http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 53
இதழ் 53 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாதத் தலையங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பின்னூட்டமிட்ட வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள வாசகர்களை வரலாறு.காம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அன்பே சிவம் பாணியில் சொல்லவேண்டும் என்றால், 'தன்னைப் போலவே தன்னைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தும் நலமாக வளமாக இருக்கவேண்டும் என்று எண்ணும் மனிதன்தான் கடவுள்'. எந்தவொரு மனிதனும் தனிமரமில்லை. சுயம்பும் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து விடுவித்துக்கொண்டு அவனால் தனித்து இயங்க முடியாது. வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் சார்ந்துள்ள சமுதாயத்திலிருந்து எதையாவது உள்வாங்கிக் கொண்டுதான் வாழ்க்கையை நகர்த்த முடியும். அது கண்ணுக்குத் தெரியும் நண்பனது உதவியாக இருக்கலாம். அல்லது பட்டாம்பூச்சி விளைவாக யாரோ செய்த ஏதோவொரு செயலால் தனக்கு விளைந்த நன்மையாக இருக்கலாம். எல்லாத் தனிமனிதர்களின் நன்மை தீமைகளிலும் அம்மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமுதாயத்தின் பங்களிப்பு இருக்கத்தான் செய்கிறது. யாராவது 'நான் சமுதாயத்திடமிருந்து எந்த உதவியும் பெறாமல் தானாக உயர்ந்த நிலைக்கு வந்தவன்' என்று சொன்னால், அதற்கு இரண்டே அர்த்தங்கள்தான் இருக்க முடியும். ஒன்று அவர் பொய் சொல்கிறார். அல்லது சமுதாயம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார் என்று பொருள். எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற அளவுக்குச் சமுதாயத்துக்கு உதவ வேண்டும். தான் வாழும் சமுதாயத்தை முன்னேற்றி, முன்மாதிரியாக மாற்றவேண்டும். உதவிகள் பல செய்து கடவுளாக ஆகாவிட்டாலும், கெடுதல்கள் செய்யாமலிருந்து மனிதனாகவாவது ஆகலாம். சமுதாயம் என்பது என்ன? அதன் அங்கத்தினர் யாவர்? நானும் நீங்களுமா? நம்மைச் சுற்றியுள்ள நாலுபேரா? உயிருள்ளவர்கள் மட்டும்தானா அல்லது உயிரற்றவைகளுமா? கண்ணுக்குத் தெரிபவைதானா? இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றன? இதுபோல் ஒரு பட்டியலில் சமுதாயத்தின் அங்கங்களை அடக்கிவிட முடியுமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே விடைதான் இருக்கிறது. நம்மீது பாதிப்பை ஏற்படுத்தும் எல்லாக் காரணிகளுமே சமுதாயத்தின் அங்கங்கள்தான். இதற்கு மொழியும் இலக்கண இலக்கியங்களும்கூட விதிவிலக்கல்ல. மொழி வேறுபடும்போது சமுதாயங்களும் பிளவுபட ஆரம்பிக்கின்றன. எப்படி என்கிறீர்களா? நம் அண்டை மாநிலங்கள்தான் எடுத்துக்காட்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மொழியைப் பேசி நட்பு பாராட்டி வந்த பரந்த நிலப்பரப்புக்குச் சொந்தக்காரர்களாக இருந்த தமிழர்கள் முக்கால் பங்கை சமஸ்கிருத மொழிக் கலப்புக்கு இரையானவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, தாகத்திற்கு அவர்களிடமே கையேந்தி நிற்பதுதான் ஆதாரம். மொழிக்கலப்புக்கு ஆளான ஒரு பேரினம் எப்படி அல்லலுறும் என்பதை அயலார்கள் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? நமக்குத்தான் வரலாறெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குதவாத பொருளாயிற்றே!! பெருகிவரும் ஆங்கிலக்கலப்பால் தமிழகம் இன்னும் எத்தனை துண்டுகளாகப் பிரியப்போகிறதோ தெரியவில்லை. கேரளம் சமஸ்கிருத மொழிக்கலப்பால் பிரிந்ததுதான் என்றாலும், அதுதான் உண்மையான தமிழகமோ என்று ஐயுறும் அளவுக்குப் பழந்தமிழ்த் தனித்தமிழ்ச் சொற்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றிற்கு இணையான சொற்களுக்கு நாம் சமஸ்கிருத மற்றும் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். சோறு என்பதைப் பாமரர்களின் மொழியாக்கி, சாதம் என்ற சொல்லில் போலி கவுரவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதுவும் இப்பொழுது ரைஸ் ஆகி மேல்நாட்டு நாகரீகமாகிவிட்டது. இதன் உச்சகட்டம் என்னவென்றால், சில இடங்களில் ரைஸ் என்று சொல்லாவிட்டால் சோறு கிடைக்காது என்பதே. இதுபோல் இன்னும் எண்ணற்ற உதாரணங்களை அடுக்கலாம். இதில் நடுவில் இந்தித் திணிப்பு வேறு. மைய அரசே இந்தித் திணிப்பைக் கைவிட்டுவிட்ட பிறகும் சில தமிழின எதிரிகள் மட்டும் நனையும் ஆட்டுக்காக அழும் ஓநாயைப்போல அவ்வப்போது தமிழன் இந்தி தெரியாததால் வேலையில்லாமல் தவிப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தி தெரிந்திருந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து சோன்பப்டி விற்கும் வட இந்தியர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. முயன்றால் மூன்றே மாதங்களில் கற்றுத் தேர்ந்துவிடக்கூடிய மொழிக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தெரியவில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இந்தியைச் சாக்காக வைத்து யாரையோ தாக்குவதுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழினத்திற்கு நல்லறிவையும் நற்பண்பையும் ஊட்டி வளர்த்த இலக்கியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிலிருந்து அந்நியப்பட்டுக்கொண்டே வருவதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்? அவையும் தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கம்தானே? அவை நம் அடுத்த தலைமுறையையும் பண்படுத்த வேண்டாமா? தொல்காப்பியத்திலும் குறளிலும் ஐம்பெருங்காப்பியங்களிலும் உள்ள செய்திகளைக் குட்டிக்கதைகளாகக் குழந்தைகளுக்குக் கூறவேண்டும். ஹாரிபாட்டர்களைவிடப் பன்மடங்கு சுவாரசியமானவையாயிற்றே! அது மட்டுமின்றி அவை நம் மண்வாசனையைக் கொண்டிருப்பவை என்பது கூடுதல் சிறப்பு. அவர்களது கற்பனைச்சிறகை விரியவைக்கும் அதே நேரத்தில் தமிழ்ச் சமூகத்தின்பால் பற்றுதலை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான், அடுத்த வீட்டுக்காரனின் பிள்ளையைவிட எங்கே தன் பிள்ளையால் அதிகமாக ஆங்கிலம் பேசமுடியாது போய்விடுமோ என்ற அச்சத்தினால் ஆங்கிலவழிக்கல்விக்கு அனுப்பப்படும் குழந்தைக்குத் தாய்மொழியின் முக்கியத்துவம் புரியும். 'தமிழ் தமிழ் என்று கூவிக்கொண்டிருப்பதால் என்ன பயன்? நாலுகாசு சம்பாதிக்க உதவுமா?' என்று கேட்கும் சிலர் இருக்கிறார்கள். எதையும் பணத்தைக்கொண்டு அளக்கும் குணமுடைய இவர்களுக்குத் தாய்மொழிப்பற்றும் ஒன்றுதான்; தாய்ப்பாசமும் ஒன்றுதான். இவர்களும் மேலேசொன்ன கூட்டத்தைப் போன்றவர்கள்தான். இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம். உலகத்தில் மற்ற மொழியினருக்குக் கிடைக்காத பெறற்கரிய பெரும்பேறு திருக்குறள். மறைபொருளாக வைக்கப்படாத ஒரு மறை. மனிதனின் குரல். அதனாலேயே பெரும்பாலானவர்களுக்கு அதன் முக்கியத்துவம் உறைக்காமல் போய்விட்டது. இன்னும் மக்களுக்குச் சென்றடையாத எத்தனையோ அரிய கருத்துக்கள் அதில் புதைந்து கிடக்கின்றன. நன்றாகக் கூர் தீட்டப்பட்ட கத்தியை வெறும் அழகுக்காக வைத்திருப்பதால் என்ன பயன்? அது துருப்பிடிப்பதற்கு உடந்தையாக இருப்பதாக ஆகாதா? சங்க இலக்கியங்கள் என்னும் புதையலை அனுபவிக்கத் தெரியாமல் இன்னும் நம்மில் எத்தனைபேர் இருக்கிறோம்? குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையாவது அவற்றை உய்த்துணர நாம் ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்கு நாம் முதலில் அவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்; ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று தமிழன் ஊடகங்களின் அடிமையாக இருக்கிறான். ஊடகங்கள் எதை முன்னிறுத்துகிறதோ, அதற்கே முக்கியத்துவம் தந்து பழகிவிட்டான். சமீபத்தில் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சண்டையை ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியதால் அதற்கு ஆங்காங்கே எதிர்ப்புக்குரல்கள் எழுந்திருக்கின்றன. சட்டக்கல்லூரிச் சாதிச் சண்டையைவிட மிகக்கொடுமையான திண்ணியம் பிரச்சினைக்குத் தமிழினம் இதைவிட அதிகமாகக் கொந்தளித்திருக்கவேண்டாமா? ஏன் கொந்தளிக்கவில்லை? ஊடகங்கள் அதைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதுதான். சமூகப் பொறுப்புணர்ச்சியற்ற ஊடகங்கள் தமிழனுக்கு வாய்த்தது அவன் என்றோ செய்த பாவமல்ல. இன்றைக்கும் செய்து கொண்டிருப்பதுதான். சினிமா நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களுக்கும் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவதை என்றைக்கு நிறுத்துகிறானோ, அன்றைக்கு ஊடகங்கள் நல்ல செய்திகளைத் தர ஆரம்பிக்கும். அதை நாம்தான் செய்யவேண்டும். பத்திரிகை நடத்துபவர்கள் வியாபாரிகள். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் உற்பத்தி செய்வார்கள். அவை உண்மைகளாக இல்லாவிட்டாலும் கூட. தமிழைக் கொல்வதில் இன்று முன்னணியில் இருப்பது ஊடகங்கள்தான். இங்கு ஊடகங்கள் என்பது தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் பத்திரிகைகளையும் சேர்த்துத்தான். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களுக்குத் தமிழ் உச்சரிப்பு வளமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையைக் கூடக் கடைப்பிடிப்பதில்லை. தனியாக வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் எழுதும் கட்டுரைகளிலோ, ஆர்வம் காரணமாக நடத்தப்படும் இணைய இதழ்களிலோ வேண்டுமானால் அனுபவமின்மை, நேரமின்மை மற்றும் அறியாமை காரணமாக எழுத்துப் பிழைகளும் இலக்கண, சந்திப்பிழைகளும் இருக்கலாம். ஆனால் ஊதியம் தந்து பிழை திருத்துபவர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் நாள், வார மற்றும் மாத இதழ்களில் இத்தகைய பிழைகள் நேரலாமா? பிறகு அவருக்கு எதற்காக மாதாமாதம் ஊதியம்? 'இலக்கணம்' என்றொரு திரைப்படத்தில் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. 'ஒரு' மற்றும் 'ஓர்' ஆகிய சொற்களை மாற்றி எழுதிவரும் நிருபரிடம், 'உயிரெழுத்துக்கு முன்னால் ஓர் வரும். உயிர்மெய்யெழுத்துக்கு முன்னர்தான் ஒரு வரும்' என்று கூறி, அவற்றைத் திருத்திவருமாறு அறிவுறுத்துவார். 'அதனாலென்ன? அதையெல்லாம் பற்றி இந்தக்காலத்தில் யார்தான் கவலைப்படுகிறார்கள்?' என்று வரும் பதில் கேள்விக்கு, 'நீ குளிக்கிறாயா இல்லையா என்பது பற்றிக் கூடத்தான் யாரும் கவலைப்படுவதில்லை. அதற்காகக் குளிக்காமலா இருக்கிறாய்? ஒரு மொழியைச் சரியாக எழுதினால்தான் படிப்பவர்களுக்குக் குழப்பம் வராமலிருக்கும்' என்ற சூடான பதிலடி கிடைக்கும். ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் தானாக அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம். இலங்கையில் சிங்களப்படைகள் செய்வது மட்டுமல்ல. தமிழகத்தில் ஊடகங்கள் செய்வதும் இனப்படுகொலைதான். தமிழகத்தில் இதற்கு ஒரேயொரு விதிவிலக்கு மக்கள் தொலைக்காட்சி. வணிகமயமான ஊடக உலகில் விடாப்பிடியாகத் தொடர்ந்து தமிழுக்கு முக்கியத்துவம் தந்துகொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதில்வரும் பல நல்ல நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகரித்தால் மற்ற தொலைக்காட்சிகளும் அதுபோன்ற நிகழ்ச்சிகளை வழங்க மாட்டார்களா என்ன? மற்ற தொலைக்காட்சிகள் மானையும் மயிலையும் ஆடவிட்டுக் கொண்டிருக்கும்போது தமிழ்ப் பேசுவதற்குத் தங்கக்காசு தரவேண்டிய அவலத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குட்டு நமக்கு யாருக்காவது வலித்திருக்கிறதா? அதையும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அதில் அறிமுகப்படுத்தப்படும் இனிய தமிழ்ச் சொற்களை யாராவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்க்கிறோமா? தமிழ்நாட்டில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழார்வம் மிக்க இரண்டு நண்பர்கள் தனித்தமிழில் உரையாட விரும்பினால்கூட, அதையும் கள்ளக்காதல் போலத்தானே செய்யவேண்டி இருக்கிறது? அவர்களைப் புரிந்து கொள்கிறதா இச்சமுதாயம்? பலநூறு ஆண்டுகளாகக் கலப்படம் செய்யப்பட்ட தமிழைத் தனித்தமிழாக உடனே மாற்ற முடியாதுதான். ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமே!! இன்று எது தமிழ் என்பதிலேயே குழப்பம் நிலவி வருகிறது. அன்றாட வாழ்வில் புழங்கி வரும் சொற்களில் எது தமிழ்ச்சொல், எது வடமொழிச்சொல் என்று கண்டறிய முடிவதில்லை. ஆங்கிலத்தை எளிதாகக் கண்டறிந்து விடலாம். இன்னும் சில தலைமுறைகள் கழித்து அதுவும் கடினம்தான். நம்மில் பெரும்பாலானோர் தமிழ்ச்சொல் தெரியாததால் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இக்கட்டுரையிலேயே பல வடமொழிச் சொற்கள் கலந்துள்ளன. அவை வடமொழிதான் என்பதை அறியாததாலும் அச்சொற்கள் தரும் வீச்சை, பாதிப்பை அதற்கு இணையான தமிழ்ச்சொல் தருமா என்ற ஐயத்தாலும்தான் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கலில் ஆங்கிலத்தையும் பிறமொழிகளையும் கற்பது இன்றியமையாததாகிவிட்டது. வயிற்றுக்காகப் பிறமொழிகளைக் கற்றாலும் தன் மூளைக்காகத் தாய்மொழியைக் கற்க வேண்டியது அவசியம். தாய்மொழியில் சிந்திக்கும் குழந்தைதான் அறிவார்ந்த குடிமகனாக வரமுடியும் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்று ஆங்கிலம் இல்லாமல் மருத்துவப்படிப்பு படிக்க முடியாது என்ற நிலை. ஆனால், பணியாற்றும்போது சிகிச்சை பெற வரும் நோயாளியிடம் தமிழில்தானே பேசியாகவேண்டும்? அப்போதுதானே நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு பிணைப்பு உருவாகி, சிகிச்சை பலன் தரும்? இது எல்லாத் துறையினருக்கும் பொருந்தும்தானே? தன்னைச் சுற்றியுள்ளவர்களின் மொழியில் பேசாத மனிதன் அச்சமூகத்துடன் கலந்து வாழமுடியாது. அதற்காக எல்லோரும் தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கலாமா? தெரிந்தவர்கள்தான் தெரியாதவர்களுக்குத் தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தவேண்டும். இன்று தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் உள்ள வரலாறு.காம் வாசகர்கள் தங்கள் துறையில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு இயன்றவரையில் தமிழ்ச்சொற்களைக் கண்டறிய முயலலாமே!! ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு சொல் என்றால்கூட ஆயிரக்கணக்கில் தமிழ்ச்சொற்களைச் சமுதாயத்தில் புழங்க விடலாமே!! இதற்கென்று ஒரு புதிய பகுதியை வரலாறு.காம் ஆரம்பித்து, வாசகர்கள் அனுப்பும் சொற்களை அவர்களின் பெயர்களுடன் நன்றியுடன் வெளியிடவும் தயார். சூப்பர்மேனோ ஸ்பைடர்மேனோ தமிழைக் காக்க வானத்திலிருந்து குதிக்க மாட்டார்கள். இந்தியனும் அந்நியனும் திரையில் மட்டுமே தங்கள் சாகசங்களை நிகழ்த்துவார்கள். தமிழில் சொன்னாலே புரியக்கூடிய சொற்களுக்குப் பதிலாகப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு மொழியைத் தூய்மைப்படுத்தி வளமாக்கும் பணியை நாம்தான் செய்யவேண்டும். நாம் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்யமாட்டார்கள். இன்று செய்யாவிட்டால் என்றுமே செய்யமுடியாது. சிந்திப்போம்! முடிவெடுப்போம்!! சாதிப்போம்!!! அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |