http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > தலையங்கம்
வாழ்வியலில் வரலாறு
ஆசிரியர் குழு
வாங்க வாங்க வாங்க !

அட, என்ன வாசற் படியிலேயே நிக்கிறீங்க, சும்மா உள்ள வாங்களேன்!

பலமான வரவேற்பையும் இந்த மாத இதழின் தலைப்பையும் பார்த்துவிட்டு, என்னதான் உள்ள இருக்குமென்று யூகிக்கிறீர்களாக்கும்?

சுத்தமான, கலப்படம் எதுவுமற்ற, 100% சுத்திகரிக்கப்பட்ட வரலாறு சமாச்சாரமுங்க இது!

சரிதான். அப்போது இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று பக்கத்தைப் புரட்டத் தோன்றுகிறதா?

அட, இத்தனை அவசரப்படாதீர்கள் என்கிறேன்! வந்தது வந்தீர்கள். ஒட்டுமொத்தத் தலையங்கத்தையாவது முழுக்கப் படித்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வாருங்களேன்!

அது சரி, இந்த 'வரலாறு' 'வரலாறு' என்றவுடன் என்ன பிம்பம் தோன்றுகிறது உங்களுக்கு?

பெரிதாக மீசை வைத்துக்கொண்டு எக்கச்சக்கமான நகைகளை அணிந்துகொண்டு பளபளா சட்டையுடன் கத்தியைச் சுழற்றும் இராஜாக்களா ?

கூடவே குயில் மயிலெல்லாம் கொஞ்சி விளையாடும் பசுமை நிறைந்த அந்தப்புரங்களில் முழு முக்காட்டுக்குள் வெட்கி ஒளியும் இளவரசிகளும் உண்டா ?

அல்லது வானளாவும் மாட மாளிகைகளும், மயிர் சிலிர்த்துக் கனைக்கும் குதிரைகளும், துதிக்கை உயர்த்திப் பிளிரும் யானைகளும், ஓங்காரமிட்டுச் செல்லும் படைகளும் தோன்றுகின்றனவா?

சரியாய்ப் போயிற்று!

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தச் சரித்திர நாவலாசிரியர்கள் இருக்கிறார்களே.. அவர்கள் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளி உங்கள் மனதில் இப்படியொரு பிம்பத்தை தோற்றுவித்துவிட்டார்கள்!

நிஜ வரலாற்றின் கதையே வேறு!

"Truth is stranger than fiction" என்பார்கள். வரலாற்றைப் பொறுத்தமட்டில் என்னைக் கேட்டால் "Truth is fancier or more interesting than fiction" என்றுதான் சொல்லுவேன்.

நிஜ வரலாறு அத்தனை ருசிகரமான சமாச்சாரமாக்கும்! ஒரு முறை அதனைச் சுவைத்து உணர்ந்து விட்டால் அப்புறம் விடவே மாட்டீர்கள்!

அதுசரி, இப்படி நிஜ வரலாறு நிஜ வரலாறு என்கிறாயே... அது எங்கே, காட்டு பார்ப்போம் ! என்கிறீர்களா ?

அது என்னவென்றால் ... அட, காதை சற்று கிட்டேதான் கொடுங்களேன்!

இந்தக் கோயில் கோயில் என்று நம் நாடெங்கிலும் ஒரு இடம் இருக்கிறதே, அங்குதான் இந்த நிஜ வரலாறு பிடிபடுமாக்கும் !

ஆச்சரியமாக இல்லை?

இருக்கும்! இருக்கும்! அதுவும் கோயிலை வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் பார்த்துப் பழகிவிட்ட சாமியாக நீங்கள் இருந்தீர்களானால் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!

உள்ளதைச் சொல்லுங்கள். கோயில்களுக்கு, குறிப்பாகப் பழங்காலக் கோயில்களுக்குச் செல்லும்போது அவசர அவசரமாக இறைவனுக்கும் இறைவிக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு உங்களது லேட்டஸ்ட் கோரிக்கைகளை (சம்சாரமாகிய சாகரத்தில் இந்த இழவுபிடித்த கோரிக்கைகள் ஒரு நிலையாக நின்று தொலைப்பதில்லை!) அவர்கள் காதில் ஒருமுறை ஓதிவிட்டு பஸ்ஸையோ காரையோ பிடிக்கக் கிளம்பிவிடுவதுண்டா இல்லையா ?

சற்று நேரமெடுத்துக்கொண்டு அந்தக் கோயில் சுற்றுச் சுவர்களைச் சற்று ஊன்றிக் கவனித்திருக்கிறீர்களோ? அங்கே பற்பல சித்திர விசித்திரமான சிற்பங்கள் உள்ளனவே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களோ? சுவற்றிலும், அதிஷ்டானம் என்று சொல்லப்படும் கீழ்ப் பகுதியிலும் கொசகொசவென்று ஏதோ எழுத்துக்கள் தெரிகின்றனவே - அவை என்னவாயிருக்குமென்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களோ?

மேற்கூறிய கேள்விகளுக்கெல்லாம் "ஆம், யோசித்திருக்கிறேன் ஐயா. ஆனால் என்னவென்று தெரிந்துகொள்ளமுடியவில்லையே!" என்று சொன்னாலும் சரி, அல்லது "அட அதற்கெல்லாம் எங்கேயப்பா நேரமிருக்கிறது? காலாகாலத்திற்குள் வீடுபோய்ச் சேர வேண்டாமா?" என்று பதிலளித்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்தில்தான் வந்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். மன்னிக்கவும், சேர்ந்திருக்கிறீர்கள்.

நமது முன்னோர்கள் மிகப் பெரிய கலா இரசிகர்கள் மற்றும் இறையுணர்வு கொண்டவர்கள் மட்டுமல்ல. அவர்கள் சரித்திர உணர்வும் கொண்டவர்கள். அதனால்தான் தமது நாகரீகத்தையும் சமூகத்தையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் சாதனைகளையும் விரிவாய் கல்லில் மாங்கு மாங்கு என்று செதுக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அந்தக் கோயில்கள் பற்றியும் அவற்றின் கட்டுமானத் திறன்கள் பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் அரசர்கள் பற்றியும் சாதாரண ஜனங்கள் பற்றியும் இந்த மின்இதழில் மாதாமாதம் விரிவாகப் பேசப் போகிறோம்!

அந்தக் கோயிலில் இருந்தும் சார்ந்தும் வளர்ந்த கலைகளைப் பற்றிப் பேசப் போகிறோம்... கலைஞர்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.... கோயிலைச் சுற்றியே தம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அமைத்துக்கொண்ட அந்தக் கால மக்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.... பழந்தமிழர் வளர்த்த இலக்கியம் பற்றிப் பேசப் போகிறோம்.. இசையைப் பற்றி நிறையவே பேசப் போகிறோம்....

இதனாலெல்லாம் என்ன பயன்? வேறு ஏதாவது உருப்படியாகச் செய்தாலாவது உண்டு என்று மனதில் படுகிறதாக்கும்?

அட, இதில் நிறைய விஷயம் இருக்கிறதென்கிறேன்! அதாவது, இப்படி யோசித்துப் பாருங்களேன்...

வேர் எந்த மண்ணில் ஊன்றி எப்படிப்பட்ட பலத்தில் நிற்கிறது என்று தெரிந்து கொண்டால்தானே கிளை அதற்குத் தகுந்தாற்போல் உயர முடியும்?

கடந்து வந்த பாதையல்லவா நமது எதிர்கால இருட்டில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது?

நமது இறந்தகால நினைவுகளையும் அனுபவங்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிட்டால் நாம் நாமாக இருப்போமா?

தனிமனிதருக்கு மட்டுமல்ல. சமுதாயத்திற்கும் இது பொருந்தும்!

நமது உடம்பில் நம் தாய் தந்தையர் இரத்தம் மட்டுமல்ல, நமது மூத்தோர் இரத்தமும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவருமே தனித்தனி சிறுகதைகள் அல்ல. ஒரு நீண்ட நெடிய தொடர்கதையின் அத்தியாயங்கள்தான். இதுவரை நடந்த கதையைத் தெளிவாக அறிந்து கொள்பவன் இனி நடக்க இருப்பவை பற்றித் தெளிவு கொள்கிறான்.

நமது வரலாறு என்பது நம் பிறப்பிலிருந்து ஆரம்பிப்பதில்லை. நமது இனத்தின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது... நமது வரலாறு நம் இறப்போடு முடிவதில்லை - நமது இனத்தின் இறப்போடுதான் முடிகிறது...

அதனால்தான் தெளிவான நிஜமான வரலாற்றைக் கற்பது என்பது எல்லோருக்கும் இன்றியமையாத விஷயமாகிறது!

சின்ன வயதில் பரிட்சைக்காக ஏதோ கொஞ்சம் வரலாறு படித்தோம் - சரி. இப்போது அந்த நிர்ப்பந்தங்கள் எல்லாம் இல்லை. இனி வரலாற்றை வரலாற்றுக்காக, அதன் போக்கைப் புரிந்து கொள்வதற்காகப் படிப்போம். சரிதானா?

இத்தனை தூய ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள் இல்லையா? அதனால்தான் உங்களுக்கு இங்கே பலமான வரவேற்பு!

நிதானமாக எல்லாப் பகுதிகளையுமே படியுங்கள். இரசியுங்கள். விவாதியுங்கள். சிந்தியுங்கள்....

நீங்கள் நினைப்பவற்றை, ஆக்கபூர்வமான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பண்டைய கோயில்கள் வாரி வழங்கும் இந்த வரலாற்றின் வெளிச்சம் நமது வாழ்க்கையை, சமுதாயத்தை மேலும் பிரகாசமடையச் செய்யட்டும்.

வாருங்கள், கைகோர்த்துக் கொண்டு நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்....

வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

ஆசிரியர் குழு

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.