http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 56
இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாக நான் எடுத்துக் கொண்ட பகுதி தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெரும்பகுதியையும் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்ததால் அந்த எல்லைக்குட்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளையும் தொகுக்கவேண்டியிருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலம் பல்லவர்களின் இறுதிக்காலம் முதல் நாயக்கர்களின் காலம் வரை. தலைப்பு முடிவானதும், 'நீங்கள் உங்கள் தலைப்பின் கீழ் அமைந்த பகுதியிலுள்ள கல்வெட்டுகளைத் தொகுத்து அவற்றை, நானும் பேராசிரியர் கரோஷிமாவும் இணைந்து உருவாக்கிய அமைப்பைப் பயன்படுத்திக் கல்வெட்டுத் தரவுகளைப் பல்வேறு தலைப்புகளின் கீழ்ப் பிரித்து எழுதி, அவற்றைக் கணினியில் ஏற்றவேண்டும்' என்று கூறியவர், அதை எப்படிச் செய்வது என்பதற்கு ஒரு மாதிரியையும் தந்து, 'முதலில் ஒரு நூறு கல்வெட்டுகளைப் பிரித்து எழுதிக்கொண்டு வாருங்கள்' என்று வழிகாட்டினார். நான் அவரைப் பார்த்து நடந்தவற்றைக் கூறியதோடு எனக்கு வழிகாட்டுமாறும் கேட்டுக் கொண்டேன். அவர் பேராசிரியர் தந்த கல்வெட்டுப் பிரித்தெழுதும் அமைப்பைப் பார்த்தார். 'மிகவும் எளிதாகத்தானே இருக்கிறது. பேராசிரியரே ஒரு மாதிரியும் தந்திருக்கிறார் அதன்படிக் கல்வெட்டுகளைப் பிரித்தெழுதலாமே' என்று என்னை ஊக்கப்படுத்தினார். 'நான் ஒரு பத்துக் கல்வெட்டுகளை மட்டும் பேராசிரியர் கூறியது போல் பிரித்து எழுதிக் கொண்டு வருகிறேன். நீங்கள் சரியாக இருக்கிறதென்றால் இந்தப் பணியை நான் தொடர்ந்து செய்கிறேன்' என்று கூறினேன். 'அப்படியே செய்யுங்கள்' என்று கூறியதோடு, 'உங்கள் ஆய்வு எல்லைக்குள் உள்ள அனைத்து ஊர்க் கல்வெட்டுகளையும் நீங்கள் தொகுக்கவேண்டும். அதனால் முதலில் இந்தப் பகுதியில் எந்தெந்த ஊர்களில் கோயில்கள் உள்ளன. அவற்றுள் பாடல் பெற்றவை எத்தனை? கோயில்கள் இருந்தால் அங்குக் கல்வெட்டுகள் உள்ளனவா? அவற்றை நடுவண் அரசு படியெடுத்துள்ளதா? படியெடுத்திருந்தால் அவை எந்த ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன என்பன போன்ற தரவுகளைச் சேகரியுங்கள்' என்று பல கோணங்களில் கல்வெட்டுகளைத் தொகுக்கும் வழிமுறைகளை அவர் எனக்குக் கற்றுத்தந்ததோடு, 'நடுவண் அரசு பதிவுசெய்யாமல் விட்ட கோயில்கள் ஏதாவது இருக்கின்றனவா என்றும் கோயில்களில் கல்வெட்டுகள் ஏதேனும் படியெடுக்காமல் விடுபட்டிருக்கிறா என்றும் தெரிந்துகொண்டு அந்தக் கல்வெட்டுகளையும் உங்கள் ஆய்வில் சேர்த்தால்தான் ஆய்வு முழுமைபெறும்' என்றும் அறிவுறுத்தினார். அப்போதுதான் முதுநிறைஞர் பட்டபடிப்பின்போது பழுவூருக்கு மட்டும் சென்று அங்குள்ளக் கல்வெட்டுகளைப் படித்து செய்திகளைத் தொகுத்தது போல் எளிதான காரியம் அல்ல முனைவர்பட்ட ஆய்வு என்பதை நான் புரிந்துகொண்டேன். என்னுடைய அச்சத்தை உணர்ந்தவர், 'இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. பழுவூர் ஆய்வின்போது ஒப்பீட்டிற்காகப் பல ஊர்களுக்குச் சென்று கோயில்களையும் கல்வெட்டுகளையும் பார்க்கவில்லையா? அப்போது மேலாட்டமாகச் செய்தீர்கள். இப்போது ஆழமாகவும் பரவலாகவும் செய்யவேண்டும், காலம் அதிகமாக இருப்பதால் நீங்கள் இப்பணியை எளிதாக முடிக்கலாம்' என்று துணிவூட்டினார். அவருடைய உரையும் வழிகாட்டலும் என் அச்சத்தை அகற்றின. செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. எப்படிச் செய்யவேண்டும் என்பது குறித்து ஒரு வாரம் சிந்தியுங்கள். வழிமுறைகள் பிறக்கும் என்று அவர் கூறியிருந்ததால் அந்த வாரம் முழுவதும் திட்டமிடுவதிலேயே என் சிந்தனையைச் செலுத்தினேன். முதலில் கல்வெட்டுகள் உள்ள கோயில்களைக் குறித்துக்கொண்டு ஒவ்வோர் ஊர்க் கோயிலிலும் உள்ள கல்வெட்டுகளைப் பல்லவர், பாண்டியர், சோழர், பிற்பாண்டியர், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் எனும் அரச மரபுகளின் கீழ் இனம் பிரித்து, ஒவ்வொரு காலப் பகுதியின் கீழும் எவ்வளவு கல்வெட்டுகள் உள்ளன என்பதை வகைப்படுத்தினேன். ஒவ்வொரு கல்வெட்டையும் ஒரு முறைக்குப் பலமுறை படித்து அவற்றிலுள்ள தரவுகளை ஆராய்ந்து மன்னர் பெயர், ஆட்சியாண்டு, வளநாடு, நாடு அல்லது கூற்றம், ஊர்ப்பெயர்கள், கொடையாளிகளின் பெயர்கள், கோயில் பெயர், இறைவன் பெயர், இறைவனுக்கு அளிக்கப்பட்ட கொடை, மக்கள் பெயர்கள், இனப்பெயர்கள், அளவைகள் எனப் பல தலைப்புகளின் கீழ் அத்தரவுகளைப் பிரித்து எழுதினேன். முதல் பணியை அவரிடம் காட்டினேன். நான் தரவு பிரித்திருந்த பத்துக் கல்வெட்டுகளையும் நன்கு வாசித்த பிறகே என்னுடைய தயாரிப்பை அவர் பார்வையிட்டார். அவரிடம் எனக்கு எந்தத் தயக்கமும் இருத்ததில்லை என்றாலும் தேர்வு எழுதிய மாணவியைப் போல் மிகுந்த எதிர்பார்ப்புடனும் என்ன சொல்வாரோ என்ற அச்சத்துடனும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் கல்வெட்டிலேயே மூன்று, நான்கு தரவுகள் விடுபட்டிருந்தமையை சுட்டிக்காட்டினார். நான் பலமுறை படித்துக் குறிப்பெடுத்துப் பின் தரவுகள் தொகுத்து எழுதிய கல்வெட்டு அது. இவ்வளவு உழைத்தும் தரவுகள் விடுபட்டுப் போயிற்றே என்று துன்பமுற்றேன். என் உணர்வுகளை முற்றிலும் புரிந்தவர் போல் என்னைப் பாராட்டினார். 'பரவாயில்லையே, முதல் முயற்சியிலேயே இவ்வளவு தரவுகளைத் தொகுத்திருக்கிறீர்களே. நானாயிருந்தால் நிறைய விடுபட்டுப் போயிருக்கும். நல்ல கவனத்துடன் உழைத்திருக்கிறீர்கள். அடுத்த முறை இந்த நான்கு தரவுகள்கூட விடுபடாமல் செய்வது உங்களுக்கு எளிதே' என்று அவர் கூறியபோது, இந்த மனிதர் எப்படி இப்படிச் சட்டென்று உள்ளத்தைப் படித்துவிடுகிறார் என்று வியந்தேன். என் குறைகளைக்கூட நிறைகளைப் போல் உயர்த்திப் பேசிய அந்தப் பாங்கு எனக்குப் பெரும் உற்சாகம் தந்தது. ஆய்வு வளர, வளரப் பின்னாளில் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன் என்றாலும்கூட தொடக்க நாட்களில் என்னுடைய எந்தப் பிழையையும் அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. தொடக்கத்திலேயே குறைகளைச் சுட்டிக்காட்டி அவை குறித்தே பேசினால் நான் ஆர்வம் இழந்துவிடுவேன் என்று அவர் கருதியதைப் பின்னாளில் சொல்லியிருக்கிறார். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில், தவறுகளைக் குறைத்துக்கொள்ள வழிகாட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். கல்வெட்டுத் தரவுகளைப் பிரித்து எழுதுவதற்குக் கல்வெட்டுத் தொகுதி எண் 24ல் வெளியிடப்பட்டுள்ள திருவரங்கம் கோயில் கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டேன். அந்தத் தொகுதியை அதற்கு முன் கல்வெட்டுத் தொடர்பான சொற்கள், பெயர்கள் இவற்றிற்காகப் பார்த்திருக்கிறேன். 'காவிதி' பற்றிய செய்திகளைத் தொகுத்தபோது தொகுதியின் சொல்லடைவில் அந்தச் சொல் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று தேடியிருக்கிறேன். திருப்பைஞ்ஞீலி கோயில் ஆய்வின்போது பிற்சோழர், பிற்பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் பெயர்களைக் கொண்டு கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் இராஜராஜரா அல்லது முதலாம் சடையவர்மர் சுந்தர பாண்டியரா அல்லது இரண்டாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரா என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கும் இந்தத் தொகுதியைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், முனைவர் பட்ட ஆய்விற்கு தொகுதியிலுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் விரிவாகப் படித்துத் தரவுகளைத் தொகுக்கவேண்டியிருந்தது. அந்தத் தொகுதியில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டவை முதலாம் ஆதித்தராகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் கல்வெட்டுகள். முற்சோழ மன்னர்களில் பராந்தகரின் கல்வெட்டுகளாக எட்டு இடம்பெற்றுள்ளன. இந்தப் பத்துக் கல்வெட்டுகளைத்தான் தரவுகள் பிரித்து அவரிடம் எழுதிக்காட்டினேன். திருவரங்கம் தொகுதியில் மொத்தம் 644 கல்வெட்டுகள் உள்ளன. அவை திருவரங்கம் கோயில் பற்றியதாக இருந்தாலும் அக்கோயிலுடன் தொடர்புடைய பல ஊர்களைப் பற்றிய செய்திகளைத் தருவனவாக அமைந்துள்ளன. பிற்சோழர் காலக் கல்வெட்டுகளைப் பிரித்து எழுதியபோதுதான் காவிரியில் வெள்ளம் வந்த காலங்களில் அதன் கரையை ஒட்டிய ஊர்களின் நிலங்கள் மணல்படிந்து பயிர் செய்ய இயலாத நிலையை அடைந்தன என்பதும் பல்வேறு கொடையாளர்கள் அந்த மணலிட்ட நிலங்களை கோயில் நிருவாகத்திடமிருந்து விலைக்கு வாங்கி அவற்றைப் பண்படுத்தி மீண்டும் விளைநிலமாக மாற்றிக் கோயிலுக்குக் கொடையாகத் தந்தார்கள் என்பதும் அவ்வாறு தந்தபோது தரப்பட்ட கொடை நிலங்களுக்கு விளாகம் என்று பெயரிட்டு வழங்கினார்கள் என்பதும் தெரியவந்தன. அப்படியானால் திருத்துவிக்கப்பட்ட நிலங்கள்தான் விளாகம் என்று அழைக்கப்பட்டனவா? அதற்கு வேறு கல்வெட்டுகளில் சான்றுகள் இருக்கின்றதா என்று பலபட ஆராய்ந்ததன் விளைவுதான் விளாகம் என்ற கட்டுரை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. இந்தக் கட்டுரையை எழுதலாம் என்று என்னைத் தூண்டியவரே அவர்தான். 'ஒரு புதிய சொல்லைப் பொருளுடன் கண்டறிந்திருக்கிறீர்கள். இந்தச் சொல் காலநிரலில் எப்படியெல்லாம் பொருள் மாறியிருக்கிறது, ஒரு வேளை ஒரே பொருளில் வழங்கியிருக்குமானால் அதற்கான சான்றுகள் என்று பரவலாகப் பாருங்கள். தமிழ்நாட்டின் பல பகுதிக் கல்வெட்டுகளிலும் இச்சொல் வழக்கில் உள்ளதா என்பதை ஆராயுங்கள். சில சொற்கள் சில இடங்களில் மட்டும் வழங்கும். நாடு முழுவதும் வழங்கும் சொற்களும் உண்டு. காலம், இடம் இந்த இரண்டு பார்வையிலும் ஆராய்ந்தால் அருமையான கட்டுரையை நீங்கள் உருவாக்கலாம்' என்று எனக்கு வழிகாட்டியவர் அவர்தான். அவருடைய அறிவுரையை ஏற்று நான் உருவாக்கிய இந்தக் கட்டுரை பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு மணிவிழா மலரில் இடம்பெற்றமையை இன்று நினைத்தாலும் பெருமையும் மகிழ்வும் ஏற்படுகின்றன. பேராசிரியர் முனைவர் ச. முத்துக்குமரன் பாரதிதாசன் பல்கலையில் துணைவேந்தராக இருந்தபோது அவரால் நடத்தப்பட்ட இந்திய அளவிலான கல்வெட்டியல் கருத்தரங்கில் திருவரங்கம் கோயிலில் குறிக்கப்பட்டுள்ள ஊர்கள் பற்றியதாக ஒரு கட்டுரை அளிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்திய அளவிலான கருத்தரங்கில் நான் கட்டுரை படிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. அந்த ஓர் அரிய வாய்ப்பையும் உருவாக்கித் தந்தவர் அவர்தான். 'நீங்கள் திருவரங்கம் கோயில் கல்வெட்டுகளில் நிறைய நாட்டுப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறீர்களே, அது பற்றி ஒரு கட்டுரையை உருவாக்குங்கள்' என்று கூறினார். எப்பொழுதும் போல் கட்டுரை எது பற்றி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள் என்றேன். அவரும் திருவரங்கம் கோயிலுக்குக் கொடையளித்தவர்கள் பற்றி மட்டும் உங்கள் கட்டுரை அமையலாம். அதுவும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் இருந்தாலே போதும் என்றார். கொடையாளர்களைப் பற்றி மட்டும் ஒரு கட்டுரையா என்று வியந்தேன். அவர் இதை யோசிக்காமலா இந்தத் தலைப்பில் செய்தி சேகரிக்கச் சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொடையாளர்களின் ஊர்களை மட்டும் தொகுக்கும் பணியைத் தொடங்கினேன். அவர் கூறியது போலவே ஏராளமான செய்திகள் கிடைத்தன. கொடையாளர்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், குஜராத், ஒரிசா ஆகிய பகுதிகளில் இருந்தும் வந்திருந்தமை தெரியவந்தது. இதில் முக்கியமான செய்தி என்ன என்றால் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூட திருவரங்கம் கோயிலுக்குக் கொடையளிக்கவில்லை என்பதுதான். பேராசிரியர் சுப்பராயலுவிடம் கட்டுரையைத் தயாரிக்கும் முன்பே அனுமதி பெற்றதோடு எழுதிய பிறகு கட்டுரையை அவரிடம் காட்டினேன். கொடையாளர்கள் பற்றிய கண்டறிதல் பேராசிரியரை வியப்புக்குள்ளாக்கியது. திருவரங்கத்திலிருந்து ஒருவர்கூடவா கொடையளிக்கவில்லை என்று வியந்தவர் என் முயற்சியைப் பாராட்டி கட்டுரையை மாநாட்டில் படிக்க மகிழ்வுடன் அனுமதி அளித்தார். கட்டுரையைப் படித்தபோது அவையிலிருந்த பல அறிஞர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. அன்று முழுவதும் அவரைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கொடையாளிகளின் பெயர்களைத் தொகுத்தால் போதும். ஒரு கட்டுரை உருவாகும் என்று அவர் கூறியபோது எனக்கேற்பட்ட அவநம்பிக்கை, இது ஒரு தலைப்பாகுமா, இத்தலைப்பின் கீழ்த் தேவையான தரவுகள் அமையுமா, வெறும் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி ஒரு கட்டுரையை உருவாக்கமுடியும் என்றெல்லாம் நான் தடுமாறியதை நினைத்துப் பார்த்தேன். அவர் மீதிருந்த நம்பிக்கையினால் மட்டுமே திருவரங்கம் கல்வெட்டுகளைக் கொடையாளிகளின் பெயர்களுக்காகப் படித்துத் தரவுகள் தேர்ந்தேன். நூறு கல்வெட்டுகள் முடியும்போதே என் அவநம்பிக்கை அகன்றது. உள்ளத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. குவிந்த தரவுகள் வியப்புத் தந்தன. எத்தனை ஒரு முன்னோக்குடன் இந்த மனிதர் நம்மை ஊக்குவித்திருக்கிறார் என்று பல முறை நினைத்துக்கொண்டேன். 644 கல்வெட்டுகளையும் முடித்தபோது ஒருதொடரே எழுதக்கூடிய அளவிற்குக் கொடையாளிகள் பற்றிய தரவுகள் கிடைத்திருந்தன. நானும் அவரும் பலமுறை தரவுகளைப் படித்துப் பார்த்து மிக அரியனவாக இருந்தவற்றை மட்டும் தொகுத்துக் கட்டுரையாக்கியதை இப்போது நினைத்துப்பார்த்தாலும் மெய்சிலிர்க்கிறது. எந்த ஓர் ஆய்வையும் மேலோட்டமாகக் கருதிவிடக் கூடாது. எதிலிருந்தும் வரலாறு கிடைக்கும். தரவுகள் தேடுவார் தகுதியறிந்தே முன்னிலைப்படும். அறிவு அறியாததைக் கண்கள் பார்க்காது. செவிகள் கேட்காது. உள்ளம் பதிவு செய்யாது என்று அவர் அடிக்கடி கூறுவார். அது எவ்வளவு உண்மை என்பதை இந்தக் கட்டுரை எனக்கு மிகத் தெளிவாக விளக்கியது. இந்தக் கட்டுரைக்காக நான் தயாரித்த தரவுகள் பின்னாளில் பல கட்டுரைகளை உருவாக்க எனக்கு உதவின. என் ஆய்வேட்டிற்கும் இந்த ஒரு தயாரிப்பு பெருமளவிற்குத் துணைநின்றது. ஓர் இயலே திருவரங்கம் பற்றி உருவாக்க முடிந்ததென்றால் அந்தச் சிந்தனையை விதைத்ததே இந்தக் கட்டுரைதான். துணைவேந்தர் கட்டுரையின் சிறப்பைப் பாராட்டியதாகக் கருத்தரங்க முடிவில் அவர் தெரிவித்தபோது என் உள்ளம் நிறைந்தது. உழைப்பின் வாரா உறுதியும் உண்டோ? திருவரங்கம் தொகுதியிலுள்ள கல்வெட்டுகளைப் புரிந்து கொள்வதற்கு அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டியிருந்தது. 644 கல்வெட்டுகளில் இருந்தும் செய்திகளைத் திரட்டுவதற்கே இரண்டாண்டுகள் பிடித்தன. 1990ல் தொடங்கிய முனைவர் பட்ட ஆய்வு 1999ல் தான் முடிந்தது. பலமுறை அந்தத் தொகுதியைப் பிரித்துப் படிக்கவேண்டியிருந்ததால் என் ஆய்வை முடித்தபோது அந்தத் தொகுதி ஏடு ஏடாக மாறிவிட்டது. தொகுதியைப் பார்த்த அவர், 'படித்துக் கிழித்தல் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு நீங்கள்தான். தொகுதியை இப்படிப் பக்கம் பக்கமாக்கி விட்டீர்களே' என்று கேலி செய்து சிரித்தார். ஆனால், இது பற்றி மற்றவர்களிடம் கூறியபோதெல்லாம், 'தொகுதி ஏடுஏடாக இருக்கிறதென்றால் அந்தத் தொகுதியை அவர் எத்தனை முறை பிரித்துப் படித்திருப்பார் என்பதை புரிந்துகொள்ளலாம்' என்று என்னைப் பற்றிப் பெருமையாகக் கூறுவார். இது பெருமைப்படும் செய்தியா என்பது எனக்கு இன்றும் விளங்கவில்லை. (வளரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |