http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
ச. கமலக்கண்ணன்

பாடல் 2: தோகை உலரும் வரை

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
春すぎて
夏来にけらし
白妙の
衣ほすてふ
天の香具山

கனா எழுத்துருக்களில்
はるすぎて
なつきにけらし
しろたへの
ころもほすてふ
あまのかぐやま

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: இளவரசி ஜிதோ.

காலம்: கி.பி. 645-702

பேரரசர் தென்ஜி (1 - துளியுதிர் இரவு செய்யுளை இயற்றியவர்) அவர்களின் மகள். இவரது இயற்பெயர் உனோனோ சராரா என்பது. திருமணத்திற்கு முன்பு இளவரசியாக இருந்தவர். பேரரசர் தெம்மு (தென்ஜியின் தம்பி - இவரது சிற்றப்பா) என்பவரை மணந்து கொண்டார். பின்னர் தெம்மு இறந்தபிறகு கி.பி 686ல் பேரரசியாகப் பட்டம் சூடிக்கொண்டு 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். வரலாற்றில் இதுவரை ஜப்பானை ஆண்ட அரசியர் மொத்தம் எட்டுப் பேர் மட்டுமே. அதில் ஜிதோ மூன்றாமவர்.

இவரது காலத்தில்தான் அரிசியை நொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் மதுபானமான சாக்கே என்பது பரவலானது. சீனாவிலிருந்து அரிசி பயிரிடும் முறை அறிமுகமானபோது (கொரியாவிலிருந்து அறிமுகமானது என்ற கருத்தும் உண்டு) இந்த மதுபானம் தயாரிக்கும் முறையும் அறிமுகமானது என்ற கருத்து இருந்தாலும், பழமையான இலக்கியங்களில் இந்த சாக்கே குறித்த குறிப்புகள் இடம்பெறுவது இவர் காலத்தில் இருந்துதான். ஆனால் சீனாவின் இலக்கியங்களில் கி.பி 3ம் நூற்றாண்டிலேயே ஜப்பானியர்கள் துக்கம் அனுசரிக்கும்போது குழுவாக அமர்ந்து இந்த சாக்கேவை அருந்தியதாகக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

பழங்காலத்தில் ஜப்பானில் சுகொரொகு என்ற விளையாட்டு சூதாட்டமாகப் புகழ்பெற்று விளங்கியது. இது நம் ஊரின் தாயம் போன்று அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டாக இருந்ததால் பல ஏமாற்று வேலைகள் நடைபெற்றுப் பல இன்னல்கள் விளைந்தன. எனவே, பேரரசி ஜிதோ இவ்விளையாட்டை கி.பி 689ல் தடை செய்தார்.

ஜப்பான் ஓர் ஆணாதிக்க சமுதாயம் என்று சொல்லப்படுகிறது. ஜப்பானின் அரசர் என்பவர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் போன்று அதிகாரங்கள் ஏதுமின்றிப் பெயரளவிலான பெருமையைக் கொண்டிருப்பவர்தான் என்றாலும், அவருக்குப் பிறகு முடிசூடிக்கொள்ள ஆண் வாரிசு வேண்டும் என 21ம் நூற்றாண்டிலும் விரும்பியவர்கள் ஏராளம். நாட்டைத் தலைமை தாங்கும் பெண்கள் தற்காலிகமானவர்களே; ஆண்கள் மட்டுமே வலுவான தலைமையாக இருக்கமுடியும் என்பது போன்ற குரல்கள் இந்த நூற்றாண்டிலும் எழுந்தது, இன்னும் பழமைவாதிகள் மீதமிருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. ஓர் அரசருக்கு மகளாகப் பிறந்து சிறிதுகாலம் ஆட்சி செய்துவிட்டு வேறொரு அரசரை மணமுடித்து அவரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பதால் தற்காலிகமானவர்கள் எனக்கூறுகிறோம் என இவர்கள் கூறுகிறார்கள். 21ம் நூற்றாண்டிலேயே இப்படி என்றால் கி.பி 7ம் நூற்றாண்டில் இதைவிடத் தீவிரமான பழமைவாதிகள் இருந்திருப்பார்கள்தானே? ஆனால் 8ம் நூற்றாண்டிலேயே பேரரசி கென்ஷோ இக்கூற்றை உடைத்தெறிந்தார்.

கி.பி 686 முதல் 697 வரை ஜப்பானை ஆண்ட மூன்றாவது பெண் தலைமை ஜிதோ என்று பார்த்தோம். கி.பி 715 முதல் 724 வரை பேரரசியாக ஆட்சி புரிந்த ஐந்தாவது பெண் தலைமைதான் பேரரசி கென்ஷோ. அப்படியானால் நான்காவது அரசி யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா? அவர்தான் பேரரசி கென்மெய். கென்ஷோவின் தாயார். அடுத்தடுத்து இரண்டு பெண்கள் அரசியராக ஆட்சி புரிந்து பெண்களின் ஆட்சி தற்காலிகமானது என்ற கூற்றை உடைத்தெறிந்தனர். பேரரசி கென்மெய் காலத்தில் நிறைய மான்யோஷு பாடல்கள் இயற்றப்பட்டன.

நம் குறுந்தொகையுடன் ஒப்பிடத்தக்க அளவில் கி.பி 600 முதல் அரசர் தொடங்கி அதிகாரிகள், கூத்தர்கள், விவசாயிகள், கடைநிலை மக்கள் வரை பலதரப்பட்ட மக்கள் இயற்றிய சிறு பாடல்களைக் கொண்ட ஜப்பானிய இலக்கியம் கி.பி 759ல் தொகுக்கப்பட்ட மான்யோஷு ஆகும். இது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜோக்கா எனப்படும் விருந்து மற்றும் பயணம் தொடர்பான பல்சுவைப் பாடல்கள்; சோமொன்கா எனப்படும் காதல் பாடல்கள், பன்கா எனப்படும் இறப்பைப் பாடும் பாடல்கள் என்று 4,516 பாடல்களைக் கொண்ட தொகுப்பு ஆகும். இதில் 4,207 பாடல்கள் தான்கா வகையைச் சேர்ந்தவை ஆகும். இவற்றில் சில பாடல்கள் மான்யோஷூ, ஹ்யாக்குநின் இஷ்ஷு (பழங்குறுநூறு) என இரு தொகுப்புகளிலும் இடம்பெற்றிருக்கும்.

பேரரசி கென்மெய் 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அப்படியானால் கி.பி 697லிருந்து 708க்குள் மீண்டும் ஆட்சி மாற்றமா? ஆம். இந்த கென்மெய் வேறு யாருமல்ல. பேரரசர் தென்ஜியின் நான்காவது மகள். ஜிதோவின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதரி. அபே என்ற இயற்பெயரைக் கொண்டவர். பேரரசர் தெம்முவுக்கும் பேரரசி ஜிதோவுக்கும் பிறந்த இரண்டாவது மகன் குசாகபே இவரை (தனது சிற்றன்னையை) மணந்துகொண்டார். இவர்களுக்கு கென்ஷோ (இயற்பெயர் ஹிதகா) என்ற மகளும் மொம்மு (இயற்பெயர் கரு) என்ற மகனும் பிறந்தனர். இளவரசராக இருந்த குசாகபே கி.பி 689ல் தனது 28வது வயதில் இறந்துவிட்டார். பின்னர் குசாகபேவின் மகன் கரு, மொம்மு என்ற பெயரில் இளவரசராகிறார். கி.பி 697லிருந்து அரசராக முடிசூட்டிக்கொண்ட மொம்மு கி.பி 707ல் இறந்துவிட்டதாலும் அவரது மகன் ஒபிதோ அப்போது 6 வயது மட்டுமே நிரம்பியவராக இருந்ததாலும் அவருக்குப் பதிலாக கென்மெய் அரசியாகவும் ஒபிதோ இளவரசராகவும் கி.பி 707ல் முடிசூட்டிக்கொண்டனர்.

ஒபிதோவுக்கு அரசாளும் வயது வரும்வரை அவரே ஆட்சியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் என்ன காரணத்திற்காகவோ கி.பி 715ல் அவர் ஆட்சியைத் துறந்து, தனது மகள் கென்ஷோவுக்குப் பட்டம் சூட்டுகிறார். அந்தக் காரணம் இன்றுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆனால் இதன்மூலம் ஒரு பெண் தலைமை அடுத்து ஓர் ஆணிடம்தான் ஆட்சியை ஒப்படைக்கும் என்ற கூற்றைப் பொய்யாக்கி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் பேரரசி கென்மெய். கி.பி 710ல் தலைநகரை ஓட்சுவிலிருந்து நரா மாகாணத்துக்கு மாற்றியவர் இவர்தான். பின்னர் ஒபிதோ தனது 23வது வயதில் கி.பி 724ல் பேரரசர் ஷோமு என்ற பெயரில் ஆட்சிக்கு வருகிறார்.

இவர்கள் வரலாற்றை ஊன்றிப் படித்தால் நம் பொன்னியின் செல்வனுக்கு இணையான மர்மங்களும் சூழ்ச்சிகளும் குழப்பங்களும் நிறைந்தது என உணரலாம். முன்பெல்லாம் இப்படி இளவயதிலேயே இறந்திருக்கிறார்களே, இப்போது எப்படி ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் வாழ்கிறார்கள்? இதற்கான விடை ஜப்பானின் பிற்கால வரலாற்றில் ஒளிந்திருக்கிறது. இப்போது நாம் பாடலுக்கு வருவோம்.

பாடுபொருள்: பனி படர்ந்த மலைமுகடு

பாடலின் பொருள்: வசந்தம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் நேரம். ஆனாலும் எதிரில் உள்ள மலையின்மீது படர்ந்திருந்த பனி, வானகத்திலிருந்து ஓய்வெடுக்க வந்த தேவதைகள் தங்கள் வெண்ணிறத் தோகைகளை உலர்த்தியது போல் காட்சியளித்தது.

நம் ஊர்ப் பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜப்பானிலும் முகாஷிபனாஷி என்றொரு கதைத்தொகுப்பு இருக்கிறது. அதில் இந்தப் பாடலின் உவமை தொடர்பான ஒரு கதை இருக்கிறது. ஒருநாள் நிலவில் வசிக்கும் ஒரு தேவதை பூமிக்கு வருகிறாள். அப்போது தனது வெண்ணிறத் தோகைகளை அங்கிருந்த ஒரு பைன் மரத்தின்மீது உலர்த்திவிட்டு ஜப்பானின் மிக உயர்ந்த மலையான ஃபுஜி மலையைக் காண அருகிலிருந்த சிறுகுன்றின்மீது ஏறிச் செல்கிறாள். அப்போது அங்கு வந்த ஒரு மீனவர் அந்த வெள்ளுடையை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்குச் செல்கிறார். இதைக் கண்ட தேவதை அவரிடம் வந்து தனது உடையைத் தந்துவிடுமாறு கெஞ்சுகிறாள். தனக்காக ஒரு நடனம் ஆடிக்காட்டினால் உடையைத் தருவதாக அவர் கூறியவுடன் ஒரு நடனம் ஆடிப் பின் உடையைப் பெற்று நிலவுக்குத் திரும்பினாள். இவ்வாறு அத்தேவதை ஏறிய குன்றின் பெயர் அமானோ ககுயமா. நரா மாகாணத்தின் கஷிஹரா நகரில் மூன்று குன்றுகளை உள்ளடக்கிய யமாதோ மலைத்தொடரில் உள்ளது. முன்பொரு காலத்தில் இம்மலைத்தொடரில் உனெபி, மிமினரி ஆகிய இரண்டு குன்றுகள் மட்டுமே இருந்ததாகவும் இக்குன்று வானுலகில் இருந்து மண்ணுலகுக்கு வன்ததாகவும் நம்பப்படுகிறது. அதனால்தான் சொர்க்கத்தின் ககுயமா என்று பொருள்படும்படி அமானோ ககுயமா என அழைக்கப்படுகிறது.

வெண்பா:

தோய்பனி தீர்ந்திட வேனில் தொடங்கினும்
வேய்வனச் சொர்க்க மரமதில் - ஓய்வுகொள்
விண்வஞ்சி தோள்சேர் சிறகுலரும் மைவரையில்
வெண்டுகில் போர்த்தும் பனி.

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.