http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 53
இதழ் 53 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
முனைவர் க.சங்கரநாராயணன் சந்திரசேகர சரஸ்வதி மகாவித்யாலயம்(ஏனாத்தூர், காஞ்சிபுரம்) பல்கலைக்கழகத்தில் சுவடித் துறையில் பணியாற்றுகிறார். மாதந்தோறும் வெளியாகும் சாரஸ்வதம் என்னும் மாத இதழை நண்பர்களுடன் வெளியிட்டு வருகிறார். வரலாற்றில் பேரார்வம் கொண்டவர். இளைஞர். காஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பண்டைய வரலாற்றை ஆராய்ந்து வருகிறார்.
*********************************************************************************************** அர்த்தம் என்றால் வ்ருத்தி - தொழில் என்று பொருள். ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கருவிகளைப் பற்றிக் கூறுவதால் அர்த்த சாஸ்த்ரம் எனப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானது பூமி. (मनुष्यवती पृथ्वी) மனுஷ்யவதி ப்ருத்வீ என்று மனிதர்களுக்கு மிக முக்கியமான கருவி பூமியே என்று கௌடல்யரே குறிப்பிடுகிறார். அர்த்த சாஸ்த்ரத்தின் துவக்கத்தில் பூமியை அடைவதற்கும் அதனைக் காப்பதற்கும் இதுவரை எழுதப் பெற்ற அனைத்து அர்த்தசாஸ்த்ரங்களையும் தொகுத்து இந்த ஒரு அர்த்தசாஸ்த்ரத்தை எழுதுகிறேன் என்றும் குறிப்பிடுகிறார். (भूम्याः लाभे पालने च यावन्त्यर्थशास्त्राणि पूर्वाचार्यैः प्रस्थापितानि प्रायशस्तानि संहृत्यैकमिदमर्थशास्त्रं कृतम् - अर्थशास्त्रम् 1.1). ஆகவேஆகவே கௌடல்யருக்கு முற்காலம் தொட்டே பல அர்த்தசாஸ்த்ர நூல்கள் வழங்கி வந்ததை அறியலாம். கௌடல்யரும் தன்னுடைய நூலில் தனக்கு முன்பிருந்த பதினோரு ஆசிரியர்களைக் குறிப்பிடுகிறார். 1.மனு (இதனால் மனுஸ்ம்ருதியைப் போன்று அர்த்தசாஸ்த்ரமும் எழுதப் பட்டது விளங்குகிறது.) 2.சுக்ராசார்யர் 3.ப்ருஹஸ்பதி 4.பிசுனர் 5.பாரத்வாஜர் 6.விசாலாக்ஷர் 7.கௌணபதந்தர் 8.பாஹுதந்தீபுத்ரர் 9.வாதவ்யாதி 10.பராசரர் 11.ஆம்பீயர் என்போரே அவர்கள். இவர்களுள் பாரத்வாஜர், கௌணபதந்தர், பாஹுதந்தீபுத்ரர், வாதவ்யாதி என்பவர்கள் முறையே த்ரோணர், பீஷ்மர், இந்த்ரன் மற்றும் உத்தவர் என்பது அர்த்தசாஸ்த்ரத்துக்கு உரையெழுதிய கணபதி சாஸ்த்ரியின் கருத்து. ஆயினும் இத்தகைய பட்டப் பெயர்கள் அருவறுக்கத்தக்க பெயர்களாக இருப்பதால் (கௌணபதந்தர் - நாறும் பற்களை உடையவர், வாதவ்யாதி - வாயுநோய் உடையவர்) இவர்கள் கௌடல்யரின் நண்பராக இருக்கக் கூடும் என்றும் அதனாலேயே கிண்டலான பட்டப் பெயர்களைத் தந்துள்ளார் என்றும் ராதாகிருஷ்ண சாஸ்த்ரியாரின் கருத்தும் நோக்கத் தக்கது. ஏனெனில் ஐந்தாம் அதிகரணத்தில் அரசன் இறக்கும் தருவாயில் செய்ய வேண்டிய செயல்களைக் கூறும்போது பாரத்வாஜரின் கருத்தாக அமைச்சன் அரசனின் வழித்தோன்றல்களைக் கொன்றுவிட்டு தானே அரசைக் கொள்ளலாம்(அர்த்தசாஸ்த்ரம் 5.6) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. த்ரோணரின் மஹாபாரத உபதேசங்களை நோக்குங்கால் இத்தகைய கருத்து த்ரோணரின் கருத்தாக அமைய வாய்ப்பில்லை என்பதை அறியலாம். அர்த்தசாஸ்த்ரத்தின் காலத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. ஆதலின் அவற்றின் விவாதம் தனிக் கட்டுரையாகும். இதனை எழுதிய கௌடல்யரின் பெயர் விளக்கங்களும் உண்டு. குடில கோத்ரத்தில் பிறந்த்தால் கௌடல்யர் என்றும் (கௌடில்யர் என்பது இலக்கணரீதியாகத் தவறான பயன்பாடு) சணகபுரியில் பிறந்ததனால் சாணக்யர் என்றும் பெயர்கொண்ட இவரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தர் (விஷ்ணுவினால் காக்கப் பட்டவர்) என்பதாகும். அர்த்த சாஸ்த்ரத்தில் 15 அதிகரணங்கள் உள்ளன. முதல் அதிகரணத்தின் பெயர் வினயாதிகரணம் என்பதாகும். அரசன் பெற வேண்டிய பயிற்சிகளைக் குறித்தும் பிறரை நியமிக்க வேண்டிய முறைகளைக் குறித்தும் இது குறிப்பிடுகிறது. அந்த அதிகரணத்தில் பதினோராம் அத்யாயம் - ஏழாவது ப்ரகரணம் ஒற்றாடலைக் குறிப்பிடுகிறது. ஒற்றருக்கு வடமொழியில் கூடபுருஷர்(गूढपुरुषः) என்பது பெயர். மறைவாகச் செய்யவேண்டிய செயல்களையுடையவர் என்பது பொருள். இவர்களையேக் கண்ணாகக் கொள்ளவேண்டும் (चारेण चक्षुः) என இதற்கு முந்தைய அத்யாயங்களில் குறிப்பிடுகிறார். வடமொழிக் காவ்யங்களிலும் ஒற்றர்களைக் கண்ணாகக் கொண்டவன்(கிராதார்ஜுனீயம்) என்றும் அறநூல்களைக் கண்ணாகக் கொண்டவன் (நைஷதம்) என்றும் அரசர்களை வர்ணிப்பதுண்டு. இதனையே வள்ளுவர் ஒற்றும் உரைசார்ந்த நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். (ஒற்றாடல் 1) என்கிறார். பத்தாம் அத்யாயத்தில் அமைச்சர்களை பரீக்ஷை செய்யும் முறைகளைப் பற்றி விவரித்து பதினோராம் அத்யாயத்தில் ஒற்றர்களை நியமிக்கும் வழிவகைகளை விளக்குகிறார் கௌடல்யர். இந்த அத்யாயத்தின் முதல் சொற்றொடர் उपधाभिः शुद्धामात्यवर्गो गूढपुरुषानुत्पादयेत् कापटिकोदास्थितगृहपतिकवैदेहकव्यञ्जनान् सत्रितीक्ष्णरसदभिक्षुक्यश्च। உபதாபி: சுத்தாமாத்யவர்கோ கூடபுருஷானுத்பாதயேத் காபடிக - உதாஸ்தித - க்ருஹபதிக - வைதேஹக வ்யஞ்ஜனான் ஸத்ரி-தீக்ஷ்ண-ரஸத-பிக்ஷுக்யஸ்ச என்றுள்ளது. பரிக்ஷைகளால் தூய அமைச்சர்களைக் கண்டறிந்தபின்னர் காபடிக - உதாஸ்தித - க்ருஹபதிக - வைதேஹகவ்யஞ்ஜனர்களையும் ஸத்ரி-தீக்ஷ்ண-ரஸத-பிக்ஷுகிகளையும் கூடபுருஷர்களாக உருவாக்க வேண்டும் என்பது இதன் பொருள். இந்தச் சொற்றொடரில் முதலில் கூறப்பட்ட ஐவரும் நிலையாக ஒரிடத்தில் இருந்து ஒற்றறிபவர்கள். பின்னர் கூறப்பட்ட நால்வரும் திரிந்து ஒற்றறிபவர்கள். இவர்களில் ஒவ்வொருவரின் இலக்கணங்கள் பின்வருமாறு 1. காபடிகன் (कापटिकः) பிறரின் மர்மத்தை அறிந்தவனும் நல்ல அறிவு முதிர்வு உடையவனுமான மாணவனே காபடிகன் ஆவான். (परमर्मज्ञः प्रगल्भः छात्रः कापटिकः) கபடமாக பிறரின் மர்மத்தை அறிவதால் இவன் காபடிகன் எனப்படுகிறான். இக்காலத்துத் தேசியமாணவர் படை போல மாணவர்களிலும் சிலரை ஒற்றர்களாகப் பயன்படுத்தியது புலனாகிறது. அக்காலத்தில் மாணவர்களுக்கு பிக்ஷையைக் கொண்டே உணவு என்பதனால் ஒவ்வொரு வீடாகச் செல்லும் காபடிகனுக்கு வீடுகளில் நடக்கும் செய்திகளை அறிவது எளிது. ஆகவே இத்தகையதோர் ஒற்றன் மிகவும் முக்கியமானவனாகக் கருதப் படுகிறான். இவனை மந்த்ரி அழைத்து பொருளாலும் ஸன்மானம் முதலானவற்றாலும் மர்யாதை செய்து என்னையும் அரசனையும் முன்னிறுத்தி எவரிடம் என்ன மாறுபாடு கண்டாலும் நேரவிரயமின்றி அறிவிக்க வேண்டும் என்று கூறவேண்டும் என்று அர்த்தசாஸ்த்ரம் இவனிடம் கூறவேண்டிய ஆணையைத் தெரிவிக்கிறது. ஏனையோருக்கு இப்படியோர் செய்கை சொல்லப் படவில்லை. இதன் பின்பு சொல்லப் படும் திரிந்து ஒற்றறிபவர்கள் நிலையாக இருப்போரிடம் செய்தியை அறிவித்தால் அவர்களே அரசனிடமோ அல்லது மந்த்ரியிடமோ சேர்ப்பர். ஆயின் காபடிகன் அரசனிடமும் மந்த்ரியினிடமும் நேராகச் சொல்லும் முறையை இந்தச் சொற்றொடர் தெரிவிக்கிறது. 2. உதாஸ்திதன் (उदास्थितः) துறவு மேற்கொண்டு அதிலிருந்து நழுவியவன், அறிவுமுதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் உதாஸ்திதன் எனப் படுவான். (प्रव्रज्याप्रत्यवसितः प्रज्ञाशौचयुक्तः उदास्थितः). அவன் வார்த்தை எனப்படும் உழவு, கால்நடை பராமரிப்பு, வாணிபம் நடைபெறும் இடத்தில் ஓர் நிலயத்தை உருவாக்கி அதிகமான பணம் மற்றும் சீடர்களோடு அந்தத் தொழில்களை மேற்கொள்வான். அதில் வரும் லாபத்தைக் கொண்டு எல்லா துறவிகளுக்கும் உணவு, உடை, உறையுள் முதலியவை அளித்து அவருக்குள் வேலை செய்யும் எண்ணம் கொண்டோரிடம் இதே வேஷத்தோடு அரசகார்யம் பாருங்கள். அறுவடைக் காலத்தில் இங்கு வரவேண்டும். (அப்போது இதற்கான கூலி தரப் படும் என்று கூறவேண்டும்). அதற்கு ஒத்துக் கொள்ளும் துறவிகள் தத்தம் குழுக்களிடம் சொல்லி ஒற்று வேலை மேற்கொள்ள வேண்டும். 3.க்ருஹபதிகவ்யஞ்ஜனன் (गृहपतिकव्यञ्जनः) உழவுத் தொழிலை மேற்கொண்டு அதில் நஷ்டமடைந்தவன், அறிவு முதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் க்ருஹபதிகவ்யஞ்ஜனன் எனப்படுவான். (कर्षकः वृत्तिक्षीणः प्रज्ञाशौचयुक्तः गृहपतिकव्यञ्जनः) அவன் உழவுத் தொழில் நடைபெறும் ப்ரதேசத்தில் முன்பு உதாஸ்திதனுக்குச் சொன்னது போல செயல்களை மேற்கொள்வான். இல்லறத்தானைப் போல வேடம் பூண்டவன் என்பதனால் க்ருஹபதிக வ்யஞ்ஜனன் எனப்படுகிறான். 4. வைதேஹகவ்யஞ்ஜனன் வாணிபத் தொழிலை மேற்கொண்டு அதில் நஷ்டமடைந்தவன், அறிவு முதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் வைதேஹகவ்யஞ்ஜனன் எனப்படுவான். (वाणिजको वृत्तिक्षीणः प्रज्ञाशौचयुक्तः वैदेहकव्यञ्जनः) அவனும் வாணிபத்தொழில் நடைபெறும் ப்ரதேசத்தில் முன்பு உதாஸ்திதனுக்குச் சொன்னது போல செயல்களை மேற்கொள்வான். வாணிபனைப் போல வேடம் பூண்டவன் என்பதனால் வைதேஹக வ்யஞ்ஜனன் எனப்படுகிறான். 5.தாபஸவ்யஞ்ஜனன் மொட்டையடித்தவன் அல்லது ஜடைகளை உடைய துறவி வேஷத்திலிருப்பவன் ஏதேனும் பணி செய்ய முனைபவன் தாபஸ வ்யஞ்ஜனன் எனப்படுவான். (मुण्डो जटिलो वा वृत्तिकामः तापसव्यञ्जनः). இதனையே வள்ளுவர் துறந்தார் படிவத்தாராகி இறந்தாராய்ந்து என்று குறிப்பிடுகிறார். மொட்டையடித்தவன் என்பதனால் பௌத்த ஜைன துறவிகளையும் கொள்ளலாம். இவன் நகரத்தின் அருகில் மொட்டையடித்த அல்லது ஜடைகளோடு கூடிய பல சீடர்களோடு ஆச்ரமத்தை அமைத்துக் கொண்டு எல்லோர் முன்பும் மாதம் ஒரு முறை அல்லது இருமாதத்திற்கு ஒரு முறை காய்கறி அல்லது ஒரு பிடி தான்யத்தை (யவம்) உண்பான். மறைவில் தன் விருப்பப் படி உண்ணலாம். முன்பு சொன்ன வைதேஹக வ்யஞ்ஜனர்கள் இவருடைய அமானுஷ்ய ஆற்றலைக் கொண்டே நாங்கள் பலவற்றைப் பெற்றோம் என்று நகரத்தில் வதந்தியைப் பரப்ப வேண்டும். துறவிவேடத்திலிருப்பவரின் சிஷ்யர்களும் நடக்கப் போவதை அறிந்தவர் இவர் என்றும் ஸித்த புருஷர் என்றும் கூறவேண்டும். அவரும் வருபவர்களின் உருவத்தைக் கொண்டு (ஸாமுத்ரிகா லக்ஷணப்படி) அல்லது சீடர்களின் குறிப்பால் வருங்கால செயல்களைக் குறிப்பவர் போல சிறு லாபம், நெருப்பு பயம், திருடர் பயம், தீயவர்களின் மரணம், அரசரின் ஸன்மானம், வெளிநாட்டுச் செய்திகள், இன்றோ நாளையோ இது நடக்கும் என்று அல்லது அரசன் இதைச் செய்வான் என்று கூறவேண்டும். இரவோடு இரவாக அவருடைய சீடர்களை அதைச் செய்து முடிப்பார்கள். வலிமை, அறிவு பேச்சுத் திறமை முதலானவற்றை உடையவர்களை அரசனால் கௌரவிக்கப் படுவாய் என்றோ மந்த்ரியோடு தௌடர்பு உண்டாகும் என்றோ கூறவேண்டும். இவர்களுடைய குறிப்பால் மந்த்ரியும் அத்தகைய பெருமை உடையவர்களுக்கு அரசாங்கப் பணி அல்லது ஸன்மானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். துறவிவேடம் அணிந்தவர்கள் காரணத்தோடு அரசன் மீது சினந்த மக்களை செல்வம், ஸன்மானம் முதலானவற்றால் ஸமாதானம் செய்ய வேண்டும். காரணமின்றி எவரேனும் சினந்தாலோ அல்லது ராஜத்ரோஹிகளையோ மறைவான தண்டனையால் கொல்லவேண்டும். இவ்வாறு அர்த்தசாஸ்த்ரம் ஐந்து விதமான நிலையொற்றர்களை (ஸம்ஸ்தா) விளக்குகிறது. இறுதியாக காரிகை மூலம் அரசனால் போற்றப் பட்ட ஐந்து விதமான நிலையொற்றர்களும் அரசனை அடுத்து வாழ்பவர்களின் தூய்மையை அறிந்து அரசனிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறுகிறார் கௌடல்யர். (தொடரும்...) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |