![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 42
![]() இதழ் 42 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
திருநெல்வேலி கோயிற்பட்டிச் சாலையில் கங்கைகொண்டானை அடுத்துப் பதினாலாம்பேரிக்குத் திரும்பும் கிழக்குப் பாதையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் ஆண்டிச்சிப்பாறையை அடையலாம்.(1) பரந்தவெளியில் சிதறியும் இணைந்தும் குவிந்தும் கிடக்கும் பாறைகளுள் பேரளவினதான ஒன்றில் கருவறை மட்டும் பெற்ற குடைவரை நிறைவடையாத நிலையில் காணப்படுகிறது. வழிபாடு, திருப்பணி என்ற போர்வைகளில் கோயில்களை அழித்துக்கொண்டிருக்கும் பத்திமைப் புயலிலும் இறையருளால் மக்களிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்கும் இந்தக் கருவறைக் குடைவரை பிறந்தமேனிக்குக் காட்சிதருகிறது.
மேலிருந்து கீழாக ஏறத்தாழ அரைவட்ட வடிவில் பெரும்பாறை ஒன்றில், நிலத்திலிருந்து 10 செ. மீ. உயரத்தில், 82 செ. மீ. அகல, 1. 77 மீ. உயர வாயிலொன்று திறக்கப்பட்டுள்ளது. வாயிலை அணைத்தவாறு அதன் நிலைக்கால்கள் என உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் பக்கத்திற்கு ஒன்றாக வெட்டப்பட்டுள்ளன. பாறை வளைமுகமாகும் இடத்தில், மேலுமிரண்டு நான்முக அரைத்தூண்கள் பக்கத்திற்கொன்றாய் அமைந்துள்ளன. அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி நன்கு சமன் செய்யப்பட்ட ஆழமற்ற கோட்டங்க ளாகச் சிற்பங்கள் ஏதுமின்று உள்ளன.(2) நிலத்திலிருந்து 36 செ. மீ. உயரமுள்ள வடகோட்டம் 1. 50 மீ. உயரம், 67 செ. மீ. அகலம் பெற்றமைய, 1. 43 மீ. உயரம், 69 செ. மீ. அகலம் பெற்றுள்ள தென்கோட்டம் நிலத்திலிருந்து 28 செ. மீ. உயரத்தில் உள்ளது. ![]() தூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் தாங்கும் உத்திரமே கருவறை வாயிலின் மேல்நிலையாகியுள்ளது. கருவறை வாயிலின் கீழ்ப்பகுதியே கீழ்நிலையாக அமைந்துள்ளது. உத்திரத்தை அடுத்துக் கூரையைத் தழுவிய வாஜனம். வடிவமைக்கப்படாத கபோதமாய்ச் சீரமைக்கப்பட்ட நிலையில் முன்னோக்கி நீட்டப்பட்டுள்ள கூரையின் நீட்சி, கருவறை வாயிலுக்கு மேலே வலப்புறத்தே முற்றிலுமாகச் சிதைந்துள்ளது. அதைப் போலவே வாயிலின் வல அணைவுத்தூணும் அதன் மேலுள்ள போதிகை, உத்திரம், வாஜனம் இவையும் சிதைந்துள்ளன. ![]() 1. 49 மீ. அகலம், 1. 79 மீ. நீளம், 1. 81 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் சுவர்களும் கூரையும் சமன் செய்யப்பட்டுள்ள நிலையில் வெறுமையாக உள்ளன. தரையின் நடுப்பகுதியில் பணி தொடங்கப்பட்ட நிலையில் தாய்ப்பாறையிலான இலிங்கம் காணப்படுகிறது. ஆவுடையாரின் கீழ்ப்பகுதியில் வடமேற்கு மூலையில் உபான அமைப்பும் மேற்பகுதியில் கோமுகமும் காட்டப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகள் உருவாக்கம் பெறாமல் பாறையாகவே உள்ளன.(3) கோமுகத்தின் கீழுள்ள தரைப் பகுதியில் முழுக்காட்டு நீர் வாங்கும் பள்ளம் உள்ளது. கருவறைப் பின்சுவரில் கோட்டுருவங்களாக ஆடை, அணிகளற்ற ஒரு பெண் ஓடுவது போலவும் கோமாளிக் குல்லாய் அணிந்த ஓர்ஆண் துரத்துவது போலவும் பிற்காலச் செதுக்கல் ஒன்று காணப்படுகிறது. கருவறை முன் சுவரிலுள்ள வலக்கோட்டத்தை அடுத்து, நிலத்திலிருந்து 74 செ. மீ. உயரத்தில் அணைவுத்தூண்கள் ஏதுமற்றதாய் 60 செ. மீ. அகல, 82 செ. மீ. உயரக் கோட்ட மொன்று அகழப்பட்டுள்ளது. அதில் மகுடமற்ற தலையுடன்(4) அர்த்தபத்மாசனத்தில்(5) உள்ள இடம்புரிப் பிள்ளையாரின் முன் கைகளுள் வலக்கையிலுள்ள பொருளை அடையாளப்படுத்த முடியவில்லை. இடக்கைப் பொருள் பாசமாகலாம்.(6) பின் கைகள் இரண்டுமே தொடை, முழங்கால் பகுதிகளில் இருத்தப்பட்டுள்ளன.(7) இடத்தந்தம் முழுமையாக இருக்க, வலத்தந்தம் உடைந்துள்ளது. ![]() குடைவரைப் பாறையை ஒட்டியுள்ள வலப்பாறையில் நிலத்திலிருந்து 29 செ. மீ. உயரத்தில், 76 செ. மீ. அகல, 93 செ. மீ. உயரக் கோட்டமொன்று அகழ்ந்து சேட்டைத்தேவியை உருவாக்கியுள்ளனர். நன்கு வடிவமைக்கப்பட்ட இருக்கையில் இரண்டு கால்களையும் கீழிறக்கிய நிலையில் அமர்ந்துள்ள(8) தேவியின் தலையில் கரண்டமகுடம். பாதங்கள் குதிங்கால் உயர்ந்த நிலையில் விரல்கள் தரையில் பாவ இருத்தப்பட்டுள்ளன. வலக்கை கடகத்திலிருக்க,(9) சிதைந்துள்ள இடக்கை அருகிலுள்ள திண்டின்மீது உள்ளது.(10) கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள்,(11) பதக்கம் வைத்த ஆரம், முத்துமாலை, சிற்றாடை அணிந்துள்ள தேவியின் இளமார்பகங்களில் கச்சில்லை. வயிற்றுப்பகுதி சற்றே பிதுக்கமாக அமைய, தொடைகளுக்கு இடையில் அரைக்கச்சின் முடிச்சுத் தொங்கல்கள் காட்டப்பட்டுள்ளன.(12) ![]() தேவியின் தோளருகே, வலப்புறம் அவர் மகனும் இடப் புறம் மகளும் நின்றகோலத்தில் காட்சிதருகின்றனர். கழுத்துக்குக் கீழ்ப்பட்ட உடற்பகுதி முற்றிலுமாய்ச் சிதைந்துள்ள நிலையில் காணப்படும் அக்கினிமாதாவின் இடக்கைக் கவரி தோளில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. கரண்டமகுடம், பூட்டுக் குண்டலங்கள் அணிந்துள்ள அம்மையின் வலக்கை சிதைந் துள்ளது.(13) இடப்புறமுள்ள நந்திகேசுவரரின் வலக்கை முழங் கையளவில் மடிந்து சேட்டைத்தேவியின் கடகக்கை அருகே உள்ளது.(14) சிறு கொம்புகளுடன் முகம் நிமிர்த்திப் பார்க்கும் நந்திகேசுவரரின் கழுத்தில் மணிச்சரம். ![]() குடைவரையின் இடப்புறம் உள்ள நீளமான பாறையை அடுத்துக் காணப்படும் பெருங்கோட்டம் நிலத்திலிருந்து 75 செ. மீ. உயரத்தில் 2. 50 மீ. அகலம், 2 மீ. உயரம் பெற்று நிறைவடையா நிலையில் வெறுமையாக விடப்பட்டுள்ளது.(15) ![]() இக்கருவறைக் குடைவரையின் எளிமையும் சிற்பங்களின் அமைதியும் இதன் காலத்தைக் கி. பி. எட்டாம் நூற்றாண்டின தாகக் கொள்ளச் செய்கின்றன. ![]() குறிப்புகள் 1. இந்தக் குடைவரை கங்கைகொண்டானுக்கு அருகில் உள்ளதால் இதைக் கங்கைகொண்டான் குடைவரைக் கோயில் என்று அழைக்கிறார் தி. இராசமாணிக்கம். தமிழகக் குடைவரைக் கோயில்கள், ப. 6. கே. வி. செளந்தரராஜன் ஆண்டிச்சிப்பாறை என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். Rock-cut Temple Styles, Somaiya Publications Pvt. Ltd., Mumbai, 1998, ப. 93. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள், இந்த இரண்டு பெயர்களிலும் மயங்கி இவற்றை இருவேறு குடைவரைகளாகக் கருதித் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் நூலில், கங்கைகொண்டான் என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களும் (172 - 173) ஆண்டிச்சிப்பாறை என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களும் (175 - 176) எழுதியுள்ளனர். ஒரே குடைவரை இரண்டு தலைப்புகளில் இரண்டு குடைவரைகளாக மாறியுள்ள இந்தத் துன்பம் களஆய்வு மேற்கொண்டிருந்தால் நிகழ்ந்திராது என்பது திண்ணம். 2. பரிவாரத் தெய்வங்களுக்காகச் சிறிய கோட்டங்கள் இருப்பதாகவும் அவை அரைத்தூண்கள் பெற்று அழகு செய்யப் பட்டுள்ளதாகவும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 175. 3. 'இலிங்கத்திருவுரு பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது உடைந்துவிட்டது' என்கிறார் தி. இராச மாணிக்கம். மு. கு. நூல், ப. 6. 4. கிரீடமென்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 94. 5. யோகாசனம் என்கிறார் தி. இராசமாணிக்கம். மேற்படி. 6. இந்தக் கைகள் மடியில் உள்ளன என்கிறார் கே. வி. செளந்தரராஜன். ஒரு கையில் மோதகம் உள்ளதாகவும் மற்றொரு கை தொடையில் இருப்பதாகவும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத் திரியும் கூறுகின்றனர். ப. 176. 7. பின்கைகளில் பரசும் பாசமும் இருப்பதாகக் கூறுகிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 94. 8. ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒரு காலை மடித்து அமர்ந் துள்ளதாகக் கூறுகின்றனர் சு. இராசவேலும் அ. கி. சேஷாத் திரியும். மு. கு. நூல், ப. 176. 9. மலர் ஏந்தியுள்ளது என்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 94. 10. இருக்கையின் மீதும் பக்கத்திலுள்ள உருவாகாத வடிவத்தின் மீதும் உள்ளது என்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 94. 11. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் மகரகுண்டலங்கள் என்கின்றனர். மு. கு. நூல், ப. 176. 12. சேட்டையின் முழங்கால்களிலும் பாதங்களிலும் தாமரை காட்டப்பட்டிருப்பதாகவும் அது அம்மைக்கான காணிக்கையாகலாம் என்றும் கே. வி. செளந்தரராஜன் எழுதியுள்ளமை சரியன்று. மு. கு. நூல், ப. 94. 13. இவ்வம்மையின் வலப்புறம் காட்டப்பட்டுள்ள பொருள் துடைப்பமாகலாம் என்று கே. வி. செளந்தரராஜன் எழுதியுள்ளமை சரியன்று. மு. கு. நூல், ப. 94. இவ்வம்மையின் வலப்புறம் பொருளேதும் இல்லை. கே. வி. செளந்தரராஜனை வழிமொழிகின்றனர் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும். மு. கு. நூல், ப. 176. 14. கையின் இறுதியில் விரல்களுக்கு மாறாகக் குளம்பு போன்ற பகுதி காட்டப்பட்டிருப்பதால் இதைக் கை என்பதினும் முன்னங்கால் என்பதே பொருந்தும். அப்படிக் கொள்ளின், விலங்குக் காலுடன் காட்டப்பட்டுள்ள முதல் சேட்டை மகனாக இச்சிற்பத்தைக் கொள்ளலாம். 15. இப்பாறை சப்தமாதரை உருவாக்க வெட்டியதாகலாம் என்று கே. வி. செளந்தரராஜன் ஊகிக்க, சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் ஒரு படி முன்னேறிப் பிறிதொரு கோட்டத்தில் முற்றுப்பெறாத சப்தமாதர் சிற்பம் உள்ளதென்கின்றனர். மு. கு. நூல்கள், பக். 93, 176. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |