http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 42

இதழ் 42
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

கோயில்தோறும் வரலாறு
ஆண்டிச்சிப்பாறைக் குடைவரை
கதை 12 - அரிகண்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 14
பழியிலி ஈசுவரம்
வாரணமாயிரம்
முதல் பார்வையில் பாண்டியர் குடைவரைகள்
அங்கும் இங்கும் (டிச. 16 - ஜன. 15)
Silpis Corner (Series)
Silpi's Corner-04
Links of the Month
கல்கி வழியே முத்தொள்ளாயிரம்
அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
இதழ் எண். 42 > கலைக்கோவன் பக்கம்
பழியிலி ஈசுவரம்
இரா. கலைக்கோவன்

நகரத்தார் மலை என்று கல்வெட்டுகளில் அறியப்படும் நார்த்தாமலையின் உள்ளடங்கிய சரிவில் கிழக்குப் பார்த்த கருவறை ஒன்று அகழப்பட்டுள்ளது.(1) அதன் முன்னிருந்த மண்டபத்தின் தாங்குதளம் மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. கிழக்கு மேற்காக 3. 87 மீ. அகலம், தென்வடலாக 5. 10 மீ. நீளம் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மண்ணில் புதைந்திருக்கும் துணைத்தளத்தின் மேலுறுப்புகளாகப் பாதங்கள் பெற்ற உயரமான கண்டமும் பெருவாஜனமும் வெளித் தெரிய, மேலே பிரதி பந்தத் தாங்குதளம் ஜகதி, உருள்குமுதம், பிரதிவரி கொண்டெழுகிறது.(2) யாளி, யானை, சிம்ம வரிகளுக்கு மாற்றாகப் பிரதிவரியில் பூதவரிசை இடம்பெற்றுள்ளது. பொதுவாக விமான வலபிகளில் மட்டுமே இடம்பெறும் பூதவரிசை, பழியிலி ஈசுவரத்தின் முகமண்டபப் பிரதிவரியில் பிரதிமுகங்களுக்கு மாற்றாகக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விலக்கமாகும்.

தாங்குதளத்தின் கிழக்கு முக நடுப்பகுதியில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் அமைத்திருக்கும் நான்கு படிகள் தளத்தின் மேற்பகுதிக்கு வழிவிடுகின்றன. தளத்தின் நடுப்பகுதியில் கருவறைக் குடைவரையைப் பார்த்தவாறு கழுத்தில் மணிமாலை, நெற்றிப்பட்டம் சூழ்ந்த நெற்றிச்சுட்டி பெற்ற நந்தியொன்று இருத்தப்பட்டுள்ளது. மலைச்சரிவில் மண்டபத் தரையிலிருந்து 42 செ. மீ. உயரத்தில், 74 செ. மீ. அகலம், 1. 48 மீ. உயரத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் திறப்பு கருவறைக்கான வாயிலாக அமைந்துள்ளது.

இத்திறப்பிற்குச் சற்று உள்ளடங்கிய நிலையில் நிலைக் கால்கள், மேல் கீழ் நிலைகள் பெற்ற நிலையமைப்பு உள்ளது. கருவறை முன்சுவரில் வாயிலை அணைத்து அமையுமாறு இரண்டு நான்முக அரைத்தூண்களை உருவாக்க முயன்றுள்ளனர். உறுப்பு வேறுபாடற்ற இவ்வரைத்தூண்கள் நேரடியாகத் தாங்குமாறு வெட்டப்பட்டுள்ள உத்திரமும் முழுமையடைய வில்லை. அரைத்தூண்களை அடுத்துள்ள பாறைச்சுவரும் கோட்டங்களாக்கப்படும் நோக்கோடு ஆங்காங்கே அகழப் பட்டுப் பணி நிறைவடையாமல் விடப்பட்டுள்ளது. வாயிலை அடுத்துக் கருவறை முழுக்காட்டு நீர் வெளியேற வாய்ப்பாக வடசுவரின் கீழே குழிவுடனான துளையொன்று ஏற்படுத்தியுள்ளனர். வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக காவலர் சிற்பங்கள் சாய்த்து நிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மேற்காக 2. 48 மீ. நீளம், தென்வடலாக 2. 39 மீ. அகலம், 2. 05 மீ. உயரம் பெற்று அமைந்துள்ள கருவறையின் கூரையும் சுவர்களும் வெறுமையாக உள்ளன. தரையின் நடுவே, உபானம், உயர்தாமரை, கண்டம், தாழ்தாமரை, வாஜனம், கம்பு பெற்ற 52 செ. மீ. உயர வேசர ஆவுடையார்மீது 46 செ. மீ. உயர உருளை பாணத்துடன் செய்லிங்கம் இருத்தப்பட்டுள்ளது.(3)

வாயிலின் தெற்கிலும் வடக்கிலும் இருத்தப்பட்டுள்ள காவலர் இருவருமே முன்னுள்ள மண்டப வாயிலில் இடம் பெற்றிருந்தவர்கள் ஆகலாம். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள் பெற்றுள்ள இவர்கள் இடுப்பிற்குக் கீழ் கருவறைக்காய் ஒருக்களித்திருந்தாலும், நேர்ப் பார்வையினராகவே நிற்கின்றனர். கரண்டமகுடத்துடன் உள்ள தெற்கரின் வலக்கை வியப்பில் விரிய, இடக்கை, அருகில் நிறுத்தப்பட்டுள்ள மரக்கிளையில் முழங்கை தாங்கலாகுமாறு, நெகிழ்த்தப்பட்டுள்ளது. இடப்பாதம் கருவறைக்காய்த் திரும்பி யிருக்க, வலப்பாதம் இடப்புறமுள்ள மரக்கிளையில் உயர்த்தி இருத்தப்பட்டுள்ளது. இப்புன்னகையாளரின் கோவணஆடையைச் சிம்மமுகக் கச்சு அரையில் இருத்துகிறது. தலையின் இருபுறத்தும் மகுடம் மீறிய சடைப்பரவல்.

சடைமகுடரான வடக்கர் வலப்பாதத்தைக் கருவறைப் பார்வையில் திருப்பி, இடப்பாதத்தை வலக்காலின் பின் ஸ்வஸ்திகமாக்கி அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ளார். அருகிலுள்ள உருள்பெருந்தடிமீது முழங்கை அமருமாறு வலக்கை நெகிழ,(4) இடக்கை எச்சரிக்கிறது. சிற்றாடையும் இடைக்கட்டும் பெற்றுள்ள இவரது தலைமுடியும் விரிசடையென மகுடத்தின் இருபுறத்தும் பரந்துள்ளது.

பிரதிவரியிலுள்ள பூதங்களுள் பெரும்பான்மையன ஆடற்கோலத்தில் உள்ளன. வடபுறத்தே இடக்கை, சிரட்டைக் கின்னரி, இலைத்தாளம் இவற்றுடனான இசைக்கலைஞர்களையும் அவ்விசைக்கு ஆடல் நிகழ்த்துவனவாய்ப் பூதங்கள் சிலவற்றையும் காணமுடிகிறது. கிழக்கில் மத்தளம், செண்டுதாளம் ஏந்திய பூதங்களும் ஆடற்கணங்களும் உள்ளன. தென்கிழக்குச் சிற்பங்களுள் பல சிதைந்துள்ளன. தெற்குப்பகுதியில் உள்ள ஆடற்கணங்கள் தோளுயர்த்தி ஆடுமாறு காட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஆடல் அமைவை அரிதாகவே பிற கோயில்களில் காணமுடிகிறது.

இவ்வளாகத்தில் காணப்படும் ஒரே கல்வெட்டு மண்டப முகப்பில் உள்ள தமிழ்க் கல்வெட்டாகும்.(5) பல்லவ வேந்தர் நிருபதுங்கவர்மரின் ஏழாம் ஆட்சியாண்டில் வெட்டப் பட்டுள்ள இக்கல்வெட்டால், விடேல்விடுகு முத்தரையரின் மகனான சாத்தம் பழியிலி இக்கருவறையைக் குடைவித்தமையை அறியமுடிகிறது. இதனைக் கல்வெட்டு, 'ஸ்ரீகோயில்' என்று குறிப்பதால், கருவறை மட்டுமே கொண்ட கட்டமைப் பும் அக்காலத்தே கோயில் என்ற பெயராலேயே சுட்டப்பட்டமையை அறியலாம். கல்வெட்டுக் காணப்படும் மண்டபம் முகமண்டபமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன் மீதிருக்கும் நந்தி, அதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டில், பலித்தளம் இவற்றை செய்வித்த பழியிலி சிறிய நங்கை, சாத்தம் பழியிலியின் மகளாகவும் மீனவன் தமிழ் அதிஅரையனான வாலன்(6) அனந்தனின் மனைவியாகவும் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்.

இக்கோயில் இறைவனின் வழிபாடு, படையல் இவற்றிற்காக அண்ணல்வாயில் கூற்றத்துப் பெருவிளத்தூரைச் சேர்ந்த சவைஞ்சாத்தன் காணியான மூன்று வேலியில் கால் செய் நிலம் சிறிய நங்கையால் விலைக்குப் பெறப்பட்டது. நிலத்தின்மீதான அரசு சார் வரியினங்களைச் செலுத்தவேண்டாம் என்றும் அவற்றை சவைஞ்சாத்தனும் அவர் வழியினரும் அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் உணர்த்தப்பட்டதுடன், நிலம், கோயில் பட்டுடையாராக விளங்கிய உழுத்திரன் தேயபுக்கியின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டது. இவ்வறத்திற்கு இடையூறு ஏதேனும் ஏற்படின், அரசிற்கு இருபத்தைந்து கழஞ்சுப் பொன் தண்டம் கட்டவேண்டும் என ஆணையிட்டுள்ள பழியிலி சிறிய நங்கை, இந்தத் தேவதானத்தைக் காத்துப் போற்றுவார் திருவடிகளைத் தம் தலைமேல் ஏற்பதாகப் பணிவன்புடன் தெரிவித்துள்ளமை அக்காலக் கொடையாளர்களின் பண்பு நலம் காட்டுவதாய் உள்ளது.

பழியிலி சிறிய நங்கையின் கல்வெட்டு, குடைவரை உருவாக்கப்பட்ட ஆண்டாகப் பல்லவ மன்னர் நிருபதுங்கவர்மரின் (கி. பி. 865 - 906) ஏழாம் ஆட்சியாண்டைச் சுட்டுவதால், குடைவரையின் காலத்தைக் கி. பி. 872 ஆக நிர்ணயிக்கமுடிகிறது.

குறிப்புகள்

1. ஆய்வு செய்த நாள் 18. 11. 2007. ஆய்விற்குத் துணைநின்றவர்கள் பேராசிரியர் முனைவர் மு. நளினி, முனைவர் பட்ட ஆய்வர் சுமிதா மூர்த்தி, ஆய்வாளர் பால பத்மநாபன்

2. வரி, வரிமானம், வட்டமான குமுதம் இருப்பதாகக் கூறுகிறார் தி. இராசமாணிக்கம், தமிழகக் குடைவரைக் கோயில்கள், ப. 109.

3. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் 'முதலாம் குலோத்துங்கரின் காலத்தில் இக்குடைவரையின் திருமால் திருமேற்கோயில் கருமாணிக்கத்தேவர்' என்று குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், ப. 185.

இக்குடைவரையில் திருமால் சிற்பம் ஏதுமில்லை. நார்த்தாமலையிலுள்ள மற்றொரு குடைவரையில்தான் திருமால் சிற்பங்கள் உள்ளன. அக்குடைவரை தொடர்பான கல்வெட்டே முதலாம் குலோத்துங்கரின் நாற்பத்தைந்தாம் ஆட்சியாண்டினதாகக் குடைவரையின் முன்னிருந்து சிதைந்த மண்டபத்தின் தாங்குதளத்தில் காணப்படுகிறது. கல்வெட்டில், திருமாலின் பெயர் 'கருமாணிக்கத்தாழ்வார்' என்றுதான் உள்ளது. கருமாணிக்கத்தேவர் என்றில்லை.

4. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் கதையின் மீது சாய்ந்தவாறு உள்ளனர் என்கின்றனர். மு. கு. நூல், ப. 184.

5. SII 12: 63. IPS 19. இப்பதிப்புகளில் கல்வெட்டுப் பாடத்தின் இறுதி இரண்டு வரிகள் பதிவாகவில்லை.

6. 'வாலன்' தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதியில், 'பால்லன்' எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. SII 12: 63.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.