http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > பயணப்பட்டோம்
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
கோகுல் சேஷாத்ரி

(டாக்டர்.இரா.கலைக்கோவனுடன் ஒரு பயணம்) தஞ்சைப் பெரிய கோயில் பலமுறை பார்த்த இடம்தான் என்றாலும் டாக்டர் கலைக்கோவன் போன்ற ஒரு வரலாற்றாய்வாளருடன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அது ஒரு புதிய அனுபவமாகவே இருக்குமென்பதால் யோசிக்காமல் மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்பி விட்டோம். காலையில் பராந்தகன் காலத்துக் காவியமான புள்ளமங்கை திருஆலந்துறையார் திருக்கோயிலைக் கண்குளிரத் தரிசனம் செய்துவிட்டு மதியத்திற்கு மேல் இராஜராஜீஸ்வரத்துக்குக் கிளம்பினோம். மற்றவர்கள் வேனில் ஏறிக்கொள்ள நான் மட்டும் நண்பர் ஒருவருடன் வண்டியில் தொற்றிக் கொண்டேன். வண்டியில் புள்ளமங்கையிலிருந்து தஞ்சைக்குப் பயணம் செய்வது.. ஹா - என்ன சுகம் ! என்ன சுகம் ! சோழநாட்டின் அரும்பெரும் வயல்களும் பச்சை மரங்களும் சூழ்ந்திருக்க காற்று சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருக்கும் பாதையில் எல்லாமே சற்று மறந்துவிடும். ஆனால் கவனமாக வண்டியோட்ட வேண்டும். இல்லையேல், பஸ்/ லாரி ஓட்டுனர்கள் உபயத்தில் சொர்க்கத்தில் இராஜராஜருடன் சேர்ந்து கொள்வதற்கு வழியேற்பட்டு விடும். நிசும்பசூதனி தரிசனம் தஞ்சையில் ஒரு ஹோட்டலுக்கு மதிய உணவிற்காகச் செல்வதாக ஏற்பாடு. ஆனால் அதற்குள் ஆர்வக்கோளாறு காரணமாக முதலில் குயவர் தெருவில் உள்ள நிசும்பசூதனியைத் தரிசித்து விட்டு வரலாமென்று திரும்பிவிட்டோம். கோயில் புதியதாகத் தெரிந்தாலும் மூர்த்தி விஜயாலயன் காலத்தியது என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்க, டாக்டர் கலைக்கோவன் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதாரமென்ன? என்று ஒரே ஒரு கேள்வி.



 



 



பதினெட்டுக் கரங்களுடன் சற்றே உயரமான உருவம். தீர்க்கமான விழிகள். பூசாரி உபயத்தில் அன்னை கழுத்துவரை மறைக்கப்பட்டிருக்க முழு உருவத்தையும் தரிசிக்க முடியவில்லை. பின்னால் திரு.குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் புத்தகத்தில்தான் முழு உருவையும் பார்க்க முடிந்தது. அந்த உருவம் சோழர் காலத்தியதுதானா இல்லையா என்பதை ஆய்வாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு நழுவினோம். பெரியகோயிலை நோக்கி உணவை முடித்துக்கொண்டு அனைவரும் வேனில் கிளம்ப அடியேன் வழக்கம்போல நண்பர் முதுகில் தொற்றிக் கொண்டேன். இராஜராஜீஸ்வரம் நெருங்கும்போது மதிலை ஒட்டி ஒரு காட்சி விரிந்தது. அதனைப் புகைப்படம் எடுப்பதற்காக மூக்கைப் பிடித்துக்கொண்டு பார்த்துப் பார்த்துக் கால்களை வைத்துப் பாதையோரப் பூங்கா மதிலில் ஏறி ஒரு வழியாக அதனைக் கிளிக்கினேன்.



 



ஒரு வழியாகக் கோயிலை அடைந்தோம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஆச்சரியம். முதலில் ஒரு சிறு கோபுரவாயில். இது சரபோஜி மகாராஜா உபயம். பிற்காலத்தியது என்பதைப் பார்த்தவுடன் சொல்லி விடலாம்.





கேரளாந்தகன் திருவாயில் அதற்கடுத்து வருவது கேரளாந்தகன் திருவாயில். இராஜராஜனின் பல்வேறு சிறப்புப் பெயர்களுள் கேரள அந்தகன் என்பதும் ஒன்று. கேரளம் என்பது சேரரை குறிக்கும்.





கம்பீரமான, சற்றே உயரமான, அகலம் குறைந்த கோபுரம். இந்தக் கோபுரக் கட்டுமானத்திலேயே ஆச்சரியங்கள் பல உண்டு. மொத்தக் கோபுரத்தையும் இரண்டு தடிமனான கற்சுவற்களில் தாங்கி நிறுத்தியிருக்கிறார்கள். இதில் தெரியும் எல்லாச் சிற்பங்களுமே இராஜராஜன் காலத்தியவையா என்பது கேள்விக்குறி. ஏனெனில் பின்னால் வந்த நாயக்க மன்னர்கள் கோயிலின் பல கோபுரங்களில் இருக்கும் சிற்பங்களுக்குச் சுதை பூசியும், புதிய சுதை சிற்பங்களை வைத்தும் மாற்றங்கள் செய்துவிட்டார்கள் என்றார் டாக்டர். மேலும் சுதை உருவங்களின் தன்மையை வைத்தும் ஓரளவிற்கு கணிக்கலாம் என்பது அவர் எண்ணம். இராஜராஜன் திருவாயில் அதனைக் கடந்து இராஜராஜன் திருவாயிலை அடைகிறோம். கேரளாந்தகன் திருவாயிலைவிடச் சற்றே உயரம் குறைந்த, ஆனால் அதனை விட அகலமான கோபுரம்.





இந்த இடத்திலிருந்தே இராஜராஜனின் "பயமுறுத்தும் திருப்பணி" ஆரம்பமாகிவிடுகிறது. துவாரபாலகர்களை மட்டும் கவனியுங்கள். என்ன ஒரு கம்பீரம்! என்ன அலட்சியம்!





போட்டோ எடுக்கும் மும்முரத்தில் டாக்டரையும் கோஷ்டியையும் சற்றுத் தவற விட்டு விட்டேன். திரும்பிப் பார்க்கையில் அவர் இராஜராஜன் திருவாயில் மதில் சுவற்றில் அமைந்திருந்த பல்வேறு பேனல் சிற்பங்களை விளக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு அங்கே ஓடினேன்.





இராஜராஜன் திருவாயில் மதில் ஓரம் அமைந்திருக்கும் பெரியபுராண / சிவபுராணக் கதைகள் விளக்கம் பெறுகின்றன. நான் சென்றடைந்தபோது அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறும் படலம் விளக்கப்பெற்றது. அர்ச்சுனன் எலும்புந்தோலுமாய்த் தீவிர தவத்தில் ஈடுபட்டிருக்கிறான். கையிலாயத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு வந்து எல்லோரும் வேடர் வேட்டுவத்தியராய் வேஷந்தரித்துக் கிளம்புகிறார்கள். நான் மறைகளும் நான்கு நாய்களாய் உடன் வருகின்றன. வேட்டுவர் தலைவராய் - வேறுயார் ? சிவபெருமான்தான் ! பன்றி வடிவில் இருக்கும் அசுரனை இரு அம்புகள் தைக்கின்றன - ஒரு அம்பு அர்ச்சுனனுடையது, மற்றது வேட்டுவர் தலைவனுடையது. யார் அம்பு பன்றியைக் கொன்றது என்ற பிரச்சனை பெரிதாகிச் சண்டை வரை நீண்டு கடைசியில் தான் யார் என்பதைக் காட்டியருளி சக்தி வாய்ந்த பாசுபதாஸ்திரத்தை அருள்கிறார் சிவபெருமான். இந்தக் காட்சியை சிற்பிகள் எப்படி விளக்கியிருக்கிறார்கள் பாருங்கள்.





வரிசையாகத்தான் கதைசொல்ல வேண்டுமென்றோ ஒவ்வொரு கதைநிகழ்ச்சியும் ஒரே அளவான இடத்திற்குள் சித்தரிக்கவேண்டுமென்றோ வரைமுறை எதையும் வைத்துக் கொள்ளாமல் முக்கியக் காட்சிகளை மட்டும் முன்னிறுத்தி எத்தனை அழகாய்க் கதை சொல்லப்பட்டு விடுகிறது ! கிட்டத்தட்ட இந்தக் காலத்து திரைக்கதை (Screen play) எழுத்தாளர்களின் வேலை போலத்தான் தெரிகிறது. எலும்புகள் தெரிய அருச்சுனன் செய்யும் கோரத் தவத்தையும் கைலாயத்தில் சிவபெருமானின் நிதானமான ஆனால் கம்பீரமான அமர்தலையும் (Relaxed Posture) உற்றுக் கவனிக்க வேண்டும். கண்ணப்ப நாயனார் காதை அடுத்து வந்தது இன்னொரு Masterpiece. கண்ணப்ப நாயனார் சரிதம்.





இதில் ஒரே ஒரு காட்சியை மட்டும் எடுத்துக் கொள்வோம். கண்ணப்பர் காட்டில் ஒரு கோயிலைக் கண்டு புளகாங்கிதமடைந்து பெருமானைத் தொழும் காட்சி.





இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கோயிலை கவனியுங்கள். முற்காலச் சோழர் கோயில்களைக் கண்டு பரிச்சயமடைந்தவர்கள் இந்தக்கோயில் அதே பாணியில் சித்தரிக்கப்பட்டிருப்பதை உய்த்துணரலாம். பலிபீடமென்ன - நந்தியென்ன - கோயில் தூண்களென்ன - ஏகதள விமானமென்ன - அடேயப்பா ! பரிபூரணமான திருக்கோயில். கருவறை மேற்கிலிருந்து காட்ட முடியாதென்பதால் தேவகோஷ்டத்தில் அதனை Cross Section க வடித்திருப்பதையும் கவனியுங்கள். காட்டிற்கு நடுவில் அமைந்த திருக்கோயில் என்பதைச் சித்தரிக்க சுற்றிலும் மரங்கள். அதிலும் ஒரேயடியாக காட்டில் உள்ளதுபோல் நெருக்கமாக மரங்களை வடித்து அசிங்கப்படுத்தாமல் ஒன்று முன்தள்ளியும் (Fore ground) மற்றது பின்தள்ளியும் (Background) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. Background மரம் (அதாவது கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள மரம்) அத்தனை தெளிவாகப் புலப்படாமல் மெல்லிசாகத் தெரிவது அந்தக் காட்சிக்கு எந்த மாதிரியான சூழ்நிலையைக் (Ambience) கொடுத்துவிடுகிறது பாருங்கள். காட்டில் உள்ள ஒரு கோயில் கண்முன்னால் உருப்பெற்றுவிட்டது. அடுத்து முன்புறமுள்ள மரத்தை கவனிப்போம்.





மரமென்றால் மொட்டையாகவா இருக்கும் ? அதோ, ஒரு ஆந்தை, ஒரு பல்லி, ஒரு குரங்கு - பறவையினம்...அடடா ! எத்தனை ஜீவன் ததும்பும் மரம் ! தூக்கி முடிந்த கொண்டை. இடுப்பில் முழம் துணி. பக்தியோடு கண்மூடிய நிலையில் கண்ணப்பர். காட்டில் இறைவனைக் கண்டுவிட்ட பரவசம் முகத்தில் புன்னகையாக விரிகிறது. அடுத்த காட்சி. கண்ணப்பர் தாம் வேட்டையாடிய உடும்பு மற்றும் பல்வேறு உயிரினங்களை இறைவனுக்கு ஆசை ஆசையாய் படையலிடுகிறார். முகத்தில் அதே பரவசம். லிங்கம் அவர் கொண்டுவந்த மலர்களால் கொண்டைபோல் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும்.





அடுத்து இறுதிக் காட்சி. இதில் பல விஷயங்களை டாக்டர் விளக்கினார்.





முதலில் கவனிக்க வேண்டியது இந்தக் காட்சியில் கோயில் சித்தரிக்கப்படவில்லை என்பதே. நிகழ்ச்சி கருவறைக்குள் நிகழ்ந்தாலும் கோயிலைச் சித்தரித்தால் காட்சியின் தீவிரம் குறைந்துவிடும் என்பதால் கோயில் சுட்டிக்காட்டப்படவில்லை. கோயில் முதல் காட்சியில் வந்ததோடு சரி. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எந்தக் காட்சியிலும் எது முன்னிறுத்தப்பட வேண்டுமோ அது மாத்திரம் காண்பிக்கப்பட்டு, மற்றவற்றை நீயாக உணர்ந்துகொள்க (Implied) என்று விட்டு விடும் லாவகம்... இதனைப் பல சிற்பங்களிலும் காண முடியும். மரத்தின் பின் சித்தரிக்கப் பட்டிருக்கும் சிவாச்சாரியாரைக் கவனியுங்கள். தெளிவான சிற்பமாகச் செதுக்கப் படாமல் மரத்தின் பின் மறைந்திருந்து நோக்குபவர் என்ற அளவிலேயே அவர் யாரென்று நாம் தெரிந்து கொள்ளலாம். அடுத்துக் கண்ணப்பர் தன் கண்களைப் பிடுங்க முயலும் நிலையிலேயே லிங்கத்திடமிருந்து கரங்கள் நீண்டு பெருமான் "பொறு கண்ணப்ப!" என்று தடுத்தாட்கொண்டு விடுகிறார். இராஜராஜன் காலத்தில் கதை இப்படித்தான் அறியப்பட்டிருக்க வேண்டும். பின்னால் வந்த பெரிய புராணத்தில் ஒரு கண்ணைப் பிடுங்கி வைக்க மறு கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தது என்பதெல்லாம் சேக்கிழார் செய்த Melodrama என்றார் டாக்டர். சிவபெருமான் தன் பக்தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கத் தான் வாளாயிருக்குமளவிற்கு அத்தனை இரக்கமற்றவரில்லை என்றார் முத்தாய்ப்பாக ! பிரமிப்புடன் நகர்ந்தோம். தளிச்சேரிக் கல்வெட்டு (அடுத்த மாதம்) this is txt file


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.