http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 42
இதழ் 42 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். என் பெயர் மார்க்கோ போலோ. நான் உங்களூரன் இல்லை. வெனிஸ் நகரத்துக்காரன். விதியின் காரணமாக சீனா - தென்கிழக்கு ஆசியா என்று எங்கெல்லாமோ சுற்றி தற்போது நிற்பது மாபார் என்றழைக்கப்படும் தென்னிந்தியாவில். ஒரு கடற்கரைப் பட்டினத்தில். உங்கள் மண்ணில்.
உங்கள் பூமியும் அதன் மனிதர்களும் பழக்கவழக்கங்களும் சர்வநிச்சயமாய் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. வேறெங்கும் இத்தனை நல்லது கெட்டது நான் ஒருசேரப் பார்த்ததில்லையென்பதை கைதூக்கி ஒப்புக்கொண்டு விடுகிறேன். அற்புதமான அதிசயமான ஊர் இது. வந்து சேர்ந்து ஒரு மாத காலமாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம். பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம் - ஆனால் எழுதுவதற்கு நேரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. இங்கு துணி தைப்பவர்களையே பார்க்கமுடியாதென்று தோன்றுகிறது. மானத்தை மறைப்பதற்கென்று சிறிய துண்டுத் துணி - அவ்வளவுதான். ஆண்கள், பெண்கள், ஏழை, பணக்காரன், பரதேசி... ஏன் அரசரே கூட மிகச் சிறிய அளவு துணிதான் உடுத்துகிறார்கள். கடுமையான வெய்யில் ஒரு காரணமாக இருக்கலாம். உடம்பு முழுக்க துணியைச் சுற்றிக்கொண்டு அலையும் என்னை வேற்று கிரகத்து மனிதனைப்போல் பார்க்கிறார்கள். வேடிக்கையான வேதனை ! *********************************************************************************************** வந்த இரண்டாம் நாளிலேயே இந்த ஊர்க்காரர் ஒருவர் - உங்களவர் - கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பதைப் பார்க்கலாம் வாருங்கள் என்று கூட்டிக்கொண்டு போய்விட்டார். முதலில் ஒரு சிறு படகில் ஏறி ஒரு மாதிரியான பெரியதொரு கப்பலை அடைந்தோம். கப்பலில் எங்களுடன் முத்தெடுக்கும் கூலியாட்களும், முத்து வணிகர்களும் அதிகாரிகளுமாக ஏகப்பட்ட கூட்டம். நெருக்கியடித்து நின்றுகொண்டோம். அந்தக் கப்பலிலேயே சிறிது நேரம் பிரயாணம் செய்து கடலின் ஆழமான இடம் வந்ததும் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டோம். அடுத்து சிறு படகுகளைக் கடலில் இறக்கி ஒவ்வொரு படகிலும் ஆட்களை ஏற்றியாக வேண்டும். இந்தக் கட்டத்தில் நான் சற்றும் எதிர்பாராத ஒரு சடங்கு நடந்தது. நாங்கள் நின்றுகொண்டிருந்த கப்பலின் மேல்தளத்தில் பூசாரிகள் போலக் காணப்பட்ட நால்வர் ஏறி நின்றுகொண்டு கடலை நோக்கி மந்திரம் போட்டனர். நாங்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதியில் உள்ள பெரும் சுறாமீன்களைக் கட்டிப்போடுவதற்காம் இது ! என்ன ஏமாற்று வேலை என்று முதலில் நினைத்தேன்.... ம்ஹூம் ! நிஜம்தான் ! என் கண்முன்னால் கடலில் அலைந்து திரிந்துகொண்டிருந்த சுறாமீன்களின் திமில்கள் அனைத்தும் சில நிமிடங்களில் காணாமல் போய்விட்டன ! என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை ! வாயைப் பிளந்தபடி நான் பார்ப்பதைக் கண்டு நண்பர் சிரித்தார்..."இவர்களால் உயிருடன் இருக்கும் எதையும் வசியம் செய்து கட்டுப்பாட்டில் வைக்க முடியும்..." என்றார். விசாரித்ததில் இவர்களின் பெயர் அப்பிராய்மான்..அல்லது அப்பிராமன்... என்று தெரியவந்தது. இவர்களுடைய மந்திரம் காலையிலிருந்து மாலை வரைதானாம். மாலையில் மந்திரத்தைக் கலைத்து மீண்டும் மீன்களை சுதந்திரமாகக் கடலில் உலவவிட்டுவிடுகிறார்கள். நான் இப்படியெல்லாம் சொல்வதைக் கேட்டால் "என்ன, உங்கள் ஊர் ஒயினைக் குடித்துவிட்டுப் பிதற்றுகிறாயா ?" என்றுதான் எவருக்குக்குமே கேட்கத்தோன்றும். ஆனால் நான் சொல்வதெல்லாம் நிஜம். நம்புங்கள். மீன்களைக் கட்டிப்போட்டவுடன் சரசரவென்று அத்தனை படகுகளும் கீழிறக்கப்பட்டன. ஒவ்வொரு படகிலும் குறிப்பிட்ட ஆட்கள் ஏறிக்கொண்டார்கள். படகுகள் விரைந்து வலிக்கப்பட்டன. சிறிது தூரம் சென்றதும் முத்தெடுக்கும் ஆட்கள் நீரில் மூழ்கி கடலுக்கடியில் தென்படும் கிளிஞ்சல்களை குப்பல் குப்பலாக இடுப்பில் முடிந்துகொண்டு வந்தார்கள். கிடைக்கும் முத்துக்களில் பத்தில் ஒரு பங்கு இராஜாவுக்கு. இருபதில் ஒரு பங்கு மீன்களை மயக்கிப்போடும் அப்பிராமன்களுக்கு. அள்ளிக்கொண்டு வரும் முத்துக்களில் பத்தில் ஒரு பங்கை சாப்பிட்டுவிடும் இராஜாவிடம் எத்தனை முத்துக்களும் திரவியங்களும் இருக்கின்றன என்பதைக் கணக்குப்போடுவதுகூட கடினம். இதில் மேலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் முத்தின் அளவு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெரியதாக இருந்தால் அதனை மரியாதையாக இராஜாவிடம் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும். அதற்கு உரிய பணத்தை இராஜா தந்துவிடுவார். அளவில் பெரிய முத்துக்களை இராஜ்ஜியத்தை விட்டு வெளியில் கிளப்பிக்கொண்டு போவது குற்றம். திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு போனால்தான் உண்டு.கிடக்கட்டும். *********************************************************************************************** இப்படிக் கீர்த்தி மிகப் பொருந்திய இராஜாவைப் பார்க்க வேண்டுமென்று வந்த நாளிலிருந்து முயற்சி செய்து வந்தேன். நான்கு வாரங்கள் காத்திருந்தபின் நேற்றுத்தான் கிடைத்தது அந்த "இராஜ தரிசனம்". அரண்மனை நகருக்கு மத்தியில் உள்ள பெரிய மாளிகை. மாளிகை முழுவதும் வெள்ளை வண்ணமடிக்கப்பட்டிருந்தது. அரண்மனை வாயிலில் ஈட்டியுடன் நின்றிருந்த வாயில்காவலனிடம் இராஜாவின் பெயர் என்ன என்று நண்பரை விட்டுக் கேட்டேன். சொல்லமாட்டானாம் ! மரியாதையில்லையாம் ! நண்பர் மெதுவாக "சுந்தார் பண்டி தேவார்" என்றார். உண்மையில் இராஜ்ஜியத்தின் இராஜா ஒருவரல்ல - ஐந்துபேர். இராஜ்ஜியத்தை மூலைக்கொருவராக இருந்துகொண்டு ஆளுகின்றார்கள். அனைவரும் அண்ணன் தம்பிகள். அல்லது ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள். தலைநகரத்தில் இருப்பவர்தான் முக்கியமானவர். அவருடைய தரிசனத்துக்காகத்தான் சென்றோம். இராஜா கருப்பாக நல்ல உயரத்துடன் தெரிந்தார். அவருடைய கழுத்தில் மரகதங்களும், கோமேதகங்களும் வைடூரியங்களும் பதித்து ஒரு அணிகலன் தெரிந்தது பாருங்கள்... அப்படியே அசந்து விட்டேன் ! இதனைத்தவிர 104 முத்துக்கள் மாணிக்கங்கள் பதித்த ஒரு கயிறு வேறு அவருடைய மார்புக்குக் குறுக்கே சென்றது. 104 - அது என்ன கணக்கு என்று கேட்கிறீர்களா ? காலையும் மாலையும் இந்த இராஜா தம் தெய் வங்களுக்கு நூற்றி நான்கு முறை பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். இப்படித்தான் அவருடைய முன்னோரும் செய்தார்களாம்... சொன்னார்கள். மற்றபடி இராஜா தரித்திருந்த தங்கக் கங்கணங்கள் கால் சிலம்புகள் மெட்டி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஒரு பட்டினத்தையே விலைக்கு வாங்கிவிடலாம் - அத்தனை மதிப்பு ! தனக்கு எத்தனை பெண்டாட்டிகள் இருக்கிறார்களென்று இராஜாவுக்கே தெரியாதென்று நினைக்கிறேன். எண்ணினால் ஐநூறு அறுநூறுபேர் தேறுவார்கள். நாட்டில் அழகான பெண் எவளாவது இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்தால் அது இராஜாவுக்குத் தெரியக்கூடாது. தெரிந்துவிட்டால் அவள் கதி அவ்வளவுதான். தூக்கிக்கொண்டுவந்து பெண்டாட்டி ஆக்கிக்கொண்டு விடுவார். இருக்கும் பெண்கள் போதாதென்று சற்றே இலட்சணமாயிருந்த தன்னுடைய தம்பியின் மனைவியையும் தூக்கிக்கொண்டுபோய் பெண்டாண்டு விட்டாராம் இராஜா. தம்பி வாயைத் திறக்கவே இல்லையாம் - நண்பர் சொன்னார். இதனைக் கேட்டு எனக்கு மனது மிகவும் வேதனையாகிவிட்டது. இத்தனை பெண்டாட்டிகள் வைத்திருக்கும் இராஜாவுக்கு குழந்தைகளும் ஏகப்பட்டது இருக்கின்றன. வாரிசுரிமைப் போட்டியில் எல்லோரும் அடித்துக்கொண்டு சாகப் போகிறார்கள். நாங்கள் இராஜாவை சந்தித்தபோது அவரைச் சுற்றிப் பெரியதொரு கூட்டம் இருப்பதைக் கண்டேன். நண்பர்தான் இவர்களைப் பற்றிய விபரங்களைக் கூறினார். இவர்கள்தான் இராஜாவின் நம்பிக்கைக்குரிய அத்யந்தக் குழுவாம். எந்நேரமும் இராஜாவுடன்தான் இருப்பார்களாம். இராஜாவுடன் தூங்கி இராஜாவுடன் சாப்பிட்டு அவருடனே நகர்வலம் வந்து..... இராஜ்ஜியத்தில் இவர்களுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு. "இராஜா செத்துப்போனபின் அவருடைய சிதையைச் சுற்றி நின்றுகொண்டு தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு விடுவார்கள்" என்று நண்பர் முத்தாய்ப்பாகச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விட்டேன் ! "என்ன - இந்த முந்நூறு பேருமா தங்களை எரித்துக்கொண்டு விடுவார்கள் ?" "ஆமாம் - இந்த உலகத்தில் அவருக்குத் தோழர்களாய் விளங்கியவர்கள் அந்த உலகத்திலும் தோழர்களாய் விளங்கவேண்டுமல்லவா ? அதற்காகத்தான் !" என்றார். ஜீரணிக்கவே முடியவில்லை. முந்நூறு உயிர்கள் ! ஜீஸஸ்.... *********************************************************************************************** பொதுமக்கள் அனைவதும் தத்தம் வீடுகளை மாட்டுச் சாணத்தால் மெழுகி விடுகிறார்கள். அது மட்டுமல்ல - அத்தனை பேரும் பெரும்பாலும் தரையில்தான் அமர்கிறார்கள். கேட்டால் "பூமியிலிருந்துதான் வந்தோம் - பூமிக்குத்தான் செல்லப் போகிறோம்... இடையிலும் பூமியின் மீதே அமர விரும்புகிறோம்" என்கிறார்கள். இராஜாவும் ஆசனங்களைத் தவிர்த்துவிட்டு அடிக்கடி தரையில் அமர்ந்துவிடுகிறார். ஆடும் கோழியும் மிகுதியாக உண்ணப்படும் இந்த பூமியில் மாட்டிறைச்சி மட்டும் உண்ணப்படுவதேயில்லை. ஏனெனில் மாடுகளை இவர்கள் தெய்வமாக மதிக்கிறார்கள். மாடுகளைப் போல உண்டா ! என்று சிலாகிக்கிறார்கள். ஆனால் கோவி என்றழைக்கப்படும் ஒரு சாரார் மட்டும் மாட்டிறைச்சி உண்கிறார்கள். அவர்களும்கூட மாடுகளைக் கொன்று உண்பதில்லை - இயற்கையாக இறந்துவிட்ட அல்லது பலியாகிவிட்ட மாடுகளைத்தான் உணவாக்கிக்கொள்கிறார்கள். விவசாயம் முழுக்க முழுக்க நெல்தான். கோதுமை பெயருக்குக்கூட விளைவதில்லை. போருக்குச் செல்லும்போது முழுக்க முழுக்க நிர்வாணமாகச் செல்கிறார்கள். பொட்டுத் துணியில்லை. ஒரு கையில் ஈட்டி - மறு கையில் கேடயம். அவ்வளவுதான். போர் என்று வந்துவிட்டால் வீரர்கள் ஈவிரக்கமற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். "ஹோ... ஹோ...." என்று ஈட்டியைத் தூக்கிக்கொண்டு கத்தியபடி அவர்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தால் வயிற்றைக் கலக்குகிறது... எல்லா வயது மக்களும் - ஆண்கள், பெண்கள், பிச்சைக்காரர்கள் உட்பட - நித்தம் இரண்டு வேளை குளித்து சுத்தமாக இருக்கிறார்கள். அப்படிக் குளிக்காதவனை அருவருப்போடு பார்க்கிறார்கள். சீனாவில் பல காலம் இருந்து பழக்கப்பட்ட எனக்கு வாரத்திற்கு ஒரு நாள் குளிப்பதே பெரிய காரியம்... இதில் நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதாவது ? ஆகாதப்பா ! விட்டுவிடுங்கள்.... சாப்பிடும்போது ஒரு முறை இடது கரத்தால் உணவைத் தொட்டுவிட்டேன் ! அவ்வளவுதான். எனக்கு உணவு வைத்த மூதாட்டியின் முகம் அஷ்ட கோணலாகிவிட்டது ! சாப்பிடுவதற்கு வலக்கரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம். சொல்லப்போனால் தூய்மையான - ஒழுக்கமான - எல்லா வித பயன்பாடுகளுக்கும் வலக்கைதான்... தூய்மையற்ற வேலைகளுக்கு மட்டும்தான் இடது கரம்... (இடது கரத்தை "அந்த" ஒரு வேலைக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்... இவர்களுக்கு இரண்டு கரங்கள் வீண் !) ஒவ்வொருவரும் தாம் சாப்பிடவும் நீரருந்தவும் தனித்தனிக் குவளைகள் வைத்திருக்கிறார்கள். மறந்தும் ஒருவர் குவளையில் மற்றவர் நீர் அருந்துவதில்லை. வெளியாட்கள் யாராவது வந்தால் அவர்கள் கையிலும் தனிக்குவளை இருந்தாக வேண்டும் - அப்படி இல்லையெனில் கையில் மொண்டு குடிக்க வேண்டியதுதான்... வந்து சேர்ந்த முதல் நாளில் இந்தப் பழக்கம் தெரியாமல் திண்டாடிப் போய்விட்டேன் ! மொண்டு மொண்டு தண்ணீர் குடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.... வருடத்தில் மூன்று மாதங்கள் - ஜூன், ஜூலை, ஆகஸ்ட் தவிர - மற்ற நாட்களில் வெய்யில் மண்டையைப் பிளக்கிறது ! எப்போதாவது மழை பொய்த்துப்போய் வறட்சியென்று வந்துவிட்டால்... அத்தனை பேரும் கூட்டாகப் போய்ச்சேர வேண்டியதுதான் ! வேறு வழியேயில்லை. இந்த ஊரில் ஆளைப் பார்த்தவுடன் அவனுடைய குணாதிசயங்களைச் சொல்லிவிடும் விற்பன்னர்கள் இருக்கிறார்கள். சகுனங்களில் இந்த மனிதர்களுக்கு ஏக நம்பிக்கை.... பிறந்தவுடன் ஒரு குழந்தையின் ஜாதகம் துல்லியமாகக் குறிக்கப்பட்டு விடுகிறது. அதற்குப்பின் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுமே நாள் நட்சத்திரம் தேதி நேரம் நியமம் இவைகளை ஒட்டித்தான். *********************************************************************************************** ஒரு கைதிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டுவிட்டால் அவன் தான் விரும்பும் தெய்வத்திற்குத் தன்னைக் காணிக்கையாக்கிக்கொள்ளலாம். அரசாங்கம் இதற்கு அனுமதிக்கிறது. நான் வந்து சேர்ந்த இரண்டு வாரங்களில் இப்படிப்பட்டதொரு சடங்கைப் பார்க்க நேர்ந்தது. தண்டனை விதிக்கப்பட்டுவிட்ட கைதியை - நல்ல திடகாத்திரனாகவே தெரிந்தான் அவன் - அவனுடைய உறவுக்காரர்கள் குளிப்பித்து மாலை மரியாதைகளுடன் ஒரு வண்டியில் அமரவைத்து ஊர்வலம் வந்தார்கள். "இந்த வீரன் தன்னுடைய தெய்வத்திற்குத் தன்னையே காணிக்கையாகத் தரப் போகிறான் !" என்று கூவியபடி ஊர் முழுவதும் சுற்றி வந்தார்கள். குறிப்பிட்ட இடம் வந்ததும் அவனிடம் பன்னிரண்டு கத்திகள் கொடுக்கப்பட்டன. நான் அதிர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.... வலுக்கட்டாயக் கொலையாக இருந்தால் சிறிதளவாவு தடுப்பதற்கு முயற்சி செய்யலாம் - இது விரும்பி ஏற்றுக்கொண்ட பிராணத்தியாகமல்லவா ? "என் தேவிக்காக என்னை நான் தியாகம் செய்யப் போகிறேன் !" - அவன் நெஞ்சை அறைந்துகொண்டு கத்தினான்.... எனக்கு மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்துக்கொண்டன... நிஜமாகவா ? நிஜமாகவேவா தன்னைத் தானே கொன்றுகொள்ளப் போகிறான்..??? சிரித்துக்கொண்டே வாளை ஓங்கிவிட்டான் அவன்.... என்னால் இன்னமும் அந்த உயிர்ப்பலி நடக்கப்போகிறது என்பதை நம்பமுடியவில்லை - அந்தக் கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழும் என்று எதிர்பார்த்தேன். மனம்மாறி அவன் வாளைக் கீழே போட்டு விடலாம்.... அவன் தம்பி அவன் செயலைத் தடுத்து விடலாம்... அரசாங்க ஊழியர்கள் யாராவது தலையிட்டு இதையெல்லாம் தடைசெய்துவிட்டார்களென்று சொல்லி வாளைப் பிடுங்கி.... அட, இத்தனை நம்பிக்கையோடு வெட்டிக்கொள்கிறானே, அந்தத் தேவதையாவது சட்டென்று எங்கள் முன்னால் தோன்றி இதெல்லாம் வேண்டாமப்பா, வேண்டும் வரங்களைக் கேள் ! என்று சொல்லக்கூடாதோ ? ம்ஹூம் - எதுவுமே நடக்கவில்லை. ஓரிரு கணங்களில் அந்த சிரித்த தலை என் கண் முன்னால் மண்ணில் ஏகப்பட்ட இரத்தத்தோடு உருண்டது. (முற்றும்) கல்வெட்டுச் செய்தி இந்தக் கதை முழுக்க முழுக்க மார்க்கோ போலோவின் பயண அனுபவங்களைத் தழுவி எழுதப்பட்டது. கல்வெட்டுக்கள் - சாசனங்கள் - கோயில்கள் காண்பிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் போலோ காண்பிக்கும் சமுதாயத்திற்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் பயமுறுத்துகின்றன. ஆச்சரியப்பட வைக்கின்றன. பெருமைப்பட வைக்கின்றன. ஒரு சில வெட்கித் தலைகுனியக்கூட வைக்கின்றன. போலோ தன்னுடைய பயண அனுபவங்களை ஒட்டு மொத்தமாகத் திரட்டி ஒரு நூலாக எழுதியது மிகவும் பிற்காலத்தில்தான் என்றாலும் மாபார் என்றழைக்கப்படும் தென்னகத்தைப் பற்றி அவர் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே ஏறக்குறைய நம்பகமானவை என்று துணியலாம். போகிற போக்கில் அவர் சொல்லிக்கொண்டு போகும் அரிகண்ட - நவகண்டத் தகவல்களில் அதிர்ந்து போனேன். இவையெல்லாம் பழங்காலந் தொட்டு சோழர் - பிற்காலப் பாண்டியர் காலம் வரை புழக்கத்திலிருந்த மிகப் பயங்கரமான வழக்கங்கள். நவகண்டம் என்பது உடலின் ஒன்பது பாகங்களைத் தானே அரிந்து தேவிக்கு அர்பணிப்பது. அரிகண்டம் தன் தலையைத் தானே அரிந்து தேவிக்கு பலியிடுவது. தமிழகத்தின் தொன்மையான அரிகண்ட - நவகண்டச் சிற்பங்களாக மாமல்லபுரம் திரெளபதி இரதம் (கொற்றவைக் கோயில்) மற்றும் ஆதி வராகர் குகைக் கோயிலில் காணப்படும் சிற்பங்களைச் சுட்டலாம். கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் காண்பிக்கும் காட்சியப் பாருங்கள்.... "அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ.." அடுத்த முறை ஏதாவது பழங்கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள கொற்றவை (அல்லது துர்க்கை) கோட்டத்தில் நவகண்ட - அரிகண்டச் சிற்பங்கள் தென்படுகிறதா என்று கவனியுங்கள். அந்தக் கொற்றவை தேவியின் முன் தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட அடியவன் உயிர் பிரியப்போகும் கடைசிக் கணத்தில் என்னவெல்லாம் சிந்தித்திருப்பான் என்பதைக் கற்பனை செய்யுங்கள்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |