http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 180
இதழ் 180 [ ஆகஸ்ட் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி சங்கக்காட்சிகள் காட்டும் பூவிலைப் பெண்டிர் இயற்கையோடியைந்த சங்கத்தமிழர் வாழ்வில், பூக்களுக்குத் தனிப்பேரிடமுண்டு. மக்கள் வாழ்வோடிணைந்த பூக்கள்பற்றி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு திணையிலும் விளைந்த பல்வகைப் பூக்கள், அவற்றின் தோற்றம், நிறம், மேலும் விளக்கிட எண்ணிலடங்கா உவமைகள், மன்னர் தொடங்கிப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளென்று அவற்றைச் சூடியவர்கள், சூடிய சூழல், பூச்சூடியதோடு மாலையாய் அணிந்தமை, பூக்களைக் கோக்க எவற்றைப் பயன்படுத்தினார்கள்- என்று தகவல் தரும் சங்கப்பாடல்கள் வெறும் பாடல்களல்ல- வரலாற்று ஆவணங்கள். சூடத்தகுந்த பூக்கள் அவரவரைச் சென்றடைந்ததெப்படி? தத்தம் வாழ்விடங்களில் மலர்ந்த மணமிகு மலர்களைக் கொய்தனர் பெண்கள்; மரங்களை உலுக்கிப் பாறைகளின்மேல் உதிர்ந்த பூக்களையும் சேகரித்தனர்; கிடைத்த மலர்களைப் பெரியவட்டிலிலிட்டு வீதிகளில் விற்கக் காலயற நடந்தனர். வீட்டுச் செலவைப் பொறுப்புடன் பகிர்ந்த அக்காலப் பெண்களின் மற்றுமொரு பொருளீட்டும் பணிதான் பூவிற்பனை. பூவிற்றவரை- ‘பூவிலைப்பெண்டு’ என்றழகிய பெயரால் அழைக்கிறார் புலவர் நொச்சி நியமங்கிழார், புறநானூற்றில். கணக்கின்றி மலர்ந்திருக்கும் பூக்கள் பற்றிய சுவையான செய்திகள் சிலவற்றையாவது பகிராமல் பூவிலைப் பெண்டுகளைப் பார்ப்பதெப்படி? காட்டில் மழைக்காலத்தில் மொட்டவிழ்ந்து மலர்ந்தது முல்லை; அகன்ற குளங்களில் மொட்டுவிட்டது தாமரை; மலையகத்துப் பைஞ்சுனையில் குவளையும் ஊர்ப்பொய்கையில் துளையுடைய நீண்ட தண்டு கொண்ட ஆம்பலும் கரும்புப் பாத்திக்கிடையில் நெய்தலும் பூத்தன. பொலிவும் அழகும் நிறைந்து பலப்பல நிறங்களில் மனம்மயக்கிய மலர்களைப் பல்வேறு சூழல்களில் நினைவுகூர்ந்த வண்ணம் பாடல்கள் புனைந்தார்கள் புலவர்கள். முல்லை மொட்டுக்கள் பூனையின் பற்களை நினைவூட்டிட, ‘பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய’ (அகம் 391) என்றும் ‘பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்’ (புறம் 117) என்றும் உவமை கூட்டி எழுதினர். பிள்ளை வெருகின் முள்எயிறு போன்ற முல்லை மொட்டு படம்- நன்றி: Vaikunda raja -https://commons.wikimedia.org/wiki/File:Jasminum_Trichotomom_Attoor.jpg கரிய பெரிய அடியினையுடைய வேங்கை மரத்தின் பொன் நிறமலர்கள் பாறைகளின்மேல் விழுந்திருந்தது, குட்டிப்புலியைப்போலத் தோன்றியது நெடுவெண்ணிலவினாருக்கு (குறுந்தொகை 47). வேங்கை மரத்தின் புதிய பூக்களைப் பறிக்கப் பேரார்வம் கொண்டு பெண்கள், அதன் கீழிருந்து ‘புலிபுலி’ என்று கத்துவார்கள். அந்த ஒலியில் பூக்கள் உதிரும் என்ற சங்கப் பெண்களின் நம்பிக்கையை- 'தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப்பூசல்’ என்று மலைபடுகடாமும், ‘ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலிபுலி என்னும் பூசல் தோன்ற’ என்று அகநானூறும் இயம்புகின்றன. இவைமட்டுமா? நிறைந்து மலர்ந்த இலவ மலர்கள், வரிசையாக ஏற்றப்பட்ட விளக்குகள்போலத் தோன்றியதைப் பதிவு செய்கிறார் ஒளவையார் (அகம் 11). முருகனின் திருப்பரங்குன்றத்தின் எழிலைப் போற்றும் பரிபாடலின் 19ஆவதுபாடலில், கீழ்வரும் பகுதியைப் பகிராமல் இருக்க முடியவில்லை- பசும்பிடி இளமுகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை, உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்; நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க மணந்தவை போல, வரை மலை எல்லாம் நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும், விடியல் வியல் வானம் போலப் பொலியும் நெடியாய், நின் குன்றின் மிசை! (பரிபாடல் 19; 75-84) மெல்லிய மொட்டுக்களுடைய பசும்பிடி, மலர்ந்த ஆம்பல், கைபோல் பூத்த காந்தள், மணங்கமழும் பெருநாணல், தழல் போன்ற வேங்கை, அழகான தோன்றி, முதிர்ந்த நறவம், அனைத்துக் காலங்களிலும் பூக்கும் கோங்கம், எதிரெதிர் விளைந்த இலவம் என்றித்தனை மலர்களால் நிறைந்திருந்தது குன்றம். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட மலர்களைக் கட்டியும் கோத்தும் நெய்தும் மாலையாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போலத் தோன்றும் மலை, விடியல் வானம்போல் ஒளிர்ந்ததாம். கைபோல் பூத்த காந்தள் படம்- நன்றி:Sathya k selvam - https://commons.wikimedia.org/wiki/File:செங்காந்தள்_மலர்_-_lily_flower_-_Gloriosa_superba.jpg ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் கண்டு மயங்கிய பூக்களின் எழிலை, இன்று நாம் படித்துச் சுவைக்கும் வண்ணம் வழங்கிச் சென்ற படைப்பாளர்களின் ஆற்றலை என்னெவென்று வியப்பது! சரி, பூக்களைப் பார்த்தோம். பூக்களைச் சேர்த்தெப்படி கட்டினார்கள்? குறிப்பேதுமுண்டா பாடல்களில்? மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடலில், பணி முடித்துத் தலைவியிடம் திரும்பிவரும் தலைவன் கடந்து வரும் பாதையை விவரிக்கிறாள் தோழி. ‘அங்கு, பசுக்களையும் காளைகளையும் கள்வர் கவராது அச்சமின்றி எதிர்த்து நின்று உயிர்நீத்த புகழுடைய வீரர்களின் பெயர் பொறித்த நடுகற்கள் இருக்கும். அவற்றை இளம் வீரர்கள் தூய்மையாகக் கழுவி, மணமிகு மஞ்சளிட்டு அழகூட்டுவார்கள். அதோடு, அம்பினால் அறுத்து உரிக்கப்பட்ட ஆத்தி மரத்தின் நார்கொண்டு தொடுத்த செங்கரந்தைக் கண்ணியையும் வைத்து வணங்குவார்கள்,’ அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி (அகநானூறு 269; 10-11) என்று அவள் கூறுகிறாள். நல்லந்துவனாரின் நெய்தல்கலியில், ஊராருக்குத் தன் காதலைத் தெரியப்படுத்த மடலேறும் தலைவன் தோழனிடம், “குறுநகையும் மின்னல் போன்ற அசைவும் கொண்டு கனவுபோல் வந்தென் உள்ளம் கவர்ந்தவளை என்னவளாக்குவதெப்படி?”, என்று துடிக்கிறான். துடித்தவன் - மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு பிணித்து, யாத்து மல்லல் ஊர் மறுகின் கண் (கலித்தொகை 138: 8-10) “நீலமணி நிறத்த மயிற்பீலியோடு அழகிய பூளை மலரும் ஆவிரையும் எருக்கம்பூவும் சேர்த்து, நூலால் இறுக்கமாகக் கட்டி மாலையாக்கி, அதைக் கொண்டு பனையோலையில் செய்த குதிரையை அழகுப்படுத்தி, மடலேறி ஊரில் வலம் வந்தேன். இரங்கத்தக்கவன்நான்”, என்று தன்னையே நொந்து கொள்கிறான். தலைவனின் ஏக்கத்துக்கிடையில் இங்கு நமக்குக் கிடைக்கும் செய்தி, பூக்களைக் கோக்க நூலைப் பயன்படுத்தியமை. தங்கால் முடக்கொற்றனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலோ, ஊசி கொண்டு மாலை கட்டிய செய்தியைத் தருகிறது. தலைவி பாலுண்ண மறுக்கிறாள்; அழகிழந்து எதிலும் ஆர்வமின்றி நோயுற்றவள்போல நடந்து கொள்கிறாள். தலைவியின் தாய் தோழியிடம் இது குறித்து விளக்கம் கேட்க அவள் பதில் கூறுவதாக அமைகிறது பாடல். “அன்னையே.. சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் தோழிமாரோடு வேங்கை மலர்கள் பறிக்கச் சென்றபோது “புலி புலி”யென்ற ஒலி கேட்டோம். அப்போது அங்கொருவன் வந்தான். அவன், பெண்களுடைய கண்களையொத்த அழகிய இதழ்களுடைய செங்கழுநீர் மலர்களை ஊசியால் கோத்த பூமாலை அணிந்திருந்தான். தலையில் ஒரு பக்கத்தில் வெட்சி கண்ணியும் சூடியிருந்தான்,” என்கிறாள் அவள். ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் (அகநானூறு 48, 8-9) ஊசியால் கோத்த பூமாலை என்று குறிப்பிடுவதால், நூலோ நாரோ பயன்படுத்தி ஊசியால் பூக்களை இணைத்திருக்க வேண்டும் அக்காலத்தவர். இதே பாடலைத் தொடர்ந்து படிக்க, தலைவன் மெதுவாக அந்தப் பெண்களிடம் உரையாடத் தொடங்குகிறான். “இங்கு புலியொன்று வந்ததைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறான். வெட்கத்துடன் அப்பெண்கள் விடை கூறாமல் பதுங்கி நிற்கவே, “ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர்!”- ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்ட கரிய எண்ணெய் தேய்த்த முடியையுடைய பெண்களே!”, என்று அழைத்துக் கேட்கிறான். மேலும் தொடரும் சுவையான காட்சிகள் நம்மை ஈர்த்தாலும், பெண்களின் கூந்தல் பின்னப்பட்ட வகையோடு இங்கு நிறுத்திக் கொள்வோம். ஐம்பால் பலவித பூக்களைக் கண்டோம்; நார் நூல் ஊசியென்று பூக்களைக் கோக்கப் பயன்படுத்தியவற்றையும் தெரிந்து கொண்டோம். அடுத்து, பூக்கள் சூடப்படும் அழகிய கூந்தலை எப்படி முடித்தனர் பெண்டிர்? கூந்தலை ‘ஐம்பால்’ என்ற சொல்லால் குறிக்கின்றன சங்கப் பாடல்கள். ஐம்பால் குறித்துத் தமிழறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், பாடல்களின் பொருள் கொண்டு பார்க்கையில், ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்டது ஐம்பால் என்றே முதன்மை நிலையில் கொள்ளத் தோன்றுகிறது. பூதங்கண்ணனாரின் நற்றிணைப் பாடலில், குளிர்ச்சி பொருந்திய சந்தனமும் இன்னும் பிறவகை நறுமணப் பொடிகள் கொண்டு மெருகூட்டிய தலைவியின் ஐம்பால் தலைவனால் பேசப்படுகிறது. ………………………..……………பெருந்தண் சாந்தம் வகை சேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழை (நற்றிணை 140;2-4) அவள் தோழியரோடு விளையாடும்போது ஐம்பாலிலிட்ட வாசனை மிகுந்த துகள்கள் கீழே சிதறின. மற்றுமோர் அகநானூற்றுக் காட்சியில் (கயமனார்,அகம்145) தலைவி தலைவனுடன் சென்று விடுகிறாள். பழைய நினைவுகளில் மூழ்கிய செவிலித்தாய், தான் இரக்கமின்றித் தலைவியின் ஐம்பாலை- ஐந்தாகப் பகுத்துப் பின்னப்பட்ட கூந்தலை- அதிலணிந்த பூக்களோடு கையால் பிடித்துக் கொண்டு, அவள் முதுகில் எறிகோலால் அடித்ததை எண்ணி வருந்துகிறாள். அப்படி அடித்ததில் எறிகோல் உடைந்தும் போனது; உடைந்தபோதும் காதல் வயப்பட்ட தலைவி ‘இது என் முதுகுப் புறம்’ என்றபடி அமைதியாகக் காட்டியபடி நின்றாளாம். தலைவன் பிரிவில் பூக்களைச் சூடாத மகளிர் கூந்தலை ஐம்பாலாகப் பின்னிய மகளிர், தலைவனைப் பிரிந்திருந்தபோது பூக்கள் அணிவது தவிர்த்ததைப் பாடல்கள் சொல்கின்றன. ஐங்குறுநூறு காட்டும் பேயனாரின் பாடலில், தலைவன் திரும்பிவரும் மகிழ்வான செய்தியைத் தோழி தலைவிக்கு உரைக்கிறாள். ……………..…நின் பிரிந்து உறைநர் தோள் துணையாக வந்தனர், போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (ஐங்குறுநூறு 496; 3-5) அதுவரையில் பூக்களின்றி வெறுமையாக இருந்த கூந்தலைப் பூக்களால் புனைந்து கொள்ளச் சொல்கிறாள். இக்காட்சி, இணைத்து நோக்கக்கூடிய வேறுபல காட்சிகளையும் தேடச் செய்தது. தலைவன்மார் பிரிந்த துன்பத்தால் பூச்சூடும் விருப்பின்றித் தனிமையில் தவித்த தலைவிகள், வீடுதேடிப் பூவிற்க வந்த பூவிலைப் பெண்டிரைப் பார்க்குந்தோறும் மேலும் துன்பத்தை உணர்ந்ததைச் சங்கச் சூழல்கள் காட்டுகின்றன. பூவிற்கும் பெண்களைத் தேடியதில் கிடைத்த ஐந்து பாடல்களில் நான்கு, தலைவிமாரின் தனிமையையும் மனத்துயரையும் காட்டுபவை. பூச்சூடி அழகுபடுத்திக் கொள்ளும் மனநிலையில் இல்லாதபோது பூக்கள் விற்கவரும் பெண்ணைத் துன்பம் தருபவளாகக் காணும் பாங்கை அவற்றில் சில வெளிப்படுத்துகின்றன. வேறுசில, பூவிலைப்பெண்டின் நிலைகண்டு அவள்மேல் பரிதாபங்கொள்ளும் மனநிலையைக் காட்டுகின்றன. தனிமையில் புலம்பும் நான்கு பாடல்களும் தலைவி கூற்றாகவே அமைகின்றன. மாறன் வழுதியின் நற்றிணைப் பாடல் (97), ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று சமூகநோக்கொடு கொடியவற்றை அடுக்கிய ஒளவையின் பாடலுக்கு முன்னோடியெனத் தோன்றுகிறது. “என்னருகே வருத்தமாக ஒலிக்கும் குயிலின் பாடல், ஆறாத ஆழமான புண்ணுடைய நெஞ்சத்தில் இரும்பினாலான ஈட்டி மேலும் பாய்ந்தது போன்ற வலியைத் தருகிறது; தெளிவான நீருடன் பாய்ந்தோடும் ஆறோ அதைவிடக் கொடியதாகத் தோன்றுகிறது; அதனினும் கொடியவள் – பூக்கள் விற்கும் உழவருடைய தனிமடமகள். வண்டுகள் மொய்க்கும் வட்டிலில் பூக்களை நிரப்பி, ‘மதனில் துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ'- மென்மையான அழகிய இதழ்களுடைய குருக்கத்தியாம். “குருக்கத்தியோடு பிச்சிப்பூ வாங்கலையோ” என்று கூவி விற்பவள் எனக்கு மேலும் துன்பத்தைத் தருகிறாளே என்று புலம்புகிறாள் தலைவி. இந்தச் சங்கக்குரலின் தொடர்ச்சிதான், ‘பூவாங்கலையோ பூவுபூவு’ என்று கூடை நிறைய மலர்களோடு இன்றும் விளிக்கும் பூ விற்பவரின் ஒலி. மாமூலனாரின் அகநானூற்றுப் பாடலில் (331), தன்னைத் தனியே விட்டுப் பல ஊர்கள் தாண்டித் தொலைவாய்ச் சென்ற தலைவன் - ‘சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச் சென்றோர் அன்பிலர் தோழி’ என்று புலம்புகிறாள் தலைவி. அப்படிப்பட்ட ஊர்களில், தழையாடை அணிந்த வேட்டுவ மகளிர் தம் பகுதியிலுள்ள தெருக்களில் சங்குகளிலிருந்து செதுக்கியது போன்ற தோற்றங்கொண்ட வெள்ளை இருப்பை மலர்களை விற்றார்கள். அம்மலர்களை அவர்கள் எப்படி விற்றார்கள்? குட்டிகளுடைய பெண் கரடிகள் மரக்கிளைகள் மீதேறி இருப்பைப் பூக்களைத் தின்னும். கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் அவை தின்றது போகக் கீழே சிதறிய இருப்பைப் பூக்களை, நீளமான மூங்கில் குழாய்களுக்குள் சேர்த்துவைத்து, தங்கள் பகுதியின் குடியிருப்புகளிலெல்லாம் அப்பெண்கள் விற்றார்கள். அகநானூற்றில் வரும் மற்றுமொரு காட்சியில், தலைவனைப் பிரிந்த தலைவி – ………………………..…………………………புனைந்த என் பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் தோழி (காவன்முல்லைப்பூதனார், அகநானூறு 391) -‘புனையப்பட்ட என் பெரிய கொண்டையைக் காணும்போதெல்லாம், தலைவனோடு இருக்கையில் அழகு பூண்டிருந்த நிலை நினைவுக்கு வருகிறது தோழி,’ என்கிறாள். தலைவன் தன்னோடிருந்த நாளில் கூந்தலை எப்படி அழகுப்படுத்தியிருந்தாள் அவள்? பெரிய வட்டிலில் பூவிலைஞர் கொணர்ந்த- காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற தோற்றமுடைய மென்மையான காட்டுமல்லியும் தேன் நிறைந்த மணமிகு முல்லையும் சூடியிருந்தாள். வட்டில் நிறைய பலவித மலர்களைக் கொண்டுவந்தவர்கள் அவற்றை முழுமையாக விற்கமுடியாதபோது விட்டொழித்துச் சென்றதையும் பாடல் சுட்டுகிறது. இனிவரும் இரண்டு பாடல்கள், பூக்கள் விற்கவியலாத சூழலில் பூவிற்கும் பெண்டின் நிலையை எண்ணி மனம் வருந்தும் காட்சிகளாக அமைகின்றன. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, தலைவனைப் பிரிந்த மற்றொரு தலைவியின் மனதைக் கவலைக்குள்ளாக்கிய பூவிலைப் பெண்டைக் காட்டுகிறார் (நற்றிணை 118). கிளைகள் அசைந்தாடும் மாமரங்கள் நிறைந்த அடைகரைத் தோப்பில், செங்கண் இருங்குயிலொன்று தன் ஆண் இணையோடு பாடி மகிழும் ஒலி தலைவியைத் துன்பப்படுத்துகிறது. “குயிலின் பாடலோடு என்னைத் துன்பத்தில் ஆழ்த்தும் மற்றொன்று உண்டு. தேனீக்கள் மொய்க்கும் பாதிரிப் பூக்களைத் தெருக்கள்தோறும் கூவி விற்கும் அந்தப் புதிய பெண்ணைக் காணும்போது என் நெஞ்சு நோகிறது” என்கிறாள். பாதிரிப் பூக்கள் என்று வெறுமனே சொல்லி விடுவார்களா புலவர்கள்? புணர்வினை ஓவமாக்கள்- தேர்ந்த ஓவியர்கள் நல்ல சிவந்த அரக்குப் பூச்சில் தோய்த்தெடுத்த தூரிகைபோல வெண்மையான இதழ்களுடைய பாதிரிப் பூக்களைச் சொற்களால் அழகுறப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். கூடுதலாக, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு, நோம் என் நெஞ்சே என்று தலைவி கூறுவதால், பூ வாங்க மனமில்லாத என் சூழலில் பூவிற்க வந்திருக்கும் அந்தப் பெண்ணுக்காக என் நெஞ்சம் வருந்துகிறது என்கிறாள் தலைவி. இதே போன்ற ஒரு காட்சியைப் புறநானூற்றிலும் காண முடிகிறது (நொச்சி நியமங்கிழார், புறம் 293). குத்துக்கோலால் அடக்கமுடியாத யானையின்மேல் அமர்ந்த ஆண்மகன், கோட்டைக்கு வெளியே எதிரிகளுடன் போருக்கு ஆயத்தமாகும்படி தண்ணுமை முழக்கி மக்களுக்கு அறிவித்தான். ஆண்கள் போருக்குச் சென்றால் வீட்டுப் பெண்கள் பூச்சூடுவதில்லை என்பதால், பூவிற்கும் பெண்ணுக்கு அங்கு பொருளீட்ட வழியில்லை. அதனால், பிறர் மனை புகுவள் கொல்லோ? அளியள் தானே, பூவிலைப் பெண்டே வேறு இல்லங்களில், மக்கள் போருக்குச் செல்லாத வீடுகளில் விற்க முயலவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட பூவிலைப் பெண்டு இரக்கத்திற்குரியவள் என்று கூறுகிறார் ஆசிரியர். பூவிலைப் பெண்டிரைத் தேடிச்சென்ற இலக்கியப் பயணத்தில்தான் எத்தனை மணமிகு செய்திகள்! நொதுமலாட்டி வட்டிலில் நிரப்பிக் கொணர்ந்த பூக்களைக் காட்டிலும் கூடுதலான தகவல்களைத் தூவி வியக்க வைக்கிறார்கள் சங்கப்படைப்பாளர்கள். உழைப்பால் பொருளீட்டிய பெண்களின் விற்பனைப் பொருட்களில்- உப்பு, மீன் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் தேவை என்றும் குறையாத ஒன்று; சுவைமிகு பண்டங்களின் தேவை அடங்காத நாவின் சுவையை ஒட்டியது; மயக்கும் கள்ளின் தேவையோ அனைத்தையும் விஞ்சியதாகவே இன்றுவரைத் தொடர்கிறது. பூக்களைக் கொய்து, அக்கம்பக்கத்து வாழிடங்களுக்குக் காலயற நடந்து விற்கச் செல்லும் பூவிலைப் பெண்டிரின் வாழ்க்கை மற்ற பொருள் விற்கும் பெண்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறது. நாம் கண்ட ஐந்து பாடல்களில் பூவிற்றோரின் நிலை, பெரும்பாலும் வாங்குபவரின் மனநலன் சார்ந்திருந்ததாகத் தெரிகிறது. மக்கள் மகிழ்வோடு நேரடித் தொடர்புடைய பூவிலைஞர்களின் பணி, தனிமை- போர்- இழப்பு போன்ற கடுஞ்சூழல்களால் பாதிப்புக்குள்ளாவதையும் உணரமுடிகிறது. பூக்கள் நிறைந்த பெரிய வேங்கை மரத்துக் கிளைமேல் மயில் நிற்பது, பூக்கொய் மகளிரைப் போன்று தோன்றுவதாகக் கபிலர் பாடியது (ஐங்குறுநூறு 297), மலர்கள் தமிழர் வாழ்வில் நீங்காமல் மணம் பரப்பிய தன்மையைப் பறைசாற்றும். அதேபோல், பூவிலைப் பெண்டிர் தலைவியர் வாழ்வில் தவிர்க்கவியலா இடம் வகித்ததால்தான், மகிழ்வான நாட்களில் மலர்களை நாடிக் களிப்புடன் சூடியவர்கள், துன்பச் சூழலில் பூவிற்ற பெண்களுக்காகவும் வருந்தினர் போலும். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |