http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > இலக்கியச் சுவை
சங்கச் சிந்தனைகள் - 7
கோகுல் சேஷாத்ரி
கற்பெனப்படுவது யாதெனின்...


ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த ஒத்தையடிப் பாதையில் அவள் தனியே நிற்கிறாள். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. கன்னங்களில் கண்ணீர் வழிந்து வழிந்து காய்ந்து கிடக்கின்றன. ஆனால் அவளது கண்களில் மட்டும் அத்தனை சோகத்தையும் மீறி ஒரு வெறி - ஒரு ஒளி !

அடடா - இதென்ன ? அவளது பருத்தியாடை ஆங்காங்கே கிழிந்து தொங்குகின்றதே.....ஐயோ ! இதென்ன ? மேனியில் ஆங்காங்கே இரத்த காயங்கள் ? சில இடங்களில் இரத்தம் கட்டிக்கொண்டு சருமம் கருப்பேறி - கன்றிப்போய் தெரிய மீதி இடங்களில் உதிரம் வழிந்து உலர்ந்தே போய்க் கிடக்கிறதே ! அடடா - அவளது அழகிய சிவந்த உடலை இப்படிச் சிதைப்பதற்கு எத்தனை கொடிய மனம் வேண்டும் !

அந்தக் கொடிய மனம் அந்த ஊரில் - அவள் பிறந்து வளர்ந்த அந்த ஊரில் - பெரும்பான்மையோருக்கு இருந்தது ஆச்சரியம்தான்.

அவள் "ஒழுக்கக் கேடானவள்" என்று அன்றுகாலையில்தான் தீர்ப்புரைத்தார்கள் கிராம சபையினர். ஊரை விட்டு ஐந்து வருடங்களுக்கு அவளை ஒதுக்கி வைக்கும்படி கட்டளை பிறந்துள்ளது.

சபை கூடியிருந்த அரச மரத்தடியிலிருந்து அவள் மெதுவாக விலகி நடக்க முற்படுகையில் எவனோ ஒரு சிறுவன் அவள்மீது வேடிக்கையாக முதல் கல்லெறிந்தான். அவ்வளவுதான் ! ஏதோ அதற்காகவே காத்திருந்ததைப்போல் படபடவென்று பல கற்கள் அவளை நோக்கி சரமாறியாக வீசப்பட்டன... ஒரு முரட்டு கிராமத்து நாய் அவள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது - அவள் ஓட ஓட, கூட்டத்திற்கு மேலும் உற்சாகம் பிறந்து மேலும் மேலும் கல்லெறிந்து...

பிடாரி கோயிலைத் தாண்டி ஓடுகையில் எவரோ ஒரு பெரியமனிதர் குறுக்கிட்டு அந்தக் கூட்டத்தையடக்கி அவளின் உயிரைக் காப்பாற்றினார். அவளின் உயிரை மட்டும்தான் அவர் காப்பாற்றினார். அவளது உள்ளம் எப்போதோ இறந்துவிட்டிருந்தது.

அவள் எப்படி ஒழுக்கக் கேடானவள் ஆனாளாம் ?

சந்திர சூரியர்கள் சாட்சியாக முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக அந்த ஊரார் சாட்சியாக அவளுக்குத் திருமணம் "செய்து வைக்கப்"பட்டது. அவளின் விருப்பங்களுக்கு அங்கே அங்கீகாரமில்லை. மரியாதையில்லை. இடமில்லை. அது சிறுவயதிலேயே பெரியவர்களாகப் பார்த்து நிச்சயித்துவிட்ட திருமணமென்று பேசிக்கொண்டார்கள் ! "கற்புக்கரசியாக நின்று கணவன் வழி ஒழுகு !" என்று உபதேசித்தார்கள். "அவன் சொல்லை மீறாதே - அவன் மனம் கோணும்படி நடக்காதே !" என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவளும் அவ்வாறே நடக்க முயன்றாள். நடந்ததையெல்லாம் மறக்க முயன்றாள். முடியவில்லை. அவளுக்குள் ஒரு சத்திய ஜோதி எப்போதோ ஒரு ஞானியால் ஏற்றப்பட்டிருந்தது. "உன் மனதிற்கு உண்மையாக நடந்துகொள் ! நீ செய்வது சரியெனப் படின் எவருக்கும் அஞ்சாதே !" என்னும் அந்த ஞானியின் உபதேசம் அவளை தொடர்ந்து உறுத்திற்று.

ஒரு வருடம் கழிந்த நிலையில் அவள் அவனிடம் ஒருநாள் கைகூப்பி வேண்டினாள் - "நான் திருமணத்திற்குமுன் வேறொருவனை நேசித்தேன். அந்த நேசத்தின் நினைப்பாகவே இன்றும் உள்ளேன். நீ தீண்டும்போதெல்லாம் நான் அவன் தீண்டுவதாக நினைத்துக்கொள்வதால்தான் இன்னமும் என்னால் உயிரோடிருக்க முடிகிறது. இனியும் என்னால் இந்த இரட்டை வாழ்க்கையை சகிக்க முடியாது - என்னை அவனிடம் சென்று சேர்ப்பித்துவிடு !"

அவள் கணவன் ஒரு முடரன். மூடன். ஒரு இரகசிய வேண்டுதலை அவன் பகிரங்கமாக்கிப் பழிவாங்கினான். அவள் விலக்கி வைக்கப்பட்டதில் அவனுக்கு அளவுகடந்த ஆனந்தம். ஊரார் அவளை அடித்து விரட்டியதில் அதைவிட ஆனந்தம் ! திருப்தியோடு அவன் வீடு திரும்புகிறான் - அடுத்த திருமணத்திற்குத் தயாராக.

இதோ - நைந்த நூலாக அவள் அந்த ஒற்றையடிப்பாதையில் தனியே நிற்கிறாள். உள்ளத்தால் பொய்யாதொழுக நினைப்பவர்க்கு நேரும் கதியை உலகோருக்கு எடுத்துக்கூறும் வண்ணம் அவள் இரத்த வெள்ளத்தில் அரை மயக்க நிலையில் ஊருக்கு வெளியில் நிற்கிறாள்.(1)

கற்பு என்பது பற்றியும் ஒழுக்கம் என்பது பற்றியும் அன்றிலிருந்து இன்றுவரை பேசிவருகிறோம். பேச்சு இன்னமும் நின்றபாடில்லை. நாகரீக வெளிச்சம் படரத்துவங்கி பல நூற்றாண்டுகளாகிவிட்ட இன்றைய நிலையிலும் கற்பு பற்றிப் பேசுவது ஆபத்தான விஷயமாகவே இருக்கிறது. சிலசமயங்களில் அடிதடிக்குரிய விஷயமாகவும் உள்ளது.

ஒவ்வொரு நாகரீகமும் சமுதாயமும் கற்புக்கென்று தனி வரையரைகளை உருவாக்குகின்றது. அதன்படி ஒழுகும் பெண்களை கற்புக்கரசிகள் என்று போற்றுகிறது. ஒழுகாதவர்களைத் தூற்றுகிறது. ஒதுக்கி வைக்கின்றது. ஒவ்வொரு மதமும் கற்பு பற்றிப் பேசுகிறது. ஒழுங்கு நெறிகள் பற்றிப் பேசுகிறது. நெறிகளின்படி ஒழுகாதவர்களை மதத்துரோகிகள் என்கிறது.

கற்பு என்பது என்ன, அதன் வரைமுறை என்ன என்பதைப் பற்றி முற்ற முடிந்த தீர்மானத்திற்கு மனித குலத்தால் இன்னும் வரமுடியவில்லை. ஆனால் கற்பு நெறி தவறுபவர்களை மட்டும் எப்படியோ அது கண்டுபிடித்துவிடுகிறது....கண்டுபிடித்து தண்டித்தும் விடுகிறது ! ஆச்சரியமான விஷயம்தான்.

ஏன் கற்பு பற்றி - அதற்கு ஒரு வரைமுறை வழங்குவது பற்றி - அந்த வரைமுறைக்குள் மனிதர்களை ஆடுகளாக்கி அடைப்பதைப் பற்றி - சமுதாயம் இத்தனை அக்கறையுடன் இருக்கிறது ?

இந்த அக்கரை உண்மையானதுதானா ? அப்படி உண்மையெனில் கற்புக்கரசிகள் பற்றி நாம் அன்றாடம் படிக்க - பார்க்க வேண்டுமே ? ஆனால் நாம் காண்பதெல்லாம் "மணப்பெண் கோலத்தில் கள்ளக் காதலனுடன் இளம்பெண் தப்பி ஓட்டம் !" என்பன போன்ற தலைப்புச் செய்திகள்தானே ?

உண்மையில் கற்பு பற்றி சமுதாயத்திற்கு அக்கறையில்லை. ஆனால் காதலைப் பற்றிய பய உணர்வை உண்டாக்க கற்பு பயன்படுகிறது.

காதல் அடக்கப்படவேண்டிய அழிக்கப்படவேண்டிய ஒரு உணர்வு. ஏனெனில் அது சுதந்திர மனத்தின் அடையாளம். சுய சிந்தனையின் - சுய உணர்வின் ஆரம்பம். சுயம் பலப்பட்டால் மனிதன் சமுதாயத் தளைகளிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு விடுவான். ஆக சுயம் பலம்பெறும் அனைத்தும் நசுக்கப்பட வேண்டும். இதற்கு கற்பு பற்றிய எண்ணங்களும் கவர்ச்சிமிகு வருணனைகளும் மிக பலம் வாய்ந்த ஆயுதங்களாகி விடுகின்றன.

தன் வீட்டுக் கணவனின் தீநடத்தையை சகித்துக்கொள்ள - ஏற்றுக்கொள்ள - ஏமாற - ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணகிகளும் நளாயினிகளும் தேவைப்படுகின்றனர். கற்புக்கரசிகளை தெய்வமாக்க வேண்டியதுதான். பத்தினிக் கோட்டங்களை ஆங்காங்கே உருவாக்க வேண்டியதுதான். ஏனெனில் கற்புக்கரசர்களுக்கும் அவர்தம் கோட்டங்களுக்கும் எங்கே போவது ?

கற்புநெறி பற்றி விரிவாகப் பேசுவதற்காக தொல்காப்பியர் "கற்பியல்" என்று பொருளதிகாரத்தில் ஒரு தனி இயலே வைக்கிறார் ! கற்பின் இலக்கணம் என்று ஆரம்பிக்கும் இந்தப் பகுதியில் எடுத்தவுடன் என்ன சொல்கிறாறென்று கேட்போமா ?"கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - கற்பியல் - எண் 1086)"கற்பு எனப்படுவது திருமணச் சடங்கோடு பொருந்த, கொள்வதற்கு உரிய மரபினை உடைய தலைவன், அதேபோல் கொள்வதற்கு உரிய மரபினை உடைய தலைவியை, கொடுப்பதற்கு உரிய தலைவியின் பெற்றோர் முதலியோர் முன்னின்று கொடுக்க, மணந்துகொள்வதாகும்."


சுருக்கமாகச் சொன்னால் ஒழுங்காக மரபின் வழி நின்று பெற்றோர் காண்பிக்கும் தலைவனைத் தலைவி சடங்கு சம்பிரதாயங்களோடு சேர்ந்து திருமணம் செய்து கொள்வதுதான் கற்பாம் !

கரணம் என்பது திருமணம் அல்லது திருமணச் சடங்கு என்பதை முன்னரே முதல் கட்டுரையில் கண்டோம். "கொளற்கு உரி மரபென்பது" (கொள்வதற்கு உரிய மரபு) என்ன ? இன்றைக்கும் நாளிதழ் விளம்பரங்களில் "தகுந்த வரனாக" என்றும ஒரு சொற்றொடர் வருமே - ஏறக்குறைய அதைச் சொல்லலாமா ?

"கொளற்கு உரி மரபின்" தலைவன் "கொடைக்கு உரி மரபினோர்" தாரைவார்த்துக் கொடுக்க "கரணமொடு" நடந்தால்தான் கற்பு. இல்லையேல் கிடையாது ! சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் திருமணம் நடக்கலாமாம், ஆனால் அதனைக் கற்பென்று சொல்லாமல் நயமாக நழுவி விடுகிறார் - அடுத்த வரியை பாருங்கள்.(2)"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான"

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - கற்பியல் - எண் 1087)"தலைவி விரும்பி தலைவனுடன் உடன்போகும் காலத்துக் கொடுப்பார் இல்லாமலும் திருமணம் நிகழும் !"


ஆனால் இது கற்புடன் சேர்த்தியில்லையென்பது "இதையும் கற்பாகவே கொள்க !" என்று கூறாததிலிருந்து புரிகிறது. ஆக தொல்காப்பியரைப் பொறுத்தவரை கற்பு திருமணம் என்னும் சடங்கோடு பின்னிப் பிணைந்தது.

தொல்காப்பியர் காலத்தில் மட்டுமல்ல - இன்றும்கூட.

திருமணம் என்னும் சமூகச் சடங்கை - நாடகத்தை - நடத்தி முடிக்காமல் ஒருவனும் ஒருத்தியும் மனமொருமித்து இணைந்து வாழத் தலைப்படுவதை அன்றைய சமூகமோ இன்றைய சமூகமோ அனுமதிக்குமா ?

நாகரீகம் - வளர்ச்சி - இருபத்தியோராம் நூற்றாண்டு...என்றெல்லாம் எதைக்குறித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறோம் ? (3)

(மேலும் சிந்திப்போம்)
பின்குறிப்புக்கள் :

1. இக்கட்டுரையில் முன் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள கற்பனைக் காட்சிக்கு இலக்கியங்களில் ஆதாரங்களில்லை. இது ஆசிரியரின் கற்பனையே

2. இந்த வரிகளில் இதுவும் கற்பு நெறியே என்று வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர இதனையும் திருமணமாக ஏற்றுக்கொள்வதால் கற்பு நெறி சார்ந்ததே என்னும் கருத்தும் உண்டு. தொடர்ந்து பின்வரும் இரண்டு வரிகள் திருமணம் பற்றியே பேசுகின்றன. கற்பு பற்றி இவை வெளிப்படையாகக் கூறுவதில்லை. இவ்வரிகளை இரு வகையாகவும் நோக்கலாம்.

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

3. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை கட்டுரையாசிரியர் வரவேற்கிறார். கருத்துக்களை editor@varalaaru.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.