http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > கதைநேரம்
சரித்திரம் பழகு
கோகுல் சேஷாத்ரி

தமிழக சரித்திரத்தைப் பற்றி கரைபுரண்டோடும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அப்போது அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கத்தான் வேணும் - ஆர்வம் அப்படியே கூரையைப் பிய்த்துக்கொண்டு போகும்!

சரித்திரத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாதவரா நீங்கள்? அப்போது நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டியது இன்னமும் அவசியமாகிறது - இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் இந்தக் கட்டுரை துடைத்தொழித்துவிடும். சுத்தமான மனதோடு திரும்பலாம்.

ஆக, மேலே படியுங்கள்.

"சரித்திரச் தேர்ச்சி கொள்" என்று பாரதி புதிய ஆத்திச்சூடியில் சொல்லியிருக்கிறார். நல்லவேளை - எத்தனை ஆழமாய்த் தேர்ச்சி கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை - எந்தச் சரித்திரத்தைத் தேர்ச்சி கொள்ள வேண்டும் என்றும் தீர்மானமாய்ச் சொல்லவில்லை - அதனால் தப்பித்தோம்.

கமலஹாசன், ரஜினிகாந்த், சிம்ரன், ஜோதிகா முதலான முக்கிய சரித்திர நாயக நாயகியரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு தமிழ்ப் பத்திரிக்கையையோ தமிழ்த் தொலைக்காட்சி சேனலையோ திருப்பினீர்களானால் போதும் - அவர்களின் நில புலன்கள், பண்ணை வீடு உட்பட - பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, காதல், கல்யாணம், இரண்டாம் கல்யாணம் என்று மிக விஸ்தாரமாகவே தெரிந்துகொள்ளலாம். அதில் கொஞ்சம் ஆய்வு செய்ய நினைத்தால் தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சினிமாப் பத்திரிக்கைளில் படித்துக் கொள்ளலாம். பிரச்சனையில்லை.

இதற்குக் கொஞ்சம் பின்னே போய் காந்தி, நேரு பற்றி தெரியவேண்டுமானால் - பாடப்புத்தகங்களை புரட்டலாம். வாழ்வின் எல்லா கட்டங்களிலும் இவர்களைப் பற்றிப் பாஸாவதற்காகவேனும் படித்துத் தொலைத்துத்தானாக வேண்டும் - பாடமாயிற்றே !

இதற்கும் ரொம்ப முன்னால் போய்த் தமிழனின் சரித்திரம் எவ்வாறு தொடங்கியது என்றேல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் நீங்கள் அபாயகரமான எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கிறீர்களென்று அர்த்தம். அப்படிப் பட்ட சிந்தனை வரும்போதே - "செத்துப்போன அந்தக் கால ராசாக்களையும் மனுசப் பயல்களையும் பத்தியெல்லாம் படிச்சு என்னத்தக் கிளிக்கப் போறம்? பொளப்ப பாப்பீயளா?" - என்று முளையிலேயே வெட்டிவிட்டீர்களோ, பிழைத்தீர்கள். இல்லையேல் வாழ்நாள் முழுக்க அம்பலவாணன் பழுவூர் நக்கனான விக்கிரமச் சோழ மாராயன் என்று விளங்காத பெயர்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழவேண்டிவரும்!

இந்த சரித்திர ஆர்வம் இருக்கிறதே - அது ஒரு வியாதி. அதற்குப் பல கட்டங்களுண்டு.

முதல் கட்டத்தில் ரொம்ப அப்பாவியாய்த்தான் அதன் வேலையை ஆரம்பிக்கும். மனித இனத்தில் தமிழினம் எவ்வாறு தோன்றியது? அவன் எப்படி படிப்படியாய் வளர்ந்தான்? என்னென்ன வேலையெல்லாம் செய்தான்? ஒரு காலத்தில் ரொம்ப உசத்தியாய் இருந்ததாய் பேசிக் கொள்கிறார்களே - அதெல்லாம் உண்மையா? இன்றைக்கு சாதி, மதப் பிரச்சனைகள் மனிதனைப் பிடித்து ஆட்டுகிறதே - இதற்கு சரித்திரம் என்ன பதில் சொல்கிறது? மானுடத்தின் பிரிவினை எங்கு எதற்காக யாரால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது? அது எவரால் எப்படி வளர்க்கப்பட்டது? கோயில் குளம் என்கிறார்களே - இதையெல்லாம் யார் எதற்காக வேலை மெனக்கெட்டுக் கட்டிவைத்தார்கள்? என்றெல்லாம் கேள்வி கேள்வியாக ஆரம்பிக்கும்.

இந்த ஆரம்ப கட்டத்தில் வியாதியை வைத்தியத்தினால் சொஸ்தப்படுத்திவிடலாம். அந்த வைத்தியம் என்னவென்றால் - இதுபோன்ற சிந்தனைகள் மேலும் வளராமல் பார்த்துக் கொள்வது. முக்கியமாக இது போன்ற சிந்தனை வியாதியினால் கஷ்டப்படும் மற்ற நண்பர்களை (அதாவது வியாதியஸ்தர்களை) கிட்டத்திலேயே சேர்க்கக்கூடாது. அவர்களில் யாராவது கல்கியின் வரலாற்று இலக்கியங்களான பொன்னியின் செல்வன் முதலான காவியங்ளைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தார்களானால் அவர்களை அடுத்த முறை அண்டவே விடாதீர்கள். வீட்டிற்கு வெளியிலிருந்தே பேசி விரட்டிவிடவும்.

நம் சிந்தனைகளைக்கூட நம்பினாலும் நம்பலாம் - கல்கியின் கதைகளை மட்டும் நம்பவே கூடாது.

மீறிப் படித்தீர்களானால் வியாதி ஒரே நாளில் நான்கைந்து கட்டங்களுக்கு மேல் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே அப்படிப்பட்ட புத்தகங்கள் உங்கள் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் நேரம் சரியில்லாமல் கையிலேயே ஒரு பிரதி கிடைத்தாலும் - அதனைப் படிப்பதை முடிந்தவரை தள்ளிப்போடவும். "ஆபீஸ் வேலை நெட்டி முறிக்கிறது" - "எங்க சார் இருக்கு டயம்?" - "குழந்தை பாடாய்ப் படுத்துகிறான்" - "இந்த அழகில் இந்தா தடி பொஸ்தகத்தை எப்படிப் படிக்கிறது?" - இப்படி ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி படிப்பதை தட்டிக் கழித்துவிடுங்கள். இந்த இரகசியம் தெரியாமல் கல்கியின் கதைகளைப் படித்து விட்டு வரலாற்றுப் பைத்தியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் எத்தனைபேர் தெரியுமா?

சரி - மீறிப் போய்ப் படித்துத் தொலைத்து விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுவோம். இது மிக மிக ஆபத்தான கட்டம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

நாவல் படித்த ஆர்வத்தில் இராஜராஜ சோழரைப் பற்றியும் அவருடைய சாதனைகளைப் பற்றியும் சோழர்களைப் பற்றியும் மேலும் மேலும் அறிய அவா உண்டாகும். இத்தகைய ஆபத்தான அறிகுறிகள் தெரிந்தாலும் கவலைப்படாதீர்கள் - வியாதி இன்னும் முற்றிவிடவில்லையாதலால் இந்த நிலையிலும் குணப்படுத்தல் சாத்தியமே.

இந்தக் கட்டத்திலும் நண்பர்களும் நூலகங்களும் செய்யும் நாசவேலைதான் அதிகம். யாராவது சதாசிவ பண்டாரத்தாதின் பிற்காலச் சோழர் வரலாற்றையோ நீலகண்ட ஸாஸ்திரியாரின் சோழாஸையோ கொண்டுவந்து கொடுத்தால் அவர்களை உங்கள் ஜன்மவிரோதிகள் என்று கண்டு கொள்ளுங்கள். அவர்கள் உங்களை முழுநாள் வியாதியஸ்தராக்கப் பார்க்கிறார்கள் - அவர்களுடைய சதியில் ஏமாற வேண்டாம்.

"இதோ பாரப்பா - ஏதோ தெரியாத்தனமாய்க் கல்கியின் வரலாற்று நாவல் படித்துவிட்டேன் - இதற்குமேலும் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமில்லை - இன்டர்நெட் யுகத்தில் சோழனும் பாண்டியனும் எனக்குத் தேவையா?" என்று முகத்திலடித்தாற்போல் பேசித் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இதுதான் தப்பிப்பதற்கு ஒரே கடைசி வாய்ப்பு.

மேலும் கல்கியைப் படித்ததற்குப் பிராயச்சித்தமாக ஐந்தாறு பாக்கெட் நாவல்களையும் அந்த வாரத்தின் எல்லா சினிமா பத்திரிக்கைகளையும் (அதாவது எல்லா வெகுஜன தமிழ்ப் பத்திரிக்கைகளையும்) ஒரே மூச்சில் படித்து கல்கியின் பாதிப்பு அதிகம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டத்தில் மற்ற தமிழிலக்கிங்களிலும் பார்வை படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் - ஏனெனில் எல்லா நல்ல இலக்கியங்களுமே வாழ்வைப் பற்றிய கேள்விகளை எழுப்பும். அப்புறம் அப்படிச்சுற்றி இப்படிச்சுற்றி இதே ஆபத்தான கட்டத்திற்கு வந்துவிடுவீர்கள்! அதனால்தான் மற்ற தமிழ் இலக்கியங்களையும் படிப்பது கூடாது என்கிறேன்.

குடும்பம், அடுத்த வீட்டுக்காரன், உறவினர், வேலை, வெளிநாடு என்று சிக்கலில்லாத அரசியலில் மிச்ச வாழ்க்கையைக் கழித்து அவரவர் நம்பிக்கைக்கேற்றபடி வைகுந்தமோ கைலாஸமோ போய்ச் சேர்வதுதான் ஆபத்தில்லாத வழி.

இத்தனை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாய் வரலாற்றாறாய்ச்சிப் புத்தகங்களைப் படித்தீர்களானால் - நீங்கள் குணப்படுத்தக்கூடிய எல்லையைத் தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். அதற்கப்புறம் வாழ்நாள் முழுக்க வியாதி சிறுகச் சிறுக முற்றுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

இது ஒரு வேதனையான கட்டம்.

வரலாறு பற்றி அதிகம் படிக்கத் தோன்றும். உள்ளே ஞம ஞமவென்று என்னவோ செய்யும். ஆனால் புத்தகங்களோ செய்தியோ அதிகம் கிடைக்காது. கன்னிமாரா, தேவநேயப் பாவாணர் என்று நூலகம் நூலகமாகச் சென்றால் - நம்மிலும் வியாதி முற்றிய ஒருவர் அந்தப் புத்தகங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போயிருப்பார். அல்லது அப்படிப்பட்ட புத்தகங்களை யாரும் படித்துவிடக்கூடாது என்கிற சமுதாய நோக்கில் நூலகர் அவற்றையெல்லாம் கண்களில் படாத இடத்தில் ஒளித்து வைத்திருப்பார்.

பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் சினிமா செய்தி என்கிற மாற்று மருந்து தென்படுமேயொழிய சரித்திரம் சம்பந்தப்பட்ட செய்திகள் மருந்துக்குக்கூட வராது. இந்துவில் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு தேடித்தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு முலையில் "Dr.Kalaikovan of Raajamanickanar Institute of Historic Research confirmed the findings of bronzes of chola era in a tiny hamlet near Trichy..." என்று குறுஞ்செய்தி வெளியிட்டிருப்பார்கள். மற்ற வியாதியஸ்தர்களுடன் பேசும்போது இதைக் குறிப்பிட்டால் "அட, நமக்காகவே வரலாறு என்றொரு ஆய்விதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறதே - தெரியாதா?" என்பார்கள்.

வேறு வினையே வேண்டாம் ! உங்கள் கதை அத்தோடு முடிந்தது.

வரலாறு படிக்க ஆரம்பித்த ஆறே மாதத்தில் அருகிலிருக்கும் மற்ற வியாதியஸ்தர்களையும் கூட்டிக்கொண்டு வாராவாரமோ மாதாமாதமோ பழங்காலக் கோயில்களையும் குளங்களையும் கல்வெட்டுக்களையும் தேடிக்கொண்டு கிளம்பிவிடுவீர்கள். அப்பா அம்மாவின் புலம்பலோ மனைவியின் அழுகையோ ஒரு பொருட்டாகவே தோன்றாது!

உங்களில் இலக்கிய ஆர்வம் மிகுந்த ஒரு கோஷ்டி சரித்திரக் கதைகள் எழுதுகிறேன் என்றும் கிளம்பக்கூடும். அப்படி யாராவது கிளம்பினால் அவரை உட்காரவைத்து - அவரது ஆர்வத்தை நசுக்கி - "தமிள் பத்திரிக்கையிலெல்லாம் இதெல்லாம் போடமாட்டாங்கப்பா!" - என்று பயந்தும் நயந்தும் பேசி அவரை மேற்கொண்டு எழுதாமல் செய்ய வேண்டியது நம் அனைவரின் சமுதாயக் கடன்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாதியஸ்தர்கள் பெருகிப்போய் தங்களுக்கென்று ஒரு இணையக் குழுவையும் (http://groups.yahoo.com/group/ponniyinselvan) இணையத் தளத்தையும் (http://www.varalaaru.com - அட, இப்போ நீங்க இங்கதான் மாட்டிக்கொண்டிருக்கிறீர்களாக்கும்!) உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லாம் இணைய ஜனநாயகத்தால் வந்த மற்றொரு கேடு! இந்தக் குழுவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதைப் பார்த்தால் ஒருநாள் உலகச் சுகாதார மையம் தலையிட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்த ஆபத்தான நிலைவரும் முன்பாகத் தமிழராகிய நாம் விழித்தெழுந்து இந்தச் சரித்திர ஆர்வம் நம்மிடமோ நம் குடும்பத்தாரிடமோ நம் அண்டை அயலாரிடமோ தூக்கவொட்டாமல் பார்த்துக் கொள்வது சிறந்ததொரு சமுதாயப் பணியாக
இருக்குமென்று கேட்டுக் கொள்கிறேன்.

வாள்க டாமில் !

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.