![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 42
![]() இதழ் 42 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வரலாறு.காம் வாசகர்களுக்கு உங்கள் சீதாராமனின் அன்பு கலந்த வணக்கங்கள். மீண்டும் ஒருமுறை என் பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. கடந்த 23-08-2007 அன்று நானும் என் நண்பரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றோம். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஆண்டாளின் உயர்ந்த பக்தியேயாகும். எனவே "ஆண்டாளை" தரிசனம் செய்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டோம். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமுன் கோயிலுக்குச் சென்று வரலாம் என்று எண்ணி கோயிலுக்கு சென்றோம். ஸ்ரீரங்கமன்னாரையும், ஸ்ரீஆண்டாளையும் மனம் குளிர தரிசித்து வெளியே வந்து பிரஹாரம் சுற்ற ஆரம்பித்தவுடன் மனம் அலைபாய ஆரம்பித்து விட்டது. நேயர்கள் தவறாக எண்ண வேண்டாம். இக்கோயிலின் அழகை எவ்வாறு படம் எடுப்பது என்பது பற்றித்தான் அந்த "அலைபாயல்". நமது புகைப்படக்கருவியை எடுத்தவுடன் ஒருவர் விரைந்து வந்து தடுத்தார். மேலும் முறையான அனுமதி பெற்ற பின்னரே புகைப்படம் எடுக்க இயலும் என்றும் தெரிவித்தார். நாம் நிம்மதி அடைந்தோம். நம்முடைய நிம்மதிக்கு காரணம் அனுமதி பெற்றால் புகைப்படம் எடுக்கலாம் என்ற தகவல்தான். உடனே அனுமதி பெறுவதுற்கு உரிய அலுவலகத்தை அடைந்தோம். அனுமதி அளிப்பவர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று அங்கிருந்தவர் தெரிவித்தார். சரி நாம் சென்று திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு வந்து நம் "வேலை"யைத் தொடரலாம் என்று அங்கிருந்து சென்றுவிட்டோம். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின் விரைந்து கோயிலுக்குச் சென்றோம். "அனுமதி அளிப்பவர்" அங்கிருக்கவே மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். ரூபாய் நூறு செலுத்தி "செலுத்துச் சீட்டு" பெற்றுக்கொண்டு நம் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டோம். இனி ஸ்ரீவில்லிபுத்தூரில் "நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் என்று வேதப்பிரான் பட்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி அருளியிருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேச திருத்தலங்களில் 48 வது திருத்தலமாகும். இத்திருக்கொயில் ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்!* உன்னைக்கண்டார் என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிருடையாள்! என்னும்வார்த்தை யெய்துவித்த இருடிகேசா! முலையுணாயே என்று ஸ்ரீபெரியாழ்வாரும், மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன், பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா, இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை, உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய் என்று ஸ்ரீஆண்டாளும் மங்களாசாசனம் செய்கிறார்கள். ஸ்ரீபெரியாழ்வார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோரது அவதாரத் திருத்தலமும் ஸ்ரீவில்லிபுத்தூரே ஆகும். பூர்வாசிரமத்தில் விஷ்ணு பக்தரான "விஷ்ணு சித்தர்" அரசசபையில் "பரம்பொருள் நிர்ணயம் " செய்து பட்டர்பிரான் என்ற திருநாமம் பெற்றார். பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று பட்டர்பிரான் பெருமாள் மேல் கொண்ட பக்தியால் பெருமாளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்விதிருக் காப்பு என்று திருப்பல்லாண்டு பாடினார். எம்பெருமான் இவருடைய பூரண அன்பும் பக்தியும் கண்டு இவருக்கு "பெரியாழ்வார்" என்று பட்டம் சூட்டியதாக மணவாள மாமுனிகள் "உபதேச ரத்னமாலையில் மங்களா சாசனத்தில் மற்றுமுள்ள ஆழ்வார்கள் தங்களார் வத்தளவு தானன்றி - பொங்கும் பரிவாலே வில்லிப்புத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர் என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீபெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதளவு ஈடுபாடுடையவர் ஆகையால் தன்னை யசோதையாகப் பாவித்துக் கண்ணனின் அவதாரம் தொடங்கி தாலாட்டு, செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், தளர்நடை நடத்தல், அப்பூச்சி காட்டுதல், பூச்சூடல், காப்பிடல் போன்ற கண்ணனின் பால லீலைகளை பாவணையால் அனுபவித்து "பெரியாள்வார் திருமொழி" என்னும் திவ்ய பிரபந்தம் செய்தருளினார். ஸ்ரீபெரியாழ்வாரரின் பக்தி கண்டு பூமி பிராட்டியே "ஸ்ரீஆண்டாளாக" அவதரித்ததாக பெரியோர் குறிப்பிடுவர். கோதை ஆண்டாள், ஸ்ரீபெரியாழ்வாரரின் இல்லத்தில் கண்ணனின் பால்ய லீலைகளையும் அவனுடைய குணாதிசயங்களையும் கேட்டு பக்திபூர்வமாக வளர்ந்தாள். பக்தி காதலாகி அவனையே மணக்க வேண்டும் என்று எண்ணி "மாயனே வந்தருள்வாய்" என்று கூப்பிடுவாள். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஸ்ரீவடபெருங்கோயிலுடையானால் பெரிதும் விரும்பப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரை திருவாய்பாடியாகவும், அங்குள்ள பெண்களை இடைப் பெண்களாகவும், தன்னை அவர்களில் ஒருத்தியாகவும், ஸ்ரீவடபெருங்கோயிலுடையானை ஸ்ரீநந்தகோபராகவும் பாவித்து நோன்பு நோற்று "திருப்பாவை " என்னும் திவ்ய பிரபந்தம் பாடியருளினாள். ஆண்டாள் திருமணப்பருவம் எய்தியவுடன் ஸ்ரீபெரியாழ்வார் அவளுக்கேற்ற மணாளன் அமையாமல் கவலையுற்றார். அப்போது ஆண்டாள் தன் தந்தையிடம் எவ்வளவு சிறந்தவனாயினும் தான் கண்ணனை தவிர வெறொருவனை மணப்பதற்கில்லை எனத் தெளிவுபட எடுத்துரைத்தாள். வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப மேலும் கண்ணனிடம் ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே என்று எச்சரிக்கிறாள். ஆண்டாளின் மனநிலையை அறிந்த ஸ்ரீபெரியாழ்வார் கோதைக்கேற்ற மணாளன் கண்ணனே என்று தெளிந்தார். இருப்பினும் இது எங்ஙனம் கைகூடும் என்று கவலையுடன் இருக்க திருவரங்கன் ஆழ்வார் கனவில் தோன்றி கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். அன்றே ஸ்ரீஆண்டாளும் இவ்வாறு கனவு கண்டாள். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் பெரிதினும் "பெரிது" கேட்டுப்பெற்ற ஸ்ரீஆண்டாளின் கனவு நனவாகியது. திருக்கோயில் அமைப்பு ![]() ![]() ![]() ![]() ராஜ கோபுரம் இக்கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச்சின்னமாக விளங்குகிறது. இதன் உயரம் 196 அடியாகும். 11 நிலைகளும், 11 கலசங்களும் கொண்ட இதன் அகலம் 120' X 82' ஆகும். கிழக்கு மேற்காக 80' அடியாகும். ஸ்ரீஆண்டாள் சன்னதியை சுற்றியுள்ள கருவறை விமானம் "திருப்பாவை" விமானமாகக் காட்சியளிக்கிறது. அர்த்தமண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் காட்சியளிக்கிறாள். ஸ்ரீவடபெருங்கோயிலின் வாசலில் உள்ள தேரானது மிகவும் பிரசித்தமானது. தரையிலிருந்து பீடம் வரை இதன் உயரம் 37.5 அடியாகும். அலங்காரம் செய்தபிறகு இதன் உயரம் 75 அடியாகும். ஸ்ரீவடபெருங்கோயிலின் "கோபால விலாசத்தில்" பெரிய மண்டபத்தில் அமைந்துள்ள மரச்சிற்பங்கள் கண்ணையும் ,கருத்தையும் கவர்வன. மார்கழி தொடங்கும் இந்நாளில் திருப்பாவையின் சிறப்பைக்கூறி பாதங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும் வேத மனைத்தும் வித்தாகும் கோதைதமிழ் ஐயை ந்துமைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு "வையம் சுமப்பதற்கு" பெருமைப்பட வில்லிப்புத்தூர்ச் சிற்பங்களை வழங்கித் தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() நன்றி, வணக்கம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |