http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 53
இதழ் 53 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, அர. அகிலா முன்பே பழக்கமானவர் என்றாலும், ஓர் ஆய்வு மாணவியாய் எங்கள் மையத்திற்குள் அவர் நுழைந்தது 1989 ஜனவரியில்தான். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையில் முதுகலை சேர்ந்தவுடனேயே, 'இரண்டாம் ஆண்டில் கோயில் ஆய்வுதான் மேற்கொள்வேன். நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்' என்று உறுதியாகக் கூறியிருந்த அவர், 1989 ஜனவரியில் என்னைச் சந்தித்தார். அவரது நெறியாளராக இருந்த பேராசிரியர் முனைவர் கோ. வேணிதேவி, அகிலா எங்கள் மையத்தின் துணையுடன் ஆய்வு மேற்கொள்வதைப் பெரிதும் வரவேற்றார். 1988ல்தான் மு. நளினி, இரா. வளர்மதி இவர்களுக்கான பழுவூர்க் கோயில் ஆய்வுகள் முடிந்திருந்தன. அவர்தம் ஆய்வுவட்டத்திற்குள் வராமல் விடுபட்டிருந்த மற்றொரு பழுவூர்க் கோயிலாகப் பகைவிடை ஈசுவரம் விளங்கியது. நளினி கீழப்பழுவூர் ஆலந்துறையார்க் கோயிலை முதுநிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு செய்திருந்தார். வளர்மதி கீழையூரிலிருந்த அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்தின் இரட்டைக் கோயில்களைப் பற்றி ஆய்வு செய்திருந்தார். எஞ்சியிருந்த பகைவிடை ஈசுவரம் மேலப்பழுவூரில் இருந்தது. நளினி, வளர்மதி ஆய்வுகளில் இக்கோயில் இடம்பெற்று இணைக்கப்பட்டது என்றாலும், விரிவான அளவில் ஆராயப்பட்டதாகக் கூறமுடியாது. அதனால், அகிலா இக்கோயிலை ஆய்விற்கு எடுத்துக்கொண்டதை அனைவருமே வரவேற்றோம். 1988ல் இருந்தே எங்களுடன் கோயில்களுக்கு வரத்தொடங்கிவிட்டதால் அகிலாவிற்கு கோயிலாய்வு பழகியிருந்தது. மேலப்பழுவூரிலுள்ள கோயில், நடைமுறையில் சுந்தரேசுவரர் கோயிலாக அழைக்கப்படுகிறது. அக்கோயிலைப் பற்றி எழுதியுள்ள அறிஞர்கள்அனைவருமே அதை சுந்தரேசுவரர் கோயிலாகவே அடையாளப்படுத்தியுள்ளனர். நளினி, வளர்மதி ஆய்வின்போதுதான் அக்கோயில் சுந்தரேசுவரர் கோயில் அன்று என்பதையும் பழுவேட்டரையர்களின் பழங்கோயில்களுள் ஒன்றான பகைவிடை ஈசுவரமே பிழையாக சுந்தரேசுவரர் கோயிலாக அறியப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தோம். அந்தக் கோயிலைப் பற்றிப் பேசும் பழைமையான கல்வெட்டு அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்திலுள்ள தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புறத்தே காணப்படுகிறது. இராஜகேசரிவர்மரின் (முதலாம் ஆதித்தர்) பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள அக்கல்வெட்டு, பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி என்பவர் அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்துள்ள இரண்டு தளிகளிலும் விளக்கேற்ற வாய்ப்பாக நிலம் கொடையளித்தமையைச் சுட்டுகிறது. அக்கல்வெட்டே பகைவிடை ஈசுவரம் பற்றிய அறிமுகத்தை எங்களுக்கு அளித்தது. நளினி, வளர்மதி ஆய்வுக்காலத்தின் தொடக்கத்திலேயே பகைவிடை ஈசுவரத்தைத் தேடும் பணி முனைப்பானது. மேலப்பழுவூர்க் கோயில், சுந்தரேசுவரர் கோயில் எனும் பெயரில் விளங்கியதால், பகைவிடை ஈசுவரம் இருந்து அழிந்த கோயிலாக இருக்குமோ என்றுகூடத் தொடக்கத்தில் எண்ணினோம். 1924ம் ஆண்டு கல்வெட்டறிக்கையில் படிக்க நேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் (397, 398) பகைவிடை ஈசுவரம் பற்றிய தெளிவைத் தந்தன. அவையிரண்டும் உத்தமசோழரின் ஐந்தாம், பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள். அவற்றுள் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, பகைவிடை ஈசுவரத்து இறைவனுக்கு விளக்கேற்றுவதற்காக நக்கன் கிடந்த பெருமாள் என்ற ஆடல்மகள் பொற்கொடை தந்த செய்தியைக் கூறுவதுடன், கொடையாளியை மிகுந்த நேயத்துடன், 'இத்தளிக் கூத்தப்பிள்ளை' என்று அறிமுகப்படுத்துகிறது. பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு பகைவிடை ஈசுவரத்து இறைவனைப் 'பழுவூர் நக்கர்' என்று குறிப்பதுடன், வெண்ணிக் கூற்றத்து பிரமதேயமான பூவனூரைச்சேர்ந்த ஆத்திரையன் சிவதாசன் சோழபிரானான உத்தமசோழ பிருமாதராயர் என்பவர் கோயிலில் விளக்கெரிக்க நிலைவிளக்கொன்றும் நெய்க்காக 96 ஆடுகளும் தந்த தகவலைப் பரிமாறிக் கொள்கிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் சுந்தரேசுவரர் கோயிலில் இருந்து படியெடுக்கப் பட்டனவாகக் கல்வெட்டறிக்கையில் சுட்டப்பட்டிருந்தமையால், நாங்கள் அக்கோயிலை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன் விளைவாகப் பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறியும் வாய்ப்பமைந்தது. அப்படிக் கிடைத்த பதினெட்டுக் கல்வெட்டுகளுள் பல, பகைவிடை ஈசுவரம் என்ற பெயருடைய கோயிலுக்கான கொடைக் கல்வெட்டுகளாக இருந்தன. விமானத்தின் கட்டுமானத்தை ஆராய்ந்தோம். ஆலம்பாக்கம் மாடமேற்றளி, காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயிலின் புறச்சுவர் இவற்றின் அமைப்பில் விமான வெளிச்சுவர் இருந்தமை வியப்பளித்தது. பழுவூர்ப்பகுதியின் ஒரே சாந்தார விமானமாகவும் அது இருந்தமை எங்கள் வியப்பைப் பன்மடங்காக்கியது. தொடர்ந்த ஆய்வுகளின் வழி, தற்போது சுந்தரேசுவரர் கோயிலாக அழைக்கப்படும் இறைக்கோயிலில் விமானம், பழங்கட்டுமானம் என்பதையும் அதுவே பகைவிடை ஈசுவரம் என்பதையும் உறுதிப்படுத்தினோம். இரண்டாம் நிலையாக, 'சுந்தரேசுவரர்' எனும் பெயர் வந்தமைக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினோம். அக்கோயில் வளாகக்துள்ள அம்மன் கோயில் தாங்குதளம், சுவர் இவற்றில் இருந்த கல்வெட்டுகளைப் படித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன. புதிய கல்வெட்டுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. மன்னு பெரும் பழுவூரில் செல்வாக்கோடு ஆட்சி நடத்திய பழுவேட்டரைய மரபின் இறுதி மன்னராகக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்தும் கண்டன் மறவன், உத்தமசோழரின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் செங்கல் தளியொன்றை எடுப்பித்தார். திருத்தோற்றமுடையார் கோயிலென்ற பெயரில் அழைக்கப்பட்ட அக்கோயிலின் வரலாற்றைத் தொகுத்துத் தரும் பத்துக் கல்வெட்டுகளையும் இன்றும் பகைவிடை ஈசுவரத்து வளாகத்தில் காணலாம். எங்களால் கண்டறியப்பட்ட உத்தமசோழரின் பதினாறாம் ஆட்சியாண்டு கல்வெட்டே, இக்கோயிலைப் பற்றிப் பேசும் முதற் கல்வெட்டாகும். திருத்தோற்றமுடையார் கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றுவதற்காகக் கண்டன் மறவன் முப்பது கழஞ்சுப் பொன் அளித்த செய்தியைத் தரும் அக்கல்வெட்டு, நக்கன் மாறபிரான் இக்கோயிலின் ஸ்ரீகாரியமாக இருந்ததையும் இக்கொடை மேலை நகரத்து சங்கரபாடியார் பொறுப்பில் விடப்பட்டதையும் தெரிவிக்கிறது. முதல் இராஜராஜரின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டில், 'அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவனேன் எடுப்பித்த ஸ்ரீகோயில் திருத்தோற்றமுடையார் கோயில்' என்று இக்கோயிலை எடுப்பித்த தகவலைக் கண்டன் மறவனே சொல்வது போலச் செய்தி உள்ளது. கி. பி. 984ல் கண்டன் மறவனால் எழுப்பப்பட்ட இக்கோயில் காலப்போக்கில் வழிபாடற்று, ஒதுக்கப்பட்ட நிலையில், கவனிப்பாரற்றுக் கிடந்ததாகவும் முதற் குலோத்துங்கர் காலத்தில் (கி. பி. 1070 - 1120) கலிங்கப் படையெடுப்பை நிகழ்த்திய படைத்தலைவர்களுள் ஒருவரான வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தமசோழனான இலங்கேசுவரன் மன்னரின் நலத்திற்கும் வளத்திற்கும் என இக்கோயிலைக் கற்றளியாக்கிக் குலோத்துங்க சோழ ஈசுவரம் என்று பெயரிட்டு (கி. பி. 1085) மீண்டும் வழிபாட்டிற்குக் கொணர்ந்ததாகவும் இங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. முதற் குலோத்துங்கரின் முப்பத்திரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு பெரிய பழுவூரில் இலங்கேசுவரனால் கற்றளியாகக் கட்டப்பெற்ற திருத்தோற்றமுடையார் கோயில் என்னும் குலோத்துங்க சோழ ஈசுவரம் உடைய மகாதேவர் கோயிலுக்குத் தில்லைக்குடி என்னும் குலோத்துங்க சோழ நல்லூர் தேவதானமாகத் தரப்பட்ட செய்தியைத் தருகிறது. அம்மன் கோயிலின் கிழக்குச் சுவரில் காணப்படும் மூன்றாம் இராசராசரின் கல்வெட்டே இக்கோயில் பற்றிக் குறிப்பிடும் காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும். இதற்குப் பிறகு குலோத்துங்க சோழீசுவரமான திருத்தோற்றமுடையார் கோயிலின் வரலாற்றை அறியச் சான்றுகள் ஏதுமில்லை. இன்று இக்கோயிலின் கல்வெட்டுகள் பகைவிடை ஈசுவரத்தின் அம்மன் கோயில் புறச்சுவர்களில் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, இக்கோயிலும் காலப்போக்கில் அழிந்து, இதன் கற்கள் அம்மன் கோயிலை எடுப்பிக்கப் பயன்பட்டிருக்குமோ என்று கருதத்தோன்றுகிறது. எதிரிலுள்ள அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்தில் இரண்டு கோயில்கள் இருப்பது போல, திருத்தோற்றமுடையார் கோயிலும் பகைவிடை ஈசுவரத்தின் வளாகத்திற்குள்ளேயே, இப்போது அம்மன் கோயில் இருக்குமிடத்திலேயே இருந்து சிதைந்திருக்கலாம். அம்மன் கோயில் அடித்தளத்தில் காணப்படும் திருத்தோற்றமுடையார் கோயில் பற்றிய பழைமையான கல்வெட்டுகள் இக்கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன. பின்னால் வந்தவர்கள் திருப்பணி செய்த நிலையில்தான் பகைவிடை ஈசுவரத்தின் பெருமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் இடிந்து சிதைந்திருந்த திருத்தோற்றமுடையார் கோயிலும் சீரமைக்கப்பட்டு அம்மன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற முடிவுடன் எங்கள் ஆய்வை நிறைவு செய்தோம். அகிலாவின் வருகை பகைவிடை ஈசுவரம் வளாகத்தை மேலும் பரந்துபட்ட அளவில் ஆராய வழி வகுத்தது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டிய நெருக்கடி இருந்ததாலும் சிராப்பள்ளியிலிருந்து 55 கி. மீ. தொலைவில் பழுவூர்க் கோயில்கள் இருந்தமையாலும் நளினி, வளர்மதி ஆய்வுகளின்போது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என அங்குச் சென்றபோதும் அவர்கள் தலைப்பாகக் கொண்டிருந்த கோயில்களில் ஆய்வு நிகழ்த்திய அளவிற்குப் பகைவிடை ஈசுவரம் வளாகத்தில ஆய்வுசெய்யக்கூடவில்லை. அகிலாவின் ஆய்வு மூன்று மாதங்கள் அக்கோயிலில் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கியது. அந்த மூன்று மாதங்களில் ஆறு முறைகளாவது பகைவிடை ஈசுவரம் சென்றிருப்போம். ஒருமுறை மஜீது, அரசு, சீனிவாசன் இவர்களும் எங்களுடன் பயணித்தனர். அங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளை எல்லாம் நண்பர் மஜீது படித்துப் பார்த்து மகிழ்வுற்றார். பகைவிடை ஈசுவரத்தில் பார்க்க நேர்ந்த சிற்பத்தொகுதிகளில் சேட்டைத்தேவி, எழுவர் அன்னையர், பிச்சையுகக்கும் அண்ணல் சிற்பங்கள் பழைமையானவை என்பதை அறிந்தோம். நான் அறிந்தவரையில், மேலப்பழுவூர்ச் சேட்டைக்கு நிகரான அழகுடைய சேட்டைத்தேவியின் சிற்பம் வேறெந்தத் திருக்கோயிலிலும் இல்லை. இங்குள்ள எழுவர் அன்னையர் சிற்பங்களும் அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்துள்ள எழுவர் அன்னையர் சிற்பங்களும் ஒரே காலத்து அழகுப் புதையல்கள். அவை இன்றைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் அலங்கோலத்திற்கு யாரை நோவது? மேலப்பழுவூர் வளாகத்தில் ஊர்த்வ தாண்டவர் சிற்பம் ஒன்று உள்ளது. அது குலோத்துங்க சோழ ஈசுவரத்திற்கு உரியதாகலாம். அது போன்ற ஊர்த்வ தாண்டவரைக் குலோத்துங்கர் காலக் கோயிலான சிந்தாமணி அகரத்தில் பார்த்திருக்கிறோம். அகிலாவுடன் அக்கோயிலின் சாந்தாரப்பகுதியை ஆராய்ந்த இருபது நிமிடங்களும் மறக்கமுடியாதவை. இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் எங்குப் பாம்பு இருக்குமோ, எங்குத் தேள் இருக்குமோ என்று தயங்கித் தயங்கியே, கைவிளக்கின் உதவியுடன் நாற்புறமும் பார்வையைச் சுழற்றியவாறே திருவடிகள் பதித்துச் சுற்றுலா வந்தமையை இன்று நினைக்கும்போதும் வியக்கிறது. வெளவால்களும் ஒட்டடையும் தந்த துன்பம் சொல்லி மாளாது. ஆனால், அவற்றுக் கிடையிலும் அந்தச் சாந்தாரம் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் கட்டமைப்பில் இருப்பதை அறியமுடிந்தமை மகிழ்வளித்தது. இந்த ஆய்வின்போதுதான் காளியின் கரணக்கோலம் காட்டும் மகரதோரணத்தைக் கண்டுபிடித்தோம். பகைவிடை ஈசுவரம் வளாகத்திற்கு முன்னிருக்கும் ப்ிள்ளையார் கோயிலிலும் ஒரு கல்வெட்டுக் கிடைத்தது. மார்ச்சு முதல் வாரம் வரை தரவுகள் தொகுப்பதில் சென்றதால் ஆய்வேட்டை எழுத இருபது நாட்களே இருந்தன. அதனால், நாள்தோறும் அகிலா மையத்துக்கு வரவேண்டியிருந்தது. கடுமையான உழைப்பை வெளிப்படுத்திப் பதினைந்தே நாட்களில் ஆய்வேட்டை முடித்துத் தந்தார். பழுவேட்டரையர்களின் சுருங்கிய வரலாறு முதல் இயலாக அமைய, மேலப்பழுவூர்ப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் இயலாயின. மூன்றாம் இயலில் பகைவிடை ஈசுவரத்தின் கட்டுமானம், சிற்பங்கள் இடம்பெற்றன. இறுதி இயல் கல்வெட்டுகளில் இருந்து பெறப்பட்ட வரலாற்றைச் சுட்ட, முடிவுரையில் பகைவிடை ஈசுவரத்தின் புதிர்கள் தெளிவாக்கப்பட்டன. ஆய்வேட்டை மதிப்பீடு செய்த புறநிலைப் பேராசிரியர் அகிலாவின் திறத்தைப் பெரிதும் பாராட்டியதாக நெறியாளர் கூறியபோது ஈன்ற தாயினும் பெரிதுவந்தேன். பகைவிடை ஈசுவரம் ஒரு புதையல் என்றால் அதன்வழி எங்களுக்குக் கிடைத்த மற்றொரு புதையல் அகிலா எனும் ஆய்வாளர். 3. 3. 1989 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து மடலொன்று வந்தது. அதில், பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலக்குழு உறுப்பினராக என்னை நியமித்திருப்பதாகத் தகவல் இருந்தது. அது போழ்து தமிழ்ப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் அறிஞர் சி. பாலசுப்பிரமணியன் ஆவார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே எங்களுக்குப் பழக்கமானவர். தினமணியில் தொடர்ந்து வெளியான என் அறிவியல் கட்டுரைகளும் கலைச்சொல்லாக்கமும் கண்டே என்னை அறிவியல் புலக்குழு உறுப்பினராக்கியதாகப் பின்னாளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அப்புலக்குழுவில் நான் இருக்கவேண்டும் என விரும்பிய மற்றோர் அறிஞராக பேராசிரியர் முனைவர் விக்டர் இராசமாணிக்கத்தைக் குறிப்பிடலாம். கடல் சார் தொல்லியல், மண் அறிவியல் துறைகளின் தலைவராக இருந்த விக்டர் அருமையான மனிதர். இணக்கமாகப் பழகக் கூடியவர். அறிவியல் புலக்குழுவின் தலைவராக அவர் இருந்தமையால், ஒவ்வொரு புலக்குழுக் கூட்டத்தின்போதும் அவருடன் உரையாடிக் கடல் சார் வரலாறு அறிதல் இன்பமான வாய்ப்பாக அமைந்தது. தமிழ்ப் பல்கலையில் இருந்த அறிவியல் சார்ந்த துறைகளின் கட்டமைப்பாக அறிவியல் புலக்குழு விளங்கியது. இக்குழுவினர் அவ்வப்போது கூடித் துறை சார்ந்த முன்னேற்றங்களையும் துறையினர் அளிக்கும் ஆய்வுத் திட்டங்களையும் அவற்றுக்கான மதிப்பீடுகளையும் குறித்துக் கலந்துரையாடி, முடிவுகள் கண்டு, அவற்றைத் துணைவேந்தருக்குப் பரிந்துரைக்க வேண்டும். சித்தமருத்துவம், அறிவியல் தமிழ், கட்டடக்கலை, கடல் சார் அறிவியல், பொது அறிவியல், கணினிவியல் எனப் பல துறைகள் இப்புலக்குழுவில் அடக்கம். துறைத்தலைவர்களுடன் நானும் குழுத் தலைவர் விக்டரும் குழுவ்ில் இருந்தோம். புலக்குழுவின் முதல் கூட்டத்தில்தான் துறைகள் எப்படி இயங்குகின்றன. எத்தகு திட்டங்களைத் துறைகள் முன்னிலைப்படுத்துக்ின்றன என்பதெல்லாம் தெரியவந்தது. கட்டடக்கலைத் துறையின் தலைவர் திரு. கோ. தெய்வநாயகம், அறிவியல் துறைத் தலைவர் திருமதி பரிமளா, அறிவியல் தமிழ்த் துறைத் தலைவர் திரு. இராமசுந்தரம் இவர்கள் அன்புடன் பழகினர். திருமதி பரிமளா சங்க இலக்கியங்களிலுள்ள அறிவியல் தகவல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமையால் அவருடன் நல்ல பரிமாற்றங்கள் அமைந்தன. ஏற்கனவே பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் செனட் பேரவையின் உறுப்பினராகவும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நாடகப்பள்ளியின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தமையால் தமிழ்ப் பல்கலைக் கழகப் பொறுப்பு எளிதானதாக அமைந்தது. அப்பல்கலைகளில் கிடைத்த அனுபவங்கள் தமிழ்ப் பல்கலைக் கூட்டங்களை எதிர்கொள்ளப் பேருதவி செய்தன. பேராசிரியர் விக்டருடன் இணைந்து பல புதிய தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பமைந்தது. தமிழர்களின் கடற்பயணங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்ற அவா மிக்கிருந்ததாலும் முதலாம் இராஜேந்திரரின் பேராற்றல் மிக்க கடற்படையெடுப்புகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்திருந்ததாலும் அவரிடம் நிறைய உரையாடினேன். தமிழகக் கடற்கரைகள் பற்றியும் கடல் சார்ந்த அறிவியல் செய்திகள் பற்றியும் படகுகள், மீனவர்கள், கடல் சார்ந்த கலைச்சொற்கள் இவை பற்றியும் பலமுறை நாங்கள் கலந்துரையாடி இருக்கிறோம். அப்போதெல்லாம் கோயிற்கலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அவருடன் இணைந்து கடல் ஆய்வுகளில் நுழைந்துவிடலாமா என்று தோன்றும். அவ்வளவு தரவுகள்! அவ்வளவு கேள்விகள்! தமிழர்களின் கடல் சார் அறிவு பற்றி நாம் இன்னமும் ஆராயவே தொடங்கவில்லை என்று அவர் கூறும்போதெல்லாம் மிக வருந்துவேன். தமிழறிஞர்களுக்குக் கடல் சார் அறிவியலில் அனுபவம் இல்லை. கடல் சார் அறிவியல் அறிஞர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பின்புலமில்லை. இதனாலேயே, தமிழர்களின் கடற்பயணங்கள், அவற்றின் பின்னிருந்த அவர்தம் ஆற்றல், மூளைத்திறன், தொழில்நுட்பம், இதற்கென அவர்களிடமிருந்த கலைச்சொற்கள் எல்லாவற்றையும் நாம் இன்னமும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. விக்டர் அவர் துறையில் இருந்த ஒன்றிரண்டு ஆய்வாளர்களுடன் மிக முயன்று சில திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அவற்றுள் சோழ மண்டலக் கடற்கரை தொடர்பான அவருடைய ஆய்வு குறிப்பிடத்தக்கது. அது பற்றிய அவருடைய அறிக்கைகளை நான் வாசித்திருக்கிறேன். துறைகளிடையே நல்ல ஒருங்கிணைப்பும் பேராசிரியர்களிடையே அணைத்துச் செல்லும் மனப்பாங்கும் இருந்து, அவர்தம் ஆய்வுகளுக்குப் பல்கலை நல்கைக் குழுவும் அரசும் தேவையான நிதி உதவிகளைத் தருகின்ற சூழல் அமையுமானால் உலகத் தரத்தில் உயரிய தமிழ்நாட்டு வரலாறு வயமாகும். ஆனால், இந்த மூன்றுமே எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் நடைமுறைச் சாத்தியமில்லை. ஒன்றிருந்தால் ஒன்றில்லாத நிலையைத்தான் இங்குக் காணமுடிகிறது. 21. 6. 1987ல் 'சோழர்களின் செல்லப்பிள்ளை' என்ற கட்டுரையை வெளியிட்ட பிறகு, மீண்டும் 18. 10. 1987ல்தான் என்னுடைய தலைக்கோல் கட்டுரையைக் கதிர் வெளியிட்டது. 1988ல் கதிரில் ஒரு கட்டுரைகூட வெளியாகவில்லை. நளினி, வளர்மதி இவர்களின் பழுவூர் ஆய்வுகளில் நான் மூழ்கிப்போனதே அதற்குக் காரணம். 1989ல் மறுபடியும் என் கட்டுரைகள் தினமணி கதிரில் இடம்பெறலாயின. 8. 1. 1989ம் இதழில், 'கரணக் கோலங்களில் கணபதி' எனும் தலைப்பில் பிள்ளையாரின் பெரும்பாலான ஆடற்கோலச் சிற்பங்களை வகைப்படுத்தி எழுதியிருந்தேன். தமிழ்நாட்டுக் கோயில்களில், 'நர்த்தன கணபதி', 'நிருத்த கணபதி' எனும் பெயர்களில் அழைக்கப்பெறும் கோட்ட விநாயகர் சிற்பங்கள் அனைத்துமே ஊர்த்வஜாநு கரணத்தில் இருப்பவைதாம். இக்கரணம் தவிர, வேறொரு கரணத்தில் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிள்ளையாரின் சிற்பத்தைக் காணமுடியாவிட்டாலும், அண்மைக் காலச் சிற்பிகள் புஜங்கத்ராசிதம், வினிவிருத்தம், விருச்சிகம் போன்ற கரணக்கோலங்களில்கூட பிள்ளையாரின் கல், செப்புத்திருமேனிகளை உருவாக்கி விற்பனைக்கு வைத்துள்ளமையைக் கண்காட்சியொன்றில் காணநேர்ந்தது. அதன் விளைவாக எழுந்ததே, 'கரணக் கோலங்களில் கணபதி' எனும் கட்டுரை. 26. 2. 1989ல் வெளியான கதிரில், 'ஊர்த்வஜாநு' கட்டுரை வெளியானது. பரதர் வகைப்படுத்தியிருக்கும் நூற்றியெட்டுக் கரணங்களில், தமிழ்நாட்டுச் சிற்பிகளால் மிக விரும்பிக் கொள்ளப்பட்டவை இரண்டே இரண்டுதான். புஜங்கத்ராசிதம், ஊர்த்வஜாநு எனும் அவ்விரண்டு கோலங்களிலுமே சிவபெருமானைச் சித்திரித்து மகிழ்ந்தனர் தமிழ்நாட்டுக் கலை மேதைகள். 'புஜங்கத்ராசிதம்' அவர்களின் கற்பனைக் கண்களில் விரிவு கொண்டு பல உள்ளடக்கங்களைப் பெற்று, பேரளவாய் விரிந்து ஆனந்தத்தாண்டவமாக மலர்ந்தது. ஆனால், ஊர்த்வஜாநு தொடக்கத்தில் இருந்து இறுதிக் காலம்வரை கால்மாற்றிக் காட்டப்பட்டதே தவிர, கலைஞர் கூட்டம் பெற்றுச் சற்றே விரிவடைந்ததே தவிர, ஆனந்தத் தாண்டவம் போல் பின்புலக் கதைகள் பெற்றுப் பேரளவினதாக உருமாற்றம் கொள்ளவில்லை. ஊர்த்வஜாநு கோலத்தில் நமக்குக் கிடைக்கும் முதற் சிற்பம் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தில்தான் உள்ளது. சிவபெருமான் ஆடுமாறு போலக் காட்டப்பட்டுள்ள அதைத் தொடர்ந்து மற்றொரு ஊர்த்வஜாநு சிவபெருமானைத் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயிலில் காணலாம். பல்லவர்கள் அறிமுகப்படுத்திய இந்த ஊர்த்வஜாநு கோலத்தை உவந்து ஏற்றுப் பரப்பியவர்கள் முற்சோழர்களே. முதற் பராந்தகர் காலக் கோயில்கள் பலவற்றில் ஊர்த்வஜாநு கோலத்தில் சிற்றுருவச் சிற்பமாகச் சிவபெருமானைச் சந்திக்க முடிகிறது. சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயில், உடையார்குடி அனந்தீசுவரம், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், திருச்சென்னம்பூண்டிச் சடையாரி கோயில் என இவ்வரிசை நீளமானது. நான் பார்த்த ஊர்த்வஜாநு சிற்பங்களில் உன்னதமானது, கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தெற்கு மகரதோரணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடும் அந்த அழகரின் மேல் சூரிய ஒளி படும்போது பார்க்கவேண்டும்! பழுவேட்டரையச் சிற்பிகளின் கைவண்ணமும் உளிக்காதலும் அப்போதுதான் விளங்கும். ஆடும் அந்தப் பெருமானின் இருபுறமும் எத்தனை கலைஞர்கள்! ஒரு பூதம் வாசிக்கும் புல்லாங்குழலின் நீளத்தைப் பார்க்கும்போது, 'இந்தப் பூதம் இருக்கும் அளவிற்கு, இத்தனை நீளக் குழலை இது எப்படிப் பிடித்து இயக்குகிறது?' என்றுதான் வியந்து மருளத் தோன்றும்! இந்த ஊர்த்வஜாநு கரணத்தில் திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலில் ஒரு கவிதை உள்ளது. பலகைக் கல் சிற்பமான அதைத் திருப்பணி செய்தவர்கள் தொலைத்துவிடாமல் மேற்கு மதிலில் பதித்து வைத்துள்ளனர். பார்சுவஜாநு போலக் காட்சியளித்தாலும் அது ஊர்த்வஜாநுதான். பொதுவாகச் சிற்பங்களில் ஊர்த்வஜாநுவிற்குரிய உயர்த்தப்பட்ட முழங்காலை, முன் புறமாக உயர்த்திக் காட்டமாட்டார்கள். பக்கவாட்டில்தான் அக்கால் உயர்த்தப்பட்டிருக்கும். முன் புறமாக உயர்த்திக் காட்டினால் உடைந்துவிடும் என்றே தாங்கல், அல்லது ஒட்டுதல் இருக்குமாறு பக்கவாட்டில் காலுயர்த்திக் காட்டுவது சிற்ப மரபு. இந்தக் கரணத்தில் செப்புத்திருமேனிகளும் உண்டு. பழைமையான திருமேனி கூரத்தைச் சேர்ந்தது. பல்லவர் படிமம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சோழர் காலத் திருமேனி மயிலாடுதுறை ஆனந்தத்தாண்டவபுரத்துப் பஞ்சவடீசுவரர் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே அழகு பொலிவன என்றாலும் கூரத்தைவிட ஆனந்தத்தாண்டவபுரத் திருமேனி கூடுதல் நயம் காட்டிக் குளிர்விக்கும் நளினம் கொண்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த மெய்கண்டார் இதழிற்குக் கட்டுரை அனுப்புமாறு திரு. காளத்திநாதன் கேட்டிருந்தார். அவரது அன்பிற்கு இணங்கி, 'வாடிக்கொண்டிருக்கும் வடகைலாசம்' கட்டுரையை அனுப்பினேன். அக்கட்டுரை 1987 ஜுன், ஜூலை இதழ்களில் வெளியானது. 'கல்வெட்டுகளில் திருப்பணிகள்' என்ற கட்டுரை டிசம்பர் 1987ல் இருந்து பிப்ருவரி 1988வரை வெளியானது. இக்கட்டுரையில் கோயில் திருப்பணிகள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தேன். நான் தந்திருந்த அனைத்துத் தரவுகளும் கல்வெட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஜூலை 1988ல் இருந்து செப்டம்பர் 1988வரை, 'கல்வெட்டில் நாட்டியல்' என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை வெளியானது. இது வானொலி உரைக்காகத் தயார் செய்த கட்டுரையாகும். இதுவும் முழுக்க முழுக்கக் கல்வெட்டுகளின் அடிப்படையில் அமைந்த ஆய்வாகவே விளங்கியது. 'மறவனீசுவரம்' என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை 1989 ஜனவரி - மார்ச்சு இதழ்களில் வெளியானது. தருமபுர ஆதீன வெளியீடான ஞானசம்பந்தம் இதழில், 'அல்லூர் நக்கன் கோயில் கல்வெட்டுகள்' 10. 12. 1986, 10. 1. 1987, 10. 2. 1987 ஆகிய மூன்று திங்கள்கள் தொடர்ந்து வெளியானது. 1988ல் இது போலவே, 'அவனிகந்தர்வ ஈசுவர கிருகம்' கட்டுரையை ஆகஸ்டு- அக்டோபர் இதழ்களில் ஞானசம்பந்தம் பதிப்பித்தது. 1989 ஏப்ரல் 15ம் நாள் எங்கள் வீட்டில் நடந்த மாதந்தோறும்வரலாற்றுப் பொழிவு வரிசையில், 'தமிழ் நாடக வளர்ச்சி' எனும் தலைப்பில் நண்பர் இரா. இராஜேந்திரன் உரையாற்றினார். அப்போது அத்தலைப்பில் அவர் முனைவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். மா. எழில் முதல்வன் தலைமை தாங்கினார். மேத்திங்கள் 20ம் நாள் நிகழ்ந்த கூட்டத்திற்கு நண்பர் அ. அப்துல் மஜீது தலைமையேற்க, புலவர் வை. இராமமூர்த்தி, 'மேற்கு கங்கர்கள்' எனும் தலைப்பில் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்தியதால் 25லிருந்து 40க்குள் எனத் தொடர்ந்து பார்வையாளர்கள் அமைந்தனர். வந்தவர்கள் பெரும்பாலும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களாகவும் ஆய்வாளர்களாகவுமே இருந்தமையால் உரைகளும் பயனுள்ளவையாக அமைந்தன. 45 நிமிடங்கள் பொழிவும் தொடர்ந்து கேள்வி நேரம் 45 நிமிடங்களும் என ஒன்றரை மணிநேரம் கூட்டம் அமைந்தது. கூட்டத்திற்கு வந்தவர்கள் வினாக்கள் ஏதும் தொடுக்காதிருப்ப்ின் நளினி, அகிலா, வாணி இவர்களுள் யாரேனும் ஒருவர் கேள்வி நேரத்தைத் தொடங்கிவைப்பர். அன்புடன், இரா. கலைக்கோவன் இதுவரை வெளியான திரும்பிப் பார்க்கிறோம் தொடரின் கட்டுரைகளுடன் தொடர்புடைய சில புகைப்படங்கள் கீழே. மேட்டு மருதூர்க் கோயில் மேட்டு மருதூரில் கண்டறியப்பட்ட நான்முகன் மேட்டு மருதூரில் கண்டறியப்பட்ட சேட்டைத்தேவி முள்ளிக்கரும்பூர்க் கோயில் சீரமைப்பு விழா - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி. நடேசன், அவர் துணைவியார் திருமதி சாந்தி நடேசன் உறையூர்த் தான்தோன்றீசுவரத்தில் வரகுணபாண்டியன் கல்வெட்டுக் கண்டறியப்பட்டபோது - இடமிருந்து வலமாக முன்வரிசை - திருஞானசம்பந்தம், அ. அப்துல் மஜீது, இரா. கலைக்கோவன், இராதாகிருஷ்ணன் பின் வரிசை - கிருஷ்ணன், நடராஜன் கொற்றமங்கலம் விஷ்ணு கோயில் கொற்றமங்கலம் விஷ்ணு கோயில் முகமண்டபம் கொற்றமங்கலம் விஷ்ணு கோயில் குடக்கூத்துச் சிற்பம் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |