http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி
கம்பன் ஏமாந்தான்
லலிதாராம்

வாசகர்களுக்கு வணக்கம்.

சந்தித்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. நலம்தானே?

'இவன் காணாமல் போனவனாயிற்றே! இன்று எங்கு வந்தான்?', என்று நீங்கள் ஆச்சரியப்படுவது நியாயம்தான். நெடுந்துயிலை நீக்கி மீண்டும் வருவதெனில் ஏதேனும் காரணம் இல்லாமலா போகும்? இன்று எழுதாவிடில், வேறென்று எழுதி என்ன பயன்? உங்களுக்குத் தெரியாததா என்ன? இவ்விதழின் முகப்பைக் கடந்துதானே இங்கு வந்திருப்பீர்கள்!

இன்றொரு நன்னாள். எங்களை வரலாற்றுப் பாதைக்கு இட்டு வந்தவரின் மணி விழா! இந்நாளை நினைக்கையிலேயே மனம் களிப்பில் துள்ளிக் குதிக்கிறது! இந்நாளைச் சாக்காக வைத்து, மனச்சிறகை விரித்துப் பின்னோக்கிச் சென்று, முனைவர் கலைக்கோவனுடன் கழித்த, களித்த, மணியான கணங்களுள் சிலவற்றை அசைபோடப்போகிறோம் என்ற நினைப்பே எத்தனை சுகமாக இருக்கிறது!

பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் மட்டுமே தமிழர் வரலாறு என்றெண்ணியிருந்த காலத்தில் கலைக்கோவனைச் சந்திக்க நேர்ந்தது. அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததாலேயே, அவரிடம் எந்தத் தயக்கமுமின்றிப் பேச முடிந்தது. தமிழ்க் கல்வெட்டுகள் எல்லாம் கிரேக்க மொழியின் எழுத்துக்களைக் கடன் வாங்கி எழுதப்பட்டவை போன்ற பிரமையில் இருந்த என்னிடம், 'நீங்கள் தமிழர்தானே? தமிழ்ப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியெனில் நீங்கள் நிச்சயம் கல்வெட்டுகள் படிக்கலாம்' என்று கலைக்கோவன் கூறியதை, நான் முழுவதும் நம்பவில்லை எனினும், அவர் கூறிய விதம் ஏனோ என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் கண்ட விரற்கடையளவு அமெரிக்காவே, மொத்த அமெரிக்கா என்ற நினைப்பில், 'நீங்கள் கூறுவது போல, அமெரிக்காவில் எந்த ஒரு அருங்காட்சியகத்திலும் சோழர்காலச் சிலைகளைக் கண்டதில்லை', என்று கூறிய போது, என் அறியாமையைக் கண்டு எள்ளி நகையாடாமல், கோபத்தின் சாயை சற்றும் இல்லாது, தனது நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து, அமெரிக்காவில் கொலுவிருக்கும் சோழர்காலச் செப்புத்திருமேனிகளைக் காட்டினார். அப்போது என் அறியாமையின் ஒரு துளியை அறிந்து கொண்டேன். அம்முதல் சந்திப்பில், பேச்சு இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. அவரவர் தான் படித்ததையும் அறிந்ததையும் கூற, நான் மட்டும், 'சிலப்பதிகாரம் படித்திருக்கிறேன். இசையில் ஆர்வமுள்ளதால், அரங்கேற்றுக் காதையில் வரும் இசை நுணுக்கங்களை அறிந்து கொள்ள ஆவல் பல நாட்களாய் உள்ளது. நான் படித்த மட்டில், எத்தனை முயன்றும், இது நாள் வரை ஒன்றும் விளங்கவில்லை' என்றேன். இன்று எண்ணிப் பார்க்கையில், இப்பேற்பட்ட உளறல் களஞ்சியமாகவா நாம் அன்று திகழ்ந்தோம் என்று ஆச்சரியமாக உள்ளது. இதை விட ஆச்சரியம், நான் அரங்கேற்றுக் காதையைப் பற்றிக் கேட்டதே, என்பால் கலைக்கோவனை ஈர்த்தது என்று பல நாட்களுக்குப் பின் அவர் மூலமாகவே தெரிய வந்தது!

அந்த மாலைப் பொழுதில், அவருடைய தெளிவான பதில்களையும், அருமையான தகவல்களையும் கேட்டு மயங்காதவர் யாரும் இருந்திருக்க முடியாது. அவையனைத்தையும் மீறி என்னைக் கவர்ந்தது, நாங்கள் கேட்ட சில கேள்விகளுக்கு, சற்றும் தயங்காமல், 'எனக்கு அதைப் பற்றித் தெரியாது' என்று கூறிய பதிலே. அன்று அவர் என்ன பதில் கூறியிருந்தாலும், மறு வார்த்தையின்றி நம்பியிருப்போம். 'இவர்கள் நாவல் படித்து, அதை வரலாறு என்று நம்பும் கற்றுக் குட்டி கும்பல்தானே! ஏதோ ஒரு பதிலைக் கூறிவைத்தால் என்ன குறைந்துவிடும்?' என்று எண்ணாதிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து, எங்கள் கேள்விகள் வளர வளர, அச்சந்திப்பு பல மணி நேரமாகப் பெருகி, அவரது மருத்துவமனைப் பார்வைநேரத்தை ரத்து செய்ய வைத்தது. எங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ந்து, அடுத்தநாள் எங்களுடன் வருவதாகக் கூறியதும் நாங்கள் பெரிதும் மகிழ்ந்தோம். இருப்பினும், நாங்கள் எத்தகு இன்பத்தை அடையப் போகிறோம் என்று அப்போது உணர்ந்திருக்கவில்லை.

கருவறைத் தெய்வமும், விமானச்சுவரின் கோட்டத்தில் அமைந்திருக்கும் சில சிற்பங்களை மட்டுமே ஒரு கோயிலில் பார்க்க வேண்டியவை என்று எண்ணியிருந்தவனுக்கு, அவையெல்லாம் ஒரு கோயிலின் பல பரிமாணங்களில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே என்று உணர வைத்த பொன்னாள் அது. குனிந்து பார்க்க வேண்டிய கண்டபாதச் சிற்பங்களும், அண்ணாந்து பார்க்க வேண்டிய பூதவரியும், நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய கட்டிடக்கலை அம்சங்களும், அக்கால மக்களின், வாழ்க்கை முறையும், இசை, நாட்டியம் முதலிய கலை வரலாறும், பல மணி நேர உழைப்புக்குப் பின்னரே கைவசப்படும் கல்வெட்டு வாக்கியங்களும், அவ்வாக்கியங்களில் பொதிந்திருக்கும் உண்மைப்பொருளும், என்று அந்தப் புள்ளமங்கைப் பயணம் எத்தனை எத்தனை கதவுகளை அன்று திறந்து கொண்டே போனது? அத்தனைக்குள்ளும் நுழைந்து பார்க்கவா நேரமிருந்தது? எட்டிப் பார்க்கத்தான் நேரமிருந்தது. அந்நாளில் நாங்கள் அடைந்த இன்பத்துக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, அன்றைய தஞ்சைப் பயணம் அமைந்தது. அப்பயணத்துக்குமுன், பலமுறை தஞ்சைக் கோயிலுக்குச் சென்றுள்ளேன். அப்போதெல்லாம், அக்கோயில் சாந்ததார நாழியில் இருக்கும் ஓவியங்களைக் கண்டுவிட முடியாதா என்று ஏங்கியுள்ளேன். எத்தனையோ முறை முயன்றும் தோல்வியே. 'நீங்கள் பிரதமராகவோ, அல்லது குறைந்த பட்சம் மந்திரியாகவோ வாருங்கள். உங்களுக்குக் காட்டுகிறேன்' என்று தஞ்சாவூருக்கேவுரிய குசும்புக்கு ஆளாக வேண்டியிருந்தது. பல வருடங்களாய்த் தேக்கி வைத்திருந்த ஏக்கம் அன்று எதிர்பாராத தருணத்தில், நான் மந்திரியாகவும், பிரதமராகவும் ஆகாத நிலையிலும், தீரப்போகிறது என்று நினைக்க நினைக்க எனக்குள் ஏதோ ரஸவாதம் நிகழ்வது போல உணர்வு. அன்று அக்கோயிலைப் பற்றிக் கலைக்கோவன் வழியாகத் தெரிந்து கொண்டவை பல எனினும், மனம் முழுவதும் அவர் பேச்சில் இல்லை. விமானத்தில் ஏறும் போது, என்னிடமிருந்து நான் பிரிந்து, எனக்கு முன்னால் படியேறி, தாவிக் குதித்து, பறந்து சென்ற அதிசயத்தை நான் கண்டேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?



நாட்டிய கரணங்களைப் பற்றியும், சாந்தார நாழி ஓவியங்களைப் பற்றியும் கலைக்கோவன் கூற, அந்த மாலை வேளை மயக்கத்திலும், ஓரளவு காதில் விழுந்து கொண்டுதானிருந்தது, கைலாயத்தை அடையும் வரை! ஆம்! சுந்தரரின் வாழ்வை, ஒரு பேரோவியமாகத் தீட்டியிருக்கும், இராஜராஜன் காலத்து மந்திரக்கைகள், கைலாயத்தை அச்சுவருக்குக் கொண்டு வந்து, அங்கு சிவனாரையும், அவர் புடை சூழ அமைத்திருக்கின்றன. அதற்கு முன் பார்த்திருக்கும் சொற்பச் சிற்பங்களும்/ஓவியங்களும், அதற்குப் பின் பார்த்திருக்கும் எண்ணற்ற சிற்பங்களும்/ஓவியங்களும், என்னை இவ்வளவு பாதித்ததில்லை. இன்று நினைத்துப் பார்க்கையில், அவ்வோவியத்தில் இருக்கும் மற்ற சிவனார் வடிவங்களுக்கு உள்ள வேறுபாடு என்று என் உள்மனம் இதைத்தான் கூறுகின்றது. மற்ற உருவங்களில் சிவனார் அடுத்தவர் வீட்டில் இருப்பது போலும், இவ்வோவியக் காட்சியில், தன் வீட்டில் ஒய்யாரமாக அமர்ந்து, தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஓரக்கண்ணால் பார்த்து இரசித்தபடி, அவ்வப்போது முளைக்கும் புதியவரை, 'வந்தியா ஒருவழியா!', என்று ஒரு பிரத்யேகப் புன்னகையை அள்ளி வீசுவது போலவும் தோன்றுகிறது. இந்த விளக்கம், ஒப்பு நோக்குதல் எல்லாம் இன்றுதான் தோன்றுகின்றன. அன்று அவ்வோவியத்தைக் கண்ட போது, ஒரு பெரிய மகிழ்ச்சி அலை தாக்கி என்னை மூழ்கடித்தது மட்டுமே புரிந்தது. ஏன் என் உடல் நடுங்கியது, எதற்காக என் மனம் அத்தனை களிப்பில் ஆழ்ந்தது, ஏன் எனது காதுகளில் விழும் வார்த்தைகள், சுவற்றில் அடித்த பந்தைப் போல வெளியே சென்று விழுகின்றன? ஏன் என் கண்கள் அச்செம்மேனி இறைவனின், கொவ்வை இதழ் சிந்தும் புன்னகையைத் தவிர வேறொன்றைக் காண மறுக்கின்றன? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு பதில் காண முடியாது. பதில் கண்டுதான் என்ன ஆகப் போகிறது? இத்தனையும் எதற்குச் சொல்கிறேனெனில், கலைக்கோவனை முதல்முறை சந்தித்தபோதே, நான் எத்தனை இன்புற்றேன் என்று கூறுவதற்காகவே!

அதன் பின் சென்ற பயணங்கள் பல. அவற்றில் நாங்கள் கற்றது பல. கற்றலை விட, இன்னும் கற்க வேண்டியவை எவ்வளவு என்று தெரிந்து கொண்டவை பல. அப் பயணங்களின் போதெல்லாம், யாரேனும் ஒருவர் கலைக்கோவனை ஏதேனும் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே வருவோம். எப்போதாவது ஒருமுறை, எங்கள் வண்டிக்குள் மௌனம் நிலவும். அப்போதெல்லாம், என் மனம் இருப்பு கொள்ளாமல் தவிக்கும். "அடே! உனக்குக் கேட்க ஒன்றுமே இல்லையா? எத்தனைப் பெரிய கருவூலம் உன் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது? அத்தனை அசட்டுக் கேள்விகளையும், அசட்டை செய்யாமல், உனக்கு இவரை விட்டால் யார் பதில் கூற முடியும். எத்தனை புத்தகங்களைப் படித்து, எத்தனை சிற்பங்களைப் பார்த்து, எத்தனை கட்டுமானங்களை ஆய்ந்து, அழகான காப்ஸ்யூல்களாய் அவர் கொடுப்பவைதான் எத்தனை!! இன்னும், இன்னும் என்று பறந்தடித்துக் கொண்டு அவரிடம் கேள்விகளைக் கேட்க வேண்டாமா?", என்று என் மனது எனைச் சாடிக் கொண்டேயிருக்கும். அடுத்த கேள்வி நெஞ்சில் தோன்றும் வரை தவிப்புதான். கேள்வி வரலாறு சம்பந்தமாகத்தான் என்று இல்லை. அப்பயணங்களின்போது, வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி விவாதித்து இருக்கிறோம். சங்க இலக்கியம், பாரதி, சினிமாப்பாடல்கள், மருத்துவம், மனோதத்துவம், அரசியல், சினிமா என்று அலசாத விஷயங்களே இல்லை. அவரது நகைச்சுவை உணர்வும், எளிமைப் பாங்கும் என்னை நாளுக்குநாள் அவர் வசம் இழுத்தன. நாளடைவில், அவரும் எங்கள் அனைவரையும் நெருக்கமாக உணர்ந்து, நாங்கள் வளர வேண்டுமென்று மனமார நினைத்து, கவலையுற்று, அதற்காக முயற்சியும் செய்து, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தூண்டிக்கொண்டும், வாய்ப்புக் கிடைக்காதபோது, வாய்ப்புகளை உருவாக்கியும் வந்தார்.

நானும் இலாவண்யாவும், முதன்முதலில் குன்றக்குடியில் ஒரு சிறிய கல்வெட்டைப் படியெடுத்து வந்தபோது, எங்களைவிட அவர்தான் அதிகம் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த அவ்வூர்ப் பெரியவரிடம், பெருமிதம் பொங்க நாங்கள் படித்து வந்ததை கூறினார். முதல் ராங்க் வாங்கி வந்த குழந்தையின் ப்ராக்ரஸ் கார்டைப் பார்த்து மகிழும் அன்னையைப் போல நடந்து கொண்டார். இத்தனை பொறுமையாய், இத்தனை அன்பாய், இத்தனை அழகாய் எங்கள் கைப்பிடித்துச் செல்லும் அன்னையாய் முதலிலும், நாங்கள் சற்று வளர்ந்ததும், 'இன்ன இன்ன செய்யலாமே' என்று அறிவுரை வழங்கும் ஆசானாகவும், எங்கள் தேர்ச்சி சற்றே வளர்ந்ததும் 'நான் வராவிடினும் கூட, நீங்களே ஆராயலாமே' என்று கூறி வழிகாட்டியாகவும், வலஞ்சுழிப் பயணங்கள் எங்களை வளப்படுத்தியபின், 'நான் எழுதியதையெல்லாம் சரி பார்த்துவிடுங்கள்', என்று எங்களை சமதையாக நடத்தும் நண்பனாகவும் (அவர் நடத்தினார் என்பதற்காக, என்னை நான் அவருக்குச் சமதை என்று உணர்வேன் எனில், என்னை விட அறிவிலியும் இருக்க முடியுமோ?') அவரைப் பெற்றதெல்லாம் பெரும்பேறுதான்! இவை எல்லாவற்றிற்கும் மேல், என் நலனில் அக்கறை கொண்டு, எந்த ஒரு கலக்கத்தின் போதும் தோள் கொடுக்கும் அண்ணனாக அவரைப் பெற்ற பேற்றிற்கிணையாக மற்றொன்றைக் கூற முடியாது.

இயற்கையாகவே சற்றுப் பொறுமையில்லாதவன் நான். எப்போது பார்த்தாலும், வலதா இடதா என்று கேட்டுக் கொண்டே அலைபவன். இரண்டும் கெட்டான் நிலை என்னைப் பரிதவிக்க வைத்துவிடும். வழி தானாகப் பிறக்கும் வரை காத்திருக்கப் பொறுமை எனக்குச் சிறிதும் கிடையாது. ஆனால், அத் தவிப்பைச் சந்திக்காமல் வாழ்க்கையை நகர்த்த முடியுமா என்ன? அச்சமயங்களில் எல்லாம் சமயசஞ்சீவியாய்க் கலைக்கோவனைப் பெற நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். எத்தனையோ முறை, என் அவசரத்தனத்தைப் பொறுமையாகச் சுட்டிக்காட்டி, என்னைப் பொறுமையுறச் செய்திருக்கிறார்.

"உங்களைப் பற்றி இராம் அவதூறு பேசுகிறான்", என்று பலர் மூலமாக அவர் காதுக்குச் செய்தியெட்டியும், 'இது வதந்தியாகவே இருக்க முடியும். இராம் அப்படிச் செய்பவனில்லை', என்று தங்களிடம் கூறியவரிடம் எல்லாம் வக்காலத்து வாங்கியதை அறிந்ததும், நெகிழ்ச்சியில் துடித்தேன். ஆம், இன்ப வேதனைதான் அது! 'ராம்! இப்படி ஒரு பேச்சு நிலவுகிறது. உங்களைப் பற்றித் தவறாகக் கூறச் சிலர் கிளம்பியுள்ளனர்', என்று அந்த அதிர்ச்சிச் செய்தியை என்னிடம் கூறியவரே கலைக்கோவன்தான். என் மேல் அவ்வளவு நம்பிக்கையா? அதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ? இப்பொழுது நினைப்பினும் மனம் கலங்குகிறது. ஒருவேளை என்னைப் பற்றிக் கூறியோரின் வார்த்தையை இம்மியளவு உண்மையிருக்கும் என்று நம்பியிருந்தால்கூட, எனக்கு அது எத்தனை பெரிய இழப்பு? அவ்விழப்பு நேராமல் இருந்ததற்கு அவரது பெரும் உள்ளமும், எனது நல்ல நேரமுமே காரணம்.



அவரிடம் கற்றவை, நாங்கள் கண்டவை, தஞ்சைக்கோயில் விமானத்தின் சிகரத்தை இரண்டுமுறை எட்டிப் பிடித்தது, வலஞ்சுழி வளாகத்தில் ஆய்வென்றால் என்ன என்று கற்றது, வரலாறு.காம் தொடங்கியது, அவரால் கிடைத்த நட்புகள், ஐராவதம் மகாதேவன் போன்ற பெருந்தகைகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு, அவரால் தூண்டப்பட்டு நான் முதன் முதலில் கலந்து கொண்ட கருத்தரங்கு, அருகிலிருந்து நான் பார்த்த அவர் உழைப்பு, ஆய்வுமுறை, உண்மைக்காக மெனக்கெடும் தன்மை, என்று என்னவெல்லாமோ சொல்ல நினைத்திருந்தேன். அவரின் மற்ற பரிமாணங்களைச் சொல்லுமுன், அன்பைப் பொழியும் அண்ணனாகிய பரிமாணத்தை எழுதியபின், வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கம்பன் ஏமாந்தான்! கடன்பட்டார் நெஞ்சம் கலங்கிடுமென்றான்!
வாழ்நாள் முழுதும் உழைத்தால்கூடத் தீர்ந்திடாது என்கடன்.
நாளுக்குநாள் கூடும் கடன்கண்டு கலக்கமில்லை, உவகையே!
தாங்கள் திறந்து வைத்த இன்பக் கதவுகள்தான் எத்தனை?
அத்தனைக்கும் நன்றி கூற வார்த்தைக்கு வலுவில்லை.
என் உவகைக்குக் கொடையளித்த ஆசானாகவும்,
எத்தகைய கலக்கத்தின்போதும் தோள்கொடுக்கும் அண்ணனாகவும்
தங்களைப் பெற என்ன புண்ணியம் செய்தேனோ!

பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, பெருமைகள் பல பெற்று இன்னும் பல வரலாற்றுக் கொடைகள் அளிக்க என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
லலிதா (ராம்)


this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.