http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > ஆலாபனை
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
மு. நளினி

ஆடலும் பாடலும் தொடக்க காலத்திலிருந்தே தமிழர் வாழ்க்கையுடன் ஒன்றிப் போயிருந்தமையைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தெளிவுற விளக்குகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுள் ஒன்றான பொருளதிகாரத்தில் வள்ளி, காந்தள், தேர்க்குரவைகள், அமலை போன்ற புறத்திணை சார்ந்த அந்நாளைய ஆடல் வடிவங்கள் குறிக்கப்படுகின்றன. களவியல் அதிகாரத்தில் தலைவிக்கான கூற்று நிகழுமிடங்களை வரிசைப்படுத்துகையில், அகத்திணை ஆடல்களுள் ஒன்றான வெறியாட்டு தொல்காப்பியரால் சுட்டப்படுகிறது. தோழிக்கான கூற்றிடங்களைக் கற்பியலில் சுட்டுமிடத்துப் பாணர், கூத்தர், விறலியர் என்னும் தொழிற்சார்ந்த கலைஞர்களைத் தொல்காப்பியர் அறிமுகப்படுத்துகிறார். கூத்தர் ஆடற்கலைஞர்கள். பாணர்கள் இசைக்கலைஞர்கள். விறலியர் ஆடலும் பாடலும் கற்றுத் தேர்ந்தவர். இவர்கள் தவிர, பாடிணிகளும் இருந்தமையைச் சங்க இலக்கியங்களால் அறியலாம்.

பாணர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர் என இருவகையினராவர். யாழ்ப்பாணர் தாம் வாசித்த யாழிற்கேற்ப பெரும்பாணரென்றும் சிறுபாணரென்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் யாழிசைத்துப் பாட வல்லவராவர். இவர்கள் தவிர, விறலியரும், கண்ணுளரும், வயிரியவரும், கோடியரும் நன்கு பாடல் பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். இப்பாடல்களை அவர்களே இயற்றிப் பாடினர். பாடல்கள் அரசர்களைப் புகழ்ந்தும், தெய்வங்களைப் பரவியும், மரபு நிலைகளைப் பகர்ந்தும், வெற்றிகளைக் கொண்டாடியும் அமைந்தன. பாடியவர்கள் தமக்கு முன்னோர் பாடிய முறைப்படியும் பாடினர்; புதிய முறைகளிலும், புதிய பண்ணமைத்தும் பாடினர். பாலை பாடிய பாடினியர் மறமும் பாடினர்; முழவிசைத்து வஞ்சியும் பாடினர்.

விறலியர் கின்னரத்தைப் பழிக்கும் இனிய குரலுடையவராய் இருந்தனர். குறிஞ்சியும் வண்ணமும் பாடுவதில் ஆற்றல் பெற்றிருந்த இவர்தம் பாடல்களில் பழமையும் புதுமையும் பொலிந்தன. வயிரியர் யாழிசைத்துப் பாடினர். வேலர்கள் வெறியாட்டிலும் பாடல் இருந்தது. கடம்பும் களிறும் பாடி, முருகனின் வீரச்செயல்கள் போற்றும் இப்பாடல்களில் தலைவியின் நோய் தணிக்கும் வேண்டுதலும் இருந்தது.

சங்க காலத்தை தொடர்ந்தமைந்த காப்பியக் காலத்தில் இசைக்கலை வளர்நிலைகளில் உயர்ந்தது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையும் கானல்வரிப் பாட்டும் காப்பிய காலப் பாடகர்களின், பாடல்களின் திறமும் வகையும் காட்டுகின்றன. ஆடி முதிர்ந்த தோரிய மங்கையர் தலைக்கோல் அரிவைக் குணத்தொடு பொருந்தி நலந்தரு பாடலும் ஆடலும் மிக்கோராய் இருந்தனர். நன்மை உண்டாகவும், தீமை நீங்கவும் வேண்டி தெய்வப் பாடல்களைப் பாடுவதில் இவர்கள் தேர்ந்தவர்களாக இருந்தனர். தலைப்பாட்டு, இடைப்பாட்டு பாட அதற்கென கூத்தியர் இருந்தனர்.

பாணர்கள் நகர்ப்புறங்களில் பாண் இருக்கைகள் அமைத்து வாழ்ந்தனர். இவர்கள் தாமே பாடல்கள் இயற்றிப் பாடியதுடன், வழங்கு கதைப் பாடல்களையும் பாடி வந்தனர். யாழ், குழல் வாசிப்பில் தேர்ந்திருந்த இவர்கள், ஆடல் நிகழ்ச்சிகளுக்குப் பாடுநர்களாகவும் அமைந்தனர். ஊர்ப்புறத்துக் குரவை, துணங்கை ஆடல்களில் தனிப்பாடலும், குழுப்பாடலும் இடம்பெற்றன.

பல்லவர், பாண்டியர் காலத்தில் இசைக்கலை பெருவளர்ச்சி பெற்றது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் மேற்கொண்ட நடைப்பயணங்கள் அனைத்துமே பாடலுடன் நிகழ்ந்ததால், இறைநோக்குடைய பாடல்கள் பலவாய்ப் பிறந்தன. கோயில்கள் அமைந்திருந்த ஒவ்வொரு ஊருக்கும் பாடல் இருந்தது. அந்தந்த ஊரின் இயற்கை வளம், சமயநிலை, இறைச்சிந்தனைகள், சமுதாயச் செய்திகள் என இப்பாடல்கள் அமைந்தமையால், அவற்றை விரும்பிப் பயின்று பாடுவாரின் எண்ணிக்கையும் மிகுதியானது.

'காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட', 'பாவியல் பாடல் அறாத ஆவூர்', 'பண்ண வண்ணத்தராகிப் பாடலொடு ஆடல் அறாத வர்த்த மானீச்சரம்', 'மாடமல்லி சூளிகையில் ஏறி மடவார்கள் பாடல் ஒலிச்செய்யும் பழுவூர்' எனும் சம்பந்தரின் பாடலடிகள், இக்காலத்தில் பாடல் பெற்றிருந்த ஏற்றத்தையும், பாடகர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் சுட்ட வல்லனவாகும். கொட்டாட்டுப் பாட்டு, எங்கும் நிறைந்திருந்ததாகச் சுந்தரர் குறிப்பிடுகிறார்.

பண்ணின் நல்ல மொழியார் பவளத்தவர் வாயினார்,
எண்ணின் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார், வண்ணம் பாடி, வலி பாடித்
தம் வாய்மொழி பாடவே

எனும் திருமுறை அடிகள் இக்காலப் பாடல், பாடுநர் திறம் காட்டும்.

சோழர் காலத்தில் கலைகள் ஏற்றம் பெற்றன. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றின் பொற்காலமாக விளங்கிய இந்நான்கு நூற்றாண்டுகளில் முதலாம் இராஜராஜரின் ஆட்சிக்காலம் கலைகளைச் சிகரத்திலேற்றியதெனலாம். தஞ்சாவூரில் தாம் கட்டிய தனிப்பெருங்கோயிலான இராஜராஜீசுவரத்தை ஆடல், இசை எனும் இரு கலைகளின் வாழிடமாக்கிய பெருமை இராஜராஜருக்குண்டு. இராஜராஜீசுவரத்தின் வடக்குத் திருச்சுற்றுமாளிகைச் சுவரின் புறத்தே வெட்டப்பட்டுள்ள தளிச்சேரிக் கல்வெட்டு ஏறத்தாழ 55 மீட்டர் நீளமுள்ளது. இக்கல்வெட்டு இத்திருக்கோயிலுக்கு வந்துறைந்த நானூறு ஆடற்பெண்களைப் பற்றியும், இங்கு இசைப் பணியாற்ற வருகை தந்த நூற்று முப்பத்தெட்டுக் கலைஞர்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. மிடற்றுக் கலைஞர்களாகவும் கருவிக் கலைஞர்களாகவும் இத்திருக்கோயிலில் பணியமர்ந்த இசைக் கலைஞர்களுள் பலர்தம் பெயர்களும் அவர்தம் ஊதிய அளவும் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜராஜீசுவரத்தில் பணியமர்ந்த பாடகர்கள் காந்தர்வர்கள், பாணர்கள், தமிழ் பாடியவர், ஆரியம் பாடியவர், கொட்டுப்பாட்டுப் பாடியவர், காண பாட இருந்தவர், பிடாரர்கள் எனப் பலவகையினராவர். இவர்களுள் பெரும்பாலானவர்களின் பெயர்களும், அவர்கள் எங்கிருந்து இப்பொறுப்பிற்கு வந்தனர் என்ற தகவலும், ஊதிய விகிதமும், பணிநிலையும் இக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

காந்தர்வர்கள்

மாமண்டூர் முதற் குடைவரையில் காணப்படும் முதலாம் மகேந்திரவர்மரின் வடமொழிக் கல்வெட்டு, கந்தர்வ சாஸ்திரம் எனும் இசை நூலைக் குறிப்பிடுகிறது. திரு. மயிலை சீனி. வேங்கடசாமி இது கொண்டு, மகேந்திரவர்மர் கந்தர்வ சாஸ்திரத்தில் வல்லவராக இருந்தாரென்று குறிப்பிடுகிறார். இதே இசை நூலை அப்பர் பெருமானும் தம் திருவீழிமிழலைப் பதிகத்தில் குறித்துள்ளமை இங்கு நினைக்கத்தக்கது.

கண்ணவன் காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்

இப்பதிகத்திற்கு உரையெழுதிய திரு. சி. அருணை வடிவேலனார், 'கந்திருவம்' இசையிலக்கண நூலைக் குறிப்பதாகக் கூறுகிறார். கந்தருவம் என்ற சொல் இடம்பெறும் முதல் கல்வெட்டாக மகேந்திரர் கல்வெட்டும், முதல் தமிழிலக்கியமாக அப்பர் பதிகமும் அமைகின்றன.

கந்தர்வர் எனப்படுவார் வானலோகத்தினராகவும், அவர்தம் பாடல் கந்தர்வ இசையாகவும் கருதப்பட்டது. 'தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர்' எனும் ஒன்பதாம் திருமுறைப் பாடலடி இங்கு நினைக்கத்தக்கது. கல்வெட்டுகளில் கந்தர்வர் என்ற சொல் காந்தர்வர் என்றே வழங்குகிறது. சோழர் காலத்தில் தமிழ்நாட்டின் பல கோயில்களில் காந்தர்வர் பாடும் பணியிலிருந்தனர்.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இருபது காந்தர்வர்கள் பணியில் இருந்தனர். அவர்களுள் எழுபத்தைய்வனும், குப்பை திருமணஞ்சேரியும் காந்தர்வர்களாகவே பணியமர்ந்தவர்கள். கண்டராச்சனும், களரி ஆச்சனும் வேறிடத்திலிருந்து வந்து இங்குப் பணியமர்ந்த உவச்சர்கள். கண்டராச்சன் தஞ்சாவூர் பிரமகுட்டத்தில் பணியாற்றியவர். களரி ஆச்சன் ஆவூர்க் கூற்றத்துக் கூனர்கள் முன்னியூரைச் சேர்ந்தவர். பராந்தக வீமன், சுந்தரன் காலகாலன், பிசங்கன் சீராளன், தேவன் செங்குளவன் ஆகியோர் வீரசோழ அணுக்கர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் வீமன், தஞ்சாவூர் மாமணிக்கோயிலில் இருந்தும், காலகாலன், சீராளன், செங்குளவன் ஆகியோர் தஞ்சாவூர் ஜயபீமத் தளியிலிருந்தும் இக்கோயிலுக்கு பணிமாற்றம் பெற்றவர்கள்.

எஞ்சிய பன்னிருவரும் பல்வேறு படைப்பிரிவுகளிலிருந்து மாற்றப்பட்டு இராஜராஜீசுவரத்தில் காந்தர்வர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுள் கண்டிகாரி, மும்முடிச் சோழ தெரிந்த பரிக்காரர் பிரிவைச் சேர்ந்தவர். கீர்த்தி கிளைதாங்கி பராந்தகக் கொங்கவாள் படைப்பிரிவிலிருந்து வந்தவர். எஞ்சிய பத்துப்பேரும் பல்வேறு பெயர்களில் இயங்கிய தெரிந்த வலங்கை வேளைக்காரப் படைகளைச் சேர்ந்தவர்கள். இக்காந்தவர்களை நாயகம் செய்யக் கோவிந்தன் சோமநாதன், சாவூர்ப் பரஞ்சோதி என்பார் பணியிலிருந்தனர். முதல் இராஜராஜர் காலத்தில் தஞ்சாவூர்ப் புறம்படிப் பகுதியில் காந்தர்வத் தெருவென்றே ஒரு தெரு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. காந்தர்வர்களுக்குத் தலைக்கு முக்கால் வேலி நிலமும், நாயகஞ் செய்தார்க்குத் தலைக்கு இருவேலி நிலமும் வாழ்வூதியமாகத் தரப்பட்டிருந்தது.

பாணர்கள்

பாணர்கள் கோயில்களில் பாடகர்களாக இருந்ததுடன், கோயில் தேவரடியார்க்குப் பாடல் சொல்லித்தரும் பணியையும் மேற்கொண்டிருந்தனர் என்பதைத் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிற் கல்வெட்டுத் தெளிவுபட உணர்த்துகிறது. இராஜராஜீசுவரத்தில் நான்கு பாணர்கள் இருந்தனர். உத்தமன் சூற்றியான அரிகுலகேசரி சாக்கை, அய்யாறன் அரிஞ்சி, அபராஜிதன் வடவாயிலான பல்லவன் சாக்கை, வடுவூர் அரிஞ்சி எனும் அப்பாணர்கள் தாம் பாடியதுடன், இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரியில் குடியமர்த்தப்பட்டிருந்த நானூறு பெண்களுக்குப் பாடல் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்குத் தலைக்கு ஒன்றரை வேலி நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழ் பாடியவர்

இராஜராஜீசுவரத்தில் தமிழ்ப் பாடல்களைப் பாட பட்டாலகன், அமுதன் காணி, வாணராசி கூத்தன், சூற்றி என்னும் நால்வர் இருந்தனர். இவர்களுள் சூற்றிக்கு அரையன் என்னும் சிறப்புப் பெயர் இருந்தது. பட்டாலகன் காமரப் பேரையனாகத் திகழ்ந்தார். இப்பாடகர்கள் தமிழ்க் கூத்துக்களுக்குப் பாடியவர்களாகலாம். இவர்களுக்குத் தலைக்கு ஒன்றரை வேலி நிலம் வாழ்வூதியமாக அளிக்கப்பட்டிருந்தது.

ஆரியம் பாடியவர்கள்

இராஜராஜீசுவரத்தில் ஆரியம் பாடும் பொறுப்பு அம்பலநாதனிடம் தரப்பட்டிருந்தது. அரையன் என்றும் செம்பியன் வாத்யமாராயன் என்றும் சிறப்புப் பெயர்கள் பெற்றிருந்த இவர் தம்மோடு இருவரை இணைத்துக் கொண்டு ஆரியம் பாடுமாறு செய்யப்பட்டிருந்தது. ஆரியம் என்பதன் வழி கல்வெட்டு, பொதுவான வடமொழிப் பாடல்களைக் குறிக்கிறதா அல்லது ஆரியக் கூத்திற்கான பாடல்களைக் குறிக்கிறதா என்பதை அறியக்கூடவில்லை.

ஆரியம் பாடியவர்களுக்கும் தமிழ் பாடியவர்களைப் போலவே தலைக்கு ஒன்றரை வேலி நிலம் அளிக்கப்பட்டிருந்தது. கல்வெட்டில் தமிழ்ப் பாடகர்கள் அனைவர்தம் பெயர்களும் இடம்பெற்றிருக்க, ஆரியம் பாடினாராக ஒருவர் பெயர் மட்டுமே தரப்பட்டுள்ளமையும், அவரே மூவருக்குரிய பங்கையும் பெற்றுத் தேவைக்கேற்ப அல்லது பாடகர் அமைவதற்கேற்ப மேலும் இருவரை அவ்வப்போது இணைத்துக் கொண்டு பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியமையையும் நோக்க, முதலாம் இராஜராஜர் காலத்தில் தமிழில் பாடுவார் மிக்கிருந்தார் போல் ஆரியம் பாடுதற்குத் தக்கார் இல்லாதிருந்தனரோ எனக் கருத வேண்டியுள்ளது.

கொட்டுப்பாட்டுப் பாடியவர்கள்

குராவன் வீரசோழனான பஞ்சவன் மாதேவி நாடகமாராயன், மறைக்காட்டுக் கணவதியான திருவெள்ளறைச் சாக்கை, ஒற்றியூரைச் சேர்ந்த சிங்கன், இளங்கோவன் ஆகிய நால்வரும் இராஜராஜீசுவரத்தில் பாடுவதற்காகப் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இப்பாட்டின் வகையும் தன்மையும் அறியமுடியாதபடி கல்வெட்டெழுத்துக்கள் சிதைந்துள்ளன. இருக்கும் எழுத்துக்கள் கொண்டு இதைக் கொட்டு, ஆட்டம், பாடல் எனப் பிரிக்கலாம். இவற்றுள் ஆடல் தவிர்க்கப்பட்டால் கொட்டும் பாட்டும் சேர்ந்து கொட்டுப்பாட்டு என்றாகும். சுந்தரர் குறிக்கும் கொட்டாட்டுப் பாட்டில் ஆடல் தவிர்ந்த கொட்டுப்பாட்டு இராஜராஜீசுவரத்தில் நிகழ்த்தப்பட்டதாகக் கருதலாம். இக்கொட்டுப்பாட்டுப் பாடினார் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒன்றரை வேலி நிலம் பெற்றிருந்தனர்.

காண, பாட இருந்தவர்கள்

காண, பாட இராஜராஜீசுவரத்தில் ஐவர்க்குப் பங்கு ஒதுக்கப்பட்டிருந்த போதும் இருவர் பெயர்களே கல்வெட்டில் தரப்பட்டுள்ளன. இவ்விருவருள் முண்டகாரி அணுக்கன் தம்முடன் மேலும் இருவரைச் சேர்த்துக் கொண்டு பாடவும், ஆச்சன் கீர்த்திபூஷணன் ஒருவரைச் சேர்த்துக் கொண்டு பாடவும் வாய்ப்புப் பெற்றிருந்தனர். கீர்த்தி பூஷணுக்கு அரிஞ்சிகைக் காமரப்பேரையன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது. காமரப் பண் பாடுவதில் இவர் தேர்ந்தவராக இருந்தார் என்பது இவரது சிறப்புப் பெயரால் தெரியவரும் உண்மையாகும். சிவபெருமானே காமரப் பண்ணில் திளைத்தவர்தான் என்பது இங்கு நினைக்கத் தகுந்தது. அப்பர் தம் பதிகங்களில் இந்த அரிய செய்தியை மிக அழகாகப் பாடியுள்ளார்.

இலக்கியங்களிலோ, பிற கல்வெட்டுகளிலோ காண, பாடக் கோயில்களில் பணியிலிருந்தார் பற்றித் தரவுகளேதும் இதுநாள்வரையிலும் கிடைத்திலமையின் இவர்கள் எதைக் கண்டு பாடினர், என்ன பாடினர் என்பதை அறியக் கூடவில்லை. இக்கலைஞர்களுக்கு இராஜராஜீசுவரத்தில் ஆளுக்கு ஒன்றரை வேலி நிலம் அளிக்கப்பட்டது.

பிடாரர்கள்

இவர்கள் தவிர இராஜராஜீசுவரத்தில் திருப்பதியம் பாட நாற்பத்தெட்டுப் பிடாரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளும் முக்குறுணி நெல் ஊதியமாகத் தரப்பட்டது. இவர்கள் பதிகம் பாடியபோது, உடுக்கை வாசித்தவர் உடுக்கை விச்சாதிரனான சோமசிவன். கொட்டி மத்தளம் இசைத்தவர் குணப்புகழ் மருதனான சிவாசிவன். இவ்விருவரும் பதிகம் பாடினார் போலவே நாளும் முக்குறுணி நெல் ஊதியமாகப் பெற்றனர்.

முடிவுரை

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், முதலாம் இராஜராஜரால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்தைப் போல் பல்வேறு பாடகர்களைப் பணியமர்த்தி, இறைத்தலத்தை எப்போதும் இசைமழையில் நனைந்திருந்த திருக்கோயில் வேறொன்றில்லை என்பது வரலாறு காட்டும் உண்மையென்பதும், இது நித்தவிநோதரான இராஜராஜருக்கே உரிய பெருமையென்பதும் இங்குப் பதிவு செய்யத்தக்க தரவுகளாம்.

பார்வை நூல்கள்

1. இரா. கலைக்கோவன், சோழர் கால ஆடற்கலை, அலமு பதிப்பகம், சென்னை, 2003
2. மு. நளினி, இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, கழக வெளியீடு, செனை, 2002
3. மு. நளினி, இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, வரலாறு - 5, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி.

கட்டுரை ஆசிரியர்

முனைவர் மு.நளினி எம்.ஏ, எம்.பில், பி.எச்.டி, டி.இ.ஏ

முதுநிலைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, சீதாலட்சுமி இராமசாமிக் கல்லூரி,

மதிப்புறு கல்வெட்டாய்வாளர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.