![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
செப்டம்பர் 2003க்கு முன்புவரை எனக்குக் கோபுரம் என்றாலும் விமானம் என்றாலும் ஒன்றுதான். கோயிலுக்கு வழிபட மட்டுமே செல்லும் பெரும்பாலோர் உள்ளே எந்த இறை இருந்தாலும் கருவறை வாயிலில் என்ன பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த இறையின் பெயரையோ பாடல்களையோ சொல்லி வேண்டிக்கொள்வது போல, நான் கோயிலுக்குச் சென்றாலும் இருக்கும் எல்லாக் கட்டடங்களுமே கோபுரங்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். இராஜகோபுரம் என்றால் சற்று உயரமாக இருக்கும்; விமானம் என்பது கோபுரத்தின் மறுபெயர் என்பதும் என் எண்ணம். கோபுரம் - விமானம் கதையே இப்படி இருக்கும்போது, தாங்குதளம், வேதிகை, சுவர், கூரை, ஆரம் ஆகியவற்றைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவற்றில் சுவர், கூரை ஆகியன தமிழில் இருப்பதாலும் பழகிய சொற்களாக இருப்பதாலும் ஓரளவுக்குப் புரிந்தது. இதையே பிரஸ்தரம் என்ற வடமொழிச் சொல்லால் குறிப்பிட்டபோது முதலில் புரியவில்லை.
![]() விமானமும் அங்கங்களும் - Courtesy: Early Chola Art, S.R.Balasubrahmanyam முதன்முதலில் வரலாறு ஆய்விதழைப் படித்தபோது ஒரு கலைச்சொல் கூடப் புரியவே இல்லை. கல்வெட்டுகளுக்கு அருஞ்சொற்பொருளும் விளக்கமும் இருந்ததால் கொஞ்சமே கொஞ்சம் புரிந்தது. சிற்பக்கலையில் வலப்பின்கை, இடமுன்கை போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதாலும் கிரீட மகுடம், அஞ்சலி ஹஸ்தம் போன்ற வடமொழிச் சொற்களின் பொருளைக் கொஞ்சம் ஊகிக்க முடிந்ததாலும் பெரிதாகக் கஷ்டப்படவில்லை. ஆனால் கட்டடக்கலை தொடர்பான கட்டுரைகள் முற்றிலும் அந்நியமாக இருந்தன. ஆனால், இந்தப் புரியாமையே மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்த்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல எத்தனை முறை முயன்றாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டே இருந்தது. இதை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் களத்திற்குச் சென்று புரிந்துகொள்ள முயன்றால்தான் கட்டமைப்புகள் புரியும் என்றார் டாக்டர். உடனே, எப்போது போகலாம், எங்கே போகலாம் என்று யோசித்தபோது, இன்னும் சில வாரங்களில் புதுக்கோட்டை அருகிலுள்ள சில கோயில்களுக்குக் களப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்; விருப்பமும் நேரமும் இருந்தால் நீங்களும் இணைந்து கொள்ளலாம் என டாக்டர் அனுமதியளித்தார். இரண்டும்தான் இருக்கின்றனவே; பிறகென்ன தடை? என்று எங்கள் குழுவினருடன் ஆயத்தமானேன். குறிப்பேடு, பேனா, ஒளிப்படக்கருவி, ஒலிப்பதிவுக்கருவி என எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்று நாங்கள் இறங்கிய இடம்தான் விசலூர். பாதபந்த அதிஷ்டானம், உபஉபானம், உபானம், ஜகதி, குமுதம் (வார இதழ் அல்ல), கண்டம், கம்பு, பட்டிகை எனப் பல புதிய சொற்களைக் குறிப்பேடு (குறித்துக் கொள்ளவும்: நினைவு அல்ல) பதிவு செய்து கொண்டது. விமானம் என்பது கருவறைக்கு மேலுள்ள கட்டுமானம், கோபுரம் என்பது வாயிலில் உள்ள கட்டுமானம் என்பது புரிந்தது. அன்று கற்றுக்கொண்ட சொற்களில் பாதியளவு அடுத்தநாள் நினைவுக்கு வந்தாலே பெரிய விஷயம் என்பது அப்போது தோன்றவில்லை. ஆர்வத்துடன்தானே கற்கிறோம், எப்படி மறந்து போகும் என்று எண்ணிக்கொண்டேன். மறக்காது, ஆனால் குழப்பும் என அப்போது தோன்றவில்லை. அன்றைய தினம் விசலூருக்கு அடுத்து மலையடிப்பட்டியையும் குன்றாண்டார் கோயிலையும் பார்த்துவிட்டு அடுத்தநாள் கங்கைகொண்ட சோழபுரம் சென்றபோது, முந்தையநாள் பார்த்த அனைத்துக் கட்டடக்கலை உறுப்புகளுமே இங்கும் உள்ளன; ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம் என்று டாக்டர் கட்டளையிட்டபோதுதான், ஒன்றுகூடச் சரியாகச் சொல்ல வரவில்லை. ஜகதி குமுதமானது; கண்டம் பட்டிகையானது; கம்பு உபானமானது. அங்குதான் ஒவ்வொன்றையும் அடையாளப்படுத்த வடிவங்களைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிகரம் வரை ஏறியபோது ஆர உறுப்புகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, ஒரு விமானம் எத்தனை தளங்களை உடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது எனப் புரிந்து கொண்டோம். நாகரத்தில் தொடங்கி திராவிடத்தில் வளர்ந்து வேசரத்தில் முடியும் இவ்விமானத்தை, "அப்பப்பா! எவ்வளவு சிக்கலான கட்டுமானம்" என டாக்டர் வியந்தபோது, இதில் என்ன சிக்கல் என அப்போது புரியவில்லை. பின்பு கலைச்சொற்கள் ஓரளவு வசப்பட்ட பிறகு சென்று அக்கோயிலின் கட்டமைப்பை விளங்கிக் கொள்ள முயன்றபோதுதான், சிக்கலான கட்டுமானம் என்ற சொல்லுக்குப் பொருள் புரிந்தது. பெரிதினும் பெரிதுகேள் என்று இராஜராஜர் எழுப்பிய வானளாவிய இராஜராஜீசுவரத்திற்குச் சற்றும் குறைவில்லாத சாதனையாக இராஜேந்திரர் எழுப்பிய இக்கற்றளி எனது கட்டடக்கலைப் பயிலலில் பெரும்பங்கு வகிக்கிறது. சில அடிப்படைக் கலைச்சொற்களைப் பயின்று முடித்த பிறகு இத்துறையில் அடுத்த கட்டத்துக்கு நகர மேற்கொண்டு எந்த நூலைப் படிக்கலாம் என்று தேடியபோதுதான், திராவிடக் கட்டடக்கலையைப் பயிற்றுவிக்க எந்த நூலுமே இல்லை என்பது புரிந்தது. மயமதம் என்றொரு தமிழாக்க நூல் இருக்கிறது. அதில் பல்வேறு கட்டுமான வகைகளையும் பலவகையான கட்டடக்கலை உறுப்புகளையும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை இன்றைக்கு இருக்கும் கோயில்களில் காண இயலாது. மானசாரம் போன்ற நூல்களைக் காண்பதே அரிது. திரு. வை. கணபதி ஸ்தபதி அவர்களின் சிற்பச் செந்நூல், டி. ஏ. கோபிநாதராவ் அவர்களின் "Elements of Hindu Iconography" போன்ற நூல்கள் சிற்பக்கலை பயில்வோருக்குத் துணையாக இருப்பதுபோல் கட்டடக்கலை பயில்வோருக்கு எந்த நூலும் இல்லை. ஒரு சிலர் கட்டடக்கலை என்ற பெயரில் வாஸ்து பற்றி எழுதியுள்ள வரலாறும் தமிழ்நாட்டில் உண்டு. அப்படியானால் டாக்டர் எப்படிக் கட்டடக்கலையில் தெளிவு பெற்றார்? டாக்டர். கூ.இரா. சீனிவாசன் அவர்களின் நூல்களும் களப்பணிகளும்தான் காரணம். நானும் அதே வழியைப் பின்பற்ற நினைத்தேன். டாக்டரின் நூல்களைப் பயின்று கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அந்தந்தக் கோயில்களுக்கே அந்நூல்களை எடுத்துச் சென்று புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அத்யந்தகாமம் எனக்குக் கட்டடக்கலையின் முதல் வழிகாட்டி நூலாக அமைந்தது. வரலாறு ஆய்விதழில் பல்வேறு கோயில்களின் கட்டுமானங்களைப் பற்றி டாக்டர் எழுதியிருந்தாலும், அக்கோயில்கள் சென்னைக்கு அருகில் இல்லாததாலும் தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் செல்லும் போதெல்லாம் குழுவினருடனே சென்றதாலும் தனித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே, அத்யந்தகாமம் நூலுடன் மாமல்லபுரத்திற்குச் சில தடவைகள் பயணப்பட்டுப் பயன் பெற்றேன். தருமராஜ ரதம் என்றழைக்கப்படும் ஒருகல் தளியைப் பற்றிய முழுமையான படப்பிடிப்பாக அந்நூல் அமைந்திருந்தது அடிப்படையைப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருந்தது. ![]() அத்யந்தகாமம் முதல்முறை முனைவர் அகிலா அவர்களுடன் சென்றபோது மேற்றளங்களுக்குச் சென்று பார்க்க அனுமதி கிடைத்தது, ஆனால் அடுத்தடுத்த முறைகள் அப்படி அமையவில்லை. இருப்பினும், டாக்டரின் தெள்ளிய நீரோட்டம் போன்ற எளிமையான நடையால் (கலைச்சொற்களுடன் பழக்கம் ஏற்பட்டவர்களுக்கு) கீழிருந்தபடியே ஆர உறுப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏற்கனவே மேலே ஏறிப் பார்த்திருந்ததால், அர்ப்பிதா, அனர்ப்பிதா போன்றவற்றை மனதிற்குள் காட்சிப்படுத்திப் பார்க்க முடிந்தது. இந்நூலில் நிழலும் நிஜமும் என்ற தலைப்பிலமைந்த பகுதியின் 134ம் பக்கத்தின் இரண்டாவது பத்தியில் கீழ் மற்றும் இடைத்தளங்களில் மேற்கு முகமாக அமைந்திருக்கும் முன்றில்கள் கிழக்கு முகமாக அமைந்துள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வுகளிலும் ஆய்வு முடிவுகளிலும் எத்தகைய தவறும் நேராத வண்ணம் மிக மிகக் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்படும் இந்நூலாசிரியர்களுக்கு அச்சுப்பிழைத் திருத்தத்தின்போது ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக நேர்ந்த இச்சிறு தவறு என் பயிலல் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. புதிதாகத் தேர்ந்துள்ள ஒரு துறையில், கற்றுக்கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே உரையையும் கட்டுமானத்தையும் ஒப்பிட்டு, எது சரி, எது தவறு எனக் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் சாதனைகளில் ஒன்று. ஆரம்பகட்ட மாணவன்தானெ என்று எண்ணாமல், நான் கண்டுபிடித்த தவறையும் அடுத்து வந்த வரலாறு ஆய்விதழிலேயே வெளியிட்டு ஒப்புக்கொண்டது அவர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சிறு சான்று. தமிழ்நாட்டில் கட்டுமானங்கள் தோன்றிய வரலாற்றைக் காலவரிசைப் படுத்திப் பார்த்தால், முதலில் குடைவரைகள், பின்பு ஒருகல் தளிகள், அதற்குப்பின் கட்டுமானத் தளிகள் என்ற வரிசையிலேயே அமைந்திருக்கும். ஆனால் என் பயிலல் இந்த வரிசையில் அமையவில்லை. முதன்முதலில் கற்றல் நோக்கில் பார்த்தது கட்டுமானத்தளி (விசலூர்), குடைவரை (மலையடிப்பட்டி, குன்றாண்டார் கோயில்), ஒருகல் தளி (மாமல்லபுரம்) என்ற வரிசையிலும் ஆழக் கற்கும் நோக்கில் ஒருகல் தளி (மாமல்லபுரம்), குடைவரை (தளவானூர்), கட்டுமானத்தளி (திருவலஞ்சுழி) என்ற வரிசையிலும் பார்த்தது குடைவரைக்கும் அதிலிருந்து பிறந்த ஒருகல் தளிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரியவைத்தது. முதலில் குடைவரையைப் பார்த்திருந்தால், தாங்குதளம் பற்றிப் புரியாமலேயே மண்டபம் மற்றும் கூரை உறுப்புகளுக்குச் சென்றிருக்க வேண்டும். உதாரணமாக, முதலில் விசலூரில் தாங்குதளம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதால் அது ஏன் குடைவரையில் இடம்பெறவில்லை என்பதை மலையடிப்பட்டியில் புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே டாக்டர் தாமாகவே கற்றிருந்ததால், புதிதாகக் கற்பவருக்கு எந்த வரிசையில் கலைச்சொற்களையும் கட்டடக்கலை உறுப்புகளையும் அறிமுகப்படுத்தினால் குழப்பமின்றி எளிதாகப் புரியும் என்று தெரிந்து அந்த வரிசையில் அனுபவப் பகிர்வை அளித்தார். இந்தக் கற்றலை ஆழப்படுத்திக் கொள்ள எனக்குக் கிடைத்த அடுத்த வாய்ப்பு திருவலஞ்சுழி. முற்சோழரில் தொடங்கி, பிற்சோழர், பாண்டியர் எனப் பல்வேறு காலகட்டக் கட்டுமானங்களையும் தாங்குதளங்கள், தூண்கள், போதிகைகள், ஆர உறுப்புகள், இவைகளில் எத்தனை வகைகளுண்டோ, அவற்றில் பெரும்பாலானவற்றையும் உள்ளடக்கிய வளாகம் அது. அப்போதுதான் சீர்படுத்தப்பட்ட சேத்ரபாலர் கோயிலில் தொடங்கி, கோபுரங்கள் உட்பட முழு வளாகத்தையும் ஆய்வுக்குட்படுத்தினார் டாக்டர். முதல்முறை ஒரு கட்டுமானத்தை ஆய்ந்துவிட்டு, அடுத்தமுறை வரும்போது அதைக் கட்டுரை வடிவாக்கிக் கொண்டு வருவார். அவற்றைச் சரிபார்த்துத் திருத்தி, செம்மைப் படுத்தி நூலில் இணைப்பார். இந்தச் சரிபார்த்தலில் நான் பங்குபெற்றது பேருதவியாக இருந்தது. கட்டுமானம் சீர்படுத்தப்படுவதற்கு முந்தைய சேத்ரபாலர் கோயில் பத்மபந்த தாங்குதளத்துடன் கூடிய ஒரு தள வேசரவிமானம். தாங்குதளமும் சுவரும் நாகரம். விமானம் வேசரம். கிட்டத்தட்ட நார்த்தாமலையிலுள்ள கட்டுமானத்துக்கு ஒப்பானது. அங்கு மூன்று தளங்களில் சதுரம் வட்டமாக மாறியது. இங்கு ஒரே தளத்தில். இதுபோன்ற மாறுதல்களும் ஒப்பீடுகளும் கற்றலில் சுவைகூட்டின. கல்வெட்டையும் கட்டடக்கலையையும் ஒன்றாக ஆராய்ந்தால்தான் கட்டுமானத்தைப் பற்றிய முழுமையான புரிதல் வரும் என்று நான் உணர்ந்துகொண்ட களமும் திருவலஞ்சுழிதான். கட்டடக்கலை கட்டுரையைச் சரிபார்க்கும்போது, ஒரு குழப்பம் ஏற்பட்டது. கருவறையின் தென்புறச்சுவரில் மேற்கிலிருந்து கிழக்காக ஒவ்வொரு உறுப்பாக விவரித்துக்கொண்டே வந்த கட்டுரை, ஒரு கட்டத்தில் கட்டுமானத்தில் இருக்கும் உறுப்புகளுடன் தொடர்பில்லாமல் ஆனது. வடபுறச்சுவரின் உறுப்புகளை விவரிக்கும்போதும் இதுபோல் பாதியில் நின்றுபோயிருந்தது. ஏன் இப்படி ஆனது எனக் கவனித்தபோது, அச்சுவர்களிலிருந்த கல்வெட்டுகளும் பாதியில் நின்று போயிருந்தன. என்னவென்று புரியாமல் டாக்டரிடம் ஓடிப்போய்க்கேட்க, வியப்பான அந்த நிகழ்வை விவரித்தார். அதாவது, முதலில், கருவறையிலிருந்து கல்வெட்டு நின்றுபோயிருந்த இடம் வரைதான் கட்டுமானம் இருந்தது. அதற்கப்பால் வெற்றுவெளியாகத்தான் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் திருப்பணி செய்தபோது, இதை நீட்டி, மண்டபமாக ஆக்கினர் என்றார். எதை வைத்துச் சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம் எனக்கேட்டோம். இரண்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று கட்டடக்கலை தொடர்பானது. இரண்டாவது கல்வெட்டு தொடர்பானது. கல்வெட்டு நின்ற இடத்தில் உருள்குமுதம் வளைந்து உள்ளே செல்கிறது. உருள்குமுதம் சுவரின் முனையில் வளையும்போது ஒரு கூர்முனை ஏற்படும். அக்கூர்முனை வெளியே தெரியாவண்ணம் உட்பக்கம் குழிந்த இன்னொரு கல்லை வைத்து நீட்டியதே தெரியாமல் வித்தை காட்டியிருந்தார்கள். உற்றுக்கவனித்தால் மட்டுமே புலப்படக்கூடிய நுட்பம். அடுத்ததாக, பெறற்கரிய பேறுபெற்ற கிழக்குச்சுவரிலிருந்த இரண்டு கல்வெட்டுகளும் இந்த நீட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, திருமகள் சிற்பம் இருக்கும் சுவரில், 'திருமகள் போல' எனத்தொடங்கும் இராஜராஜரின் கல்வெட்டின் இடதுபக்கம் சுமார் ஒரு அடியும், கலைமகள் சிற்பம் இருக்கும் சுவரில் 'சிவசரணசேகரன்' இராஜேந்திரரின் கல்வெட்டின் வலதுபக்கம் சுமார் ஒரு அடியும் இந்த நீட்சிச்சுவருக்குள் ஒளிந்திருந்தன. கோயில் கட்டப்பட்டபோதே இச்சுவர்களை எழுப்பியிருந்தால் இரண்டு கல்வெட்டுகளும் மறைந்து போயிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதல்லவா? இந்தச் சுவரில் கல்வெட்டு இல்லாவிட்டால் பிற்காலத்தில் ஒரு மண்டபம் புதிதாக இணைக்கப்பட்டது என்றே தெரிந்திருக்காது. இதுபோல் எண்ணற்ற விஷயங்களை இரண்டு ஆண்டுகளில் கற்றுக்கொண்டிருந்தபோது, எனது ஜப்பான் பயணம் கற்றலில் தொய்வை ஏற்படுத்தியது. இருப்பினும், அடிப்படையை ஓரளவு தெரிந்து வைத்திருப்பதால் மீண்டும் நேரம் வாய்க்கும்போது தொடர முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கூழை அளாவிய சிறுகையைப் போலக் கட்டடக்கலை என்னும் பெருங்கடலில் ஒருகை அள்ளிப் பருக முடிந்ததற்கு டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் டாக்டருமே முழுமுதற் காரணம். இல்லாவிடில் கோபுரமும் விமானமும் ஒன்றாகவேதான் இருந்திருக்கும். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |