http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160

இதழ் 160
[ டிசம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

அழுந்தூர் வரகுணீசுவரம் -1
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 1
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
ஜப்பானியப் பழங்குறுநூறு - 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 2 (தோகை உலரும் வரை)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
இதழ் எண். 160 > இலக்கியச் சுவை
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 5
மா.இராசமாணிக்கனார்

அரசர் வள்ளன்மை

தமிழகத்தை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தரும் பாரி, காரி, அதிகன் போன்ற சிற்றரசரும் பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப் போலத் தம்மை நாடிவந்த இயற்றமிழில் வல்ல புலவரையும், இசைத்தமிழில் வல்ல பாணரையும், நாடகத் தமிழில் வல்ல கூத்தரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர்; அருகிலிருந்து உணவு அருந்தினர்; உயர்ந்த ஆடைகளை வழங்கினர்; அரண்மனையிலேயே பலநாள் இருக்கச் செய்தனர்; இறுதியில் வேண்டிய பரிசிலை நல்கி விடையளித்தனர்.

இங்ஙனம் மன்னரால் மதிப்புப்பெற்ற புலவர் பெருமக்கள் அவர்களைப் பாராட்டிப் பாடிய பாடல்கள் பல. அவற்றுட்சில, புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் இடம் பெற்றுள்ளன. நூறு அடிகளுக்கு மேற்பட்ட நெடும்பாடல்கள் சில, பத்துப்பாட்டுள் இடம்பெற்றுள்ளன. கரிகாலனை வியந்து பாடிய பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, நல்லியக்கோடனை வியந்து பாடிய சிறுபாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைப் பாராட்டிப் பாடிய பெரும்பாணாற்றுப்படை, நெடுஞ்செழியனைப் பாராட்டிப் பாடிய மதுரைக்காஞ்சி, நன்னனைப் போற்றிப்பாடிய கூத்தராற்றுப்படை என்பன, அரசர் முத்தமிழ்வாணரை வரவேற்று உபசரித்த முறையை நன்கு புலப்படுத்துவனவாகும். இனி இவற்றுள் ஒவ்வொன்றையும் தனித்தனியே காண்போம்.

கரிகாலன் உபசரிப்பு

பொருநர் என்பவர், தடாரி என்னும் இசைக்கருவி கொட்டிப்பாடும் இசைவாணர். அவருள் ஒருவன் தன் வறுமையைப் போக்க விழைந்து, கரிகாலன் அரண்மனையை வைகறையில் அடைந்தான்; தனது தடாரியைக் கொட்டிக் கரிகாலனை வாழ்த்தினான். அவ்வளவில் கரிகாலன் அவன்முன் தோன்றினான்; முன்னரே தன்னோடு பழகிய நண்பனை வரவேற்பது போலப் பொருநனை வரவேற்றான்; உபசார மொழிகளைக் கூறினான்; தனக்குச் சிறிது தொலைவில் அவனை இருக்கச் செய்தான்; அவனை அருள் உணர்ச்சியோடு நோக்கினான்; ஈரும் பேனும் குடியிருந்து அரசாண்ட பொருநனது கந்தலாடையை அகற்றினான்; ‘இழை போன வழி இது’ என்று கண்டறிய இயலாத நுண்ணிய நூலால் நெய்யப்பட்ட பூத்தொழில் அமைந்த துகிலைக் கொடுத்து உடுக்கச் செய்தான். அவ்வளவில் பாட்டாலும் கூத்தாலும் சொல்லாலும் அரசனை மகிழ்விக்கும் அழகிய பணிப்பெண்டிர் பொருநனது களைப்பை நீக்கத்தக்க மதுவைப் பொன்வட்டிலில் வார்த்துக் கொடுத்துக் குடிக்கச் செய்தனர்.

பின்பு பொருநன் உறங்கிக் கண் விழித்தான். வறுத்த ஆட்டிறைச்சித் துண்டங்களும், சுட்ட இறைச்சித் துண்டங்களும், முல்லை அரும்பினை ஒத்த அரிசிச்சோறும் படைக்கப்பட்டன. அவற்றோடு, பரலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக்கறிகளும் படைக்கப்பட்டன. கரிகாலன், உடன் இருந்து, இவற்றையெல்லாம் உண்ணும்படி பொருநனை உபசரித்தான். இங்ஙனம் நாள்கள் சில கழிந்தன. ஒருநாள் அப்பொருநன் தந்து ஊர் செல்ல விடை கேட்டான். அவ்வளவில் கரிகாலன், “எனது கூட்டத்தை விட்டுப்போக விரும்புகின்றாயோ?” என்று சினந்தவன் போலச் சொல்லிக் களிற்றோடு கன்றையும் பிடியையும் அவனுக்கு வழங்கினான்; அவனுக்குப் பொற்றாமரை மலரை வழங்கினான்; வேண்டும் பரிசிலை நல்கினான்; தன் காலாலே ஏழடி பின்னே வந்து வழியனுப்பினான் (பொருநராற்றுப்படை, அடி 73-168).

நல்லியக்கோடன் உபசரிப்பு

ஓய்மானாட்டை ஆண்ட நல்லியக்கோடனது அரண்மனை வாயில் புலவர்க்கும் பொருநர்க்கும் பாணர்க்கும் கூத்தர்க்கும் அந்தணர்க்கும் தடையின்றித் திறந்துவிடப்பட்டது. அவர்கள் எந்த நேரத்திலும் அவ்வாயிலுள் தடையின்றிச் செல்ல வசதியளிக்கப்பட்டது (சிறுபாணாற்றுப்படை, அடி 203-206). நல்லியக்கோடன் இசைக்கலையில் வல்லவன். அவன் தன்னிடம் பரிசில் பெற விரும்பி வந்த பாணனை மகிழ்வுடன் வரவேற்றான்; மூங்கில் ஆடையை உரித்தாலொத்த மாசில்லாத உடையினை வழங்கி, உடுக்கச் செய்தான்; கள் தெளிவைத் தந்து அவனது வழி நடந்த களைப்பைப் போக்கினான்; வீமபாகத்தில் சிறந்த சமையற்காரன் சமைத்து வைத்த உணவுப் பொருள்களைப் பெரிய பொற்கலங்களில் படைத்தான்; பாணனுடைய பிள்ளைகளுக்குச் சிறிய பொற்கலங்களில் உணவைப் படைத்தான். தான் நின்றபடி இருந்து அவர்களை உபசரித்து உண்பித்தான்; தான் தன் பகைவனை வென்று கொண்டு வந்த பொன்னையும் பொருளையும் பாணனுக்கு வழங்கினான்; குதிரைகளைத் தேரில் பூட்டி அத்தேர்மீது பாணனை அமரச்செய்து வழிகூட்டி அனுப்பினான் (சிறுபாணாற்றுப்படை, அடி 235-261).

இளந்திரையன் உபசரிப்பு

காஞ்சி நகரத்து அரண்மனையில் வாழ்ந்த இளந்திரையன், தன்னை அடைந்த பெரும்பாணனது கந்தலாடையை அகற்றினான்; பாலாவியை ஒத்த நூலாற்செய்த துகிலினை உடுக்கச் செய்தான்; பண்பட்ட மடையன் தயாரித்த பலவகை இறைச்சித் துண்டங்களையும் செந்நெல் அரிசிச்சோற்றையும் படைத்து உண்பித்தான்; பாணனுடைய பிள்ளைகளுக்குச் சிறிய வெள்ளிக்கலங்களில் உணவைப் படைத்தான்; முகமலர்ச்சியுடன் தன் நின்றபடி இருந்து உண்பித்தான்; பாணனது தலைமுடியில் பொற்றாமரையைச் சூட்டினான்; பொன்னரி மாலையை விறலியர்க்கு வழங்கினான்; நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பெரும்பாணனை அமரச்செய்து, வேண்டும் பரிசிலை ஈந்து வழியனுப்பினான் (பெரும்பாணாற்றுப்படை, அடி 467-493)

நெடுஞ்செழியன் உபசரிப்பு

பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னை நாடிவந்த பொருநர்க்குக் களிறும் பிடியும், கன்றும் கொடுத்தான்; பொன்னாற்செய்த தாமரைப்பூவைச் சூட்டினான்; விலையுயர்ந்த வேறு அணிகலன்களை வழங்கினான் (மதுரைக்காஞ்சி, அடி 100-105); பாணர்க்குப் பலவகை இறைச்சித் துண்டங்களையும், பலவகைப்பட்ட சோற்றையும், இனிய மதுவையும் வழங்கினான்; விறலியர்க்குத் தொடிகளை அணிவித்தான்; பாணர் மகிழும்படி யானைகளை வழங்கினான்; தான் பகைவர் அரண்களிற்கொண்ட பல பொருள்களையும் கொடுத்தான் (மதுரைக்காஞ்சி, அடி 211-220); அப்பாண்டியன் தனது அரண்மனையில் வைகறையில் வந்து திரண்ட அகவர்க்குத் (அழைத்துப் புகழ்பவர்) தேரையும் குதிரைகளையும் வழங்கினான் (மதுரைக்காஞ்சி, அடி 223-224).

பாண்டியன் நாள்தோறும் தனது நாளோலக்க மண்டபத்திலிருந்து, “புலவர் வருக, பாணர் வருக, பாணிச்சியர் வருக, கூத்தர் வருக” என்று ஒவ்வொருவராக அழைத்து, அவர்க்கும் அவரால் பாதுகாக்கப்பெற்ற அவர் குடும்பத்தினர்க்கும் தேர்களையும் யானைகளையும் வழங்கினான்; இறைச்சி, மது, பொருக்கறிகள் முதலிய உணவுப்பொருள்களை விருந்தாக வைத்தான் (மதுரைக்காஞ்சி, அடி 749-756). அம்மன்னனது அரண்மனை வாயில் முத்தமிழ்வாணர்க்கு என்றும் அடையாத வாயிலாய் இருந்தது (மதுரைக்காஞ்சி, அடி 747-748).

நன்னன் உபசரிப்பு

நன்னன் பகைவரை வென்று, அவர் திறையாகத் தந்த பேரணிக்கலங்களைப் புலவர், பாணர், கூத்தர், சூதர், மாகதர் முதலியோர்க்கு வழங்கினான்; மழைபோலப் பொன்னை வாரி வழங்கினான். பருவம் பொய்யாத மேகம் பின்னரும் பெய்யுமாறுபோல மேன்மேலும் குறையாமல் வழங்கினான் (மலைபடுகடாம், 70-76). அப்பெருமகன் தன்னை நாடிவந்த கூத்தரை, “நீவிர் என்மீதுள்ள அன்பினால் இங்கு வந்ததே சாலும்!” என்று உபசரித்தான்; முகமலர்ந்து அவர்களை அன்போடு பார்த்தான்; இழைபோன இடம் அறியாத நுண்ணிய நூலாற்செய்த கலிங்கத்தை உடுக்கச் செய்தான்; அவர்களைப் பல நாள் தன்னுடன் இருத்தினான்; முதல்நாள் போன்ற விருப்பத்தோடே அவர்களை நன்கு நடத்தினான்; கூத்தர் தலைவனுக்குப் பொற்றாமரையைச் சூட்டினான். அவனுடன் சென்ற விறலியர்க்குப் பேரணிகலன்களை வழங்கினான்; தேர்கள், யானைகள், ஏறுகளை உடைய பசுக்கள், குதிரைகள், பெருஞ்செல்வம் இவற்றை வழங்கி மகிழ்ச்சியோடு வழியனுப்பினான் (மலைபடுகடாம், அடி 545-575).

அரசர் கலைவாணரை உபசரித்ததிலிருந்து நாம் அறியத்தகுவன யாவை? அரசர் முதன்முதலில் வறுமை வடிவாய் இருந்த கலைஞர்களின் கந்தலாடையைக் களைந்து, உயர்ந்த புதிய ஆடையைக் கொடுப்பதையே முதற்கடமையாகக் கொண்டனர். ‘ஆடையற்ற மனிதன் அரைமனிதன்’ என்பதை அவ்வரசர் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால், கலைஞரின் மானத்தைக்காக்க முதலில் ஆடையை வழங்கினர்; அதற்குப் பின்னரே அவர்தம் களைப்பைப் போக்க இனிய குடிநீரை வழங்கினர்; களைப்பு நீங்கிய பின்பு அறுசுவை உண்டியைத் தாம் நின்று உண்பித்தனர்; அவர்களைத் தம் சுற்றத்தாரெனக் கருதி உபசரித்தனர். நாட்டின் உயிர்நாடி கலையே என்பதையும், கலை வாழ்ந்தால்தான் குடிமக்களின் உள்ளம் புண்படும் என்பதையும், அக்கலைக்குக் காவலர்களான புலவர், பாணர், கூத்தர் என்பார் வறுமையின்றி வாழ்ந்தால்தான் கலை வாழும் என்பதையும் தமிழகத்து அரசர் தெளிவுற உணர்ந்திருந்தனர்; ஆகவே, கலைவாணரை ஒல்லும் வகையாலெல்லாம் ஓம்பி வந்தனர்.

குடிமக்கள் உபசரிப்பு

இங்ஙனம் முத்தமிழ்வாணரைத் தமிழரசர் மட்டும் உபசரிக்கவில்லை; அவர்தம் குடிமக்களும் உபசரித்தார்கள். நன்னனைக் காணச் சென்ற கூத்தர்க்கு அவனது மலைநாட்டு முல்லை நிலத்தில் இடையர் மகளிர் மனமகிழ்ச்சியோடு பாலை வழங்கினர்; தமக்கென்று சமைத்திருந்த பாற்சோற்றை வழங்கினர்; ஆட்டுத் தோற்படுக்கையில் படுக்க வைத்தனர். கூத்தர், நன்னனது நாடுகாக்கும் காவலரைக் கண்டு தாம் நன்னனைக் காணப்போவதாகக் கூறினர். உடனே அக்காவலர் அவர்களுக்குப் பலவகை இறைச்சித் துண்டங்களையும் கிழங்குகளையும் வழங்கி உண்பித்தனர்; அவர்கள் செல்லவேண்டிய வழியை விளக்கிக் கூறினர் (மலைபடுகடாம், அடி, 407-427). இவ்விவரங்கள், அக்கால அரசர்களும் பொதுமக்களும் முத்தமிழ்வாணரிடம் கொண்டிருந்த பெருமதிப்பை நன்கு விளக்குவனவாகும்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.