http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 119

இதழ் 119 [ மே 2015 ]
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

வாழ்நாள் சாதனையாளர்கள்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 05
A Study on Nagaram in Thiruchirappalli District (Between C. E. 500 and 1300)
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 2
திருக்கடவூர் திருமயானம்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - ஓர் அறிமுகம்
வரலாறு ஆய்விதழின் வரலாறு
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் - முழுத்தொகுப்பு
கற்றலும் களப்பணியும்
மாலைப் பொழுதினிலே ஒரு நாள்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி
Historical Methods - Learning and Understanding from Dr.R.Kalaikkovan
கட்டடக்கலையில் கையளவும் கடலளவும்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையமும் நானும்
இதழ் எண். 119 > சிறப்பிதழ் பகுதி
தொட்டனைத்தூறும் மணற்கேணி
கோகுல் சேஷாத்ரி
ஒரு மைய மாணவனின் பத்தாண்டுகாலப் பயணமும் பார்வை மாற்றங்களும்


திருக்கோயில்கள் பற்றியும் அவற்றைத் தாம் பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொண்டதைப் பற்றியும் குறிப்பிடும் போது அதனைத் தெரிதல், அறிதல், புரிதல் என்று மூன்று நிலைகளாகப் பகுத்துரைப்பார் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள்.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றுத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும்போது இத்தகைய புரிதலோ அறிதலோ எனக்கு இல்லை. சொல்லப்போனால் வரலாற்றையும் திருக்கோயில்களையும் நெருக்கமாகத் தொடர்புபடுத்திப் பார்க்கும் பார்வையே ஏறக்குறைய இல்லை எனலாம்.

அக்காலத்தில் என்னை வரலாற்றின்பால் ஆர்வம் கொள்ள வைத்தவர்கள் வரலாற்று ஆளுமைகளாக நாமறியும் பேரரசர்களே. சங்க காலம் என்றால் கரிகாலர், பல்லவர் காலம் என்றால் மகேந்திரர் - நரசிம்மர், சோழர் காலம் என்றால் இராஜராஜர் - இராஜேந்திரர், பாண்டியர் காலம் என்றால் ஜடாவர்மர் என்று ஒட்டுமொத்தத் தமிழக வரலாற்றையும் இத்தகைய ஆளுமைகளின் வழி ஒரு எளிமையான தொடர் சித்திரமாகப் புரிந்து வைத்திருந்தேன்.

இதற்கு இரண்டு முக்கிய காரணிகள் இருந்தன. முதலாவது நான் படித்த பொன்னியின் செல்வன் முதலான வரலாற்று நாவல்கள். இரண்டாவது நான் படித்த முதல் கட்ட வரலாற்றுப் புத்தகங்கள். இரண்டுமே வரலாறு என்கிற வரைவை அரசியல் ஆளுமைகளின் வழி அறிந்துகொள்ளும் இலக்கணத்தை என்னுள் விதைத்து அதனை நன்றாக வேரூன்றச் செய்து விட்டன.

ஆளுமைகளின் வழி அறியப்படும் வரலாற்று வரைவுகள் புரிந்து கொள்வதற்கு எளிதாகவும் பல சமயங்களில் மகத்தான மனயெழுச்சி ஊட்டுவதாகவும் அமைந்திருந்ததால் படிப்பதற்கு சுவையாக இருந்தன. குப்தர் காலத்தைப் பற்றியும் சோழர் காலத்தைப் பற்றியும் பல்வேறு கனவுகள் விரிந்தன. மகத்தான ஆளுமைகளின் தலைமையில் அமைந்த சமுதாயமும் காலகட்டமும் மகத்தான கால கட்டமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? என்று தோன்றியது.

இத்தகைய எண்ணவோட்டங்களுடன்தான் அந்தக் காலகட்டத்தில் அத்தனை ஆய்வாளர்களையுமே அணுகினேன். திருச்சி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் மூன்று முக்கியமான கோயில்களுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அவற்றுள் ஒன்று பல்லவர் குடைவரை. இரண்டாவது முற்சோழர் கற்றளி. மூன்றாவது இடைச்சோழர் காலப் பெருங்கற்றளி.


2003ல் ஆசிரியருடன் முதல் புள்ளமங்கைப் பயணத்தின்போது


இந்த மூன்று திருக்கோயிகள் பற்றியும் அந்தப் பயண அனுபவங்கள் பற்றியும் வெவ்வேறு தருணங்களில் மிக விரிவாகவே வரலாறு டாட் காமில் எழுதியிருக்கிறோம் என்பதால் அவற்றை இக்கட்டுரையில் முற்றாகவே தவிர்க்கிறேன். திருக்கோயில்கள் வரலாறோடு நெருக்கமான தொடர்புடையவை. இறந்த கால வரலாற்றைப் பழந்திருக்கோயில்களில் ஓரளவிற்காவது உணரலாம் என்று உணர்த்திய பயணங்களாக அவை அமைந்தன.

இத்தகைய திருக்கோயில் பயணங்கள் நான் அதுவரை நன்கறிந்த வரலாற்று ஆளுமைகளை மேலும் நெருக்கமாக அறிய உதவின. புள்ளமங்கை திருவாலந்துறையார் திருக்கோயிலில் நின்றபோது முதலாம் பராந்தகரும் இங்குதான் நின்றிருப்பார் - இப்படித்தான் இரசித்திருப்பார் என்றெல்லாம் தோன்றியது. பெரிய திருக்கற்றளியான தஞ்சை இராஜராஜேஸ்வரத்தின் மேற்தளங்களில் நின்றபோதும் முதலாம் இராஜராஜரைப் பற்றிய நினைவுகளே அதிகம் ஆக்கிரமித்திருந்தன.

சுருங்கக் கூறினால் முன்பு அறிந்த ஆளுமைகள் சார்ந்த வரலாற்று வரைவைத் திருக்கோயில் பயணங்கள் மேலும் அணுக்கமாக்கின. அந்தக் காலகட்டச் சிற்பிகள் - கலைஞர்கள் பற்றிய ஒரு மெல்லிய புரிதல் உருவாகத் தொடங்கியது. வரலாறும் கலையும் நெருக்கமான தொடர்புடைவை என்று தோன்றியது. இது பற்றி ஒரு முறை முனைவர் கலைக்கோவனுடன் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. அவர் ‘வரலாறும் கலையும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கலை என்பது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது தவிர்க் முடியாமல் அது உருவாகும் காலகட்டத்தையும் விழுமியங்களையும் உள்வாங்கி அவற்றைத்தான் பிரதிபலிக்கும். எல்லா வரலாறுகளும் கலையால் உருவானவே’ என்றார்.

இவ்வாறு பல்வேறு வரலாறு சார்ந்த திருக்கோயில் பயணங்களை மேற்கொண்ட போதும் அவை என்னுள் அடிப்படை மாற்றங்கள் எதையும் விளைவிக்கவில்லை. வரலாறு என்பது வரலாற்று ஆளுமைகளின் தொடர் ஆதிக்கம் மட்டுமே என்கிற எனது கண்ணோட்டம் தொடர்ந்தது. பண்டைய பேரரசர்களின் பிரமிக்கத்தக்க சாதனைகளாக மட்டுமே திருக்கோயில்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த எல்லைக்கோட்டைத் தாண்டி வேறெதையும் யோசிக்க இயலவில்லை.

வரலாறு சார்ந்த கதைகள் எழுதுவதில் தொடக்கத்திலிருந்தே எனக்கு அதிக ஆர்வம் இருந்ததினால் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆர்வத்தோடு படிக்கத் துவங்கினேன். குறிப்பாக மையத்தாரால் வெளியிடப்படும் ‘வரலாறு’ ஆய்விதழின் அனைத்து கல்வெட்டுக்களையுமே இக்காலத்தில் படித்தறிந்தேன். நண்பர்கள் கட்டுமானம் - சிற்பம் என்று முனைகையில் நான் அவற்றைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கல்வெட்டுகள் அவை காட்டும் கதைகளுக்கான சாத்தியக்கூறுகள் என்று கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.

இந்த அசட்டையான கண்ணோட்டத்தினால் நான் இழந்தவை பல. முக்கியமாக முனைவர் கலைக்கோவன் திருக்கோயில்களின் கட்டுமானக்கலை பற்றியும் சிற்பக்கலை பற்றியும் நண்பர்களுக்கு எடுத்துரைத்த பல தரவுகளையும் விளக்கங்களையும் நான் சரிவர உள்வாங்கிக்கொள்ளவேயில்லை. இவை நமக்குத் தேவையான தகவல்கள் அல்ல. நாம் புரியப்போகும் ‘வரலாற்றுப் பணிக்கு’ இத்தகைய தகவல்கள் தேவையேயில்ல என்று தோன்றியதால் அவற்றைப் பெரும்பாலும் புறக்கணித்தேன். தப்பித் தவறி எண்பட்டைக் குமுதம், ஜகதி, பிதுக்கம், ஒடுக்கம் என்று பல சொற்கள் காதில் அவ்வப்போது வந்து விழுவதுண்டு. ஆனால் அவற்றின் பொருளை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


2011ல் மேற்கொண்ட புள்ளமங்கை ஆய்வுப் பயணத்தில் என் மகனுடன் ஆசிரியர்


இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன.

நண்பர்களுடன் சேர்ந்து முதுகலை முடித்து முதுமுனைவர் பட்டயப் படிப்பில் சேர்ந்த பிறகுதான் ஆய்வு என்று ஏதாவது ஒன்றை மேற்கொண்டு ஆய்வேடு எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் முனைவர் கலைக்கோவனுடனும் வரலாற்று மைய ஆய்வாளர்களான முனைவர்கள் மு. நளினி மற்றும் அர. அகிலா ஆகியோருடன் நல்லதொரு தொடர்பிலிருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டலோடு முதுகலை ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. இன்னும் சற்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் ஆய்வேடு என்று பெயருக்கு எதையாவது எழுதி முடித்து பட்டயத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது.

கோயிலாய்வு பற்றியும் மைய ஆய்வாளர்கள் பற்றியுமான எனது அச்சத்திற்குப் பின்னால் ஒரு முகாந்திரம் இருந்தது.

ஒரு முறை நானும் பெரியண்ணன் சுந்தரும் நண்பர் சீதாராமனும் மைய ஆய்வாளர்களுடன் இலால்குடிக்குப் பயணமானோம். அப்போது முனைவர் பட்டய ஆய்வு பற்றிய பேச்சு வந்தது. ‘நளினி அவர்கள் முனைவர் சுப்பராயுலு அவர்களின் வழிகாட்டலில் ஒன்பது வருடங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாற்றை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்’ என்று பேச்சுவாக்கில் சர்வசாதாரணமாகக் கூறினார் கலைக்கோவன். அவ்வளவுதான்! அடுத்த சில நிமிடங்களுக்குப் பேச்சே எழவில்லை. தாங்க மாட்டாமல் ‘ஒன்பது வருடங்களா சார்?’ என்றார் சுந்தர். ‘ஆம். ஒன்பது வருட ஆய்வு..’ என்று அதனை மீண்டும் உறுதிசெய்தார் கலைக்கோவன்.

இது என்னுள் பெரியதொரு பீதியை விளைவித்தது. ஒன்பது வருடங்களை ஒரு ஆய்வில் செலவழிப்பதாவது? அந்தக் காலகட்டத்தில் எத்தனை நாவல்கள்.. எத்தனையெத்தனை சிறுகதைகள் எழுதலாம்! சரிதான், இவர்களிடம் மாட்டிக் கொண்டால் இதுதான் கதி போலிருக்கிறது. பேசாமல் கல்வெட்டுக்கள் - கதைகள் என்று ஒதுங்கிவிட வேண்டும். ஆய்வு அது இது என்று ஒருபோதும் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது என்று எண்ணமேற்பட்டது.

ஆகவேதான் முதுமுனைவர் ஆய்வின்போது மைய ஆய்வாளர்களுடன் கலந்தாலோசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தோம். கோயில்கள் பற்றிய எந்தவிதமான புரிதலும் ஏற்படாமலே முதுமுனைவர் பட்டயக் கல்வி முடிந்தது. அந்தப் பருவத்தில் ஓரளவிற்காவது அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றிருந்தால் பின்னாளில் அது எத்தனையோ உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

ஊழின் பெருவலி யாவுள?

முதுமுனைவர் கல்வி முடிந்து முனைவர் பட்டய ஆய்வில் சேர்ந்த போதுதான் உள்ளுக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது. முன்பு நிகழ்ந்தது போல் இப்போதும் மைய ஆய்வாளர்களின் உதவியின்றியே ஆய்வை முடித்துவிடலாம் என்கிற அசட்டு தைரியம் ஏனோ ஏற்படவில்லை. சக ஆய்வு மாணவரான சீதாராமனுடன் கலந்தாலோசித்தேன். இறுதியில் மிகுந்த தயக்கத்துடனும் கலைக்கோவனை அணுகினோம்.

‘முதுமுனைவர் ஆய்வேட்டை நீங்களாகத்தானே முடித்தீர்கள்? அதுபோல் முனைவர் ஆய்வையும் முடித்துக் கொள்வதுதானே? இப்போது மட்டும் எங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறதா என்ன?’ என்று முகத்தில் அடித்தாற்போல் ஏதாவது கூறிவிடப் போகிறாறே என்று அச்சம் வாட்டியெடுத்தது.


புள்ளமங்கை மண்டபக் கூரையின்மீது அமைந்துள்ள பூதகணத்திற்கருகில்


ஆனால் அவர் எந்தத் தயக்கமுமின்றி மிகுந்த பெருந்தன்மையுடன் எங்களின் ஆய்விற்கு அவர் வழிகாட்டச் சம்மதித்தார். வரலாறு சம்மந்தமாக உதவி என்று கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு முடிந்த வரையில் உதவுவதை ஒரு பெருங்கொள்கையாகவே அவர் பின்பற்றி வருகிறார் என்பதைப் பின்னாளில் நெருக்கமாகப் பழகிய பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

அவரது உதவியுடன் ஆய்வுத் தலைப்புக்களாக பராந்தகர் திருக்கோயில் சிற்பங்களைப் பற்றி நானும் கட்டுமானங்கள் பற்றி சீதாராமனும் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று முடிவானது. ‘பராந்தகர் திருக்கோயில்களில் சிற்பங்கள்’ என்கிற என்னுடைய தலைப்பை ‘பராந்தகர் காலக் கோயில் சிற்பங்கள்’ என்று அவர் திருத்தியமைத்த ஞாபகம் உள்ளது. இந்த மெல்லிய மாறுதலின் பின் மகத்தான தரிசனங்கள் அடங்கியிருந்ததைப் பல ஆண்டுகள் கழித்த பிறகே புரிந்து கொண்டேன். காலம்! அந்த ஒற்றச் சொல்லில்தான் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன!

ஆய்வு துவங்கி ஆசிரியருடனான என்னுடைய உரையாடல்களும் துவங்கின. வரலாறு பற்றிய எனது முந்தைய கண்ணோட்டத்துடனும் பழைய வழிமுறைகளுடனும்தான் ஆய்வைத் துவங்கினேன்.

ஏகப்பட்ட நூல்களைப் படிப்பது. அந்நூல்களின் தரவுகளிலிருந்து கோயில்கள் பற்றி சில பல புரிதல்களை நானே உண்டாக்கிக் கொள்வது என்பதே அதுவரை என்னுடைய வழிமுறையாக இருந்தது. புத்தகங்களைத் தாண்டி அப்புத்தகங்களை எழுதிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டங்களைத் தாண்டி கோயில்களை அணுகலாம் என்கிற அணுகுமுறையே எனக்கு சுத்தமாக இல்லை.

ஒரு கோயிலைப் புரிந்து கொள்ளாமல் முற்றிலும் தவற விடுவதற்கு இதனினும் சிறந்த வழி கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு வரலாற்றாசியரும் அவரவர் மனப்போக்கில்தான் ஒரு திருக்கோயிலைப் புரிந்துகொள்ள முடியும். அந்தப் புரிதலில் ஒரு பகுதியைத்தான் அவர் நமக்களிக்க முடியும். அந்த அளவான புரிதலிலிருந்து நாம் என்னவிதமான தெளிவுகளை அடைகிறோம் என்பது முற்றிலும் நம்மைச் சார்ந்தது!


2011ல் திருமங்கலம் ஆய்வுப் பயணத்தின்போது அமர்ந்த நிலையில் ஆசிரியரும் படுத்த நிலையில் நானும்


இத்தகைய வழிமுறையில் கோயில்களைப் பற்றிய மிக மிக மேலோட்டமான சில எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்பதோடு ‘பூ! இவ்வளவுதானா இந்தக் கோயில்?’ என்கிற தவறான பார்வையும் அலட்சியமும் முன்தீர்மானங்களும் வந்து சேரும். விரைவில் எக்காலத்திலும் எந்தக் கோயிலையும் புரிந்து கொள்ளமுடியாத நிலைகூட ஏற்பட்டுவிடலாம்.

திருக்கோயில்கள் பற்றிய இத்தகைய ‘தூரப்’ பார்வையை (Myopic Vision) ஆசிரியர் மிகக் கடுமையாக நிராகரித்தார். “திறந்த மனதோடு கோயில்களை அணுக வேண்டும்” என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் எனது மனதைத் ‘திறக்க’ அவர் அரும்பாடுபடவேண்டி வந்தது. சிறிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவருவதுகூட அத்தனை எளிதாக இல்லை. ஏனெனில் எனது நீண்டகால ‘ஏட்டுப் படிப்பு’ என் மனதை அத்தனை தூரத்திற்கு இறுக்கமாக்கி விட்டிருந்தது. ஏட்டுச் சுரைக்காயை வைத்துக்கொண்டு கூட்டு கிண்டுவது எளிதான செயலல்லவே?

இந்தக் காலகட்டத்தில் அவர் என்னிடம் அளவற்ற பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தார் என்பதனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். சலியாமல் மணிக்கணக்கில் எங்களின் உரையாடல்கள் தொடரும். சமயத்தில் கடுமையான கேள்விகளால் என்னைத் திணற அடிப்பார். குறிப்பாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தும் கலைப்பாணி (Style) என்கிற வார்த்தையைக் குறித்தும் transitional period temples குறித்தும் அவருக்கும் எனக்கும் நிகழ்ந்த கடுமை மிகுந்த உரையாடல்கள் பசுமையாக மனதில் பதிந்துள்ளன.

இந்தக் காலகட்டத்தில் பண்டைய குரு சிஷ்ய பாரம்பரியம் பற்றியும் தற்காலக் கல்வி முறையையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு வியந்து போனேன்.


அதே திருமங்கலம் பயணத்தின்போது அமர்ந்த நிலையில் நானும் படுத்த நிலையில் ஆசிரியரும்


இன்றைய கல்வி முறை என்பது ஒரே சம அளவிலான சட்டையைத் தைத்து அதனை அத்தனை மாணவர்களுக்கும் மாட்டி விட்டு விடுகிறது. இந்த ‘சம அளவு’ என்பது ஒருவிதமான பொது அளவு. இத்தனை உயரம் இத்தனை அகலம்தான் ஒரு மனித சரீரம் இருக்கும் என்று எங்கோ எவரோ தீர்மானித்த அளவு. ஆனால் மனித சரீர அளவுகளை இத்தகைய சட்டங்களுக்குள் அடைக்க முடியுமா என்ன? ஆனாலும் எதிர்க்கத் துணிவின்றி அத்தனை பேரும் ஒரே அளவில் தைக்கப்பட்ட சட்டையைத்தான் மாட்டிக் கொள்கிறோம். அனைவருமே கோமாளிகள் போலத்தான் பள்ளிகளிலிருந்து வெளியேருகிறோம். ஒரே பைத்தியக்காரத்தனத்தை அனைவருமே செய்வதால் அது எற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகி விடுகிறது.

ஆனால் பண்டைய கல்விமுறை என்பது ஒரு மாணவனைக் குறிப்பாக அளவெடுத்து அவனுக்கேற்ற சட்டை தைப்பதைப் போன்றது. இதில் மாணவன் யார்? அவனது அளவுகள் என்ன? விருப்பங்கள் என்ன? எம்மாதிரியான போதனைகளை அளித்தால் இவன் அடுத்த கட்டத்திற்குச் செல்வான் என்பதையெல்லாம் குரு தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பார். எங்கே எவர் இருக்கிறார் என்ன மாதிரி முன்னேறுகிறார் என்பதைப் பொறுத்து படிக்கும் பாடம் கற்கும் வழிமுறை ஆகிய இரண்டுமே முற்றிலும் மாறுபடும்.

இந்தப் பண்டைய கல்வி முறை எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதனை ஆய்வுக் காலத்தில் என் ஆசிரியரின் வழி ஓரளவிற்கு உணர்ந்தேன். விரும்பி ஏற்ப படிப்பு ஆதலின் முதன் முறையாக கல்வி அனுபவம் ஒரு சுமையாக இல்லாமல் சுவைத்தது.

ஆளுமைகள் சார்ந்த எனது வரலாற்றுப் பார்வையிலும் திருக்கோயில்கள் பற்றிய புரிதலிலும் மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை புத்தகங்களில் சொல்லப்பட்டவையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்குமளவிற்கு ஒவ்வொரு கோயிலும் அத்தனை விஷயங்களைத் தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டிருந்ததை அனுபவித்து அறிந்தேன்.

புத்தகங்கள் இப்போது பயணக் கையேடுகள் போல் தோற்றமளித்தன. எப்படி பயணக் கையேட்டை மட்டும் படித்துவிட்டு ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டு விட்டதாக நினைத்துக்கொள்ள முடியாதோ அதைப்போலவே ஒரு கோயிலை பல முறை பல பார்வைகளுடன் அணுகாமல் புரிந்துகொள்ளவே முடியாது என்பது தெளிவானது. புத்தகத் தளையிலிருந்து விடுபட்டவுடன் உண்மையான அறிதல் இயல்பாகத் துவங்கியது.


செயற்கரிய யாவுள நட்பின்? வரலாறு அளித்த அருங்கொடையாய் ஒரு சக ஆய்வுத்துணை - நண்பர் சு.சீதாராமன்(2013 லால்குடி பயணத்தின்போது)


கோயில்களை அவை சார்ந்த நிலத்துடனும் சமுதாயத்துடன் சேர்த்தே அணுக வேண்டும்.. புரிந்துகொள்ளவேண்டும் என்பது நான் கற்ற முதற் பாடங்களுள் ஒன்று.

மனித சமுதாயத்தின் தேவை கருதியே கோயில்கள் தோன்றின. வளர்ந்தன. இந்தத் தேவை என்பது மக்களின் ஆன்மிகத் தேவை மட்டுமல்ல - கூடிவாழும் தேவையும் கூடத்தான். கோயில்களைக் குறிப்பிடும் ‘பொதியில்’ எனும் பழந்தமிழ்ச் சொல்லே அனைவரும் கூடிப் புழங்கும் ‘பொது இல்(லம்)’ (Common Place) எனும் பொருளில்தான் ஏற்பட்டது என்பார் ஆசிரியர். மன்றம் என்ற கோயில்களைக் குறிக்கும் சொல்லும் இத்தகையதே. ‘மண்டுதல்’ என்கிற வினைச்சொல்லிலிருந்தே மண்டபம் உருவாகியிருக்க வேண்டும்.

குறிப்பிட்டதொரு ஊரகப் பகுதியில் வாழும் சமுதாயம் கூடிப்பேசி கலந்து மகிழும் சமுதாயக் கூடங்களாகவே கோயில்கள் கருதப்பட்டன. அங்கே ஊர்ப் பிரச்சனைகளை விவாதிக்கும் சபைகளும் பஞ்சாயத்துக்களும் நடந்தன. கோயில் ஊர் வங்கியாகச் செயல்பட்டிருக்கிறது. நாட்டியம் இசை கூத்து முதலான நிகழ்கலைகள் அங்கே நித்தமும் அரங்கேறின. இரவுப் பொழுதுகளில் வீடுகளின் விளக்கெரியாவிட்டாலும் அத்தனை கோயில்களிலும் நந்தா விளங்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதற்கு அக்கால மக்களால் பல்வேறு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன.

குமரியிலிருந்து காசி வரை மக்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அந்நாளில் கோயிலே அன்ன சத்திரம். கோயிலே பண்டாரங்களும் பரதேசிகளும் தவசிகளும் வழிப்போக்கர்களும் தங்கிச் செல்லும் சாவடி. கோயிலே பாடசாலை. கோயிலே மருந்தகம். கோயிலே சரஸ்வதி பண்டாரமாகிய நூலகம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்...

கோயிலும் தமிழ்ச் சமுதாயமும் பிரிக்கவே முடியாதபடி ஆயிரமாண்டுகளுக்கும் மேலாகத் தொப்பூழ்க்கொடி உறவு பூண்டவை.

கோயிலையும் அதன் வளாகத்தையும் அதனைச் சூழ்ந்திருந்த சமுதாயமே புரந்தது. கருவறை மண்டபம் என்று எளிமையாயிருந்த வளாகத்தை திருச்சுற்று மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் என்று பெரிதாக்கியது.


நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை. முனைவர் மு.நளினி (2013 லால்குடி பயணத்தின்போது)


தன்னைப் புரந்த சமுதாயத்தைக் கோயில்கள் வளர்த்தன. அவர்களின் வாழ்வை வளமாக்கின. கோயிலெனும் ஆலவிழுதின் கீழ் அக்கால மக்கள் கூடித் தங்கள் அன்றாட வாழ்வின் இன்ப துன்பங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இறைவனை வழிபட்டார்கள். களைப்போடு வேண்டியவர்கள் இளைபாறினார்கள். பசியோடு வந்தவர்கள் பசியாறினார்கள். சமுதாயம் வளமாக இருந்தபோது கோயில்களும் வளமாக இருந்தன. சமுதாயம் சீரழிந்தபோது கோயில்களும் சீரழிந்தன.

இன்றைக்கு நாம் பார்க்கும் கோயில்களை ஆண்டாண்டு காலமாக அவற்றை உருவாக்கி வளர்த்துப் பாதுகாத்து நமக்களித்த சமுதாயத்தின் பருவடிவங்களாகவே காண வேண்டும் என்று கூறலாம். இந்தச் சமுதாயம் என்பதைப் பல்லவர் காலம் வரையிலும் என்றோ சோழர் - பாண்டியர் காலம் வரையிலும் என்றோ வரையரை செய்துவிட முடியாது. அது ஒரு தொடர்ச்சி. எப்படிக் காலத்தை இடையறாது பொங்கிப் பெருகும் மகாநதியாக உருவகிக்கறோமோ அதைப்போலவே சமுதாயத்தையும் இடையறாது பொங்கும் நீரூற்றாகவே புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படித் தொடர்ச்சியாகத் தோன்றி வாழ்ந்து மறைந்த சமுதாயம் தனது எச்சங்களை ஒவ்வொரு கோயிலிலும் விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அந்த எச்சங்களையே நாம் சிற்பங்களாகவும் கட்டுமானங்களாகவும் கல்வெட்டுக்களாகவும் காண்கிறோம். அந்த எச்சங்களைக் கவனமாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்கையில் அந்தச் சமுதாயத்தையும் நாம் புரிந்து கொள்கிறோம். இந்தப் புரிதலுக்கு உதவும் வழிமுறையே ஆய்வு என்றாகின்றது.


2013ல் லால்குடி ஆய்வுப்பயணத்தின் முடிவில் ஆசிரியர் - நான் - திருக்கோயில் ஊழியர் அன்பர் திரு.கருணாநிதி


இந்த எச்சங்களை கவனமாக ஆய்வு வழி உள்வாங்கிக் கொள்வதன் மூலமே நாம் அடுத்த கட்டப் புரிதலுக்கு நகர முடியும்.

அது என்ன? அதாவது இந்த எச்சங்கள் வெறும் எல்லைக் கோடுகள் மட்டுமே. இவற்றை வரைகோடுகளாக பாவித்து அவற்றுக்கு உள்ளும் அப்பாலும் ஒரு வளமான இயக்கம் மிகுந்த சமுதாயத்தையும் சிந்தனைகளையும் நம்மால் தரிசிக்க இயலும். ஒரு குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் வரைந்துவிட்டு அவற்றின் வடிவத்தை வைத்துக்கொண்டு இது புலி இது சிங்கம் இது மனித உருவம் என்று அந்தக் கோடுகளுக்கு வண்ணம் தீட்டி கற்பனை செய்வதில்லையா? அதைப்போலத்தான் இதுவும்.

இந்த மையத் தரிசனம் ஏற்பட்டுவிட்டால் பின்னர் நாம் எவருமே தனித்தீவல்ல. நமது முன்னோருடனும் மூத்தோருடனும் கைகோர்த்துக்கொண்டு நிற்கும் மாபெரும் தொடர்ச் சங்கிலியின் கண்ணிகளே என்கிற உண்மை புலனாகும்.

கோயில்கள் சார்ந்த சமுதாயத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அறிதலும் நம்முள் இன்னொரு கதவைத் திறக்கின்றன.

அதாவது கோயில் என்பது ஸ்திரப்படுத்தப்பட்ட வளர்ச்சியற்ற (Static) ஒரு கட்டுமானம் அல்ல. அது ஒரு உருவகம். அல்லது சட்டகம் (Framework). அல்லது ஒரு குறியீடு. அதனை அன்றாடம் வளர்ச்சி பெறும் ஒரு ஜீவனுள்ள இயக்கமாக (Dynamic and Organic) பாவிக்கும் பார்வையை நம்முள் வளர்க்க முடிந்தால் கோயில்கள் பற்றிய தரிசனம் முற்றிலுமாகவே மாறிப்போகும்.

இது ஒரு விதமான மடை திறப்பு எனலாம். இந்தக் கட்டத்தை அடைந்துவிட்டால் அதன்பிறகு கோயில்களுக்கும் நமக்குமிடையே இடையறாததோர் உரையாடல் நிகழத் துவங்கிவிடும்.

நான் குறிப்பிடும் இந்த வளர்ச்சியும் இயக்கமும் உரையாடலும் புறவயமானவை அல்ல. முற்றிலும் அகவயமானவை. அதாவது ஒரு கட்டத்தில் புறவயமான சட்டகம் முடிந்து கோயில் நம்முள் அகவயமாக வளரத் துவங்குகிறது என்று கூறலாம். பூசலார் நாயனாரைப்போல் அணுகமுடிந்தால் ஒவ்வொரு கோயிலுமே மனக்கோயிலே!

அணுகுபவரின் மனவளத்திற்கும் திறந்த மனதிற்கும் ஏற்ப ஒவ்வொரு கோயிலும் தன் வளத்தையும் நிறத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்கின்றன. பாத்திரத்தில் மீதமிருக்கும் இடமே பிட்சையின் அளவைத் தீர்மானிக்கிறது. வெற்றுப் பாத்திரத்துடன் கோயிலுக்குச் செல்பவன் நிரம்பிய பாத்திரத்துடன் வெளியேறுகிறான்.

யாரிடம் எப்போது எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கோயிலும் காலமுமே தீர்மானிக்கின்றனவேயொழிய நாமல்ல. எப்போது எந்தக் கோயில் நம்முடன் பேசத்துவங்கும் என்பதை முன்கூட்டி அறியவே முடியாது. எவருக்கு எப்போது எது புரியும் - எந்நேரம் திரை விலகும் என்பது இரகசியமானது. காலவெளியில் முடிவற்றதோர் காத்திருப்புக்கு எவன் தயாராகின்றானோ அவனே கோயில்களை அறியும் தகுதி பெறுகிறான்.

ஒரே ஒரு கோயிலை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு ஆயுள் முழுவதையுமே செலவழிக்கலாம்.

அது தொட்டனைத் தூறும் மணற்கேணி. அதனைப் பற்றிய புரிதலுக்கு எல்லையே இல்லை.

ஆலயங்களை அறிவதும் ஆண்டவனை அறிவதும் ஒன்றே.

எது எல்லையற்றதோ அதுவே கோயில்களில் குடியிருக்கிறது.

எது வடிவமற்றதோ அதுவே கோயிலில் வடிவமேற்று நிற்கிறது.

எது புரிதலுக்கு அப்பாற்பட்டதோ அதுவே நமது புரிதலுக்கு உட்படுவதற்காகக் கோயிலில் வந்தது.

கோயிலின் கருவறைக்குள் இருப்பது மட்டுமல்ல... கோயிலே சிவம்தான்.

ஒவ்வொரு கல்லும் லிங்கம்தான்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.