http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > பயணப்பட்டோம்
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
சு.சீதாராமன்

வரலாறு.காம் வாசகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ்ப்புத்தாண்டு அன்று எங்கு செல்லலாம் என்று நானும் நமது கெழுதகை நண்பர் திரு பால. பத்மநாபனும் யோசித்துக்கொண்டிருந்தோம். உடனே அப்பர் பெருமான் அழைத்துப்பாடிய "வந்து கேண்மின், மயல் தீர் மனிதர்காள்" என்ற திருக்குறுந்தொகைப்பாடல் நம் நினைவிற்கு வந்தது. அப்பாடலை உங்களின் சிந்தை மகிழவும் நீங்களும் சிவபெருமானின் "பந்து" (விளையாடும் பந்தல்ல- உறவினர் என பொருள் கொள்க) ஆகவும் உங்களுக்கு இங்கே அளிக்கின்றேன்.

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப
பந்து ஆக்கி உயக்கொளும் காண்மினே

புத்தாண்டு தினத்தன்று அன்று இறவனின் "பந்து" ஆகிவிடுவது என்று தீர்மானித்து "கோவிந்தப்புத்தூர்" என்று இந்நாளிலும் "விஜயமங்கை" என்று கல்வெட்டுகளிலும் "அப்பர்" பாடல்களிலும் அறியப்பெற்ற கோவிந்தபுத்தூரை நோக்கிப் பயணமானோம்.

திருவிசயமங்கை என்பது காவிரியின் வடகரைத்தலங்கள் 63 இல் ஒன்று. இவ்வூரைப்பற்றி அப்பர் திருக்குறுந்தொகையில், "கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூர்" என்று குறிப்பிட்டுள்ளமையும், பசு பூசித்த வரலாற்று உண்மையுமே (கண்ட பாத சிற்பங்களில் பசு லிங்கத்தை பால் சொரிந்து பூஜிப்பது போல் உள்ள சிற்பம் காணப்படுகிறது. இவ்வூருக்கு கோகறந்தபுத்தூர் என்றுமொரு பெயரும் உண்டு) இதனை வலியுறுத்துகின்றன. இன்று கோவிந்தபுத்தூர் என மருவி வழங்குகிறது. (இவ்வாறு பாடல் பெற்ற இவ் விஜயமங்கை ஸ்தலத்தை கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள "திருவைகாவூர்" ஸ்தலம்தான் விஜயமங்கை என தவறாக புரிந்து கொள்வோரும் உண்டு)





கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில்
வெள்ளிடைக் கருள் செய்விசயமங்கை,
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிடத் தலையற்றது அயனுக்கே

பிரம்மாவும் சதாசிவன் போல ஐந்து தலை உள்ளவனாகத்தான் ஒருகாலத்திருந்தான். அவன், தானும் சிவபெருமானும் ஒன்றே என்று கூறிச் "தலை"க்கனமுற்றான். அப்போது பெருமான், பைரவரை அனுப்பி பிரம்மனின் நடுத்தலை - உச்சித்தலையைக் கிள்ளி எடுக்கச் செய்தான் என்பது வரலாறு. அது இப்பாடலில் குறிக்கப்படுகிறது. கோவிற்கும், விசயனுக்கும் அருள் செய்த வரலாறு குறிக்கப்படுவதால் இதுவே கோவந்தபுத்தூராகிய விசயமங்கை எனப்பெறுகிறது. மேலும் பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் பணி செய்து, வேண்டிய வரங்களைப் பெற்றான் என்பதும், இப்பதிகத்தில் காணப்படுகிறது. விசயனாகிய அர்ச்சுனன் பூஜித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது. அப்பாடல் இதோ.

பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரம் கொள்விச யமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே

"கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கையே" என "ஆளுடைய பிள்ளை"யும் இத்தலம் பற்றி அருளியிருக்கிறார்.

இறைவரின் திருப் பெயர் :- விஜயநாதர்.
இறைவியின் பெயர் :- மங்கை நாயகி.



சரி கோயிலைச் சற்று வலம் வருவோம்.

இத்திருக்கோயிலில் இப்போது திருப்பணி நடைபெறுகிறதாம். ஆனால் நம்மைத்தவிர ஒரு ஈ, காக்கை கூட அங்கு காணப்படவில்லை. நமக்குத்தெரிந்த நண்பரை அழைத்துத் திருக்கோயிலின் சாவியை வாங்கிவரச் சொன்னோம். சாவி வந்தவுடன் நண்பர் திரு பால பத்மநாபன் ஆர்வமுடன் உள்ளே சென்றார். நான் அங்குள்ள நண்பர்களிடம் உரையாடிவிட்டு உள்ளே சென்றவுடன் கண்ட காட்சி, திரு பால பத்மநாபன் சப்தமாதர்களைப் படமெடுத்துக் கொண்டிருந்தார். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் "மேலைப்பெரும்பள்ள" பயணத்தின் போது ஆலங்குடியில் நம்மை விட்டுவிட்டு சப்த மாதர்களைப் படமெடுக்கச் சென்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு. ( படம் காண்க)



இத்திருக்கோயிலின் அதிஷ்டானம் பத்மஜகதி, கம்பு, உருள்குமுதம், கண்டம், கபோதம் மற்றும் வேதிகை பெற்றுக் கபோதபந்தத் தாங்குதளமாய் அமைந்துள்ளது. கருவறையின் தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் மேற்குக்கோட்டத்தில் சங்கு சக்கரத்துடன் விஷ்ணுவும், வடக்குக்கோட்டத்தில் நான்முகனும் அமைந்துள்ளனர்.

முகமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையில் ஓர் "ஒடுக்கம்" உள்ளது. முகமண்டபத் தெற்குக் கோட்டத்தில் கிழக்கிலிருந்து மேற்காக விநாயகர், சிதைந்த நிலையில் நடராஜர் மற்றும் சிற்பம் காணப்படாத ஒரு கோட்டமும் உள்ளது. முகமண்டப வடக்குக் கோட்டத்தில் கிழக்கிலிருந்து மேற்காக பிச்சாடனர், துர்கை மற்றும் சிதைந்த நிலையில் காலசம்ஹாரமூர்த்தி ஆகியவை காணப்படுகின்றன.





இக்கோயிலின் கண்டத்தொகுதியில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. திருப்பணி செய்வோர் சுற்றுப்புறத்தைச் சற்று நன்றாக வைத்திருக்கலாம். மிகவும் மோசமான நிலையில் சுற்றுச்சூழல் அமைந்திருந்தது. நாம் வந்த சற்று நேரத்திற்குள் ஒரு சிறுவர் படை ஒன்று வந்தது. விறுவிறுவென்று தளத்தின் மீதேறி விளையாட ஆரம்பித்தது. அவ்விளையாட்டின் விளைவாக நம்முடைய புகைப்படக்கருவி செயலிழந்தது. நாம் சற்றுநேரம் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு இறைவனை வணங்கி இறைவனின் "பந்து" வாகி அங்கிருந்து சென்று விட்டோம்.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், பரகேசரி உத்தமசோழன், முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், மூன்றாங் குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர், விஜயமங்கலமுடைய பரமசாமி என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இக்கோயில் விமானத்தைக் கல்லால் கட்டியவன்:

விசயமங்கலமுடைய பரமசாமிக்கு ஸ்ரீ விமானத்தைக் கல்லால்
எழுந்தருளுவித்தவன் உடையார் மும்முடிச்சோழதேவர் பெருந்தரத்து
குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான
விக்கிரமசோழ மகாராஜன் ஆவன். (SII Volume XIII)

இச்செய்தி முதலாம் இராஜராஜ சோழனின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

வழிபாடுகள்:

இக்கோயிலில் அர்த்தயாமம் உள்பட நான்கு போதுகளில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இவ்வழிபாட்டுக் காலங்களில் திருவமுதுக்கு அரிசிக்கும், பொரிக்கறியமுது, புழுக்கறியமுது ஆக கறியமுது இரண்டுக்கும் நெய்யமுது, தயிரமுது, இவைகளுக்கும், அடைக்காய் அமுது வெறுங்காய் இவைகளுக்கும், சந்தனம், சந்தனக்குழம்பு, கற்பூரம் இவைகளுக்கும், ஆடி அருளப்பாலுக்கும், ஆடைக்கும், நுந்தாவிளக்குக்கள் ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு, உச்சியம்போது எட்டு, இரவுக்குப் பதினான்கு சந்திவிளக்குகளுக்கும் பிறவற்றிற்குமாக வடபிடாகை நெடுவாயிலிலும் இந்நெடுவாயிலைச் சுற்றிய பிடாகைகளிலும் உள்ள நிலங்களை நிவந்தங்களாக அம்பலவன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப் பல்லவரையன் அளித்திருந்தான்.

எழுந்தருளுவித்த திருமேனிகள்:

முதலாம் இராஜராஜசோழனின் ஏழாம் ஆண்டில் அம்பலவன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப்பல்லவரையன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமாளையும், உமாபட்டாலகியையும் எழுந்தருளுவித்து, அவர்களுக்கு அணிகலன்களைக் கொடுத்துள்ளான்.

திருமடம்:

இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இவ்வூர் முதலாம் இராசேந்திர சோழன் கல்வெட்டில், வடகரை இராஜேந்திர சிங்கவளநாட்டுப் பெரியவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்து விசயமங்கை என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாங் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் விக்கிரமசோழவள நாட்டு இன்னம்பர் நாட்டு விசய மங்கை எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

பிறசெய்திகள்:

பெரியவானவன்மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் சபை ஒன்று இருந்தது. அச்சபையார்க்குப் பெருங்குறிப் பெருமக்கள் என்று பெயர். அவர்கள் கூட்டம் கூடுவதற்குமுன் தட்டழிகொட்டிக் காளம் ஊதச்செய்து, நடுவில் ஸ்ரீ கோயிலான வினையாபரண விண்ணகரப் பெருமானடிகள் கோயிலின் முன்பில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து கோயில்காரியங்களைக் கவனித்துவந்தனர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று "வாழ்க அந்தணர்" என்று தொடங்கும் தேவாரப்பாடலுடன் தொடங்குகின்றது.

இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜ சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் "இவ்வொட்டோலைப்படியே கல்லில் வெட்டவும் சாசனம் செய்வித்துக் கொள்ளவும் பெறுவார் ஆக ஒட்டி இறைகாவல் ஒட்டோலை (Agreement) இட்டுக் குடுத்தோம்" என்னும் தொடர்கள் காணப்படுகின்றன. (A.R.E 1929 no 157-194)

மீண்டும் வேறொரு கோயிலில் சந்திப்போம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.