http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 56
இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
பிரிந்த தலைவரை நினைத்து நீர் வறண்ட விளைநிலம் போலத் துன்பத்தோடு தவிக்கும் என்னைச் சற்று ஆறுதல் கொள் என்கிறாயே, எப்படி முடியும் தோழி? வள்ளல்கள் வழங்கிய பொருளை எதிர்காலத்திற்கு எனச் சேமித்து வைக்காமல் உண்டும், உடுத்தும் இழந்த கலைஞர்கள், 'இது எங்கள் ஊர்' என்று சொல்லிக் கொள்ளப் பிறந்த ஊரில் எவ்வித உடைமையும் அற்றவர்கள். அது ஒரு வகையில் இடையூறற்ற வாழ்க்கைதான். என்றாலும், பாயால் வேயப் பெற்ற இற்றுப்போன வண்டியில் ஊர் ஊராகச் சென்று பிழைக்கும் அந்த வாழ்க்கை துன்பமானது. பாலை வழியில் வண்டிப் பயணம் தரும் துன்பம் தவிர்க்கக் கண்களில் படும் பெருமரங்களின் நிழலில் களைப்பாற்றிக் கொண்டு, ஊர் ஊராகச் சென்று, அவ்வூர்களின் மன்றங்களில் அக்கலைஞர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்வுகள் அரியவை. இனிய ஒலியினை எழுப்பும் கிணைப்பறையை முழக்கும் ஆடவர் தலையில் குவிந்த கொத்துக்களை உடைய எருக்கம் பூக்களால் ஆன கண்ணி காட்சிதரும். காட்டுத் தீயின் அழலொத்த ஆவிரைப் பூக்களால் ஆன மாலை அவர்தம் மகளிர் மார்பகங்களைத் தழுவி அசையும். பிடியும் களிறும் கூடினால் எழும் ஒலிகளை ஒப்பக் குறுந்தூம்பும் நெடுந்தூம்பும் முழவும் இசைத்து, மேகங்களின் மோதலினால் பொழியும் நீருக்குத் தேரைகள் எழுப்பும் ஒலி போலத் தாளம் கூட்டி, சிற்சில இசைக்கருவிகளுடன் அரித்தெழும் ஓசை எழுப்பிக் கூத்து நிகழ்த்தி வயிறு கழுவும் இக்கலைஞர்கள், நிகழ்வின் முடிவில் அனைத்துக் கருவிகளையும் பையொன்றில் இட்டுக் கட்டிச் செல்லும் பெருங்குடும்பினர். கலை நிகழ்வுகளால் உயிர் பெற்றிருந்த மன்றம் கலைஞர்களின் நீங்கலால் பொலிவற்று, ஒலியற்று ஊராருக்குத் துன்பம் தரும் காட்சியாய் மாறும். இந்த மாலைப்போதில் ஊராரின் அத்தகு மனநிலையிலேயே நான் இருக்கிறேன். காதலர் தந்த காதலை மறக்கவும் கூடுமோ? அவர் இல்லாத இந்த இடம் கலைஞர்கள் இல்லாத மன்றம்தான். காட்சிகள் இல்லாத மேடைதான். அகம் : 301 வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப் படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறுநனி ஆன்றிகம் என்றி- தோழி- நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு நீர்வாழ் முதலை ஆவித் தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து ஊர்இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப் பாடுஇன் தெண்கிணை கறங்கங் காண்வரக் குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர்பூங் கோதை வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக் குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக் கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தொடு பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத் தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர் இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன்றலை மன்றங் காணின் வழிநாள் அழுங்கன் மூதூர்க்கு இன்னா தாகும்; அதுவே மறுவினம் மாலை யதனால் காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே? this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |