http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 119

இதழ் 119 [ மே 2015 ]
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

வாழ்நாள் சாதனையாளர்கள்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 05
A Study on Nagaram in Thiruchirappalli District (Between C. E. 500 and 1300)
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 2
திருக்கடவூர் திருமயானம்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - ஓர் அறிமுகம்
வரலாறு ஆய்விதழின் வரலாறு
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் - முழுத்தொகுப்பு
கற்றலும் களப்பணியும்
மாலைப் பொழுதினிலே ஒரு நாள்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி
Historical Methods - Learning and Understanding from Dr.R.Kalaikkovan
கட்டடக்கலையில் கையளவும் கடலளவும்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையமும் நானும்
இதழ் எண். 119 > சிறப்பிதழ் பகுதி
கற்றலும் களப்பணியும்
கோ.வேணிதேவி
மையத்துடனான ஒரு பேராசிரியையின் ஆய்வு அனுபவங்கள்


சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் நடத்திய கோயிற்கலைப் பட்டயப் படிப்பில் மாணவியாகப் பங்கேற்ற போதுதான் களஆய்வு என்பதை அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பமைந்தது. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையின் தலைவராக இருந்த நிலையில், வகுப்பறைக் கல்வியும், அது தொடர்பான நூற்படிப்புமே முதன்மையாக இருந்தன. களஆய்வுகள் பற்றிய ஏட்டறிவே பெற்றிருந்தேன். பட்டயக் கல்வியின்போது முதன்முறையாக வரலாறு கொழிக்கும் களங்களுக்குச் சென்று நேரடியாகச் சான்றுகளைத் திரட்டி, அவற்றின் வழி கிடைக்கும் தரவுகளைத் தொகுத்தபோதுதான் வரலாற்றின் உண்மையான மணத்தை நுகர முடிந்தது. இந்த முதல் அனுபவமே ஆய்வு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது.


கள ஆய்வில் மைய மாணவர்கள்


பட்டய வகுப்புகள் ஒன்றில் ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் இருண்ட காலமாகக் கருதப்படும் பொதுக்காலம் 300க்கும் 600க்கும் இடைப்பட்ட சமுதாயம் பற்றி நிகழ்த்திய உரை, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனக் கருதியிருந்த எனக்குத் தலைப்பைத் தந்தது. என் ஆர்வத்தை டாக்டரிடம் வெளிப்படுத்தியபோது அதை வரவேற்றவர், 300க்கும் 600க்கும் இடைப்பட்ட கால வரலாறு எழுதுதல் எளிதானதன்று; நன்கு உழைக்க வேண்டும். இலக்கியங்களில் தரவுகள் தொகுக்கும் திறன் பெறவேண்டும். கற்றலும் களஆய்வுமாய் வரலாறு தேடுவது, துறைத்தலைவர் பொறுப்பிலிருக்கும் உங்களுக்கு இயலுமா என்பதை நன்கு சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று வழிகாட்டினார்.

கற்றல் நான் ஏற்கனவே பழகியது. எனக்கு உற்ற துணையும் அதுவே. களஆய்வின் ஈர்ப்பும் அது தந்த நிறைவும் ஆய்வு மையத்தில் அனுபவித்த நிலையில் முனைவர் பட்ட ஆய்வராகப் பதிவுசெய்து கொண்டேன். என் தலைப்பைக் கேட்டு, என்னை அதைரியப்படுத்தியவர்கள் பலர். சான்றுகளே இல்லாத ஒரு காலகட்டத்தைப் பற்றி எப்படி ஆராயப்போகிறாய் என்று நெருங்கியவர்கள்கூடக் கவலையோடு கேட்டனர். டாக்டர் சொன்ன கற்றல், களஆய்வு என்ற அந்த இரண்டு சொற்கள்தான் எதைப் பற்றியும் எண்ணாமல் ஆய்வுக்குள் நுழையும் துணிவைத் தந்தன.

வரலாறு கற்றிருந்த எனக்கு இலக்கியக் கதவுகள் திறந்தன. இலக்கியங்கள் கற்பனைக் கூற்றுகள் என்ற பொதுவான பார்வையிலிருந்த நிலையில், அவை வரலாற்றுக் களஞ்சியங்கள் என்பதை அறியும் வாய்ப்பமைந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்கணக்கு  எனப் பலவும் படித்தேன். நீதி நூல்களாக எனக்கு அறிமுகமாகியிருந்த பதினெண் கீழ்க்கணக்குப் படைப்புகள் பல மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் படிக்கும் அளவிற்கு என் தலைப்புச் சார்ந்த தரவுகளைத் தந்தன. ‘இலக்கிய அடிகளுக்குள் வரலாறு வெளிப்பார்வை பார்ப்பதில்லை. எது வேண்டும் என்று பார்வை தேடுகிறதோ, அதை உற்றும் உறவுடன் நோக்கியுமே இலக்கியங்களிலிருந்து அகழ முடியும்’ என்று டாக்டர் அடிக்கடி சொல்வார். அந்த நெறிமுறை ஆய்வு மையத்திடம் நான் கற்றது. கற்றல் எளிதானதன்று என்பதையும் அங்குதான் உணர்ந்தேன்.

களஆய்வு, திட்டமிடலில் தொடங்கி, தேடுவதில் வளர்ந்து, பெறுவதில் நிறைவடைவது. என் தலைப்புச் சார்ந்த காலகட்டத்தில்தான் மாடக்கோயில்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் தோன்றின. அதனால், அவை சார்ந்த களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில் என்ற சொல்லின் முழுப் பொருளை களஆய்வுகளே எனக்குப் புரியவைத்தன. ஒரு கோயிலை அணுகுவது எத்தனை நட்புறவுடன் அமையவேண்டும் என்பதைக் களஆய்வுகள் வழி அறிந்தேன். களஆய்விற்கு எத்தகு உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும் தேடல் எவ்வளவு கூர்மையாக இருக்கவேண்டும் என்பதையும் ஆய்வு மையப் பயிற்சிகள் கற்றுத் தந்தன.

நான் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் மையத்தில் முனைவர் ஆய்வு மன்றம் செயற் பட்டது. நான், பேராசிரியர்கள் கீதா, நளினி, அகிலா என நால்வர் அப்போது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தமையால் வாரம் ஒருநாள் மாலை அவரவர் ஆய்வு குறித்து டாக்டர் முன்னிலையில் கலந்துரையாடுவோம். ஆய்வு தொடர்பான வினாவிடைகள் சிந்தனையைத் தூண்டும். உரைகளைவிட வினாவிடை நேரமே மிகுதிப்படும். இந்தப் புதிய முறை கல்லூரி, பல்கலை வளாகங்களில் நான் கேட்டறியாதது. இந்த ஆய்வு மன்றம் ஆய்வுகளைச் சரியாகச் செய்ய எங்களை வழிப்படுத்தியது. கருத்துக்களைத் தெரிவிக்கும் துணிவு தந்தது. மாற்றுக் கருத்துக்களை அவை சரியானவை எனில், தயங்காது ஏற்கும் பண்பை வளர்த்தது. தருக்க நெறி, அறிவியல் பார்வை, உண்மைத் தன்மை இம்மூன்றும் இந்த ஆய்வு மன்றத்தின் விதைகளாக எங்களுக்குள் விழுந்தன.

ஆய்வு மையத்துடன் பல அறிஞர்கள் தொடர்புடன் இருந்தமை எனக்குப் பெரும்பயன் அளித்தது. முனைவர் பிரேமா நந்தகுமார், மணிமேகலையின் காலம் அறிய உதவினார். திரு. ஐராவதம் மகாதேவன் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தொடர்பான அறிவூட்டல் பெறத் துணைநின்றார். பேராசிரியர் மா. ரா. அரசு இலக்கியங்களுடன் நட்புறவாடச் சொல்லித் தந்ததுடன், பல நூல்களையும் தந்துதவினார்.

ஒருங்கிணைந்து செயல்படுவது மையத்தில் நான் பெற்ற தலைமைப் பயிற்சியாகும். துறைத் தலைவராகப் பல பேராசிரியர்களை ஒருங்கிணைத்துத் துறையைக் கல்விச் செழுமை நோக்கி நடத்தும் பயிற்சி பெற்றிருந்தபோதும், ஆய்வில் பலரது ஒத்துழைப்பையும் பெற்று அவர்தம் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து உண்மைகளை நோக்கிப் பயணப்படுவது எளிதானதன்று. நம்மை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல் கருத்துக்களுக்கு முதன்மை அளிக்கும் போக்கை ஆய்வு மையம் முன்னிருத்திப் பணியாற்றியதால் அங்கு உழைத்த எல்லோரிடத்தும் அது இயல்பாகப் பதிந்தது.

சுருங்கச் சொன்னால் வரலாற்றின் புதிய முகங்களை என் ஆய்வுக் காலம் வெளிப்படுத்தியது. இலக்கியமும் வரலாறும் கையிணைக்காமல் எந்தக் காலகட்டத்தின் சமுதாயத்தையும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்பதைத் தெளிவாகப் புரியவைத்தது. கற்றலின் படிநிலைகளை நான் உணருமாறு செய்தது. களஆய்வின் பேரின்பத்தை அனுபவிக்க வைத்தது. எல்லாவற்றினும் மேலாக ஆய்வின் தோழமையை அது வாழ்நாள் முழுவதும் தொடரும் மேன்மையை உணரச் செய்தது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.