![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழ்நாட்டு வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றுகளைத் தரும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றிக் கருத்துப் பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் கல்வெட்டு, தொல்லியல், கோயிற் கலைகள் சார்ந்த ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என்று நானும் பேராசிரியர் எ. சுப்பராயலுவும் இணைந்து எடுத்த முயற்சிகளின் விளைவாக 12. 5. 1991 அன்று தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழகம் உருவானது. இக்கழகத்தின் சார்பில் ஆவணம் என்ற பெயரில் ஓர் ஆய்விதழ் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய கொடுமுடி திரு. ச. சண்முகன் அப்பொறுப்பைத் தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர்களின் ஒப்புதலுடன் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திடம் ஒப்படைத்தார். அரிதின் முயன்ற நிலையில் இரண்டு இதழ்கள் டாக்டர் இரா. கலைக்கோவனைப் பொறுப்பாசிரியராகக் கொண்ட நிலையில் வெளிவந்தன. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஆவணப் பொறுப்பிலிருந்து விலகியது.
![]() வரலாறு - இதழ் 1 1993 தொடக்கத்தில் நிகழ்ந்த ஆய்வு மைய நிருவாகக் குழுக் கூட்டத்தில் மையத்தின் சார்பில் ஆய்விதழ் வெளியிடும் எண்ணம் வெளிப்படுத்தப்பட்டது. டாக்டர் இரா. கலைக் கோவனைப் பொறுப்பாசிரியராகவும் மு. நளினி, அர. அகிலா ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும் கொண்டு 1993 ஆகஸ்டில் வரலாறு முதல் இதழ் வெளியானது. இதுவரை 25 இதழ்கள் பதிவாகியுள்ளன. தொடக்கத்தில் ஆண்டுக்கு இரண்டு இதழ்களாகத் தொடங்கி 1996இல் இருந்து ஆண்டிதழாக வெளிவரும் இந்த ஆய்விதழ் முற்றிலும் புதிய தரவுகளைத் தாங்கி வருகிறது. தொடக்கத்தில் விளம்பர வருவாயின் துணையுடன் பதிப்பிக்கப்பட்ட இதன் வளர்ச்சி பொருளாதாரச் சிக்கல்களால் தடைபடாதவாறு தழுவிக்கொண்ட பேருள்ளங்களாகப் பேராசிரியர் கோ. வேணிதேவி, திருமதி வாணி செங்குட்டுவன், பேராசிரியர் மு. நளினி, செல்வி இரா. இலலிதாம்பாள் ஆகியோரைக் குறிப்பிடலாம். திரு.ஐராவதம் மகாதேவனின் முயற்சியால் இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் நல்கை 11ஆம் தொகுதியிலிருந்து கிடைக்கப்பெற்றது. சென்னையில் 12-13. 12. 1998இல் நிகழ்ந்த தமிழ் ஆய்விதழ்கள் கருத்தரங்கில் அதுநாள்வரை வெளியாகியிருந்த எட்டு வரலாற்றுத் தொகுதிகளை ஆய்வு செய்து பேராசிரியர் கோ. வேணிதேவி நிகழ்த்திய திறனாய்வுரை இந்த இதழின் வளம் காட்டப் போதுமானது. ‘தமிழ்நாட்டு வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றுகளைத் தரும் பல்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளைப் பதிவுசெய்யவும் ஆர்வமுடையவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் ஆகஸ்டு 1993இல் அரையாண்டு ஆய்விதழாக ‘வரலாறு’ தொடங்கப் பெற்றது. திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடாக அமைந்த இவ்விதழிற்கு மையத்தின் இயக்குநரும் கண் மருத்துவருமான இரா. கலைக்கோவன் பொறுப்பாசிரியர். மையத்தின் கல்வெட்டாய்வாளர்களான மு. நளினியும் அர. அகிலாவும் உதவி ஆசிரியர்கள். இதழின் நோக்கம், எதிர்காலத் திட்டங்கள் குறித்து முதல் இதழில் ‘எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும்’, என்ற தலைப்பில் இரா. கலைக்கோவன் எழுதியுள்ள ஆசிரிய உரை, ‘வரலாறு’ இதழின் நோக்கத்தை வெளிப்படுத்துவதுடன், உண்மையான வரலாற்றை உருவாக்குவதில் அதற்குள்ள உறுதிப்பாட்டையும் தெளிவாகப் படம்பிடித்துள்ளது. அவ்வுரையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. ‘வரலாறு தனித் தீவல்ல. அது பல துறைகளின் சங்கமம். பல்துறை அறிவு இருத்தால்தான் முழுமையான, நேர்மையான வரலாற்றை உருவாக்க முடியும். அந்த வகையில் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவரும் பயனடையும் வண்ணம் பல்துறைச் செய்திகளை இவ்விதழ் வெளியிட்டு மகிழும். ஆழமான ஆய்வுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் முதலிடம் பெறும். வறட்சியாக எழுதுவதுதான் வரலாறு என்ற நிலையை மாற்றி, எந்தச் செய்தியையும் அதன் உண்மைத் தன்மை குன்றாமல் சுவைபடச் சொல்வதில் வரலாறு நம்பிக்கை கொண்டுள்ளது. ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே’ என்று தன் தலைவியின் காதலுக்கு அளவு கூறினாளே குறுந்தொகையின் குறிஞ்சித் தோழி, அது போலத்தான் எங்கள் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும். இமயமாய் எண்ணுகிறோம்; இயன்றதைச் சாதிப்போம். முடியாதவற்றைத் தொடர்ந்து முனைப்பான முயற்சி மேற்கொண்டு முடிக்கப் பார்ப்போம். முன் வைத்த காலை, அது சரியான அடியாக இருக்கும்போது ஒரு நாளும் பின் வைப்பதில்லை. காலம் வழிகாட்டும் என்ற அநுபவ நம்பிக்கை, நெருக்கடிகளிலும் நெருங்கி நிற்கும் கனிந்த நெஞ்சங்களின் கையிணைப்பு, உண்மையான உழைப்புக்கு உலகம் தரும் மரியாதை, வரலாற்றிற்கு இவற்றினும் வேண்டுவது வேறென்ன உண்டு? போடப்பட்ட பாதைகளில் நடப்பது ஒருவகை. புதிய பாதைகளை வகுப்பது வளர்ச்சிக்கு வழி. இது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயங்கள் நமக்கில்லை. எதுவும் ஆர்வமுள்ள மக்களுக்குப் புரியவேண்டும், பயன்படவேண்டும். நம்மைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பயணத்தில், ‘வரலாறு’ வழிகாட்டியாய் உதவிடும். இது உங்கள் இதழ் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் அன்பில்தான் வரலாற்றின் வாழ்க்கை.’ ![]() வரலாறு - இதழ் இதழின் அமைப்பு வரலாறு முதல் இதழ் 148 பக்கங்களில் அதன் அட்டையின் தலைப்பில் கல்வெட்டெழுத்துக்களின் பின்னணியில், வரலாறு என்ற இதழின் பெயர் அமைய, கீழே சிவபெருமானின் ஆடல்தோற்றமொன்று, ‘மழபாடி ஆடலர்’ என்ற குறிப்புடன் இடம்பெற்றுள்ளது. முதல் பக்கத்தில் இதழின் பெயர், வெளியாகும் மாதம், ஆண்டு வெளியிடுவோர் பெயர் அமைய, இரண்டாம் பக்கம், இதழை உருவாக்கியவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. இப்பக்கத்தின் வலது ஓரத்தில் மேலே, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’ எனும் திருக்குறளும் கீழே பாரதியின் ஆத்திசூடியிலிருந்து, ‘சரித்திரத் தேர்ச்சி கொள்’ எனும் பாடலும் தரப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடப்பெற்றுள்ள இவையும் இதழின் நோக்கத்தைப் பறை சாற்றுவனவாக அமைந்துள்ளன. இவ்வமைப்பு இதழ் தோறும் தொடர்ந்துள்ளமையும் ஒவ்வோர் இதழிலும் பொருத்தமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பக்கங்களின் எண்ணிக்கை இதழிற்கு இதழ் கூடி வந்தாலும் ஐந்தாம் இதழ் சற்றுச் சிறுத்து 118 பக்கங்களுடன் நிற்க, ஆறாம் இதழ் 204 பக்கங்களுடன் கனமான இதழாக உருவெடுத்துள்ளது. ஆசிரிய உரை இதழிற்கு இதழ் குறிப்பிடத்தக்க சுட்டல்களுடன் புதிய பரிமாணங்களைத் தொட்டுள்ளது. இரண்டாம் இதழில்,‘தமிழகமெங்குமுள்ள வரலாறு, கோயிற்கலைகள், இலக்கியம், கல்வெட்டுத் துறைகளில் ஈடுபாடுள்ள ஆர்வலர்கள் ஒன்றுபடுவது இன்றைக்கு மிகத் தேவையான நிலையாகும். கூடிப்பேசிக் கலைவதை விட, தொலைவில் நின்றாலும் கருத்தால் ஒருமித்து ஓர் இயக்கமாக உருவானால் இத்துறைகளின் வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால், தரம் குறைந்த ஆய்வுகளும் போலிச் செய்திகளும் பயனற்ற கருத்தரங்குகளும் பிழை மலிந்த கட்டுரைகளும் நூல்களும் தாமாகவே குறைந்தகலும். வரலாறு இதற்கான பணியில் முதலடி எடுத்து வைத்துள்ளது. இந்நோக்குடன் வருவோர் அனைவர்க்கும் வரவேற்பும் ஒத்துழைப்பும் தர வரலாறு காத்திருக்கிறது.‘ எனப் பொறுப்பாசிரியர் விடுத்திருக்கும் அழைப்பு வரலாற்றின் குறிக்கோளுக்கு வரிவடிவமாய் அமைந்துள்ளது. வரலாறு எட்டாம் இதழில் ஆசிரியர் விடுத்திருக்கும் அறைகூவலும் குறிப்பிடத்தக்கது. ‘குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றாரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.’ ![]() வரலாறு - இதழ் உள்ளீடு புதிய கல்வெட்டுகள், விட்டுப்போன தொடர்ச்சிகள், செப்பேடுகள், ஆய்வுக்கட்டுரைகள், பொதுப்பகுதி என முதல் இதழின் உள்ளீடு ஐம்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. 1. புதிய கல்வெட்டுகள் இப்பகுதியில் பதினாறு ஊர்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் பாடங்கள், கண்டுபிடித்தவர்களின் பெயர்களுடன் அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வெட்டிற்கும் அக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம், அது தரும் செய்தி, அக்கல்வெட்டின் காலம் ஆகியன தெளிவாகத் தரப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து அக்கல்வெட்டின் பாடமும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அமைந்திருக்குமாறு போலவே வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதி வரலாறு இதழின் எட்டுத் தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது. இரண்டாம், மூன்றாம் இதழ்களில் பதினேழு ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளும் நான்காம் இதழில் நான்கு ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளும் ஐந்தாம் இதழில் ஐந்து ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளும் ஆறாம் இதழில் எட்டு இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளும் ஏழாம் இதழில் பதினொரு இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளும் எட்டாம் இதழில் ஏழு இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளும் பதிவாகியுள்ளன. இவ்வெட்டு இதழ்களிலுமாய் ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் பதிப்பிக்கப் பெற்றுள்ளமை வரலாற்றுலகிற்குக் கிடைத்த பெருவரவென்றே கூறவேண்டும். இவற்றுள் சில கல்வெட்டுகள், இதுநாள் வரையிலும் கிடைத்திராத அரிய தரவுகளின் நிலைக்களன்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோளக்குடியில் கண்டறியப்பட்டுப் பதிவாகியிருக்கும், ‘மூவேந்தன் எனும் பசாசின் பேர்’ கல்வெட்டும் மலையடிப்பட்டிக் குடைவரையுள்ள குன்றின் மேற்பகுதியில் கிடைத்துள்ள, அமலிக் கல்வெட்டும் இடைமலைப்பட்டிப்புதூரில் இருந்து படியெடுக்கப்பட்ட காவுக் கல்வெட்டும் தமிழ்நாட்டு வரலாற்றிற்குப் புதிய பக்கங்களைத் தந்துள்ளனவெனக் கூறலாம். 2. விட்டுப்போன தொடர்ச்சிகள் முதல் இதழின் இரண்டாம் பிரிவாக அமைந்துள்ள ‘விட்டுப்போன தொடர்ச்சிகள்’ வேறெந்த வரலாறு சார்ந்த ஆய்விதழ்களிலும் காணவியலாத பயனுள்ள, தேவையான, தனித்தன்மை வாய்ந்த பிரிவாகும். இப்பிரிவை அறிமுகப்படுத்துமாறு போல, ‘கோயில்களில் ஆவணங்களை வெட்டியவர்கள் பெரும்பாலும் அவற்றின் அளவுக்கேற்ப இடம் தேர்ந்தும் ஒரு சில சமயங்களில் இருக்கும் இடத்திற்கேற்ப ஆவணத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து, கட்டடத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்த பல இடங்களில் செதுக்கியும் கல்வெட்டாக்கியுள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும் முழுமையடைந்திருக்கும். சில கல்வெட்டுகள் முற்றுப்பெறாமலும் இருப்பதுண்டு. பெரும்பாலான நேரங்களில் திருப்பணி செய்தவர்கள் அவற்றின் அருமை அறியாமல் கற்களை மாற்றி வைத்துக் கட்டடத் திருப்பணி செய்துவிடுவதால் கல்வெட்டுகள் தொடர்ச்சி இழந்து தத்தளிப்பதுண்டு. அதனால், கோயிலில் ஒரு கல்வெட்டைப் படிக்கும்போதும் படியெடுக்கும் போதும் நிறைந்த கவனம் வேண்டும். கல்வெட்டுத் தரும் செய்தி முழுமையடையாமல் இருக்குமானால் அதன் தொடர்ச்சியைப் பக்கத்திலிருக்கும் கட்டடப்பகுதிகளில் தேடவேண்டும். சில சமயங்களில் சுவரில் தொடங்கும் கல்வெட்டு தாங்குதளத்தில் முடியலாம். மேற்குச் சுவரில் தொடங்கித் தெற்குச் சுவரில் முடியலாம். ஒரு கல்வெட்டு எங்குத் தொடங்கி எங்கு முடிகிறது என்பதை முதலில் கண்டறிந்து, அக்கல்வெட்டு முழுவதையும் படித்து, செய்தி முழுமையாகியுள்ளதா என்பதை அறிந்த பிறகு படியெடுப்பதே தவறுகளைத் தவிர்க்கும் எளிய வழிகளாகும். கல்வெட்டுகளைப் படியெடுப்பவர்கள் சில நேரங்களில் தொடர்ச்சிகள் பக்கப்பகுதிகளில் இருப்பதை அறியாமல் கிடைப்பதை மட்டும் படியெடுத்து வந்து பதிப்பித்துவிடுவதுண்டு. சில நேரங்களில் முதல் முறை படியெடுக்கும்போது கல்வெட்டின் சில பகுதிகள் கட்டுமானத்திற்குள் இருந்திருக்கும். பிற்காலத் திருப்பணிகளில் கட்டடப்பகுதிகள் அகற்றப்பட்டு, விட்டுப்போன தொடர்ச்சிகள் வெளிவரும். இப்படிப் பல்வேறு காரணங்களால் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் களஆய்வுகளில் கண்டுபிடிப்பவர்கள் இப்பகுதியில் அவற்றை வெளியிடத் தந்துதவலாம்’ என்று எழுதியுள்ள ஆசிரியர் குழுவினர், தஞ்சாவூர்க் கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயிலில் கண்டறியப்பட்ட விட்டுப்போன தொடர்ச்சிகளை முதல் இதழில் பதிப்பித்துள்ளனர். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஐந்தில் 1405, 1408, 1412 எண்களின் கீழ் வெளியாகியுள்ள இக்கோயிலின் மூன்று கல்வெட்டுப் பாடங்கள் முழுமையற்றுள்ளன. 1405ஆம் எண்ணின் கீழ் இரண்டு வரிகளுடன் வெளியாகியிருக்கும் கல்வெட்டு, முற்றுப்பெறவில்லை என அடிக்குறிப்புப் பெற்றுள்ளது. ஆனால், கோயிலில் கல்வெட்டு ஏழு வரிகளுடன் இருப்பதாகக் கூறும் ஆசிரியர் குழுவினர், விட்டுப்போன ஐந்து வரிகளையும் படியெடுத்து வரலாறு முதல் இதழில் பதிப்பித்துள்ளனர். இது போலவே 1412ஆம் எண்ணின் கீழ்த் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டும் 22 வரிகளுடன் நிற்கிறது. கோயிலில் மேலும் ஆறு வரிகள் இருப்பதைக் களஆய்வில் கண்டறிந்து, ‘புதிதாகக் கிடைத்திருக்கும் பின்பகுதி’ என்ற தலைப்பின் கீழ்ப் பதிப்பித்துள்ளனர். 1408ஆம் எண்ணின் கீழ்ப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுப் பாடத்தைப் பற்றிய விளக்கம் குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டைப் படியெடுத்துப் பதிப்பித்தவர்கள் தொடக்கத்தையும் முடிவையும் மட்டுமே தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் தந்துள்ளனர். இடைப்பட்ட பகுதியான 14 வரிகள் களஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. தொடக்கமும் முடிவும் தொடர்பின்றி இருந்தும் இடைப்பட்ட தொடர்ச்சியைத் தேடாமல் பதிப்பித்திருக்கும் நிலை தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளின் நம்பகத்தன்மையை ஐயத்திற்கிடமாக்குவது உண்மை. ‘விட்டுப்போன தொடர்ச்சிகள்’ பகுதியைப் பிற இதழ்களிலும் காணமுடிகிறது. இரண்டாம் இதழில் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் இருந்து படியெடுத்துப் பதிப்பிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் (தெ. க. தொ. 8: 606, 630) விட்டுப்போன இடை, இறுதிப்பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம் இதழில் நரசமங்கலம் கல்வெட்டுகள் இரண்டும் நான்காம் இதழில் திருத்தவத்துறைக் கல்வெட்டு ஒன்றும் இடம்பிடித்துள்ளன. இவற்றுள், நரசமங்கலம் கல்வெட்டுகளைப் பற்றிப்பேசுமிடத்து, ‘திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்துச் செய்யாறு வட்டத்திலுள்ள நரசமங்கலத்து மலைமேல் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தாங்குதளத்தில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 1906இல் ஒருமுறையும் 1940இல் ஒருமுறையுமாய் இங்கிருந்து இரண்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு கல்வெட்டுகளுள், 1906இல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டின் பாடம் தெ. க. தொ. எண் 22ன் முதற் பகுதியில் 260ஆம் எண்ணிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வெட்டின் முதல் 8 வரிகளை மட்டும் தந்து, அடிக்குறிப்பில் கல்வெட்டு முழுமையடையவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். களஆய்வின்போது மைய ஆய்வாளர்கள் இக்கல்வெட்டு 21 வரிகள் கொண்ட முழுமையான கல்வெட்டு என்பதைக் கண்டறிந்து விட்டுப்போன தொடர்ச்சியைப் பதிப்பித்துள்ளனர். 1940இல் படியெடுக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டின் சுருக்கம் கல்வெட்டு முழுமையடையவில்லை என்ற குறிப்போடு வெளியிடப்பட்டுள்ளது. ‘திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் பட்டர்களாகப் பணியாற்றும் நான்கு நம்பிமார்களை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது என்ற செய்தி மட்டுமே கல்வெட்டுச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. ஆனால், களஆய்வில் இக்கல்வெட்டு முழுமையான நிலையில் 14 வரிகள் கொண்டு அமைந்திருப்பதையும் பயனுள்ள பல தகவல்களைத் தருவதையும் மைய ஆய்வர்கள் கண்டறிந்தனர்’ என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது. வரலாறு ஐந்தாம் இதழில் விட்டுப்போன தொடர்ச்சிகள் தலைப்பின் கீழ்க் கீழப்பழுவூர்க் கல்வெட்டொன்றும் ஆறாம் இதழில் திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டொன்றும் வெளியாகியுள்ளன. ஆவணங்களின் படியெடுப்பு எத்தனை கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு வரலாறு இதழின் ‘விட்டுப்போன தொடர்ச்சிகள்’ பிரிவு சிறந்த சான்றாக மிளிர்கிறது. பதிப்புகளை நம்பி இடறுவதினும் கல்வெட்டுகளைத் தேடி அறிந்து, படித்து, ஆய்வு மேற்கொள்வதே உண்மைகளைப் பெறவும் நேரான முடிவு காணவும் ஒரே வழி என்பதை விட்டுப்போன தொடர்ச்சிகளைப் பதிப்பித்திருப்பதன் மூலம் ஆசிரியர் குழுவினர் ஆய்வுலகத்திற்குத் தெளிவுபடத் தெரிவித்துள்ளனர். 3. செப்பேடுகள் முதல் இதழின் மூன்றாம் பிரிவாகச் செப்பேடுகள் இடம்பெற்றுள்ளன. ஆய்வாளர்களுக்கு அதிகம் அறிமுகமாகாத உத்தமசோழரின் சென்னை அருங்காட்சியகச் செப்பேடு மீளப் படிக்கப்பெற்று விரிவாக ஆராயப்பட்டுள்ளது. துறையூர்ச் செப்பேடு, ஆதனூர் சாத்தனூர்ப் பட்டயம், கூத்தூர்ச் செப்பேடு எனும் சில புதியச் செப்பேடுகளும் தொடர்ந்து வந்த இதழ்களில் இடம்பெற்றுள்ளன. சில இதழ்கள் செப்பேடுகள் என்ற பிரிவின்றியும் வெளியாகியுள்ளன. புதிய செப்பேடுகள் கிடைக்காமையே இவ்விடுபடலுக்குக் காரணமாகலாம். 4. ஆய்வுக் கட்டுரைகள் ‘ஆய்வுக் கட்டுரைகள்’ வரலாறு இதழின் மகுடம் போல் அமைந்துள்ள பிரிவாகும். சில இதழ்களில் நான்காம் பிரிவாகவும் சில இதழ்களில் மூன்றாம் பிரிவாகவும் அமைந்துள்ள ஆய்வுக்கட்டுகரைகள் பகுதியில் முதலிதழில் மூன்றே கட்டுரைகள்தான் இடம்பெற்றுள்ளன எனினும், அம்மூன்றுமே புதிய தரவுகளின் நிலைக்களன்களாக விளங்குவது கண்கூடு. இரா.கலைக்கோவனின், ‘முதல் திருமுறையில் ஆடல் குறிப்புகள்’ என்ற கட்டுரை, தரமான தரவுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அக்கட்டுரையின் உள் தலைப்புகளாக இறையாடல், அரங்கு, ஆடும் காலம், ஆடல் நாயகரின் தோற்றமும் ஒப்பனையும், கருவிகளும் உடன்கூட்டத்தாரும், நோக்கி மகிழ்வாரும் உடன் ஆடியவர்களும், இசைக்கருவிகள், பாடல், பாடுநர், இறைவனின் ஆடல் அமைப்பு என்பன அமைந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டின் ஆடற்கலை வரலாற்றை அருமையாகப் படிம்பிடித்துள்ளன. புயங்கராக மாநடனத்தை பரதரின் புஜங்கவகைக் கரணங்களுடன் ஒப்பீடு செய்துள்ளமையும் அரங்கம் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிடத்தக்கவை. இதே இதழில் வெளியாகியுள்ள அர. அகிலாவின், ‘வல்லம் குடைவரைகளும் புதிய கல்வெட்டுகளும்’ என்ற ஆய்வுக் கட்டுரையும் சிறப்பானது. கூ. ரா. சீனிவாசன், மைக்கேல் லாக்வுட் உட்பட எத்தனையோ அறிஞர்களின் ஆய்வுக்காளான இக்குடைவரைகளிலிருந்து இரண்டு பல்லவர் காலக் கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்திருக்கும் இக்கட்டுரையாசிரியரின் உழைப்பும் கட்டடக்கலையில் அவருக்குள்ள தெளிவான சிந்தனைகளும் கட்டுரையின் ஒவ்வொரு பத்தியிலும் பளிச்சிடுகின்றன. வரலாறு இரண்டாம் இதழ் நான்கு ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்றுள்ளது. அவற்றுள் இரா. கலைக்கோவனின், ‘அப்பரும் அவிநயமும்’ ஆழ்ந்த சிந்தனைப் பின்புலத்துடன் பதிகத் தரவுகளை நேர்த்தியாகத் தொகுத்து எழுதப்பட்டுள்ள திருப்புமுனைக் கட்டுரையாக அமைந்துள்ளது. தமிழ் மண்ணில் அவிநயம் என்னும் ஆடல் சார்ந்த அமைப்புத் தோன்றி வளர்ந்த நிலைகளை இலக்கியச் சான்றுகளுடன் சுட்டி, பரதரின் கண்ணோட்டத்தில் அதன் உட்பிரிவுகளை விளக்கி, அப்பர் பெருந்தகை எத்தனை நளினமாக அவற்றைக் கையாண்டு இறையாடலைப் படம்பிடித்திருக்கிறார் என்பதை அவரது பதிக அடிகளாலேயே மெய்ப்பித்துக் காட்டியிருக்கும் பாங்கு பாராட்டற்குரியதாகும். ‘அப்பரும் அவிநயமும் ஆய்வுக் கட்டுரை படித்தேன். திருமுறையில் ஆடல் குறிப்புகளை இவ்வளவு நுணுக்கமாக யாரும் ஆய்வு செய்திருக்க மாட்டார்கள் என்று துணியலாம்.’ ‘அப்பரும் அவிநயமும் படிக்கப் படிக்க இனித்தது. முகவுரை சிறப்புடையது. கந்திருவம் -அப்பர் கால இசைநூல் என்பது சிறப்பு. கடைப்பத்தி நன்குள்ளது. சுருக்கத்தில் பெருக்கம்.’ ‘அப்பரும் அவிநயமும் அருமையான கட்டுரை’ எனும் இக்கட்டுரை பற்றிய அ. சம்பத்குமார், இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கருத்துரைகள் இங்கு நினைக்கத்தக்கவை. ‘குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும்’ மு. நளினி, அர. அகிலாவின் உழைப்பில் விளைந்த உயரிய கட்டுரையாகும். குடைவரை வளாகத்துள்ள புதிய கல்வெட்டுகளும் ஏற்கனவே பதிவான கல்வெட்டுகளின் விட்டுப்போன தொடர்ச்சிகளும் கண்டறியப்பட்டுக் கட்டுரையில் தக்கவாறு இணைக்கப்பட்டுள்ளன. வரலாறு மூன்றாம் இதழ் மூன்று கட்டுரைகளைப் பெற்றுள்ளது. அவற்றுள் ‘மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள்’ கட்டுரை 40 பக்கங்களில் அமைந்துள்ளது. செங்கற்பட்டு மாவட்டம் தூசி மாமண்டூரிலும் அதையடுத்துள்ள நரசமங்கலத்திலும் உள்ள நான்கு பல்லவர் குடைவரைகளை விரிவாக ஆராயும் இக்கட்டுரை, கூ. ரா. சீனிவாசன் உள்ளிட்ட முந்து கட்டுரையாளர்களின் கூற்றுகளைப் புதிதாகப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக மென்மையாக மறுப்பதுடன், பல புதிய முடிவுகளை ஆய்வாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளது. ஏழு ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்றுள்ள வரலாறு நான்காம் இதழின் நான்காம் கட்டுரை புதிய பரிமாணத்தில் அமைந்துள்ளது. மலையடிப்பட்டிக் குன்றில் ஆசிரியர் குழுவினரால் கண்டறியப்பட்ட அமலிக் கல்வெட்டுக் குறித்துத் தமிழ்நாட்டின் மூத்த கல்வெட்டாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் பெறப்பட்டுக் கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளன. உண்மை காணும் நோக்கில் அமைந்துள்ள இப்புதிய அணுகுமுறை உவந்து பாராட்டத்தக்கதாகும். தாம் கண்டதே முடிவென்றிராமல் உரிய அறிஞர்களிடம் கருத்துகளைக் கேட்டு அக்கலந்துரைகளை ஆய்வாளர்களுக்கு, ‘உள்ளது உள்ளபடி’ தந்திருக்கும் நேரிய பாங்கு, வரலாறு இதழின் நோக்கத்தை உறுதி செய்வதுடன், இதழாசிரியர்களின் பண்பு நலத்தையும் வெளிப்படுத்துகிறது. இவ்விதழின் கட்டுரைகளுள், ‘மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும்’ எனும் தலைப்பிலமைந்த கட்டுரை ஐம்பது பக்கங்களில் அமைந்து பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சோழர் கல்வெட்டுகள் குடைவரை முன்மண்டபத்தின் காலத்தை அடையாளப்படுத்துவதுடன், குடைவரையின் பெயரையும் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாறு ஐந்தாம் இதழில் வெளிவந்துள்ள நான்கு கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது, ‘தளிச்சேரிக் கல்வெட்டு’. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலின் வடக்கு வெளிச்சுற்றில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராஜராஜரின் ஐம்பத்தைந்து மீட்டர் நீளமுள்ள தமிழ்க் கல்வெட்டு, தளிச்சேரிகளைப் பற்றியும் அங்கு வந்து வாழ்ந்த தளிச்சேரிப் பெண்டுகளைப் பற்றியும் பேசுவதால், கட்டுரையாளர்களால் தளிச்சேரிக் கல்வெட்டு எனத் தலைப்பிடப் பெற்று ஆராயப்பட்டுள்ளது. எச். ஹூல்ஷ், இரா. நாகசாமி ஆகியோரால் படிக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டை மறு வாசிப்புச் செய்து 27 பாடவேறுபாடுகளைக் கண்டறிந்து பதிப்பித்துள்ள இக்கட்டுரை ஆசிரியர்கள், இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிகளை மிக விரிவாக ஆராய்ந்து பல நுட்பமான தரவுகளை வெளியிட்டுள்ளனர். முதன்முறையாகத் தளிச்சேரிப் பெண்டுகளின் பெயர்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன், கோயிற்பணியாளர்கள், பணிச்சூழல் பற்றிய செய்திகளும் தெளிவாகத் தரப்பட்டுள்ளமை இக்கட்டுரையின் தனிச்சிறப்பாகும். ‘ஒரு பகுப்பாய்வுக் கட்டுரை எப்படி அமையவேண்டும் என்பதற்கு இக்கட்டுரை சிறந்த சான்று’ என்று இதைப் பாராட்டியுள்ளார் பேராசிரியர் அ.மா.பரிமணம். வரலாறு ஆறாம் இதழில் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் நான்கு கோயில்கள் பற்றியன. இரண்டு கட்டுரைகள் விவாத மேடைகளாய் உருவெடுத்துள்ளன. ஐராவதம் மகாதேவனின், ‘சங்க காலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்’ என்ற கட்டுரை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த அருமையான கட்டுரை. தென்னிந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே பாமரர்களும் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதும் மற்ற தென்மாநில மொழிகளோடு ஒப்பிடும்போது ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி வளர்நிலை பெற்றுவிட்டது என்பதும் இக்கட்டுரை பகிர்ந்துகொள்ளும் அரிய ஆய்வு முடிவுகளாகும். இவ்விதழில் வெளியாகியுள்ள, ‘கொற்றவைத் தளி’ பற்றிய கட்டுரை, மாமல்லபுரத்திலுள்ள ஒருகல் தளியை (திரௌபதி ரதம்) முழுமையான அளவில் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதுடன், கொற்றவையின் காவற் பெண்டுகளை முதன்முறையாக விரிவான அளவில் ஒப்பீட்டாய்வு செய்து பல புதிய தரவுகளைத் தந்துள்ளது. ‘குன்னத்தூர்க் குடைவரைகள்’, ‘திருக்கோளக்குடிக் குடைவரைகளும் கற்றளிகளும்’ எனும் இரு கட்டுரைகளும் களஆய்வின் முழுமையான பயன்களை உள்ளடக்கியுள்ளன. எண்ணற்ற புதிய தரவுகளையும் பல புதிய கல்வெட்டுகளையும் வரலாற்றுலகிற்கு வழங்கிய இவ்விரு கட்டுரைகளின் ஆசிரியர்களும் உளமாரப் பாராட்டப்படவேண்டியவர்கள். வரலாறு ஏழாம் இதழில் 12 கட்டுரைகளும் எட்டாம் இதழில் 10 கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஏழாம் இதழ்க் கட்டுரைகளில் பெரும்பான்மையன கோயில் ஆய்வுக் கட்டுரைகளே அவற்றுள், ‘மலையடிக்குறிச்சிக் குடைவரையும் கல்வெட்டுகளும்’, ‘திருமலைப்புரம் குடைவரை’ என்பன மிகச் சிறப்பாக உள்ளன. எட்டாம் இதழில் பதிவாகியுள்ள, ‘திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் கோயில்’ எனும் கட்டுரை ஆழ்ந்த உழைப்பில் விளைந்துள்ள தகுதியான கட்டுரையாகும். மண்டகப்பட்டுக் குடைவரையும் குறிப்பிடத்தக்கது. 5. பொதுப்பகுதி வரலாறு முதல் இதழின் ஐந்தாம் பிரிவு பொதுப்பகுதியாக உருவெடுத்துள்ளது. இதன் கீழ்ப் பெருமைச்சுவடுகள், நூல் மதிப்புரை, யாவரும் கேளிர், கட்டுரையாளர்கள் எனும் நான்கு தலைப்புகள் உள்ளன. a. பெருமைச்சுவடுகள் வரலாற்றுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பெருமைச்சுவடுகள் படம்பிடிக்கிறது. மா. இராசமாணிக்கனார், பம்மல் விசயரங்கனார், கூ.ரா.சீனிவாசன், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, கோ. கனகசபைப்பிள்ளை, தே.வே.மகாலிங்கம், எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ஆகியோரின் சமுதாய நலன் கருதிய உழைப்பும் அவ்வுழைப்பின் பயனாய் விளைந்த அரிய நூல்களும் புதிய ஆய்வு முடிவுகளும் இக்கட்டுரைகளில் உரியவாறு உரைக்கப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக விளங்கக்கூடிய இக்கட்டுரைகள் தொகுக்கப்பெற்று நூல் வடிவம் பெறின் அரியதொரு செல்வமாக அமையும். b. மதிப்புரை நூல் மதிப்புரை பெரும்பாலான இதழ்களில் இடம்பெற்றுள்ளது. இதைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘மதிப்புரைகள் முதுகைத் தட்டும் பொய்யுரைகளாக இருக்கக்கூடாது. உண்மையான திறனாய்வுரைகளாக அவை அமைந்தால்தான் எழுதியோர் வளர வாய்ப்புண்டு என்ற கருத்திலேயே வரலாறு, தனக்கு வரும் நூல்களுக்கு மதிப்புரை வழங்குகிறது. மருந்து கசக்கும் என்றாலும் உடல் நலத்திற்குத் தேவைதானே. நூல் அனுப்புவோர் இதைக் கருத்தில் கொண்டால் வருந்த வாய்ப்பில்லை’ என்கிறார் பொறுப்பாசிரியர். ஒவ்வொரு மதிப்புரையும் நூலின் தகுதிக்கேற்ற மதிப்பீடுகளாகவே அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. நேர்மையான முறையில் தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி, நிறை கண்டவிடத்தில் பாராட்டி எழுதப்பட்டிருக்கும் இம்மதிப்புரைகள் நூலாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டல்களாகவே அமைந்துள்ளன. இம்மதிப்புரைகள் குறித்த நூலாசிரியர் கருத்துக்களும் பதிவாகியுள்ளன. முனைவர் நா. மார்க்சியகாந்தியின், ‘திருவதிகை வீரட்டானம்’ என்ற நூலுக்கான மதிப்புரை வரலாறு ஐந்தாம் இதழிலும் அது குறித்த நூலாசிரியரின் கருத்துக்களும் அவை பற்றிய மதிப்புரையாளரின் எண்ணங்களும் வரலாறு ஆறாம் இதழிலும் இடம்பெற்றுள்ளன. c. யாவரும் கேளிர் முன்னாளைய பேனா நண்பர்கள் போல, வரலாறு இதழின் உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் முழுமையான அளவில் அறிமுகம் செய்து வைக்கும் இப்பகுதி பிற ஆய்விதழ்களில் காணமுடியாத புதுப்பகுதியாகும். முதல் நான்கு இதழ்களிலும் ஆறாம், ஏழாம் இதழ்களிலும் இடம்பெற்றுள்ள இப்பகுதி ஐந்தாம், எட்டாம் இதழ்களில் விடுபட்டுள்ளது. நேயமான இப்புதிய பகுதி வரலாறு இதழில் தொடர்வது ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும் தொடர்புகொள்ளவும் உதவும். d. கட்டுரையாளர்கள் இத்தலைப்பின் கீழ் அந்தந்த இதழ்ப் படைப்புகளின் ஆசிரியர் பெயர்களும் முகவரியும் தரப்பட்டுள்ளன. இந்த எட்டு இதழ்களிலும் மிகுதியான படைப்புகளை வழங்கியவர்களாக இரா. கலைக்கோவன், மு. நளினி, அர. அகிலா, கோ. வேணிதேவி, ஐராவதம் மகாதேவன் ஆகியோரைக் குறிப்பிடலாம். e. அன்புள்ள உங்களுக்கு இரண்டாம் இதழிலிருந்து பொதுப் பிரிவின் கீழ் இணையும் இப்புதிய பகுதியில் வரலாறு இதழ்களைப் படித்த ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் அவர்தம் கருத்துக்களை எதிரொலித்துள்ளனர். ஐராவதம் மகாதேவன், அ. மா. பரிமணம், பி. தமிழகன், வே. இராமன் முதலியோர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஆழ்ந்த புலமைத் திறத்துடனும் தெளிந்த ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் அமைந்துள்ளன. மாமல்லபுரம் சிற்ப, கட்டடக் கல்லூரி மாணவர் இரா. முத்து இராஜசேகரனின் கடிதம் இதழின் நோக்கம் நிறைவேறியிருப்பதை உணர்த்துகிறது. ‘தமிழில் இத்தகைய தரமான ஆய்வுகள் அடங்கிய தொகுதிகள் வரவேண்டும் என்ற என் கனவு நனவாகியுள்ளது. தரமான ஆய்விதழாக வரலாறு வளம் பெறுவதில் மகிழ்கிறேன்’ என்ற ஐராவதம் மகாதேவனின் கடிதம் வரலாறு இதழின் தரம், வளர்ச்சி இரண்டிற்கும் சான்றாகிறது. ஓர் இதழை நாடிபிடித்துப் பார்ப்பன அவ்விதழ் குறித்த திறனாய்வுக் கடிதங்களே. அவ்வகையில் வரலாறு பெற்றிருக்கும் அனைத்துக் கடிதங்களும் அதன் வளர்ச்சிக்கும் வரலாற்றாய்வில் அது பதித்திருக்கும் அழுத்தமான சுவடுகளுக்கும் நிறைவான சான்றுகளாக ஒளிர்கின்றன. புதிய பகுதிகள் 1. ஆய்வுத் தொடர் வரலாறு இதழ் மூன்றில் அறிமுகமாகும் இத்தொடர் தமிழகக் கோயிற் கட்டடக்கலை வரலாறு தொடர்பானதாக அமைந்து 3, 4, 6ஆம் இதழ்களில் பதிவாகியுள்ளது. ஆனால், 5, 7, 8ஆம் இதழ்களில் இடம்பெறவில்லை. தொடரின் முதல் இயல் சிந்துவெளிக் காலம், தொல்காப்பியக் காலம், சங்க காலம் தொடர்பான தரவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. சங்க காலம் பகுதியில் பத்துப்பாட்டுத் தரவுகள் மட்டுமே முதல் இயலில் உள்ளன. இரண்டாம் இயல் அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை எனும் மூன்று இலக்கியங்களில் கிடைக்கும் தரவுகளைப் பதிவுசெய்துள்ளது. அவற்றுள் பல வரலாற்றுப் பார்வைக்கு இதுகாறும் வாராதிருந்த அரிய தரவுகளாகும். வரலாறு 6ஆம் இதழில் உள்ள மூன்றாம் இயல் குறுந்தொகை, கலித்தொகைத் தரவுகளைத் தொகுத்துள்ளது. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இக்கால நிரலான கட்டடக்கலைத் தரவுத் தொகுப்பு தொடராமல் நின்றாமைக்குக் காரணம் கூறப்படவில்லை. அருமையான இம்முயற்சி ஒவ்வோர் இதழிலும் இடம்பெறல் தலையாயதாகும். 2. அங்கும் இங்கும் வரலாறு நான்காம் இதழிலிருந்து தொடங்கும் இப்பகுதி அனைத்து இதழ்களிலும் பதிவாகியுள்ளது. வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களின் கருத்தரங்கப் பங்களிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளமையால் அவர்தம் ஆய்வுக் களங்கள் பற்றிய தெளிவு கிடைக்கிறது. 3. பதிப்பிக்கப்படாத பாடங்கள் வரலாறு ஐந்தாம் இதழில் தொடங்கப்படும் இப்புதிய பகுதி மிகப் பயனுள்ள தொடராகத் தொடர்ந்து பதிவாகியுள்ளது. இது குறித்துப் பேசும்போது ஆசிரியர் குழுவினர், ‘தமிழ்நாட்டில் இதுகாறும் படியெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் ஒரு சிறு பகுதியே பாடங்களுடன் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பெரும்பாலான கல்வெட்டுகள் பதிப்பிக்கப் படாத சூழலில், பெருகி வரும் குடமுழுக்குகளும் திருப்பணிகளும் கல்வெட்டழிப்பிற்குக் காரணமாவதால் வாய்ப்பமையும்போதெல்லாம் படியெடுக்கப்பட்டிருந்தும் பாடம் வெளியாகாதிருக்கும் கல்வெட்டுகளை மறு படிப்புச் செய்து அவற்றின் பாடங்களை பதிப்பிக்கப்படாத பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் வரலாறு வெளியிடும்’ என்ற அறிவிப்புடன் முதல் தொகுப்பாகப் பெருமுடி ஈசுவரர் கோயில் கல்வெட்டுகளின் பாடங்களைப் பதிவுசெய்துள்ளனர். ஏறத்தாழ நூறாண்டளவில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுப் பாடங்கள் வெளிப்படாத சூழலில் பொருட் செலவு கருதாது பெருமுயற்சியுடன் தாங்கள் ஆய்வு மேற்கொள்ளும் கோயில்களிலெல்லாம் அத்தகு கல்வெட்டுகளைப் படித்து, அவற்றின் பாடங்களைத் தொடர்ந்து அனைத்து வரலாறு இதழ்களிலும் பதிவுசெய்துள்ள மைய ஆய்வாளர்களுக்குத் தமிழ்நாடே நன்றிக்கடன்பட்டிருக்கிறது. 4.உண்டாலம்ம இவ்வுலகம் வரலாறு ஆறாம் இதழில் தொடங்கும் இப்புதிய பகுதி வரலாற்றாய்வு மையம் எதிர்கொண்ட மனிதநேயர்களின் அறிமுகப் பகுதியாக விளங்குகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் திரு. கோபாலன், அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் ச. முத்துக்குமரன் ஆகியோரின் பண்பு நலன், பழகும் பாங்கியல், மொழிக்கும் வரலாற்றுக்கும் சமுதாயத்திற்கும் அவர்தம் பங்களிப்புகள் எனப் பன்னோக்குப் படப்பிடிப்புகளாய் உண்டாலம்ம இவ்வுலகம் கட்டுரைகள் அமைந்துள்ளன. பெட்டிச்செய்திகள் வரலாறு முதல் இதழிலிருந்தே தொடங்கும் பெட்டிச்செய்திகள் சங்க, பக்தி இலக்கியங்களை நுட்பமுடன் ஆய்ந்து ஆசிரியர் குழுவினர் தெரிந்தெடுக்கும் அரிய வரலாற்றுத் தரவுகளை முன் வைக்கின்றன. கிலுகிலி மந்தி, பற்கள் பதித்த கதவுகள், பூப்பெண்கள், மடிவிளியும் நெடுவிளியும், வாசனைப் படகுகள், குழந்தைப் பலி, ஞாயிறும் நெருஞ்சியும், பேய்வரும் நேரம், உலமந்து வருகம் வா தோழி, கொடுவெறி இன்பம், பறவைக் காவலர், இராவணர் பாடு, ஞாயிறு பாலைக்குத் தெய்வமா எனப் பல்வேறு தலைப்புகளில் சங்க இலக்கியங்களில் இருந்து தேடித் தரப்பட்டுள்ள பண்பாட்டுத் தரவுகள் அதிகம் அறியப்படாதவை. இத்தரவுகளின் நுண்மையும் ஆழமும் சங்க காலப் பண்பாட்டு வரலாற்றைத் திருத்தி எழுதவேண்டியிருக்குமோ என்னும் எண்ணத் தூண்டலுக்கு வித்திடுகின்றன. வரலாற்றுச் சான்றுகளாக இலக்கியங்களை ஏற்கமுடியாது என்பார்க்கு இப்பெட்டிச் செய்திகள் கண்திறப்பாய் உதவும். முடிவுரை கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டியல், காசியல், இலக்கியம், சுவடியியல், தொல்லியல் என வரலாற்றின் அனைத்துப் பரிமாணங்களையும் வரலாறு இதழ்கள் எட்டும் தழுவியுள்ளன. கோயில், வரலாற்றுக் களமாகத் திகழ்ந்து மக்களை ஒருங்கிணைத்தமையை வரலாறு இதழ்களின் கட்டுரைகள் தெளிவாக உணர்த்துகின்றன. இலக்கியங்கள் காலப் பதிவுகளாகப் பண்பாட்டுச் சுவடுகளைச் சுமப்பதையும் இக்கட்டுரைகள் நன்கு வெளிப்படுத்துகின்றன. அறிஞர் அ. மா. பரிமணம் தம் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போல் தமிழர் வரலாற்று வளம் பேசும் இந்த இதழ் சிறந்த வரலாற்றுச் சான்றேடாக உண்மையின் ஒளியுடன் திகழ்கிறது.’ (நன்றி/ தமிழ் ஆய்வு இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005) 1998க்குப் பிறகு 2014 வரை வரலாறு ஆய்விதழ் தொடர்ந்து வெளியாகி இப்போது இருபத்தைந்தாம் ஆண்டில் வெள்ளிவிழா இதழாக மலர உள்ளது. பேராசிரியர் கோ. வேணி தேவி கூறியிருக்குமாறு போலவே தரத்தில் எள்ளளவும் தாழாமல் அதே அமைப்பில் இவ்விதழின் 9-24ஆம் தொகுதிகள் வெளிவந்துள்ளன. 2002இல் இருந்து வரலாறு ஆய்விதழுடன் ஆண்டுதோறும் அத்யந்தகாமம், வலஞ்சுழி வாணர், வரலாற்றின் வரலாறு முதலிய ஆய்வு நூல்கள் இணைப்பாக வெளியிடப்பட்டன. 2007இல் இருந்து வரலாற்றாய்வு மைய நிறுவனர் முனைவர் இரா. கலைக்கோவனின் ஆய்வுப் பயணம், திரும்பிப்பார்க்கிறோம் என்ற தலைப்பில் ஆண்டுக்கொரு தொகுதியாக வரலாறு ஆய்விதழுடன் இணைக்கப்பட்டு இதுவரை 8 தொகுதிகள் பதிவாகியுள்ளன. ஒரு தனி மனிதப் பயணம் காலப்போக்கில் பல்லோர் பயன்பெறும் ஆய்வு நிறுவனமாக வளர்ந்த வரலாறு பேசும் இத்தொகுதிகள் இளம் தலைமுறையினருக்கு ஆய்வில் முனையும் ஆர்வம் ஊட்டுவனவாக அமைந்துள்ளன. நேர்மைத் துணிவுடன் தமிழில் தூய வரலாறு பேசும் ஆண்டு ஆய்விதழ் ஒன்று தொடர்ந்து வெளிவருவதும் வெள்ளிவிழா காண்பதும் அதன் பின்புலத்தின் பெருமிதம் காட்டுவன. உழைப்பை மட்டுமே நம்பி உண்மைகளை மட்டுமே முன்வைத்து வரலாற்றைப் படம்பிடிக்கும் இந்த ஆய்விதழ் பரவலான தழுவல் பெறின் முயற்சிகள் மேன்மைப்படும். வரலாறும் கூடுதல் வளம் பெறும். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |