![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 19
![]() இதழ் 19 [ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அவர் கிழவர். வயது எழுபதுக்கு மேல் சொல்லலாம். தும்பைப் பூவாய் நரைத்த தலை. எளிய ஆடைகள்.. நெற்றி நிறைய திருநீறு. பழுத்த சிவப்பழம். வாய் எப்போதும் எதையாவது முணுமுணுத்துக்கொண்டிருக்கும். உடலில் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாத முகபாவம். ஓய்வெடுக்கும் இரவு நேரம் தவிர எப்போதும் உடம்பு பரபரவென்று வேலைசெய்துகொண்டிருக்கும்.
எப்போது பார்த்தாலும் கையில் ஒரு உழவாரப் படையுடன்தான் காட்சி தருவார். கிழவருக்கு குடும்பம் குழந்தை குட்டிகளெல்லாம் இருப்பதுபோல் தெரியவில்லை. ஊர் ஊராகச் செல்வது - அங்குள்ள கோயில்களை சுத்தம் செய்வது என்று ஓடிக்கொண்டிருக்கிறது பிழைப்பு. தமிழ் நாவில் விளையாடும்.... அவ்வப்போது நடுங்கும் குரலில் ஏதாவது ஒரு பாடலை எடுத்து விடுவார் பாருங்கள் - அப்படியே காற்று இலை செடிகளெல்லாம் ஸ்தம்பித்துப் போய்க் கேட்கும் ! கிழவனாரை எனக்கு ஆறு ஏழு ஆண்டுகளாகப் பழக்கம். தமிழ் கற்கப் போய் ஏறக்குறைய அவரிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். தன் அன்பினாலும் மொழிஆளுமையாலும் என்னைக் கட்டிப்போட்டு விட்டார் அவர். சென்ற முறை சந்தித்தபோது அவர் சொன்ன பாடலைக் கேளுங்களேன் : அன்பினானஞ்ச மைந்துடனாடிய என்பின் ஆனையுரித்துக் களைந்தவன் அன்பிலானையம் மானையள் ளூறிய அன்பினால் நினைந்தாரறிந்தார்களே ! அவ்வப்போது அவரை நினைக்கும்போதெல்லாம் பொறாமையாக இருக்கும். இப்படியொரு எளிமையான வாழ்வு நமக்கு அமையாமல் போய்விட்டதேயென்று... என்ன செய்வது, ஊழ்வினை என்று ஒன்று இருக்கிறதே ! எதற்காக அவரைப் பற்றிய ஞாபகம் வந்ததென்றால், ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும்போதும் "உன் போன்ற இளைஞர்களை சேர்த்துக்கொண்டு அருகில் இருக்கும் பழமையான கோயில்களுக்குச் சென்று சுத்தம் செய்துவிட்டு வாயேன் !" என்பார். நானும் ஒவ்வொரு முறையும் "கண்டிப்பாகச் செய்கிறேன் !" என்று சொல்வேனே தவிர ஏனோ அதனை காரியத்தில் செயலாக்க முடியவில்லை. கிழவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் - ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன் தன் பூத உடலோடு இந்த மண்ணில் நடமாடிய மனிதர் அவர். தற்போது பரு உடல் மறைந்துவிட்டாலும் சூட்சும உடலை அவர் விட்டுச்சென்றுள்ள தேன் தமிழ்ப்பாடல்களில் தரிசனம் செய்ய முடிகிறது. அவருடைய பெயர் திருநாவுக்கரசர் பெருமான். அப்பர் என்று அணுக்கமானோர் அழைப்பர். மரியாதையில்லாமல் நான் கிழவர் என்று குறிப்பிட்டிருப்பதை மன்னித்துவிடுங்கள். கிழவர் என்னை மட்டுமல்ல - ஊரில் பலரின் உள்ளங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார். அதில் முக்கியமானவர் நண்பர் ஆடலரசன். நேரில் இன்னும் சந்திக்காவிட்டாலும் - ஒரு வார்த்தை பேசியிராவிட்டாலும் - அவர் நண்பர்தான். முதன் முதலில் நமது பொன்னியின் செல்வன் குழு தோழி பவித்ரா சீனிவாசன் மூலம்தான் இவர் பரிச்சயமானார். வேளச்சேரியிலிருந்து இயங்கும் இவருடைய "உழவாரத் திருப்பணி மன்றத்தினர்" எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரம் பேராம் ! இவர்களுடைய வேலை என்ன என்கிறீர்கள் ? மாதா மாதம் ஏதாவது ஒரு கோயிலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அக்கோயிலில் உழவாரப் பணி செய்வதுதானாம். பணியில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வேளை உணவும் மன்றத்தினரால் தரப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் என்று பல கோயில்களிலும் இவர்களது உழவாரப்பணி நடந்தேறியுள்ளது. ஒரு முறை மேலையூர்க் கோயிலில் 9 ஐம்பொன் சிலைகளை பணி நேரத்தில் கண்டறிந்துள்ளது இம் மன்றம் என்றால் இதன் பணிகளை என்னவென்று சொல்வது ? இப்பணியில் ஈடுபட திரு.ஆடலரசன் அவர்களை நேரில் தொடர்பு கொள்க. அவருடைய முகவரி Thiru.Aadalarasan 14, Balasubramaniar Kovil Street, Lakshmi Nagar, Velachery, Chennai 600 042 Ph. No. 2 245 1555 பவித்ரா இந்தக் குழுவினருடன் சென்று திருப்பணியில் ஈடுபட்டு வந்து ஒரு அறிக்கையும் அளித்தார். அதனை கீழ்கண்ட சுட்டியில் காணலாம். http://groups.yahoo.com/group/ponniyinselvan/message/1119 (Message viewable by members only - இதனைப் படிக்க பொ.செ.குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும் ஐயா !) கிழவனாரால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு கூட்டத்தினரையும் இணைய உலகில் சந்திக்கலாம். நண்பர் ராஜன் கணேஷின் உபயம். http://groups.yahoo.com/group/temple_cleaners/ தற்போதுதான் துவங்கப்பட்டுள்ள இந்தக் குழு முதல் வேலையாக இந்த மாதம் ஜனவரி 15ம் தேதி கோவூர் என்னும் பழங்கோயிலுக்குச் சென்று உழவாரப் பணியில் ஈடுபட்டுத் திரும்பியுள்ளது. இந்த அனுபவங்களை திரு.சந்திரா விரிவாக கீழ்க்கண்ட சுட்டியில் எழுதியுள்ளார். http://templesrevival.blogspot.com/ அடுத்த முறை ஆடலரசன் குழுவிலோ Temple cleaners குழுவிலோ சேர்ந்து உழவாரப்பணிக்காக பழங்கோயில்களுக்குச் செல்லும்போது ஏதாவது ஒரு தலை வேலையை ஒழுங்காக கவனிக்காமல் கல்வெட்டுக்கள் ஏதாவது அக்கோயிலில் தென்படுகின்றனவா என்று தேடிக்கொண்டிருந்தால் அவர்களை தொலைந்து போகிறார்களென்று மன்னித்து விட்டு விடுங்கள். ஏனெனில் அது வரலாறு டாட் காம் வாசகராகவோ....Worse still.... எழுத்தாளராகக்கூட இருக்கக்கூடும் ! அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |