http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
ச. கமலக்கண்ணன்

நேற்று நடந்தாற்போல இருந்தது. மின்னஞ்சல்களைத் திருப்பிப் பார்த்தால், ஆண்டுகள் ஐந்துக்குமேல் ஓடியிருந்தன. ஐந்தரை ஆண்டு மடல்களை மனைவி மக்களின் புலம்பலையும் பொருட்படுத்தாது வார இறுதி இரண்டு நாட்கள் முழுவதும் வாசித்து முடித்தபோது மனமெல்லாம் ஒரே கொசுவர்த்தி மேல் கொசுவர்த்தியாய்ப் பயண நினைவுகளால் நிரம்பி வழிந்தது. அவற்றை முழுவதுமாக இங்கே கொட்டித் தீர்த்திருக்கிறேன். வாசிப்பதற்குச் சற்று அசௌகரியமாக இருக்கலாம். இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். வரலாறு.காமின் வரலாற்றில் ஒருபகுதி எழுத்தில் பதிவு செய்யப்பட நீங்களும் உதவியிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். முடிந்த அளவு சுருக்கமாகக் கூற முயற்சி செய்கிறேன். இக்கட்டுரையின் சில நிகழ்வுகள் சில வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரியாத செய்தி ஏதாவது ஒன்று நிச்சயம் இதில் ஒளிந்திருக்கும். எனவே, எங்களை அறிந்தவர், அறியாதவர் என இரு சாராரும் இக்கட்டுரையைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. இனி உங்கள் பாடு, கட்டுரையின் பாடு.

2003 ஜனவரியில் பொன்னியின் செல்வன் குழுவின் முதல் யாத்திரையின்போது கல்கி ஆசிரியர் சீதாரவி அவர்கள் மூலமாக அறிமுகமாகியிருந்த திரு. தேவமணி ரஃபேல் அவர்களை ஜனவரி 27ம் தேதி சென்னை அண்ணாநகரிலுள்ள அவரது இல்லத்தில் இரவு 7 மணியளவில் நானும் கல்வெட்டுக்காரிகை இலாவண்யாவும் அவரது சகோதரி அனுராதாவும் சந்தித்துப் பயணத்திட்டம் தயாரிக்க உதவி கேட்டோம். தஞ்சைப் பகுதியின் சில இடங்களைப் பற்றிய விளக்கங்களைக் கூறியவர், 'திருச்சியில் டாக்டர்.இரா.கலைக்கோவன் என்ற வரலாற்று ஆய்வாளர் இருக்கிறார். அவர் நீங்கள் கேட்கும் இடங்களுக்கெல்லாம் ஆய்வுகளுக்காகப் பலமுறை சென்று வந்துள்ளார். அவரது தொலைபேசி எண் தருகிறேன். அவரிடம் கேட்டுப்பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, உடனே டாக்டருக்குத் தொலைபேசி எங்களை அறிமுகப்படுத்திவைத்தார். 'இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசி செய்யுங்கள். அதற்குள் ஒரு மாதிரித் திட்டம் தயாரித்து வைக்கிறேன்.' என்று கூறியவர், அத்தோடு நில்லாமல், 'எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கும் இத்தகைய இடங்களுக்குச் சென்றுவந்த அனுபவம் உண்டு. அவர் தற்போது சென்னையில் இருப்பதால் அவரிடம் பேசிப்பாருங்கள்' என்று பாலகுமாரனின் தொலைபேசி எண்ணைத் தந்தார்.

பாலகுமாரனுடன் பேசியபோது, எங்கள் ஆர்வத்தைப் பாராட்டி, உடனே வருமாறு சொன்னார். இரவு 10 மணிக்கு அவரது இல்லத்தை அடைந்தாலும், பொறுமையாக அந்த இடங்களைப் பற்றியெல்லாம் ஒலிப்பதிவு செய்துகொடுத்ததோடு மட்டுமல்லாமல், திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். ஜனவரி 28ம் தேதி அவரைத் தொடர்புகொண்டு, நாங்கள் மூவரும் அன்றே அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். ஒருமணி நேரத்தில் பயணத்திட்டம் தயாரானது. கும்பகோணத்திலிருக்கும் திரு.சீதாராமன் அவர்களின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துத் தங்கும் விடுதி ஏற்பாடு செய்துதருமாறு கூறினார். இப்படியே வரலாற்றை நேசிக்கும் உள்ளங்களுடன் ஓரிரு நாட்களில் ஒரு தொடர்புவலை ஏற்பட்டுவிட்டது. இதன் முக்கியத்துவம் அன்று எங்கள் மனதில் உறைக்கவில்லை. அப்பொழுதெல்லாம் எங்கள் மனதில் நிறைந்திருந்தவர்கள் நந்தினியும் ஆதித்தகரிகாலரும்தான். ஜனவரி 29 அன்று மீண்டும் டாக்டரைத் தொடர்புகொண்டபோது, சொன்னபடியே திட்டம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார். டாக்டரும் சுந்தரும் தந்த திட்டங்களை நானும் இலாவண்யாவும் அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் நூலகத்தில் அமர்ந்து தமிழ்நாடு வரைபடத்தின் உதவியுடன் இணைத்துப் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி, சீதாராமனின் உதவியுடன் பயணத்தையும் வெற்றிகரமாக முடித்தோம்.

அதன்பிறகு பயணத்தில் மீதியான தொகையில் திரு.தேவமணி ரஃபேல் அவர்களின் 'தமிழ்நாட்டுக் கலைக்கோயில்கள்' புத்தகத்தை சுந்தர் பரத்வாஜுக்கு அன்பளிக்க முடிவுசெய்து அவரது இல்லம் சென்றோம். அப்போதுதான் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. வரலாறு ஆய்விதழ் ஒன்றையும் தந்து வாசித்துப் பார்க்குமாறு சொன்னார். அதை முதல்முறை படித்தபோது ஒன்றுமே புரியவில்லை. வரலாற்று நூல் என்றால், 'வந்தார்கள் வென்றார்கள்' போலக் கற்பனை செய்து வைத்திருந்தோம். வரலாறு ஆய்விதழ் அதைப்போல அவ்வளவு சுவாரசியமாக இல்லையே என்று எண்ணினோம். ஆனால், கள ஆய்வுகளுக்குச் சென்று கல்வெட்டுகளையும் கட்டடக்கலையையும் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதுதான், இரண்டுக்கும் மலையளவு வேறுபாடு இருந்ததை உணர்ந்தோம். மற்ற ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தபோதுதான் டாக்டரின் கட்டுரைகள் எவ்வளவு தரமானவை என்பது தெரியவந்தது.

பிறகு பத்திரிகையாளர் மாலன் அவர்களின் பரிந்துரையின்பேரில் சன் டி.வியில் முதல்யாத்திரையைப் பற்றிய ஒரு நேர்காணல் ஒளிபரப்பானது. அதன் ஒளிப்பதிவு முடிந்ததும் இரண்டாம் யாத்திரையைப் பற்றி விளையாட்டாய்ப் பேசிக்கொண்டோம். அது சரித்திரம் பழகும் வியாதியைத் தீவிரமாக்கும் என்று அப்போது தோன்றவில்லை. அது இல்லாவிட்டால், இந்நேரம் இக்கட்டுரையை எழுதுவதற்குப் பதிலாக ஏதாவதொரு சினிமாப் பத்திரிகையை வாசித்துக்கொண்டோ அல்லது தமிழ்த்திரைப்படம் ஒன்றிலோ நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்துக் கொண்டிருக்கலாம். விதி யாரை விட்டது? பொ.செ குழுவில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த புதுக்கோட்டை சுதர்சனம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் திரு.சுவாமிநாதன் அவர்கள் புதுக்கோட்டைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவே, நார்த்தாமலை, சித்தன்னவாசல், குடுமியான்மலை, கொடும்பாளூர் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுத்தோம். முதல்யாத்திரையின் வீடியோ சி.டி விற்ற தொகையை டாக்டரின் மையத்திற்கு அன்பளிக்க முடிவு செய்திருந்ததால், சென்னைக்குத் திரும்பும் வழியில் திருச்சியில் அவரைச் சந்திக்கலாம் என்று முடிவானது.

இதற்கிடையில், தமிழக வரலாற்றில் மேலும் தெளிவுபெறவும் நாவல்களிலிருந்து வரலாற்றைப் பிரித்தறியவும் சென்னையில் வரலாற்றறிஞர்கள் கூட்டம் ஒன்றை நடத்தலாம் என சுந்தர் பரத்வாஜ் கூற, பாலகுமாரனைத் துணையாகக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைத் துவக்கினோம். ஆனால் சில ஆய்வாளர்களின் நேரமின்மை காரணமாகத் தள்ளிப்போய்க்கொண்டே வந்தது. ஏப்ரல் 13ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் Early Tamil Epigraphy நூல் வெளியீட்டுவிழாவுக்காக டாக்டரும் பிற அறிஞர்களும் சென்னை வருகிறார்கள் என்பதை அறிந்ததும் விழாவுக்குச் செல்ல முடிவுசெய்தோம். விழாமேடையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அப்போது சுந்தரிடம் இவர்கள் யார் யார் என்று கேட்டோம். தனித்தனியாகக் கூறாமல், ஒரு சினிமா விழாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி போன்றோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தால் எப்படிச் சிறப்பானதாக இருக்குமோ அதுபோல் இவர்கள் அனைவரும் தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறையில் முக்கியமானவர்கள் என்று சுருங்கக்கூறி விளங்கவைத்தார். விழா முடிந்ததும் திரு. இரா.நாகசாமி அவர்களிடம் அடுத்த ஞாயிறன்று சந்திப்பதற்கான அனுமதி வாங்கிவிட்டு, டாக்டரிடம் நேரில் அறிமுகமானோம். யாத்திரை என்று தொலைபேசியில் சொன்னதும் வயதானவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன் என்று டாக்டர் கூறினார். பிறகு விடைபெற்றுக்கொண்டு சுந்தர் வீட்டில் சிறிதுநேரம் உரையாடிவிட்டுப் பிரிந்தோம்.

சென்றமுறையைப் போலல்லாமல் இரண்டாம் யாத்திரையின் வாகன நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்பி, நாங்கள் போகுமிடங்களைப் பற்றிய வரலாற்று நூல்களையும் உடன் கொண்டு சென்றோம். அவற்றைப் பெரும்பாலும் மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டியது கோகுலின் தந்தை திரு.சேஷாத்ரி அவர்கள்தான். சுதர்சனத்தில் அப்போது ஆரம்பித்திருந்த பழந்தமிழக மாதிரிக் கிராமம் பற்றிய சுவாமிநாதனின் உரையைக் கேட்டுவிட்டு, அடுத்தநாள் மாலை திருச்சி தில்லைநகரை நோக்கி விரைந்தோம். மாலை நான்கு மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு ஆறரை மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். முன்பே பொ.செ.குழு உறுப்பினர்களிடமிருந்து சேகரித்திருந்த கேள்விகளை ஒவ்வொன்றாய் வீச ஆரம்பித்தோம். டாக்டரும் சளைக்காமல் சிக்ஸர்களாக விளாசிவந்தார். அப்போதே ஏறக்குறைய முடிவு செய்து விட்டோம். எங்கள் வரலாற்று ஆட்டங்களின் துவக்க ஆட்டக்காரர் இவர்தான் என்று. அதுமட்டுமின்றி, எப்போது கேள்விப்பந்து வீசினாலும், அதை பவுண்டரிக்கு அனுப்ப டாக்டரும் ஃபுல்ஃபார்மில் இருக்கிறார். இதை நாங்கள் முழுமையாக உணர்ந்துகொண்டது அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான். சுவையான இரவு உணவுக்குப் பிறகு டாக்டரின் இல்லத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டு மலைக்கோட்டை விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தோம். தூங்கி நேரத்தைக் வீணாக்குவதற்குப் பதிலாகத் தமிழக வரலாறு பற்றியும் டாக்டரிடம் வாங்கியிருந்த வரலாறு ஆய்விதழ்களைப் பற்றியும் பேசிக்களிக்கலாம் என்று முடிவுசெய்தோம்.

சென்னை அருகே மாமண்டூர் என்ற இடத்தில் மகேந்திரர் குடைவரைகள் இருப்பதை அறிந்ததும், அடுத்தவாரமே அங்கு செல்வதெனத் தீர்மானித்தோம். மாமண்டூரைப்பற்றி ஒரே இதழில் இருவேறு கட்டுரைகள் வெளியாகியிருந்தன. ஜூன் இரண்டாவது வாரம் ஏறக்குறைய அதே குழு செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. மாமண்டூரை அடைந்ததும், அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் மகேந்திரர் குடைவரையைப் பற்றி விசாரித்தோம். அப்படியெல்லாம் எங்கள் ஊரில் ஏதுமில்லையே என்ற வழக்கமான பதில்தான் வந்தது. சரி, மகேந்திரருக்கும் இவருக்கும் வெகுதூரம் போலிருக்கிறது என்று நினைத்துவிட்டு, கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி அம்மன் கோயிலை விசாரித்தோம். இரண்டு கோயில்கள் இருக்கின்றன. எது வேண்டும் என்று எதிர்க்கேள்வி வந்தது. பிறகு ஒருவழியாகக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கோயிலை அடைந்தபிறகுதான் இரண்டும் வேறுவேறு மாமண்டூர் எனத் தெரியவந்தது. ஒருவருக்கொருவர் அசடு வழிந்துகொண்டே அங்கிருந்த கல்வெட்டைப் படித்துப் புகைப்படம் எடுத்தோம். நடப்பவை யாவும் நன்மைக்கே என்ற வாக்கின் பொருள் அன்று மீண்டும் ஒருமுறை புரிந்தது. வரலாற்றில் வெளியாகியிருந்த கல்வெட்டு வரிகள் 'அந்தராயமும்' என்று எழுதப்பட்டிருந்தன. ஆனால் கல்வெட்டில் 'ஆதாயமும்' என்று இருந்தது. அக்கல்லைச் சுத்தமாக நீரூற்றிக் கழுவி, புகைப்படத்தை அடுத்தமுறை டாக்டரைச் சந்திக்கும்போது காட்டினோம். அவரும் தவறாக இருந்ததை ஒப்புக்கொண்டார். இத்தனை சின்னஞ் சிறுவர்கள், பலகாலம் வரலாற்றாய்வில் ஈடுபட்டுவரும் என் கண்டுபிடிப்பில் குற்றம் காண்பதா என்ற கவுரவம் அவரைத் தடுக்கவில்லை. மாறாக, யார் கண்டுபிடித்தாலும் தப்பு தப்புதானே தம்பி? என்று பாராட்டினார்.

சில ஆய்வாளர்களின் நூல்களில் பிழையான ஒரு தகவல் இருப்பதை அவ்வாய்வாளரிடம் சுட்டிக்காட்டினால், தான் எழுதியது சரியென்று சாதித்தோ அல்லது தொல்லியல் முடிவுகள் மாறக்கூடியவைதானே என்று மழுப்பியோ வந்த ஆய்வாளர்களின் மத்தியில் டாக்டரின் நேர்மைத்திறம் வியக்கவைத்தது. அவரது வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையை இன்றுவரை காப்பாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, கேள்வி கேட்பவர்களைக் குறைவாக எடைபோட்டு, நாம் சொன்னால் இவர்கள் என்ன சரிபார்க்கவா போகிறார்கள் என்று எண்ணி ஏதாவதொரு பதிலைக் கூறியவர்களையும், அந்த நூலில் இருக்கிறது, இந்த நூலில் இருக்கிறது என்று இல்லாத நூல்களைக் குறிப்பிட்டுச் சொன்னவர்களையும், ஆதாரங்களை இதோ தருகிறேன், அதோ காட்டுகிறேன் என்று இழுத்தடித்தவர்களையும் கண்ட எங்களுக்கு, தெரியாத கேள்விகளுக்குத் தெரியாது என்று பதிலளிக்கும் நேர்மையும் எங்களைக் கவர்ந்தது. இந்த ஐந்தாண்டுகளில் நாங்கள் சந்தித்த ஆய்வாளர்களில், 'தெரியாது' என்ற பதிலைக் கூறியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்பண்பு டாக்டரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

அடுத்து எங்கள் பிணைப்பு இறுகிய நாள் 23-8-2003. சில முயற்சிகளைப் பெரிய அளவில் செய்ய முயற்சிக்கும்போது பணத்தைக் கையாண்டாக வேண்டிய நிலைமை ஏற்படும். பொ.செ.குழுவில் இதுபோல் பணத்தைக் கையாளவேண்டிய சில முயற்சிகள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அப்போது இத்தகைய முயற்சிகளுக்குத் தோள்கொடுக்க முன்வந்து எங்களுடன் நெருக்கமான லலிதாராம் அமெரிக்காவிலிருந்தும் கோகுல் சிங்கப்பூரிலிருந்தும் இந்தியா வரவிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்கள். வரும்போது ஏதாவது பயணம் மேற்கொள்ளலாமா என்று மின்னஞ்சலில் ஆலோசித்து, முதல்நாள் திருச்சி சென்று டாக்டரைச் சந்தித்துச் சில கேள்விகள் கேட்டுவிட்டு, அடுத்தநாள் எங்கு செல்வதென்று அவரையே கேட்கலாம் என்று நினைத்திருந்தோம். வெள்ளி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, சனி காலை நேராக ஸ்ரீரங்கம் சென்று கோகுலை அழைத்துக்கொண்டு அப்படியே புதுக்கோட்டை சென்று பேராசிரியர் சுவாமிநாதன் அவர்களைச் சந்திப்பதாகத் திட்டம். திருச்சி எல்லையை விட்டு வெளியேறி, வண்டி கீரனூரை அடைந்ததும், நார்த்தாமலை இங்குதான் எங்கோ இருக்கிறது என்ற நினைவு வந்தது. வந்த நினைவு கலைவதற்குள், இப்போது அங்கு சென்றால் என்ன என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டதுதான் தாமதம். ஒரு டீக்கடையில் வழியை விசாரித்துக்கொண்டு, மொட்டைப்பாறைகளின் மீது அந்த இளங்காலை வெயிலில் ஏற ஆரம்பித்தோம். புதுக்கோட்டையில் சுவாமிநாதன் அவர்கள் காத்துக்கொண்டு இருப்பாரே என்ற எண்ணமே தோன்றவில்லை.

பிறகு அவரது இல்லத்திலேயே காலை உணவை முடித்துக்கொண்டு, பழந்தமிழக மாதிரிக் கிராமத்தின் ஆரம்பகட்டப் பணிகளைக் காண அழைத்துச் சென்றார். அதை முடித்துவிட்டு மாலை நான்கு மணியளவில் டாக்டரின் இல்லத்தை அடைந்தோம். முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், முனைவர்கள் நளினியும் அகிலாவும் வந்திருந்தனர். ஐந்து மணிக்கு டாக்டர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். எனவே, ஒரு மணிநேரத்தில் ஆட்டத்தை முடிக்கவேண்டி, பந்துகளைக் குறைத்துக்கொண்டு விரைவாக வீச ஆரம்பித்தோம். ஒருவேளை அன்று பந்துகள் அமுதசுரபியிலிருந்து வந்தனவோ என்னவோ, புதிது புதிதாகப் பிறந்து கொண்டே இருந்தன. மணி ஐந்தாகியது. மருத்துவமனைக்குத் தொலைபேசி செய்து, ஒருமணி நேரம் தாமதமாக வருவதாகச் சொன்னார். அப்பாடா! இன்னும் ஒரு மணிநேரம் கிடைத்துவிட்டது என்றெண்ணி, அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கினோம். மணி ஆறானது. மீண்டும் அதே தொலைபேசியில் அதே உதவியாளரிடம் அதே தகவல். அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமானது. கடிகாரம் ஏழைத் தொட்டது. மீண்டும் தொலைபேசி செய்தபோது, இன்னும் ஒரு மணிநேரம் தாமதமென்றால், எட்டு மணிக்கு நீங்கள் வரவேண்டியதே இல்லை. எனக்கே பூட்டத் தெரியும் என்று உதவியாளரிடமிருந்து பதில் வந்தது. இடையில் சுந்தர் திருச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே, மருத்துவமனைக்கு அன்று விடுமுறை விடப்பட்டது.

கோகுல் இதைப்பற்றி 'கருங்கல்லில் ஒரு காவியம்' என்ற பயணக்கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதை ஏன் இங்கு விளக்கமாகக் கூறுகிறேன் என்றால், இளைஞர்களின் ஆர்வத்திற்கு டாக்டர் எவ்வளவு தூரம் மதிப்பளிக்கிறார் என்று தெரிந்து கொள்ளத்தான். அதற்கு முன் எத்தனையோ ஆய்வாளர்களை அவர்களது இல்லத்திலும், கருத்தரங்குகளிலும் சந்தித்திருக்கிறோம். கேள்விகள் கேட்டிருக்கிறோம். ஆனால், இவ்வளவு பொறுமையாக, எவ்வளவு அடிப்படையான கேள்வியாக இருந்தாலும், நிந்திக்காமல், எப்படிச் சொன்னால் எங்களுக்குப் புரியுமோ, அப்படி விளக்கிய முதல் ஆய்வாளர் டாக்டர்தான். இதற்குமுன் சந்தித்தவர்கள் ஒன்று அவர்களது தளத்திலேயே இருந்தபடி பதில் சொன்னார்கள் அல்லது அவர்கள் சொன்ன விளக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு விஷயஞானம் இருக்காது. கேள்வி கேட்பவரது மனநிலையை அவரது கேள்வியிலிருந்தே புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் பதிலளிக்கும் கலை கைவரப்பெற்றவர். ஏற்கனவே உளவியலில் இருந்த ஆர்வமும் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டுச் சிறிதுகாலம் சென்னையில் பிரபல உளவியல் மருத்துவர் சாரதாமேனன் அவர்களிடம் பணியாற்றியதாலும் இது அவருக்குச் சாத்தியமாகியிருக்கலாம்.

அடுத்தநாள் எங்கு செல்லலாம் என்று கேட்டபோதுதான், அந்தச் சோழர்காலக் கலைப்பொக்கிஷம் எங்களுக்கு அறிமுகமானது. ஓரிரண்டு கோயில்களின் பெயர்களையும் வழியையும் கூறி, அங்கு சென்று பாருங்கள் என்று எளிதாகக் கூறியிருக்கலாம். ஆனால், எங்களின் ஆர்வமிகுதியைக் கண்டு எங்களுக்குச் சரியான புரிதல் ஏற்படுவதற்காக எங்களுடன் வருவதாகக் கூறினார். பின்பு ஒரு கட்டுரையில், 'இந்த இளைஞர்களின் ஆர்வம் புரிதலோடு இருந்தால் வரலாறு சுகப்படும்' என்று எண்ணியதாகக் கூறியுள்ளார். புள்ளமங்கை. 'சோழச் சிற்பிகளில் மகத்தானவர்கள் மக்களை மயங்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உளிதொட்ட இடம்' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். முற்றிலும் உண்மை என்பதைப் பார்த்தவர்கள் உணர்வார்கள். கல்வெட்டெல்லாம் எல்லோராலும் படித்துவிடமுடியாது என்று நாங்கள் தவறாக எண்ணிக்கொண்டிருந்த காலம் அது. முதன்முதலில் ஒரு ஆதித்தகரிகாலரின் கல்வெட்டை எங்களை வாசிக்கவைத்தார். அன்று எங்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் மனநிறைவையையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதற்கென்று தனியாகப் பட்டப்படிப்போ பட்டயப்படிப்போ முடித்தவர்களால்தான் கல்வெட்டுகளைப் படிக்கமுடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களை ஒரு சோழர் கல்வெட்டைத் தட்டுத் தடுமாறிப் படிக்கவைத்தார் என்றால், சாதாரணக் காரியமல்ல. நீங்களும் ஒரு பழங்கோயிலுக்குச் சென்று ஒரு கல்வெட்டைப் பாதிக்குமேல் வாசித்து முடித்தீர்களானால், உங்களுக்கும் நிச்சயம் இப்பிரமிப்பு ஏற்படும்.

அன்று மதியம் புள்ளமங்கையிலிருந்து தஞ்சாவூர் சென்று மேற்றள ஓவியங்களைக் கண்டுகளித்தோம். முதல்யாத்திரையின்போது பெரியகோயிலில் அழகிய ஓவியங்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருந்தாலும், அவை சாந்தாரத்திலுள்ள சோழர்கால ஓவியங்கள் என்று தெரியவில்லை. கருவறையின் முன்மண்டபக் கூரையிலும் நந்திமண்டபக் கூரையிலும் இருந்த ஓவியங்கள்தான் அவை என்று எண்ணிக்கொண்டிருந்தோம். அவற்றைப் புகைப்படம் எடுக்கும்போதுகூட, இவற்றையா அழகான ஓவியங்கள் என்று கூறினார்கள் என்ற எண்ணம் தோன்றினாலும், உடனிருப்பவர்கள் 'என்ன இது? அழகை இரசிக்கத் தெரியாதவராக இருக்கிறார்களே?' என்று நினைத்துக் கொள்வார்களோ என்று அனைவரும் வெளியில்சொல்லத் தயங்கினோம். டாக்டருடன் சென்று பார்த்தபோதுதான் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் அழகுணர்ச்சி என்றால் என்ன என்பது புரியவந்தது. அன்று புள்ளமங்கையில் கோகுலின் டிஜிடல் கேமிராவில் எடுத்த புகைப்படங்களைக் கணிணியில் பார்த்தபிறகு நேரில் பார்த்தபோது கண்டுபிடிக்கமுடியாத ஒரு பொருள் புலப்பட்டது. சிவபெருமான் தனது தோளில் சிவலிங்கத்தைச் சுமந்து கொண்டிருப்பது போன்ற காட்சி. நேரில் பார்த்தபோது ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரிந்ததேயன்றி, அது என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. கணிணியில் பெரிதாக்கிப் பார்க்கும்போது அது சிவலிங்கம் என்பது தெரியவந்தது. பிறகு அதற்கடுத்த வாரம் முனைவர் அகிலா அவர்களுடன் மாமல்லபுரம் தர்மராஜரதம் சென்று அங்குள்ள சிற்பங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்தோம்.

இப்படியே அடுத்தடுத்த பல பயணங்களால் ஒரு நிரந்தரப் பயணக்குழு உருவானது. அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பயணம் கங்கைகொண்ட சோழபுரம். தர்மராஜரதம் பயணத்தை முடித்தபிறகு டாக்டருடன் தொலைபேசியில் பேசியபோது செப்டம்பர் மத்தியில் கங்கைகொண்ட சோழபுரம் செல்வதாகக் கூறினார். முடிந்தால் நாங்களும் கலந்துகொள்ளலாம் என்று கூறினார். ஏற்கனவே எங்கள் ஆர்வக்கோளாறை எப்படிச் சரியான வழியில் திருப்புவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், இப்படிப்பட்ட அழைப்பு எவ்வளவு புளகாங்கிதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறவேண்டியதில்லை. சனிக்கிழமை அன்று கட்டடக்கலையையும் கல்வெட்டையும் சிற்பக்கலையையும் முறையாகக் கற்றுக்கொள்வதற்காகச் சில எளிய கோயில்களுக்குச் செல்லலாம் என்றுகூறி அழைத்துச்சென்றார். விசலூர், மலையடிப்பட்டி மற்றும் குன்றாண்டார்கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து அதற்கடுத்தமாதம் தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் கருத்தரங்கில் ஒரு கட்டுரை வாசிக்கும்படி அறிவுறுத்தினார். அக்கட்டுரையைத் தயார் செய்தபோதுதான், அறிவியல்பூர்வமான வரலாற்றாய்வு என்றால் என்ன என்பதை எங்களுக்கு விளங்கவைத்தார். நானும் பவித்ராவும் சேர்ந்து கருத்தரங்கில் அக்கட்டுரையை அளித்தோம்.

அடுத்தநாள் கங்கைகொண்ட சோழபுரம் சென்றபோது குடமுழுக்குக்காக விமானம் புதுப்பிக்கும்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த தொல்லியல் அலுவலர்களிடம் அனுமதி பெற்றபிறகு விமானத்தின் மேற்றளங்களுக்குச் சென்றுபார்த்தோம். தஞ்சை பெரியகோயிலின் சாந்தார அமைப்பை ஒத்திருந்தாலும், இரண்டு இணையான சுவர்களை இணைத்து மேற்றளங்களை அதன்மீதிருந்து தொடரவைத்த உத்தியில் வேறுபாடு காட்டியிருந்தார்கள். எழுத்தில் வாசிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் இந்த நுட்பமான வேறுபாட்டை உணர்ந்துகொள்ளமுடியும். அன்று கட்டடக்கலையைப்பற்றி மேலும் சில தகவல்கள் தெரிந்துகொண்டோம். கங்கைகொண்ட சோழபுரத்தின் விமான உச்சிக்குச்சென்று சிறிதுநேரம் அமர்ந்திருந்தபோது அவர் பாடிய அப்பர் பதிகங்கள் நாவுக்கரசரிடம் அவர் கொண்டிருந்த தோய்வை வெளிப்படுத்தியது. அப்போது அவர் மேற்கொண்டிருந்த மகேந்திரர் குடைவரைகள் நூலுக்கான கள ஆய்வுகளுக்காகக் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் குடைவரைகளுக்குச் சென்றபோது நாங்களும் இணைந்துகொண்டோம். மாமல்லபுரத்தில் ஒரு முழுநிலா நாளில் கடற்கரைக் கோயிலில் இரவுப்பொழுதைக் கழி(ளி)த்த கணங்கள் நினைக்குந்தோறும் மனத்தைக் கனக்கச் செய்பவை. ஒவ்வொரு பயணமும் எங்களுக்குப் புதுப்புது விஷயங்களைக் கற்றுத்தந்தன. மனிதவாழ்வின் அனுபவங்களைப் பெருக்குவதில் முதல்காரணி பயணங்கள்தான்.இதுபோல் எண்ணற்ற பயணங்களினால் டாக்டருக்கும் எங்களுக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்து, ஆசிரியர் மாணவர் என்ற நிலையிலிருந்து நட்பாக மாறியது. இராஜராஜரின் மெய்கீர்த்தியில் 'எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே!' என்று வருவதுபோல், ஒரு மனிதனின் ஒவ்வொரு வாழ்நாளும் வீண் நாளாகாமல், முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர். எத்தனை நாட்களுக்குத்தான் கற்றுக்கொண்டே இருப்பீர்கள்? கற்றுக்கொண்டதைச் செயல்படுத்திப் பார்க்கவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தச் சிந்தனையில் விளைந்ததுதான் வரலாறு.காம். டாக்டரின் இந்த எண்ணம் எங்களையும் சிந்திக்க வைத்தது. நாங்கள் கட்டடக்கலையையும் கல்வெட்டையும் சிற்பத்தையும் அறிந்துகொள்ள டாக்டரின் உதவி கிடைத்தது. இதுபோல் இன்னும் எண்ணற்றோர் ஆர்வமிருந்தும் சரியான வழிகாட்டல் இல்லாமையால் தவித்துக்கொண்டிருப்பதைப் போக்க எங்களால் முயன்றதைச் செய்யவேண்டும் என்ற சிந்தனை வரலாறு.காம் உருவாக வித்திட்டது. இதற்கான தன்னம்பிக்கையை எங்களுக்குள் விதைத்ததும் டாக்டர்தான். அவரது கட்டுரைகளை இணையத்தில் கொண்டுவரலாம் என்று எண்ணி நாங்கள் வைத்திருந்த திட்டம் நாங்களும் எழுதும் வரலாறு.காம் என மாறியது.

உங்கள் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மாதம் ஓரிரண்டு கட்டுரைகளையாவது கட்டாயமாக எழுதுவதென்று வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் கற்றுக்கொண்டவை வீண்போகாமல் இருக்கும் என்றார். மாதாமாதம் எழுதும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இணையத்தில் ஒரு மாத இதழைக்கூட ஆரம்பிக்கலாம் என்றார். ஆனால், எங்களுக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. மாத இதழ் ஆரம்பிப்பதெல்லாம் சரிதான்! ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டுமே? சில சமயங்களில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுத முடியாமல் போய்விட்டால்? ஆரம்பிப்பதற்கு முன்பே ஏன் எழுத முடியாமல் போனாலும் போகலாம் என்று எதிர்மறையாகச் சிந்திக்கிறீர்கள்? அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், எங்களிடம் ஏராளமான கட்டுரைகள் இன்னும் அச்சேறாமல் இருக்கின்றன. அவற்றைத் தந்து உதவுகிறோம் என்று ஊக்கப்படுத்தினார். அது, சிறகு முளைக்கும் முன்பே பறக்க எத்தனித்த எங்களுக்கு அடியில் வலையை விரித்துப் பிடித்தாற்போல் இருந்தது. உடனே அதற்கான பணிகளை ஆரம்பித்து, எங்கள் தொழில்நுட்பமூளை கிருபாவின் உதவியுடன் ஆகஸ்ட் 2004ல் உங்கள் பார்வைக்கு இம்மின்மலரை மலரவைத்தோம்.

அதற்குமுன்பு, என்னாலெல்லாம் எழுதமுடியும் என்று நினைத்தே பார்க்கவில்லை. கல்கியையும் பாலகுமாரனையும் படித்தபோது, எழுத்தாளர் என்றால், முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்றும், எழுத்துத்திறமை பிறவியிலேயே இருப்பது என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்தவர் டாக்டர்தான். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் போன்ற குறள்களை விளக்கி, என்னை எழுதத் தூண்டினார். முதன்முதலில் நான் எழுதிய பயணக்கட்டுரை நார்த்தாமலையை நோக்கி. பிறகு வரலாறு.காம் ஆரம்பித்த பிறகு கட்டடக்கலை தொடர்பான கட்டுரைகளை ஒரு தொடராக எழுத முயற்சித்தேன். நாளுக்குநாள் எழுத்தை மெருகேற்றவும் ஊக்குவித்தார். தொடர்ச்சியான எழுத்துப் பயிற்சியும் பல்வேறு நடைகளின் வாசிப்பும் எழுதும் ஒவ்வொருவரையும் செம்மைப்படுத்தும் என்பது என் அனுபவத்தில் கண்டுகொண்ட உண்மை. சில மாதங்களுக்கு முன், தற்போது கட்டுரைகளை நூல்பிடித்தாற்போல ஒரே நேர்க்கோட்டிலேயே எழுதிக்கொண்டிருக்கிறேன். கோகுலையும் லலிதாராமையும்போல் கற்பனை கலந்து எழுதவரவில்லையே என்று கவலைப்பட்டு டாக்டரிடம் புலம்பியபோது, எழுத நினைக்கும் விஷயங்களைத் தெளிவாகவே எழுதுகிறீர்கள். அதுதான் முக்கியம். நடை எல்லாம் தொடர்ச்சியாக எழுத எழுத உங்களுக்கு வசப்பட்டுவிடும் என்று ஆறுதல் கூறினார். அடுத்தவரைப்போல் எழுதவேண்டும் என்று நினைப்பது கூடாது, உங்களின் தனித்தன்மை போய்விடும் என்றார்.

வரலாறு.காம் தனது ஆறாவது மாதத்தை நிறைவு செய்த நேரத்தில், அவர் ஆண்டுதோறும் நடத்திவரும் கூ.இரா.சீனிவாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நாங்கள் ஆயிரம் ரூபாய்த் திட்டத்தின்கீழ்ப் பதிப்பித்த அவரது 'பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்' நூலும் தயாரானதால், மூன்றையும் சேர்த்து முப்பெரும்விழாவாகப் பெரியகோயில் வளாகத்தில் கொண்டாடினோம். அப்போது இந்து, தினமணி போன்ற நாளேடுகளில் எங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட உதவிசெய்தார். விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு திருவெள்ளறைக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்தபடியே தொலைபேசியில் இந்து நாளிதழின் நிருபருக்குப் பேட்டியளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்தநாளே அக்கட்டுரை வெளியானதும், தங்குவதற்காகச் சென்ற விடுதிகளில் இருந்தவர்களுக்கு அதற்குள் அச்செய்தி பரவி, உற்சாக வரவேற்பு கொடுத்ததும் மறக்க முடியாதவை.

டாக்டரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அவரது மக்கள் தொடர்புத் திறன். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் அவரை வரவேற்க அங்கே காத்துக்கொண்டு இருப்பார். பல நேரங்களில் இதைக்கண்டு வியந்திருக்கிறோம். புதிதாக அறிமுகமாகும் தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள்கூட அடுத்தடுத்த முறைகளில் அவருடன் நெருக்கமாகிவிடுவதைக் கண்டிருக்கிறோம். சாதாரணமாகவே மக்களை நேசிக்கும் பண்புடைய அவருக்கு இயல்பிலேயே அமைந்த பேச்சுத்திறமை இவ்விஷயத்தில் கைகொடுக்கிறது. இதையெல்லாம் தனது திரும்பிப் பார்க்கிறோம் தொடரில் எழுதிக் கொண்டிருக்கிறார். டாக்டரிடம் மறக்கமுடியாத மற்றொரு பண்பும் இருக்கிறது. வரலாற்றாய்வின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் எங்களைக் கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது எந்தத் தயக்கமுமின்றி அறிஞர்களிடம் அறிமுகப்படுத்திவைப்பார். தொல்லியல் இமயம் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களை நாங்கள் சந்திக்க விரும்பியபோது அவருக்குத் தொலைபேசி செய்து எங்களைப்பற்றிய சிறு அறிமுகம் கொடுத்துவைத்திருந்தார்.

ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, பிராமி எழுத்துருக்களின் தந்தை என்று உலகளாவிய அனைத்து ஆய்வாளர்களாலும் போற்றப்படுபவர், இந்தச் சிறுவர்களை எப்படி எதிர்கொள்வாரோ என்ற தயக்கத்துடன் சென்ற எங்களுக்கு அங்கே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வெகுநாட்களுக்கு முன்பே அறிமுகமானவர்போல் இயல்பாகப் பழகினார். உளமார வரவேற்ற மகாதேவன் அவர்கள் அன்புபொங்க எங்களின் அந்த மாலைநேரத்தைப் பயனுள்ளதாக்கினார். அவரைப்பற்றி மனதில் வடித்துவைத்திருந்த பிம்பம் எல்லாம் தூள்தூளானது. இப்படியொரு துடிப்பான இளைஞர் படையைத் தயார் செய்ததற்காக அடுத்தமுறை டாக்டருக்குக் கடிதம் எழுதும்போது 'பேராசிரியர் கலைக்கோவன் அவர்களுக்கு' என விளித்திருந்தார் என்று கேள்விப்பட்டோம். அறிஞர்கள் மட்டுமல்ல, பிற நண்பர்களையும் அறிமுகப்படுத்தி வைப்பார். அப்படி அறிமுகமானவர்கள்தான் வரலாறு.காமில் தற்போது தொடர்ந்து எழுதிவரும் ரிஷியா, சுமிதா போன்றோர். வாணி செங்குட்டுவன், இலலிதாம்பாள் போன்றவர்களும் இவர் மூலம் அறிமுகமானவர்களே. இவரது இளவல் பேராசிரியர் மா.ரா.அரசு அவர்கள் இவர் எங்களுக்களித்த கொடை. டாக்டரைப்போலவே எளிமையாகப் பழகுவதிலும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி நெறிப்படுத்துவதிலும் சிறந்தவர். எங்கள் வளர்ச்சியின்மேல் அக்கறைகொண்ட நன்னெஞ்சக்காரர். அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார் அவர்களின் 'இது ராஜபாட்டை அல்ல' என்ற நூலைப் படித்து முடித்தபிறகு அவரது ஓவியங்களைக் காணவேண்டும் என்று நாங்கள் விரும்பியபோது, அடுத்த சென்னைப் பயணத்திலேயே சிவகுமாரின் இல்லத்திற்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி, ஓவியங்கள் பிறந்த வரலாற்றை சிவகுமார் அவர்களின் வாயாலேயே உரைக்க வைத்தார்.நாளொரு பயணமும் பொழுதொரு தொலைபேசி உரையாடலுமாய் வளர்ந்து கொண்டிருந்த எங்கள் நட்புக்குப் புதியதொரு பரிமாணம் கொடுத்தது திருவலஞ்சுழிப் பயணம். சுந்தர் பரத்வாஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருவலஞ்சுழி சடைமுடிநாதர் கோயில் வளாகத்திலுள்ள க்ஷேத்ரபாலர் திருமுன்னை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் டாக்டர். அவருடன் நாங்களும் பல பயணங்களில் இணைந்தோம். புதியன பல கற்றுக்கொண்டோம். டாக்டரின் இயல்பு என்னவென்றால், ஒரு கோயிலை ஆய்வு செய்து கட்டுரைகளாக்கும் முன்னர், அக்கோயில் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து விடுவது வழக்கம். ஆகவே, க்ஷேத்ரபாலர் திருமுன் சடைமுடிநாதர் ஆலயத்துடன் தொடர்புடையதால், அதையும் ஒரு பார்வை பார்க்கவேண்டியதாகி விட்டது. அப்படிப் பார்த்த ஒரு கழுகுப் பார்வையில், பல புதிய செய்திகள் பளிச்சிட, மொத்த வளாகமும் ஆய்வுக்குள்ளானது. விரிவான அளவில் ஆய்வு மேற்கொள்ளச் செலவு நிறைய ஆகுமே என்ற கவலை வந்தபோது, 'யாமிருக்க பயமேன்?' என்று அபயமளித்தார் சுந்தர். ஆய்வு முடிந்து புத்தகம் வெளியாகும்வரை அவரது ஆதரவு தொடர்ந்தது. இப்பயணங்களின்போது எங்களின் நட்புவட்டத்திற்குள் நுழைந்தவர்தான் திரு.பால.பத்மநாபன். ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் எனது ஜப்பான் கனவை நிறைவேற்றவேண்டிய நேரம் வந்தது. எனவே, ஒரு பிரிவுபசாரவிழாவை மேற்கொள்ள சுந்தர் விழைந்து, வரலாறு.காம் குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். அன்று நண்பர்கள் அனைவரும் என்மேல் வைத்திருந்த நேசத்தை உணர வாய்ப்பேற்பட்டது. அடுத்த இதழில் டாக்டர் அவர்கள் 'வாழ்க நீ தம்பி' என்று விழாவின்போது பேச இயலாததைக் கட்டுரையாக்கி நெகிழவைத்தார்.ஜப்பான் வந்தபிறகு, அவ்வளவாகப் பயணங்கள் மேற்கொள்ள முடிவதில்லை. இருப்பினும், மூன்று தடவைகள் தாய்நாடு சென்றுவந்தபோது மேற்கொண்ட பயணங்களில் தானும் உடன்வந்து, மறக்கமுடியாத பயணங்களாக ஆக்கிவிட்டார் டாக்டர். இராஜராஜீசுவர விமானத்தில் ஏறும் வாய்ப்பை வேறுயார் எங்களுக்குப் பெற்றுத் தந்திருப்பார்கள்? தமிழகத்தில் இருந்திருந்தால், நினைத்த நேரத்தில் தஞ்சாவூரோ திருச்சியோ கும்பகோணமோ சென்று வரலாம். ஆனால் இங்கிருந்து அது முடியாத நிலையில், அடிக்கடி வரலாற்று நினைவுகள் தலைதூக்கும்போதும் ஏதாவது சந்தேகங்கள் தோன்றும்போதும் உடனடியாகத் தொலைபேசி செய்து பேசினால் ஒரு மனநிறைவு ஏற்படும். எப்போது தொலைபேசி செய்தாலும், கேட்கும் கேள்விகளுக்குக் கனிவுடன் பதில்சொல்வார். எங்களுடைய மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால், எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறோம், எப்படி விடையிறுத்தால் எங்களுக்குப் புரியும் என்று யோசித்துப் பதில்சொல்வார். அவர் சொல்லும் பதிலை அப்படியே ஏற்றுக்கொள்வதைவிட, அதைச் சரிபார்த்தபிறகே ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்துவார். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற குறளின் முக்கியத்துவத்தை எங்களுக்குக் கற்றுத்தந்தார். ஒரு அறிஞர் தவறாக ஏதாவது எழுதியிருந்தால் அல்லது சொல்லியிருந்தால், தயங்காமல் உடனே சுட்டிக்காட்டுங்கள். அப்போதுதான், உங்களுக்கு அடுத்து அதை எதிர்கொள்ளவிருப்பவர் தவறான பாதையில் செல்லமாட்டார் என்று கூறுவார். இந்த நேர்மறையான அணுகுமுறை அவருக்குப் பல முகமூடி அணிந்த எதிரிகளைப் பெற்றுத்தந்திருக்கிறது.

அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால், அவ்வப்போது உடல்நலம் தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வது வழக்கம். என் மனைவி கருவுற்றிருந்தபோது தமிழகத்திலிருக்கும் மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறவிரும்பினேன். உடனே அவருடன் பயின்ற ஒரு மருத்துவரிடம் அறிமுகப்படுத்தி உதவினார். ஆய்வுப் பயணங்களிலும் கட்டுரையாக்கத்திலும் நூல் வெளியிடுவதிலும் உதவும் அனைவரது உதவிகளையும், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பதிவு செய்யும் பண்பு அவரிடமிருந்து கற்றுக்கொள்ளத்தக்கது. அதேபோல், ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முற்படும்போது, நான்குபேர் பாராட்டினால், மீதி தொண்ணூற்றாறு பேர் தவறு நிகழ்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பதையும் புரியவைத்தார். வரலாற்று ஆய்வுலகில் ஏற்கனவே அவர் பட்டிருந்த கஷ்ட நஷ்டங்களை எடுத்துக்கூறி எங்களைப் பண்படுத்தினார். முதல் பயணம் மேற்கொள்ளும்போது நாங்கள் தொடர்ந்து வரலாற்றாய்வில் பங்கெடுத்துக்கொள்ள விழைகிறோம் என்று கூறியபோது, இது அதிகச் செலவு பிடிக்கும் விஷயம், வருமானம் ஏதும் இராது, குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரத்தைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும், சில நண்பர்களின் நட்பை இழக்க வேண்டி வந்தாலும் வரலாம், எனப் பெரிதும் அறிவுரைத்தார். இருப்பினும் எங்களுக்கு அதெல்லாம் அப்போது சரிவரப் புரியவில்லை. தமிழனின் நேரத்தைப் பாழடிக்கும் சராசரிப் பொழுதுபோக்குகளிலிருந்து விடுபட்டு, இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள உதவி, அளவிலா ஆனந்தத்தை இப்பயணங்கள் தரும் என்பதால், எப்படியாவது தொடர்ந்து இதில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. முறையான திட்டமிடல் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று எங்களை நாங்களே சமாதானப்படுத்திக்கொண்டு, அதெல்லாம் பரவாயில்லை சார், ஒன்றும் பிரச்சினையில்லை என்று கூறினோம். பின்னாட்களில் அவர் சொன்னவற்றில் ஒவ்வொன்றாக நிஜமாகிக்கொண்டு வந்தபோது, அவரது அனுபவ அறிவை எண்ணி வியந்தோம். இருப்பினும், இவை எதுவுமே எங்களுக்குப் பெரிய அளவில் தடை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

சுருக்கமாக இக்கட்டுரையின் சாரத்தைச் சொல்லவேண்டும் என்றால், பச்சைக் களிமண்ணாக இருந்த எங்களைச் சிற்பமாக வார்த்துக் கொண்டிருக்கிறார் எனலாம். இதை வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. புகழ்ந்தால்தான் அவரிடம் காரியம் நடக்கும் என்றில்லை. போலியாகப் புகழ்பவர்களை அவர் கண்டுகொள்வதில்லை. ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் தவிர்த்துவிடுவார். உண்மையான ஆர்வத்துடன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் உதவுவார். ஐயம் தெளிவிப்பார். நமக்கு உதவுவதன்மூலம் அவர் அடையப்போவது எதுவுமில்லை. என்றாலும், வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் என்ற ஒரே ஒரு காரணம்தான் அவருடனான பிணைப்பைப் பலப்படுத்துவது. இத்தகைய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாததாலேயே, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களைப்போல் நடித்த சிலர் எங்களின் நட்புக்குப் பாதகம் விளைவிக்க முயன்றது முறியடிக்கப்பட்டு, இன்றும் இனிமையாக இருந்து வருகிறது, என்றும் இனிமையாக இருந்துவரும். உங்களால்தான் நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம் என்று அவரிடம் சொன்னால், 'அப்படியெல்லாம் நான் எதுவும் செய்துவிடவில்லை தம்பி, உங்களுக்கு ஆர்வம் இருந்தது, நீங்கள் வளர்ந்தீர்கள்' என்று எளிமையாக மறுத்துவிடுவார். இருப்பினும் அவரைப் போன்றதொரு தூண்டுகோல் இல்லாவிட்டால், இந்த வரலாறு.காம் என்னும் விளக்கு இவ்வளவு சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்காது எனலாம். அவரிடம் நாங்கள் பெற்றவைகளை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்.
நித்தச் சோற்றினுக்கு ஏவல் செயவந்தேன்; நிகரிலாப் பெருஞ்செல்வம் தந்து உதவினான்.
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.

கலைக்கோவன் எம் வழிகாட்டி வாழ்கவே; பல்லாண்டுகாலம் எங்களை வழிநடத்தவே!!!

நன்றி
கமல்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.