ஜப்பானிய வரலாற்றில் உண்டு.

அலருக்கு அஞ்சுதல்

நம் சங்க இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய இலக்கியங்களிலும் காதல் வயப்பட்டவர்கள் அலருக்கு அஞ்சுவது வழக்கத்தில் இருந்திருக்கிறது. இரண்டு காரணங்களுக்காக அலருக்கு அஞ்சுகின்றனர். காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அவ்வாறு காதலிப்பவர்களுள் அரசியல் சிக்கல்கள் அல்லது பதவிக்கு ஆபத்துகள் ஏதும் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது. இரண்டாவது நற்பெயர் கெட விரும்பாதது. “அலரினும் கொடிது உண்டோ?” எனும் 65ஆவது பாடலில் சகாமி என்ற பெண்பாற்புலவர் கி.பி. 1051இல் அரசவையில் நடைபெற்ற கவிதைப்போட்டி ஒன்றில் புனைந்த பாடலில் அலரால் நற்பெயர் கெட்டுவிடுமே எனத் தலைவி வருந்துவதுபோல் இயற்றியுள்ளார். அலர் வந்துவிடுமே எனக் காதலையே தவிர்த்த குறிப்பும் “அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு” எனும் 67ஆவது பாடலில் இருக்கிறது.

(வளரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.