http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி
"கலை" உணர்வு இனிது!!
கோகுல் சேஷாத்ரி
அன்புள்ள வாருணி

வணக்கம்.

இதுவரை நான் உனக்கு எந்தக் கடிதமும் எழுதியதில்லை. உனக்குக் கடிதம் எழுதும் உரிமையையும் எடுத்துக்கொண்டதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்க்கவில்லை. ஆனால் இப்போது அமைந்துள்ள சந்தர்ப்பத்தையும் அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ள உன்னை விடச் சிறந்த தோழி எவருமில்லை என்பதால் இதனை எழுதத் துணிந்தேன். இதில் நான் பேசப்போகும் விஷயங்கள் உனக்கும் எனக்கும் மட்டும் தொடர்புடையவையல்ல என்பதால் உனது ஒப்புதல்களுடன் இதனைப் பகிரங்கமாக்குகிறேன்.லால்குடி சப்தரிஷீசுவரர் திருக்கோயிலில் பூதகணங்களை விளக்கும் முனைவர் இரா.கலைக்கோவன்


முனைவர் கலைக்கோவன் அவர்கள் அறுபது அகவையைப் பூர்த்தி செய்துள்ளார்கள் வாருணி.

ஒரு மனிதன் அறுபது அகவையைத் தொடும்போது அதனைக் கொண்டாடுவது இந்த மண்ணின் ஒரு மரபாக அமைந்துள்ளது. வேறு எந்த நாட்டிலும் இதனை இவ்வளவு அக்கறையாகக் கொண்டாடுவதைப்போல் தெரியவில்லை. அது வெறும் பணி ஓய்வு சம்மந்தப்பட்ட விஷயமாகத்தான் அங்கெல்லாம் இருக்கிறது.

அறுபது என்பது ஏன் கொண்டாடப்படவேண்டிய வயது என்பதை சிந்திக்கிறேன்... ஏன் ஐம்பதுகளையும் எழுபதுகளையும் கொண்டாடாமல் அறுபதைக் கொண்டாடுகிறோம்?

இருபது இளமை. முப்பது குடும்பம். நாற்பது பெருங்குடும்பம். ஐம்பது ??

அங்குதான் எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு இரசாயன மாற்றம் உருவாகத் துவங்குகிறது. மற்றபடி மேம்போக்குச் சிந்தனைகளுடன் வாழ்வைக் கழித்தவன்கூடச் சற்று நிதானிக்கிறான். என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம்? என்ன விதமாக இந்தச் சமூகத்துக்கு நமது பங்களிப்பைச் செய்திருக்கிறோம்? என்றெல்லாம் சிந்திக்கிறான். அந்த முதிர்ச்சி பூப்படையப் பத்து வருடங்கள் கழிந்து விடுகின்றன.

ஆம்! அறுபது என்பது மனம் பூப்படையும் வயது. எப்படிப் பெண்ணின் பூப்படைதலைக் கொண்டாடுகிறோமோ அதேபோல மனதின் பூப்படைதலையும் கொண்டாட வேண்டுமல்லவா? பிரம்மச்சரியத்தில் தொடங்கி சம்சாரியாகப் பயணித்த அந்த ஆன்மா வனப்பிரஸ்தத்தில் காலை எடுத்து வைக்கும் முதல் அடி அல்லவா அந்த வயது? ஆக, அறுபது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியதுதான்.

மேற்கூறியவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஆனால் திரு. கலைக்கோவனைப் பொறுத்தவரை கொண்டாடப்படவேண்டியவை எனப் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. அவர் கடந்து வந்த பாதையைத் தற்பொழுது வரலாறு டாட் காம் மின்னிதழில் உனக்கெழுதும் கடிதங்களாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அல்லவா? அதனைப் படித்தால் நான் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்பது தெரியும்.

பொதுவாகவே வரலாறு மற்றும் வரலாற்றாய்வு என்பது சிறிதும் கவர்ச்சியற்ற பணியாகத்தான் இன்றுவரை இந்த மண்ணில் நிலவி வருகிறது. அதனை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க முடியாது - சொல்லப்போனால் கையில் இருப்பதையும் அது பறித்துக்கொண்டு விடும். அதனை வைத்துக்கொண்டு புகழையோ சமூகத்தில் ஓர் அந்தஸ்தையோகூட அதிகம் சம்பாதித்துவிட முடியாது. திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் காலை மட்டும் காட்டிவிட்டுத் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட நபராக அரைநாளில் நீ வளர்ந்து விடலாம் - ஆனால் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவலாக அறியப்பட்ட நபராக வரலாற்றாய்வாளன் ஒருபோதும் வளர முடியாது. அரசியலில், சமூகத்தில் அவனுக்கு ஒரு மெல்லிய மரியாதை மட்டுமே உண்டு. அவ்வளவே. எப்போதாவது எவராவது உணர்ச்சிவசப்பட்டு "ரொம்ப நன்றாகப் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் சார் !" என்று சொல்லாரம் சூட்டலாம். அத்தோடு சரி.

இத்தனையும் மீறிக் கலைக்கோவன் போன்றவர்களைச் செலுத்தும் ஆன்ம சக்தி எது எனச் சிந்தித்துச் சிந்தித்து மலைத்துப் போகிறேன்.

எது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அந்தச் சாக்கிய குலத்து இளவரசனை அரண்மனையிலிருந்து நள்ளிரவில் வெளியேற வைத்ததோ அதுதான் மகேந்திரரைக் கலைப்பித்தன் ஆக்கியது. அதுதான் இராஜசிம்மரைப் பல்லவ மண்ணில் கையிலையங்கிரி சமைக்குமாறு தூண்டியது. அதுதான் முதலாம் இராஜராஜரைப் பெரிதினும் பெரிது கேட்க வைத்தது.

அது ஒரு தேடல். ஒரு தவிப்பு. கடலோடு கடலாக ஒட்டியிருக்கும் நீர்த்துளி மேகமாகி வான்னோக்கி மேலெழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைப்போல் மனமும் "தேடிச் சோறு நிதம் தின்று" கழிக்காமல் ஏதாவது செய்யவேண்டுமென்று தவிக்கிறது. இதனை வார்த்தைகளில் விளக்குவது மிகக் கடினம். மகாகவியான பாரதியே இதனை விளக்க முடியாமல் "அக்கினிக் குஞ்சு" என்று உருவகமாகக் கூறிச் சென்றான்.

முனைவர் மாரா போன்றதொரு மாமேதையின் வீட்டில் இப்படியொரு மணி தோன்றுவதில் வியப்பில்லையே! என்று நீ கூறலாம். அது ஓரளவிற்கு உண்மைதான். திரு கலைக்கோவன் மூலம் அவரது வீட்டின் சூழல்களை நான் விபரமாக அறிந்துகொள்ள வாய்ப்பேற்படவில்லையென்றாலும் அவரது அண்ணியார் திருமதி புனிதவதி இளங்கோவன் மூலம் அவ்விபரங்களை அறிந்தேன். அது அருமையான சூழல்தான். ஆனால் "மாரா அவர்களின் மகன்" என்னும் அடையாளம் ஒரு சுமையும்கூட என்பதை நீ மறுக்கமாட்டாய். அந்தச் சூரியனை மீறித் தன்னொளியைப் பாய்ச்சியாக வேண்டிய நிர்ப்பந்தத்தை திரு கலைக்கோவன் கவனமாக எதிர்கொண்டதை நீ கருத்தில் கொள்ள வேண்டும். மாராவை ஒட்டி - அவரது வரலாற்றாய்வைப் புரிந்துகொண்டவராக - ஆனால் அதே சமயம் தனக்கென்று தனித்ததொரு பாதை வகுத்துக்கொள்ளத் தவறாதவராக இவர் வளர்ந்திருப்பது மிக முக்கியமானது. கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தனது தந்தையாரை இவர் சந்தோஷமாகக் "காப்பி" அடிக்கிறார் என்று துணிந்து கூறலாம். அது என்னவெனில் தன்னைத்தேடிச் சந்தேகங்களுடன் வரும் மாணவர்களுக்கு நூறு சதவிகித அக்கறையுடன் பதில் கூறி அனுப்புவது. மேலும் அவர்களை நாடி பிடித்துப் பார்த்து - இந்த விதை மேற்கொண்டு வளருமா? அதற்கு வாய்ப்பிருக்கிறதா? அப்படி வாய்ப்பிருந்தால் அதற்கான உரங்களை இடவேண்டுமா? என்றெல்லாம் சிந்திப்பது. செயல்படுவது.


***********************************************************************************************


அது 1986 அல்லது 1989ம் ஆண்டாக இருக்கலாம். சரியாக நினைவில்லை.

சென்னையில் எங்கள் வீட்டருகே அமைந்திருக்கும் கிளை நூலகத்திற்கு அடிக்கடி நான் விஜயம் செய்வது வழக்கம். அந்த நூலகத்தில் சொல்லி வைத்தாற்போல் அனைத்து நல்ல நூல்களும் வேறு எவராலோ இரவல் பெறப்பட்டிருக்கும் - அல்லது எளிதில் பார்வைக்கு அகப்படாத இண்டு இடுக்குகளில் ஒளிந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடுக்குகளில் ஒருநாள் "பழுவூர்ப் புதையல்கள்" எனும் நூலொன்றினைக் கண்டேன்.

கலைக்கோவன் என்னும் பெயர் முதன் முதலில் மனதில் பதிவானது அப்போதுதான்.

அந்த நூலின் உள்ளடக்கங்கள் சரிவரப் புரியவில்லையென்றாலும் பொன்னியின் செல்வன் நாவல் பரிச்சயமாகியிருந்ததால் பழுவேட்டரையரின் பெயர் மட்டும் புரிந்தது. நூலினைப் படித்து முடித்தேன். நளினி, அகிலா என்னும் மாணவியர் பெயர்களும் மனதில் நின்றன. பின் இந்து நாளிதழ் படிக்கும்போதெல்லாம் கலைக்கோவன் எனும் பெயர் அடிக்கடி கண்களில் தட்டுப்பட்டது. செய்திகளை ஆர்வத்துடன் படிப்பேன். என்றாவது ஒரு நாள் அவரைச் சந்திக்க வேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவரது முகவரியையும் தொலைபேசி எண்ணையும் எப்படியாவது தேடிப்பிடித்துவிட வேண்டுமென்று பெரிதும் முயன்றும் வெற்றி கிட்டவில்லை.

அதன் பிறகு வாழ்க்கை என்னைப் பல இடங்களுக்கு அலைக்கழித்தது - பல பணிகளில் ஈடுபட வைத்தது. என் மனதில் நின்ற அந்தப் பெயருக்குரிய மனிதரை அடுத்த பதிமூன்று ஆண்டுகளுக்குச் சந்திக்க முடியவில்லை. அவ்வப்போது முகங்காட்டிய வரலாற்றார்வத்தையும்கூட பொன்னியின் செல்வனுடன் நிறுத்திக் கொண்டேன்.


***********************************************************************************************


2003ம் ஆண்டில்தான் பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. அதுவரை தேக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளம் மடையைத் திறந்துகொண்டு பீறிடுவதைப்போல் அடங்கிக்கிடந்த வரலாற்றார்வம் சக எண்ணம் உடைய மனிதர்களைப் பார்த்ததும் பிரவாகமாகப் பீறிட்டது. குழுமடல் ஒன்றில் "திருச்சியில் கலைக்கோவன் என்றொரு ஆய்வாளர் இருக்கிறார் - அவரை நாம் சந்திக்க வேண்டும். அவரது முகவரியை எப்படியாவது எவராவது தேடித்தாருங்கள் !" என்றொரு மடலெழுதியிருந்தேன். அதற்கு உடனடியாகப் பலனேற்படவில்லை - நானும் மறந்துவிட்டேன்.

சில காலம் கழித்து "பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்தால் என்ன ?" என்றொரு கேள்வியை நான் கேட்டு வைக்க, அது மிக முனைப்புடன் கருதப்பட்டு "பொன்னியின் செல்வன் குழுவின் முதல் யாத்திரை"யாக மலர்ந்தது. அந்த யாத்திரையைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த நண்பர் கமலுக்கு திரு.கலைக்கோவனுடன் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அது அறிமுக உரையாடலாகவே முடிந்தது. முதல் யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது யாத்திரையின் முடிவில் பொன்னியின் செல்வன் குழு அவரை நேரில் சந்தித்தது. அளவளாவியது.

மேற்கூறிய இரண்டு யாத்திரைகளிலுமே கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லை. இடையில் குழு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மா இராசமாணிக்கனார் வரலாற்று மையத்திற்காகச் சிறியதொரு நிதி திரட்டித் தந்தோம்.


***********************************************************************************************


2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். இரண்டு வார கால விடுமுறையில் நான் இந்தியா வரவிருப்பதை நண்பர்களுக்குத் தெரிவித்தேன்.

அதுவரை நேரில் பார்க்காமல் மடல்கள் மூலமாகவே அறிமுகமாகியிருந்த நண்பர்களை முதல் முறையாகச் சென்னை கடற்கரையில் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்குதான் பூங்குழலியையும் (அதாவது அந்தப் பெயரில் தன்னை எப்போதும் அழைத்துக்கொள்ளும் இலாவண்யாவை) கவிப்பேரறிஞர் கிருபாவையும் இராமையும் முதன்முதலில் சந்தித்தேன். இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக உரையாடினோம். அப்போது நான் "பொன்னியின் செல்வன் - நிழலும் நிஜமும்" (Ponniyinselvan - Facts and fiction) என்றொரு தொடரை மடற்குழுவில் எழுதிக்கொண்டிருந்ததால் அது சம்மந்தமாகவே உரையாடல் நிகழ்ந்தது. அந்தக் கடற்கரைச் சந்திப்புக்குக் கமலால் வரமுடியவில்லை! அது ஏமாற்றமாக இருந்தாலும் விரைவில் சந்தித்து விடலாமென்று நம்பிக்கையிருந்தது.

உரையாடலைத் தொடர்ந்து ஒரு சிறு யாத்திரை செல்வதென்று தீர்மானித்தோம்.

மறக்கவே முடியாத அந்த ஆகஸ்ட் 23, 2003.

நண்பர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி வந்து சேர்ந்தார்கள். அந்த சனிக்கிழமை விடியற்காலை நேரத்தில்தான் கமலை முதன்முதலில் சந்தித்தேன். பார்ப்பதற்கு அமுல் பேபி மாதிரிக் காட்சியளித்தார். அதனால் அவ்வப்போது அவரை "கமுல்" என்று நான் விளிப்பதுண்டு. (அதற்குப் பழிவாங்கும் விதமாக அவர் என்னை எப்போதும் "கொல்கி" என்றுதான் அழைப்பார். அமரர் கல்கியின் பாதிப்பால் எழுதத் துவங்கிய - அவருடைய தாக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாத - கோகுல் - என்று இதற்குப் பொருள் ! கல்கியின் எழுத்துக்களைக் கொலைசெய்யும் "கொல்" கி என்று தயவுசெய்து யாரும் தவறாகப் பொருள்கொண்டுவிட வேண்டாம்)

என்னையும் என் மனைவியையும் ஏற்றிக்கொண்டு வண்டி நண்பர்களுடன் நார்த்தாமலைக்குப் பறந்தது. அந்தப் பயண அனுபவங்களை வரலாறு டாட் காமில் "பதினெண் பூமி" என்னும் கட்டுரையில் பின்னர் எழுதியிருக்கிறேன். மதியம் புதுக்கோட்டையில் பேராசிரியர் சுவாமிநாதனைச் சந்தித்தோம். அங்கிருந்து நேராக திருச்சி வந்து திரு கலைக்கோவனை சந்திக்கலாமென்று திட்டம்.


***********************************************************************************************


இரண்டு மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு ஏறக்குறைய நான்கு மணிக்கு அவரது வீட்டிற்குச் சென்றோம். அவருக்குக் காலதாமதங்கள் பிடிக்காதென்றாலும் தன்னுடைய வருத்தத்தைத் துளியும் காண்பித்துக்கொள்ளாமல் புன்னகையுடன் எங்களை எதிர்கொண்டார். அடுத்த நான்கு மணிநேரங்களுக்கு நாங்கள் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்தோம். துளியும் சலிப்பின்றி - தன்னுடைய அத்தனை பணிகளையும் ஒத்திவைத்து - "நேரமாகிவிட்டது, கிளம்புகிறீர்களா ?" என்றெல்லாம் நேரடியாகவோ மறைமுகமோ கூறாமல் - கடைசிவரை எங்களுக்கு பதிலளித்தார். பின்னாளில் அவருடன் நன்றாகப் பழகிய பிறகுதான் அவர் எத்தனை அக்கறையாகத் தனது நேரத்தை வகுத்துக்கொள்கிறார் என்று புரிந்தது. அப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் பாத்திரங்களும் அது தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் மட்டுமே எங்கள் மனதில் படிந்திருந்தன. அதனால் ஆழமான கேள்விகள் எங்களிடமிருந்து எழவில்லை. என்றாலும் ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கப்பட்ட மிக நீண்ட - நுட்பமான பதில்கள் எங்களை ஆட்கொண்டன.

அன்று ஏதோ ஒரு இரசாயன மாற்றம் எங்களிடம் நிகழ்ந்துவிட்டது. ஒரு பரிமாற்றம் - ஒரு புரிதல் என்றும்கூட அதனைக் கூறலாம். அதனை இன்று வரை சரிவர இனங்காண முடியவில்லை. கலைக்கோவன் அவர்கள் அன்று கையெழுத்திட்டுக் கொடுத்த "Rare karana sculptures from Thiruazhapadi" என்னும் கட்டுரையை இன்றுவரை பத்திரமாக வைத்திருக்கிறேன். அது ஒரு பொக்கிஷம்.

கேள்விகளின் முடிவில் "நாளை எந்த இடங்களுக்கெல்லாம் செல்வதாக இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.

எங்களிடம் அதற்கு பதிலில்லை. "நீங்களே ஏதாவது இரு இடத்தைக் குறிப்பிடுங்கள்!" என்று வேண்டினோம்.

"புள்ளமங்கை பார்க்கலாம் - பின்னர் பெரியகோயிலுக்குச் செல்லலாம் !" என்றார். மேலும் "உங்களுடன் நாங்களும் வருகிறோம் - அப்போதுதான் உங்களால் கோயில்களை சரிவர இரசிக்க முடியும் !" என்று கூறினார். நாங்களும் அகமகிழ்ந்தோம். ஆனால் மறுநாள் நாங்கள் மேற்கொள்ளப்போகும் அந்தப் பயணம் எங்கள் வாழ்வின் இறுதிவரை தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் பயணம் என்பதை அப்போது அறியவில்லை. எங்களின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் திருச்சி மலைக்கோட்டை கீழ்க் குடைவரையைப் பார்ப்பதென்றும் பின்னர் புள்ளமங்கைக்குச் செல்வதென்றும் முடிவானது.

கையில் கலைக்கோவனின் பேச்சைப் பதிவு செய்யும் கருவி இல்லையே என்று மிகவும் வருந்தினோம். இரவோடிரவாக திருச்சி மலைக்கோட்டையின் குறுங்கடைகளுக்குச் சென்று ஒரு கருவியை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினோம். ஆனால் மறுநாள் அது காலை வாரிவிட்டுவிட்டது. அன்றைய பொழுதின் நிகழ்வுகளையும் அவரது பேச்சையும் எங்கள் மனம் மட்டுமே இன்று தாங்கி நிற்கிறது.

அன்று மாலை வேறொரு விதத்திலும் முக்கியமானதாக அமைந்தது.

பொன்னியின் செல்வன் குழுவுக்கும் நமது நண்பர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த திரு சுந்தர் பரத்வாஜ் என்னும் அருமையான மனிதரை அன்றுதான் கலைக்கோவன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தேன். உரையாடலில் அவரால் சரிவரக் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் ஓர் ஆழமான நட்பு எங்களுக்குள் அன்று முகிழ்த்துவிட்டது. சுந்தருக்கு திரு கலைக்கோவனுடனும் மற்ற பற்பல வரலாற்றாய்வாளர்களுடனும் ஏற்கனவே தொடர்பிருந்தது.

அனைவரும் சுந்தரின் விருந்தோம்பலில் இரவு உணவுக்காக மாயாஸ் உணவுவிடுதிக்குச் சென்றது நினைவிருக்கிறது. சுந்தருடன் எப்போது எங்கு சென்றாலும் பர்ஸைத் திறக்கவேண்டிய அவசியமே இருக்காது. பிடிவாதமாகத் திறக்க முற்பட்டாலும் கடுமையாக மறுத்துவிடுவார். வரலாற்றை ஆழமாக நேசிக்கும் அவர், தன்னுடைய நேசத்தைப் பகிர்ந்துகொள்ளும் உள்ளங்களுக்காகக் கைக்காசை செலவழிப்பதை ஒரு கடமையாகவே இன்றுவரை மேற்கொண்டு வருகிறார். வழக்கம்போல கலைக்கோவன் அவர்கள் அதிக எண்ணையில்லாமல் ஒரு தோசை மட்டும் வாங்கிக்கொள்ள, நாங்கள் அனைவரும் "செவிக்கு" எக்கச்சக்கமாக உணவு கிடைத்திருந்ததையும் மறந்து தட்டுத் தட்டாக பற்பல பலகாரங்களை வயிற்றுக்கு "ஈந்து" மகிழ்ந்தோம்.

எங்களுடன் மறுநாள் பயணத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் அப்போது அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த திரு சீதாராமனை எங்களுடன் அனுப்பி வைப்பதாக சுந்தர் வாக்களித்தார்.


***********************************************************************************************


கலைக்கோவன் அவர்கள் எங்களுடன் செலவழித்த அந்த மறுநாள், ஞாயிற்றுக்கிழமை - ஒரு நாள் - ஒரே ஒரு நாள் - எங்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது வாருணி ! இதை நான் மிகைப்படுத்தியோ உணர்ச்சிவயப்பட்டோ கூறுவதாக நினைக்காதே.... இவை சத்தியமான வார்த்தைகள்.

அந்தப் பொன்னாள் எங்களின் வழக்கமான தாமதத்துடன் துவங்கினாலும் மிக விரைவிலேயே களை கட்டிவிட்டது. அன்று ஏறக்குறைய நாள் முழுவதும் அவர் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். யோசித்துப்பார்த்தால் நான் அவருடன் கழித்த மிக நீண்ட பொழுது அந்த ஒரு நாள்தான் ! பின்னர் வரலாறு டாட் காம் நண்பர்கள் அவருடன் பலமுறை பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர் - ஆனால் எனக்கு அத்தகைய வாய்ப்புக்கள் வாய்க்கவில்லை. அதனால் அந்த ஒற்றைப் பயணத்தின் நினைவுகளை மட்டுமே என்னால் அசைபோட முடிகிறது.

முதல் கேள்வி என் மனைவி கேட்ட கேள்வி - மறக்க முடியாமல் என் மனதில் பதிந்துவிட்ட கேள்வி - "தெய்வம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா இல்லையா ?".

மிக அழகாக அதற்கு பதிலளித்தார் அவர். பின் பலப்பல கேள்விகள் - பதில்கள்.

அந்தச் சுற்றம் மிக வித்தியாசமான ஒன்று வாருணி. அது ஒத்த பருவத்தினர்களின் கூட்டு அல்ல - ஒத்த மனமொத்தவர்களின் கூட்டு. அது எப்போதும் வேறு தளத்தில் இயங்கும்.புள்ளமங்கை கொற்றவை பற்றிய விளக்கம்


அன்று அவர் காட்டிய புள்ளமங்கை என் மனதில் தனியாக ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டது. இன்று வரை அதன் இடத்தை வேறு எந்தக் கோயிலுக்கும் நான் விட்டுக் கொடுக்கவில்லை.

புள்ளமங்கைக்குப் பின் பெரிய கோயிலான இராஜராஜேஸ்வரம் ! கேட்கவா வேண்டும் ??இராஜராஜேஸ்வரம் இராஜராஜன் திருவாயிலருகே அமைந்துள்ள சிற்பங்கள் பற்றிய விளக்கம் (இடது கோடியில் சுந்தர், அருகில் கிருபா)


அன்றைய தினத்தின் முடிவில் நாங்கள் வேறு மனிதர்களாக உருமாறியிருந்தோம் என்பதுதான் உண்மை. அது என்னவிதமான மாற்றம் என்பது தெரியவில்லை - ஆனால் அந்த மாபெரும் ஸ்ரீவிமானத்தின் நிழலில் வரலாறு டாட் காம் என்னும் நற்குடும்பம் அன்று தோன்றிவிட்டது. பின்னர் நிகழ்ந்ததெல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான்.

ஓய்ந்துபோய் அந்த விமானத்தின் மேல்தளத்தில் அவருடன் அமர்ந்திருந்ததும் பாரதியின் பாடல்கள் பாடியதும் பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துவிட்டன.இராஜராஜேஸ்வரம் விமானத்தளத்தில்***********************************************************************************************


ஏற்கனவே பலராலும் பலமுறை குறிப்பிடப்பட்டுவிட்ட இந்த முதல் "கலைக்கோவன் பயணத்தை" ஏன் இத்தனை விரிவாகக் குறிப்பிடுகிறேனென்றால், இந்தப் பயணம்தான் எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த எழுத்தாளனை எனக்கே அடையாளம் காட்டியது. புள்ளமங்கை ஏற்படுத்திய தாக்கத்தில் "ஆயிரம் வருஷத்துப் புன்னகை" என்றொரு கட்டுரை எழுதி பொன்னியில் செல்வன் மடற்குழுவில் வெளியிட்டேன். அக்கட்டுரையை திரு கலைக்கோவன் திரு சுந்தர் உட்பட பலரும் வெகுவாகப் பாராட்டினர். தொடர்ந்து எழுதுமாறு உற்சாகமூட்டினர்.

அந்த உற்சாகம் எனது அடுத்த கட்டுரையான "கருங்கல்லில் ஒரு காவிய"த்திற்குக் காரணியாய் அமைந்தது. வடித்தேன். பின்னாளில் வரலாறு டாட் காம் இதழ் தோன்றியபோது முதல் இதழிலேயே அந்தக் கட்டுரை வெளியானது.

நாங்கள் கலைக்கோவன் அவர்களுடன் மேற்கொண்ட அந்த முதல் பயணம் வேறொரு மறக்கமுடியாத வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

பயணம் முடிந்த மறுநாள் நானும் மனைவியும் அவரது வீட்டில் அவரைத் தனியே சந்தித்தோம். கணிப்பொறியில் தமிழ்ச் செயலியை உபயோகிக்கக் கற்றுக்கொடுத்தேன். "தமிழ் வாழ்க" என்று முதல் வாக்கியம் அமைத்தார். பின்னர் முதல் நாள் எடுத்திருந்த சோழர் ஓவியங்கள் சிலவற்றை கணிப்பொறி மென்பொருள் கொண்டு அதன் பாதிப்புக்களை நீக்கிக் காண்பிக்க - அது அவரை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு கணம் கூட யோசிக்காமல் "அடுத்த கூ.ரா சீனிவாசன் அறங்கட்டளையில் இதுபற்றிப் பேசுங்கள் !" என்று அன்புக்கட்டளையிட்டுவிட்டார். இதுவே பின்னர் வரலாறு டாட் காம் மலர்ந்தவுடன் முப்பெரும் விழா அமைவதற்கு வழிகோலியது.முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த நண்பர்களுடன்


இவ்விரண்டு காரணங்களைத் தவிர புள்ளமங்கைப் பயணம் வேறொரு விதத்திலும் எனக்கு முக்கியமான ஒன்றாய் அமைந்தது. அந்தத் திருக்கோயில்தான் சீதாராமன் என்றொரு அன்பு மிகுந்த நண்பரை எங்களுக்கு ஈன்றது. மனதில் நீங்காமல் இடம்பெற்றுவிட்ட திருக்கோயிலை இறைவன் திருவருளால் சென்ற ஆண்டு(2006) நானும் சீதாராமனுமாக இணைந்து உள்வாங்கிக்கொள்ள முயன்றோம். அந்த முயற்சியும் புரிதலும் தற்போது வரலாறு டாட் காமில் கட்டுரைத் தொடராக வெளிவந்துகொண்டிருப்பதை கவனித்திருப்பாய்.


***********************************************************************************************


இதற்குப் பின் ஒரே ஒரு பயணம் மட்டுமே கலைக்கோவன் அவர்களுடன் மேற்கொள்ள முடிந்தது. அது அவருடனும் சுந்தருடனும் மேற்கொண்ட லால்குடி சப்தரிஷீசுவரர் திருக்கோயில் பயணம். கொட்டும் மழையில், மின்வெளிச்சம் பழுதாகிவிட்ட அந்த இரவில் டார்ச் வெளிச்சத்தில் அந்தத் திருக்கோயிலை வளையவந்தது மறக்க முடியாத அனுபவம்.லால்குடிப் பயணம்


அவர் கண்டறிந்திருந்த "சிவ காபாலி" என்னும் அரியதொரு திருமூர்த்தத்தின் அருகே கலைக்கோவன் கணநேரம் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். "கோயில்களையும் என்னையும் பிரிக்க முடியாதுங்க !" என்றார். கண்கள் கலங்கிக் குரல் தழுதழுத்துவிட்டது. அந்தக் குரல் இன்று வரை என் நெஞ்சில் பத்திரமாக உள்ளது வாருணி. கோயில்களை மிக மிக ஆழமாக நேசிக்கும் ஒரு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட உண்மையின் குரல் அது.முனைவரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட சிவ காபாலி என்னும் அரிய சிற்பம்


அன்று இரவு நீண்ட நேரத்திற்கு நானும் சுந்தரும் கலைக்கோவன் அவர்களையும் அவரது ஆய்வு முறைகளையும் இலால்குடி கோயிலைப் பற்றியும் பற்றிப் பேசிக் களித்தோம்.

வேறொரு நாள் தருணம் வாய்க்கும்போது அந்தப் பயண அனுபவங்களை முன்வைக்கிறேன்.


***********************************************************************************************


இணையத் தளமொன்று உருவாக்கலாம் என்ற எண்ணம் முகிழ்த்தபோது அதில் வெளிக்கொண்டுவர நினைத்தது ஏற்கனவே அவராலும் மா இராசமாணிக்கனார் மைய வரலாற்றாய்வளார்களாலும் வெளியிடப்பட்ட கட்டுரைகளை மட்டுமே. நாங்களும் அதில் எழுதலாம் என்னும் ஆபத்தான எண்ணம் எப்போது மனதில் முளைத்தது என்பதில் தெளிவேற்படவில்லை. தளத்தில் வெளியாகப்போகும் இதழுக்குப் பல்வேறு தலைப்புக்களை ஆராய்ந்தோம். ஒருமித்த கருத்தேற்படவில்லை. இறுதியில் கலைக்கோவனே வரலாறு என்னும் தனது ஆய்விதழின் பெயரை உபயோகித்துக்கொள்ள அனுமதி வழங்கினார். வரலாறு டாட் காம் என்னும் இணைய முகவரியை முதலில் பதிவு செய்தோம்.varalaru.com முன்பே பதிவாகியிருந்ததால் varalaaru.com என்னும் முகவரிக்குச் செல்லவேண்டியதாயிற்று.

பின்னர் அதில் என்ன விதமான உள்ளடக்கங்களை உருவாக்குவது என்று பலமான விவாதங்கள் நடந்தன. தமிழ் இணையத் தளங்களை உருவாக்குவதில் தேர்ச்சிபெற்றிருந்த நமது குழு விற்பன்னர், வெண்பா வேந்தர் கிருபா பெரிதும் முயன்று இந்தத் தளத்தை உருவாக்கினார். அவர் நினைத்தால் எதையும் முடித்துவிடும் ஆற்றலாளர். ஆனால் அத்தனை எளிதில் ஒன்றை நினைத்துவிடமாட்டார் ! அதுதான் பிரச்சனை.

தளத்தின் முதல் இதழை இப்போது பின் நோக்கும்போது நான்கு ஆண்டுகளில் அதன் கட்டமைப்பை அதிகம் மாற்றவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லையென்பது புரிகிறது.

வரலாறு டாட் காமிற்காக "தலைவர்", "உபதலைவர்", "செயற்குழு உறுப்பினர்" என்று பல்வேறு "பதவிகளை" உருவாக்கலாம் என்று நாங்கள் கூறியபோது அதனை கடுமையாக மறுத்தார் கலைக்கோவன். "நல்லவற்றை பதவிகள் இல்லாமலே செய்யமுடியும் - பதவி என்று வந்துவிட்டால் நான் பெரியவனா நீ பெரியவனா என்னும் எண்ணம் ஏற்பட்டுவிடும் !" என்று எச்சரித்தார். அதன் தாக்கம் எங்களுக்குப் புரியவில்லையென்றாலும் அவரை ஒருபோதும் நாங்கள் மறுத்துப் பேசியதில்லையென்பதால் உடனே ஏற்றுக்கொண்டோம்.

நாட்கள் செல்லச் செல்ல - வரலாறு டாட் காம் வளர வளரத்தான் - அவர் சொன்னதன் முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டோம். எங்கள் குழுவில் "தலைமை" உண்டே தவிர "தலைவர்" கிடையாது. "செயற்குழு" உண்டு - ஆனால் "செயற்குழு உறுப்பினர்" கிடையாது. அதாவது கடமைகள் மட்டுமே உண்டு - ஆனால் கடமைக்குரிய உரிமைகளை குறிப்பிட்டவருக்கென்று நாங்கள் ஒதுக்கிவிடவில்லை. நேரம் காலம் கருதி ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் கடமை ஏற்போம். இதனால்தான் அரசியல் சிக்கல்கள் எதுவுமின்றி இன்றளவும் இதனை நடத்த முடிகிறது.

முதல் சந்திப்புக்களிலேயே வரலாற்றியலில் ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் ஈடுபடும் அவசியத்தை கலைக்கோவன் விளக்கியிருந்ததால் தலைக்கு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். உருப்படியாக கட்டுமானவியல், கல்வெட்டியல், சிற்பவியல் என்று எந்தத் துறையையும் தேர்ந்தெடுக்காமல் வரலாற்றின் துணைத்துறைகளுள் ஒன்றான "சரித்திரக் கதையியல்" என்னும் துறையை நான் வசதியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். பின்னால் எவராவது "சரித்திரம் என்ற பெயரில் கதை விடுகிறான் பார் !" என்று சொல்லமுடியாதல்லவா ? அதனால்தான் !

எனது ஆரம்பகாலக் கதைகளை கலைக்கோவன் ஊன்றிப்படித்துக் கருத்துக்கள் பறிமாறிக்கொண்டிருந்தார். "இராஜகேசரி" அவரால் விரும்பிப் படிக்கப்பட்டது. பின் ஒரு கட்டத்தில் நானும் என் கதைகளும் ஒருக்காலும் உருப்படமாட்டோம் எனும் எண்ணம் ஏற்பட்டதாலோ என்னவோ கதைகள் பற்றிய கருத்துக்கள் பறிமாறிக்கொள்வதைக் குறைத்துக்கொண்டார். குறிப்பாக "பைசாச"த்தின் முதல் ஆறு அத்தியாயங்கள் அவரிடம் வகையாக வாங்கிக்கட்டிக்கொண்டன. அவற்றுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் !


***********************************************************************************************


திரு கலைக்கோவனைப் போன்றதொரு ஆசிரியரிடம் மாணவ மாணவியராய் இருப்பது மிகக் கடினம். பலரும் பல காலகட்டங்களில் அவரிடம் மாணவராக முயன்று பின்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் "விட்டால் போதும் !" என்று ஓட்டம் பிடித்திருப்பார்களென்று நினைக்கிறேன்.

அவர் தனது மாணவர்களிடம் உண்மையான உழைப்பையும் கடுமையான ஈடுபாட்டையும் செய்நேர்த்தியையும் எதிர்பார்க்கிறார். இவையெல்லாம் காணப்படாவிட்டால் அவரது விமர்சனங்கள் கூரிய அம்புபோலப் பாயும். இதற்கு பயந்துகொண்டே நானும் சீதாராமனும் புள்ளமங்கை ஆய்வில் அவரை மிகக் குறைந்த அளவிற்கே தொந்தரவு செய்தோம். தரவுகள் நிறையத் திரட்டிவிட்டாலும் அதனை உரிய முறையில் தொகுக்காமல் / ஆராயாமல் அவரிடம் போய் நிற்பதென்பது அறிவார்ந்த செயலாகத் தெரியவில்லை. அதனால் தரவுகளை முறையாக வகுத்துக்கொண்டு மாதம் ஒரு கட்டுரை (ஆமை வேகத்தில்) வடித்து அதன் பிறகே அவருடைய பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம்.

அனுப்பி வைக்கும் கட்டுரைகளை அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் முழுமையாகப் படித்துவிடுவார் அவர். எத்தனை ஆழமாகப் படித்திருக்கிறார் என்பது அவர் சொல்லும் திருத்தங்களிலிருந்து புரியும். ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் திருத்தங்கள் சொல்லும் அழகை அனுபவிப்பதற்காகவே இன்னும் பல திருக்கோயில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதவேண்டுமென்று தோன்றும் ! புள்ளமங்கை திருக்கோயிலின் கட்டுமான அழகைப் பன்மடங்கு உயர்த்திக்காட்டும் "நிஷ்கராந்த பஞ்சரம்" என்னும் அரிய அமைப்பை தொலைபேசியில் அவர் விளக்கிய விதத்தை உன்னிடம் எவ்வாறு வர்ணிப்பதென்று தெரியவில்லை.முனைவர் மு.நளினி


அவரது மாணவ மாணவியரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு காலத்தில் அவரது மாணவியாய் இருந்து இன்று பேராசிரியையாய் மலர்ந்திருக்கும் முனைவர் நளினியைப்பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. திரு கலைக்கோவன் அவர்களின் ஆய்வுகளில் பக்க பலமாக நிற்பவர் அவர் (பக்கத் தொந்தரவுகளாக நிற்பவர்கள் நாங்கள்). அதிகம் பேசாவிட்டாலும் எங்களது நகைச்சுவைத் துணுக்குகளைப் பெரிதும் இரசிப்பார். சிரிப்பார். லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒரே சுவரில் அருகருகே அமைந்திருந்த நிருபதுங்க பல்லவர்(?) - வரகுண பாண்டியர் - ஆதித்த சோழர் ஆகிய மூவரின் கல்வெட்டுக்களையும் அவர் அனாயசமாக இனங்கண்டு படித்த காட்சி மறக்க முடியாமல் மனதில் பதிந்துவிட்டது. மைய ஆய்வாளர் முனைவர் அகிலாவும் எங்களின் மீது பேரன்பு கொண்டவர்கள். அவருடன் அதிகப் பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வாய்க்காதது ஒரு குறையே.முனைவர் அர.அகிலாவுடன் மாமல்லபுரத்தில்***********************************************************************************************


வரலாறு டாட் காம் சுற்றம் ஒரு அன்பு வட்டம் வாருணி. அதில் வரலாற்றை நேசிக்கும் நண்பர்கள் நிறைய உண்டு.

அந்தச் சுற்றத்தில் குறிப்பிடப்படவேண்டிய முதல் நபர் எங்களின் பெரியண்ணன் திரு சுந்தர் பரத்வாஜ். சென்னையில் கட்டுமானத் துறையில் பல சாதனைகளைச் செய்வித்தவர். வரலாற்றின் மீதும் குறிப்பாக இராஜராஜரின் மீதும் அளவுகடந்த பிரேமையில் ஆழ்ந்து போனவர். தமிழ்நாட்டின் வரலாய்வாற்றளர் பலருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஆரம்ப காலகட்டங்களில் எங்களைப் பல்வேறு அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்திவைத்து ஆனந்தப்பட்டவர். இவரது அறிமுகத்தினால் குழுவிற்கு நெருக்கமான ஆய்வாளர்களுள் முனைவர் குடவாயில் அவர்களும் முனைவர் இராஜவேலு அவர்களும் முக்கியமானவர்கள்.இராஜராஜேஸ்வரத்தில் முனைவரின் பேச்சில் இலயித்து நிற்கும் சுந்தர்


திரு சுந்தர் கலைக்கோவன் அவர்களின் ஆய்வைப் பற்றிப் பேசுவதை நீ எப்போதாவது கேட்க வேண்டும். கலைக்கோவன் வழி வரும் கலை வரலாற்றை "சுத்திகரிக்கப்பட்ட வரலாறு" என்னும் பெயரால் குறிப்பிடுவார் அவர். யூகங்கள் ஹேஷ்யங்கள் எதுவுமின்றி முற்றிலும் வலுவான ஆதாரங்களின் பின்னணியில் சுட்டப்படுவதுதான் வரலாறு என்பதை அது குறிக்கும். பொன்னியின் செல்வன் குழுவில் அவர் இணைந்த நாள் முதல் இந்தக் கணம் வரை தன்னுடைய நேரத்தையும் பணத்தையும் மகிழ்வுடன் ஈன்று அதில் இன்பமடையும் அரிய மனிதர் சுந்தர். அவரது பொருளுதவியினால்தான் வலஞ்சுழி வளாகம் வரலாற்றாய்வுக்கு உட்பட்டது. அந்த ஆய்வில் வரலாறு டாட் காம் நண்பர்கள் அனைவரும்(நான் நீங்கலாக) ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். பல மாதங்களுக்கு விரிந்த அந்த ஆய்வில் என்னால் துளியேனும் பங்குகொள்ளாவியலாமல் போய்விட்டது பெருங்குறையே.

வலஞ்சுழி கொடுத்த கொடைகளுள் தலையாய கொடை திரு. பால. பத்மனாபன். அன்பே வடிவானவர். உரத்துப் பேசத் தெரியாதவர் - அல்லது அதனை விரும்பாதவர். வலது கை புரியும் உதவி இடது கைக்குத் தெரியக் கூடாது எனும் கொள்கையில் அவருக்குப் பலமான ஈடுபாடு உண்டு. அவரது அன்பில் அடிக்கடி நனையும் பேறு எங்கள் அனைவருக்கும் பலமுறை கிட்டியுள்ளது.

திரு கலைக்கோவன் அவர்களின் இளவல் மா.ரா.அரசு எங்கள் குழுவின் மீது தனித்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர். அவரிடம் பேசிக்கொண்டிருப்பதென்பது ஒரு சுகானுபவம். மிகுந்த மரியாதையுடன்தான் எவரையும் குறிப்பிடுவார். தஞ்சை இராஜராஜீஸ்வரத்தில் நிகழ்ந்த முப்பெரும் விழாவில் அவரது பேச்சு முத்தாய்ப்பாக அமைந்தது. விச்ராந்தி அனுபவத்தைப் பற்றி இராம் எழுதியிருந்ததைச் சிலாகித்துப் பேசினார். சிற்பிகள் எத்தனை ஈடுபாட்டுடன் அந்தக்காலத்தில் பணியில் ஈடுபட்டார்கள் என்பதை இலாவண்யாவின் கட்டுரை அருமையாக விளக்கியதாகக் குறிப்பிட்டார். அது உண்மையில் என்னுடைய இராஜசிம்மன் இரதம் கட்டுரை ! எனக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டை அன்று இலாவண்யா தட்டிப் பறித்துக்கொண்டார். வரலாறு டாட் காம் திரு அரசு அவர்களின் எழுத்துக்களை ஏந்தும் பெருமையை இன்னும் பெறாவிடினும் எங்கள் சுற்றத்தில் அவரும் ஒருவரே.

சுற்றத்தில் இணைந்துள்ள புதிய தோழிகள் ரிஷியாவும் சுமிதாவும். இருவரின் எழுத்துக்களையும் படித்தாலே அவர்களின் மன அகலங்களும் ஆழங்களும் நன்கு விளங்கும்.

இவ்வாறு நான் குறிப்பிட்டவர்களைத் தவிரக் குறிப்பிடப்படாமல் போனவர் பலர் என்பதை உணர்கிறேன். பொன்னியின் செல்வன் இணையக்குழுவினரில் துவங்கி என்னுடைய அன்புத் தந்தையார், திருப்பூர் ஜெகதீஷ் வரையிலான வரலாறு டாட் காமின் வாசகர் வட்டமும் அதன் சுற்றமே. இவர்களின் அன்பான அணைப்பும் பரிவான பின்னூட்டங்களும் இல்லையென்றால் வரலாறு டாட் காம் இல்லை.


***********************************************************************************************


ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் நானும் சுந்தரும் கலைக்கோவன் மற்றும் நளினி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

"தலைக்கு ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு நம்மால் திரட்ட முடியுமானால் நல்லது. அதனை வைத்துக்கொண்டு சில நல்ல நூல்களைப் பதிப்பித்து நூலகங்களுக்குக் கொடுக்கலாம் - இரண்டு ஆண்டுகளில் சுழற்சி நிலைபெற்றுவிடுவதற்கு வாய்ப்புண்டு!" என்றார். ஆயிரம் ரூபாய்த் திட்டம் பிறந்தது.

அத்திட்டத்தின் கீழ் முதல் வெளியீடாக வரும் நூல் தன்னுடைய மிகச் சிறந்த படைப்பாக இருக்கவேண்டுமென்று அவர் நினைத்துவிட்டார் போலும். "பெண் தெய்வ வழிபாடு" புத்தகம் அவர் எண்ணம்போலவே மலர்ந்தது. அவரது அனைத்துப் படைப்புக்களுமே சிறப்பாக இருப்பினும் "பெண் தெய்வ வழிபாடு" அவரது படைப்புக்களுள் ஒரு மகுடமாக ஜொலிப்பதைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.முப்பெரும் விழாவில் பெண் தெய்வ வழிபாடு வெளியீடு (வலப்பக்க ஓரத்தில் முனைவர் இராஜவேலு)***********************************************************************************************


வரலாறு டாட் காமில் இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் தயாரித்த போது முதலில் "நக்கன் வீரசோழி" என்கிற தலைப்பில் கல்வெட்டுக் கதையொன்று மட்டும் எழுதிவிட்டு நழுவிவிடலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். நண்பர்கள் அனைவரும் தலைக்கொருவராக நல்ல நல்ல தலைப்புக்களில் அந்தப் பிரம்மாண்டமான திருக்கோயிலை ஆராயத்துவங்கியதும் எனக்கும் சற்று நப்பாசை தட்டியது. பின் அந்த நப்பாசை பேராசையாக மாறியது. எனக்கிருந்த அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு Saantharam Icons of Raajarajeswaram என்கிற தலைப்பில் கட்டுரையையும் எழுதி முடித்துவிட்டேன் ! பெரிய கோயிலின் சாந்தாரச் சுற்றில் இருக்கும் மூன்று பிரம்மாண்டமான மூர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயலும் கட்டுரை அது.

கட்டுரையைக் கலைக்கோவன் படித்தார். "முதல் கட்டுரையிலேயே மிகப் பெரிய விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்களே !" என்று வியந்தார். பல திருத்தங்கள் சொல்லிக்கொண்டே வந்தவர் "அகோர சிவ மூர்த்தி" என்று குறிப்பிடப்படும் ஒரு திருவுருவத்தைப் பற்றி எழுதியிருந்ததை அடிக்கோடிட்டார்.

"இந்தத் திருவுருவம் மிக உக்கிரமாக இருப்பதாக எழுதியிருக்கிறீர்களே, உறுதியாகத் தெரியுமா ?" என்று வினவினார்.

ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் "நிச்சயமாகத் தெரியும் சார் !" என்று அடித்துச் சென்னேன். அடிவயிற்றில் பந்து பிசைந்தது.

அடுத்த சில நாட்கள் கழித்து "கூ.ரா.சீனிவாசன் நினைவு அறக்கட்டளைப் பொழிவு" முடிந்தவுடன் கலைக்கோவனுடன் முனைவர் இராஜவேலுடனும் பொன்னியின் செல்வன் நண்பர்களும் இதரப் பெருமக்களும் சூழ்ந்துகொள்ள, கூட்டமாக பெரியகோயிலை வலம் வந்தோம்.

சாந்தாரச் சுற்றுக்குள் நுழைந்ததும் அனைவரையும்போல் நானும் சோழர்கால ஓவியங்களில் ஆழ்ந்துவிட்டேன்.

சட்டென்று ஒரு கை அன்பாக என்னைப் பிடித்து ஒரு ஓரமாக நிறுத்தியது. அது கலைக்கோவன் அவர்கள்தான்.

"பாருங்கள் !" என்றார். அவர் காண்பித்த திசையில் அகோர மூர்த்தி என்றழைக்கப்படும் அந்த பிரம்மாண்டமான மூர்த்தம் தெரிந்தது.

பார்த்தேன்.

அந்த மூர்த்தியின் கண்கள் மிக மிக உக்கிரமானவைதான். கோபம் கொப்பளிப்பவைதான். ஆனால் திருவாயில் மட்டும் ஒரு அசாத்தியமான புன்னகை ! அந்தக் கண்கள் புன்னகையைக் கட்டுப்படுத்துகின்றனவா ? அல்லது அந்தப் புன்னகை கண்களின் உக்கிரத்தைக் குறைக்கிறதா ? இதனை எந்த உணர்ச்சியென்று வகைப்படுத்துவது ??

பேசாமல் தலையைக் குனிந்துகொண்டேன். அவர் சென்றுவிட்டார்.

பெரியகோயில் என்னும் பிரம்மாண்டம் எத்தனையெத்தனை அற்புதங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்பதை அன்று மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன். இனியாவது சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.ஓயாத உழைப்பும் நெருங்கிய நட்பு அருகிலிருந்தால் சற்றே ஓய்வு பெறும்....***********************************************************************************************


இராசமாணிக்கனார் வரலாற்று மைய வெளியீடான வரலாறு ஆண்டு இதழ்களின் கட்டுரைகளையும் (வரலாறு டாட் காம் கட்டுரைகள் அல்ல) வரலாற்றாய்வு நூல்களையும் புரிகிறதோ புரியவில்லையோ - ஒரு முறை படித்துவிடுவேன். பல இடங்கள் - குறிப்பாகக் கோயில் கட்டுமானத்தைப் பற்றிப் பேசும் பகுதிகள் புரியாது. புரியாத பகுதிகளை விட்டுவிட்டுப் புரிந்தவற்றைப் படிப்பேன்.

நாட்கள் செல்லச் செல்ல ...கொஞ்சம் கொஞ்சமாக கோயில் கட்டுமானம் புரியத்துவங்க..... அவர் எழுத்துக்களும் புதிய வெளிச்சம் பெறத்துவங்கின. முன்பு புரியாமல் படித்த அவரது "பழுவூர் - அரசர்கள் கோயில்கள் சமுதாயம்" என்ற புத்தகத்தை சென்ற ஆண்டு மீள்வாசிப்பு செய்ததில் அநேகமாக எல்லாப் பக்கங்களுமே தெளிவாயின. நாலங்க சாலைக்கும் ஆறங்க சாலைக்கும் வித்தியாசம் தெரிந்தது. அட, பழுவூரில் மட்டுமல்லாமல் திருவேதிக்குடியிலும் ஆறங்கச் சாலையா ? என்று வியப்பேற்பட்டது. இரண்டு கோயில்களுக்குமே நேரில் சென்றும் இந்த வித்தியாசத்தை நம்மால் உணரமுடியவில்லையே என்னும் எண்ணம் அந்த வியப்பை அதிகப்படுத்தியது. இந்த வியப்பும் ஆச்சரியமும்தான் வரலாற்றாய்வு கொடுக்கும் மிகப்பெரிய சந்தோஷங்கள். இந்தப் புத்தகம் கோயில் கட்டிடக்கலையில் முதல் அடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு முக்கியமான புத்தகம். இலக்கிய பீடப் பதிப்பு.


***********************************************************************************************


பல வருடங்களுக்கு முன் வெளியான வரலாறு ஆண்டிதழ் ஒன்றில் "திரும்பிப்பார்க்கிறோம்" என்னும் தொடர் வெளியாகப்போவதாக அறிவிப்புச் செய்திருந்தார். ஆனால் அதற்கடுத்த இதழ்களில் அது வெளியாகவில்லை.

"ஏன் அந்தத் தொடரை எழுதவில்லை ?" என்று மின் மடலில் கேட்டிருந்தேன்.

"பரவாயில்லையே - வரலாறு ஆய்விதழை ஊன்றிப் படிக்கிறீர்களே !" என்று வியந்தார். மேலும் "எழுதுவோம் - நமது அனுபவங்கள் அடுத்தவர்களுக்குப் படிப்பினையாகட்டும் !" என்றும் பதிலளித்திருந்தார்.

இந்த உரையாடல் முடிந்து பல மாதங்கள் கழிந்துவிட்டன. அதனை மறந்துவிட்டார் என்று நினைத்தேன்.

வலஞ்சுழி ஆய்வுக் கட்டுரைகள் முடிந்ததும் திரும்பிப் பார்க்கிறேன் வரலாறு டாட்காமில் "கலைக்கோவன் பக்கமாக" அந்த அனுபவத்தொடர் மலரத் துவங்கியது ! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. புதிய இதழ் தயாராகிக்கொண்டிருக்கும்போதே அனைத்து வரலாறு டாட் காம் கட்டுரைகளையும் படித்துவிடுவேன் - அப்படிப் படிக்கும் முதல் கட்டுரையாக திரும்பிப் பார்க்கிறேன் எப்போதும் இருக்கும்.


***********************************************************************************************


சொந்த நேரத்தையும் கடுமையான உழைப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈன்றிருக்கும் இந்த அறிஞருக்கு நாடு செய்தது என்ன? பெரிதாக ஒன்றுமேயில்லை. என்ன என்ன நிகழ்ச்சிகளையோ ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஒரே ஒரு முறைதான் இவரை ஏறெடுத்துப் பார்த்தது. அதற்காக சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

எந்த அரசாங்கமும் அமைப்பும் இந்த அறிஞரை இதுவரை சரிவர ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இன்று வரை இவரது ஆய்வுகளும் நூல்வெளியீடுகளும் தனிப்பட்ட உள்ளங்களின் பொருளுதவியால்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறனவென்பதை நினைத்து பெருமைப்படுவதா ? அல்லது இந்த உதவிகளை செய்யத்தவறிய அமைப்புக்களையும் அரசாங்கத்தையும் பார்த்து வெட்கப்படுவதா ?


***********************************************************************************************


இன்னும் எத்தனையோ எழுத நினைத்தாலும் இத்துடன் இந்த நீண்ட கட்டுரையை முடித்துக்கொள்ள நினைக்கிறேன். அடுத்ததாக அவருக்கு எண்பது ஆண்டுகள் நிறையும்பொழுது எழுதுவதற்கென்று சில செய்திகளை விட்டுவைக்க வேண்டுமல்லவா ? அதற்காகத்தான்.

காதல் மட்டுமல்ல - வாழ்வின் மற்ற ஆச்சரியங்களும்கூட இனியவைதான் வாருணி.

பழமை நன்று. புதிய பரிமாணங்களில் கண்டறியப்படும் பழமை - இனிது.

வரலாறு நன்று. வரலாற்றாய்வு இனிது. வரலாற்றை நேசிக்கும் உள்ளங்கள் இனியன.

அத்தகைய நேசமிகு உள்ளங்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் "கலை" உணர்வு மிக மிக இனிது.

மிக்க அன்புடன்
கோகுல் சேஷாத்ரி
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.