http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > ஆலாபனை
மஹாவைத்தியநாத சிவன்
லலிதாராம்
கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், ‘மஹா’ வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர்.

தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாக, 1844-ஆம் ஆண்டு, மே மாதம், 26-ஆவது நாள் பிறந்தவர் மஹா வைத்தியநாத ஐயர். இவரது தாயார், இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆதரவில் பல கீர்த்தனைகள் புனைந்த ஆனை-ஐயா சகோதரர்களின் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை பஞ்சநாத ஐயரும், இசையில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட தம்பதியினருக்குப் பிறந்த வைத்தியநாத ஐயர் இசையில் ஆர்வம் காட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வையச்சேரி வைத்தியநாதன் மஹாவைத்தியநாதனாக வளர்ந்து பெரும் புகழ் அடைந்ததில் முக்கிய பங்கு அவரது தமையன் ராமாசாமி ஐயரைச் சேரும். இச்சகோதரர்களை, ‘இரட்டையர்’ என்றே அனைவரும் அழைத்தனர். சிறு வயது முதலே, இருவரும் ஆன்மீகத்திலும், சங்கீதத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினர். இதனை உணர்ந்த பஞ்சநாத ஐயர், அப்பொழுது ஆட்சியில் இருந்த மராட்ட மன்னர் இரண்டாம் சிவாஜியின் சபைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார். இதனால், பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அச் சிறுவர்களுக்குக் கிட்டியது. இந்தப் பயணங்களின் போதெல்லாம், தஞ்சைக்கு அருகிலிருந்த ‘மஹாநோம்புச் சாவடியில்’ (இக்காலத்தில் மனம்புச் சாவடி) இருந்த வெங்கட சுப்பையரின் வீட்டில் தங்கி, தியாகையரின் சிஷ்யரான அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் அச் சிறுவர்க்ளுக்குக் கிட்டியது. இதனால், அந்நாளில் அரிதாக விளங்கிய பல ராகங்களில் அமைந்த தியாகையர் கீர்த்தனங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிட்டியது.

மஹாவைத்தியநாத ஐயருக்கு ஏழு வயதில் உபநயனம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிவகங்கை சின்ன வைத்தி, பெரிய வைத்தி போன்ற பல சங்கீதச் சக்கரவர்த்திகள் முன்னிலையில், தந்தையாரின் கட்டளைக்கு இணங்க, ராமசாமி - வைத்தியநாதன் சகோதரர்கள் பாடினார்கள். அவர்களது இசை, அறிஞர்களையும் பிரமிப்படைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இது நிகழ்ந்த சில மாதங்களில் வாசுதேவ ஐயங்கார் என்ற செல்வந்தரின் கிரஹ பிரவேசம் நடந்தது. அதற்காக, ச்¢வகங்கை வைத்தி சகோதரர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்யச் சென்றிருந்த ஐயங்காரிடம் வையச்சேரி ராமசாமி-வைத்தியநாதன் சகோதரர்களின் இசை வன்மையைப் பற்றி, பெரிய வைத்தியநாத ஐயர் பிரஸ்தாபித்து, அவர்களுடைய கச்சேரியையும் ஏற்பாடு செய்தார். இதுவே மஹாவைத்தியநாத ஐயரின் முதல் கச்சேரி என்று கொள்ளலாம்.

முதல் கச்சேரிக்குப் பின் ராமசாமி-வைத்தியநாதன் சகோதர்களின் புகழ் தஞ்சை ஜில்லா முழுவதும் பரவியது. அதனால் தொடர்ந்து பல கச்சேரிகள் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. காலப்போக்கில் வைத்தியநாதன் பாடகராகவும், அவரது தமையன் ராமசாமி, தமிழ்ப் பண்டிதராகவும் சிறந்து விளங்கினார்கள். பத்துப் பிராயமே நிரம்பிய பாலகனான வைத்தியநாதனின் கச்சேரிகள், புதுக்கோட்டை, மதுரை, எட்டையபுரம், ராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தது.

வைத்தியநாதனுக்கு ‘மஹா வைத்தியநாதன்’ என்ற பட்டம் கிடைத்ததைப் பற்றிய குறிப்புகளுள் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா-வின் குறிப்பின்படி, 1856-ஆம் ஆண்டு, தை மாதம், திருவாவடுதுறை மடத்தின், சின்னப் பட்டமாக விளங்கிய மேலகரம் சுப்ரமண்ய தேசிகரின் அழைப்பின் பெயரில் வைத்தியநாதனும், ராமசாமியும் கள்ளிடைக்குறிச்சிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்தில், நமசிவாய மூர்த்திகளின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி நிகழ்ந்த விழாவில் பாடுவதற்காகச் சிவகங்கை வைத்திகள், வீணை சின்னைய பாகவதர், பிச்சுமணி பாகவதர் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வந்திருந்தன்ர். அப்பொழுது, சிறுவனான வைத்தியநாதனை, ‘சிவகங்கை வைத்திகளுக்குப் போட்டியாய்ப் பாடச் சென்னால் என்ன,’ என்ற எண்ணம் சுப்ரமண்ய தேசிகருக்கு தோன்றியது. இரு தரப்பினரும் தயக்கமின்றி இசையவும், போட்டி ஆரம்பமாகியது. வீணை சின்னைய்ய பாகவதர் நடுவராகப் பொறுப்பு வகித்தார். சின்ன வைத்தியும், வைத்தியநாதனும் பல ராகங்களைச் சளைக்காமல் பாடினார்கள். நாட்டை ராகத்தைப் பாடும்பொழுது சின்ன வைத்தி அந்த ராகத்தில் பாடிய ஒரு ஸ்வரம் தவறென்று வைத்தியநாதன் கூறவும், அங்கே பெரிய சர்ச்சை மூண்டது. இறுதியில், வைத்தியநாதன் கூறியதே சரி என்று நடுவர் தீர்ப்பு கூற, சிவகங்கை வைத்திகள் தோல்வியடைந்தனர்.

போட்டியைத் தொடர்ந்து வைத்தியநாதன் தனியாகக் கச்சேரி செய்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சில பாடல்களுக்குப் பின், சக்கரவாஹ ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். அக்காலத்தில், பல மேளகர்த்தா ராகங்கள் பிரபலமில்லாமல் இருந்ததால், சக்கரவாஹ ராகத்தைப் பல வித்வான்கள் கண்டுகொள்ள முடியாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பெரிய வைத்தி உட்பட எவருக்கும் அந்த ராகம் புரியாததால், வைத்தியநாதன் அந்த ராகத்தை விளக்கி, தியாக்கைய்யரின் ‘சுகுணமுலே’ பாடலைப் பாடினார். இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த கச்சேரியின் நிறைவில், சிவகங்கை வைத்திகள் வையச்சேரி வைத்தியநாதனுக்குப் பட்டம் சூட்டும்படி ஆதீனத்திடம் விண்ணப்பித்தனர். அதற்கிணங்க ஆதீனமும், ‘மஹா’ என்ற பட்டத்தை வைத்தியநாத ஐயருக்குச் சூட்டினார்.

உ வே சாமிநாதையர் இப்படிச் சொல்யிருக்கிறார் என்றாலும், சுப்பைய பாகவதரின் குறிப்பில் நாட்டை ராகச் சர்ச்சையப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. போட்டியில் இருவரும் சளைக்காமல் படினார்கள். சங்கராபரண ராகத்தில் பல்லவி பாடுகையில் மஹாவைத்தியநாத ஐயர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினார். இதனால் மகிழ்ந்த பெரிய வைத்தியநாத ஐயர் மனமுவந்து அளித்த படமே ‘மஹா,’ என்கிறது அக்குறிப்பு.

இதைப்போலவே, மஹா வைத்தியநாத ஐயருக்கும் திருவிதாங்கூர் சபையில் வித்வானாக விளங்கிய கோயம்புத்தூர் ராகவ ஐயருக்கும் நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், சென்னையில் வேணு கோபால்தாஸ் நாயுடுவுக்கு எதிராக மஹாவைத்தியநாத ஐயர் பாடிய நாராயணகௌளை பல்லவியைப் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன.

அந்த சமயத்தில், கொடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்ற சன்யாசியிடம் ராமசாமியும், வைத்தியநாதனும் பஞ்சாக்ஷர ஜபத்தை உபதேசமாகப் பெற்றார்கள். இதனால், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ‘சிவன்’ என்று சேர்த்துக் கொண்டு, ராமசாமி சிவன் என்றும் மஹாவைத்தியநாத சிவன் என்றும் விளங்கினர். சென்னையில் மஹாவைத்தியநாத சிவனின் முதல் கச்சேரி, அவரது 22-ஆவது வயதில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பார்த்தசாரதி கோயில், மாதவப் பெருமாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில் போன்ற சென்னையின் பல முக்கிய இடங்களில் அவரது இசை ஒலித்த வண்ணம் இருந்த்து. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த சிவன், வருடம் முழுவதும், தென்னாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாடியவாறு கழித்தார்.

சிவனின் வாழ்வைப் பற்றி கிடைக்கும் குறிப்புகளில் வேறுபாடுகள் இருப்பினும் அவரது வித்வத்தையும், குரல்வளத்தையும் பற்றி கூறும் எல்லாக் குறிப்புகளும் ஒருமித்த கருத்தையே தெரிவிக்கின்றன. மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடக்கூடிய குரலும், ஆறு கால ப்ரமாணங்களில் அனாயசமாகப் பாடக்கூடிய ஆற்றலும், மின்னல் வேக ப்ருகாக்களை உதிர்க்கும் திறனும், அதி துரிதமாய் பாடும்பொழுதும் கமகங்கள் குலையாமல் பாடும் திறமையும் கொண்டிருந்தார் சிவன் என்று அவரது பாட்டை நேரில் கேட்டவர் பலர் கூறியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத ஐயர், கீர்த்தனங்களைத் தவிர பல அரிய தாளங்களில் பல்லவிகள் அமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். கஜ ஜம்பை, விலோகிதம், லக்ஷ்மீசம், சமடமருகம், தத்தாத்ரேயம், சிம்ஹானந்தம் போன்ற அரிய தாளங்களில் பல்லவி பாடியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

இசைக் கச்சேரி செய்ததோடன்றி, பல கீர்த்தனங்கள் அமைத்து, சிறந்த வாகேயகாரராகவும் விளங்கினார். தமிழறிஞராக விளங்கிய ராமசாமி சிவன், பெரிய புராணம் முழுவதையும் பல கீர்த்தனைகளாக இயற்றினார். சகோதரர்கள் இருவரும் ‘குஹதாச’ என்ற முத்திரையை தனது கீர்த்தனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத சிவன் தனது ஊரில் இருந்த நாளில் எல்லாம், தன் வீட்டு திண்ணையில் சிவ புராணக் காலக்ஷேபம் நடத்தினார். இந்த புராணங்களைக் கேட்கவும், அவற்றில் அவர் பாடிய கீர்த்தனங்களின் இனிமையில் திளைக்கவும், நிதமும் நிறைய கூட்டம் சேர்ந்தது..

பாடகர், வாகேயகாரர், ஹரிகதை நிபுணர் என்று பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிப் பல சாதனைகள் புரிந்த மஹாவைத்தியநாத ஐயரின் வாழ்வில் ஒரே ஒரு சாதனையை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில், அவரது 72 மேள ராகமாலிகையைச் சொல்லலாம். இரண்டாம் சிவாஜியின் மருமகனான சகாராம் சாஹேப், மஹா வைத்தியநாதரின் இசையின் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது சபையின் இருந்த ‘லவனி வெங்கட ராவ்’ என்ற அரசவைக் கவிஞர், 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர் வரும் வகையில், சகாராம் சாஹேபை புகழ்ந்து ஒரு பாடல் புனைந்தார். அப்பாடலுக்கு 72 மேளகர்த்தா ராகத்தில் இசையமைக்குமாறு மஹாவைத்தியநாதரை, சகாராம் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, 72 மேளகர்த்தா ராகங்களில் அந்த பாடலை அமைத்து, நிறைய சன்மானமும் பெற்றார். சன்மானமும் புகழும் அடைந்த போதிலும், இப்படியொரு அபூர்வமான ராகமாலிகையை ‘நர ஸ்துதிக்காக’ அமைத்தது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வே அவரை திருவையாற்றிலிருக்கும் ‘ப்ரணதார்திஹரரின்’ மேல் 72 ராக முத்திரை வருமாறு ஒரு பாடல் புனைய வைத்தது.
ராகங்கள் வெறும் ஸ்வரக் கோர்வையல்ல. ஒவ்வொரு ராகத்தின் சௌந்தர்யமும் அந்த ஸ்வரங்களுக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு ஸ்வரத்தையும் நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் ராகம் இருக்கிறதே தவிர, வெறும் ஸ்வரங்கள் ராகமாகா. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும், மத்யமத்தைப் பாடாமலே பல வித்தியாசங்களைக் காட்ட முடியும். ஸ்வரத்தால் ஒரு இம்மியளவே வித்தியாசமான அடுத்தடுத்த மேளகர்த்தா ராகங்களுக்கிடையிலான ராகபாவத்திலுள்ள வித்தியாசம் தெள்ளத்தெளிவாய் வெளிவரும் வகையில் மேளராகமாலிகை அமைக்கப் பட்டிருக்கிறது.

‘ப்ரணதார்திஹர ப்ரபோ’ என்று தொடங்கும் இப்பாடலின் பல்லவி ஸ்ரீ ராகத்தில் அமைந்திருக்கிறது. பல்லவியைத் தொடர்ந்து தில்லானாவில் வருவது போலச் சொற்கட்டுகள் வருகின்றது. அதன் பின் வரும் சரணங்களில், 72 மேளகர்த்தா ராகங்கள் ஒவ்வொன்றாய் வருகிறது. ஒவ்வொரு ராகத்தில் அமைந்த சாஹித்யமும், ஆதி தாளத்தின் இரண்டு ஆவர்த்தனங்களுக்கு வருகிறது. சாஹித்யத்தைத் தொடர்ந்து அந்த ராகத்துக்கான சிட்டை ஸ்வரம் வருகிறது. சிட்டை ஸ்வரத்துக்குப் பின் மீண்டும் ஒரு முறை சாஹித்யத்தைப் பாடி, அதனைத் தொடர்ந்து வேறொரு சிட்டை ஸ்வரம் வருவது போல் பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது சிட்டை ஸ்வரம் ஒரு ஆவர்த்தன அளவுக்கு வருகிறது. அந்த ஒரு ஆவர்த்தனத்தில், முதல் அரை ஆவர்த்தனம் அப்பொழுது பாடிக் கொண்டிருக்கும் மேள்கர்த்தா ராகத்திலும், அடுத்த அரை ஆவர்த்தனம் அதற்கு அடுத்து வரும் மேளகர்த்தா ராகத்திலும் அமைந்துள்லது. இந்த ஒரு ஆவர்த்தன சிட்டை ஸ்வரத்துக்குள், இரண்டு ராகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெளிவாக வெளிப்படும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மையான சிட்டை ஸ்வரங்களில், இரு ராகத்தை வேறுபடுத்தும் ஸ்வரம் இடம் பெறுகிறது. சில சிட்டை ஸ்வரங்களில் அந்த வேறுபடுத்தும் ஸ்வரம் வராமலும் இருக்கிறது. ஒரு சில மேளகர்த்தா ராகங்களே புழக்கத்திலிருந்த காலத்தில், 72 மேளகர்த்தா ராகங்களும் எழில் பொங்க ஒரே பாடலில் வலம் வருமாறு ஒரு பாடலை அமைத்திருப்பது என்பது ஒரு அமானுஷ்ய சாதனையாகும்.

வரகூர் குருமூர்த்தி சாஸ்திரிகள் தமிழில் இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார். பாடலில், ஆழ்ந்த அத்வைத தத்வங்களைக் கூறியிருக்கிறார் மஹாவைத்தியநாத ஐயர். பாடலில் ராகங்களின் பெயர்கள் திணிக்கப்பட்டது போலல்லாமல் இயற்கையாக அமைந்துள்ளது. சில இடங்களில், பொருள் குலையாமல் இருக்க, ராகத்தின் பெயர் சற்றே மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏழாவது மேளகர்த்தாவான ‘சேனாவதியின்’ பெயர் ‘சேனாபதி’ (தேவ சேனாபதி) என்று வருகிறது. பாடலின் சரணம், இரண்டு சக்கரம் (12 ராகங்கள்) நிறைவானதும், ‘ப்ரணதார்திஹர’ என்ற பல்லவிக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சரணமும், தனித்தன்மையுடனும் முழுமையுடனும் இருப்பதால், கச்சேரிகளில் பாடும் பொழுது, ஏதேனும் இரண்டு சக்கரங்களை மட்டும் பாடும் வகையில் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலிலிருந்து, மஹாவைத்தியநாத ஐயரின் இசையறிவும், ஆன்மீக அறிவும், வடமொழிப் புலமையும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிறு வயது முதல் கச்சேரிகளுக்காக தென்னாடு முழுவதும் பயணம் செய்த சிவன், 1891-ஆம் வருடம், ஓய்வின்மையாலும், பயணங்களின் பொழுது சரியாக உணவு அருந்தாமல் வருத்திக் கொண்டதாலும் நோயுற்றார். நினைவிழந்த நிலையில் பலமாதங்கள் கழித்த மஹா வைத்தியநாத ஐயர், 1893-ஆம் வருடம், ஜனவரி 27-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

மஹாவைத்தியநாத ஐயரின் மறைவுக்குப் பின் ராமசாமி சிவன், “”மஹா வைத்தியநாத விஜய சங்க்ரஹம்” என்ற சங்க்ரஹத்தில் தனது சகோதரரின் சாதனைகளை பட்டியலிட்டு வெளியிட்டார். இதைப் பற்றி இன்று குறிப்புகள் கிடைக்கிறதே தவிர, சங்கிரஹம் கிடைக்கவில்லை. இச்சங்கிரஹத்தில் பல மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருப்பதாகத் தெரிகிறது. மஹா வைத்தியநாத சிவனின் சாதனைகளுள், அவர் பல சமகால வித்வான்களை வெற்றி கொண்டதற்கானத் தகவல்கள் இதில் இருந்ததாகவும், இதை எதிர்த்து ‘பட்டணம் சுப்ரமண்ய ஐயர்’ கண்டனம் வெளியிட்டதாகவும் தெரிகிறது.

அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாகவே வாழ்ந்த மஹா வைத்தியநாத ஐயரின் புகழ், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


துணை நூல் பட்டியல்:

1. சங்கீத மும்மணிகள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
2. ஸ்ருதி மாத இதழ், ஆக்ஸ்டு 2003 வெளியீடு
3. ‘நா கண்ட கலாவிதரு’, மைசூர் வாசுதேவாச்சாரியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
4. “மேள ராகமாலிகா”, எச்.ஆர்.ஜானகிராமனின் சொற்பொழிவு.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.