http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > கலையும் ஆய்வும்
அழுந்தூர் வரகுணீசுவரம் -1
இரா.கலைக்கோவன், மு.நளினி

சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் 18 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கல்வெட்டுகளில் அழிந்தியூர் என்றழைக்கப்படும் அழுந்தூர். 1985இல் அப்பகுதியில் அரிசி அரைக்கும் சிறிய ஆலையை நடத்திவந்த திரு. ஜே. சத்யநாராயணன் அளித்த தகவலே அழிந்தியூர் ஆய்வுக்கு வித்திட்டது.1 அதுநாள்வரை வரலாற்று வெளிச்சம் பெறாதிருந்த அழிந்தியூரின் கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன.2

வரகுணீசுவரர் வளாகம்

அழுந்தூரில் எஞ்சியிருக்கும் சோழர் கட்டுமானமாக விளங்கும் வரகுணீசுவரர் கோயில் வளாகத்தில் இறைவன் திருமுன், அம்மன் திருமுன், சிறிய பிள்ளையார் திருமுன் அமைய, கோயிலுக்குப் பின்னுள்ள அரசமரத்தடியில் பல சிற்பங்கள் மண்ணில் புதையுண்டிருந்தன. அருகிருக்கும் செங்குளத்தில் அழிந்த கோயிலின் சுவடுகளும் புதையுண்ட சிற்பங்களும் தென்பட்டன.3 கிழக்கி லுள்ள பிடாரித்தோப்பில் சிதைந்த எழுவர்அன்னையர் சிற்பங்கள் சிலவும் மேற்கிலுள்ள ஐயனார் தோப்பில் இருவேறு காலக்கட்ட ஐயனார் சிற்பங்கள் இரண்டும் சிவன்கோயில் எல்லைகளைக் குறிக்கும் திரிசூலக்கற்கள் இரண்டும் கண்டோம். வடபுறச் செட்டிஊருணிப்பட்டியின் வெறுமையான மண்டபத் திருமுன்னுக்கு அருகிருந்த தோட்டத்திலிருந்து அதன் எல்லைக் கல்லாகப் பயன்படுத்தப்பட்ட கல்வெட்டுப் பலகை கிடைத்தது.4



வரகுணீசுவரம்

கருவறை, முகமண்டபம், இடைநடை, பெருமண்டபம் என அமைந்திருக்கும் வரகுணீசுவரத்தின் முதலிரு கட்டமைப்புகளும் பிற்சோழர் காலத்தவை. இடைநடையும் அதையடுத்து விரியும் பெருமண்டபமும் இருவேறு காலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் தாங்குதளம் பிற்சோழர் பணியாகச் சுவரும் கூரையுறுப்புகளும் பின்னாளையன.

பெருமண்டபம்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகை, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ள பெருமண்டபத்தின் தென்வாயில் இருபுறத்தும் படிகள் பெற்ற முன்றில் கொண்டுள்ளது. அந்தப் படிகளுள் ஒன்று கல்வெட்டுப் பொறிப்புடன் விளங்க, தாங்குதளத்தின் முப்புறத்தும் கல்வெட்டுகள். இரு கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் இம்மண்டபத்தின் வடக்குக் குமுதத்தில் 85 செ. மீ. நீள அளவுகோலும் கிழக்குத் துணைத்தளப் பெருவாஜனத்தில் 82 செ. மீ. நீள அளவுகோலும் உள்ளன. அவற்றுள் ஒன்றை இப்பகுதி நிலங்களை அளக்கப் பயன்பட்ட குழிக்கோலாகவும்5 மற்றொன்றைக் கட்டடக் கலைஞர்கள் பயன்படுத்திய தச்சமுழமாகவும்6 கொள்ளலாம்.

முச்சதுர இருகட்டுத் தூண்கள் கூரை தாங்கும் முன்றிலின் படிகளைத் துளைக்கைப் பிடிச்சுவர்கள் தழுவியுள்ளன. பெருமண்டபச் சுவரின் கிழக்குப் பகுதியிலிருந்த கல்வெட்டுப் பொறிப்புள்ள சாளரம் நழுவி, இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதி திறப்பாக உள்ளது. மண்டபத்தின் வடசுவர் பெரிதும் சிதைந்துள்ளமை அதன் கட்டமைவை அறியத் துணையாகிறது. ஒரு சுவரை எழுப்ப இருபுறத்தும் அளவாய் அறுக்கப்பட்ட கற்களை அடுக்கி, இரு அடுக்குகளுக்கும் இடையில் துண்டுக் கற்களையும் சுதையையும் இட்டு, அதன் பிடிமானத்தில் இருவரிசைக் கற்களும் நிலைகொள்ளுமாறு இக்கோயில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.



இடைநடை

சாளரக் கல்வெட்டில் வரகுண விச்சார மண்டபமாக அழைக்கப் பெறும் பெருமண்டபத்தை முகமண்டபத்துடன் இணைக்கும் இடைநடைப்பகுதி பெருமண்டபத்தைவிட அகலக்குறுக்கமாகவும் முகமண்டபத்தைவிடச் சற்றே அகலப்பெருக்கமாகவும் அமைந் துள்ளது. பெருமண்டபம் ஒத்த கட்டுமானம் எனினும் தெற்கிலும் வடக்கிலும் ஜகதி, குமுதம், கண்டம் முதலிய உறுப்புகளை இழந்து உபானமும் பட்டிகையும் மட்டுமே பெற்றுள்ள இதன் சுவரில் திருப்பத் தூணை மட்டுமே காணமுடிகிறது. வேதிகைத்தொகுதியும் இல்லை.

கருவறை, முகமண்டபம்

கருவறை, முகமண்டபம் இரண்டும் சமகாலக் கட்டுமானங்கள். விமானத்தின் மேலுறுப்புகள் சிதறிய நிலையில் 4. 06 மீ. பக்கமுடைய சதுரமாகக் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. நிலத்தில் புதையுண்ட நிலையில் துணைத்தளம் அமைய, உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, துணைக்கம்பு கொண்டெழும் கருவறையின் சுவர்களைச் செவ்வகப் பாதமும் பாம்புப்படமும் கொண்ட எண்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. சில தூண்களின் தொங்கலும் கட்டுப்பகுதியும் அழகிய கொடிக்கருக்கு அலங்கரிப்பு கொள்ள, சில தூண்களில் அப்பகுதிகள் வெறுமையாக உள்ளன. தலையுறுப்புகளான கலசம், தாடி, குடம் ஆகியவையும் சில தூண்களில் அழகூட்டல் பெற்றிருக்கத் தூண் பலகைகளைத் தாமரைகள் ஏந்துகின்றன. மேலுள்ள பூமொட்டுப் போதிகைகள் வெறுமையான கூரையுறுப்புகள் தாங்க, கூரையின் வெளிநீட்டல் காரைக் கபோதமாக உள்ளது.

கருவறையின் தெற்கு, மேற்கு, வடக்குச் சுவர்களில் சட்டத்தலை உருளை அரைத்தூண்களின் தழுவலில் காணப்படும் கோட்டங்களில் தெற்கில் மட்டும் பின்னாளைய ஆலமர்அண்ணல் சிற்பம். கோட்ட அணைவுத்தூண்களின் கூரையுறுப்புகளை யடுத்துக் கீழிறங்கும் கபோதம் இரு கூடுவளைவுகள் கொள்ள, மேலே கிரீவம், சாலை சிகரம். கருவறைக் கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தின் தென், வடசுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

உட்புறம்

7. 40 மீ. பக்கமுடையதாக விளங்கும் பெருமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் திசைக்கிரண்டாய் உள்ள முச்சதுர இரு கட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்க, மேலே கற்பலகைகள் பாவிய கூரை. தென், வடசுவர்களை ஒட்டிப் பக்கத்திற்கிரண்டாக அதே அமைப்பிலான அரைத்தூண்கள். தூண் சதுரங்களில் அத்தூண்களை வழங்கிய அடியவர்களின் சிற்பங்கள். சிற்றாடையும் இடைக்கட்டும் நீள்செவிகளும் வணங்கிய கைகளுமாய் விளங்கும் அப்பெருமக்களில் ஒருவர் தலைப்பாகை அணிந்துள்ளார். சிலர் தலைமுடியைக் கொண்டையாக முடித்துள்ளனர். சில சதுரங்கள் காளை, யாளி முதலிய விலங்குருவங்களைப் பெற்றுள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் மேற்குப் பார்வையாக பைரவரும் தென்மேற்குப் பகுதியில் கிழக்குப் பார்வையாக முருகனும் உள்ளனர்.

இரண்டு முச்சதுர இருகட்டுத் தூண்களுடன் 2. 50 மீ. நீளம், 2. 10 மீ. அகலத்துடன் உள்ள இடைநடையின் தென், வடசுவர்களில் அரைத்தூண்கள். முகமண்டப வாயிலை எண்முக அரைத் தூண்கள் தழுவ, வாயிலின் இருபுறத்துள்ள காவலர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தென்வடலாக 2. 60 மீ. நீளம், கிழக்கு மேற்காக 2. 10 மீ. அகலம் கொண்டு தூண்களின்றி எளிமையாக உள்ள முகமண்டபத்தின் சுவர்களும் கூரையும் வெறுமையாக அமைய, கருவறை வாயிலின் நிலைக்கால்களில் பாம்புப்படமும் தாமரைவரியும். கருவறையில் வரகுணீசுவரர் சதுர ஆவுடையாரின் மீது உருளைப்பாணத்துடன் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார்.

நந்திமண்டபம், பலித்தளம்

இறைவன் திருமுன் பெருமண்டபக் கிழக்குச் சுவர்ச் சாளரத்தைப் பார்த்தவாறு சிறு மேடை மீதெழும் நான்கு தூண்கள் கூரை தாங்கும் கற்பந்தலில் நந்தி அமர்ந்துள்ளது. அதன் பின்னுள்ள பலித்தளம் பாதபந்தத் தாங்குதளக் கட்டமைப்பில் சிறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 1. 80 மீ. உயரமுடைய அப்பலித்தளத்தின் பட்டிகையிலும் குமுதத்திலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தொடர்கள் இப்பகுதியிலிருந்து சுவடழிந்த குலோத்துங்க சோழ விண்ணகரத்தை வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்கின்றன.7 பலித்தளத்தின் கிழக்குக் கண்டத்தில் சங்கூதும் பூதங்கள் இரண்டும் அவற்றிற்கிடையில் இலலிதாசனப் பிள்ளையாரும் செதுக்கப்பட்டுள்ளனர்.

அம்மன்கோயில்

இறைவன் கோயிலுக்கு முன்னிருக்குமாறு அதன் வடபுறத்தே தெற்குப்பார்வையில் அமைந்துள்ள அம்மன் திருமுன் கருவறையும் முகமண்டபமும் கொண்டுள்ளது. சமகாலக் கட்டுமானங்களான இவ்விரண்டுமே உபானத்தின் மீதமைந்த பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழுகின்றன. நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவரில் கருவறைப்பகுதியில் முப்புறத்தும் வெறுமையான கோட்டங்கள். தூண்களின் மேலுள்ள தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் வெறுமையாக உள்ளன. கோட்டங்களை எளிய வளைவுத் தோரணங்கள் தலைப்பிட்டுள்ளன.

கருவறையில் நீள்சடைமகுடமும் தோள், கை வளைகளும் சரப்பளியும் பட்டாடையும் பெற்று சமபங்கத்தில் நிற்கும் இறைவியின் வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை அருட்குறிப்பிலும் உள்ளன. பின்கைகளில் வலப்புறம் அங்குசம், இடப்புறம் தாமரை. கச்சற்ற மார்பகங்களுடன் விளங்கும் தேவியின் வலச்செவி பனையோலைக் குண்டலம் கொள்ள, இடச்செவியில் மகரகுண்டலம்.

பிள்ளையார் திருமுன்

வளாகத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள பிள்ளையார் திருமுன் அண்மைக் காலக் கட்டமைப்பு. கருவறை மட்டுமே கொண்டுள்ள அதனுள் கரண்டமகுடம், சரப்பளி, உதரபந்தம், சிற்றாடையுடன் இலலிதாசனத்திலுள்ள இடம்புரிப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. இரு தந்தங்களும் உடைந்துள்ளன.

கோயில் சிற்பங்கள்

பைரவர்

முன்கைகளில் முத்தலைஈட்டியும் தலையோடும் கொண்டு சமபங்கத்தில் நிற்கும் பைரவரின் பின்கைகளில் உடுக்கை, பாசம். சுடர்முடி, கோரைப்பற்கள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, உதரபந்தம் பெற்று வெற்றுடலராய் நிற்கும் பைரவரின் இடுப்பைப் படமெடுத்த 2 பாம்புகள் சுற்றியுள்ளன. அவர் பின் திறந்த வாயுடன் அவரது ஊர்தியான நாய்.

முருகன்

மயில் பின் நிற்க, அதன் முன் சமபங்கத்திலுள்ள முருகனின் வலப் பின் கை உடைந்துள்ளது. இடப் பின் கையில் வஜ்ரம். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், வீரச்சங்கிலி, உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை, கழல்கள் அணிந்துள்ள அவரது முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை கடியவலம்பிதத்தில்.

சண்டேசுவரர்

முகமண்டபத்தின் வடபுறத்தே சுகாசனத்திலுள்ள சண்டேசுவரர் பின்னாளைய சிற்பமாகும். வலக்கையில் மழுவுடன், இருபுறமும் விரிந்து நடுவில் முடிச்சிடப்பெற்ற சடைப்பாரம், பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை பெற்றுள்ள அவரது இடக்கை தொடைமீதுள்ளது.

கல் சாளரம்

வரகுணீசுவரத்தின் பெருமண்டபக் கிழக்குச் சுவரருகே மண் ணில் புதைந்த நிலையில் கிடைத்த கருங்கல் சாளரம் அச்சுவரில் இடம்பெற்றிருந்து பெயர்ந்ததாகும். ஏறத்தாழச் சதுர அமைப்பி லுள்ள அதன் உயரம் 79 செ. மீ., அகலம் 77 செ. மீ. மேலிருந்து கீழாகவும் பக்கவாட்டிலும் பட்டைகள் பெற்றுள்ள இச்சாளரத் தில் அவற்றுக்கு இடைப்பட்டு மூன்று வரிசைகளாக ஒன்பது துளைகள் உள்ளன. பாடலமைப்பில் இச்சாளரத்தின் மேல், கீழ்ப் பட்டைகளில் பொறிக்கப்பட்டுள்ள 11ஆம் நூற்றாண்டு எழுத் தமைதியிலுள்ள சிதைந்த கல்வெட்டு மண்டபத்தை வரகுண விச்சார மண்டபமாய்க் குறிப்பதுடன், கோயிலை, ‘நாலமதிரா புகழுய்ய வந்தான் தொல்காவலற்கோர் ஆலயமாக’ச் சுட்டுவது கவனிக்கத்தக்கது.8



தனிச்சிற்பங்கள்

வரகுணீசுவரத்தின் பின்னுள்ள மரத்தடியில் முதல் ஆய்வின் போது பாதி புதைந்த நிலையில் கொற்றவை, தவ்வைத்தேவி சிற்பங்களும் நின்றநிலை விஷ்ணு, கருடாசன மார்க்கண்டேயர், மண்டியிட்ட நிலமகள் சிற்பங்களும் இருந்தன. அவை ஆய்வுக்குப் பிறகு சிராப்பள்ளி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கொற்றவை

69 செ. மீ. உயரமுள்ள கொற்றவைச் சிற்பத்தின் பின்கைகள் சிதைந்துள்ளன. வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. சிற்பம் பெரிதும் சிதைந்திருப்ப தால் கரண்டமகுடம் தவிர வேறு ஆடை, அணிகலன்களை அடை யாளப்படுத்த முடியவில்லை. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் இறைவி யின் இருபுறமும் அமர்நிலையிலுள்ள இரண்டு ஆடவர்களின் செயற்பாட்டையும் சிதைவின் காரணமாக அறியக்கூடவில்லை.

தவ்வைத்தேவி

ஸ்ரீறா(ஜ)கேஸரி என்ற எழுத்துப் பொறிப்புடன் காணப் படும் தவ்வைத்தேவியின் தொகுதி 85 செ. மீ. உயரம், 81 செ. மீ. அக லம் பெற்றுள்ளது. இடக்கையில் சிறு பானை கொண்டு, இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் தவ்வை யின் வலக்கைப் பொருள் சிதைந்துள்ளது. கச்சற்ற மார்பகங்களும் கால்கள் தெரியும்படியாகக் கீழ்ப்பாய்ச்சிய நடுப்பட்டை கொண்ட பட்டாடையும் பெற்றிருக்கும் அம்மையின் முகம் சிதைந்துள் ளது. தேவியின் வலப்புறத்துள்ள மகன் நந்திகேசுவரனும் இடப் புறத்துள்ள மகள் அக்னிமாதாவும் உத்குடியாசனத்தில் இறைவிக்காய் ஒருக்கணித்துள்ளனர். பட்டாடையணிந்துள்ள அக்னிமாதாவின் இடுப்புக்கு மேற்பட்ட உடற்பகுதி ஒருக்கணிப்பு நிலையிலும் நேர்நோக்கியுள்ளது.

விஷ்ணுதொகுதி

1. 75 மீ. உயரம், 76 செ. மீ. அகலம் கொண்ட அழகிய விஷ்ணுவுடன், கருடாசனத்தில் அமைந்த மார்க்கண்டேயர், முழங்காலிட்டுள்ள நிலமகள் சிற்பங்கள் இணைந்து காணத்தக்கன. தலைச் சக்கரத்துடனான கிரீடமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், முடிச்சிடப்பட்ட அரைக்கச்சினால் இடையில் இறுக்கப்பட்டுள்ள கச்சம் வைத்த பட்டாடை அணிந்துள்ள விஷ்ணுவின் வலப் பின் கையில் எறிநிலைச் சக்கரம், இடப் பின் கை உடைந்துள்ளது. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பு காட்ட, இடக்கை கடியவலம்பிதத்தில்.

வலமுழங்கால் தரையிலிருக்க, இடக்காலைக் குத்துக்காலாக்கி இடக்கையை அதன் மேல் இருத்தி, கருடாசனத்திலுள்ள மார்க்கண்டேயர் சடைமகுடம், குண்டலங்கள் பெற்றுள்ளார். அவரது வலக்கைப் பொருள் மலராகலாம். இரு முழங்கால்களும் தரையில் பாவுமாறு மண்டியிட்டுள்ள நிலமகளின் கைகள் சிதைந்த நிலையில் மார்பருகே உள்ளன. பிற இடங்களில் கிடைக்கும் விஷ்ணு தொகுதிகளோடு ஒப்பிடுகையில் இறைவியின் கைகள் வணக்க முத்திரையில் இருப்பதாகக் கொள்ளலாம்.9 இருவருமே இறைவனுக்காய் ஒருக்கணித்திருந்தாலும் இடைக்கு மேற்பட்டு நேர்ப்பார்வையராய் உள்ளனர்.



தூண்கள்

2015இல் இப்பகுதியில் இரண்டாக உடைந்த கல்வெட்டுப் பலகை கிடைத்த தகவலறிந்து மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது, கோயிலின் வடபுறத்தே இரண்டு முச்சதுர இருகட்டுத் தூண்களைக் காணமுடிந்தது. அவற்றுள் வெறுமையான ஒன்று இருதுண்டுகளாக உடைந்திருந்தது. 1. 67 மீ. நீளம், 27 செ. மீ. அகலமுள்ள மற்றொரு தூண் அதன் முச்சதுரங்களின் அனைத்து முகங்களிலும் சிற்பங்களைக் கொண்டிருந்தது. பாகவதக் காட்சிகளாக ஆலிலைக்கண்ணன், குழலூதும்கண்ணன், வெண்ணெய் உண்ணும் கண்ணன், இருபாதங்களும் தொட்டிருக்குமாறு குழந்தை அமர்வில் விஷ்ணு,10 வில் - அம்புடன் இராமர் ஐந்து சதுரங்களில் அமைய, ஒன்றில் தாமரைப்பதக்கம். புலி, யாளி, யானை, மீன் உள்ளிட்ட உயிரினங்கள் நான்கு சதுரங்களில் அமைய, இரண்டின் வடிவங்கள் பொரிந்துள்ளன. இத்தூண்களின் அமைப்பும் சிற்பயிருப்பும் வரகுணீசுவரம் கோயில் தூண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. இவை இங்கிருந்து சுவடழிந்த விஷ்ணு கோயிலின் தூண்களாகலாம்.

சுவடழிந்த சிவன் கோயிலின் எச்சங்கள்

வரகுணீசுவரத்திலிருந்து ஏறத்தாழ அரைக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள செங்குளத்தில் (இங்குக் குளம் இருந்து வறண்டுபோனதாக ஊரார் கூறுகின்றனர்) இலிங்கம், நந்தி, கட்டடச் சுவடுகள் உள்ளன. இலிங்கத்தைச் சுற்றிக் காணப்படும் கல்தடங்கள் 4 மீ. பக்கமுள்ள கருவறையும் அதையடுத்து ஏறத்தாழ 3. 4 மீ. பக்கமுடைய முகமண்டபமும் கொண்ட சிவன் கோயில் அங்கிருந்து அழிந்தமை சுட்டுகின்றன. இம்முகமண்டபப் பகுதியை அடுத்தே நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

சுகாசன விஷ்ணு

இக்குளத்தின் அருகிலுள்ள புதரில் கண்டறியப்பட்ட விஷ்ணுவின் சிற்பம் பிற்சோழர் காலத்தது. கிரீடமகுடம், குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி சுகாசனத்திலுள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை கடகத்தில். ஊர்மக்களால் ஊமைத்துரை என்றழைக்கப்பட்ட 1. 04 மீ. உயரம், 43 செ. மீ. அகலம் கொண்ட இச்சிற்பத்தை11 5. 5. 2015 களஆய்வில் காணக்கூடவில்லை.

தவ்வைத்தேவி

இப்பகுதியில் கிடைத்த தவ்வைத்தேவித் தொகுதி கழுத்தளவு புதைந்திருந்தமையால் அழிவினின்றும் தப்பியுள்ளது. 1. 24 மீ. உயரம், 1 மீ. அகலம் கொண்ட இத்தொகுதியில், நடுவில் அமர்ந்துள்ள தவ்வையின் இடையை மெல்லிய கச்சம் வைத்த பட்டாடை அலங்கரிக்கிறது. கரண்டமகுடம், குண்டலங்கள், தோள், கை வளைகள் அணிந்துள்ள இறைவியின் கால்களில் தாள்செறிகள். இடக்கையை இருக்கையில் இருத்தியுள்ள தேவியின் மார்பருகே உள்ள வலக்கை சிதைந்துள்ளது. இறைவியின் இருபுறத்தும் உத்குடியில் தேவியை நோக்கி ஒருக்கணித்துள்ள மகன் நந்திகேசுவரனும் மகள் அக்னிமாதாவும் சிதைவின்றிக் காட்சிதருகின்றனர். கரண்டமகுடம், குண்டலங்கள், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள அக்னிமாதாவின் இடக்கை இருக்கை மீதிருக்க, வலக்கையில் மலர். இவ்வம்மையும் இடைக்கு மேற்பட்ட உடற்பகுதியை நேர்ப்பார்வையில் இருத்தியுள்ளார். கரண்டமகுடம், கைவளைகள், கணுக்கால் பற்றிய பட்டைக் கழல்கள், சிற்றாடை எனக் காட்சிதரும் நந்திகேசுவரரின் வலக்கைத் தடி சிதைந்துள்ளது. இடக்கை பத்திமை நிலையில் வாய் புதைக்கும் மெய்ப்பாட்டில். இறைவியின் இருபுறத்தும் கொடித்தண்டுகள். வலப்புறக் கொடித்தண்டில் காகம். இடப்புறக் கொடித்தண்டிலுள்ள பறவையை அடையாளப்படுத்த முடியவில்லை.





பிள்ளையாரும் பலித்தளங்களும்

விஷ்ணு சிற்பம் கிடைத்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் சிதைந்த பிள்ளையார் சிற்பமும் இரு பலித்தளங்களும் கிடைத்தன. அவை செங்குளம் சிவன்கோயிலுக்குரியனவாகலாம்.



பிடாரித்தோப்பு

வரகுணீசுவரத்தின் வடகிழக்கில் தென்னைமரங்களாலும் காட்டுச்செடிகளாலும் சூழப்பட்டுள்ள நிலப்பகுதியே பிடாரித் தோப்பு. இங்குச் சிதைந்த நிலையில் எழுவர்அன்னையர் சிற்பங்களுள் ஆறு உள்ளன. அவற்றுள் மூன்று கைகளிழந்து முகம் சிதைந்துள்ளமையால் அடையாளப்படுத்த முடியவில்லை. நான்முகி, கௌமாரி, இந்திராணி ஆகிய சிற்பங்களை மட்டுமே மூன்று முகங்கள், கைக்கருவிகள் கொண்டு கண்டறிய முடிந்தது. இவற்றின் அருகே இலலிதாசனத்தில் தலைப்பலிச் சிற்பம்.12 குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடையுடன் இடக்கையால் தலைமுடியைப் பிடித்தபடி வலக்கையால் கழுத்தை அறுத்துக் கொள்ளும் ஆடவரைச் சிற்பம் படம்பிடிக்கிறது. இச்சிற்பத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள பொரிந்த கல்வெட்டு அவரைக் குல்லையன் என்று அடையாளப்படுத்துகிறது.13

ஐயனார் தோப்பு

வரகுணீசுவரத்திற்குத் தென்கிழக்கில் காட்டுச்செடிகள் சூழச் சுடுமண் குதிரைகள், யானைகளுக்கிடையில் இரண்டு ஐயனார் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வழிபாட்டில் உள்ளது. மற்றொன்று மண்ணில் புதைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. வழிபாட்டிலுள்ள ஐயனார் காலத்தால் பிற்பட்டவர். இருபுறமும் பாயும் குதிரைகளும் நடுவில் அமர்நிலை யானையும் கொண்ட முகப்புள்ள இருக்கையில் கிழக்குப் பார்வையராய் மகாராஜ லீலாசனத்தில் வலமுழங்காலைத் தொட்டவாறு வலக்கையை நெகிழ்த்தி இடக்கையைத் தொடையிலிருத்தியுள்ள பின்னவர் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், பட்டாடை பெற்றுள்ளார். புதைந்துள்ள ஐயனார் மகாராஜலீலாசனத்தில் இடமுழங்கால் மேல் இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையை இருக்கையில் இருத்தியுள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள இவர் பிற்சோழர் காலத்தவராகலாம்.



செட்டிஊருணிப்பட்டி

அழுந்தூரிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது செட்டிஊருணிப்பட்டி. ஊரின் வடபுறத்தில் குளமும் அதன் கரையொட்டிச் சிறு மண்டபமும் உள்ளன. மண்டபத்தின் முகப்பை நான்கு தூண்களும் உட்புறத்தை எட்டுத் தூண்களும் தாங்குகின்றன. மண்டப மேற்குச்சுவரின் கீழ்ப்பகுதியிலுள்ள மாடஅமைப்பிலான சிறிய கருவறை வெறுமையாக உள்ளது. அதன் மேலுள்ள சுவர்ப்பகுதியில் யானைத்திருமகள் சிற்பம். வரகுணீசுவரர் கோயில் உலாத்திருமேனிகள் வந்து தங்கும் இடமாக அம்மண்டபம் இருந்ததாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர். மண்டபத்தின் எதிரே உள்ள தனியார் நிலத்தில் எல்லைக்கல்லாக நிறுத்தப்பட்டிருந்த கல்வெட்டுப் பலகை உரிமையாளர் அனுமதியுடன் மண்டபத்திற்குக் கொணரப்பட்டுப் படித்துப் படியெடுக்கப்பட்டது.14

குறிப்புகள்

1. சிராப்பள்ளி மேலூர்ச் சாலையிலிருந்து அழுந்தூருக்குச் சாலை இல்லாதிருந்த 1985இல், ஏறத்தாழ 3 கி. மீ. தொலைவு புதர் மண்டிய பகுதிகளைக் கடந்து, மக்கள் வரத்து இல்லாது பாழடைந்திருந்த அழுந்தூர்க் கோயில் வளாகத்தைப் பார்வையிட்ட நாள் என்றும் நினைவிலிருக்கும். இங்கும் சுற்றுப் பகுதிகளிலும் ஆய்வுகள் முடித்து அழிந்தியூர் வரகுணீசுவரத்தை வழிபாட்டிற்கு மீட்டபோதுதான் அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. விசுவநாதன் முயற்சியில் மேலூர்ச் சாலையிலிருந்து அழுந்தூர்வரை சாலை அமைக்கப்பட்டது. அதைக் குறிக்கும் அரசின் கல்வெட்டுப் பலகை இன்றும் கோயிலருகே உள்ளது. தினமணி 4. 9. 1985, தினமலர் 18. 9. 1985.
2. இரா. கலைக்கோவன், ‘அழுந்தூர் ஒரு வரலாற்று வைகறை’. 1985இன் இறுதியில் எழுதப்பெற்ற இக்கட்டுரை, ஆய்வுகள் முழுமையுற்ற நிலையில் உரிய திருத்தங்கள், இணைப்புகளுடன் 1988 - 89இல் தொடர் கட்டுரையாகப் பதிவானது. மு. நளினி, இரா. கலைக்கோவன், ‘வைகறை விடியலில் வரலாற்று அழுந்தூர்’, செந்தமிழ்ச் செல்வி, செப்டம்பர் 1988 - பிப்ருவரி 1989. இக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முதுகலை வரலாற்று மாணவி செல்வி சரசுவதி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வழிகாட்டலில் தம் முதுகலை ஆய்வேட்டை நிறைவு செய்தார். சூ. ளுயசயளறயவால, ஹசரடஅபைர ஏயசயபரnளைஎயசய கூநஅயீடந யவ ஹணாரனேரச, ஆ. ஹ. னுளைளநசவயவiடிn ளுரbஅவைவநன வடி க்ஷhயசயவானையளயn ருniஎநசளவைல, 1986.
3. தினமணி 16. 2. 1986, தினமலர் 24. 2. 1986, கூhந ழiனேர 21. 2. 1986, னுச. சு. முயடயமைமடிஎயn, ஹசஉhயநடிடடிபiஉயட னுளைஉடிஎநசநைள யவ ஹடரனேரச, ஐனேயைn நுஒயீசநளள 1. 3. 1986.
4. மாலைமலர் 12. 5. 1988, கூhந சூநற ஐனேயைn நுஒயீசநளள 20. 5. 1988.
5. தினமணி 18. 4. 2015. ‘இது குழி கோல்’ என்ற சோழர் கால எழுத்துப் பொறிப்புடன் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் விமானத் தாங்குதளத் தென்பகுதித் துணைக்கம்பில் 90 செ. மீ. அளவில் ஒரு நிலஅளவுகோல் வெட்டப்பட்டுள்ளது. காண்க: அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, ப. 59.
6. அழுந்தூரில் இந்த அளவுகோலை 19. 4. 2015 களஆய்வில் இந்நூலாசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் மு. நளினி கண்டறிந்தார். தினமணி 11. 5. 2015, கூhந ழiனேர 14. 5. 2015.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் தச்சுமுழம் என்ற பொறிப்புடன் 86 செ. மீ. நீள அளவுகோலைத் திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலிலும் (தினமலர் 8. 9. 1991) கருடமண்டப முழம் என்ற பொறிப்புடன் 73 செ. மீ. நீள அளவுகோலை விராலிமலை முருகன் கோயில் கோபுரத்திலும் (ஐனேயைn நுஒயீசநளள 11. 9. 1991) கல்வெட்டுப் பொறிப்பற்ற 73 செ. மீ. நீளத்திலமைந்த தச்சமுழத்தைத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் இராஜராஜன் திருவாயில் தாங்கு தளத்திலும் (மாலை முரசு 17. 3. 1991) கண்டறிந்துள்ளமை இங்கு எண்ணத்தக்கது. கல்வெட்டுப் பொறிப்பற்ற ஆனால், ஏறத்தாழ இதே அளவுகளில் அமைந்த அளவுகோல்கள் சிலவற்றை மைய ஆய்வர்கள் முனைவர் அர. அகிலா, வே. கல்பகம் ஆகியோர் திருவானைக்கா நடராஜ இராஜீசுவரம் (88 செ. மீ.), பனைமலைக் கோயில் (73 செ. மீ.) உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர் (தினமணி 17. 1. 1992).
7. ஐனேயைn நுஒயீசநளள 12. 5. 2015, கூhந ழiனேர 14. 5. 2015. இரா. கலைக்கோவன், ‘தெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி’, வரலாறு டாட்காம், இதழ் எண் 122.
8. கூhந ழiனேர 21. 2. 1986, ஐனேயைn நுஒயீசநளள 12. 9. 1985. ஹசுநு 1985-86: 394. கல்வெட்டு மசிப்படியின் படத்தை அளித்துதவிய கல்வெட்டுத்துறை நண்பர் திரு. பாலமுருகனுக்கு நன்றி.
9. மாமல்லபுரம் மகிடாசுரமர்த்தினி குடைவரையில் உள்ள அனந்தசாயித்தொகுதி நிலமகள் வணக்கமுத்திரையில் மண்டியிட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது. மு. நளினி, இரா. கலைக்கோவன், மாமல்லபுரம் குடைவரைகள், பக். 98 - 100.
10. இத்தகு அமர்விலான பிள்ளையார் சிற்பங்களைச் செவல்பட்டிக் குடைவரையிலும் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலிலும் காணமுடிகிறது. மலையடிக்குறிச்சிக் குடைவரையின் முகப்புப் பதக்கத் தேவவடிவமும் இத்தகு அமர்வில் உள்ளது. மு. நளினி, இரா. கலைக்கோவன், தென்மாவட்டக் குடை வரைகள், பக். 71, 74.
11. மாலைமலர் 12. 5. 1988, ஐனேயைn நுஒயீசநளள 20. 5. 1988.
12. சிராப்பள்ளி மாவட்டத்தில் இது போன்ற தலைப்பலிச் சிற்பங்கள் நின்ற, அமர்நிலைகளில் பலவாக இந்நூலாசிரியர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் உய்யக்கொண்டான் திருமலைக் கோயிலருகிலும் உறையூர்ப் பஞ்சவர்ணேசுவரர் கோயிலருகிலும் கிடைத்தவை முற்சோழர் காலத்தவை. னுச. சூ. ளுயமேயசய சூயசயலயயேn, ஊயவயடடிபரந டிக வாந ளுவடிநே ளுஉரடயீவரசநள in வாந ஊடிடடநஉவiடிளே டிக வாந ழுடிஎநசnஅநவே ஆரளநரஅ, கூசiஉhல, 1997, யீ. 4.
13. மு. நளினி, இரா. கலைக்கோவன், ‘வைகறை விடியலில் வரலாற்று அழுந்தூர்’, செந்தமிழ்ச்செல்வி, நவம்பர் 1988.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. விசுவநாதன் இசைவுடன் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறையின் சிராப்பள்ளி மாவட்டப் பதிவு அலுவலர் திரு. அ. அப்துல்மஜீது உள்ளிட்ட அலுவலர்கள் மேற்பார்வையில், சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சீ. கீதா, திரு. இரா. இராஜேந்திரன் முன்னிலையில், அவர்தம் மாணவர்களின் உழைப்பில், அழுந்தூர் விரிவான ஆய்வுக்குக் கொணரப்பட்டதுடன், வழிபாடிழந்திருந்த கோயிலும் சீரமைக்கப்பட்டு, மீண்டும் வழிபாடு தொடங்கப்பெற்றது. இங்குக் கிடைத்த சிற்பங்கள், வரகுணீசுவரத்தின் கிழக்குச்சுவர்க் கல் சாளரம், படிக்கட்டுக் கல்லாகப் பயன்பட்ட கல்வெட்டுப் பலகை, துண்டுக் கல்வெட்டு ஆகியன சிராப்பள்ளி அருங் காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. சிற்பங்களுள் விஷ்ணு, நிலமகள், மார்க்கண்டேயர் தொகுதியும் முழுமையாகக் கிடைத்திருக்கும் சேட்டைத்தேவி சிற்பத்தொகுதியும் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுக்குரியன. வீரக்கல் உள்ளிட்ட பிற சிற்பங்கள் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டினவாகலாம். துண்டுக் கல்வெட்டுக்களை எழுத்தமைதி கொண்டு அதே காலத்தனவாகக் கொள்ளலாம்.
14. 19. 4. 2015 களஆய்வின்போது செட்டிஊருணிப்பட்டிக் கல்வெட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதே மண்டபத்தில் இப்போதும் இக்கல்வெட்டுப் பாதுகாப்பாக உள்ளது.
- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.