http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 119

இதழ் 119 [ மே 2015 ]
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

வாழ்நாள் சாதனையாளர்கள்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 05
A Study on Nagaram in Thiruchirappalli District (Between C. E. 500 and 1300)
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 2
திருக்கடவூர் திருமயானம்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - ஓர் அறிமுகம்
வரலாறு ஆய்விதழின் வரலாறு
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் - முழுத்தொகுப்பு
கற்றலும் களப்பணியும்
மாலைப் பொழுதினிலே ஒரு நாள்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி
Historical Methods - Learning and Understanding from Dr.R.Kalaikkovan
கட்டடக்கலையில் கையளவும் கடலளவும்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையமும் நானும்
இதழ் எண். 119 > கலையும் ஆய்வும்
திருக்கடவூர் திருமயானம்
கி.ஸ்ரீதரன்
தமிழ்நாட்டில் வழிபாட்டுச் சிறப்புமிக்க தலமாக விளங்கும் திருக்கடவூருக்குக் கிழக்கே 1 கி.மீ. தொலைவில் திருக்கடவூர் மயானம் எனும் திருக்கோயில் அமைந்துள்ளது. காவிரித் தென்கரைத் தலங்களுள் இது 48வது தலமாக விளங்குகிறது. திருமெய்ஞானம், பிரம்புரி, வில்வாரண்யம் போன்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. தேவார மூவரான அப்பர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற பழஞ்சிறப்பு மிக்க பதிகளுள் இதுவுமொன்று.

கோயில் அமைப்பும் திருச்சுற்றுக்களும்

இரண்டு திருச்சுற்றுக்களுடம் பெருவளாகமாக அமைந்துள்ள இத்திருக்கோயில் மேற்கு நோக்கி உள்ளது.


முதல்சுற்று நுழைவாயிலில் கோபுரம்


கோபுரமற்ற இரண்டாம் திருச்சுற்றின் வெளி மதிற்சுவரில் அமைந்துள்ள மேற்கு வாயிலின் வழி உள்ளே நுழைந்தால் விசாலமாக அமைந்துள்ள இரண்டாவது திருச்சுற்றினை அடையலாம். பலிபீடமும், நந்திமண்டபமும் அமைந்துள்ள இவ்வெளிச்சுற்றின் தென்மேற்கு மூலையில் வாடாமுலையம்மை (அம்மன்) திருமுன் அமைந்துள்ளது. பலிபீடத்தின் முகப்பில் நர்த்தன கணபதியின் உருவம் சிறப்புற செதுக்கப்பட்டுள்ளது.


வாடாமுலையம்மை திருமுன்


வெளிவாயிலுக்கு நேரேதெரே அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரம் வழியாக முதல் திருச்சுற்றினை அடையலாம். இம்முதல் திருச்சுற்றில் முருகன், ஆடவல்லான் , கஜலட்சுமி, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன், தெற்கில் 63 நாயன்மார்களின் ஓவியங்கள், தென்மேற்கு மூலையில் பிரணவ கணபதி, திருமால் முதலிய தெய்வங்களுக்குத் திருவுருவங்களும் சன்னிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விமானம் - மண்டபங்கள்

இறைவன் கருவறையை உள்ளடக்கிய விமானம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு நாகரத் தளங்களுடனும் திராவிட கிரீவ சிகரங்களுடனும் அமைந்துள்ள இக்கலப்பு விமானத்தின் பூமிதேசம் வரையிலான ஆதிதளக் கட்டுமானம் மட்டும் கல்லில் அமைந்திருக்க, விமான மேற்தளங்கள் அனைத்தும் சுதைப்புச்சால் அமைக்கப்பெற்று நவநாகரீக வண்ணப்புச்சுடன் காட்சியளிக்கின்றன.


இறைவன் திருமுன் விமானம் - வடபுறக் காட்சி


உபானம், உபானத்தைத் தழுவியோடும் பத்மவரி, கம்பு ஆகிய உறுப்புக்களின் மீது அமைந்துள்ள பாதபந்தத் தாங்குதளத்தின் மேல் விமானம் எழுகிறது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய கண்டம் பட்டிகை ஆகியவற்றுடன் அமைந்துள்ள தாங்குதளத்திற்குமேல் வேதிகைத்தொகுதி. வேதிக் கண்டத்திலும் தாங்குதளக் கண்டத்திலும் பாதங்கள் காண்பிக்கப்பட்டாலும் சிற்றுருவங்கள் செதுக்கப்படவில்லை. ஆதிதளச் சுவற்றின் கர்ணம் - சாலை ஆகிய இரண்டுமே பிதுக்கம் பெற்றிருக்க, சாலைப்பத்தி கர்ணப்பத்தியினும் சற்றே அதிக பிதுக்கம் பெற்று அமைந்துள்ளது. இரண்டு பத்திகளிலுமே அணைவுத் தூண்கள் எண்பட்டை விஷ்ணுகாந்த த் தூண்களாக அமைந்துள்ளன. சாலைப்பத்தியில் தேவக்கோட்டங்கள் அகழப்பட்டிருக்க அவற்றில் வடக்கே பிரம்மனும் தெற்கே தட்ஷிணாமூர்த்தியும் கிழக்கே லிங்க புராணத் தேவரும் இடம்பெற்றுள்ளனர். கோட்டங்களின் மேற்பகுதியில் மகர தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் மீது பிரஸ்தரக் கூரை உறுப்புக்களும் அதன்மேல் பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளன.


இறைவன் திருமுன் விமானம் - தென்புறம்


விமானத்திற்கு முன் அர்த்த மண்டபமும் முகமண்டபமும் அமைந்துள்ளன. இரண்டும் விமானத்தைப் போலவே பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்தின் இரண்டு பக்கச்சுவர்களிலும் மூன்று கோட்டங்கள் அமைந்துள்ளன.இக்கோட்டங்களில் வடக்கில் கொற்றவையும் பைரவரும் இடம்பெற, தெற்கில் கணபதி கங்காதரர், பிச்சையுகக்கும் தேவர் முதலான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளனர். கோட்டங்களுக்கு மேல் மகரதோரண அலங்கரிப்புக்கள் உண்டு.


துர்க்கை



ஆலமர் செல்வன்


விமானத்தின் ஆதிதளத் தென்புறச் சுவரையும் அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறு சுவர்ப் பகுதியில் நின்ற நிலையில் லிங்க உருவை வழிபடும் அடியவர் உருவமொன்றினைக் காண முடிகிறது. நீண்ட தாடியும் கொண்டையும் அணிந்து முழங்கால் வரை நீளும் இடையாடையுடனும் இடையில் தரிக்கப்பட்ட வாளுடனும் வணங்கிய நிலையில் காணப்படும் இந்த அடியவரை இக்கோயில் இறைவனை வணங்கும் மன்னராகக் கொள்ளலாம். இவரை இன்னார் என்று அடையாளப்படுத்தும் கல்வெட்டுக்கள் எதுவுமில்லை. லிங்கத்திற்கு மேல் சிறு குடையும் பூச்சரமும் காண்பிக்கப்பட்டுள்ளன.


திருமயானமுடையாரை வணங்கும் அரசர்


இதனைத் தவிர முகமண்டபத் தூணொன்றின் சதுர பாதத்திலும் நின்ற நிலையில் உள்ள அடியவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முகமண்டபத் தூணில் அடியவர்


கல்வெட்டுக்களும் செய்திகளும்

இத்தலத்தின் வரலாற்றுச் சிறப்பினை இக்கோயிலில் காணப்படும் 15 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்தியம்புகின்றன. இவை கீழ்க்கண்ட அரசர்களின் காலக் கல்வெட்டுக்களாகும்.

1. கோனேரின்மை கொண்டான் - 4
2. வீர இராஜேந்திர தேவர் (1068 - 69) - 1
3. இராஜாதிராஜன் (1176 - 77) - 1
4. மூன்றாம் குலோத்துங்க சோழர் (1210 - 11) - 8
5. பாண்டிய மன்னர் மாறவர்மன் குலசேகரன் (1302 - 03) - 1


திருக்கோயில் கல்வெட்டுக்களுள் ஒன்று


கல்வெட்டுக்களின் வழி இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் ஆக்கூர் நாட்டுப்பிரிவில் பிரம்மதேயமாக அமைந்திருந்ததை அறியமுடிகிறது. சில கல்வெட்டுக்கள் இவ்வூரை இராஜேந்திரசிங்க மங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன. வேறு சில கல்வெட்டுக்கள் இத்திருக்கோயிலை ‘ஆக்கூர் நாட்டு அம்பர் நாட்டுத் திருமயானமுடைய பெருமாள் கோயில்’ என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.

கல்வெட்டுக்களில் இவ்வூர் இறைவன் திருக்கடவூர் உடையார் திருமயானமுடையார் எனவும் திருமையானமுடைய பெருமாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் செய்திகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.

1. திருக்கோயில் இறைவனுக்கு இராஜாதிராஜமங்கலம் எனும் ஊரில் இருந்த நிலமொன்று அரசரால் இறையிலியாக்கி (வரிநீக்கி) திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டது. இச்செய்தி இறை வசூலிக்கும் அதிகாரிகளுக்குத் (வரிக்கூறு செய்வார்) தெரியவேண்டுமாதலால் அரசரது ஆணையை அவரது திருமந்திர ஓலையதிகாரியான இராஜேந்திர சிங்க மூவேந்த வேளார் உரிய முறையில் தெரிவித்தார். கல்வெட்டில் இந்நிலம் ‘திறப்பு நிலம்’ என்று குறிப்பிடப்படுவதால் முன்பே அளிக்கப்பட்டதொரு தானத்தினைப் புதுப்பித்து இறையிலியாக்கி மீண்டும் கோயிலுக்கே அரசர் அளித்துள்ளதை அறியமுடிகிறது.

2. பெருநல்லூரைச் சேர்ந்த வில்லவராயர் என்பவரால் நிலமொன்று வாங்கப்பட்டு கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது. இம்மயானமுடையார் கோயிலில் வேதம், ஸ்ரீருத்ரம் ஆகியவை வீணை இசையுடன் பாராயணம் செய்வதற்காகவே இந்நிலத்தானம் அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் காணப்படும் திருத்தொண்டத்தொகை மங்கலம் மற்றும் சிவபாதசேகர மங்கலம் ஆகிய ஊர்ப்பகுதிகள் ஆராயத்தக்கன.

3. வீரசோழ நல்லூர், விருதராஜ பயங்கர நல்லூர் ஆகிய இரண்டு ஊர்களிலும் மயானமுடையார் திருக்கோயில் இறைவனுக்காக ‘இராஜாதிராஜன் ந ந்தவனம்’ என்கிற பெயரில் திருநந்தவனம் அமைக்க நிலங்கள் அளிக்கப்பட்டன. தானமளிக்கப்பட்ட நிலம் மண்மேடாக இருந்த தனால் அந்நிலத்தைத் திருத்தி ந ந்தவனம் அமைத்தனர்.

4. இத்திருக்கோயில் இறைவனுக்கு சிவநாமத்துக் காணியாக ‘திருமயான விளாகம்’ என்கிற பெயரில் நிலமொன்று அளிக்கப்பட்டது. மணற்குன்றாக இருந்த இந்நிலத்தைத் திருத்தி விளைநிலமாக்கி அதன் வருவாயிலிருந்து நாள்தோறும் 2 ஆழாக்கு நெய் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இத்தானத்தினை அளித்தவர் ஜெயமாணிக்க வளநாட்டு மருகல் .நாட்டுக் கருப்பூருடையான் அமலன் அம்பலக்கூத்தன் என்பவராவார்

5. திருக்கடவூரைச் சேர்ந்த வெள்ளான் கடவூருடையான் பொற்காடன் என்பவரின் மனைவி (அகமுடையாள்) சொறாண்டியும் அவரது மருமகள் பெற்றாண்டியும் விளக்குதானம் அளித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பெண்கள் இருவரின் பெயர்களும் கல்வெட்டுக்களில் அதிகம் காணப்பெறாத அரிதான பெயர்களாகும்.

6. மூன்றாம் குலோத்துங்க சோழரது கல்வெட்டுக்களில் இத்திருக்கோயில் ‘ஆக்கூர் நாட்டு அம்பர் நாட்டுத் திருக்கடவூர் உடையார் திருமயானமுடையார் பெருமாள் கோயில்’ என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

வடகரை இராஜாதிராஜ வளநாட்டுத் தனியூரான பெரும்பற்றப்புலியூர் வாச்சியன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவர் திருக்கடவூர் உடையாருக்கு (இவ்வூர் இறைவனுக்கு) நாள்தோறும் செங்கழுநீர்மாலை (திருப்பள்ளிதாம ம்) சாற்றுவதற்காக இராஜேந்திர சதுர்வேதி மங்கலம் எனப்படும் ஆக்கூர் அருகே எருக்கலந்திட்டை என்கிற ஊரிலிருந்த நிலத்தை தானமாக அளித்தார். இக்கல்வெட்டின் வழி இக்கோயிலில் அமைந்திருந்த திருப்பூ மண்டபம் எனும் பூக்கட்டும் இடமும் இராயப்பெருமாள் பூத்தொண்டன் முதலான பூத்தொடுப்பார் பெயர்களும் வரலாற்றிற்கு வரவாகியுள்ளன.

கார்த்திகை முதல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மாலைகள் அளிக்கப்படவேண்டும் என்பதையும் மொத்தம் ஒரு வருடத்தில் 209 மாலைகள் அளிக்கப்பட்ட விபரத்தையும் இக்கல்வெட்டு வழி அறியமுடிகிறது. பூத்தொடுப்பவர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. உறை நாழி, ஊர்த்தண்டல் முதலான வரிகளின் பெயர்களையும் இக்கல்வெட்டு சுட்டுகிறது.

7. இக்கோயிலுக்கு திருநாமத்துக்காணியாக 4090 கமுகு மரங்கள் அடங்கிய பெருந்தோப்பு தானமாக அளிக்கப்பட்டதனை வேறொரு கல்வெட்டு குறிப்பிடும்

8. குலசேகரபாண்டியர் கல்வெட்டில் இக்கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாகவும் திருவிளக்குப்புறமாகவும் திருமயான விளாகமான தனியானைவிட்ட பெருமாள் நல்லூரில் அமைந்திருந்த நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டது. இதே பாண்டிய மன்னரின் பெயரால் (நம் பெயரால் அமுதுசெய்தருள) ‘குலசேகரன் சந்தி’ என்கிற வழிபாட்டிற்காகவும் அமுது படைக்கவும் கோயில் திருப்பணிக்கு வாய்ப்பாகவும் நிலம் தானமளிக்கப்பட்டது. மணற்குன்றாக இருந்த இந்நிலம் திருத்தப்பட்டு நன்செய் புன்செய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன.

9. கோயிலுக்கு உரித்தான திருமயானவிளாகம் என்கிற நிலம் திருத்தப்பட்டு அம்பாள் ‘வாடாமுலை நாச்சியார்க்கு’ திருவிழாவின்போது அமுது படைக்க வாய்ப்பாக பொற்கோயில் பட்டன் நிலமளித்தார். சுந்தரமூர்த்தி நாயனார் தனது பாடலில் (பாடல் 8) ‘வாடாமுலையாள் தன்னோடும்’ என்று குறிப்பிடும் அம்மையின் பெயரைக் கல்வெட்டும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

10. இதே திருமயான விளாகம் என்கிற நிலத்தைத் திருத்தி அதிலிருந்து வரும் வருவாயினால் விளக்கெரிக்க தானமளித்த தை மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

11. திருக்கடவூரில் அமைந்துள்ள வீரட்டனமுடையார் கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டின் நகல் இக்கோயிலிலும் காணப்படுகிறது. இரண்டு கோயில்களிலும் வழிபாடு செய்வார்க்கு அளிக்கப்பட்ட உரிமை, தானங்கள் முதலிய தகவல்களைக் குறிப்பிடும் கல்வெட்டாகும் இது.

12. இக்கோயில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்கிற இராஜாதிராஜன் திரு ந ந்தவனக் குடிகளுக்குத் தானமாக நிலம் அளிக்கப்பட்டது. இப்பணியை மேற்கொண்டுவந்த சண்டேசுவரப் பிச்சன் என்பவர் காலமாகிவிடவே அப்பணிக்கு நற்புத்தூருடையான் குணச்சரன் என்பவரை திருச்சிற்றம்பலமுடையான் என்பவர் நியமித்து நிலத்தானமும் அளித்தார். இவர் தன்னைக் கல்வெட்டில் ’இக்கோயிலில் கும்பிட்டிருக்கும் வாச்சியன் ஜாதவெதனான திருச்சிற்றம்பலமுடையானேன்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார் [65 of 1906]. இவரது பெயர் மூன்றாம் குலோத்துங்கனின் 35ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் ‘இவ்வூர் கும்பிட்டிருக்கும் மாண்டார்களில் வாச்சியன் திருச்சிற்றம்பலமுடையான்’ என இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது [57 of 1906].

முடிவுரை

இத்திருக்கோயில் கல்வெட்டுக்கள் பல அரிய வரலாற்றுச் செய்திகளை அள்ளித்தருகின்றன. கோயில் அமைந்திருக்கும் பகுதி கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் மணற்குன்றுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலத்தைத் திருத்தி பயிர் செய்வதற்கு ஏற்றவாறு செப்பனிட்டு அதிலிருந்து வரும் வருவாய் கோயிலுக்கு அளிக்கப்பட்டமையை பல கல்வெட்டுக்கள் சுட்டி நிற்கின்றன. திருமுறைகளில் குறிப்பிடப்படும் இறைவன், இறைவியின் பெயர்கள் கல்வெட்டுக்களிலும் பயின்று வருவது நோக்கத்தக்கது.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களுள் பெரும்பான்மையானவை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவை என்பதனைக் காணலாம். கோயிலின் தற்போதைய கட்டுமானமும் பிற்காலச் சோழர் கலைப்பாணியிலேயே விளங்குவது குறிப்பிடத்தக்கது.



இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.