http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிற் சிற்பங்கள் பல அளவின. கட்டுமானத்தின் பல பகுதிகளில் பரவிக் காணப்படுவன. சில கலைப்பதிவுகளாகவும் சில கதை சொல்வனவாகவும் சில காட்சிகளை விரிப்பனவாகவும் செதுக்கியவர் சிந்தைக்கேற்ப இங்கு இடம்பெற்றுள்ளன. பல தமிழ்நாட்டு முற்சோழர் காலக் கோயில்கள் சிந்தைக்கினிய சிற்பங்களைப் பெற்றிருந்தபோதும் புள்ளமங்கை ஆலந்துறையார் போல் பல்வகைத்தனவாய், பல்திறத்தனவாய் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் கருத்தும் கவினும் நிறைந்திலங்கும் எழிலார்ந்த சிற்பங்களை அவை கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அவ்வகையில், ஆலந்துறையார் கோயில் பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டின் சிற்பக்களஞ்சியம். நளினக்கலையை உயிராய் நினைத்து உளி தொட்டவர்களின் காலக்கனவு. கட்டுமானத்தில் கலந்து கரைந்திருக்கும் அந்நாள் கலைஞர்களின் உயிர்ப்புகளுள் கண்டபாதச் சிற்பங்களை இங்குக் காண்போம்.

கண்டபாதச் சிற்பங்கள்

விமானம், முகமண்டபம் இவற்றின் கிழக்குமுகத் தாங்குதளக் கண்டபாதங்களை முன்னுள்ள தரையின் உயர்வு மறைத்துள்ளதால், விமானத்தின் பிற முத்திசைப் பாதங்களும் முகமண்டபத்தின் தென், வடபாதங்களுமாக 54 பாதங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் கட்டமைப்பில் 6 பாதங்கள் மறைந்திருக்க, ஒன்று வெறுமையாக உள்ளது. எஞ்சிய 47 தாங்குதளக் கண்டபாதங்களிலும் சிற்பங்கள். முகமண்டபத் தெற்குப்பாதங்கள் எட்டிலும் வடக்குப் பாதங்கள் ஆறிலும் விமானப் பாதங்களில் தெற்கில் 9, மேற்கில் 11, வடக்கில் 13 என்ற எண்ணிக்கையிலும் சிற்பங்கள் உள்ளன.

சிற்பங்கள் பெற்றுள்ள 47 பாதங்களில், பூ அல்லது கொடிக்கருக்குச் செதுக்கல் கொண்டுள்ளவை 11. சிவபெருமான் தொடர்பான கதைவிளக்கங்கள் 11 பாதங்களிலும் அவரது ஆடல்கள் 3 பாதங்களிலும் அமைய, 9 பாதங்கள் விஷ்ணுவைப் பல கோலங்களில் காட்டுகின்றன. பல்வேறு செதுக்கல்களாக 9 பாதச்சிற்பங்கள் அமைய, வேதிபாத ராமாயணத்தின் சில நிகழ்வுகள் 4 கண்ட பாதங்களில் கண்காட்டுகின்றன.

பூ, கருக்கணிகள் தவிர்த்த பிற செதுக்கல்கள் பெரும்பாலும் முப்பரிமாண அமைப்பில் விளக்கப்பட்டுள்ளன. கதையின் தலைமை உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, துணைப் பங்கேற்பாளர்கள் பாதத்தின் மேல், கீழ் மூலைகளில் சிறிய அளவினராய்க் காட்டப்பட்டுள்ளமையும் கதைத்தொடரின் தலைமை நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி அவை தொடர்பான காட்சிகளை மேலும் கீழுமாகப் பக்கவாட்டில் அமைத்துள்ளமையும் நாடக உத்திகளைக் கையாள்வதில் சோழச்சிற்பிகள் பெற்றிருந்த திறன் காட்டும்.

சிவ கதைகள்

சிவபெருமான் தொடர்பான புராணக்கதைகளின் விளக்கங்களாக சங்கரநாராயணர், கிராதார்ச்சுனர், கங்கையேற்றவர், கங்காளர், யானையை அழித்தவர், லிங்கமேந்தி உமையோடிருப்பவர், காமனை எரித்தவர், உமையோடிருப்பவர், சண்டேசுவர அருள் மூர்த்தி, அம்மையப்பர் ஆகிய பத்துத் தோற்றங்கள் அழகிய சிற்றுருவச் சிற்பங்களாகத் தெற்கு, மேற்குக் கண்டபாதங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாதத்தில் சிவபெருமான், விஷ்ணு இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறுள்ளனர்.

சங்கரநாராயணர், உமையோடிருப்பவர், கிராதார்ச்சுனர், அம்மையப்பர், லிங்கமேந்தி உமையோடிருப்பவர், சிவவிஷ்ணு இணையர் எனும் 6 தோற்றங்களிலும் சிவபெருமானும் உடனிருப்பவரும் இணையான அளவில் காட்சியாக, பிற 5 தோற்றங்களில் முதன்மை வடிவினராய்க் கதையை நடத்தும் சிவபெருமானும் அவரினும் சற்றே அளவில் குறைந்தவர்களாய் உடனிருப்பவர்களும் சிறிய அளவினராய்ப் பிற பங்கேற்பாளர்களும் காட்டப்பட்டுள்ளமை பார்த்த அளவிலேயே அச்சிற்பத்தொகுதியில் யார் முதன்மையர் யார் துணைமாந்தர்கள் என்பதைக் கண்ணுறுவார் அறியுமாறு செய்துவிடுகிறது.

பெரும்பாலான தோற்றங்களில் சிவபெருமான் நெருஞ்சி, ஊமத்தம்பூக்கள் இலங்கும் சடைமகுடராய், மகர, பனையோலைக் குண்டலங்களுடனோ அல்லது இரு செவிகளிலுமே பனையோலைக் குண்டலங்களுடனோ அழகிய இடைக்கட்டும் சிற்றாடையுமாய்த் தோள், கை வளைகளுடன் சரப்பளிக் கழுத்தராய், முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து காட்சிதருகிறார். சில தோற்றங்களில் தாள்செறிகளும் உள்ளன. உமை உடனிருக்கும் இடங்களில் அம்மை சடைமகுடராய், மகுடம் மீறிய சடை தோளின் ஒருபுறம் சரிய, பனையோலைக் குண்டலங்களுடன் தோள், கை வளைகள் நிறைய, முத்துமாலையோ, சரப்பளியோ கழுத்தணியாகத் தாள்செறியுடன் இடைக்கச்சு பூண்ட பட்டாடையுடன் காட்சிதருவதைக் காணமுடிகிறது.

வலப்புறம் சிவபெருமானாகவும் இடப்புறம் விஷ்ணுவாகவும் காட்சிதரும் சங்கரநாராயணர் வல முன் கையைக் காக்கும் குறிப்பிலிருத்தி, இட முன் கையைத் தொடையில் வைத்துள்ளார். மகுடத்தின் வலப்புறம் சடைமுடிகள் விளங்க, இடப்புறம் கிரீடம். நிவீதமாய் முப்புரிநூலும் உடலின் வலப்பகுதியில் சிற்றாடையும் இடப்பகுதியில் பட்டாடையும் வலச்செவியில் பனையோலைக் குண்டலமும் இடச்செவியில் மகரகுண்டலமும் பெற்றுள்ள அவரது பின்கைகளில் வலப்புறம் மான், இடப்புறம் சங்கு. இடுப்பில் அழகிய இடைக்கட்டு. சங்கரநாராயணரின் இருபுறத்தும் கீழ்ப்பகுதியில் இறைப்பார்வையில் கருடாசனத்திலுள்ள அடியவர்கள் இடைச்சிற்றாடையுடன் சடைமகுடர்களாய்ப் பனையோலைக் குண்டலங்களுடன் ஒரு கையால் போற்றுகின்றனர். அவர்தம் மற்றொரு கைப்பொருள் மலர்ச்செப்பாகலாம். இது ஒத்த சங்கரநாராயணர் சிற்பம் மாமல்லபுரம் பெருவராகர் குடைவரையின் கருவறை முன்சுவர்ப் பகுதியில் பல்லவர் கைவண்ணமாக உள்ளமை எண்ணத்தக்கது.1

வலப்புறம் வேடுவராக இறைவனும் இடப்புறம் அவருடன் போரிடும் அருச்சுனரும் இணைந்த காட்சியே கிராதார்ச்சுனராக மலர்ந்துள்ளது. முழங்காலளவில் மடித்த வலக்காலின் பாதம் பார்சுவத்திலமைய, நீட்டிய இடக்காலின் பாதம் சூசியாக, முக்கோண இடைத்தொங்கலுடன் சிற்றாடை இடையை அலங்கரிக்க, தோள் வளைகளும் சரப்பளியுமாய்த் தோளில் மாட்டிய வில்லுடன் இடக்கையை வயிற்றருகும் வலக்கையை முஷ்டியிலும் கொண்டுள்ள சிவபெருமானின் உயர்த்திக் கட்டிய குடுமியில் சிறகுகள். அவர் வலக்காலின் பின்புறம் நாய்.

போரிடும் மெய்ப்பாட்டில் வேடருக்காய் உடல் திருப்பி, வலமுழங்காலை உயர்த்தி, இடப்பாதத்தைத் திரயச்ரத்திலிருத்தி, வலக்கையில் வில்லுடன் காட்சிதரும் அருச்சுனர் மார்பில் முப்புரிநூலென மடித்த துண்டு. சடைமகுடம், தோள்வளைகள், இடைக்கட்டுடன் சிற்றாடை பெற்றுள்ள அவர் கால்களுக்குப் பின் பன்றி. மேலே முகில்களின் பின்னிருந்து இதைக் காண்பவராய், இடுப்பளவில் உமை. வலக்கை வயிற்றருகே அமைய, இடக்கையைக் கன்னத்தருகே கொண்டுள்ள அம்மையின் முகம் சிதைந்துள்ளது.

வலக்காலை முழங்காலளவில் மடக்கி, வலப்பாதத்தை உயர் தளத்தின் மேலிருத்தி, இடக்காலைத் தரையில் ஊன்றித் தலையை இடஞ்சாய்த்து நிற்கும் அம்மையப்பரின் வல முன் கை அவர் பின்னுள்ள காளையின் திமில் மீது. சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வலப் பின் கை சிதைந்துள்ளது. பட்டாடையுடனுள்ள அம்மையின் கையில் நீலோத்பலம். சிறு கொம்புகளும் அலையலையாய்க் கழுத்து மடிப்புகளும் கொண்டுள்ள நந்தி தலையைக் குனிந்துள்ளது.

உமையோடிருக்கும் சிவபெருமான் கண்களைக் குளிர வைக்கும் காட்சியர். கால்களை மடக்கி அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் உடல் சாய்த்தவராய் சுகாசனத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள அவரது வலப் பின் கை அதன் திமில் மீதமைய, இட முன் கை இடப்புறத்தே இடஒருக்கணிப்பில் வீராசனத்திலுள்ள உமையைத் தழுவியுள்ளது. சிவபெருமானின் வல முன் கை உமையின் வலக்கையருகே ஏந்தலாய். வலப்புறம் நெகிழும் அழகிய சடையுடன் இடக்கையைத் தோளருகே கொண்டுள்ள அம்மையின் வலக்கை கீழே குனிந்தவாறு லலிதாசனத்திலுள்ள தோழியின் தலைமீது. தோழியின் வலக்கை மடிந்து கடகமாக, இடக்கை இடமுழங்கால் மீது. இறைவனுக்காய் முகம் திருப்பியுள்ள நந்தி இறைவனின் வலத்தொடையை நாவால் வருடுகிறது.

மேலே முகில்களுக்கிடையில் வலப்புறத்துள்ள பூதம் இடக்கையால் இறைவனைப் போற்றுகிறது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தாடி, முப்புரிநூல், சரப்பளி, உதரபந்தம், தோள், கை வளைகளுடன் இடஒருக்கணிப்பில் தொடையளவினதாகக் காட்சிதரும் அதன் வலக்கை வயிற்றருகே. இடப்புறத்துள்ள குரங்குமுகப் பூதம் இடக்கையை மார்பருகே கொண்டு, வலக்கையால் இறைவனைப் போற்றுகிறது.

இலிங்கமேந்திய சிவபெருமான் உமையொடு வீற்றிருக்கும் காட்சி தனித்துவமானது. நீள்இருக்கை மேல் இடுப்பிற்குக் கீழ்ப்பட்ட பகுதி இடஒருக்கணிப்பிலும் மேற்பகுதி வலஒருக்கணிப்பிலும் அமையுமாறு உமை நோக்கி உத்குடியிலுள்ள சிவபெருமானின் இட முன் கை, மடக்கியுள்ள அவரது இடக்கால் மீது. இடப் பின் கை கடகத்திலிருக்க, வல முன் கை இருக்கையில் நிறுத்தியுள்ள மழுவின் மீது.2 தோளுக்காய் உயர்ந்துள்ள வலப் பின் கையில் ஆவுடையாருடன் லிங்கம்.3 செவிகளில் மகர, பனையோலைக் குண்டலங்கள். இறைவனின் இடப்புறம் அவரைப் போலவே ஒருக்கணித்துள்ள இறைவியும் உத்குடியில். அவரது இடக்கை முழங்கால் மீது தாங்கலாகித் தோளைத் தொட்டிருக்க, வலக்கை இறைவனின் முழங்கால் மேல். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியுள்ளனர். கீழே வலப்புறம் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள பூதம், இடக்கையை உருள்பெருந்தடி மேலிருத்தி, வலக்கையை மார்பருகே கொண்டுள்ளது.

இடஒருக்கணிப்பில் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, பின் கையில் அக்கமாலையுடன் இடக்கைகள் சிதைந்தநிலையில் சிவபெருமான் காட்சிதர, அவருக்காய் வலஒருக்கணிப்பிலுள்ள விஷ்ணுவின் வலப் பின் கையில் சங்கு. இடக்கை சிதைந்துள்ளது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, பட்டாடை பெற்றுள்ள விஷ்ணுவின் வல முன் கை மார்பருகே. இட முன் கை இடுப்பில். இருவருக்கும் இடையில் விஷ்ணுவுக்காய் ஒருக்கணித்துள்ள பூதத்தின் மார்பருகே உள்ள கைகள் சிதைந்துள்ளன. இக்காட்சி விஷ்ணுவிற்குச் சக்கரம் வழங்கிய விஷ்ணு அருள் மூர்த்தியின் படப்பிடிப்பாகலாம்.

சிவபுராணங்களில் இடம்பெறும் இறைவனின் அழித்தல், அருளல் படப்பிடிப்புகளாய் ஐந்து பதிவுகளை ஆலந்துறையார் பாதங்களில் காணமுடிகிறது. அவற்றுள், மூன்று அழித்தல் காட்ட, அருளல் காட்சிகள் இரண்டு. தவழ்நிலையில் கைகளில் பாம்புடன் வீழ்ந்திருக்கும் முயலகனின் முதுகு, இடுப்பின் பின்புறப் பகுதிகளில் இடப்பாதத்தை ஊன்றி, இடஒருக்கணிப்பில் உடலின் கீழ்ப்பகுதியும் வலஒருக்கணிப்பில் மேற்பகுதியும் இருக்குமாறு வீராசனத்திலுள்ள காமனை எரித்த சிவபெருமானின் வல முன் கை முதுகுப்புறமுள்ள திண்டிலிருக்க, பின் கை சூசியில். இட முன் கை இடமுழங்கால் மேலிருக்க, பின் கையில் அக்கமாலை. தோளின் இருபுறத்தும் மகுடம் மீறிய சடைப்புரிகள். இறைவனின் இடப்புறம் மேற்பகுதியில் நந்தி நிற்க, வலப்புறம் உமை. நந்தியின் கீழ் லலிதாசனத்திலுள்ள பூதத்தின் வலக்கை சிதைந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி பெற்றுள்ள அதன் இடக்கை வயிற்றருகே. வலஒருக்கணிப்பிலுள்ள அம்மையின் வலக்கை குண்டலத்தைப் பிடித்தபடி. இடக்கை வயிற்றருகே. இறைப்பார்வையிலுள்ள அம்மையின் அழகிய சடை முதுகில் நெகிழ, இறைவனின் இடப்புறம் கீழ்ப்பகுதியில் லலிதாசனத்தி லுள்ள மற்றொரு பூதம் சிதைந்துள்ளது. வலப்புறம் இறைவனால் எரிக்கப்பட்ட காமனும் அவரைத் தழுவிய ரதியும். காமனின் வலக்கை வலக்காலைப் பிடித்திருக்க, இடக்கை இறைச்சினத்தைத் தடுக்குமாறு போலப் பதாகத்தில்.

யானையை அழித்த மூர்த்தி கோலத்தில் சிவபெருமானின் உடற்சுழற்சி சில பதிவுகளில் பிரமரக கரணத்தையும் வேறு சில செதுக்கல்களில் பிருஷ்ட சுவஸ்திகக் கரணத்தையும் நினைவூட்டுமாறு அமையும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இடுப்பிற்குக் கீழ்ப்பட்ட உடற்பகுதி வலஒருக்கணிப்பில் சுழல, மேற்பகுதி நேர்ப்பார்வையிலமைய, வலப்பாதத்தைத் தம்மால் அழிக்கப்பெற்ற யானையின் கால்மீது ஊன்றி, இடமுழங்காலை உயர்த்திப் பாதத்தைக் குஞ்சிதமாக்கி நிற்கும் புள்ளமங்கைப் பெருமானின் போர்க்கோலம் கண்களை நிறைப்பது. அக்கோலம் காணப்பெறாது இறைவனைப் பார்த்தவாறே, களம் நீங்க முயற்சிப்பவராய் இடஒருக்கணிப்பிலுள்ள உமையின் வலக்கை, போதும் எனுமாறு பதாகத்திலுள்ளது. சரப்பளியும் முத்துமாலையும் பெற்றுள்ள அம்மையின் இடுப்பிலுள்ள முருகன் நீட்டிய கைகளுடன் அருகிலுள்ள தோழியிடம் தாவ, அவரைப் பெறுமாறு முழுஒருக்கணிப்பில் கைகளை நீட்டியுள்ள தோழி தமிழம் கொண்டையும் இடையாடையும் பெற்றுள்ளார்.

சிரஸ்திரகச் சுருள்களும் மண்டையோடும் பெற்றுள்ள சடைப்பாரத்துடன் காட்சிதரும் இறைவனின் முன்னிரு கைகளும் யானையின் தோல் பற்ற, அவரது வலக்கைகளில் யானைத்தந்தம், முத்தலைஈட்டி, வாள். ஒரு வலக்கை கடகம் காட்ட, இரு இடக் கைகள் சுட்டலிலும் வியப்பிலும். பிற இடக்கைகளில் கேடயம், மணி. இறைவனின் இடப்புறம் மேலுள்ள பூதம் வலமிருந்து இடமாக அணிந்த முப்புரிநூலுடன் மார்பருகே உள்ள இடக்கையில் கடகம் காட்டி, வலக்கையை வியப்பில் உயர்த்தியுள்ளது. இறைவனின் வலப்புறம் கீழுள்ள பூதமும் மேலுள்ளது போலவே முப்புரிநூல் கொண்டு, வலஒருக்கணிப்பில் கால்களை அகற்றி இருகைகளாலும் இதழ்கள் விரித்துப் பழிப்புக் காட்டுகிறது. அதன் வலப்புறம் தொய்ந்த நிலையில் யானையின் தலை.

கங்கையேற்ற அண்ணல் வலக்காலைத் தரையில் ஊன்றி, இடக்காலை உயர்த்திப் பாதத்தைச் சிதைந்த முயலகன் மீது இருத்தியுள்ளார். உமையை வலப்புறம் கொண்டு இடஒருக்கணிப்பிலுள்ள சிவபெருமானின் வலப் பின் கை கங்கை இறங்க வாய்ப்பாகச் சடைப்புரி ஒன்றை நீட்டிப் பிடித்துள்ளது. வல முன் கை, வலஒருக்கணிப்பிலுள்ள வெகுளி வயப்பட்ட உமையைத் தழுவியுள்ளது. இறைவனின் இட முன் கை தொடையில். பின் கையில் மான். இறைவனைக் காண விரும்பாதவர் போல் தலை குனிந்துள்ள இறைவியின் வலக்கை காதருகே. இடக்கை வயிற்றருகே. கங்கை சிதைந்திருக்க, இடப்புற பகீரதன் இரு கைகளையும் மேலுயர்த்தி வணங்கிய நிலையில். எலும்புகள் தெரியுமளவு உருக்குலைந்துள்ள அவர் இடையில் கோவணஆடை.

வல முன் கையால் மானுக்குப் புல்லளித்தவாறே நடைபயிலும் கங்காளரின் வலப் பின் கையில் தமருகம். அரைப்பட்டிகை இருத்தும் கோவணஆடையுடன் இட முன் கையில் கங்காளம் ஏந்திப் பின் கையில் கடகம் காட்டி நடக்கும் அவர் முன், வலக்கையில் கரண்டியுடன் இடக்கையை வயிற்றருகே கொண்ட முனிவர் மனைவி. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடை பெற்றுள்ள அவரும் அவரது தோழியும் வல ஒருக்கணிப்பில் இறைவனை எதிர்கொள்கின்றனர். தோழியின் கையிலும் கரண்டி. அவர்களுக்கு இடையிலுள்ள விரிசடைப் பூதம் தலையை வலப்புறம் சாய்த்துள்ளது. சிற்றாடையும் இடைத்தொங்கலுமாய்ச் சரப்பளியுடனுள்ள அதன் கைகள் சிதைந்துள்ளன.

இருக்கையில் சுகாசனத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள சிவபெருமானின் முன்கைகளில் கொன்றைமாலை. வலப் பின் கையில் பாம்பு. இடப் பின் கை தொடையில். முன்னால் மண்டியிட்டுள்ள சண்டேசுவரரை முகம் நோக்க, இறைப்பார்வையிலுள்ள சண்டேசுவரர் சடைமகுடம், சிற்றாடையுடன் பத்திமையுணர்வில் நெகிழ்ந்துள்ளார். இருக்கையின் கீழ் இறைவனின் வலக்கால் பின்னிருக்குமாறு நந்தி அமர்ந்துள்ளது. இடப்புறம் மேலே வலஒருக் கணிப்பிலுள்ள பூதம் ஒரு கையால் போற்றி, ஒரு கையை வயிற்றருகே கொள்ள, வலப்புறம் மேலே இடஒருக்கணிப்பிலுள்ள மற்றொரு பூதத்தின் இரு கைகளும் வயிற்றருகே.

ஆடல்

தமிழ்நாட்டில் காணப்பெறும் சிவபெருமானின் தண்டபட்ச கரணக்கோலங்களில் புள்ளமங்கைச் செதுக்கல் குறிப்பிடத்தக்கது. இடப்பாதத்தைப் பார்சுவமாய்த் தரையில் ஊன்றி, வலமுழங் காலை இடுப்புக்கு மேலுயர்த்தி, இட முன் கை அம்முழங்காலைத் தொட்டவாறு வலப்புறம் வேழக்கையாக நீளக் கரணம் நிகழ்த்தும் இறைவனின் பிற இடக்கைகளில் முத்தலைஈட்டி, பாம்பு, தீயகல். பெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, பின் கைகளில் மழு, தமருகம். ஒரு கை கீழ்நோக்கிய கடகமாக, உடலை லேசான வலஒருக்கணிப்பிலிருத்தி, நிமிர்த்திய முகத்தை இடப்புறம் திருப்பியுள்ள இறைவனின் சடைமகுடத்தில் ஊமத்தம் பூக்கள். கீழே வலப்புறமுள்ள பூதத்தின் இடத்தோளில் சிரட்டைக் கின்னரி. சிதைந்த வலக்கையுடனுள்ள அதன் முகம் இறைவனுக்காய் நிமிர, இடப்புறம் குத்துக்கால் அமர்விலுள்ள கலைஞர், கால்களுக்கிடையிலுள்ள குடமுழவைக் கைகளால் இயக்கியவாறே இறைப்பார்வையிலுள்ளார். இறைவனின் ஆடலும் கலைஞர்களின் தோல், நரம்பிசையும் இணைந்து அப்பகுதியை ஆடரங்காக்கியுள்ளன.

வடக்குக் கண்டபாதங்களில் சிவபெருமானின் இரு கரணக் கோலங்கள். வலப்பாதம் சூசியிலும் இடப்பாதம் பார்சுவத்திலுமிருக்க, இட முன் கையை அர்த்தரேசிதமாக்கி ஆடும் சிவபெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பில். பிற வலக்கைகளில் முத்தலைஈட்டி, தமருகம் இடம்பெற, ஒரு கைப்பொருள் சிதைந்துள்ளது. இடக்கைகள் இரண்டில் பாம்பும் தீயகலும். ஓர் இடக்கை முழங்கையளவில் மடிந்து தாழ்ந்துள்ளது. உடல் இடஒருக்கணிப்பில் இருந்தபோதும் இறைவனின் முகம் வலந்திரும்பியுள்ளது. கீழே வலப்புறம் லலிதாசனத்திலுள்ள பூதம் செண்டுதாளம் கொள்ள, சடைமகுடம், பனையோலைக் குண்டலங்களுடன் இடப்புறமுள்ளவர் கால்களுக்கிடையிலுள்ள குடமுழவை இயக்க, இருவர் பார்வையும் இறைவன் மீதே.

மற்றொரு கரணக்கோலத்தில் வலப்பாதத்தைப் பார்சுவத்திலும் இடப்பாதத்தை சூசியிலும் கொண்டு கரணம் நிகழ்த்தும் இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை அர்த்தரேசிதத்தில். ஊமத்தம்பூ, கொக்கிறகு, பிறையிலங்கும் சடையுடன் ஆடும் பெருமானின் பிற இடக்கைகளில் பாம்பும் தீச்சட்டியும். வலக்கைகளிலோ முத்தலைஈட்டியும் தமருகமும். அரைக்கச்சின் முடிச்சுத்தொங்கல்கள் இடைச்சிற்றாடை தழுவி நெகிழ்ந்துள்ளன. இறைவனின் இடப்புறம், கால்களுக்கிடையிலுள்ள குடமுழவை இயக்கும் பூதத்தின் முகம் முழவு நோக்கியுள்ளது. வலத்தோளில் சாய்த்துள்ள சிரட்டைக்கின்னரியை இடக்கைக் குச்சியால் இசைக்கும் பூதம் இறைவனின் வலப்புறமுள்ளது.

இவ்விரு கரணங்களிலும் இறைவனின் திருவடியொன்று சூசியிலமைய, மற்றொன்று பக்கம் திரும்பியுள்ளது. இரண்டிலுமே இட முன் கை அர்த்தரேசிதமாகியுள்ளது. ஒரு பாதம் சூசியாக அமைய நிகழ்த்தப்படும் கரணங்கள் மிகச் சிலவே. அவற்றுள் வலிதம் பெருமளவிற்கு இச்சிற்பங்களுடன் பொருந்தி வருகிறது. தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்திலும் தில்லைக் கோயிலிலுமுள்ள வலிதகரணச் சிற்பங்கள் ஒன்று போல் வலப்பாதத்தை சூசியில் கொள்ள, தஞ்சையில் வலக்கை ரேசிதமாகவும் இடக்கை மார்பருகிலும் உள்ளன. தில்லைச் சிற்பம் வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையைத் தொடையில் வைத்துள்ளது. பொதுவாகவே கரணச்சிற்பங்களில் கைநிலைகள் ஒன்று போலோ, வரையறையில் கூறப்பட்டிருக்குமாறோ அமைவதில்லை. ஆலந்துறையார் இறையாடல்களில் ஒரு பாதம் சூசியிலும் கைகளுள் ஒன்று அர்த்தரேசிதமாகவும் மற்றொன்று பதாகக்குறிப்பில் காக்கும் கையாக மார்பருகிலும் காட்டப்பட்டுள்ளமை கொண்டு இவ்விரு கரணங்களையும் வலிதமாகக் கொள்ளலாம்.





காமனை எரித்தவர்



கங்காதரர்



லிங்கமேந்தி உமையோடிருப்பவர்



அம்மையப்பர்



சண்டேசுவர அருள் மூர்த்தி



சங்கரநாராயணர்



உமையோடிருப்பவர்



சிவனும் விஷ்ணுவும்



சிவபெருமானின் வலிதகரணம்



தண்டபட்ச கரணம்



யானையை அழித்த மூர்த்தி

குறிப்புகள்

1. வரலாறு 2, பக். 34 - 35.
2. SII 19: 63, 138, 168, 188; SII 13: 257.
3. தினமணி 20. 12. 1993.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.