http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 42
இதழ் 42 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, 1985-86க்கு இடைப்பட்ட ஓராண்டில் நான் ஆய்வுசெய்த கோயில்களுள் திருவையாறும் ஒன்று. திருவையாற்றில் ஐயாறப்பர் கோயில் வளாகத்தில், ஐயாறப்பர் விமானமும் அதன் வட, தென்புறங்களில் வட, தென்கயிலாய விமானங்களும் அமைந்துள்ளன. ஐயாறப்பர் திருமுன் பதிகம் பெற்றுள்ளது. கயிலாயங்களுள் வடகயிலாயம் முதல் இராஜராஜரின் பட்டத்தரசியார் தந்திசத்திவிடங்கியான உலகமாதேவி எழுப்பியது. தென்கயிலாயம் முதலாம் இராஜேந்திரரின் அரசிகளுள் ஒருவரான பஞ்சவன்மாதேவி எழுப்பியது. 1985ன் இறுதியில் ஐயாறப்பர் வளாகத்தைப் பார்வையிட்ட நானும் வாணியும் வடகயிலாயம் கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோயில் பூட்டப்பட்டிருந்தமையால் நிருவாகத்திடம் சாவி பெற்றுக் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். கல்வெட்டுகளை மேலோட்டமாகப் படித்த நிலையிலேயே, எத்தகைய பேரன்புடன் அக்கோயில் எடுக்கப்பட்டது, எவ்வளவு பொருள் வளம் கோயில் நடைமுறைக்காக அளிக்கப்பட்டிருந்தது, எத்தனை சிறப்புடன் வழிபாடும் செயற்பாடுகளும் வழக்கில் இருந்தன என்பன அனைத்தும் அறியமுடிந்தது. 'வாடிக் கொண்டிருக்கும் வடகயிலாயம்' என்ற தலைப்பில் இக்கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதவேண்டும் எனக் கருதியிருந்தேன். ஆனால், அந்த எண்ணம் 1987ல்தான் நிறைவேறியது. ஐயாறப்பர் வளாகத்தில் உள்ள எழுவர் அன்னையர் சிற்பங்கள் சிறப்பானவை. அது போலவே அவ்விமானத்தின் பின்புறக் கோட்டத்தில் உள்ள அம்மையப்பரும் சிறப்புக்குரியவர். பிற இடங்களில் உள்ள அம்மையப்பர் சிற்பங்கள், சிவபெருமானை வலப்புறத்தும் உமையை இடப்புறத்தும் கொண்டிருப்பது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில் உமை அம்மையப்பரின் வலப்புறம் இருக்க, சிவபெருமான் இடப்பாதியை ஏற்றுள்ளார். இது போன்ற மாறுபட்ட அம்மையப்பர் திருமேனிகள் கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில், திருவேதிகுடிச் சிவன்கோயில் இவற்றிலும் காணப்படுகின்றன. ஐயாறப்பர் வளாகச் சுற்றுமாளிகைத் தூண்கள் வளமானவை. ஆடற்கரணச் சிற்பங்களும் பல்வேறு வகை இறைத்தோற்றச் சிற்பங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. தூண் சிற்பங்களை மட்டுமே முனைவர் ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு ஆராய்ந்து சமகாலச் சமுதாயப் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம். ஆனால், அந்த நோக்கில், ஐயாறப்பர் வளாகம் ஆய்வு மாணவர்களால் அணுகப்பட்டதாகத் தெரியவில்லை. ஐயாறு போலவே நாங்கள் ஆய்வுசெய்த மற்றொரு கோயில் பஞ்சவன்மாதேவீசுவரம். அங்குள்ள கல்வெட்டைப் படியெடுத்ததும் 1985ன் இறுதியில்தான். கல்வெட்டுப் படியெடுப்பிற்கு மஜீதும் தொல்லியல்துறை