http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 1
இதழ் 1 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
அது ஒரு கோயில். முதல் பார்வையிலேயே மிகவும் பழமையானது எனப் புரிகிறது. ஆனால் எத்தனை வருடம் பழமையானது? என்ற கேள்வி எழுகிறது. எப்படித் தெரிந்து கொள்வது? அங்கு விற்கும் தலபுராணங்களை வாங்கிப் பார்க்கிறோம். இந்திரனுக்கு வந்த வியாதி தீர, அக்கோயிலிலுள்ள குளத்தில் மூழ்கி எழுந்ததாகச் சொல்லப் படுகிறது. நம்ப முடியவில்லை. தமிழகக் கோயில்களிலுள்ள தலபுராணங்களை மொத்தமாக வாசித்துப் பார்த்தால், இந்திரனைப் போல ஒரு வியாதியஸ்தர் உலகிலேயே இருந்திருக்க முடியாது. இனிமேல் இருக்கவும் முடியாது. சரித்திர ஆராய்ச்சி மேற்கொள்பவர்களைக் கேட்கிறோம். ஆளுக்கொரு பதிலைச் சொல்கிறார்கள். எதை எடுப்பது? எதை விடுப்பது? அப்போதுதான் அந்த எண்ணம் உதிக்கிறது. நாமே ஆராய்ந்து கண்டுபிடித்தால் என்ன? புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழி வகுத்து, மனித குலத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வது இந்தக் கேள்விதான். எப்படிக் கண்டுபிடிப்பது என யோசிக்கிறோம். அங்கு இருக்கும் கல்வெட்டுக்களில் எது முதல் கல்வெட்டோ அதாவது, காலத்தால் எது மிகவும் முற்பட்டதோ அந்தக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் காலம்தான் அக்கோயிலின் காலம். ஆகவே, கல்வெட்டுப் படிப்பதற்கு ஆயத்தமாகிறோம். அல்லது அது முடியாத நிலையில், தொல்பொருள் துறையினர் வெளியிடும் ஆண்டறிக்கைகளில் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறோம். நமக்குத்தான் தேடும்போது எதைத் தேடுகிறோமோ அதைத்தவிர மற்ற அனைத்தும் கிடைக்குமே!! நாம் தேடும் கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் கிடைக்கவில்லை. அக்கல்வெட்டுகள் படியெடுக்கப்படவே இல்லையா அல்லது நம்மிடம் இல்லாத வேறொரு தொகுதியில் இருக்கிறதா? தெரியவில்லை. வேறு வழியில்லை. நேரடியாகக் கள ஆய்வில் இறங்கி விட வேண்டியதுதான். சரி. முயன்றுதான் பார்ப்போமே. கோயிலுக்குச் சென்று விடுகிறோம். அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அந்தக் கல்வெட்டுக்களைப் படிக்கவே முடியாதென்பது. ஒன்று சிமெண்டால் அதை அலங்கரித்திருப்பார்கள் அல்லது பெயிண்டால் அபிஷேகம் செய்திருப்பார்கள். மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் இப்படித்தான் செய்துள்ளனர். இதைவிட, மணிமங்கலத்திலுள்ள பெருமாள் கோவிலில், சுவரெங்கும் பெயிண்டால் நாமம் வரைந்துள்ளனர். இந்த இரண்டும் இல்லாவிட்டால், கும்பாபிஷேகம் என்ற பெயரால் வரிசை மாற்றியோ அல்லது தலைகீழாகவோ பொருத்தியிருப்பார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள் என அங்கு கல்வெட்டு வாசிக்கச் சென்ற நண்பர் ஒருவர் வந்து புலம்பினார். வரலாற்றாய்வாளர்கள் இலேசாக விடமாட்டார்கள். எப்பாடுபட்டாவது படித்து முடித்து விடுவார்கள். ஆனால் நாம் என்ன செய்வது? இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், கட்டடக்கலை நமக்குக் கை கொடுக்கிறது. கட்டடக்கலை அமைப்பை வைத்து எப்படிக் காலத்தைக் கண்டுபிடிப்பது? அதை விளக்குவதற்காகத்தான் இந்தத் தொடர்.
காலத்தை அறிய மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் கட்டடக்கலை நுண்ணறிவைப் புரிந்து அவற்றை மெய்மறந்து ரசிக்கவும், இந்தக் கட்டடக்கலை அறிவு உதவும். எவ்வளவு கடினமான வேலையையும் எப்படிச் செய்து முடித்தார்கள் என வியப்பாக இருக்கும். நம் உடம்பில் தலை, கழுத்து, கை மற்றும் கால் ஆகியன இருப்பது போன்று, ஒரு கோயிலுக்கும் பல்வேறு உறுப்புகள் இருக்கின்றன. அதிலும், மனித உடலுக்குச் சாமுத்ரிகா லட்சணம் இருப்பது போல, கட்டட அமைப்புக்கும் மயமதம் என்ற சிற்பநூல் இருக்கிறது. அவற்றை வைத்துத்தான் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். கல்வெட்டிலுள்ள எழுத்துக்கள் எப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வடிவம் மாறி வந்திருக்கிறதோ, அதுபோலக் கட்டட உறுப்புக்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்கள் கொண்டு இருந்திருக்கின்றன. உயிர்களுக்கு மட்டுமல்ல. கோயில்களுக்கும் பரிணாம வளர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு மன்னனும் தமக்கு முன்னர் எப்படிக் கட்டிக்கொண்டிருந்தார்களோ, அதையே பின்பற்றிக் கட்டிவிடலாம் என நினைத்ததில்லை. ஏதாவதொரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார்கள். விசித்திரசித்தர் என்ற மகேந்திரவர்மர், வரலாற்றிலேயே முதன்முறையாகக் குடைவரையை அமைத்து, அழிந்து போகக்கூடிய செங்கல், மரம், சுதை மற்றும் உலோகங்கொண்டு கோயில் கட்டாமல், என்றும் அழிவில்லாத இறைவனுக்கு அழிவில்லாத கருங்கற்களைக் குடைந்து கோயில் அமைத்திருப்பதாகப் பெருமையுடன் ஒரு கல்வெட்டுக் குறிப்பையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார். இல்லாவிட்டால், இன்று நாம் பழங்கோயில்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு முன் செங்கல், மரம், சுதை மற்றும் உலோகங்கொண்டு கட்டப்பட்ட கோயில்களைப் போல, எல்லாவற்றையும் காலவெள்ளம் அடித்துச் சென்றிருக்கும். என்னவொரு தீர்க்க தரிசனம் பாருங்கள்!! பொதுவாகக் குடைவரைகளில், முகப்பு, முகமண்டபம், அர்த்தமண்டபம் (முக மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையில் இருப்பது. சில இடங்களில் இது இல்லாமலும் இருக்கும்) மற்றும் கருவறை ஆகியவைதான் இருக்கும். தரைத்தளம் மட்டுமே இருக்கும். அவருக்குப் பின் வந்த இராஜசிம்மர் ஒரு படி மேலே போய், ஒற்றைக்கல் கோயில்களை வடித்தார். இன்று மாமல்லபுரத்தில் காணப்படும் பஞ்ச பாண்டவர் ரதங்கள் மட்டுமல்லாமல், அங்கும் காஞ்சிபுரத்திலும் உள்ள பெரும்பான்மையான தளிகள் (கோயிலின் மற்றொரு பெயர்) அந்த மாபெரும் கலாரசிகரால் உருவாக்கப்பட்டவைதான். ஒற்றைக்கல் கோயில்களில், கல்லின் அளவைப் பொறுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் இருக்கும். இவ்வாறு கருவறைக்கு மேலே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு அமைக்கப்படும் பகுதிக்குப் பெயர் விமானம். அதையே வாயிலுக்கு மேல் அமைத்தால் அது கோபுரம். இது குடைவரையின் பரிணாம வளர்ச்சி. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி, ஒன்றுக்கு மேற்பட்ட கருங்கற்களை அடுக்கிக் கட்டுமானக் கோயில்கள் கட்டியது. இதையும் இராஜசிம்மரே தொடங்கி விட்டாலும், இதை மிகவும் பரவலாக்கியவர், பொன்னியின் செல்வன் மூலம் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான முதலாம் ஆதித்தரும் முதலாம் பராந்தகரும்தான். கோயில் கட்டப்படும் இடத்தில் கருங்கற்கள் இல்லாவிட்டால் என்ன? அருகிலுள்ள இடங்களிலிருந்து கொண்டு வாருங்கள் என உற்சாகப் படுத்தியவர் அவர்தான். அது மட்டுமல்ல, அவ்வாறு கட்டப்பட்ட தளிகளுக்கு ஏராளமான தானங்களை அள்ளிக் கொடுத்துப் பராமரித்தும் வந்தார். அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் வெற்றி நடை போட்டு, யாரும் நினைத்தே பார்த்திருக்க முடியாத வகையில் இராஜராஜீசுவரம் என்ற அழியாப்புகழ் பெற்ற ஒரு மாபெரும் பிரம்மாண்டத்தை அமைத்தார் இராஜராஜசோழர். அதைத் தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் எனக் கட்டடக்கலையின் உச்சியைத் தொட்டனர் சோழமன்னர்கள். சரி. தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். ஒரு கோயிலின் உறுப்புகள் என்னென்ன? இதை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்வோம். அவை கீழ்ப்பகுதியான தாங்குதளம், மையப்பகுதியான சுவர் மற்றும் மேல்பகுதியான விமானம் ஆகியவை. இந்த இதழில் தாங்குதளத்தைப் பற்றிக் காண்போம். இதை வடமொழியில் அதிஷ்டானம் என்று சொல்வார்கள். தாங்குதளத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில வகைகளை மட்டும் இங்கு காண்போம். எஞ்சியவற்றை வரும் இதழ்களில் பொருத்தமான இடங்களில் பார்ப்போம். பல்லவர் மற்றும் சோழர் காலக் கோயில்களில் கீழ்க்கண்ட மூன்று தாங்குதளங்களே பரவலாகக் காணப்படுகின்றன. 1. பாதபந்த அதிஷ்டானம் 2. பிரதிபந்த அதிஷ்டானம் 3. பத்மபந்த அதிஷ்டானம் இதில் பாதபந்தம், பிரதிபந்தம் இரண்டனுள் எது காலத்தால் முற்பட்டது எனக் கூற இயலாது. ஏனெனில், தொடக்க காலத் தளிகளில் இருந்து இரண்டும் கலந்தே இருக்கின்றன. உதாரணமாக, தளவானூரிலுள்ள சத்ருமல்லேசுவரம் குடைவரையின் முகப்பின் முன் பாதபந்தத் தாங்குதளம் காணப்படுகிறது. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில்களில் பிரதிபந்தத் தாங்குதளம் காணப்படுகிறது. அக்காலத்தில் குடைவரை அமைப்பது சிற்பிகளுக்குப் புதிதான வேலை என்பதாலும், இது ஒரு வகையான சோதனை முயற்சி என்பதாலும், அதற்கு முன் மரங்களால் கட்டப்பட்டிருந்த கோயில் போன்ற வடிவத்தைக் கொண்டு வருவதிலேயே சிற்பிகள் கண்ணாக இருந்தனர். இருப்பினும், பல குடைவரைகள் முற்றுப் பெறாமல் இருக்கின்றன. கல் பாதியிலேயே உடைந்து விடுவது, அளவுகளைச் சரியாகக் கணிக்க முடியாமை ஆகியவற்றைக் காரணங்களாகச் சொல்லலாம். சோழர் காலத்துக் கோயில்களில் பிரதிபந்தம் காணப்பட்டாலும், பாதபந்த வகையே பெரும்பான்மையான விகிதத்தில் உள்ளது. ஒரு அதிஷ்டானத்தில் இடம்பெற்றிருக்கும் உறுப்புகளை வைத்துத்தான் அது எந்த வகையைச் சேர்ந்தது என இனங்காண முடியும். ஒரு பாதபந்த அதிஷ்டானம் என்பது குறைந்தபட்சம் நான்கு உறுப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஜகதி, குமுதம், கண்டம் மற்றும் பட்டிகை ஆகியவையே அந்த நான்கு. அவை இந்த வரிசையிலேயே அமைந்திருக்கும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். ஜகதி உபானத்திற்கு மேல் இருக்கும் உறுப்பு ஜகதி ஆகும். இதுவும் உபானம் போன்றே இருக்கும். ஆனால் உபானத்தை விடச் சற்று உள்ளே தள்ளி இருக்கும். சில சமயம் இதில் கல்வெட்டுக்கள் கூட இருக்கும். குமுதம் இது ஜகதிக்கு அடுத்ததாக இருக்கும் உறுப்பு. இது மூன்று வடிவங்களில் இருக்கும். உருளை, எண்பட்டை மற்றும் பதினாறு பட்டை. இதில் பதினாறு பட்டை இருந்தால் அக்கட்டுமானம் முற்சோழர் காலத்திற்குப் பிற்பட்டது என உறுதியாகக் கூறலாம். இதில் அரிதாகப் பூ வேலைப்பாடுகளும் காணப்படும். மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீசுவரர் ஆலயத்தின் வெளிப்புறச் சுவரில் இத்தகைய பூவேலைப்பாடுகளைக் காணலாம். கண்டம் பொதுவாக, இந்தக் கண்டப்பகுதி, பாதம், அதற்கு மேலும் கீழும் இரு கம்புகள் என்ற அமைப்பிலேயே காணப்படும். இதில் பாதம் என்பது, சுவரிலுள்ள தூணின் தொடர்ச்சியாகும். அதாவது, தூணின் பாதம். இதை வைத்துத்தான் பாதபந்தம் என்றே அறிய முடியும். இதற்கு பதிலாக, வரிசையாக யாளிகளைக் கொண்ட ஒரு வரி அமைந்திருந்தால் அவ்வரியைப் பிரதிவரி என்றும் தாங்குதளத்தைப் பிரதிபந்தத் தாங்குதளம் என்று அழைப்போம். பிரதிவரியில் நான்கு உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். அவை, ஆலிங்கம், அந்தரி, பிரதிமுகம் மற்றும் வாஜனம் ஆகியவை. இவற்றைப் பற்றி வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம். பட்டிகை பல அடுக்குகளுக்கு மேல் அமைந்திருக்கும் பலகை போன்ற அமைப்புதான் பட்டிகை என்பது. சில கோயில்களில் இப்பட்டிகைக்குப் பதிலாகக் கபோதம் (கூரையின் நீட்சியாக வரும் கபோதம் போலவே) இருக்கும். இதற்குப் பெயர் கபோதபந்த அதிஷ்டானம். கபோதபந்த அதிஷ்டானம் பிரதிபந்தத்திலும் வரும். உபானம் தரையோடு ஒட்டிய உறுப்பு உபானம். படத்தில் காட்டப்படவில்லை. இது ஒரு சதுர வடிவிலான அமைப்பு. சில இடங்களில் இரண்டு உபானங்கள் கூட இருக்கும். அவ்வாறு இருந்தால், கீழே இருப்பதற்குப் பெயர் உப உபானம். சில கோயில்களில் இது இல்லாமலேயே கூட இருக்கும். அப்படியென்றால், மண்ணில் புதைந்து விட்டது என்று பொருள். உபரி கம்பு இதுவும் கண்டப்பகுதியில் காணப்படும் உறுப்பு போலவே இருப்பதால், இதற்குக் கம்பு என்று பெயர். ஆனால், கம்பு இருக்க வேண்டிய கண்டப்பகுதியில் இல்லாமல், பட்டிகையின் மேல் உபரியாகக் காணப்படுவதால், இதை உபரிக் கம்பு என்கிறோம். இதுதான் தாங்குதளத்தையும் சுவரையும் இணைப்பது. இப்போது பாதபந்தம் மற்றும் பிரதிபந்தம் ஆகியன எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொண்டீர்கள். பத்மபந்தம் எப்படி இருக்கும்? பத்மம் என்றால் தாமரைதானே? பாதம் இருப்பதால் பாதபந்தம். பிரதிவரி இருப்பதால் பிரதிபந்தம். அதுபோலவே தாமரை இதழ்கள் கொண்ட வரி இருந்தால் பத்மபந்தம் என மிகவும் சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால், பாதபந்த அல்லது பிரதிபந்தத் தாங்குதளத்திலேயே அமைந்திருக்கும் பத்மவரி போன்ற சிற்றுறுப்பை வைத்து, இது பாதபந்தமா பத்மபந்தமா எனக் குழம்புவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. பத்மவரி எப்போதுமே குமுதத்தின் அளவிலேயே இருக்கும். அதைவிடச் சிறியதாக இருந்தால் அது பத்மவரியில்லை. சிற்றுறுப்பு. இந்தத் தாமரை இதழ்கள், மேல்நோக்கியும் இருக்கும். கீழ்நோக்கியும் இருக்கும். அவற்றை முறையே ஊர்த்துவ பத்மம் மற்றும் அதபத்மம் என்று கூறுவோம். இவ்வளவுதான் தாங்குதளம். சரி. கீழே உள்ள கோயில்கள் எந்த வகையான தாங்குதளத்தைக் கொண்டுள்ளது எனக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்? 1 2 விடையை adhitha_karikalan@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அடுத்த இதழில், மையப்பகுதியான சுவரைப் பற்றியும், அதிலுள்ள உறுப்புக்களைப் பற்றியும் காண்போம். அதற்கு முன், கீழே உள்ள கணக்கைப் புரிந்து கொள்ள முடிகிறதா எனப் பாருங்கள். 4 X 1/2 = 1 (தொடரும்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |