http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
நீலன்

1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில்


இறைக்கோயில்கள் பெரும்பாலும் சமுதாயத்தோடு இணைந்து மக்களின் வாழ்க்கையோடு பிணைந்து பலதரப்பு மக்களின் தொழில்களையும் தனக்குள் ஐக்கியப்படுத்தி விலையில்லாக் கலைகளை எல்லாம் நிலைமாறாமல் வளர்த்து வந்தது ஒரு காலம்.

மும்முடி வேந்தர்களிலே முதன்மையாய் வாழ்ந்த சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில் இயலும், இசையும், உளி ஓசையும், காவியமும், ஓவியமும், நாட்டியமும் இன்னும் எண்ணற்ற கலைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு திருக்கோயிலை மையப்படுத்தி வளர்ந்து வந்தன. அப்படி வளர்ந்து வந்த கலைகளும், கற்கோயில்களும் இன்று தளர்ந்துபோய்த் தள்ளாடித் தரைமட்டமாகிவிடும் நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் உள்ள கோயில்களில் ஒரு திருக்கோயில்தான் மானம்பாடியில் உள்ள நாகநாதசுவாமி கோயிலாகும்.

குடமூக்கு, குடந்தை என்று சொல்லப்பட்ட கும்பகோணம் நகரிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சாலையின் ஓரத்தே பஸ்ஸில் பயணிப்போர் பார்வையில் பட்டும் படாமலும், பாதசாரிகளின் பார்வைக்கு இலக்காகிப் பாராமுகம் பெற்றும், பக்கமேயுள்ள பக்தர்களின் பராமரிப்பு ஒன்றில் மட்டுமே உயிர் பெற்று ஊசலாடிக்கொண்டு, சுமார் 1000 வருட நினைவுகளையெல்லாம் அசைபோட்டுக்கொண்டு காலச்சக்கரத்தின் பிடியிலே சிக்குண்டு, சிதறுண்டு தனது பரிவாரங்களெல்லாம் போன திசை தெரியாமல் சீர்கெட்டு நிற்கிறது.

கோபுரமும், அடைக்கப்படக் கதவுகளுமின்றிக் கிழக்குப்பார்வையாய் உள்ள கருங்கல் தளத்தின்மீது செங்கல்லால் கட்டப்பட்ட வாயில்தான் இத்திருக்கோயிலின் நுழைவாயில். இந்நுழைவாயிலிலிருந்து சமீபத்தில் அண்டை மாநிலத்தார் கட்டிக்கொடுத்த மதில்சுவர் தெற்கு வடக்காகப் பிரிந்து பின் மேற்கில் சென்று கோயிலைத் தனிமைப்படுத்துகின்றது.

இவ்வாயில் வழியே நுழைந்தால் சுற்றிலும் எங்கும் செடி கொடிகள்! புல் பூண்டுகள்! அங்கொன்று இங்கொன்று என்று இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள செடி கொடிகளுக்குத்தான் மனிதர்களைவிட ஆண்டவன் மீது அதிக ஆசை போலும். அதனால்தான் அவன் ஆலயத்தின்மீது பின்னிப்பிணைந்து இருக்கின்றன. ஒரு காலத்தில் திருச்சுற்றாய் இருந்து இன்று புதர்மண்டிக்கிடக்கும் இடத்தில் பரிவார தெய்வங்கள் இருந்த சிற்றாலைக்கோயில்கள் இன்று சிதறுண்டு செங்கல்மேடாய்க் காட்சியளிக்கின்றன.

இந்நுழைவு வாயிலிலிருந்து சுமார் ஆறடி அகலத்தில் சிமெண்ட் நடைபாதை போடப்பட்டு ஒரு மேடையில் போய் முடிவடைகிறது. இம்மேடையின்பின் முகமண்டபம் கருவறை என்ற அமைப்பில் இறைவனின் திருமுன் கிழக்குப்பார்வையாய் காட்சியளிக்கிறது. இத்திருமுன்னின் முன்பு வடக்குப்புறத்தில் தெற்கு முகமாய் இறைவியின் திருமுன்.

இறைவனின் பெயர் - அருள்மிகு நாகநாதசுவாமி
இறைவியின் பெயர் - செளந்தரநாயகி அம்மன்

கட்டடக்கலை

கருவறை 19'9" சதுரக் கருவறையின் தாங்குதளம் உபானம், ஜகதி அதன் மேல் ஊர்த்தவ பத்ம வரி, கம்பு, தாமரை வரிகளால் அணைக்கப்பெற்ற உருள்குமுதம், பாதங்களும், கம்பும் பெற்ற கண்டம், தாமரை வரிகளால் அணைக்கப்பெற்ற பட்டிகை ஆகியவை பெற்றுp பாதபந்தத் தாங்குதளமாய் அமைந்துள்ளது. பட்டிகையை அடுத்துத் தாழ்தாமரை வரிகளால் தழுவப்பெற்ற வேதிகை, துணைக்கம்பு, சுவர், கூரை என்ற உறுப்புகள் பெற்ற இவ்விமானத்தின் கீழ் மூன்று உறுப்புகள் கருங்கல் பணிபெற்றும் இரண்டாம் தளம் அதன் மேல் இருக்கும் உறுப்புகளான கிரீவம், சிகரம் ஆகியவை செங்கல் பணிபெற்றும் அமைந்து இருதள வேசரமாய்க் காட்சியளிக்கிறது.

கருவறையின் மூன்று பக்கங்களிலும் உள்ள ஜகதி மற்றும் குமுதத்தில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வேதிக்கண்டத்தில் சிற்றுருவச்சிற்பங்கள். இதில் இராமயணத்திலிருந்தும், சிவபுராணத்திலிருந்தும் சில காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

மேலெழும் விமானச்சுவரிலிருந்து, கர்ணப்பத்தியும் சாலைப்பத்தியும் முன்னிழுக்கப்பட்டுப் பிதுக்கமாய் அடித்தளம் வரை அமைந்துள்ளது. சாலைப்பத்தி கர்ணப்பத்தியிலிருந்து சற்றே முன்னிழுக்கப்ப்ட்டு, சதுரபாதம் கொண்ட ருத்ரகாந்தத் தூண்களைக்கொண்டு அணைவு பெற்றுள்ளன. இரு கர்ண பத்திகளும் இந்திரகாந்தத் தூண்களைக்கொண்டு அணைவு பெற்றுள்ளன. இரு கர்ண பத்திகளிலும் அஞ்சலி ஹஸ்தத்துடன் அடியவர்களின் சிலை காட்டப்பட்டுள்ளது. கர்ணப்பத்திக்கும் சாலைப்பத்திக்கும் இடையில் உள்ள ஒடுக்கங்கள் பஞ்சரங்களைக்கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. இப்பஞ்சர மேல் வளைவுகளில் அடியவர் ஒருவர் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார்.

தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை ஆகியவை கொண்டுள்ள தூண்களிலிருந்து எழும் வீரகண்டத்தின் மீது அமர்ந்த போதிகைகள் கொடிக்கருக்குள்ள பட்டை கொண்டு விரிகோணத்தில் கைநீட்டி உத்திரம் தாங்க மேலே வாஜனம், வலபி. வலபியில் பூதகணங்கள். இதன் மேல் கூரையும் தளமுடிவைக்காட்டும் பூமிதேசமும் உள்ளன.

இரண்டாம் தளத்தில் கர்ணகூடும் சாலையும் சிதறுண்டு போய்ச் செங்கல் பணியாக உள்ளது. கிரீவ நாசிகைகள் முன்னிழுக்கப்பட்டுச் சாலையின் மீது அமர்ந்துள்ளன. பூதவரி கொண்ட வலபியின் மீதமர்ந்த கூரை முன்னிழுக்கப்பட்டு நாசிகைகள் பெற்ற கபோதமாகக் காட்சியளிக்கின்றன. இக்கபோதங்களின் கீழ்விளிம்புகளில் சந்திர மண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன.

நாசிகை என்று சொல்லப்படுகின்ற கபோதக்கூடு கர்ணப்பத்தியிலும்,சாலைப்பத்தியிலும் தலா இரண்டு வீதம் காட்சியளிக்கின்றன. தென் கருவறைச்சுவரும் மேற்குக்கருவறைச் சுவரும் இணையும் திருப்பத்தில் உள்ள கபோதக்கூடுகளில் மட்டும் மனிதத்தலை செதுக்கப்பட்டுக் கீர்த்திமுகம் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. மற்ற நாசிகைகளில் பணி முழுமை பெறவில்லை.

கருவறைச் சாலைப்பத்திகளில் தேவகோட்டங்கள் சதுரபாதம் கொண்ட உருளை அரைத்தூண்களைக் கொண்டு அணைவு பெற்றுள்ளன. கருவறை தெற்கு, மேற்கு மற்றும் வடகோட்டங்களில் முறையே ஆலமர் அண்ணல், அடி முடி காட்டா அண்ணல், பிரம்மன் ஆகியோர் உள்ளனர். தேவகோட்டங்களின் மேல் உள்ள மகர தோரணங்களில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மகர தோரணங்களில் முறையே சிவனின் ஊர்த்தவஜானு, உமாசகிதர் மற்றும் சிவலிங்க வழிபாடு ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் மேற்கு மற்றும் வடக்கு மகர தோரணங்கள் முழுமை பெறவில்லை.

முகமண்டபம்



திருப்பங்களில் விஷ்ணு காந்தத் தூண்களைப்பெற்றும் 19'6" நீளமும் அகலமும் கொண்ட முகமண்டபத்தின் வட மற்றும் தென் சுவரை இரண்டு நான்முக அரைத்தூண்கள் மூன்று பத்திகளாய்ப் பிரிக்கின்றன. முகமண்டபம் கருவறைத் தாங்குதளம் போல் அனைத்து உறுப்புகளும் பெற்றுப் பாதபந்தத் தாங்குதளமாய் அமைந்துள்ளது. முகமண்டபத்திலுள்ள மூன்று பத்திகளில் சாலைப்பத்தி சற்றே முன்னிழுக்கப்பட்டு பிதுக்கமாய் அமைந்து நான்முக அரைத் தூண்களைக்கொண்டு அணைவு பெற்றுள்ளன. தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை என்ற உறுப்புகள் கொண்டுள்ள இத்தூண்களிலிருந்து எழும் வீரகண்டம் தாங்கும் கொடிக்கருக்குகள் கொண்ட பட்டையுடன் கூடிய போதிகைகள் விரிகோணத்தில் எழுந்து உத்திரம் தாங்க மேலே வாஜனம், வலபி. வலபியில் பூதவரி. இதன்மேல் அமைக்கப்படும் கூரையான கபோதம் மற்றும் தளம் முடிவைக்காட்டும் பூமிதேசம் இக்கட்டுமானத்தில் இல்லை. இதற்கு பதிலாகச் செங்கல் கொண்டு கூரை நீட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. பூமிதேசம் அமைக்கப்படவில்லை.

முகமண்டபத் தென்சுவரில் உள்ள மூன்று கோட்டங்களில் கிழக்கிலிருந்து மேற்காக முறையே பிட்சாடனர், நடராஜர் மற்றும் கணபதியும் வடபுறச்சுவர்க் கோட்டங்களில் கங்காதரர், கொற்றவை மற்றும் அம்மையப்பரும் உள்ளனர். விஷ்ணு காந்த அரைத்தூண்களைக் கொண்டு அணைவு பெற்றுள்ள, இக்கோட்டங்களின் மேலிருக்கும் மகரதோரணங்களில் தென்சுவரில் கிழக்கிலிருந்து மேற்காக யோகதட்சிணாமூர்த்தியின்மீது பாணம் எய்யும் மன்மதன், உமாசகிதர் மற்றும் சிவவழிபாடு காட்டப்பட்டுள்ளன. வடசுவர்க் கோட்டங்களில் கிழக்கிலிருந்து மேற்காக யானையும் சிலந்தியும் சிவனை வணங்கும் கோச்செங்கணன் புராணமும், சண்டிகேசுவரருக்கு சிவன் கொன்றை மாலை சூட்டும் சண்டீஷ்வர பதமும், கண்ணப்ப நாயனாரின் சிவ வழிபாடும் வடிக்கப்பட்டுள்ளன.

முகமண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள முகமண்டப வாயில் நான்குமுக அரைத்தூண்களால் அணைவு பெற்ற நிலைகளைப் பெற்றுள்ளன. வாயிலின் மேல் நிலைகள் இரண்டாகப் பிளந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளன. இவ்வாசலின் இருபக்கங்களிலும் உள்ள உயரமான அழகு பெறாத கோட்டங்களில் ஏற்கனவே துவாரபாலகர்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம். இத்துவாரபாலகர்கள் இக்கோயிலில் இன்று காணப்படவில்லை. ஆனால் வலதுபுறக்கோட்டத்தில் சோழர்கால அழகிய சேத்திரபாலர் சிற்பம் ஒன்று முழங்கால் அளவு சிமெண்ட் பூச்சிற்குள் நின்று கொண்டு இச்சேத்திரம் தேடி வருவோரின் பார்வைக்கு முதன்மையாய் காட்சி தருகின்றார். இம்முகமண்டப நிலைவாயிலில் மேலுள்ள வலபியில் பூதகணங்கள்.

முகமண்டபம் மற்றும் கருவறை புறச்சுவர்களில் காணப்படும் சதுர அடிப்பாகம் கொண்ட தூண்களில் சதுர பாகத்தின் மேல் பூமொட்டுக்கள் காட்சியளிக்கின்றன. தூண்களில் நாகபந்தம் தோன்றுவதற்கு இதனை முன்னோடியாகக் கொள்ளலாம்.

முகமண்டபத்திற்குள் காணப்படும் உட்சுவரில் சதுரபாதம் பெற்ற சுற்றளவு பெரிதான நான்கு ருத்ரகாந்த அரைத்தூண்கள் அணைக்கின்றன. இவைகளில் மேற்கில் அமைந்துள்ள இரு தூண்களில் தாமரைக்கட்டு, தானம், மாலைத்தொங்கல்கள் உள்ளன.இம்மண்டபத்தை ஒரு உருளைத்தூணும் பல உதிரிக் கற்கள் கொண்டு சமீபத்தில் எழுப்பப்பெற்ற மற்றொரு தூணும் தாங்குகின்றன. இத்தூண்களின் மேல் இருக்கும் உத்திரம் பட்டையுடன் கூடிய குளவுத்தரங்கை பெற்றுள்ளன. ஒரு உத்திரத்தில் இப்போதிகைகள் இரு பக்கங்களிலும் வடிக்கப்பட்டு இவ்வுத்திரத்தின் கீழ் பக்கத்திற்கு ஒன்றாக இரு தூண்கள் நிலை நிறுத்தத் துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் தூண்கள் காணப்படவில்லை. முகமண்டபத்தின் வடக்கில் கீழ்ப்புறம் மேற்கு நோக்கிய நிலையில் சூரியன் சிற்பமும் கருவறை வாயிலின் வலதுபுறம் பிற்கால முருகன், வள்ளி தெய்வானையுடனும், தெற்குப்புறம் சங்கு சக்கரம் அமைந்த பெருமாளும், இடப்புறம் இரண்டு பிள்ளையார்களும் மற்றும் ஐயனாரும் காட்சி தர முகமண்டபத்தின் மேற்கு திசையில் கருவறை வாயில் அமைக்கப்பட்டுக் கருவறையின் உள்ளே சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கைலாசநாதர் என்ற திருநாமம் கொண்ட இறைவன் தற்போது பெயர் மாறி நாகநாதசுவாமி என்ற பெயருடன் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

சிற்பக்கலை

தேவகோட்டச்சிற்பங்கள்

1. ஆலமர் அண்ணல்



கருவறை தென்புறச்சுவரில் அமைந்த கோட்டத்தில் ஆலமரத்தினடியில் ஆசனமொன்றில் இடப்புறம் பிறை நிலவு கொண்ட சடைபாரத்தைத் தலையலங்காரமாகக் கொண்டும் பதக்கங்கள் பெற்ற நெற்றிப்பட்டத்தை அணிந்தும் வீராசனத்தில் நெற்றிக்கண் விளங்க அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வலச்செவியில் மகரம். இடச்செவியில் பத்திர குண்டலம். நெற்றிப்பட்டத்தின் மேலே முகப்பில் மண்டை ஓடு ஒன்றும் இறைவனின் தலைக்கு மேலே உள்ள ஆலமரப் பொந்தில் இரண்டு ஆந்தைகளும் பக்கமுள்ள ஆலமரக்கிளைகளில் தொங்கிய நிலையில் படமெடுக்கும் பாம்புகள் மற்றும் பொக்கணம் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இறைவனின் வலது முன்கை சின்முத்திரையில் அமைய இடதுமுன்கரம் சுவடி ஏந்தி இடத்தொடையின் மீது உள்ளது. பின்கைகளில் அக்கமாலை, தீச்சுடர். தவழ்ந்த நிலையில் உள்ள முயலகன் மீது வலது காலை வைத்துள்ள இவ்வண்ணலின் இடதுபாதம் உடைந்துள்ளது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, அக்கமாலை அணிந்தும், கைவளை, தோள்வளை, கை விரல்களில் மோதிரம், கால்களில் தண்டை பெற்றும் முப்புரி நூல், முறுக்கேறிய உதரபந்தம் ஆகியவை அணிந்துள்ள இவ்வண்ணலின் இடைக்கட்டின் முடிச்சுகள் ஆசனத்தின் கீழும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாலமர் அண்ணல் உருண்டு திரண்ட உடலைப்பெற்று 32 இலட்சணங்கள் பொருந்திய 16 வயதுக் காளையாய் திருவிளையாடல் புராணத்தில்

மானமுனி வோரதிசயப்படை நீழல்
மோனவடிவாகிய முதற்குறவன் எண்ணாங்கு
ஊனமில் இலக்கணஉறுப்பு அகவை நானான்கு
ஆனஒரு காளை மறை யோன் வடிமாகி

என்று கூறியவாறு களையாகக் காட்சியளிக்கின்றார். இவ்வண்ணலின் இருபுறத்திலும் சனகாதி முனிவர்கள் இடப்புறம் இரு கின்னரர்கள்.

2. அடிமுடி காட்டா அண்ணல்



கருவறையின் மேற்குக் கோட்டத்தில் தீச்சுடருடன் கூடிய திருவாசி ஒன்று கோளத்தின் மீது அழகுடன் காட்டப்பட, லிங்கத்திருமேனியின் திறப்பிலிருந்து வெளிப்படும் நிலையில் சடைமகுடம் தரித்து, நெற்றிப்பட்டம் கொண்டவராய், இடச்செவியில் பத்திர குண்டலமும், வலச்செவியில் மகரமும், கழுத்தில் கண்டிகை, சவடி, முத்துமாலை அணிந்தும் கைவளை, தோள்வளை, விரல்களில் மோதிரம் பெற்றும் சிங்கமுக அரைக்கச்சு அணிந்து இதன் முடிச்சுகள் இருபுறம் காட்டியும், வலது முன்கரம் அபயஹஸ்தத்திலும், இடது முன்கரம் ஊறு ஹஸ்தத்திலும், பின் கைகளில் பரசு, மான் கொண்டு விளங்கும் இவ்வண்ணலின் காணமுடியாத அடியைத் தேடும் நிலையில் கீழே வராகம். மேலே பிரம்மா அஞ்சலி ஹஸ்ததத்திலும் காட்சியளிக்கின்றார்.

இக்கோட்டத்தின் இடப்புறம் பிரம்மா பின்கைகளில் மலரேந்தியும் முன்கைகள் அஞ்சலிஹஸ்தத்திலும் வலப்புறம் பெருமாள் பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும் முன்கைகள் அஞ்சலி ஹஸ்தத்திலும் உள்ளவாறு காட்சியளிக்கின்றனர். லிங்கத்திருமேனியின் திறப்பின் மேலே பிரம்மன் அருகே சூரியன் காட்டப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

3. பிரம்மா



கருவறையின் வடபுறக் கோட்டத்தில் சமபாத ஸ்தானகத்தில் பத்ம பீடத்தில் தாடியுடன் காட்சியளிக்கும் பிரம்மனின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. ஜடாமகுடம் அணிந்து செவிகளில் மகரமும், கழுத்தில் அக்கமாலையும், மார்பில் முப்புரி நூலும், உதர பந்தம் அணிந்த பிரம்மன் பட்டாடை அணிந்துள்ளார். அதனை சிங்கமுகக் கச்சு கொண்டு இறுக்கி அதன் முடிச்சுகள் பக்கவாட்டில் காண்பித்தும் வலது முன்கரத்தில் அக்கமாலை கொண்டு கடக முத்திரை காட்டியும் இட முன் கரத்தில் குண்டிகை கொண்டும் காட்சியளிக்கிறார்.

(தொடரும்)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.