http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 18
இரா. கலைக்கோவன்


அன்புள்ள வாருணி,

என் தொடக்கக் காலப் பயணங்களுள் குறிப்பிடத்தக்கது பழுவூர்ப் பயணம். சிராப்பள்ளி ஜெயங்கொண்டம் சாலையில் சிராப்பள்ளியிலிருந்து 55 கி. மீ.தொலைவில் உள்ள மேலப்பழுவூர், அதன் அருகில் உள்ள கீழையூர், அங்கிருந்து ஏறத்தாழ 3 கி.மீ.தொலைவில் உள்ள கீழப்பழுவூர் இம்மூன்று இடங்களையுமே நானும் என் வாழ்வரசியும் பார்த்தோம். கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருகம் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருந்தது. மேலப்பழுவூரில் உள்ள பகைவிடை ஈசுவரமும் (சுந்தரேசுவரர்) கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலும் அறநிலையத்துறையின் ஆட்சியில் இருந்தன. யாரும் பொறுப்பேற்க விரும்பாத கீழப்பழுவூர் மறவனீசுவரம் காலத்தின் கைகளில் கரைந்து கொண்டிருந்தது.

பொன்னியின் செல்வன் தந்திருந்த பின்புலத்தில்தான் முதல் பார்வை அமைந்தது. மூன்று வளாகங்களுள் அவனிகந்தர்வ ஈசுவரம் அருமையான இரண்டு கோயில்களை உள்ளடக்கி யுள்ளது. தென்வாயில் ஸ்ரீகோயில், வடவாயில் ஸ்ரீகோயில் எனும் பெயர்களில் உருவாக்கப் பட்டிருந்த அக்கோயில்களின் கோட்டச் சிற்பங்களும் பூதவரிகளும் மகரதோரணங்களும் நாசிகைச் சிற்பங்களும் எழிலார்ந்தவை. அங்கு முதன் முறை அங்குச் சென்றிருந்தபோது, கரண ஆய்வுகளில் நான் ஈடுபட்டிருந்தமையால் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புற மகர தோரணத்தில் இருந்த சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணக்கோலத்தை உடன் அறியமுடிந்தது. அந்தச் சிற்பத்தைப் பார்த்த நேரம் மறக்கமுடியாதது. கதிரவனின் முழுவீச்சில் அந்த ஆடல் காட்சி முழுவதுமே ஒரு மேடைக்காட்சி போல என் உள்ளத்தில் பதிவானது. அதற்கு முன் இவ்வளவு சிறிய தொகுதியாக ஊர்த்வஜாநு கரணக்கோலத்தை கலைஞர்களின் உடன்கூட்டத்துடன் நான் கண்டதில்லை.



விரிவான அளவில் இரண்டு கோயில்களையும் அன்று பார்க்கமுடியவில்லை என்றாலும் பார்த்த அளவில் அவை இணையற்ற கோயில்கள் என்பதை உணர்ந்தேன். வடவாயில் ஸ்ரீகோயிலின் தென்திசைக்கடவுள் கோரைப்பற்கள் பெற்றிருந்த அமைப்பை என் வாழ்வரசி யுடன் விவாதித்தேன். நாங்கள்அதுவரை பார்த்திருந்த எந்தத் தென்திசைக்கடவுள் சிற்பத்திலும் கோரைப்பற்களைக் கண்டதில்லை. பகைவிடை ஈசுவரத்து விமானம் ஆலம்பாக்கம் மாட மேற்றளியை நினைவூட்டியது. முதல் பார்வையே அது காலத்தால் மிக முற்பட்ட விமானம் என்பதை உணர்த்தியது. பழுவேட்டரையர் கட்டுமானங்களில் சாந்தார அமைப்புப் பெற்ற ஒரே விமானம் அதுதான் என்பதைப் பின்னாளில் அறிந்தேன்.

கல்வெட்டுகளைப் படிப்பதில் எனக்கு மிக உதவிய இடங்களுள் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலும் ஒன்று. எழுத்துக்கள் ஆழமாகவும் தெளிவாகவும் வெட்டப்பட்டிருக்கும். பெரும்பாலான கல்வெட்டுகள் அளவில் சிறியனவாகவும் செய்தி வளம் நிரம்பியனவாகவும் இருந்தமையால் படிப்பதில் ஆர்வம் இருந்தது. எழுத்தமைதி பற்றிய தெளிவான அறிவூட்டலையும் கீழப்பழுவூர்க் கல்வெட்டுகளே தந்தன. என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளைப் பூக்க வைத்த இத்திருக்கோயிலில்தான் பழுவேட்டரையர் வரலாற்றை ஆழமாக ஆராயவேண்டும் என்ற எண்ணத்திற்கு வித்திடப்பட்டது.

வாணியுடன் 1986ல் பழுவூர்க் கோயில்களுக்கு இரண்டாம் முறையாகச் சென்றிருந்தேன். அப்போது அக்கோயில்கள் அனைத்தும் மிக மோசமான நிலையில் இருந்தன. பகைவிடை ஈசுவரத்தின் திருச்சுற்று முழுவதும் புதர்கள் மண்டியிருந்தன. விமானத்தின் பல பகுதிகளில் செடிகள் முளைத்திருந்தன. சிற்பங்கள் முறையான கவனிப்பின்மையால் சாலைத் தூசில் உருமாறி, நிறம் மாறி இருந்தன. அவனிகந்தர்வ ஈசுவரம் பிழைப்பற்றோரின் அடைக்கல பூமியாகி இருந்தது. கோயில் காவலர் ஏழ்மையின் மொத்த அடையாளமாய்க் கோயிலை எந்த வகையிலும் காப்பாற்ற முடியாதவராய்த் தளர்ந்து போயிருந்தார். இரண்டு ஸ்ரீகோயில்களும் வெளவால்களின் வாழிடங்களாகியிருந்தன. தேவனார் மகளிரும் பழுவேட்டரைய வாரிசுகளும் வாழ்ந்து வளமாக்கிய அந்த வளாகம் மின்கட்டணம் கட்ட வகையில்லாமல் போனதால் மின்தொடர்பு இழந்து இருளில் மூழ்கி இருந்தது.

கீழப்பழுவூர், அறநிலையத்துறையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோதும் பரிதாப நிலையில்தான் பரிதவித்துக் கொண்டிருந்தது. உள்சுற்று முழுவதும் சிறிய அளவிலான முட் செடிகள் படர்ந்திருந்தன. திருச்சுற்று மாளிகை பெருவழித் தூசியால் போர்த்தப்பட்டிருந்தது. மிகச் சிறிய அந்த வளாகத்தைக்கூடத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியாத நிருவாகச் சூழல் அங்கிருந்தமையை உணரமுடிந்தது.

மறவனீசுவரத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுற்றியிருந்த மக்களின் குடியிருப்பு நெருக்கடிகளால் மறவனீசுவரத்தின் சுற்றுப்பாதை ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. விறகுகளை அடுக்கி வைக்கவும் ஆடு, மாடுகளைக் கட்டி வைக்கவுமே விமானக் கீழ்த்தளம் பயன்பட்டுக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் இவ்விமானத்தின் அருகிலேயே காவல் நிலையம் இருந்தது. விமானத்தின் முன்னிருந்த இரண்டு வாயிற்காவலர் சிற்பங்களும் குடியிருப்புச் சிறுவர்களின் சிறுநீர்க் குளியலில் சீரழிந்து கொண்டிருந்தன. இவை அனைத்தையும் பார்த்த நானும் வாணியும் அதிர்ந்துபோனோம். ஒன்றிரண்டு ஆண்டுகளில் பழுவூர்க் கோயில்களில் நிகழ்ந்திருந்த மாற்றங்கள் உள்ளத்தை வருத்தின. எப்படியாவது அக்கோயில்களை அழிவின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம். ஊருக்குத் திரும்பியதும் நண்பர் மஜீதிடம் பேசினேன். அவர் துறையின் கீழ்ப் பராமரிக்கப்படும் கீழையூர்க் கோயில்களின் நிலைமையை விளக்கினேன். அவரும் என்னோடு சேர்ந்து வருந்தினார்.

அடுத்த நாளே மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. விசுவநாதனை அவர் இல்லத்தில் சந்தித்தேன். கண்டது அனைத்தும் ஒன்றுவிடாமல் அவரிடம் எடுத்துரைத்தேன். வரலாற்று ஆர்வம் கொண்ட அப்பெருமகனார் என் கவலையைப் புரிந்துகொண்டார். என்ன செய்யலாம் என்பது குறித்து இருவரும் கலந்துரையாடினோம். நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்களின் உதவியுடன் நான்கு திருக்கோயில்களையும் சீரமைக்கலாம் என்ற என் கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அரசு அலுவலர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சி நாளன்று தாமே வந்திருந்து பணி நிறைவைக் காண்பதாக அன்போடு கூறினார்.

கி. ஆ பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் நண்பர் இரா. இராஜேந்திரனையும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சீ. கீதாவையும் சந்தித்தேன். நிலைமையை விளக்கியதும் இருவருமே தேவையான அளவு மாணவ, மாணவியருடன் வந்து வேண்டியன செய்துதருவதாக உறுதி கூறினர். சிராப்பள்ளியில் அப்போது காவல்துறைத் துணைத்தலைவராக இருந்த திரு. இல. வெங்கடேசன் அன்புள்ளம் கொண்டவர். சமுதாய நற்பணிகளில் மிகுந்த நாட்டம் உடையவர். அழுந்தியூர், பனமங்கலம் கோயில்களின் சீரமைப்பு விழாக்களில் எங்களுடன் துணை நின்ற பெருமகனார்.

பழுவூர்ச் சீரமைப்புப் பணியை அவர் தொடங்கி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதியதால், அவர் அலுவலகம் சென்று அவரிடம் பழுவூர்க் கோயில்களின் நிலையை விளக்கி அவர் வருகையை வேண்டினேன். காவல்துறையின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமாறு செய்த அப்பெருந்தகை தாம் வருவதாக ஒப்புதல் தந்தார். இந்த ஏற்பாடுகளில் மகிழ்ந்த நண்பர் மஜீது தம் அலுவலகத்தாருடன் வந்து வேண்டியன செய்து தருவதாகக் கூறினார். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க நான்கு நாட்கள் ஆயின. மருத்துவமனை நேரம் தவிர பிற நேரமெல்லாம் ஓய்வின்றி உழைத்ததால் நிகழ்ச்சி முழு வடிவம் பெற்றது.

பழுவூர்ப் பகுதியைச் சேர்ந்த கோட்ட வளர்ச்சி அலுவலர் திரு. அரங்கநாதன் மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டலுக்கு ஏற்ப என்னைச் சந்தித்தார். நிகழ்ச்சி அமைப்புப் பற்றி இருவரும் கலந்துரையாடினோம். அறநிலையத்துறைக்குத் தாமே தகவல் தந்துவிடுவதாகக் கூறிய அவர், மாணவர்களின் மதிய உணவுக்கும் மாலைச் சிற்றுண்டிக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். 17. 3. 1986ல் நிகழ்ச்சி அமைந்தது. அப்போது என்னிடம் ஆய்வு செய்துகொண்டிருந்த நளினி, வளர்மதி, சரசுவதி இவர்களுடன் வாணியும் இணைந்து கொண்டார். நான், என் வாழ்வரசி, திரு. ஆறுமுகம், திரு. மஜீது என அனைவரும் பழுவூர் நோக்கிப் புறப்பட்டோம்.

பழுவூர்ச் செல்லும் வழியில் புள்ளம்பாடி அருகே மரத்தடியில் புத்தர் சிற்பம் ஒன்று அய்யனார் என்ற பெயரில் வழிபாட்டுக்குள்ளாகி இருந்தமையை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் திரு. பரமானந்தம் முன்பே கூறி, அது பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தார். அதனால், வழியில் புத்தரைப் பார்த்துத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு பழுவூர்ச் சென்றோம். நாங்கள் பழுவூரை அடைந்த பத்தாவது நிமிடத்தில் காவல்துறைத் துணைத்தலைவர் திரு. இல. வெங்கடேசன் வந்துவிட்டார். அரசின் நிகழ்ச்சியாக அது அமைந்தமையால் மேலப் பழுவூர்க் கோயிலின் முன்னால் கோட்ட வளர்ச்சி அலுவலர் மேடை அமைத்திருந்தார். மேலப் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்தையும் கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவரத்தையும் பார்வையிட்ட பிறகு திரு. இல. வெங்கடேசனை மேடைக்கு அழைத்து வந்தோம்.



மாணவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பயன்படுமாறு பழுவூரின் சுருக்கமான வரலாற்றைத் திரு. மஜீதும் நானும் எடுத்துரைக்க, திரு. இல. வெங்கடேசன் கோயில்களைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை விரிவாக விளக்கி மேலப்பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்தில் சீரமைப்புப் பணியைத் தொடங்கிவைத்தார். பேராசிரியர்கள் கீதாவும், இராஜேந்திரனும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி மாணவ, மாணவியரை இரண்டு பிரிவுகளாக்கி, ஒரு பிரிவு மேலப் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்திலும் மற்றொரு பிரிவு கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவரத்திலும் பணியாற்றுமாறு செய்தனர். நானும் என் வாழ்வரசியும் கீழையூர்க் கோயில்களில் உதவ, திரு. மஜீதும் திரு. நடராஜனும் மேலப் பழுவூர்ப் பணியில் ஈடுபட்டனர்.

மதிய உணவிற்குப் பிறகு திரு. அரங்கநாதன் காமரசவல்லியிலுள்ள கார்க்கோடக ஈசுவரத்தைப் பார்க்க வருமாறு என்னை அழைத்தார். முதலாம் இராஜேந்திரனின் கற்றளியான அக்கோயிலைப் பார்க்கவேண்டும் என்று நெடுங்காலமாகக் கருதி இருந்தேன். அதனால், அவர் அழைத்தவுடன் புறப்பட்டேன். என்னுடன் என் வாழ்வரசியும் மஜீதும் வாணி, நளினி, வளர்மதி, சரசுவதி இவர்களும் வந்தனர். இடிந்து, பாழ்பட்டுப் பார்க்கவே பரிதாபகரமான நிலையில் இருந்த இராஜேந்திரனின் அந்தத் திருக்கோயில் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மஜீதிடம், 'இந்தக் கோயிலுக்கு எந்த வகையிலாவது உதவமுடியாதா?' என்று ஏக்கமுடன் கேட்டேன். அவர் துன்பம்நிறைந்த புன்னகை ஒன்றைப் பதிலாக மலரவிட்டார்.

திரு. அரங்கநாதன் என் துன்பத்தைப் புரிந்தவராய், 'அறநிலையத்துறையிடம் எடுத்துரைத்து ஏதாவது செய்ய முயற்சிப்போம்' என்று ஆறுதல் சொன்னார். கோயில் முழுவதும் சுற்றிப் பார்த்தோம். செம்பியன் மாதேவியின் செப்புத்திருமேனியைக் கண்டோம். தொடர்பற்றுப் போயிருந்த சில கல்வெட்டுகளையும் முயற்சி செய்து படித்தோம். அதற்குள் சீரமைப்புப் பணி நிறைவு விழாவிற்கான நேரம் நெருங்கிவிடவே கீழையூர் விரைந்தோம். பேராசிரியர்கள் கீதாவும் இராஜேந்திரனும் மாணவர்களின் துணையுடனும் கோட்ட வளர்ச்சி அலுவலரின் துணைவர்களுடனும் இரண்டு வளாகங்களையும் இயன்றவரையில் சீர்திருத்தி இருந்தனர். மிக மோசமான நிலையில் அக்கோயில்களைப் பார்த்திருந்த எனக்கும் வாணிக்கும் மனநிறைவு ஏற்பட்டது.

நாங்கள் வருவதற்கு முன்னரே மாணவர்களுள் பெரும்பகுதியினர் உணவு முடித்த நிலையில் கீழப்பழுவூர்ச் சென்றிருந்தனர். எங்கள் வருகைக்குப் பிறகு எஞ்சியவர்களும் பணி காரணமாக அங்குச் சென்றனர். உரியவர்களைக் கீழையூரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் வருகைக்காக இருக்கச் சொல்லிவிட்டு, நாங்களும் கீழப்பழுவூர்ச் சென்றோம். மறவனீசுவரத்தை அடைந்தபோது வியப்புற்றோம். மாணவர்கள் கோயிலின் மீதேறி அனைத்து மரங்களையும் வெட்டி அகற்றியிருந்தனர். கோயிலைச் சுற்றி இருந்த குப்பைமேடுகளைக் காணவில்லை. விமானத்தைச் சுற்றிவர இரண்டடி அகலத்தில் இடையூறற்ற பாதை உருவாகியிருந்தது. மாணவிகள் விமானம் முழுவதையுமே கழுவித் தூய்மை செய்திருந்தனர். வாயிற்காவலர் சிற்பங்கள் வாட்டம் நீங்கி மாலைகளுடன் காட்சியளித்தன. கீழப்பழுவூர்க் கோயிலும் புதுப்பிறவி எடுத்திருந்தது. ஒரே நாளில் பழுவூர்க் கோயில்கள் பெற்ற இந்தப் பயனுள்ள மாற்றங்கள் அரசு இயந்திரத்தின் செயல்திறனையும் மாணவச் செல்வங்களின் உழைப்பு வளத்தையும் எனக்கு மிகத் தெளிவாகப் புரியவைத்தன.

மாலை ஐந்தரை மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவரும் அவரது துணைவியார் திருமதி ஆதிரைச்செல்வியும் பழுவூர் வந்தனர். அனைத்துக் கோயில்களையும் பார்வையிட்ட நிலையில், மறவனீசுவரத்தின் பழுதுபட்ட நிலைக்காகப் பெரிதும் வருந்திய மாவட்ட ஆட்சித்தலைவர் அதைக் காப்பாற்ற உரிய திட்டங்களை மேற்கொள்ளுமாறு கோட்ட வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். மாணவர்களிடையே உரையாற்றிய போதும் மறவனீசுவரத்தைப் பற்றியே அதிகம் சிந்தித்த அப்பெருந்தகை, மேடையிலேயே அக்கோயிலைக் காப்பாற்றப் பல பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கினார். பழுவூர்க் கோயில்களின் பெருமையைக் கூடியிருந்த ஊர்மக்களுக்கு விளங்குமாறு எடுத்துரைத்து, அக்கோயில்கள் அவர்களின் சொத்து என்பதை விளக்கி, அவற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அவனிகந்தர்வ ஈசுவரத்தைச் சரியான முறையில் காப்பாற்றும்படித் தொல்லியல்துறைக்கு வேண்டுகோள் வைத்தார். நான் மஜீதை ஓரக்கண்களால் பார்த்தேன். அவர் வழக்கம் போல் புன்னகைத்தார். விழா முடிந்து புறப்பட்டபோது மாவட்ட ஆட்சித்தலைவர் என்னை அழைத்துப் பழுவேட்டரையர் கோயில்களை விரிவான அளவில் பார்க்க வாய்ப்பேற்படுத்தித் தந்தமைக்காக அன்புடன் நன்றி பாராட்டினார். தொடர்ந்து அக்கோயில்கள் நன்னிலையில் விளங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்றும் உறுதியளித்தார். என் உள்ளம் மகிழ்வும் நிறைவும் பெற்றது.

வரலாற்றில் முதுநிறைஞர் (எம். ஃபில்) படிப்பு மேற்கொள்ளவேண்டும் எனக் கருதியிருந்த நளினியும் வளர்மதியும் இந்த நிகழ்ச்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தங்கள் முதுநிறைஞர் ஆய்விற்குப் பழுவூர்க் கோயில்களையே கொள்ளவேண்டும் என உறுதிபூண்டனர். அந்த முடிவு எனக்கும் மகிழ்வளித்தது. அதையே வாய்ப்பாகக் கொண்டு பழுவேட்டரையர் வரலாற்றை ஆராய வேண்டும் எனக் கருதினேன். 1986 ஏப்ரலில் முதுகலை வரலாறு முடித்த நளினியும் வளர்மதியும் அவர்கள் கூறியது போலவே தரங்கம்பாடியிலிருந்த டி, பி. எம். எல். கல்லூரியில் முதுநிறைஞர் வகுப்பில் சேர்ந்தனர். அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் தா. எட்மண்ட்ஸ் அவர்களுடைய விருப்பத்திற்கு முழு ஒத்துழைப்புத் தந்தார். அவர்தம் ஆய்விற்கு நான் வழிகாட்டியாக இருப்பதற்கும் ஒப்புதல் அளித்தார். நளினி, வளர்மதி இவர்கள் ஆய்வால் நான் அறிய நேர்ந்த இரண்டு பெருமைக்குரிய மனிதர்களுள் அவரும் ஒருவர்.

திரு. எட்மண்ட்ஸ் சமகால வரலாற்றிலும் கிறித்துவ வரலாற்றிலும் அமெரிக்க வரலாற்றிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டவர். என்றாலும், தம் மாணவியர் தாம் சார்ந்திராத துறை ஒன்றில் ஆய்வு செய்வதை அவர் தடுக்கவில்லை. அவர்தம் ஆய்வுக் காலத்தின்போது அப்பெருந்தகை திருச்சிராப்பள்ளி வந்து என்னைச் சந்தித்தார். நளினி, வளர்மதி இவர்தம் ஆய்வுப் போக்குக் குறித்து விவாதித்ததுடன், அவர்கள் ஆய்வை மதிப்பீடு செய்ய எத்தகு தேர்வாளர்களை அழைக்கலாம் என்பது குறித்தும் என்னுடன் கலந்துரையாடினார்.

கடந்த இருபதாண்டுகளில் என்னிடம் ஆய்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டும் என்றாலும், அவர்தம் நெறியாளர்களில் திரு. தா. எட்மண்ட்ஸ் போலத் தேர்வாளர்கள் குறித்து என் கருத்துக் கேட்டறிந்தவர்களாக, அர. அகிலாவின் நெறியாளராக அமைந்த பேராசிரியர் முனைவர் ப. சுப்பிரமணியம், பேராசிரியர் கோ. வேணிதேவி, பேராசிரியர் சீ. கீதா இவர்தம் நெறியாளராக அமைந்த பேராசிரியர் முனைவர் ந. அருணாசலம் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடியும். பேராசிரியர் முனைவர் ப. சுப்பிரமணியத்திற்கு துறை வல்ல அறிஞர்களின் பெயர்களைத் தரமுடிந்த எனக்குப் பேராசிரியர் முனைவர் ந. அருணாசலத்திற்கு அது போல் வழங்கும் வாய்ப்பு அமையாமல் போனது.

ஆய்வேட்டை மதிப்பிட வல்ல அறிஞர்களின் பெயர்களைக் கேட்கும்போது அவ்வத்துறை வல்ல ஆய்வறிஞர்களின் பெயர்களை மட்டுமே வழங்குவது வழக்கம். அவர்கள் நண்பர்களா என்று நான் பார்ப்பதில்லை. நேர்மையானவர்களாகவும் செம்மையான அறிவுடையவர்களாகவும் இருந்தவர்களை மட்டுமே முன்மொழிந்திருக்கிறேன். அவ்வகையில் நடுவண் அரசின் கல்வெட்டு ஆய்வறிஞராக விளங்கிய திரு. கே. ஜி. கிருஷ்ணன் பெயரையே நளினி, வளர்மதி இவர்தம் ஆய்வேடுகளுக்கான தேர்வாளராகப் பரிந்துரைத்தேன். திரு. கே. ஜி. கிருஷ்ணனைத் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமில்லை என்றாலும், அவர் கட்டுரைகள் வழி அவருடைய அறிவுத்திறம் பற்றி நன்கு அறிந்திருந்தேன். அவர் நளினிக்குத் தேர்வாளராக வந்தபோதுதான் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அதைப் பின்னர் பார்ப்போம்.

நளினி, வளர்மதி இவர்கள் ஆய்விற்காக 1986 அக்டோபர்த் திங்களில் மீண்டும் பழுவூர்ச் சென்றோம். வாழ்க்கையில் அதற்கு முன் சந்தித்திராத பேரதிர்ச்சியை அந்தப் பயணம் எங்களுக்குத் தந்தது. சீரமைப்பு நிகழ்ச்சிக்கு முன் 1986 பிப்ருவரியில் அந்தக் கோயில்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலைக்கு அவை திரும்பியிருந்தன. அனைத்து விமானங்களிலும் செடிகள் முளைத்திருந்தன. பகைவிடை ஈசுவரத்தில் புதர் மண்டியிருந்தது. மறவனீசுவரத்தில் அமைந்திருக்கவேண்டிய தடுப்பு வேலி அமையவேயில்லை. வழக்கம் போல் சூழ இருந்த மக்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு விமானம் உட்பட்டிருந்தது. வேதனையும் துன்பமும் வளரக் கோயில்களை வலம் வந்தோம். காவலர்களையும் அலுவலர்களையும் விசாரித்தோம். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்று பதில் வந்தது. கோட்டவளர்ச்சி அலுவலரைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் மாற்றலாகி இருந்தார்.

எந்த ஒரு சீரமைப்பும் உள்ளூர் மக்களின் தொடர்ந்த கண்காணிப்பு இல்லை என்றால் நிலைப்பதில்லை. எவ்வளவோ அரும்பாடுபட்டு, எத்தனையோ பேரை ஒருங்கிணைத்து, எவ்வளவோ நேரம் செலவழித்துச் செயற்படினும் அந்தச் செயற்பாடுகள் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் வளம் பெறுவதில்லை. முள்ளிக்கரும்பூர், அழுந்தியூர், பழுவூர் என இம்மூன்று வளாகங்களிலும் கிடைத்த அனுபவங்கள் என்னைப் பெரும் தளர்வுக்கு ஆளாக்கின. உள்ளூர் மக்களுள் பெரும்பாலோர் கோயிலால் நமக்கென்ன இலாபம், கோயிலில் இருந்து நாம் எதைப் பெறலாம் என்றுதான் சிந்திக்கிறார்களே தவிர, நாம் கோயிலுக்கு எதைச் செய்தால் அது வாழும் என்ற எண்ணமே கொள்வதில்லை.

ஊருக்குத் திரும்பியதும் நளினியும் வளர்மதியும் பழுவூர்க் கோயில்களையே ஆய்வு செய்யும் உறுதிகொண்டனர். கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலை நளினியும் அவனிகந்தர்வ ஈசுவரத்தை வளர்மதியும் ஆய்வுத் தலைப்புகளாகக் கொண்டனர். 'நம் பயணங்களின்போது நம்மால் இயன்றவரையில் அந்தக் கோயில்களுக்குப் புத்துயிரூட்டுவோம்' என்று அவர்கள் இருவரும் கூறியபோது நான் நெகிழ்ந்தேன். நளினியும் வளர்மதியும் ஆய்வு செய்த அந்த ஒன்றரையாண்டுக் காலமும் அவர்கள் கூறினாற் போலவே எங்கள் பயணங்கள் அந்தக் கோயில்களுக்கு ஓரளவிற்கேனும் வாழ்வளித்தன என்று உறுதியாகக் கூறலாம்.

பல்வேறு கோயில்களில் நான் கண்டறிந்த கல்வெட்டுகளைப் பற்றிய நாளிதழ்ச் செய்திகளைப் படித்த நடுவண் அரசின் கல்வெட்டுத்துறை அலுவலர் முனைவர் மு. து. சம்பத் அவற்றைப் படியெடுப்பதற்காக மைசூரிலிருந்து சிராப்பள்ளி வந்தார். அவருடன் விளைந்த சந்திப்பு மிகப் பயன்தந்தது. கல்வெட்டுப் பதிவகம் பற்றியும் கல்வெட்டுப் பதிப்புகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள அவர் உதவினார். கல்வெட்டுகளில் அவருக்கிருந்த அறிவும் அனுபவமும் அவருடைய நட்புநிறை அணுகுமுறையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அழுந்தூருக்கு அவருடன் நானும் திரு. ஆறுமுகமும் உடன் சென்றோம். அவர் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் விதம் அதற்காக அவர் மேற்கொள்ளும் முன்னேற்பாடுகள் அனைத்தும் பார்த்துப் பயனடைந்தேன். அவருடன் அன்று தொடங்கிய நட்பு இன்றுவரை நின்று நிலவுகிறது.

திரு. மு. து. சம்பத் பழகுவதற்கு இனியவர் சொல்லித் தருவதற்குச் சளைக்காதவர் உழைப்பதற்கு அஞ்சாதவர். அவருடைய ஒத்துழைப்பும் துணையும் கல்வெட்டாய்வில் எனக்கிருந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள உதவின. கல்வெட்டுப் பதிப்புகள் அனைத்தையும் நான் பெறுவதற்கு அவர் பெரிதும் உதவினார். மைசூர்க் கல்வெட்டுத்துறை இயக்குநரகம் சார்ந்த அனைத்து அறிஞர்களுடனும் நட்பேற்பட அவரே காரணர். முனைவர் திரு. இரமேஷ், முனைவர் திரு. கட்டி, முனைவர் திரு. சூ. சுவாமிநாதன் எனப் பலரும் அறிமுகமாயினர். கல்வெட்டாய்வு ஒரு மிகப் பெரிய உலகமாகப் பரந்து விரிந்திருப்பதை அவர் அறிமுகத்தால் உணரமுடிந்தது.

திரு. சம்பத்தின் துணைவியார் திருமதி பங்கஜம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். கல்வெட்டிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. பல கருத்தரங்குகளில் கல்வெட்டுத் தொடர்பான கட்டுரைகளை அவர் வழங்கியிருக்கிறார். திரு.சம்பத்தின் வழிகாட்டலில் பராசக்தி மகளிர் கல்லூரி பல தேசிய கருத்தரங்குகளை நிகழ்த்தியுள்ளது. பின்னாளில் நிகழ்ந்த மூன்று கருத்தரங்குகளில் நானும் நளினியும் பங்கேற்றிருக்கிறோம்.

குறைந்தது இருபது முறைகளாவது நளினி, வளர்மதியுடன் பழுவூர்ச் சென்றிருப்பேன். பல பயணங்களில் நண்பர் மஜீதும் இணைந்துகொண்டார். அனைத்துப் பயணங்களிலும் மேலாளர் பொறுப்பு திரு. ஆறுமுகத்திற்கே உரியதாக அமைந்தது. பயணக்களத்தை அடைந்ததும் நாங்கள் நால்வரும் கல்வெட்டுப் படிப்பில் மூழ்குவோம். திரு. ஆறுமுகம் எங்களுக்குத் தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்த பிறகே எங்களோடு இணைவார். அவரும் மஜீதும் இந்தப் பயணங்களால் இணைபிரியா தோழர்களாயினர். திரு. ஆறுமுகம் மிகுந்த நகைச்சுவை உணர்வு உடையவர். திரு. மஜீதை மிக மென்மையாக அவர் கிண்டல் செய்யும்போது மஜீது உட்பட நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்வோம்.

கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவர வளாகமே முதல் களமானது. வடவாயில் ஸ்ரீகோயில், தென்வாயில் ஸ்ரீகோயில் இரண்டிலுமே படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் இருந்தன. அவற்றின் பாடங்களைப் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் படிக்கவேண்டியிருந்தது. சில கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்த இடங்களில் இருந்த பாறை இடுக்குகளில் தேனீக்கள் உறைந்திருந்தன. எங்கள் அசைவுகளும் எழுத்துக்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள நாங்கள் மேற்கொண்ட தேய்ப்பு முயற்சிகளும் அத்தேனீக்களைச் சினங்கொள்ளச் செய்தன. அதனால், அவை சீறியெழுந்து எங்களைப் படிக்கவிடாமல் செய்தன. அதுபோன்ற சமயங்களில் திரு. ஆறுமுகத்தின் உதவி பெருந்துணையாய் அமையும்.

கீழையூர் ஆய்வின்போதுதான், 'இத்தளி தேவனார் மகளார்', 'இத்தளி தேவனார் மகனார்', 'இத்தளிக் கூத்தப்பிள்ளை', 'நக்கன்' என்பன போன்ற பொருளார்ந்த, இனிய தமிழ்த் தொடர்கள் அறிமுகமாயின. தேவனார் மகளார், நக்கன் என்ற சொற்களின் பொருள் குறித்துப் பல அறிஞர்கள் பிழையாகவே விளக்கம் கூறியிருப்பதை இந்த ஆய்வுக் காலத்தில் அறியமுடிந்தது. ஆய்வறிஞர்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் எண்ணற்ற பேராசிரியர்கள் களஆய்வுகள் மேற்கொள்ளாமல், இரண்டாம் நிலைச் சான்றுகளையே நம்பித் தங்கள் கருத்துக் கட்டடங்களை எழுப்பியிருக்கும் அதிசயத்தையும் இந்த ஆய்வுக் காலம் எங்களுக்கு உணர்த்தியது.

இரண்டாம் நிலைச் சான்றுகளை மட்டுமே நம்பியதாலும் மேலோட்டமான ஆய்வுப் பார்வையை மேற்கொண்டதாலும் கோயிலுக்குக் கொடையளித்த ஓர் ஆடல் மகளான நக்கன் குமரக்கனைப் பழுவேட்டரையர் மரபில் வந்த அரசர்களுள் ஒருவராகப் பேராசிரியர் ஒருவர் படம்பிடித்திருந்த அவலக் காட்சியை, அந்தக் கல்வெட்டைக் களத்தில் படித்தபோதுதான் எங்களால் அறியமுடிந்தது. நக்கன் என்ற சொல் ஆடல் மகளிரை மட்டுமே குறிக்கும் பொதுச் சொல் என்று ஓர் அறிஞர் எழுதியிருந்தார். ஆனால் நக்கன் என்ற முன்னொட்டுடன் பல ஆடவர் பெயர்களைப் பல கோயில்களின் கல்வெட்டுகளில் படிக்க நேர்ந்தபோது அந்தப் பேராசிரியரின் கருத்து வழுக்கலுக்காகப் பெரிதும் வருந்தினோம்.

கீழையூர் ஆய்வில் எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய புதையலாகப் பழுவூர்த் தளிச்சேரியைக் குறிப்பிடவேண்டும். பழுவூர்ப் பற்றி எழுதியிருந்த அறிஞர்கள் எவரும் பழுவூர்த் தளிச்சேரியைத் தங்கள் நூல்களில் குறிப்பிடவில்லை. இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரி, திருவாரூர் பெரிய தளிச்சேரி எனப் பல தளிச்சேரிகளைப் பற்றி அறிந்திருந்த எங்களுக்கு, பழுவூர்த் தளிச்சேரி பற்றிய கண்டுபிடிப்பு பேருவகையளித்தது. முதலாம் இராஜராஜரின் தேவியருள் ஒருவரான பஞ்சவன் மாதேவியைப் பழுவூர் இளவரசியாக அறிமுகப்படுத்தும் கல்வெட்டைப் படித்து மகிழும் வாய்ப்பும் கீழையூரில் அமைந்தது.

கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயிலின் கட்டமைப்பு தொடக்க நிலை ஆய்வுகளின்போது விளங்காப் புதிராக இருந்தது. அதைப் புரிந்துகொள்ளப் பல முற்சோழர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டோம். எனினும், கோயிற் கட்டடக்கலையில் அப்போது எனக்கிருந்த அநுபவ அறிவு போதுமானதாக இல்லை என்பதால் வளர்மதியின் ஆய்வுக்காலம்வரை எங்களால் அந்தப் புதிரை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. அர. அகிலா தம்முடைய முனைவர் பட்ட ஆய்விற்காகப் பழுவேட்டரையர் கோயில்களைத் தேர்ந்தபோதுதான் புதிர் விலகியது. தென்வாயில் ஸ்ரீகோயிலின் கட்டமைப்பு உன்னதமும் எங்களுக்கு உள்ளங்கைக் கனியாய் விளங்கியது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.