நண்பர் கி. ஸ்ரீதரனும் வந்திருந்தனர். ஆறுமுகம் துணைக்கிருந்தார். கல்வெட்டின் ஒரு பகுதி தென்திசைக் கடவுள் கோட்ட முன்றில் கட்டுமானத்தில் சிக்கியிருந்ததால் அந்தப் பகுதியை மட்டும் தவிர்த்துப் படியெடுத்தோம். ஆறைமேற்றளி, திருச்சத்திமுற்றம் எனப் பல கோயில்களை அதே நாளில் பார்க்க வேண்டியிருந்ததால் நானும் வாணியும் பாதியிலேயே பணியிலிருந்து விடுபட்டோம். மஜீது, ஸ்ரீதரன், ஆறுமுகம் இவர்கள் மாலைவரை இருந்து படியெடுத்து மீண்டனர். அந்தக் கல்வெட்டுப் பாடம், 'ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை' என்ற தலைப்பிலான கட்டுரைக்கு உரமாக அமைந்தது. ஆறைமேற்றளிக் கோயில் அளவில் சிறியதுதான் என்றாலும், அழகான விமானம் கொண்டது. அக்கோயில் வளாகத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த நாகர் சிற்பத்தை என் கட்டுரை வழி அறிந்த கி. ஸ்ரீதரன், பின்னாளில் தஞ்சாவூரில் இராஜராஜன் அருங்காட்சியகம் அமைந்த காலத்தில் பாதுகாப்பாகக் கொணர்ந்து அருங்காட்சியகத்தில் சேர்த்தார். ஸ்ரீதரன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பதிவு அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். சென்னையில் பணியில் இருந்தாலும், திருவரங்கம் அவர் சொந்த ஊர் என்பதால் அடிக்கடி சிராப்பள்ளி வந்து செல்வார். கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தமையால் அடிக்கடி என்னைச் சந்திப்பார். ஒத்துழைப்புத் தருவதிலும் உடன் பணியாற்றுவதிலும் நல்ல இயக்கத்தை அவரிடம் காணமுடியும். பின்னாளில் சிராப்பள்ளிக்கே மாற்றலாகி வந்தபோது நானும் அவருமாய்ப் பல பணிகளை ஒருங்கிணைத்துள்ளோம். கலைமகள், அமுதசுரபி இதழ்களில் அவருடைய கட்டுரைகள் வந்துள்ளன. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் காளத்தீசுவரன் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நெருக்கமானவர். அத்திருமடத்தின் வணக்கத்திற்குரிய தலைவர் சிவப்பிரகாசரைச் சந்திக்க என்னை அழைத்தார். நானும் உடன்பட்டுச் சென்றேன். அப்பயணத்தின்போது என்னுடன் பேராசிரியர் அரசு, நண்பர் கு. தாமோதரன், ஆறுமுகம் இவர்களும் வந்தனர். திருமடத்தின் தலைவர் கொலுவில் இருக்கும்போது அவரைச் சட்டை, பனியன் இல்லாமல்தான் சந்திக்கமுடியும். அரசுவும் தாமோதரனும் ஆறுமுகமும் மேலாடைகளைக் களைய விருப்பமில்லாமல் வெளி அறையிலேயே தங்கிவிட்டனர். நானும் காளத்தியும் உள்சென்றோம். மடத்தலைவர் சிவப்பிரகாசர் எங்களை அன்புடன் வரவேற்றுத் திருநீறு அளித்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திருமடத்து நூல்களை அளித்து உணவருந்திச் செல்லுமாறு விடைகொடுத்தார். நூல்களோடு வெளிவந்த என்னைக் கண்டதும் அரசுவும் தாமோதரனும் மேலாடைகளைக் களைந்திருக்கலாமோ என்று வருந்தினர். காலந்தாழ்ந்த அந்த வருத்தத்தால் பயனில்லை என்று சமாதானப்படுத்தி உணவருந்தச் சென்றோம். வணக்கத்திற்குரிய சிவப்பிரகாசர் முள்ளிக்கரும்பூர் வந்து வாழ்த்தியவர்; எளிமையானவர். பார்வையாளர்களுடன் நன்கு பழகக்கூடியவர். திருவாவடுதுறை திருமடத்துக் கிளை திருவானைக்காவில் இருந்தமையால், அவர் அவ்வப்போது அங்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் அவரைச் சந்தித்துத் திருக்கோயில்கள் சீரமைப்பு, கோயிற்கலை நூல்கள், திருமடத்து வெளியீடுகள் எனப் பலவும் பேசியிருக்கிறேன். திருமடத்து வெளியீடுகளில் ஒன்றான ஆடவல்லான் பல பிழைகளோடு வெளியிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியபோது, தண்டபாணி தேசிகரைச் சந்தித்து உரையாடுமாறு கூறியவர், பிழைகளை எல்லாம் அடுத்த பதிப்பில் திருத்தம் செய்துவிடலாம் என்று உறுதியளித்தார். இது குறித்து அப்பெருந்தகை தண்டபாணி தேசிகரிடம் பேசியுள்ளார் என்பதை அடுத்த சில மாதங்களில் தேசிகர் ஐயாவிடமிருந்து எனக்கு வந்த அழைப்பு வெளிப்படுத்தியது. திருவானைக்காவில் தங்கியிருந்த தேசிகரைச் சந்தித்தேன். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் தம்மிடம் உரையாடியதைக் கூறிய தேசிகர், கொற்றவை பற்றி ஆய்வுநூல் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தகவல்கள் இருப்பின் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரைச் சந்தித்தமை மகிழ்வு தந்தது. என் தந்தையாரை அவர் நன்கு அறிந்திருந்தமையால் தயக்கமின்றிப் பழக முடிந்தது. ஆடவல்லான் பற்றியும் அவரிடம் குறிப்பிட்டேன். அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்த்துக் குறிப்பெடுக்க முடியாமையால், படித்தவற்றைக் கொண்டே எழுதியதால் நேர்ந்த பிழைகளாகலாம் என்று அவர் மறுமொழி கூறியபோது, மேதைகள்கூட இரண்டாம் நிலைச் சான்றுகளைத் தழுவியே நூல்களைப் படைப்பதும் அச்சான்றுகள் எங்கிருந்து எடுக்கப்பெற்றன என்ற குறிப்புகளைக்கூட தத்தம் படைப்புகளில் அவர்கள் தராமல் விடுப்பதும் வரலாற்றுலகில் இயல்பான நிலைகளாகவே இருப்பதை அறிந்தேன். கருத்துப் பிழைகளையோ தவறான தகவல்களையோ பெரும்பாலோர் பொருட்படுத்துவதில்லை என்ற உண்மையையும் விளங்கிக் கொண்டேன். இந்தப் புரிதல் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்தபோதும், நாளாவட்டத்தில் இவற்றைத் தாண்டிய அறிஞர்களைப் பார்ப்பது கடினம் என்பதை உணர்ந்தபோது அமைதியானேன். அமுதசுரபி திங்கள் இதழின் ஆசிரியர் விக்கிரமன் நெடுங்கால எழுத்தநுபவம் பெற்றவர். மிக இனிமையான, நேர்மையான மனிதர். வெள்ளையுள்ளம் படைத்தவர். பட்டாபிராமன் வழி எனக்கு அறிமுகமான அப்பெருந்தகை நாளடைவில் எங்கள் குடும்பத்தில் ஒருவரானார். என் எழுத்துக்களை நேசித்துப் பாராட்டியதுடன் தொடர்ந்து அமுதசுரபியில் எழுத வாய்ப்பளித்தார். பிப்ருவரி 84ம் இதழில் முதற் கட்டுரை வெளியானது. நல்லூர் நடராசரைப் பற்றிய அக்கட்டுரையை எக்ஸ்பிரஸ் இதழும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தது. சூலை 84ல் 'ஆனந்தக் கூத்தன்' என்ற தலைப்பில் திருநல்லம் ஆடவல்லானைப் பற்றி எழுதிய கட்டுரை வெளியானது. தமிழ்நாட்டிலுள்ள அளவில் பெரிய ஆடவல்லான் செப்புத்திருமேனி அது. அந்தத் திருமேனிக்கேற்ற அளவில் உமையின் வடிவமும் அங்குள்ளது. நான் பார்த்து மயங்கிய மிகச் சில செப்புத்திருமேனிகளுள் அதுவும் ஒன்றாகும். 1984 அமுதசுரபி தீபாவளி மலரில் என் கட்டுரையொன்றை வெளியிட விரும்பிய விக்கிரமன், பாலா நடராசரைப் பற்றி எழுதியனுப்புமாறு கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டு வார, திங்கள் இதழ்களின் தீபாவளி மலர் ஒன்றில் என் கட்டுரை வெளியாவது முதன்முறையாக 1984ல்தான். அந்தப் பெருமையை விக்கிரமனின் அன்புள்ளம் வழங்கியது. அதற்குப் பிறகு, அமுதசுரபியின் ஆசிரியராக அப்பெருந்தகை இருந்தவரை, ஒன்றிரண்டு ஆண்டுகள் தவிர ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் என் கட்டுரைகள் தீபாவளி மலர்களில் இடம்பெற்றன. சிராப்பள்ளியில் நாங்கள் நடத்திவந்த மருத்துவச் சொற்பொழிவுகள் பற்றிக் கேள்விப்பட்டதும், அவை பற்றிய செய்திக் கட்டுரைகளையும் எழுதித் தருமாறு கேட்டுப் படங்களுடன் வெளியிட்டு, மக்களிடையே பரவலான விழிப்புணர்வு ஏற்படுமாறு செய்தார். நலம் காப்போம், நம்மைக் காப்போம் (டிசம்பர் 1984), புற்றுநோயைத் தடுக்கமுடியுமா? (பிப்ருவரி 1985), தொல்லைதரும் சிறுநீரகங்கள் (ஜூன் 1985) என்பன அப்படி வெளியான கட்டுரைகளுள் சில. தமிழ்நாட்டு அரச மரபுகளின் அரசியர்கள் எழுப்பிய கோயில்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருமாறு விக்கிரமன் கேட்டபோது எழுதிய கட்டுரைதான் 'தேவியர் எழுப்பிய திருக்கோயில்கள்'. அமுதசுரபி ஜூலை 1985ம் இதழில் வெளியான இக்கட்டுரையில் திருச்செந்துறை சந்திரசேகரர் திருக்கோயில், தென், வடகயிலாயங்கள், செம்பியன்மாதேவிப் பணிகளுள் சில, இராஜராஜரின் தமக்கை குந்தவை எழுப்பிய தாதபுரம் கோயில்கள் இவை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளி மலரில், 'கல்வெட்டுகளில் இசைக்கருவிகள்' என்ற தலைப்பிலான கட்டுரை வெளியாகிப் பெரும் புகழ் ஈட்டித்தந்தது. அந்த ஆண்டு மாலைமுரசு தீபாவளி மலரிலும் என் கட்டுரை இடம்பெற்றது. 'அரங்கனின் காதலிகள்' என்ற தலைப்பில் துலுக்க நாச்சியார், உறையார் கமலவல்லித் தாயார் இருவர் கதைகளையும் எழுதியிருந்தேன். நண்பர் சந்திரன், 'கோயில்கள் வளர்த்த கலைகள்' என்ற பொதுத் தலைப்பில் தமிழ்நாட்டு நுண்கலை வளர்ச்சியைப் பல பிரிவுகளின் கீழ்ப் பதிவுசெய்யக் கருதினார். நானும் அவரும் பலமுறை கலந்துரையாடித் தலைப்புகளையும் உரையாற்ற வல்லவர்களையும் முடிவுசெய்தோம். தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை பற்றி அரை மணிநேரம் உரையாற்றுமாறு மஜீதைக் கேட்டுக்கொண்டேன். அவரும் அரிதின் முயன்று பல தரவுகளைத் தேடித் தொகுத்து ஒருகட்டுரையை உருவாக்குவதில் முனைந்தார். நான் சிற்பக்கலை பற்றி உரையாற்ற உழைத்தேன். ஸ்ரீதரன், தாமோதரன் முதலியோர் அவரவர்க்கு ஏற்ற தலைப்புகளில் உரை தயாரித்தனர். 10. 4. 1983ல் என்னுடைய 'சிற்பக்கலை' உரை ஒலிபரப்பாகியது. அரை மணிநேரக் கருத்துரையாக விளங்கிய அப்பொழிவிற்காக நிரம்பப் படிக்கவும், பார்க்கவும் வேண்டியிருந்தது. கணபதி சிற்பியின் சிற்பச் செந்நூல், இரா. நாகசாமியின் ஓவியப்பாவை, எஸ். ஆர். பாலசுப்பிரமணியத்தின் முற்காலச் சோழர் கலையும் சிற்பமும் எனும் நூல்கள் பெரிதும் உதவின. இரவில் ஒலிபரப்பானமையால் பல மாவட்டங்களிலும் இவ்வுரை நன்கு கேட்கப்பட்டது. பரவலான வரவேற்பும் ஏராளமான பாராட்டுக் கடிதங்களும் வந்தன. இதே பொதுத் தலைப்பின் கீழ் நான் மற்றோர் உரை நிகழ்த்தச் சந்திரன் வாய்ப்பளித்தார். அப்போது ஆடற்கலையில் ஆய்வுசெய்து கொண்டிருந்தமையால், அதே தலைப்பைத் தேர்ந்தேன். 3 செப்டம்பர் 1984ல் அவ்வுரை ஒலிபரப்பானது. ஏற்கனவே கரணங்களில் செய்திருந்த ஆய்வும் ஆடற்கலை நூல்களைப் படித்திருந்த அநுபவமும் அக்கட்டுரையை மெருகேற்றின. சிற்பங்கள், ஓவியங்கள், வார்ப்புமேனிகள், கல்வெட்டுகள் என அனைத்துத் தளங்களிலும் உழைத்து கட்டுரையை உருவாக்கியிருந்தேன. சிற்பக்கலை உரை போலவே ஆடற்கலைப் பொழிவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர் வெற்றி பெற்றதில் பெரிதும் மகிழ்ந்த சந்திரன் ஒலிப்பதிவுகளை பாதுகாத்து வைக்க பெருமுயற்சி மேற்கொண்டார். ஜூன் 1983ல் குடந்தைக் கீழ்க்கோட்டம் பற்றி ஓர் உரைச்சித்திரம் ஒலிபரப்ப விரும்பிய வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் அ. அருளப்பன், அப்பணியை என்னிடம் ஒப்புவித்தார். கீழ்க்கோட்டம் என்று பதிகங்களில் பதிவாகியுள்ள கும்கோணம் நாகேசுவரர் கோயிலை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இருந்தபோதும், உரைச்சித்திரத்திற்கான பதிவுகளுக்காகக் கோயிலுக்குச் சென்றபோது, மீண்டும் ஒருமுறை கோயிலை வலம் வந்தேன். தமிழ்நாட்டுக் கோயில்களில் பல்லவர் படைப்புகளும் முற்சோழர் கைவண்ணங்களும் இணையற்ற எழில் படைத்தவை. அவற்றுள் சில, வளாகம் முழுமையும் சிறக்க அமைந்தவை. சிலவற்றில் விமானம் மட்டும் எழில் கொஞ்சும் படைப்பாக இருக்கும். வேறு சிலவற்றில் சில திருமுன்களோ, சில சிற்பத் தொகுதிகளோ கண்களை ஈர்ப்பவையாய் அமைந்துவிடும். புள்ளமங்கை ஆலந்துறையார் முதல் வகை எனில், குடந்தை நாகேசுவரர் இரண்டாம் வகை. நாகேசுவரர் கோயில் விமான, முகமண்டபச் சிற்பங்களும், கட்டமைவும் எழிலானவை. தமிழ்நாட்டிலேயே மிக அழகான வீணைக் கலைஞர் இங்குதான் உள்ளார். அவரது இளநகைக்கு இணையான புன்னகை இதுகாறும் கண்டதில்லை. மிக எளிதான அவர் அமர்வும், இயல்பான கருவிப் பிடிப்பும், கனிந்து பொலிந்த அவர் முகமும் அம்மம்மா, அழகு கொலு வீற்றிருக்கும் கலைப்புதையல் அது. படைத்த சிற்பி, அந்த வித்தகரைக் கீழ்த்தளத்தில் வைக்காமல் தேடினால் மட்டுமே தென்படும் நிலையில் தெற்கு ஆரச்சாலையில் இருத்திவிட்டார். கீழ்த்தளக் கோட்டங்களில் உள்ள எழிலரசியர் சோழர் காலக் கலை உன்னதங்கள். ஆடை, அணிகலன்கள், உடலமைப்பு, மெய்ப்பாடுகள் என இச்சிற்பங்களின்அழகும் அமைப்பும் சொற்களை மீறிய சுந்தரமெனலாம். கண்டபாதச் சிற்பங்களில் சில தமிழ்நாட்டுக் கோயில்கள் எவற்றிலும் காணமுடியாதவை. இங்குள்ள கல்வெட்டுகளும் வரலாற்றுப் பெட்டகங்களே. மூன்றாம் இராஜராஜர் கால வெளித்திருமுன், உச்சிஷ்ட கணபதி என இக்கோயிலின் அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய உரைச்சித்திரம் ஒலிபரப்பானபோது, மகிழ்வேற்பட்டது. ஒரு திருக்கோயிலைச் சரியான தளங்களில் அதன் பெருமைகள் புலப்படுமாறு அறிமுகப்படுத்துவது பெரும் பேறு. எனக்கு அந்தப் பேறு பலமுறை கிடைத்தமைக்கு அருளப்பன், சந்திரன், சுந்தரமூர்த்தி எனும் இனிய நண்பர்களே காரணர்கள். 22 செப்டம்பர் 1983ல் சதுரதாண்டவம் என்ற தலைப்பில் பதினைந்து நிமிட வானொலி உரை அமைந்தது. 1983 நவம்பரில் தாராசுரம் பற்றிய உரைச்சித்திரம் ஒலிபரப்பானது. அதற்குப் பேருழைப்புத் தேவைப்பட்டது. உரைச்சித்திரம் எழுதும் முன் இரண்டு முறை அக்கோயிலுக்குச் சென்று வந்தேன். அங்குப் பிச்சை என்ற பெயரில் ஒரு குருக்கள் இருந்தார். அருமையான மனிதர். தாராசுரம் கோயிலைத் தம் பிள்ளையைப் போல நேசித்தவர். கோயிலுக்கு வரும் பெரும்பாலான. வெளிநாட்டுப் பயணிகள் வழிகாட்டிகளுடன் வந்தபோதும் தாராசுரத்தில் மட்டும் பிச்சைக் குருக்களின் பொழிவைக் கேட்பதில் விருப்பம் கொள்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மூன்று மொழிகளிலும் புரியுமளவிற்குப் பேச வல்லவர். ஓரிரு முறை நானும் அவர் பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். நான் உடனிருந்தால் சற்று வெட்கப்படுவார். சுற்றிக்காட்டி விளக்கும்போது, அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொள்வார். அந்தப் பார்வை, 'நான் சொல்வதெல்லாம் சரிதானே'என்பது போல் இருக்கும். அவரும் நானும் பழக்கமானது ஒரு சுவையான நிகழ்வெனலாம். முதல் முறை தாராசும் சென்றபோது கோயிலைப் பார்த்து அதிர்ந்துபோனேன். வெளிப் பலித்தளமே வியப்பில் ஆழ்த்திவிட்டது. திருச்சுற்றுப் பார்த்து முடிப்பதற்குள் பகல் உணவு நேரம் வந்துவிட்டது. மதியவேளைக்குக் கருவறையை அடைப்பதாகச் சொன்னதால், நானும் வாழ்வரசியும் உள்ளே சென்றோம். கருவறைக்கு முன்னிருந்த மண்டப வாயிலில் உமாபிராட்டியின் செப்புத்திருமேனி இருந்தது. அதைப் பார்த்த கண்கள் வேறெங்கும் நகரவில்லை. பிச்சைக் குருக்கள் வழிபாடு முடித்து வெளியில் வந்தார். அந்தத் திருமேனியைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை நீக்குமாறு கேட்டேன். மறுத்துவிட்டார். அந்த மறுப்பு வருத்தம் தந்த போதும் என்னால் அந்தத் திருமேனியின் அழகிலிருந்து விடுபட முடியவில்லை. பிற்சோழர் கைவண்ணம் கொஞ்சி விளையாடிய அழகுத் திருமேனி அது. வீட்டுக்குச் செல்லவேண்டும் என வற்புறுத்தி எங்களை வெளியேற்றினார் பிச்சை. நாங்கள் அங்கேயே உணவருந்திவிட்டு விமானச் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மூன்றரை மணிக்குத் திரும்பிய பிச்சை கருவறைக் கதவுகளைத் திறந்தார். நான் மீண்டும் உள்ளே சென்றேன். முகமண்டபத்தில் அமர்ந்து கொண்டு அந்தத் திருமேனியையே பல கோணங்களில் பார்த்துக் கொண்டிருந்தேன். பிச்சையை நான் கவனிக்கவில்லை. அரை மணிநேரத்திற்குப் பிறகே அவர் என்னருகில் நிற்பதை உணர்ந்தேன். 'துணியை எடுக்கட்டுமா? பார்க்கிறீர்களா' என்று கேட்டார். அவருடைய மாற்றம் எனக்கு வியப்பாக இருந்தது. தலையாட்டினேன். அந்தத் திருமேனியை நன்கு துடைத்தபடியே சுற்றியிருந்த துணியை விலக்கினார். நான் அருகில் நகர்ந்து அமர்ந்தபடி திருமேனியை இரசித்தேன். தொழில்நுட்பமும் கலைவேலைப்பாடும் மிக்கிருந்தன. 'அதில் அப்படி என்ன இருக்கிறது, சொல்வீர்களா?' என்றார் பிச்சை. அவரை அருகில் அழைத்து அமர்த்தி, தலை முதல் கால்வரையிலான சிற்பத்தின் அலங்கரிப்பு, கை அமைதிகள், உடல் அமைதி, சோழர்கால வார்ப்பியல் எனப் பலவும் கூறினேன். பதினைந்து நிமிடங்கள் நான் கூறியதெல்லாம் கேட்ட அம்மனிதர், 'படமெடுத்துக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார். எனக்கு மீண்டும் வியப்பு. கரும்பு தின்னக் கூலியா? நான் வெளிச்சென்று வாழ்வரசியை அழைத்தேன். அவரும் ஒளிப்படக் கருவியுடன் உள்ளே வந்தார். விரும்பியவாறெல்லாம் படமெடுத்தேன். எல்லாம் முடிந்ததும் அவரைஅணுகி, 'நான் ஒன்று கேட்கலாமா?' என்றேன். 'நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். முதலில் மாட்டேன் என்றாயே, இப்போது எல்லாவற்றிற்கும் அநுமதித்துள்ளாயே, எப்படி? என்றுதானே' என்றவர், 'நீங்கள் மதியம் அந்தத் திருமேனியை இரசித்துப் பார்த்ததைப் பார்த்தேன். உங்கள் பார்வையில் குற்றமில்லை. நீங்களும் மனைவியும் பேசியதும் கேட்டேன். இப்போது நான் வந்த உடனே நீங்களும் உள்ளே வந்து அந்த வடிவத்தையே பார்த்துக் கொண்டிருந்த விதமும் என் உள்ளத்தில் நம்பிக்கை ஊட்டியது. யாருக்கும் இந்தத் திருமேனியைக் காட்டியது இல்லை. உங்கள் இரசனையும் ஆய்வும் எனக்குப்பிடித்தது. அதனால்தான், நீங்கள் கேட்டதைச் செய்தேன். உங்கள் விளக்கங்கள் என் ஊகம் சரியானதே என்பதைக் காட்டின. நிறைய தெரிந்துகொண்டேன்' என்று கூறி என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் கேட்டறிந்தார். அன்றிலிருந்து நாங்கள் நண்பர்களானோம். பணியிலிருந்து விலகிய பிறகும் நான் எப்போது தாராசுரம் சென்றாலும் அவர் வந்துவிடுவார். இருவரும் அந்தக் கோயிலின் பெருமைகள், சோழர்கள் என்று பலவும் பேசுவோம். சுற்றுலாப் பயணிகளுடனான அவருடைய அநுபவங்களைச் சொல்வார். தாராசுரம் மிக மோசமான சூழலில் இருப்பது குறித்து வருந்துவார். இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் முயற்சிகளை உள்ளூர் அரசியல்வாதிகள் முறியடிப்பது குறித்தெல்லாம் கூறிக் கவலைப்படுவார். புதுவையிலுள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தாராசுரத்தை ஆய்வுசெய்து நூல் வெளியிட்டபோது அவரையும் பதிவுசெய்தது. இந்து நாளிதழில்கூட அவருடைய படம் கோயிலுடன் ஒரு முறை வெளியாகியிருந்தது. தாராசுரமும் பிச்சையும் பிரிக்கமுடியாத இணைவு எனலாம். என் கோயில் அநுபவத்தில் அவரைப் போல் கோயிலோடு ஒன்றிப்போனவர்கள் யாரையும் இதுநாள்வரை சந்தித்ததில்லை. தாராசுரம் திருக்கோயிலின் மூலை முடுக்குகள்கூட அவருக்கு மனப்பாடம். அவருக்குத் தெரியாத சிற்பங்களோ, கல்வெட்டுகளோ அங்கு ஏதுமில்லை. பிச்சை, கேட்பதற்குத் தயங்கமாட்டார். அதனால் நானும் நிறைய சொல்லுவேன். ஏற்கனவே நிறைய படித்திருந்தபோதும், பொருளாதார வளமின்மையால் விரிவான அளவில் அவரால் வரலாறு பெறமுடியவில்லை. நான் அங்குச் செல்லும்போதெல்லாம் ஏதேனும் ஒரு சிற்பத் தொகுதி பற்றி விரிவான அளவில் உரையாடுவோம். அவருக்கு ஆடற்கலையில் அநுபவமில்லை. தாராசுரம் கோயிலை மூன்று முறை உரைச்சித்திரமாக ஒலிபரப்பும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என் நற்பேறு அந்த மூன்று ஒலிபரப்புகளிலும் பிச்சையின் குரலை என்னால் பதிவுசெய்ய முடிந்தது. பின்னாளில்தான், அவர் குருக்களாக அங்குப் பணியாற்றவில்லை, குருக்களின் உதவியாளராக மட்டுமே இருந்தார் என்பதறிந்தேன். அவருடைய மறைவு தாராசுரத்திற்குப் பேரிழப்பு என்றே சொல்லவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிலிருந்து பேராசிரியர் ஒருவர் அக்கோயிலை ஆய்வுசெய்யக் கருதி என்னிடம் வந்தார். 'முனைவர் பட்ட ஆய்வுக்கு அக்கோயில் மிகப் பெரிய வளாகம். அதனால், அக்கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியை, அல்லது ஒரு துறைசார் தரவுகளை மட்டும் கொண்டு ஆய்வுசெய்யத் திட்டமிடுங்கள். அதுதான் சாத்தியம்' என்றேன். அவர் நான் கூறியதன் உட்பொருள் விளங்காமல், கோயில் முழுவதையுமே ஆய்வுசெய்ய விழைந்தமையால் என்னால் அவருக்கு உதவக்கூடவில்லை. பின்னாளில், அவர் அந்தக் கோயிலைத் தவிர்த்துவிட்டார் என்றறிய நேர்ந்தது. தாராசுரம் பிற்சோழர் காலக் கலைகளின் பதிவிடம். இன்றளவும் சரியான முறையில் அணுகப்படாத பெருங்கோயில். அதிலுள்ள ஆடற்சிற்பங்களையும் புராணக்கதை பேசும் சிற்பங்களையும் ஆய்வுசெய்வதே பெரும்பணியாகும். அங்குள்ள கண்டபாதச் சிற்பங்களுள் ஒன்று பிற்சோழர் காலத்தில் கோயில் வழிபாடும் ஊர்வலமும் எப்படியிருந்தன என்பதைப் படம்பிடித்துள்ள்து. அந்தச் சிற்பத்தின் விரிவான காட்சியைத் திருவாலீசுவரத்து விமானத்தில் கண்டேன். குறைந்தபட்சம், நாயன்மார் சிற்பத்தொகுதிகளையாவது ஆய்வு செய்துவிட வேண்டும் என்று பின்னாளில் நளினியும் நானும் முயன்றோம். அந்தப் பணிக்குப் பொருளாதாரப் பின்புலமாக விளங்க வாணியும் முன்வந்தார். ஒரு முறை சென்று இரண்டு நாட்கள் இருந்து பணி செய்தோம். ஆனால், அதற்குப் பிறகு தாராசுரம் செல்வதற்கு வாய்க்கவில்லை. இது போல் நாங்கள் தொட்டு விட்ட பணிகள் நூறு இருக்கும். அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |