http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 1
இதழ் 1 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டாய்வு
கல்வெட்டு என்றவுடன் ஏதோ கிரேக்க, அராபிய மொழிகள் போல் புரியாத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று என்று தோன்றுகிறதல்லவா? அதற்குக் காரணம் கல்வெட்டு என்பது என்ன, அவை தரும் தகவல்கள் என்ன என்று சரியான முறையில் நமக்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை. நமது பாடத்திட்டங்களிலும் கல்வெட்டுக்களைப் பற்றிய குறிப்பு எங்கேயும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி விளக்கிச் சொல்ல எவரும் இருக்க மாட்டார்கள். நாமும் மேலோட்டமாகப் புரிந்ததோ புரியவில்லையோ மதிப்பெண் வந்தால் போதுமென்று மனனம் செய்திருப்போம். கோயில்களும், மக்கள் மத்தியில் தெய்வீக வழிபாடுகளுக்கு மட்டுமே என்றளவில் உள்ளது. சிறு வயதில் கோயிலை வலம் வரும் பொழுது இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்வையைச் செலுத்தினால்கூட உடன் வரும் பெரியவர்கள் என்ன சொல்வார்கள், "எங்கே பார்க்கறே ஒழுங்காக் குனிந்த தலை நிமிராம சுவாமியை மனசில நினைச்சுகிட்டு பிரதக்ஷிணம் பண்ணு" என்று சொல்வார்கள். நாமும் கர்ம சிரத்தையாய், பய பக்தியுடன் நம் வலத்தைத் தொடர்வோம், இல்லையா? கோயில் என்பது தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே என்ற நிலை வந்துவிட்டது. அதனால் கோயிலில் தெய்வத்தைத் தவிர வேறெதன் பேரிலும் பார்வை செல்வதில்லை. ஆனால் அக்காலத்தில் கோயில் என்பது கடவுளின் இல்லம் (கோ - தலைவனுக்கெல்லாம் தலைவன், இல் - இல்லம்) என்றளவிலேயே இருந்தது. கடவுள், தலைவன் என்ற பொழுதும் பக்தி இருந்ததே தவிர அங்கே பயம் இல்லை. அதனால் கோயில்கள் மக்கள் கூடும், கூடிக் கொண்டாடும் இடமாக இருந்தது. கலையாற்றலுடன் இருந்தவர்கள் தங்கள் கலைகளை வளர்த்துக் கொள்ள, கலைகளை மக்கள் அனைவரும் கண்டு, கேட்டு களிக்கும் வகையில் பறைசாற்ற, ஒரு பொது இடமாகவும் கோயில்கள் திகழ்ந்தன. அதனாலேயே நமது பாரம்பரியக் கலைகளான நடனம், இசை, சிற்பம், ஓவியம் முதலியன இன்றும் அழியாமல் இருக்கின்றன. இப்படி பொது இடமாகக் கோயில்கள் இருந்தமையால் எந்த ஒரு செயல், கொடை, ஆட்சிமுறை, வரி விஷயங்கள், மற்றும் மக்களுக்குப் போய் சேர வேண்டிய முக்கியமான விஷயங்களையெல்லாம் கோயில்களில் கல்லிலே வெட்டி வைத்தார்கள் நமது முன்னோர்கள். அது சரி நமது முன்னோர்கள் என்ன மொழி பெசினார்கள்? எழுதினார்கள்? தமிழ் நாட்டினர் நமக்கெல்லாம் தெரிந்த தமிழ் மொழிதான் பேசினார்கள். அப்படியென்றால் கல்வெட்டு? அட அதுவும் தமிழ்தாங்க. பல்லவர்களின் கிரந்தக் கல்வெட்டுகளையும், பிற்காலத்தில் வந்த நாயக்க, விஜயநகர மன்னர்களின் தெலுங்குக் கல்வெட்டுகளையும் தவிர மற்ற கல்வெட்டுகள் எல்லாம் அனேகமாகத் தமிழிலேயே உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? நம்ப முடியவில்லையா? சரி உங்கள் வீட்டிற்கருகில் ஏதாவது பழைய கோயில் இருந்து, அங்கே சுவர்களில் எழுத்துக்கள் வெட்டப்பட்டிருந்தால் ஆழ்ந்து கவனிக்கவும். உங்களுக்குத் தெரிந்த பல எழுத்துக்களை நீங்கள் அடையாளம் காணமுடியும். நீங்கள் சென்னைவாசி என்றால் அருகில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கோ, இல்லை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கோ சென்று பாருங்கள். திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் இப்படி எங்கேயாவது இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். உங்களுக்கில்லாத கோயிலா? அங்கே இல்லாத கல்வெட்டா? அருகில் எந்தக் கோயில் இருந்தாலும் அதில் ஒரு கல்வெட்டாவது இருப்பது நிச்சயம். காஞ்சிபுரத்துக்கருகில் இருப்பவர்களுக்கும் இருக்கின்றன பல கோயில்கள் கல்வெட்டுகளுடன். எந்தக் கோயிலும் என் வீட்டருகில் இல்லை, போய் பார்க்கவும் நேரமில்லை என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது "VARALAARU.COM". அட, இந்த SITE தான். இங்கே கல்வெட்டுக்களின் புகைப்படங்களைத் தருகிறோம். அவற்றைப் படித்துப் பார்க்கவும். "வேறே வேலையில்லை. கல்வெட்டையாம், படிக்கறதாம். அந்தக் காலத்தில் எவனோ எதையோ வெட்டி விட்டுச் சென்றுவிட்டான். அதைப் போய் இப்போ படிக்கறதாம்! பள்ளிக்கூடத்திற்குச் சென்று படிக்க வேண்டியதே ஒழுங்கா படிக்கல" என்று புலம்புவது காதில் விழுகிறது. நானும் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உங்களுக்குக் கதைப்புத்தகம் படிக்க விருப்பமிருக்கிறதா? வார, மாத தமிழ் இதழ்கள் படிப்பவரா? அப்படியென்றால், அவற்றில் இருப்பதைவிட சுவாரசியமான பல விஷயங்கள் நமது கல்வெட்டுகளில் இருக்கின்றன. நம்பினால் தொடர்ந்து படியுங்கள். இதோ உங்களுக்காக ஒரு தகவல். நீங்கள்அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் நான் மேலே சொல்லப் போவது உங்களுக்கு நன்றாக புரியும். இல்லையென்றாலும் பரவாயில்லை. இத்தகவல் சுவாரசியமாகவே இருக்கும். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் சுந்தர சோழன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன், அவன் பட்டத்து இளவரசன். அவனுடைய தங்கை குந்தவை, இளையவன் அருமொழி. ஆதித்தகரிகாலன் பாண்டியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு, வீரபாண்டியன் தலையைக்கொய்து அவனைக் கொன்று விடுகிறான். பிறகு சதிகாரர்கள் சிலர் ஆதித்தகரிகாலனைச் சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறார்கள். சுந்தரசோழரின் ஆட்சிக்குப்பிறகு, அவரின் பெரிய தந்தையின் மகனான உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான். அதற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்த கரிகாலனின் தம்பி அருமொழி, இராஜராஜசோழன் என்ற பெயரில் அரியணையில் அமர்கிறான். அதாங்க தஞ்சாவூர் பெரிய கோயிலான இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன்தான். இராஜராஜனின் 2ம் ஆட்சியாண்டில், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளான ரவிதாஸன், சோமன் சாம்பவன் மற்றும் சிலர், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது கதையல்ல நிஜம். காட்டுமன்னார்கோயில் என்று இன்று வழங்கப்படும் உடையார்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலின் பின் சுவரில் இந்த விஷயம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு உத்தம சோழனின் ஆட்சி வருகிறது. அப்பொழுதெல்லாம் கொலையுண்டவர்கள் பிடிபடாமல், 16 வருடங்கள் கழித்து, இராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தண்டிக்கப்படுகிறார்கள். அதனால், உத்தம சோழனுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. கல்வெட்டில் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொலை செய்தவர்கள் பாண்டியர்களோ இல்லை சேரர்களோ என்றால் எதிரிகள் என்று தானே வர வேண்டும்? துரோகிகள் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்? கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான். பொன்னியின் செல்வனில் கல்கி இரவிதாஸன் கூட்டாளிகளை "பாண்டிய ஆபத்துதவிகள்" என்று குறிப்பிட்டது கற்பனை என்றாலும், அப்படிப்பட்ட பெயருடன் இருந்தவர்கள் சோழ நாட்டில் இருந்ததும், அவர்கள் ஆதித்தனைக் கொலை செய்ததும் உண்மை செய்திகளே. கல்கிக்கும் வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் ஆர்வம் இல்லாதிருந்தால், பொன்னியின் செல்வன் போன்றதொரு காவியம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமா? இன்னுமொரு சுவாரசியமான விஷயம் கூறட்டுமா? பேய், பிசாசுகளைப் பற்றி அந்தக் காலத்தில் என்ன நினைத்தார்கள், அவை உண்மையா? ஒரு கல்வெட்டு அதற்கு விடையளிக்கிறது. பொன்னமராவதியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோளக்குடி எனும் சிற்றூரில் உள்ள மலை மேல் உள்ள குடைவரைக் கோயில் சுவரில் ஒரு கல்வெட்டு. "ஸ்வஸ்திஸ்ர் திருக்கோளக்குடி முன்பில் ஊருணி மூவேந்தந் எந்நும் பசாசிந் பேர்" கல்வெட்டுச் செய்தியாவது, அந்தத் திருக்கோளக்குடி ஆலயத்தின் முன்னால் உள்ள ஒரு ஊருணிக்கு மூவேந்தன் என்னும் ஒரு பிசாசின் பெயரை அந்த சிற்றூரின் மக்கள் வைத்திருக்கிறார்கள். ஊருணி, குளம், இவற்றிற்குப் பொதுவாக அரசனின் பெயர், அந்த ஊர்த் தலைவன் பெயர், இல்லையென்றால் ஊர் மக்களுக்கோ கோயிலுக்கோ நன்மை செய்தவரின் பெயர் இருக்கும். இங்கு பிசாசின் பெயரைக் கோயிலுக்கு வைத்த காரணம் என்னவாக இருக்கும்? அந்த பிசாசு ஏதோ ஒரு வகையில் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும் அல்லது நன்மை செய்ததென்று மக்கள் நம்பியிருக்க வேண்டும். இதிலிருந்து நம் முன்னோர்கள் பேய் பிசாசுகள் இருக்கிறதென நம்பினார்கள் என்பது தெளிவாகிறதில்லையா? பொதுவாகக் கல்வெட்டுக்கள் வடமொழியில் 'மங்களம் உண்டாகட்டும்' என்ற பொருள் கொண்ட 'ஸ்வஸ்திஸ்ர்' என்ற சொல்லுடனேதான் ஆரம்பமாகும். வருடங்கள் தமிழ் எண்களால் குறிக்கப்படும். ய என்றால் பத்து, உ என்றால் இரண்டு. பனிரெண்டாம் வருடம் என்பதை யஉ என்று குறித்திருப்பார்கள். தமிழ்க் கல்வெட்டுகள்தான் என்ற பொழுதும், காலத்திற்கேற்ப சிற்சில எழுத்துக்கள், மற்றும் எழுதும் விதம் இவற்றில் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அதே போல் அக்காலத்தில் உபயோகத்தில் இருந்த சில சொற்கள் இப்பொழுது படிக்கும் நமக்குப் புரியாது. அந்தச் சொற்களைக் குறித்துக்கொண்டு தமிழ் நிகண்டு போன்ற அகராதிகளைப் புரட்டிப் பார்த்தால் அந்தச் சொற்களுக்கான அர்த்தம் புரியும். இதோ தோராயமாகக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வகையில் எழுத்துக்கள் ஒவ்வொரு காலத்திலும் மாற்றம் கண்டன. |