http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 46
இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
மனிதர்கள் சுவாரசியமானவர்கள். படிக்கப் படிக்கச் சுவையானவர்கள். மனிதர்களை இரசிப்பதும் ஒரு கலையே. சிலரோடு பேசப் பிடிக்கும், பழகப் பிடிக்கும். இன்னும் சிலரைப் பார்க்க மட்டுமே பிடிக்கும். நம் மனோநிலை பொறுத்து மனிதர்கள் தெய்வங்களாக, மானிடர்களாகத் தெரிவார்கள். மனிதர்களோடு ஏற்படும் முதல் சந்திப்புகள் நினைவில் நின்று, மனதில் நீங்கா இடம் பிடிப்பவை. டாக்டரோடு ஏற்பட்ட முதல் சந்திப்பை பற்றியெல்லாம் எழுதுங்கள் என்று வரலாறு.காம்மின் பிரம்மாவிடமிருந்து போன் 09.04.08 அன்று மாலை வந்தது. நன்றி பிரம்மாவிற்கு மிக்க நன்றிகள் பல. மனசின் மடியில் மலரும் நினைவுகள் மனசின் மடியில் சுகம் மீட்ட, இதோ... பெரும் மழை பெய்து மனதையும், மண்ணையும் நனைத்திருந்த அக்டோபர் 2005ம் ஆண்டு இராஜராஜனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று உறுதிசெய்திருந்த காலம். டாக்டர் கிளினிக் தேடிச் சென்றேன், ஒரு வழியாக. (அவரைக் கண்டுபிடித்தது ஒரு தனி அத்தியாயம்) அறிமுகத்திற்குப் பிறகு, இராஜராஜனின் மேலாண்மைச் சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றேன். ஏன் இராஜராஜன் பற்றி? அவன் என்ன உயர்வு? என்ன சிறப்பு? உத்தமன் ஒரு நல்ல ஆட்சியை ஏற்படுத்தியிருந்தான். நாடெங்கும் அமைதி நிலவிற்று. சௌகரியமாய் இராஜராஜன் அரசுக்கட்டிலில் அமர்ந்தார். என்ன பெரிய சாதனை? என்று சாதாரணமாகச் சொன்னார். ஆகா, ஆரம்பமே இப்படியா. அதுவும் உத்தமன் புகழா. வாய் அடைத்து போனேன். துணிவை வரவழைத்துக் கொண்டு நானே பேச்சைத் தொடர்ந்தேன். பல வருடங்களாய் மனதைத் துன்புறுத்திய விஷயம் கேட்டேன். இராஜராஜன் தற்கொலை செய்துக் கொண்டாரா? டாக்டரின் கண்களில் ஒரு மின்னல் வெட்டு. ஆனால், கண்டிப்பான குரலில், ஓர் இயற்பியல் மாணவி ஆதாரங்கள் இல்லாமல் ஒரு முடிவிற்கு வரலாமா? நம்பலாமா? நெஞ்சில் சம்மட்டிகள் விழுந்தன. நெஞ்சை அழுத்திய பாரங்களை (பாறைகளை) எல்லாம் சம்மட்டிகள் தூள்தூள் ஆக்கின. மனம் பறவையாய்ப் பறந்து மகிழ்ந்தது. என் சுமையை இறக்கி, இளைப்பாற்றிய பெருந்தகை. என்றும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மற்ற கேள்வி - பதில்கள் என் அறியாமையை வெளிப்படுத்தும். டாக்டர் வெளிப்படமாட்டார். எனவே, இதோடு முதல் சந்திப்பின் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி. அறிவுப்பூர்வமான அணுகுமுறை உடையவர், நேர்மையானவர், நல்லவர். என் சிற்றறிவிற்கு எட்டியது இவ்வளவே. நும்மினும் சிறந்தது நும் காதல் ஏதோ ஒரு ஜன்மத்தின் தவமாய், வரமாய் டாக்டர் தெரிந்த நாள் 9.01.06 திங்கட்கிழமை. அன்று எனது 3வது (அ) 4வது சந்திப்பு. டாக்டர் தன்னுடைய "காதலாகிஸஸ" பிரதிகளில், இராசராசனை நேசிக்கும் இளம் உள்ளத்திற்கு என்று எழுதித் தன் கையொப்பத்தையிட்டு எனக்குக் கொடுத்தார். பஸ் பிரயாணம் முழுவதும் அதைப் படித்தேன். (அன்று வானவெளியில் சிறகடித்து, வலதுகாலைச் சுளுக்கிக் கொண்டது தனி அத்தியாயம்). அறிவு சார்ந்த உளப்பூர்வமான ஆழ்ந்த காதல் டாக்டரைப் பற்றி எல்லாம் உரைத்தது. இராஜராஜனின் மேல் இத்தனை வாஞ்சையா? கண்கள் பனித்தன. அன்று முதல் அவரிடம் அதிகம் பேசுவது நின்று விட்டது எனக்கு. "இராஜராஜனின் அடியார்" என்பதாகவே அவரை அன்று முதல் காண்கிறேன். கடந்த பல ஆண்டுகளாய் இராஜராஜனை நெருங்கிப் புரிந்து கொள்வதற்காகப் பல ஆய்வுகளில் தன்னையே தன் காதலனுக்காகக் கரைத்துக்கொள்ளும் ஓர் உண்மைக்காதலன். இராஜராஜீசுவரத்து விமானம் அளவு ஓங்கி நிற்கும் அந்த காதல்முன், இராஜராஜசோழனும் கைகூப்பி வணங்குவார். காதலின் பரிமாணங்களைத் தன் மவுனத்தாலும், எழுத்தாலும் வெளிப்படுத்தும் பண்பாளர். ஒன்றும் தெரியாமல் குப்பைகளைப் படித்துவிட்டு வரலாற்றின் வாசலை மிதிக்கும் என் போன்றோருக்கு ஒரு வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் விளக்குபவர். 29.01.06 ஞாயிறு அன்று டாக்டர் கிளினிக்கில் வரலாறு.காம்மின் இராம் மற்றும் இலாவண்யா நேர்முகமானார்கள். டாக்டர் வீட்டிலும் அந்தச் சந்திப்பு தொடர்ந்தது. வேற்று கிரகவாசிகளாய் அவர்கள் வரலாற்று உலகில் சஞ்சரிக்க, நான் மிட்டாய்க்கடையை ஆவலுடன் வேடிக்கை பார்க்கும் குழந்தையாய் அமர்ந்திருந்தேன். அறிவார்ந்த, ஆழமிக்க, அடர்த்தியான கருத்துரையாடல் நடந்தது. அதை நேரில் கண்டது என்பேறு. ஒரு சந்திப்பில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அறிமுகமானார். இப்படிப் பல நல்ல அறிமுகங்கள் எனக்கு டாக்டர் மூலமாகவே கிடைத்தது. (வரலாறு.காமின் பிரம்மாக்கள் எல்லாம் அவர் வாயிலாகவே அறிமுகமானார்கள்). பின்வந்த நாட்களில் நேர்சந்திப்புகள் தொடரவில்லை. என் உடல்நிலை காரணமாகவும், தொழில் ரீதியான போராட்டங்கள் பலவற்றினாலும் சந்திப்புகள் அரிதாகிவிட்டன. நிதர்சன வாழ்க்கையை, மனிதர்களை நான் கற்றுக்கொண்ட காலம். தொலைபேசியில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே பேசுவேன். போன் எடுத்தவுடன் கேட்பார், "அவர் எப்படிம்மா இருக்கார்?" என்று அவர் காதலரைப் பற்றி என்னிடம் விசாரிப்பார். இராஜராஜனை விட்டுவிலகாதே என்று எனக்கு நேரிடையாகச் சொல்லாமல் சொல்லிய கீதை அது. மறைமுகமாக அறிவுரை கூறும் பாங்கு இனிது, இனிது. அக்டோபர் 2005 முதல் இன்றுவரை அவருடன் நான் பேசி, பழகிய மணித்துளிகளைக் கணக்கிட்டால், 20 மணி நேரத்திற்கும் குறைவே. டாக்டரை ஒரு தனிநபராக எனக்கு தெரியாது. இராஜராஜனின் அடியார் என்ற கண்ணோட்டம் அளவிலே பழக்கம், தெரியும். டாக்டரைவிட அவர் காதல் பெரிது. ஆமாம், "நும்மினும் சிறந்தது நும் காதல்", அன்றோ? (காதல் உயர்வானது தான், ஆனால் அது மனிதர்களால் தான் மரியாதைக்குரியதாய், உன்னதமானதாய், புனிதமாய் ஆகிவிடுகிறது). சகயாத்திரையில் சிநேகக் கரமாய், இராஜராஜசோழனைத் தேடும் என் யாத்திரையில் சிநேககரம் நீட்டி வழிகாட்டியாய் டாக்டர். விளங்குகிறார். எனக்குத் துணைவலியாய் வரலாறு.காம் நண்பர்களை அறிமுகம் தந்தவரும் அவரே. மேற்கொண்டு எழுத ஒன்றும் தோன்றவில்லை. நெஞ்ச ஏடெல்லாம் அறிவாய் - ஏட்டின் எழுத்தெல்லாம் களிப்பாய் விளங்கும். டாக்டர் சார், You should live through many more April 20's. Let each April 20 take you closer to Mr. Rajaraja cholan's ideals. You should see many more full moons in your life. உங்களின் வணக்கத்துக்குரிய காதல் வாழ்க! உங்கள் காதலரும் வாழ்க! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |