http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > கலைக்கோவன் பக்கம்
பஞ்சமூலம்
இரா. கலைக்கோவன்

கோவை நிர்மலா கல்லூரியில் 25-10-2002 அன்று தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் ஒன்பதாம் கூடலில், முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள் ஆற்றிய கலை, பண்பாட்டுப் பிரிவிற்கான தலைமையுரை.

மதிப்பிற்குரிய பேராசிரியப் பெருமக்களே, ஆய்வறிஞர்களே, நண்பர்களே, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இவ்வொன்பதாம் கூடலில் உங்களனைவரையும் ஒருமித்துச் சந்திக்கும் பேறு பெற்றமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவேன். எங்கள் உழைப்பைப் பொருட்படுத்தி இக்கூடலின் கலை, பண்பாட்டுப் பிரிவிற்குத் தலைமையேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கும் வரலாற்றுப் பேரவையின் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் பெருந்தன்மைக்கும் பேரன்பிற்கும் தலைவணங்கி, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் அனைத்து ஆய்வாளர்களின் வரலாற்றுப் பங்களிப்பிற்கும் நீங்கள் தந்திருக்கும் இந்த அங்கீகரிப்பை நினைவிலிருத்தி, எங்கள் எண்ணங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இன்றைய சூழலில், தமிழ்நாட்டு வரலாற்றை வளப்படுத்தக்கூடியவை, மேம்படுத்தக்கூடியவை, பதிவுகள், புத்தாய்வு, மீளாய்வு, புதுப்பித்தல், தரப்படுத்தல் எனும் ஐந்து நிலைப்பாடுகளே. வரலாற்றின் எந்த ஓர் உட்பிரிவிற்கும் இப்பஞ்சமூலங்கள் இன்றியமையாதவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக் கலை, பண்பாட்டு வரலாறு பற்றிய விழிப்புணர்வு விரிவடைந்துள்ளது. தொண்ணூறுகளில் நிகழ்ந்த இந்த மலர்ச்சிக்குப் பல காரணங்களைக் கூறமுடியுமென்றாலும், இளைஞர்களின் பங்கேற்பும், பங்களிப்புமே முதன்மையான காரணமாகத் தெரிகின்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட கலை, பண்பாடு சார்ந்த ஆய்வெடுகள் உருப்பெற்றுள்ளன. முதுகலை, முதுநிறைஞர், முனைவர் பட்ட ஆய்வேடுகளாக வடிவம் கொண்டுள்ள இவற்றின் எண்ணிக்கை மகிழ்ச்சியூட்டினாலும், உள்ளீடு, வளர்நிலை பற்றிய கருத்தாக்கங்களை விரைந்து வகைப்படுத்த வேண்டுமென்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. திறன் வங்கி குறைவுற்றிருப்பதால் விழிப்புணர்வு விரிவடைந்தும் பயனேதுமில்லை என்ற நிலை.

பதிவுகள், வரலாற்று எழுதலின் முதற்படியெனலாம். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றுப் பதிவுகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. இருக்கின்ற செல்வத்தின் பத்து விழுக்காட்டுப் பகுதிகூடப் பதிவாகவில்லை என்பதே உண்மை. பதிவானவை இவை எனத் தெளிவுபடுத்தும் ஆவணங்கள்கூட நம்மிடமில்லை. கணிணியின் பயன்பாடு ஏறத்தாழ அனைத்துக் கல்லூரிகளிலும், பல்கலைகளிலும் இருந்தும், இந்நிலை என்பதுதான் துன்பமானது. இதனால் ஒரே கலைப்பொருளை, பண்பாட்டுக் கூறுகளைத் திரும்பத் திரும்பப் பலர் பதிவு செய்திடும் அவலம் நிகழ்ந்துள்ளது. திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருநெடுங்களம் திருக்கோயிலை ஏழு ஆய்வு மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆய்வு செய்துள்ளனர். இவற்றுள் ஐந்து ஆய்வேடுகள் ஒன்றிலிருந்து ஒன்றாய்ப் பிறந்தவை. ஆய்வாளர் பெயரும், ஆங்காங்கே சில வரிகளும் மட்டுமே மாற்றப்பெற்றவை. 'கோயில் பற்றிய ஆய்வு', என்று புள்ளிவிவரம் சேகரிக்கும்போது, இந்த ஐந்தும் இவைபோன்று திரும்பச் செய்யப்பட்டவைகளும் விழுக்காட்டை ஏற்றி, தமிழ்நாட்டில் கோவிலாய்வுப் பதிவுகள் உச்சத்திலிருப்பது போல் ஒரு மயக்கம் தரும்.

கலையும் பண்பாடுமே ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அடையாளப்படுத்துபவை. பண்பாடே சமூகக் கட்டமைப்பைத் தோற்றுவித்தது. அந்தக் கட்டமைப்புதான் தலைமைக்கு வித்திட்டது. இவ்வாறு சமூக, அரசியல் வரலாற்றிற்கு அடித்தளமாக விளங்கும் பண்பாட்டின் வரலாறு தெளிவுற வரையப்பட வேண்டுமெனில், சரியான, முறையான பண்பாட்டுப் பதிவுகள் இன்றியமையாதவை. அவற்றைப் பதிவுசெய்ய வரலாற்றுத்துறைகளினும் சிறந்த அமைப்புகள் இருக்கக்கூடுமா? துறை சார்ந்து செய்யவியலாச் சூழலிருப்பின், அந்தந்த ஊரிலுள்ள வரலாற்று ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து, ஒரு கூட்டமைப்பாய்ச் செயல்பட்டுப் பதிவுகளை மேற்கொள்ளலாம். பதிவுகள் புதியனவாக இருப்பின் நாளிதழ்கள் மூலம் அவற்றை நாடெங்குமுள்ள ஆய்வாளர்கட்குத் தெரியப்படுத்தலாம். இதனால் வரலாற்றிற்குப் புதிய வரவு சேர்ந்துள்ளமை, வரலாறு தொடர்புடைய அனைவர்க்கும் தெரியவருவதுடன், திரும்பத் திரும்ப ஒரே பொருளை ஆய்வு செய்யும் வாய்ப்பும் குறையும்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பேரூர்களில் கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகள் இல்லாத இடங்களில் மேல்நிலைப் பள்ளிகளைக் காணமுடிகிறது. இவ்விரு கல்வி நிறுவன வரலாற்றுத்துறையினரும் இணைந்து பதிவு முயற்சிகளில் ஈடுபடலாம். மிகமுனைந்து பதிவுசெய்ய வேண்டிய நிலையிலிப்பவை திருக்கோயில் செல்வங்களே. குடமுழுக்கு என்ற பெயரால் இப்பண்பாட்டுக் கருவூலங்கள் சிதைக்கப்படுகின்றன. இவை வடிவம் மாறி அடையாளம் இழக்கும் நிலைகளையும் எங்கள் ஆய்வுக்களங்களில் பரவலாகக் கண்டிருக்கிறோம். கள ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் பலர், குறிப்பாக, முனைவர் வெ. வேதாசலம், திரு சொ. சாந்தலிங்கம் ஆகியோர் இத்தகு இழப்புகளைப் பரவலாகப் பதிவு செய்துள்ளனர். எவ்வளவு எடுத்துக்கூறினாலும் அரசுத்துறைகள் இதில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் வரலாற்றுத்துறை சார்ந்த நண்பர்கள், வரலாற்றில் ஈடுபாடுடைய அன்பர்கள், இழப்பு முழுமையாகும் முன் பதிவு மேற்கொள்ள முனையவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள முப்பதாயிரத்திற்கும் மேலான திருக்கோயில்களின் அனைத்துக் கலைச்செல்வங்களும் முறையான பதிவைப் பெறவேண்டும். இது நம் முன் நிற்கும் முதற்பணி.

பதிவு செய்வதற்கு, எதைப் பதிவு செய்கிறோமோ அதைப் பற்றிய அடிப்படை அறிவும் தெளிவும் இன்றியமையாதவை. கோயிற்கலைப் பதிவுகளில் ஈடுபடுவோர் அதற்கான வழிகாட்டலை இருவழிகளில் பெறமுடியும். தரமான நூல்களைப் படித்து அடிப்படைகளை அறிவது ஒருவழி. தேர்ந்த நிறுவனங்கள் அல்லது அறிஞர்களின் துணையுடன் தகுதி பெறுவது மற்றொரு வழி. இந்த இரண்டு வழிகளில் எது இயலுவதோ அதைப் பின்பற்றித் தகுதி பெறுவதும் பின் பதிவுப் பணியில் ஈடுபடுவதும் இன்றைக்கு நம் முன் நிற்கும் இன்றியமையாத் தேவைகளாகும். கோயில் திருப்பணி நடக்கப்போகிறது என்று கேள்விப்பட்டவுடன் ஓடோடிச் சென்று கல்வெட்டுகளையும் அரிய சிற்பங்களையும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஐரோப்பிய, தமிழ்நாட்டு அறிஞர்கள் அன்று பதிவுசெய்யாமல் விட்டிருந்தால், இன்று நாம் எத்தகு செல்வத்தை இழந்திருப்போம் என்பதைத் திருவிசலூர் சிவயோகநாதசாமி, திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர், உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்களைச் சென்று பார்த்தால் அங்கைக் கனியாய் விளங்கும்.

திருவிசலூர் சிவயோகநாதசாமி திருக்கோயில் திருப்பணி ஏறத்தாழ ஐம்பது கல்வெட்டுகளை அழித்திருக்கிறது. பராய்த்துறைக் குடமுழுக்காளர்கள் நாற்பத்தைந்து கல்வெட்டுகளை இழக்கச் செய்துள்ளனர். பஞ்சவர்ணசாமி கோயிலில் பதினைந்து கல்வெட்டுகளைக் காணவில்லை. பழமையான சிற்பங்கள் ஒன்றுகூட இக்கோயிலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்செந்துறை சந்திரசேகரர் திருக்கோயில் திருப்பணியின்போது முற்சோழர் ஆடற்சிற்பங்கள் வண்ணப்பூச்சிற்காளாகி விகாரப்பட்டன. அதே கோயிலின் கோபுரத்திலிருந்த அரிய சுதையுருவமான, 'சக்திசதுஷ்கா' முற்றிலுமாய் மாற்றப்பட்டுவிட்டது. நத்தமாங்குடி திருமூலேசுவரர் கோயில் பிரிக்கப்பட்டபோது கிடைத்த மூலக் கல்வெட்டுகள் பேராசிரியர் மு. நளினியும் நண்பர் இல. தியாகராசனும் படியெடுத்தமையால் வரலாற்றுக்கு வரவாயின. எத்தனையோ முயன்றும், இக்கல்வெட்டுகளை மீண்டும் சுவரெழுப்பி மூடிவிட்டனர். இத்தகு அவலங்களை நேர்செய்வதும், முடியாதவிடத்துக் கிடைக்கும் சான்றுகள் அனைத்தையும் பதிவு செய்வதும் நமது தலையாய கடமைகள். இதுபோன்ற பதிவுகள் கோயில் சார்ந்து மட்டுமின்றி சமூகஞ்சார்ந்தும் செய்யப்படவேண்டும்.

புத்தாய்வுகள், புதிய பார்வையில், புதிய நோக்குகளுடன், புதிய எல்லைகளில், விரிவான சிந்தனைகளையும் சமுதாய நலத்தையும் அடித்தளமாக்கி வளரவேண்டும். வரலாற்றின் பன்முகப்பட்ட தன்மையை முற்றிலுமாய் உணர்ந்து, பல்வேறு தளங்களில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் புத்தாய்வுகள் பலருக்கும் கிடைக்கும் நிலையில் பதிப்பிக்கப்பெறுதலும் இன்றியமையாதது. அந்தப் பணியை எளிமையாக்க வரலாற்றாய்விதழ்கள் பல்கலைக்கழகங்கள் சார்ந்தேனும் வெளிவருதல் வேண்டும். ஏற்கனவே வெளிவந்துகொண்டிருக்கும் கல்வெட்டு, ஆவணம், வரலாறு, பழங்காசு ஆகிய இதழ்களுடன், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறையினர் தொடங்கியுள்ள ஆங்கில அரையாண்டு ஆய்விதழும் சேர்ந்துள்ளது. இம்முயற்சிகள் வரவேற்கத்தக்கன; பாராட்டிற்குரியன. வரலாற்றார்வலர்களின் அரவணைப்பிற்குரியன.

இலக்கியங்களை நோக்கிய புத்தாய்வுகள் இன்றைய அடிப்படைத் தேவை. கலை, பண்பாட்டு வரலாற்றை வளப்படுத்தும் பல அரிய செய்திகள் அகழ்ந்தெடுக்கப்படாமல் இலக்கியப் புதையலாய் இனிதுறங்கிக் கிடக்கின்றன. தொல்காப்பியத்தில் தொடங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை வரலாற்று நோக்கிலான ஆய்வுகள் விதையூன்ற வேண்டும். நமக்குரிய வரலாற்று வரைவியல் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்கள் தேடுவார்த் தேவைக்கேற்ப வாழ்வியல் கூறுகளை வழங்கத் தயாராக உள்ளன என்பதை வரலாறு ஆய்விதழின் பத்துத் தொகுதிகளும் மெய்ப்பிக்கவல்லன. பேராசிரியர் ராஜு காளிதாஸ் குறிப்பிட்டிருப்பது போல பக்தி இலக்கியங்கள் சிற்ப அமைப்புகளுக்குத் தத்துவ, சமூகப் பின்புலம் காட்டக் காத்திருக்கின்றன. பல்லவ, சோழர் கால இலக்கியங்களில் கலை, பண்பாட்டுத் தரவுகள் அள்ளக்குறையா அமுதமாய் உள்ளமையை முனைவர் அர. அகிலா சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இலக்கியங்களின் உண்மைத் தன்மையில் தேவையற்ற ஐயமும் அவற்றின் கால ஒழுங்கில் சான்றுகள் சாரா கருத்து மாறுபாடுகளும் கொள்வதினும், இலக்கியங்களை வரலாற்று நேயத்துடன் அணுகும் போக்கு மிகுந்த பயன் தரும். இலக்கியப் பின்புலமில்லாமல் எழுதப்படும் வரலாறு முழுமையடைவதில்லை. இரண்டாம் நிலைச் சான்றுகளைப் பின்பற்றுவதினும், இலக்கியஞ் சார்ந்த வரலாற்றாய்வுகளுக்கு, நேரிடையாக அந்தந்த இலக்கியங்களையே படிப்பது பெரும் பயன் தரும். 'தளிச்சேரி' பற்றிய ய்வின்போது, 'தளி', 'சேரி' எனும் சொற்களின் கால ஒழுங்கிலான பொருளறிய இலக்கியங்களே எங்களுக்குத் துணைநின்றன. ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, 'தளி' என்ற சொல், மழைத்துளியையே குறித்து வந்தது. கோயிலென்ற பொருளில், தளி எனும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தும் இலக்கியம் சிறுபஞ்சமூலமேயாகும். இதைத் தொடர்ந்தே செப்பேடுகளும் கல்வெட்டுகளும் 'தளி' ஆளத் தொடங்கின.

மீளாய்வு, இழந்ததைப் பெறுவதற்காகவே நிகழ்த்தப்படுகிறது. மீளாய்வு செய்வதில் உள்ள பாடுகளையும் பயன்களையும் நான் நன்கறிவேன். ஏற்கனவே ஆய்வுசெய்யப்பட்டுத் தரவுகள் பதிப்பிக்கப்பட்ட நிலையிலுள்ள இடங்களை மீளாய்வு செய்யும்போது, மிகுந்த எச்சரிக்கை தேவை. ஆய்வு செய்தவர் யார் என்பதைவிடத் தரவுகள் மிக முக்கியம். தரவுகளில் மாற்றங்கள் உணரப்பட்டால், அவை சான்றுகளுடன் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் யாதொரு தயக்கமும் தேவையில்லை. ஆனால் அந்தச் சுட்டல், கருத்தளவில் நிற்கும் நாகரிகம் வேண்டும். மீளாய்வுகள் வரலாற்றை முதன்மைப்படுத்தும் நோக்குடன் மட்டுமே செய்யப்படவேண்டும். தனியார்களையோ, நிறுவனங்களையோ, ஆய்வாளர்களையோ சிறுமைப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் மீளாய்வுகள் சார்புடையனவாக முத்திரையிடப்பெற்று வரவேற்பிழக்கும்.

மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜரதம், அருமையான கலைப்படைப்பு. இந்த முத்தள ஒருகல் தளியைப் பற்றிப் பலர் குறிப்பிட்டிருந்தாலும், சிறுசிறு கட்டுரைகளெனச் சிலர் இதுபற்றி எழுதியிருந்தாலும், மனதில் நிற்கும் ஆய்வாக மலர்ந்திருப்பது பத்மபூஷண் திரு.கூ.ரா. சீனிவாசனின், 'The Dharmaraja Ratha and its Sculptures' என்ற ஆங்கில நூல்தான். இந்த நூலைப் படித்து முடிப்பவர் யாருமே, 'இனியோர் ஆய்வு இக்கோயில் பற்றித் தேவையில்லை' என்ற முடிவிற்கே வரநேரும். ஆனால் பல்லவர் கலைவரலாற்றில் கவனம் செலுத்திவரும் நாங்கள் அந்தத் தளியை மீளாய்வுக்கு உட்படுத்தினோம். அறிஞர் கூ.ரா.சீனிவாசனின் நூலை தளிக்கே எடுத்துச்சென்று வரிவரியாகப் படித்து ஒப்புநோக்கினோம். 'அத்யந்தகாமம்' என்ற பெயரில் இத்தளியை மீண்டுமொரு நூலாக்கும் நம்பிக்கையை அந்த ஒப்புநோக்கல் விதைத்து விட்டது. கலைவரலாற்றின் பேராசானாகக் கொள்ளத்தக்க அறிஞர் கூ.ரா.சீனிவாசன் தொகுத்துள்ள தரவுகளே மாறும்போது மீளாய்வின் அவசியத்தை நாம் நன்குணரலாம்.

கல்வெட்டுகளின் மறுபடிப்பும் கலைப்படைப்புகளின் மீளாய்வும் வரலாற்றின் போக்கையே மாற்றவல்லவை. தஞ்சாவூர் இராஜராஜீசுரத்தில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டை மறுபடிப்புச் செய்தபோது, இருபத்தேழு பாடவேறுபாடுகளைக் கண்டறியமுடிந்தது. இவற்றுள் 'காணபாட்', 'கோயின்மை' போன்ற சொற்கள் வரலாற்றிற்குப் புதிய தரவுகளாய் அமைந்தன. சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள குமாரவயலூர்க் கோயிலை மீளாய்வு செய்தபோது மூன்று புதிய கல்வெட்டுகளும் சில அரிய சிற்பங்களும் கண்டறியப்பட்டன.

திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு, கலை, பண்பாடு சார்ந்த பல புதிய தரவுகளைத் தந்துள்ளது. 'புவனசுந்தரி கல்யாணம்', 'திருநெடுங்கள புராணமான வினைய பராக்கிரமம்' ஆகிய கூத்துகள் பிற்சோழர் காலத்தே, சித்திரைத் திருவிழாவில் இக்கோயிலில் ஆடப்பட்டன. சமணஞ் சார்ந்த சிற்பங்களமைந்த தூணும் உத்திரமும் கிடைத்ததுடன், ஸ்ர்புறக்குடிப்பள்ளி என்னும் சமணத்தலம் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளும் கண்டறியப்பட்டன. திருநல்லூர் கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட மறு ஆய்வு, கி.பி.1175இல் அமர்நீதிநாயனாரின் வரலாறு, 'கோவணநாடகம்' என்ற பெயரில் இத்திருக்கோயிலில், நெற்றிக்கண் நங்கையால் நடிக்கப்பட்டதையும், 'பிரதி கொடுத்து ஆடுதல்', 'கற்றாடுதல்' போன்ற பழக்கங்கள் அக்காலத்தே வழக்கிலிருந்தமையையும் தெரியப்படுத்தியுள்ளது.

திரு.ஐராவதம் மகாதேவன் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அனைத்துத் தமிழ்க் கல்வெட்டுகளையும் மறுபடிப்பு, மறுபதிவு செய்து, மீளாய்வு முடித்து நூலாக்கிக் கொண்டிருக்கிறார். பேராசிரியர் கா.இராசன் தமிழ்நாடு முழுவதும் பரப்பாய்வு மேற்கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டுக் கூறுகளைப் புத்தாய்வும் மீளாய்வும் செய்துவருகிறார். இவ்விரு அறிஞர் தம் வெளியீடுகளும் தமிழ்நாட்டுக் கலை, பண்பாட்டு வரலாற்றின் தொடக்க நிலைகள் பற்றிய அரிய தொகுப்புகளாக அமையும் வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள பெருப்பாலான கோயிலாய்வுகள், கல்வெட்டறிக்கைகளின் பதிவுகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன. இப்பதிவுகள் பாடங்களாகவும் சுருக்கங்களாகவும் வெளிவந்துள்ளன. மிகச் சில கோயில்களின் மிகச்சில கல்வெட்டுகளே பாடங்களாகக் கிடைக்கின்றன. ஏறத்தாழ எழுபதாண்டுக் காலப் பதிவுகள் சுருக்கங்களாகவும் இருபதாண்டுக் காலப் பதிவுகள் பாடங்களாகவும் கிடைக்கின்றன. பாடங்களில் பிழைகளும், சுருக்கங்களில் பல அரிய தரவுகள் விடப்பட்டுள்ளமையும் கண்கூடு.

தமிழ்நாட்டின் பல கோயில்களில் கல்வெட்டுப் படியெடுப்பு நிகழ்ந்திருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் முழுமையான படியெடுப்பிற்கு ஆளாகவில்லை என்ற உண்மையை ஆய்வாளர்கள் மறந்துவிடக்கூடாது. அதனால் எந்த ஒரு கோயிலாய்வும் ஏதாவதொருவகையில் மீளாய்வாகவே அமைந்துவிடும் சூழலிருக்கிறது. கோயிற்கலை ஆய்வாளர்கள் தரவுப் பதிவில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும். இருக்கின்ற தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வு முடிவுகளும் அவற்றால் திருப்பிவிடப்பட்ட வரலாற்றுப் போக்குகளும் கணக்கிலடங்காதவை.

புதுப்பித்தல், வரலாற்றின் உயிர்நாடி. தஞ்சாவூர் இராஜராஜீசுவர விமானத்தின் உச்சியிலேறிப் பார்த்து, அதன் உச்சித்தளமோ, சிகரமோ ஒரு கல்லால் னவையல்ல என்பதை எங்கள் ஆய்வாளர்கள் உறுதிபடுத்திய பிறகும், அதை 'இந்து' போன்ற நாளிதழ்கள், 'Little known Facts' என்று தலைப்பிட்டுத் தகவலுக்காகப் பதிப்பித்த பிறகும், புதிதாக வெளிவரும் வரலாற்றுப் பாடநூல்களும் புத்தகங்களும் பழைய பல்லவியே பாடிக்கொண்டிருப்பது எந்தவகையில் நியாயம்? ஆய்வாளரின் அறிவிப்பு நம்பிக்கைக்குரியதாக இல்லையெனக் கருதுவார், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் உதவி பெற்று, இராஜராஜீசுவரத்தின் உச்சியை அணுகி உண்மையறிந்து ஊருக்கும் சொல்லலாம். அவ்வாறல்லாது, புதியனவற்றை ஏற்பதும் விடுத்து, அவற்றைச் சரிபார்ப்பதும் தவிர்த்துப் பழைய பொய்களையே வரலாறு என வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டாமா? வரலாறு பல இடங்களில் மெய்ப்பிக்கப்படக்கூடியது. மிகச்சில இடங்களே ஊகத்திலடங்கும்.

கி.பி.250இல் இருந்து கி.பி.550 வரையிலான தமிழ்நாட்டு வரலாற்றுக் காலம் இருண்டகாலமென்று இந்நாளிலும் பல கட்டுரைகளும் நூல்களும் பேசுவது பொருந்துமா? கி.பி.250 இல் இருந்து தொடர்ந்து கிடைக்கும் பல்லவர் செப்பேடுகள் வடதமிழ்நாட்டு வரலாறு பேசவில்லையா? பூலாங்குறிச்சிக் கல்வெட்டும், பல நடுகற் கல்வெட்டுகளும் தரும் வரலாற்றுண்மைகளை ஏற்காமலிருக்கக் கூடுமா? பதினெண் கீழ்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் தரும் செய்திகளை எந்தக் காலத்துடன்தான் தொடர்புபடுத்துவது? அப்பரும் சம்பந்தரும் ஆறாம் நூற்றாண்டினர் என்பது ஒப்புதலான பிறகும், அவர்கள் பாடியவை எண்ணிலடங்கா இறைக்கோயில்கள் என்பது கணக்கான பிறகும், அந்தக் கோயில்கள் எத்தகு சமுதாயத்தில் உருவாகியிருக்க வேண்டுமெனக் கருதாமல், தேவாரப் பாடல்களின் உட்புலம், பின்புலம் தெளியாமல், கி.பி.250-550 இருண்டகாலம் எனக் கண்களை மூடிக்கொள்ளும் போக்கு இன்னமும் சில கட்டுரைகளிலும் நூல்களிலும் காணப்படுவதை எப்படித் தவிர்ப்பது?

ஜப்பானிய அறிஞர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சில கருத்துருக்களின் அடிப்படையில் காலக்கணக்கீடு செய்துள்ளனர். மணிமேகலையை இந்திய, இலங்கை, சுவீடன் அறிஞர்கள் கொள்கைகளின் அடிப்படையில் காலக்கணக்கீடு செய்துள்ளனர். அவற்றை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமையும் அவரவர் விருப்பமெனினும் பொதுக் கருத்து, பெருப்பான்மையர் கருத்து என்று ஏதேனும் ஒன்றை உரிய சான்றுகளின் அடிப்படையில் உருவாக்குவதன் வழி, குழப்பங்கள் தீரவும் வரலாறு வடிவம் பெறவும் உதவுதல் நம் கடமையென்றே கருதுகிறேன்.

புதுப்பித்தல் அன்றாட நிகழ்வாகவில்லையென்றால் வரலாறு ஏட்டுச்சுரையாகவே நின்றுவிடும். மேலப்பனையூரைச் சேர்ந்த திரு. கரு. இராஜேந்திரன் நூற்றுக்கணக்கான மதகு, கலிங்குக் கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். இக்கல்வெட்டுகளைத் தொகுத்து சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட நீர்ப்பாசன வரலாறு எழுதமுடியும். தரவுகளைத் தேடித்தர ஆய்வர்கள் பலராய் இருக்கும்போது, அவற்றைத் தொகுத்து வரலாற்றைப் புதுப்பிப்பதும் மாற்றியெழுதுவதும் நம் பொறுப்பே.

பதிவுசெய்தலும், புத்தாய்வும், மீளாய்வும், புதுப்பித்தலும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் தரப்படுத்துதலும். 'இந்தத் துறையில் இன்னார் ஆய்வு முடிவுகள் சரியானவையாக இருக்கும்' என்று கருதத் தோன்றுமாறு அமைந்துள்ள ஆய்வுகள் தமிழ்நாட்டில் இல்லாமலில்லை. கலை, பண்பாட்டுத்துறையில் திரு. கூ.ரா.சீனிவாசனின் நூல்கள் தனித்துக் குறிப்பிடத்தக்கவை. தரவுப் பதிவில் அவருக்கு நிகர் அவர்தான். அப்பெருந்தகையுடன் நெருங்கிப் பழகிய யாரும் எத்தகு நடமாடும் கலைக்களஞ்சியமாக அவர் விளங்கினார் என்பதை நன்குணர்ந்திருப்பர். எந்தக் கருத்துமுடிவும் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகே அவரால் முன்வைக்கப்பட்டுள்ளன. விடுபடல்களும் தவறான பதிவுகளும் எந்த ஆய்வாளருக்கும் இயல்பானவையே. அவை எந்த விகிதத்தில் உள்ளன என்பது கொண்டே, 'தரப்படுத்துதல்' அமைகிறது.

எந்த ஓர் ஆய்வாளரின் பங்களிப்பையும், படித்த மாத்திரத்தில் தரப்படுத்துதல் எளிதானதல்ல. இதைத் தனியார்களோ, குழுவோ, நிறுவனங்களோ தகுந்த பின்புலமற்ற நிலையில் செய்துவிடமுடியாது. அதே புலத்தில் ஆய்வு செய்வார் மட்டுமே, எந்தவோர் ஆய்வையும், தரமுள்ளதுதானா என்று உறுதிபடுத்தமுடியும். இதற்காக ஒவ்வோர் ஆய்வையும் மறு ஆய்வு செய்தலோ, அல்லது ஐயத்துடன் பார்ப்பதோ நடைமுறை சாத்தியமல்ல. துறையறிவுடையோர் தேர்ந்து கொள்ள வேண்டும். 'தரப்படுத்துதல்', பகைமையைத் தேடித்தருமென்றாலும், அந்தப் பகைமை மகிழ்ந்து கொள்ளத்தக்கது. பிழையான வரலாற்றை வரவேற்று அரியணையேற்றி அதற்குச் சாமரம் வீசுவதினும் தரப்படுத்தித் தாழ்வதில் தவறில்லை. யார் தாழ்த்துகிறார்கள் என்பதைக் காலம் கவனித்துக் கொள்ளும். எந்தக் காழ்ப்புணர்வுமில்லாமல் கருத்துருக்களின், தரவுகளின் அடிப்படையில் நேர்மையுடன் நிகழ்த்தப்படும் தரப்படுத்தலினால் வரலாற்றின் நம்பகத்தன்மை பெருமளவு உயருமென்பதுடன், மக்களிடையேயும் வரலாறு பற்றிய தெளிவு பிறக்கும்.

'Culture', 'Art', என்ற ஆங்கிலச் சொற்களும் அவற்றிற்கு நிகரான 'பண்பாடு', 'கலை' எனும் தமிழ் சொற்களும் மிக விந்தையானவை. இதற்கு, இதுதான் பொருள் என்று உறுதியிட்டுக் கூறமுடியாதபடி நெகிழ்ச்சியான பொருட்புலத்தைக் கொண்ட Culture, Art எனும் ஆங்கிலச் சொற்கள் ஒவ்வொரு பொருள் விளக்கத்துடன் காணப்படுகின்றன. அதுபோலவே பண்பும் கலையும் தமிழிலக்கியங்களிலும் தமிழகராதிகளிலும் நெகிழ்ந்தே பொருள் புலப்படுத்துகின்றன. கலையோ பண்பாடோ, கல்ச்சரோ, ஆர்ட்டோ எந்தச் சொல்லாயினும் அது குறிப்பது மனிதச் சிந்தனையின் வெளிப்பாடுகளை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. American Heritage Dictionary of English Language, 'The totality of socially transmitted behaviour pattern, arts, beliefs, institutions and all other products of human work and thought' என்று cultureஐ வரையறுக்க முயல்கிறது. சிந்தனையின் மலர்ச்சியாக விளையும் பண்பாடும், அந்தப் பண்பாட்டின் வெளிப்பாடாக மலரும் கலையுமே மொழி, இன, மதக் கோடுகளைத் தாண்டி வாழ்க்கையை, அது எந்தக் காலம் சார்ந்ததாக இருந்தாலும் அர்த்தப்படுத்துகிறது. மகத்தான சாதனைகளைத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் படைத்தளித்திருக்கிறார்கள்.

வானஞ்சுரண்டிகளை விளைவித்த அமெரிக்கர்கள், இராஜராஜீசுவரம் பார்ப்பதற்காகத்தான் தஞ்சாவூர் வருகிறார்கள். மல்லைக் கடற்கரை விமானங்களைக் கண்டு வியந்துபோகும் ஐரோப்பியர்கள், தமிழர் கைவிரல் திறம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கலைக் கருவூலங்கள் இன்று உலகப் பொதுவிடங்களாக மதிக்கப்படுகின்றன. இத்தகு பெருமைக்குரிய 'கலையும் பண்பாடும்', வரலாற்றுலகில் அதற்கான இடத்தைப் பெறுமாறு செய்வது ஆய்வாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. சான்றுகளற்ற நிலையில், 'இது எட்டாம் நூற்றாண்டு', 'இது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது' என்றெல்லாம் மனம் போனபடி கலைச்செல்வங்களைக் கால நிர்ணயம் செய்யும் போக்குகளைத் தவிர்த்து, சரியான கருத்துருக்களின் அடிப்படையில், நெகிழ்ச்சியான காலப்பகுப்பாக இருந்தாலும், நேர்மையான கூற்றுகளையே முதன்மைப்படுத்தி, அறவழிப்பட்டதொரு கலை, பண்பாட்டு வரலாறு, தமிழ்நாடு முழுவதற்குமாய் எழுதப்படுதல் இந்த நாளின் முதல் தேவை. இதைத் தான் பாரதி, 'சரித்திரத் தேர்ச்சி கொள்', 'பெரிதினும் பெரிது கேள்' என்கிறார்.

நன்றி, வணக்கம்.


கட்டுரை ஆசிரியர்

முனைவர் இரா. கலைக்கோவன், M.B.B.S., D.O., M.A., M.A., Ph.D.,

இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்,


this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.