http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 180
இதழ் 180 [ ஆகஸ்ட் 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
நீர்ப்பாசனம் காவிரியின் கரையில் அமைந்திருந்தமையால் வலஞ்சுழி நிலங்கள் நதிநீர்ப் பாசனத்தில் செழித்திருந்தன. காவிரியின் கரை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டமையை, ‘காவேரிக் குலை’, ‘காவேரிக் குலை அணைக்குச் செந்நீர் வெட்டி’ என்று அதன் பொருட்டாகவே வசூலிக்கப்பெற்ற வரியினங்கள் நிறுவுகின்றன. இப்போது வலஞ்சுழியை அடுத்துப் பாயும் அரிசிலாறு மதுராந்தக ஈசுவரத்துக் கல்வெட்டில், ‘அரிசி நீரோடு கால்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. சேத்ரபாலர் கோயிலின் நிவந்தக் கல்வெட்டுகளுள் ஒன்று கோயிலின், ‘வடவருகு ஆற்றங்கரையில் நாணல் நட்டுக் காப்பான்’ ஒருவனைச் சுட்டுவதன் வழி, ஆற்றங்கரைகள் நாணல் நடுதலால் பலப்படுத்தப்பட்ட முறையையும் அப்பணிக்கெனவே கோயில் ஊழியத்தில் ஓராள் இருந்தமையையும் தெளிவுபடுத்துகிறது. இவ்ஊழியர் கோயிலின் நிரந்தரப் பணியாளராக, நிவந்தக்காரர்களுள் ஒருவராக இருந்து, நாளும் இருநாழி உரி நெல் ஊதியம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.9 காவிரியிலிருந்து பெரிய அளவில் நீரோடு கால்கள் வெட்டப்பட்டிருந்தமையை, ‘வாய்த்தலை நீரோடு கால்’, ‘இக்கால் காவேரியில் உற்ற தலை’ எனும் தொடர்கள் காட்டுகின்றன. முதல் குலோத்துங்கர் கல்வெட்டு கொள்ளிடம் கொண்ட நிலத்தைக் குறிப்பதால், கொள்ளிட ஆற்றின் பாசனமும் இப்பகுதி நிலங்களுக்கு, குறிப்பாக பராந்தகச் சதுர்வேதிமங்கலத்து நிலங்களுக்குப் பாசனமளித்ததாகக் கருதலாம். இவ்வாற்றில் வந்த வெள்ளம் சபைப் பொதுநிலத்தின் ஒருபகுதியை மூழ்கடித்ததைக் கொள்ளிடம் கொண்ட நிலமாகக் கல்வெட்டுக் குறிக்கிறது. பொதுநிலக் கணக்கில் இந்நிலத்துண்டு கழிக்கப்பட்டதையும் கல்வெட்டுச் சுட்டுகிறது. வலஞ்சுழியையும் வலஞ்சுழிக் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் இருந்த ஊர்களையும் வாய்க்கால்களும் வதிகளும் நீரளித்துச் செழுமைப்படுத்தின. வாய்க்கால்கள் பெரு வாய்க்கால்களாகவும், சிறு வாய்க்கால்களாகவும் உட்சிறு வாய்க்கால்களாகவும் அமைந்து ஊரின் அனைத்து நிலப் பகுதிகளுக்கும் பாசனமளித்தன. வலஞ்சுழிக் கல்வெட்டுகளில் இருபத்திரண்டு வாய்க்கால்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன பரகேசரி, இராஜகேசரி, ஆதித்தன், கோதண்டராமன் (இராஜாதித்தன்), சுந்தரசோழன், இராஜராஜன், இராஜராஜன் தனிநாயகன், இராஜேந்திரசோழன், குலோத்துங்க சோழன், சுங்கந்தவிர்த்த சோழன் (முதல் குலோத்துங்கன்), இராஜகம்பீரன் (இரண்டாம் இராஜராஜன்) என அரசர்தம் பெயர்களை ஏற்றிருந்தன. நித்தன், அம்பலக்கூத்தன், எடுத்தபாதம் என சிவபெருமானை நினைவூட்டும் வகையில் மூன்று வாய்க்கால்களின் பெயர்கள் அமைந்துள்ளன. கணவதி வாய்க்கால் பிள்ளையாரைக் குறிக்க, சுகரு,10 பனையன், விக்கிரமாபரணன், கள்ளி எனும் பெயர்களிலும் வாய்க்கால்கள் இருந்தன. பதின்மூன்று வதிகளின் பெயர்களை வலஞ்சுழிக் கல்வெட்டுகள் வழங்கியுள்ளன. அவற்றுள் நான்கு திரிபுவனமாதேவி வதி, தரணிமுழுதுடையாள் வதி, மாதேவி வதி, ஏழுலகமுழுதுடை வதி என அரசியர் பெயர் கொண்டுள்ளன. இராஜகேசரி வதி, கோதண்டராம வதி என்பன அரசர் பெயர்களில் அமைந்துள்ளன. கணவதி, பார்வதி, சேட்டை, திருநாராயணன், வீரேசுவரன் என இறைப் பெயர்களை ஏற்றுச் சில வதிகளும் மங்கல வதி, மாதிரு வதி எனப் பொதுப் பெயர்களில் இரண்டு வதிகளும் இருந்தன. வாய்க்கால்களும் வதிகளும் இணைந்து அளித்த பாசன வசதியில் வலஞ்சுழியைச் சுற்றியிருந்த ஊர்கள் வளத்தில் கொழித்தன. மதனமஞ்சரிச் சதுர்வேதிமங்கலத்து நிலத் துண்டுகளுக்கு ஆதித்த வாய்க்காலும் வீரேசுவர வதியும் நீரளித்தன. ஆதித்த வாய்க்கால் வெள்ளை விநாயகச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையான சேனையின் நிலங்களுக்கும் பாய்ந்து அவற்றையும் செழுமைப்படுத்தியது. திருநாராயண வதியும் இந்நிலங்களுக்கு நீரளித்தது. கொற்றங்குடிக்கு வளம் சேர்த்த குலோத்துங்க சோழ வாய்க்காலும் பார்வதி வதியும் நிலத்துண்டுகள் பலவற்றிற்கு எல்லைகளாகவும் அமைந்தன. அகிலநாயகச் சதுர்வேதிமங்கலத்து நிலங்களை இராஜகம்பீரன் வாய்க்கால் வளமைப்படுத்த, படக்கைக் கொற்றங்குடியான குலோத்துங்க சோழ நல்லூரில் அம்பலக்கூத்தன் வாய்க்கால் பாய்ந்தது. தளியசுகூரில் இரோஜந்திர சோழ வாய்க்காலுடன், சுந்தரசோழ வாய்க்கால், நித்தன் வாய்க்கால், கள்ளி வாய்க்கால், சுகரு வாய்க்கால் ஆகியனவும் உட்சிறு வாய்க்காலும் சேர்ந்து விளைச்சலுக்கு உதவின. தொடக்கக் காலத்தில் இருந்தே சட்டர்கள் மடப்புறமாகத் திகழ்ந்த இவ்வூரில் வெட்டப்பட்டிருந்த கடம்பன் கால் தென்வாய், வடவாய் கொண்டிருந்தது. இக்கடம்பன் காலையும் இதன் வாய்களையும் எல்லைகளாகக் கொண்டு பல நிலப்பகுதிகள் சூழ அமைந்திருந்தன. இவ்வாய்க்கால்களுடன் இப்பகுதி நிலங்களைச் செழிப்பாக்கும் பணிக்குத் திரிபுவனமாதேவி வதியின் பங்களிப்பும் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். இராஜராஜச் சதுர்வேதிமங்கல நிலங்களின் விளைச்சலுக்கு மங்கல வதியும் தரணிமுழுதுடை வதியும் இராஜராஜ வாய்க்காலும் உதவின. மலைப்பவர்கேசரி நல்லூரில் கணவதி வாய்க்கால், மாதேவி வதி ஆகியனவும் தீனசிந்தாமணி நல்லூரில் மாதிரி வதி, கோதண்டராம வதி ஆகியனவும் நீரளிக்க, குந்தவை நல்லூரில் சேட்டை வதி, கணவதி வதி, இராஜகேசரி வதி, குந்தவை நல்லூர் வதி ஆகியனவும் பாசனத்திற்கு உதவின. தளியசுகூரிலிருந்து பிரிந்த கலிகடிந்த சோழ மங்கலத்து நிலங்களை மோதிரங்கொள்ளி வாய்க்காலும் திரிபுவனமாதேவி வதியும் செழுமைப்படுத்தின. இதே மோதிரங்கொள்ளி வாய்க்கால் கோனிலத்திற்கும் பாய்ந்தது. இக்கோனிலத்து விளைச்சலுக்கு துணையிருந்த மற்றொரு வாய்க்காலாகச் சுங்கத் தவிர்த்த சோழன் வாய்க்காலைச் சுட்டலாம். திரிபுவனமாதேவி வதி வேறு சில நிலங்களுக்கும் நீரளித்தது. அது போலவே பனையன் வாய்க்கால் விக்கிரமாபரண வாய்க்கால் ஆகியனவும் நிலங்களைச் செழுமைப்படுத்த உதவின. புதான்கோட்டகத்தை ஊடறுத்துச் சென்ற வாய்க்கால்கள் அவ்வூர் நிலத்தையும் சிறுசிறு கால்கள் வழியே வளமைப்படுத்தின. மதுராந்தக ஈசுவரக் கொடைக் கல்வெட்டில் குறிக்கப்படும் ஐய்யூர் நியமத்து நிலங்களை உட்சிறு வாய்க்கால் செழிப்பாக்கியது. குறுக்கையில் பாய்ந்த குறுக்கை வாய்க்காலும் கலயநல்லூருக்கு நீரளித்த கரம்பை வாய்க்காலும் இக்கல்வெட்டில் நில எல்லைகளாக இடம்பெற்றுள்ளன. அவற்றுடன் பெருவாய்க்கால், சிறுவாய்க்கால் என்று பெயரற்ற வாய்க்கால்களாக நீர்கொண்டு சென்ற கால்களும் இப்பகுதி நிலவிளைச்சலுக்கு உதவியதை அவற்றை எல்லைகளாகக் காட்டும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆற்றுப் பாசனத்துடன் ஏரி, குளப்பாசனமும் இப்பகுதி நிலத் துண்டுகளுக்கு இருந்தன. மதுராந்தக ஈசுவரத்துக் கல்வெட்டு ஐய்யூரிலிருந்த திருக்கி ஏரியைச் சுட்டுகிறது. ‘விளை நிலமும் குளமும் கரையும்’ எனும் தொடர், குளம் சூழ்ந்த நிலப்பகுதி, அக்குளப்பாசனத் தில் செழித்திருந்தமையைத் தெளிவாக்குகிறது. ‘குளநிலம்’, ‘திடலும் குளமும்’, ‘குளவாய்’ எனும் சொல்லாட்சிகள் இத்தெளிவை உறுதிப்படுத்துகின்றன. மேலையூர் நிலங்கள் குளப்பாசனம் பெற்றமையை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. ஓடைகளும் ஆங்காங்கே இருந்தமையை இரண்டு கல்வெட்டுகளால் பெறமுடிகிறது. பயிர் வகைகள் நெல் முக்கியமான பயிராக இருந்தது. கோயில் ஊழியர்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு என்ற கணக்கில் நெல்லே ஊதியமாக வழங்கப்பட்டது. திருவாசலில் போந்த நெல், அரிசி, பயறு, துவரை எனும் கல்வெட்டுத் தொடர் பயறு, துவரை முதலியன மக்கள் பயன்பாட்டில் இருந்தமைக்குச் சான்றாகிறது. கல்வெட்டுகளில் சர்க்கரை இடம்பெற்றிருப்பதால், கரும்புத் தோட்டங்கள் இருந்தமை கண்கூடு. அவற்றுடன் வெற்றிலைக் கொடிக்கால்கள், மஞ்சள் தோட்டங்கள், காய்கறிகள் விளைந்த நிலப்பகுதிகள் ஆகியனவும் இருந்தன. வாழைத்தோட்டங்களும் தென்னந்தோப்புகளும் மிக்கிருந்தன. அவற்றுடன் பலா, மா, பனை, கமுகு, புளி முதலிய மரங்களும் வளர்க்கப்பட்டன. அவற்றை மதுராந்த ஈசுவரத்துக் கல்வெட்டுப் பயன் மரங்கள் என்றழைக்கிறது. பனங்கன்று ஐயாயிரவன் எனும் தொடரும் மாஞ்செய் எனும் சொல்லாட்சியும் மனையில் நின்ற தெங்குகள் எனும் சுட்டலும் இப்பயன் மரங்கள் பரவலாகப் பல ஊர்களிலும் இருந்தமையை உணர்த்துகின்றன. வழிபாட்டிற்கான மலர்மாலைகள் தொடுக்கத் தேவையான பூக்களைப் பெறப் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டன. அவற்றிற்காகப் பல நந்தவனங்கள் அமைக்கப்பட்டன. வலஞ்சுழி வளாகத்தின் மேற்குப்புறம் வியாள கஜமல்லன் நந்தவனமும் ஞானசம்பந்தர் திருமடத்தின் கிழக்குப் பகுதியில் சொன்னவாறு அறிவான் நந்தவனமும் இவ்வளாகத்தின் ஒரு பகுதியில் அருமொழிதேவன் நந்தவனமும் இருந்தன. சொன்னவாறு அறிவானில் பணியாற்றிய ஆண்டார்களான பூப்பணியாளர்கள், நித்தமும் நூறு பூக்கள் பறித்து இறைவனுக்கிட இராஜகம்பீர வேளானால் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அது போலவே நமிநந்தி அடிகளும் அருமொழிதேவன் நந்தவனத்தில் பூமாலை கட்ட வகை செய்திருந்தார். இந்நந்த வனங்களில் தமநகம், மருவு, இருவேரி, செண்பகம், தும்பை, செங்கழுநீர் ஆகியன வளர்க்கப்பட்டன. உணவு அரிசிச் சோறு முதன்மை உணவாக இருந்தது. பழவரிசியில் பொங்கிய சோறு சிறப்பான உணவாகக் கொள்ளப்பட்டது. புளி, தேங்காய் ஆகியன சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு காய்களை அவித்தும் பொரித்தும் பருப்புடன் கலந்தும் சோறுடன் உட்கொண்டனர். பால், தயிர், நெய் முதலிய பால் பொருட்கள் விரும்பிக் கொள்ளப்பட்டன. பருப்புப் போனகம், பால் போனகம் என்பன முறையே காலையிலும் இரவிலும் உட்கொள்ளப்பட்டன. அக்காரடலை அமுது மதிய உணவுகளுள் ஒன்றாக அமைந்தது. கடுகு, மிளகு இரண்டும் பயன்பாட்டில் இருந்தன. கருப்பஞ்சாறு, சர்க்கரை, பனைவெல்லம் ஆகியன இனிப்பூட்டிகளாக அமைந்தன. சிற்றுண்டி வகைகளில் தெண்டன், அப்பம், பணியாரம் ஆகியன விருப்பத்தோடு உட்கொள்ளப்பட்டன. பருப்பு, தேங்காய், வெல்லம் கொண்டு தெண்டனும் அரிசி, நெய், அவரைப் பால், மிளகு, கடுகு கொண்டு அப்பமும் தயாரிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ‘சிறு காலைச் சந்தியில் அப்பக் காய்க்கறியமுதுக்கு அப்பமுதுக்கு மாவுக்கு அரிசி கடுகு அவரைப் பால் மிளகு’ எனத் தொடரும் கல்வெட்டுச் சொல்லாட்சி கவனிக்கத் தக்கது.11 உணவுக்குப் பிறகு வெற்றிலைப் பாக்குக் கொள்ளும் பழக்கம் பரவலாக இருந்தது. பழங்களுள் மா, பலா வாழை மூன்றும் பரவலாகக் கொள்ளப்பட்டன. இளநீர், நுங்கு பெறுவதற்கும் கள் கொள்வதற்கும் தென்னை, பனை உதவின. குறிப்புகள் 9. பு.க. 10. 10. இவ்வாய்க்கால், சுகர் பண்டிதர் பெயரால் அழைக்கப்பட்டது போலும். 11. பு.க. 14. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |