http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ச. கமலக்கண்ணன்

பாடல் 83: துயரறுத்தலே துயரமோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
世の中よ
道こそなけれ
思ひ入る
山の奥にも
鹿ぞ鳴くなる

கனா எழுத்துருக்களில்
よのなかよ
みちこそなけれ
おもひいる
やまのおくにも
しかぞなくなる

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் தொஷினாரி

காலம்: கி.பி 1114-1204.

முந்தைய பாடலில் சென்சாய்ஷூ எனும் தொகுப்பைத் தொகுத்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இவர். இத்தொடரைத் தொகுத்த சதாய்யேவின் தந்தை. பேரரசர் இரண்டாம் தொபாவின் அரசவையில் தலைமைப் புலவராக இருந்தவர். சமகாலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்தார். இன்னும் உயிருடன் வாழும் முன்னாள் அரசியரின் அரண்மனைகளை நிர்வகிக்கும் அதிகாரியாகவும் பணியாற்றினார். நிர்வாகத் திறமையும் இலக்கியத் திறனும் ஒருங்கே பெற்றிருந்த மிகச்சிலருள் இவரும் ஒருவர். ஆயிரக்கணக்கான கவிதைப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தவர். போட்டிகளில் இவர் தேர்ந்தெடுத்த 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் பல்வேறு ஜப்பானிய இலக்கியங்களில் இடம்பெற்று இவரது தேர்வின் தரத்தை மெய்ப்பித்தன.

இத்தொடரின் 74வது பாடலின் (கேட்டதும் கிடைத்ததும்) ஆசிரியர் தொஷியோரி புதிதாக ஒரு பாவகையை அறிமுகப்படுத்தினார் என்று பார்த்தோமல்லவா? இவரது செய்யுள்கள் எல்லாமே அப்பாவகையைப் பின்பற்றியவைதான். இதனாலேயே தொஷியோரியின் பாவகைகளுக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்தது எனலாம். கி.பி. 1197 முதல் 1201 வரை இயற்றப்பட்டு வந்த பாவகைகளைப் பற்றிய இவரது நூலான கோரெய் ஃபுதெய்ஷோ இன்றளவும் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 450 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தனிமை, விண்ணழகு, மர்மம் (அமானுஷ்யம்) போன்ற பொருண்மைகளில் அமைந்தவை.

பாடுபொருள்: வாழ்வில் துயரம் எப்போதும் தொடரும்

பாடலின் பொருள்: வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.

வாழ்வில் துயரை விட்டு விலகியோ விலக்கியோ இருக்க இயலாது என்பதை விளக்கும் ஓர் எளிய பாடல். இப்பாடலை கி.பி. 1140ல் இயற்றியபோது இவருக்கு வயது 26. இதுபோன்ற துறவு மனப்பான்மையைப் பெற 26 வயது என்பது மிகவும் இளம் வயது என்றாலும் இவர் அதைப் பெற்றதற்குக் காரணம் இவரது உற்ற தோழர் சாய்கியோ தனது 22ம் வயதில் துறவறம் பூண்டதுதான். இவரது தோழர்கள் இன்னும் சிலரும் ஏறத்தாழ இதே வயதில் துறவறம் பூண்டிருந்தாலும் இவர் கி.பி. 1176ல் தனது 62வது வயதில்தான் துறவறம் பூண்டு தலைநகர் கியோத்தோவிலுள்ள ஃபுஷிமி என்ற இடத்திலுள்ள கோயிலில் துறவியாக வாழத்தொடங்கித் தனது 90வது வயதில் இறந்தார்.

வெண்பா:

அலத்தல் தவிர்க்கத் துறவறம் பூண்டும்
உலத்தல் அரியது என்றே - விலகினும்
அங்கும் இருக்கும் பிறிதோர் துயரென
என்றும் தொடரும் துயர்

அலத்தல் - துன்பமுறுதல்
உலத்தல் - நீங்குதல் அல்லது முடிவுறுதல்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.