http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[185 Issues]
[1827 Articles]
Home About US Temples Facebook
Issue No. 185

இதழ் 185
[ ஜூலை 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -3
திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு – சிறப்புக் கூறுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 7
இதழ் எண். 185 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி
ச. கமலக்கண்ணன்

அறிமுகம்

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மதகுருக்களும் புலவர்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த தெய்க்கா (சதாய்யே எனும் பெயரும் இவருக்கு உண்டு) என்ற அதிகாரி கி.பி. 1235இல் 百人一首 (Hyaku nin isshu - Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97ஆவது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் தான்கா என்னும் பாடல் வகையைச் சேர்ந்தவை. 5 அடிகளில் அமையும் இப்பாவகையின் சீர்கள் 5-7-5-7-7 என்ற வடிவைக் கொண்டிருக்கும். இந்தத் தான்காவிலிருந்து பிறந்ததுதான் கடைசி மூன்றடிகளான 5-7-7 என்ற வடிவிலமைந்த ஹைக்கு எனும் குறுங்கவிதை.

பழங்குறுநூறு காலம்

கி.பி. 622இல் இளவரசர் ஷோதொக்கு இறந்து விடுகிறார். அவரது மகன் யமாஷிரோவை அரசராக்க முயற்சிக்கின்றனர் சோகா வம்சத்தினர். ஆனால் சோகா வம்சத்தின் மிகவும் பலம் பொருந்தியவரும் மன்னரை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தவருமான எமிஷியின் மகன் இருக்காவுக்கு யமாஷிரோ அரசராவது பிடிக்கவில்லை. எனவே, சிறிது சிறிதாக யமாஷிரோவின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைத்து அவரைத் தற்கொலை செய்துகொள்ள வைத்தார்.

சுய்க்கோவுக்குப் பின்னர் அரசர்களாக அரியணை ஏறிய பிதாட்சுவின் மகன் ஜோமெய்யும் அவரது உடன் பிறந்தவர்களும் எமிஷி மற்றும் இருக்காவின் கைப்பாவைகளாகவே விளங்கினர். இருக்காவிடம் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகக் குவிந்துகொண்டே வருகின்றன. கி.பி. 645இல் ஜோமெய்யின் மகன் இளவரசர் கட்சுராகி எமிஷியையும் இருக்காவையும் கொன்று அனைத்து அதிகாரங்களையும் மீட்டெடுத்துப் பேரரசர் கோதொக்குவிடம் சேர்க்கிறார். இவ்விளவரசரே பின்னர் கி.பி. 662இல் பேரரசர் தென்ஜி என்ற பெயரில் அரியணை ஏறினார்.

இவர் இயற்றிய செய்யுள்தான் ஜப்பானியப் பழங்குறுநூறு தொகுப்பின் முதல் செய்யுள். இவ்வரலாற்றின் தொடர்ச்சி இத்தொடரின் பாடல்களில் ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி. 1242இல் பேரரசர் ஜுன்தொக்கு இறந்தபின் ஷோகன் வம்சத்திடமிருந்து சாமுராய்களுக்கு அதிகாரம் கைமாறியது வரையிலான சுருக்கமான வரலாறு இத்தொடரில் இடம்பெறுகிறது.

ஆசிரியர்கள்

இத்தொகுப்பின் 100 ஆசிரியர்களுள் 80 பேர் ஆண்பாற்புலவர்கள், 20 பேர் பெண்பாற்புலவர்கள். பெண்பாற்புலவர்களில் ஒரு பேரரசியையும் இரு இளவரசிகளையும் தவிர்த்து மீதமுள்ள 17 பேரும் சாமானியர்கள். அதில் 9 பேர் புலவர்கள், 8 பேர் சேடிப்பெண்கள். நம் சங்க இலக்கியங்களில் தோழி செய்யுளின் ஒரு பாத்திரமாக இருப்பது போலன்றி அவர்களே பாடலையும் புனைந்துள்ளனர். ஆனால் தலைவிக்காகத் தூது போகாமல் பொதுவான காதல் பாடல்களை இயற்றியுள்ளனர்.

ஆண்பாற்புலவர்களில் 41 புலவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் 11 மதகுருமார்கள். 7 பேரரசர்களையும் 3 இளவரசர்களையும் 2 கற்றறிந்த அறிஞர்களையும் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 16 பேரும் அமைச்சர்கள், ஆளுநர்கள், படைத்தளபதிகள், நீதிபதிகள் போன்ற அதிகாரிகள். இதில் 24 பேர் தாங்கள் இயற்றிய பிற பாடல்களைத் தனித்தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சமாகக் கமாகுரா என்ற படைத்தளபதி சுமார் 700 பாடல்களை இயற்றியுள்ளார். பல்வேறு தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

காலத்தால் அழியாத புலவர்கள் பட்டியல்கள்

காலத்தால் அழியாத புலவர்கள் எனும் 5 பட்டியல்கள் ஜப்பானிய இலக்கியத்தில் உண்டு.
1. 6 பழம்புலவர்கள்,
2. 36 முற்காலப் புலவர்கள்,
3. 36 இடைக்காலப் புலவர்கள்,
4. 36 பிற்காலப் புலவர்கள்,
5. 36 பெண்பாற்புலவர்கள்

பழம்புலவர்கள் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் உள்ள சிலர் பிற 3 பட்டியல்களிலும் இடம்பெற்றுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள ஆசிரியர்களில் 5 பேர் 6 பழம்புலவர்கள் பட்டியலிலும் 24 பேர் முற்காலப் பட்டியலிலும் 14 பேர் இடைக்காலப் பட்டியலிலும் 6 பேர் பிற்காலப் பட்டியலிலும் 13 பேர் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 3 பட்டியல்களில் இடம்பெற்றவராக “இணையற்ற அழகும் நிலையற்றதே” எனும் 9ஆவது பாடலை இயற்றிய கொமாச்சி ஓனோ திகழ்கிறார்.

ஆறு பழம்புலவர்கள்
1. குரோனுஷி ஓதொமோ (Outomo no Kuronushi)
2. கொமாச்சி ஓனோ (Ono no Komachi) – பாடல் 9
3. நரிஹிரா அரிவாரா (Ariwara no Narihira) – பாடல் 17
4. ஹோஷி கிசென் (Kisen Houshi) – பாடல் 8
5. ஹென்ஜோ சோஜோ (Soujou Henjou) – பாடல் 21
6. யசுஹிதே ஃபுன்யா (Fun'ya no Yasuhide) – பாடல் 22

36 முற்காலப் புலவர்கள்
1. ஹிதோமரோ கக்கினொமொதோ (Kakinomoto no Hitomaro) – பாடல் 3
2. ட்சுராயுக்கி கி (Ki no Tsurayuki) – பாடல் 35
3. மிட்சுனே ஓஷிகோச்சி (Oushikouchi Mitsune)
4. இசே (Lady Ise) – பாடல் 19
5. யக்காமொச்சி ஓதொமொ (Outomo no Yakamochi) – பாடல் 6
6. அக்காஹிதோ யமாபே (Yamabe no Akahito) – பாடல் 4
7. நரிஹிரா அரிவாரா (Ariwara no Narihira) – பாடல் 17
8. ஹென்ஜோ (Henjou) – பாடல் 12
9. சோசெய் (Sosei) – பாடல் 21
10. தொமோனாரி கி (Ki no Tomonori) – பாடல் 33
11. தாய்ஃபு சருமரு (Sarumaru no Taifu) – பாடல் 5
12. கொமாச்சி ஓனோ (Ono no Komachi) – பாடல் 9
13. கனேசுகே ஃபுஜிவாரா (Fujiwara no Kanesuke) – பாடல் 27
14. அசாததா ஃபுஜிவாரா (Fujiwara no Asatada) – பாடல் 44
15. அட்சுததா ஃபுஜிவாரா (Fujiwara no Atsutada) – பாடல் 43
16. தகாமிட்சு ஃபுஜிவாரா (Fujiwara no Takamitsu)
17. கின்ததா மினாமொதோ (Minamoto no Kintada)
18. ததாமினே மிபு (Mibu no Tadamine) – பாடல் 30
19. நியோகோ சாய்கூ (Saiguu no Nyougo)
20. யொரிமொதோ ஓனகாதொமி (Ounakatomi no Yorimoto)
21. தொஷியுக்கி ஃபுஜிவாரா (Fujiwara no Toshiyuki) – பாடல் 18
22. ஷிகேயுக்கி மினாமொதோ (Minamoto no Shigeyuki) – பாடல் 48
23. முனேயுக்கி மினாமொதோ (Minamoto no Muneyuki) – பாடல் 28
24. சனேஅகிரா மினாமொதோ (Minamoto no Saneakira)
25. கியோததா ஃபுஜிவாரா (Fujiwara no Kiyotada)
26. ஷிதாகோ மினாமொதோ (Minamoto no Shitagou)
27. ஒக்கிகசே ஃபுஜிவாரா (Fujiwara no Okikaze) – பாடல் 34
28. மொத்தோசுகே கியோஹரா (Kiyohara no Motosuke) – பாடல் 42
29. கொரேனொரி சகானோஉவே (Sakanoue no Korenori) – பாடல் 31
30. மொத்தோஜானே ஃபுஜிவாரா (Fujiwara no Motozane)
31. யொஷினொபு ஓனகாதொமி (Ounakatomi no Yoshinobu) – பாடல் 49
32. நக்காஃபுமி ஃபுஜிவாரா (Fujiwara no Nakafumi)
33. கனேமொரி தாய்ரா (Taira no Kanemori) – பாடல் 40
34. ததாமி மிபு (Mibu no Tadami) – பாடல் 41
35. கிமி கோதாய் (Kodai no Kimi)
36. நக்காட்சுகசா (Nakatsukasa)

36 இடைக்காலப் புலவர்கள்
1. ஷோனகோன் செய் (Sei Shounagon) – பாடல் 62
2. ஷிக்கிபு இசுமி (Izumi Shikibu) – பாடல் 55
3. சகாமி (Sagami) – பாடல் 65
4. எக்யோ (Egyou)
5. எமோன் அகாசொமே (Akazome Emon) – பாடல் 59
6. மிச்சினொபு ஃபுஜிவாரா (Fujiwara no Michinobu) – பாடல் 52
7. நோயின் (Nouin) – பாடல் 69
8. சதாஃபுமி தாய்ரா (Taira no Sadafumi)
9. ஃபுக்காயபு கியோஹரா (Kiyohara no Fukayabu) – பாடல் 36
10. நாய்ஷி உமா (Uma no Naishi)
11. யொஷிதக்கா ஃபுஜிவாரா (Fujiwara no Yoshitaka)
12. ச்சிசாதோ ஓயே (Oue no Chisato) – பாடல் 23
13. சதாயொரி ஃபுஜிவாரா (Fujiwara no Sadayori) – பாடல் 64
14. ச்சூஜோ ஜோதோமொன் (Joutoumon'in no Chuujou)
15. ஷிக்கிபு முராசாகி (Murasaki Shikibu) – பாடல் 57
16. மிச்சிட்சுனா ஃபுஜிவாராவின் தாய் (Fujiwara no Michitsuna no Haha)
17. நகாதோ ஃபுஜிவாரா (Fujiwara no Nagatou)
18. முனேயமா அரிவாரா (Ariwara no Muneyana)
19. மிச்சிமசா ஃபுஜிவாரா (Fujiwara no Michimasa)
20. இளவரசர் கனேமி (Prince Kanemi)
21. தாய்ஃபு இசே (Ise no Taifu) – பாடல் 61
22. யொஷிததா சொனே (Sone no Yoshitada)
23. யசுஹிதே ஃபுன்யா (Fun'ya no Yasuhide) – பாடல் 22
24. ததாஃபுசா ஃபுஜிவாரா (Fujiwara no Tadafusa)
25. சுகேயக்கி சுகாவரா (Sugawara no Sukeaki)
26. மசாஹிரா ஓயெ (Oue no Masahira)
27. அன்ப்போ (Anpou)
28. யொஷிதக்கி ஓயெ (Oue no Yoshitoki)
29. மிச்சினாரி மினாமொதோ (Minamoto no Michinari)
30. தோம்யோ (Doumyou)
31. ஜோகி (Zouki)
32. மொதோகதா அரிவாரா (Ariwara no Motokata)
33. சனேகதா ஃபுஜிவாரா (Fujiwara no Sanekata) – பாடல் 51
34. கின்த்தோ ஃபுஜிவாரா (Fujiwara no Kintou) – பாடல் 55
35. சுகேச்சிகா ஓனகதொமி (Ounakatomi no Sukechika)
36. தகதோ ஃபுஜிவாரா (Fujiwara no Takatou)

36 பிற்காலப் புலவர்கள்
1. பேரரசர் இரண்டாம் தொபா (Emperor Go-Toba) – பாடல் 99
2. பேரரசர் ட்சுச்சிமிகாதோ (Emperor Tsuchimikado)
3. பேரரசர் ஜுன்தொக்கு (Emperor Juntoku) – பாடல் 100
4. பேரரசர் இரண்டாம் சாகா (Emperor Go-Saga)
5. இளவரசர் மசானரி (Prince Masanari of Rokujou-no-Miya)
6. இளவரசர் முனேதக்கா (Prince Munetaka of Kamakura-no-Miya)
7. இளவரசர் தோஜோந்யூதோ (Prince Doujonyuudou)
8. இளவரசி ஷிக்கிஷி (Princess Shikishi) – பாடல் 89
9. யொஷிட்சுனே குஜோ (Kujou Yoshitsune)
10. மிச்சிஇயே குஜோ (Kujou Michiie)
11. கின்ட்சுனே சாய்யொன்ஜி (Saionji Kintsune)
12. மிச்சிதெரு கொகா (Koga Michiteru)
13. சனேயுஜி சாய்யொன்ஜி (Saionji Saneuji)
14. சனேதொமோ மினாமொதோ (Minamoto no Sanetomo) – பாடல் 93
15. மொதோஇயே குஜோ (Kujou Motoie)
16. இயேனொஷி ஃபுஜிவாரா (Fujiwara no Ieyoshi)
17. ஜியென் (Jien) – பாடல் 95
18. க்யோய் (Gyoui)
19. மிச்சிதொமோ மினாமொதோ (Minamoto no Michitomo (Horikawa Michitomo))
20. சதாய்யே ஃபுஜிவரா (Fujiwara no Sadaie) – பாடல் 97
21. தக்காகுரா ஹச்சிஜோ (Hachijou-in Takakura)
22. ஷுன்செய்யின் மகள் (Shunzei's Daughter)
23. குனாய்க்யோ கோ-தொபா (Go-Toba-in Kunaikyou)
24. ஷோஷோ சோஹெகிமொன் (Souhekimon'in no Shoushou)
25. தமேஇயே ஃபுஜிவாரா (Fujiwara no Tameie)
26. மசாட்சுனே அசுகாய் (Asukai Masatsune)
27. இயேதக்கா ஃபுஜிவாரா (Fujiwara no Ietaka) – பாடல் 98
28. தொமோஇயே ஃபுஜிவாரா (Fujiwara no Tomoie)
29. அரியியே ஃபுஜிவாரா (Fujiwara no Ariie)
30. மிட்சுதொஷி ஹமுரோ (Hamuro Mitsutoshi)
31. நொபுஜானே ஃபுஜிவாரா (Fujiwara no Nobuzane)
32. தொமோச்சிகா மினாமொதோ (Minamoto no Tomochika)
33. தக்காசுகே ஃபுஜிவாரா (Fujiwara no Takasuke)
34. இயேநகா மினாமொதோ (Minamoto no Ienaga)
35. ச்சோமெய் கமோ (Kamo no Choumei)
36. ஹிதேயொஷி ஃபுஜிவாரா (Fujiwara no Hideyoshi)

36 பெண்பாற்புலவர்கள்
1. கொமாச்சி ஓனோ (Ono no Komachi) – பாடல் 9
2. இசே (Ise) – பாடல் 19
3. நகாட்சுகசா (Nakatsukasa)
4. கிஷி ஜோவ் (Kishi Joou)
5. உகோன் (Ukon)
6. மிச்சிட்சுனா ஃபுஜிவாராவின் தாய் (Fujiwara no Michitsuna no Haha) – பாடல் 53
7. நாய்ஷி உமா (Uma no Naishi)
8. எமோன் அக்காசொமே (Akazome Emon) – பாடல் 59
9. ஷிக்கிபு இசுமி (Izumi Shikibu) – பாடல் 56
10. கிமி கொதாய் (Kodai no Kimi)
11. ஷிக்கிபு முராசாகி (Murasaki Shikibu) – பாடல் 57
12. நாய்ஷி கொஷிக்கிபு (Koshikibu no Naishi) – பாடல் 60
13. தாய்ஃபு இசே (Ise no Taifu) – பாடல் 61
14. ஷோனகோன் செய் (Sei Shounagon) – பாடல் 62
15. சான்மி தாய்னி (Daini no Sanmi)
16. கிஷி தக்காஷினா (Takashina no Kishi)
17. கீ யூஷி நாய்ஷின்னோ (Yuushi Naishinnou-ke no Kii)
18. சகாமி (Sagami) – பாடல் 65
19. நாய்ஷின்னோ ஷிக்கிஷி (Shikishi Naishinnou)
20. குனாய் (Kunai-kyou)
21. நாய்ஷி சுவோ (Suou no Naishi) – பாடல் 67
22. தொஷினாரி ஃபுஜிவாராவின் மகள் (Fujiwara no Toshinari no Musume)
23. ஹொரிகவா தாய்கென்மொன் (Taikenmon'in no Horikawa) – பாடல் 80
24. தாங்கோ கிஷூமொன் (Gishuumon'in no Tango)
25. எச்சிஜென் கயோமொன் (Kayoumon'in no Echizen)
26. சனுக்கி நிஜோ (Nijouin no Sanuki) – பாடல் 92
27. கொஜிஜூ (Kojijuu)
28. ஷிமோட்சுகே கோ-தொபா (Go-Toba-in no Shimotsuke)
29. நாய்ஷி பென் (Ben no Naishi)
30. நாய்ஷி கொஃபுககுசா (Gofukakusa-in no shoushou no naishi)
31. தாயூ இன்ப்புமொன் (Inpumon'in no Tayuu)
32. கொசாய்ஷோ ட்சுச்சிமிகாதோ (Tsuchimikado'in no Kosaishou)
33. தக்காகுரா ஹச்சிஜோ (Hachijou-in Takakura)
34. ச்சிகாக்கோ ஃபுஜிவாரா (Fujiwara no Chikako)
35. மிக்குஷிகே ஷிக்கிகென்மொன் (Shikikenmon'in no Mikushige)
36. ஷோஷோ சோஹெகிமொன் (Souhekimon'in no Shoushou)

சமகால இலக்கியங்கள்

ஜப்பானில் தனிப்பாடல்களும் செவிவழிக் கதைகளும் பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வந்திருந்தாலும் அவற்றைத் தொகுத்து நூலாகப் பதிப்பிக்கும் போக்கு கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. தொகுப்பதற்கு முன்பே சுமார் 1,000 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த செய்யுள்கள் கொஜிக்கி (Kojiki – பழம்பதிவுகள்) என்ற பெயரில் கி.பி. 712ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன. கி.பி. 720ஆம் ஆண்டு நிஹோன்ஷொக்கி (Nihonshoki – ஜப்பானியப் பதிவுகள்) என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜப்பானின் அரச வம்சத்தின் தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது. இவையிரண்டும் புராணங்களையும் செவிவழிக் கதைகளையும் தகவல் பதிவுகளாக உரைநடை வடிவில் கொண்டவை.

தொடக்க காலம் முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தனிப்பாடல்களைத் தொகுத்து கி.பி. 759இல் ஜப்பானின் முதல் செய்யுள் இலக்கியமாகப் படைக்கப்பட்டது மான்யோஷு (Manyoushu – பத்தாயிரம் இலைகள்) ஆகும். இது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜோக்கா எனப்படும் விருந்து மற்றும் பயணம் தொடர்பான பல்சுவைப் பாடல்கள்; சோமொன்கா எனப்படும் காதல் பாடல்கள், பன்கா எனப்படும் இறப்பைப் பாடும் பாடல்கள் என்று 4,516 பாடல்களைக் கொண்ட தொகுப்பு ஆகும். இதில் 4,207 பாடல்கள் தான்கா வகையைச் சேர்ந்தவை ஆகும்.

ஜப்பானியப் பழங்குறுநூறு (Hyaku Nin Isshu) தொகுப்பிலுள்ள சில பாடல்களும் மான்யோஷு தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஓர் ஆசிரியருக்கு ஒரு பாடல் மட்டுமே பழங்குறுநூற்றில் இடம்பெற்றமையால் அவர்களின் பிற சிறந்த பாடல்கள் மான்யோஷு தொகுப்பில் இடம்பெறச் செய்யப்பட்டன. மிகச்சிறந்த பாடல்களாகக் கருதப்பட்டவை இரு தொகுப்புகளிலும் இடம்பெற்றது மட்டுமின்றி அவரவர் தனிப்பாடல் திரட்டுகளிலும் இடம்பெற்றுப் பிற தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.

பிற தொகுப்புகள் என்பது கி.பி. 10ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொகுக்கப்பட்ட நிஜூஇச்சிதாய்ஷு (Niju-Ichidai shu - 21 தொகுப்புகள்) ஆகும். பழங்குறுநூற்றின் சில பாடல்கள் இடம்பெற்றிருக்கும் ஷின்கொக்கின்ஷு மற்றும் கொசென்ஷு ஆகியவையும் இந்த 21இல் அடக்கம். தொடக்ககாலம் முதலே சீனாவுடனும் கொரியாவுடனும் அரசியல் உறவுகள் இருந்தாலும் கொரிய இலக்கியங்களைவிடச் சீன இலக்கியங்கள் வளமை பெற்றிருந்தமையால் அவற்றின் தாக்கம் மான்யோஷுவிலும் பழங்குறுநூற்றிலும் இருப்பதைக் காணலாம்.

சமகாலச் சிற்றரசு வம்சங்கள்

உலகின் எல்லா நாடுகளையும் போலவே அரசியல் சார்ந்த மணவினைகள் ஜப்பானிலும் ஏராளம் உண்டு. அரச குடும்பத்துடன் மண உறவு கொள்ளத்தக்கனவாகவும் அரசவையில் உயர்நிலைப் பொறுப்புகளை வகிக்க வல்லதாகவும் சில குடும்பங்கள் தகுதி பெற்றிருந்தன. இவை பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்து கிளைத்து வளர்ந்தவை. ஏதாவதொரு காரணத்தால் பேரரசராக முடிசூட்டப்படாத வாரிசுகளுக்கும் அவர்கள் குடும்பத்தார்க்கும் உரிய முக்கியத்துவம் தரவேண்டி இவை உருவாக்கப்பட்டன.

ஜப்பானிய அரசியல் வரலாற்றில் முக்கியப் பங்குவகித்த 4 வம்சங்களான மினாமொதோ (Minamoto), தாய்ரா (Taira), ஃபுஜிவாரா (Fujiwara), தச்சிபானா (Tachibana) ஆகியவை அவற்றின் முதலெழுத்துகளை வைத்துச் சுருக்கி கெம்ப்பெய்த்தொக்கிட்சு (源平藤橘 - Gem-Pei-Tok-Kitsu) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

மினாமொதோ வம்சம்
கி.பி. 814இல் பேரரசர் சாகாவின் 7ஆவது மகன் மகோதோவுக்கு முதன்முதலில் இப்பட்டத்தை அளித்தார். ஜப்பானில் ஃபுஜிவாரா வம்சத்துக்கு அடுத்து நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்த வம்சம் இதுவாகும். ஜப்பானின் இடைக்கால வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகவும் சாட்சியாகவும் பங்கேற்பாளர்களாகவும் இவ்வம்சத்தினர் இருந்திருக்கின்றனர். எதனால் மகோதோவுக்கு அரசப்பட்டம் மறுக்கப்பட்டுத் தனி வம்சமாக இயங்க அனுமதிக்கப்பட்டார் என்பதைக் கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த முராசாகி ஷிகிபு என்ற பெண்பாற் புலவர் எழுதிய கென்ஜியின் கதை (源氏物語 - The tale of Genji) என்ற புதினம் சுவைபட விளக்குகிறது. இப்புலவர் பழங்குறுநூற்றின் 57ஆவது பாடலான “நிலவென மறைந்தது நீயா?” என்ற பாடலை இயற்றியவரும் ஆவார்.

தாய்ரா வம்சம்
கி.பி. 804 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் கன்முவின் பேரன் தக்காமுனே (Takamune) என்பவருக்குக் கி.பி. 825இல் இப்பட்டம் வழங்கப்பட்டு தாய்ரா வம்சம் தொடங்கியது. கி.பி. 1199 வரை இவ்வம்சத்தினரின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெய்ஜி புரட்சிக் காலகட்டத்தில் கி.பி. 1180இல் மினாமொதோ வம்சத்துக்கும் தாய்ரா வம்சத்துக்கும் இடையிலான கைகலப்பு பெரும் போராக உருவெடுத்தது. இது கெம்ப்பெய்ப் போர் என அழைக்கப்படுகிறது. இப்போரில் தாய்ரா வம்சம் தோற்கடிக்கப்பட, இத்துடன் இவ்வம்சத்தின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓடா (Oda) வம்சத்தினர் தங்களை தாய்ரா வம்சத்தின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டனர். பழங்குறுநூற்றின் 93ஆவது பாடலான “காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!” பாடலின் ஆசிரியர் குறிப்பில் இப்போர் குறித்த செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

ஃபுஜிவாரா வம்சம்
கி.பி. 645இல் பேரரசர் தென்ஜி சோகா வம்சத்தின் எமிஷியையும் இருக்காவையும் அழித்தபோது இவருக்குப் பக்கபலமாக இருந்தவர் நகாதொமி வம்சத்தைச் சேர்ந்த சூரோ (Churou) என்பவர். அதற்கு நன்றிக் கடனாகப் பேரரசர் தென்ஜி சூரோவுக்கு ஃபுஜிவாரா வம்சத்தின் கமதாரி என்ற பட்டத்தை அருளினார். அதிலிருந்து மெய்ஜி காலம் தொடங்கும் வரையில் இவ்வம்சம் ஜப்பானின் அரசியல் வரலாற்றில் நிலைத்து நின்றது. ஜப்பானிய அரச வம்சத்துடன் அதிக அளவு மண உறவுகளைப் பூண்டவர்கள் இவர்கள்தான்.

தச்சிபானா வம்சம்
கி.பி. 708இல் பேரரசி கென்மெய் அவர்களால் அரசவையில் பணிப்பெண்ணாக இருந்த மிச்சியோ என்பவரின் பணிவையும் திறமையையும் பாராட்டித் தச்சிபானா பட்டத்தை அருளினார். மற்ற வம்சத்தினரைப் போல் போர்களிலும் அரண்மனையின் வெளிவிவகாரங்களிலும் ஈடுபடாமல் அரசவைக்குள்ளே பெரும்பாலும் சிக்கலில்லாத பதவிகளை வகித்து வந்ததால் பெரிதாக இவ்வம்சம் இலக்கியங்களில் தென்படுவதில்லை. அரண்மனையின் உள்விவகாரங்களில் எப்போதும் ஃபுஜிவாரா வம்சத்தினருடன் இவர்களுக்கு உரசல் இருந்துகொண்டே இருந்தது. சில சமயங்களில் வெளிப்படையாகவும் வெடித்துக் கொண்டிருந்தது. பின்னர் கி.பி. 941இல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையின்போது ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சுமிதொமோ என்பவர் இவர்களை அடக்கி ஒடுக்கினார். அத்துடன் இவ்வம்சம் முடிவுக்கு வந்தது.

இவைதவிர, பழங்குறுநூறு காலகட்டத்தில் வாழ்ந்த மேலும் சில குறிப்பிடத் தகுந்தனவாக மொனோநொபே (Mononobe), சோகா (Soga), தொக்குகவா (Tokugawa), ஓதொமோ (Otomo) வம்சங்களைக் குறிப்பிடலாம். அசுகா காலத்திலும் நரா காலத்திலும் பேரரசரின் ஆலோசகர்களாக இருந்துள்ளனர்.

கருத்தா விளையாட்டு
நம் ஊர் சீட்டுக்கட்டு போல ஜப்பானில் கருத்தா என்ற அட்டைக்கட்டு ஒன்று உள்ளது. அவற்றில் கவிதைகளோ பழமொழிகளோ புதிர்களோ எழுதப்பட்டிருக்கும். அதிலிருந்து குத்துமதிப்பாக ஒன்றை எடுத்து ஒருவர் முதல் பாதியைச் சொன்னால் எதிரில் இருப்பவர் மீதிப்பாதியைச் சொல்லவேண்டும். சரியாகச் சொல்பவர் வென்று அடுத்த போட்டியாளருக்கு அடுத்த அட்டையின் முதல்பாதியைக் கூறவேண்டும். ஜப்பானின் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் பழங்குறுநூறு கருத்தா அட்டைகளைக் கொண்டு விளையாட்டுகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



கருத்தா அட்டைகள்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.