http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 42

இதழ் 42
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

கோயில்தோறும் வரலாறு
ஆண்டிச்சிப்பாறைக் குடைவரை
கதை 12 - அரிகண்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 14
பழியிலி ஈசுவரம்
வாரணமாயிரம்
முதல் பார்வையில் பாண்டியர் குடைவரைகள்
அங்கும் இங்கும் (டிச. 16 - ஜன. 15)
Silpis Corner (Series)
Silpi's Corner-04
Links of the Month
கல்கி வழியே முத்தொள்ளாயிரம்
அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
இதழ் எண். 42 > இலக்கியச் சுவை
கல்கி வழியே முத்தொள்ளாயிரம்
ரிஷியா

"நாவலோ நாவல்! நாவலோ நாவல்! இந்த நாவலந் தீவில் வைஷ்ணவ சமயமே மேலான சமயம் என்று நிலை நாட்டுவதற்கு வாதப்போர் புரிய வந்துள்ளேன். சைவர்கள், சாக்தர்கள், அத்வைதிகள், காபாலிகர்கள், காளாமுகர்கள், புத்தர்கள, சமணர்கள் யார் வேணுமானாலும் வாதப்போர் புரியவரலாம். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை என் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வருவேன். அவர்கள் தோற்றால் இடுப்புத் துணியைத் தவிர மற்றதையெல்லாம் இங்கே கொடுத்து விட்டுப்போக வேணும்! நாவலோ நாவல்" என்று கத்திக் கொண்டிருந்தான். எங்கோ வாசித்த ஞாபகம் வருகிறதா? நம்ம ஆழ்வார்க்கடியாள் தான் வேறு யார்?

"பொன்னியின் செல்வன்" கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அற்புத, அமரத்துவப் படைப்பு. நம்மையெல்லாம் தூங்கவிடாமல் படி, படி என்று தூண்டிய வரலாற்று சித்திரம். கையில் எடுத்தால் கீழே வைக்கவியலாமல் அன்றாடக் கடமைகளுடனும், நாவலுடனும் போராடிய நாட்கள் பற்பல. இலக்கியச் சுவையைத் திரும்பத் திரும்பப் படித்து ரசித்த ஏகாந்த வேளைகள் ஏராளம். சிலம்பின் செவ்விய வரிகள, தேவார தேவாமிர்தம், விஷ்ணு சித்தரின் வைரவரிகள், குறளமுதம் எனத் தமிழ் இலக்கியத் தேனைக் கதையின் போக்கில் அள்ளியள்ளித் தெளித்து நம்மைச் சுவைக்க வைத்திருந்தார் கல்கி. இவ்விலக்கியங்கள் எல்லாம் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவை. (படிக்காமல் இருப்பது நம் சோம்பேறித்தனம்!!). ஆனால், பொன்னியின் செல்வன் கூற்றாக ஓரு பழம்பாடல், "கச்சி ஒருகால் மிதியா" என்ற வரிகளையும், விளக்கத்தையும் படிக்க நேர்ந்தது. எங்கே எந்த இலக்கிய நூலில் இடம் பெற்றுள்ளது என்று அறிய முடியவில்லை அப்போது.

ஏற்கெனவே, பெயரளவிலும், ஒரே ஒரு பாடல் அளவிலும் அறிமுகமாகியிருந்த முத்தொள்ளயிரம் நூலை வாங்கப் பின்னாளில் சந்தர்ப்பம் அமைந்தது எனக்கு. ஒவ்வொரு பாடலாய் வாசிக்கும்போது இரண்டு பாடல்கள் கல்கியின் வாயிலாக அறியப்பட்டவை. அவ்வளவாகப் பிரபலமாயிராத ஓர் இலக்கிய நூல் முத்தொள்ளாயிரம். முத்தமிழ்நாட்டின் முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களைத் தொள்ளாயிரம் (3 X 900 = 2700) பாடல்களால் சிறப்புச் செய்து இருக்கிறார் யாரோ ஒரு பழங்கவி. இப்போது நமக்குக் கிடைத்துள்ளவை சுமார் 104 பாடல்களே. மற்றவை நாம் இழந்த பூர்வீகச் சொத்துக்கள். ஒவ்வொரு பாடலும் 8 வரிகள் தான். ஆனால், அவை காட்டும் நாடகக்காட்சிகளோ அற்புதமானவை. காதலும் வீரமும் செறிந்தவை. உலா இலக்கிய நடையை மிகுதியாய் ரசித்து மகிழலாம்.

வஞ்சிமாநகரின் வனப்பு, மதுரையின் சிறப்பு, உறையூரின் பெருமை, நாட்டுவளம், நகரச்செழிப்பு, போர்யானையின் பீடுநடை, நாயகநாயகி பாவங்கள், மன்னனின் வீதியுலா பவனி, யுத்தகளக் காட்சி, அரசனின் வெண்கொற்றகுடை, செங்கோல் சிறப்பு என அகம், புறம் இரண்டின் சுவைகளையும் ஓருங்கே அனுபவிக்கலாம்.

பொன்னியின் செல்வனை வாசிக்கும்போது கோக்கிள்ளியின் போர்க்களிற்றின் நடையழகை ரசித்தோம். ஒரு காலைக் காஞ்சியில் வைக்குமாம், மற்றொரு காலைத் தஞ்சையில் வைக்குமாம், பின்னொரு காலை ஈழத்தில் வைக்குமாம். ஆகா, இப்படியொரு வீரநடை, பீடுநடை நடக்கும் போர்யானையை வைத்திருந்தாராம் கோழியூர் வேந்தன் கிள்ளி. காஞ்சிக்கு வரவேண்டும், தஞ்சை பழையாற்றுக்கு வரவேண்டும் என்ற அழைப்புக்களை கண்ட அருமொழி முத்தொள்ளாயிரபாடலை மேற்கோள் காட்டுவது ஏற்புடையதாயிருந்து. கல்கி மிக பொருத்தமாக,

"கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால்த்
தத்துநீர்த் தண்தஞ்சை தான்மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே, நம்
கோழியர் கோக் கிள்ளி களிறு!"

என்ற முத்தொள்ளாயிரப் பாடலைச் சூழ்நிலைக்கேற்ப நகைச்சுவையாக மேற்கோள் காட்டிக் கையாண்டிருந்தார். வேறுசில இடங்களில் ஒரு கோஷத்தைக் கல்கி எழுதியிருந்தார். நமக்கு தெரிந்த போர்க்கோஷம் "வெற்றிவேல், வீரவேல்" தான். ஆனால், கல்கியோ "நாவலோ நாவல்" என்று எழுதியிருந்தார். நமக்குத் தெரிந்ததெல்லாம் நாவல் என்றால் புதினம் அல்லது நாவை வேறு நிறமாய் மாற்றும் இனிப்பு பழம்.

கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருக்கானாட்டுமுள்ளுரில், துலா ஸ்நானத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கி ஆழ்வார்க்கடியான் மதவாதப்போர் புரிய அழைப்பு விடுப்பதும் "நாவலோ நாவல்" என்றுதான். (முதல் பத்தியை மறுபடியும் ஒருமுறை வாசிக்கவும்). சுந்தர சோழர் அரண்மனையில் வீரபராந்தகர் நாடகத்தின் போது கொடும்பாளுர், பழுவூர் கோஷ்டிகள் மாறி, மாறி உற்சாகக்கோஷமிடுவதும் "நாவலோ நாவல்" என்றுதான். இது என்ன கோஷம்? இதற்கு விளக்கம்தான் என்ன?

முத்தொள்ளாயிரம் படிக்கும்போது முழுவிளக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த பாடல், பல விஷயங்களைத் தெளிவாக புரிய வைத்தது.

"காவல் உழவர் களத்(து) அகத்துப் போர்ஏறி
நாவலோஓ! என்றிசைக்கும் நாளோதை, காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்ப் போலுமே
நல்யானை கோக்கிள்ளி நாடு"

மாடுகட்டிப் போரடித்தாலும் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த நம் பழந்தமிழ் நாட்டின் அறுவடைகாலம். நெற்களத்தில் அறுவடை செய்த நெல்லை உயர்ந்த போராகக் கட்டிவைப்பார்கள். காவல் உழவர் அதாவது உழவர்களின் காவலன் நெற்போரின் உச்சியில் ஏறிநின்று "நாவலோ நாவல்", என்று எத்திசைக்கும் ஒலிக்கும்படியாக உற்சாகமாய் வாழ்த்துக் கூறுவான். இதற்கு நாளோதை என்று பெயர். (நாளோதை - முகூர்த்த வேளையின் மங்கல வாழ்த்தொலி). இது எப்படியிருக்கிறது என்றால் போர்க்களத்தில் சோழனது போர்யானை மேலிருந்து பகைவர்களை நோக்கி கூறும் வீரவார்த்தைகள் போல் உள்ளது. ஒரே பாடலில் நாட்டுவளமும், போர் வீரமும் பாடப்பட்டிருக்கிறது. "நாவலோ நாவல்" என்னும் சொற்றொடர் ஒரு மங்கல வாழ்த்தொலியாக அந்நாளில் பண்டைத் தமிழகத்தில் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை முத்தொள்ளாயிரம் பாடலின் வழியாக அறியமுடிகிறது. நாள் வாழ்கவே என்ற சொற்றொடர் தான் மருவி நாவலோ நாவல் என்று மாறியதோ! ஒரு வாழ்த்தொலியைப் போர்க்கோஷமாகப் பின்னாளில் தமிழர்கள் பயன்படுத்தினார்களோ! வெற்றியின் உற்சாகக் கோஷமாய் நாவலோ நாவல் ஒலித்ததோ!

இச்சொற்றொடரைக் கல்கி போர்கோஷமாகவும், உற்சாக வாழ்த்தொலியாகவும் தம் வரலாற்று காவியத்தில் கையாண்டுள்ளார்.

வாளோடு தோன்றிய மூத்தகுடியின் சொற்றொகுதியில் இடம்பெற்ற இந்த மங்கல வாழ்த்தொலி தற்போது வழக்கில் இல்லை. வேறுபல விளக்கங்கள் உண்டெனில், தமிழ்கூறும் நல்லுலகத்துப் பெருமக்கள் விளக்கமளிக்க முன்வருவார்களாக.

பொன்னியின் செல்வன் படித்துவிட்டு வரலாற்றில் நம்மவர்களின் முகவரிகளை, அடையாளங்களை எல்லாம் தேட விழைந்தோம். இனி பொன்னியின் செல்வன் படம் பிடித்துக் காட்டும் இலக்கியங்கள் வழியே வரலாற்றோடு நம்மவர்களின் வாழ்வியலை ரசிப்போம், சுவைப்போம், தேடுவோம், சுகிப்போம்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.