http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 6
இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
சென்ற இதழில் கேட்கப்பட்டிருந்த நார்த்தாமலையிலுள்ள கட்டுமானக் கோயிலின் உறுப்புகளைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.
தரையோடு ஒட்டியிருக்கும் உபானத்தின் மேல் ஜகதி, எண்பட்டைக்குமுதம், கம்புகளுடன் கூடிய கண்டபாதம், பட்டிகை மற்றும் உபரிகம்பு ஆகியவற்றைக் கொண்ட பாதபந்தத் தாங்குதளத்தைக் கொண்டுள்ள இக்கோயிலின் முன்புறச் சுவரில் நுழைவாயிலின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் வாயிற்காவலர்கள் உள்ளனர். இரண்டு கோட்டங்களுக்கும் அரைத்தூண்கள் அணைவுகளாக உள்ளன. அதுபோக, சுவரின் இரண்டு முனைகளிலும் இரண்டு அரைத்தூண்கள் உள்ளன. அரைத்தூண்களில் மாலைத்தொங்கல், தாமரைக்கட்டு ஆகியவை காணப்படவில்லை. ஆனால் கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை ஆகிய உறுப்புகள் இருக்கின்றன. அரைத்தூண்களின் மேலுள்ள போதிகைகள் உத்தரத்தைத் தாங்குகின்றன. உத்தரத்திற்கு மேல் வாஜனம், வலபி, கபோதம் ஆகியவை உள்ளன. வலபியில் பூதவரி இருக்கிறது. கபோதத்தில் நாசிகைகள் இடம்பெற்றுள்ளன. கபோதத்திற்கு மேலுள்ள உறுப்புகளையும் இதேபோன்று வரையறுக்கலாம். ஆனால் இதுவரை நாசிகை வரை மட்டுமே விளக்கப்பட்டிருப்பதால் நாமும் அத்துடன் நிறுத்திக் கொள்வோம். உத்தரத்திற்கு மேலுள்ள உறுப்புகளான வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் ஆகியவை முந்தைய இதழில் படத்துடன் விளக்கப்பட்டிருந்தாலும், அவற்றை இன்னும் விரிவாகக் காண்போம். பொதுவாக, கற்கோயில்கள் உருவாவதற்கு முன்பு மரங்களைக் கொண்டு கோயில்களைக் கட்டினார்கள். அப்போது வரிசையாகத் தூண்களை வைத்து, அவற்றின் மீது நீண்டதொரு உத்தரத்தை வைக்கும்போது, T வடிவத்தில் காட்சியளிக்கும். அந்த T யிலுள்ள செங்குத்தான கோடும் கிடைமட்டமான கோடும் சந்திக்கும் இடத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதாவது, உத்தரத்தின் மொத்த எடையும் அந்தத்தூணின் மீதே இறங்கும். நாளாக ஆக, அந்தச் சந்திக்கும் இடத்திற்கு இருபுறமும் உள்ள பகுதிகள் கீழ்நோக்கி வளையலாம். அல்லது அந்த இடத்தில் உடைந்தும் போகலாம். ஆனால், அந்த இடத்தில் தாங்குவதற்கு இருபுறமும் கைகளை வைத்தால் கீழ்நோக்கிய அழுத்தம் பரவலாகிக் குறையும். கட்டுமானமும் நீண்ட நாள் இருக்கும். இதற்காக அமைக்கப்பட்ட கைகளைத்தான் போதிகைகள் என்கிறோம். இந்தப் போதிகைகள் கட்டுமானத்தின் காலத்தைக் கணிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மகேந்திரர் காலத்தில் போதிகைகள் தூணின் இருபுறமும் இரண்டு கால்வட்டங்கள் போல் அமைக்கப்பட்டன. சில போதிகைகள் விரிகோணத்திலும் அமைந்தன (V வடிவத்தில்). அதன்பின் வெறுமையான அதன் மேற்பரப்பில் அலைகளை அறிமுகப்படுத்தி, தரங்கப்போதிகைகளாக மாற்றினர். அதன்பின்னர் அத்தரங்கங்களின் நடுவில் பட்டையை அமைத்து, பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகைகளை அமைத்தனர். முதலாம் இராஜராஜர் காலத்தில் வெட்டுப்போதிகை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, போதிகைக்கு வெளியே முக்கோண வடிவில் ஒரு வெட்டு நீட்டிக்கொண்டிருக்கும். முதலாம் இராஜேந்திரர் காலத்திலும் அது தொடர்ந்தது. பின்னர் அந்த வெட்டு ஒரு அழகிய பூமொட்டாக மாறி, முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பூமொட்டுப்போதிகைகள் உருவாயின. அப்போது முனையிலுள்ள மொட்டு சிறியதாக ஒரு குமிழ் போல அமைந்திருக்கும். அதற்குப்பின் வந்த பாண்டியர் காலத்தில் அந்தப் பூமொட்டு பெரிதாகி, தாமரை மலர் போலவே ஆனது. விஜயநகரப் பேரரசு காலத்திலும் அதுவே தொடர்ந்தது. எனவே, போதிகையை வைத்து, கட்டுமானத்தின் வயதை ஓரளவிற்குக் கணித்து விடலாம். கட்டுமானத்தின் தாங்குதிறனுக்காக மட்டுமின்றி, அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்யவும் சில உறுப்புகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் வலபியில் பூதவரிகள் காணப்படும். அப்பூதங்களின் மெய்மறந்து இரசிக்கத்தக்க செய்கைகள், சேட்டைகள், பாவனைகள், கையிலுள்ள இசைக்கருவிகள் ஆகியவை அக்கால மக்கள் செய்து கொண்டிருந்ததை அப்படியே படம்பிடித்தாற்போல் இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு, திருச்சி அருகேயுள்ள அல்லூர் என்ற ஊரிலுள்ள கோயிலின் பூதவரியைப் பார்ப்போம். மேற்குப் புறச் சுவரில், மூக்கினுள் திரி போன்ற நீளமான எதையோ விட்டுக் கொண்டிருக்கும் பூதத்தைப் பார்க்கையில், ஒரு குழந்தை செய்யும் குறும்பின் சித்தரிப்பு போல எனக்குத் தோன்றியது. 'சிரட்டைக் கின்னரி' (நம்ப கொட்டாங்கச்சி வயலினைத்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க), 'குழல்', 'கொம்பு', 'மத்தளங்கள்', 'இலை தாளம்' (அட! அதுதாங்க நம்ப ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் எல்லாம் பூதவரியில் காணக்கிடைக்கிறது. வடபுறச் சுவரில், இலக்கியங்களில் கூறப்படும், 'குடக்கூத்து' சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பூதம் தனது ஒரு கையை நீட்டி, உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையிலான பகுதியில் ஒரு குடத்தைத் தாங்கி நடனமாடுவது போலச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது. வடபுற பூதவரியில், ஒய்யாரமான நிலையில் 'சோபா செட்' போன்ற இருக்கையில் ஒரு பெண்ணிருக்கிறாள். அவள் நிலையைக் கண்ட பொழுது, அவள் கையில் ஒரு சுவாரசியமான நாவல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அதே வரியில், கையில் பெரிய யாழை வைத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உருவமும் இருந்தது. நெருங்கிச் சென்று பார்க்கையில், அது யாழல்ல, பாம்பென்று தெரிந்தது. என்ன? இதை இதற்குமுன் எங்கோ படித்த மாதிரி இருக்கிறதா? அல்லூர்ப் பயணக்கட்டுரையில் நம்ம லலிதா எழுதியதுதான் இது. அடைமழை பெய்தால் நம் வீடுகளின் சுவர்கள் எப்படி இருக்கும்? மழைத்தண்ணீர் வடிந்து, சில இடங்களில் பெயிண்ட் உதிர்ந்து, பழைய வீடு போல் இருக்கும் அல்லவா? ஆனால் ஜன்னல்கள் எப்படியிருக்கும்? அவ்வளவாகப் பாதிக்கப்பட்டிருக்காது. காரணம்? அதன்மேல் அமைக்கப்பட்டிருக்கும் Sun Shade தான். அதுபோல, கட்டுமானத்தின் சுவர்களைக் காப்பாற்ற, கபோதங்களை அமைத்தார்கள். இப்படி மேற்புறம் வளைவாக அமைத்துவிட்டு, மேற்கொண்டு கட்டுமானத்தை எப்படித் தொடர்வது? அதற்குமேல் உள்ள கட்டுமானத்தையும் கபோதத்தையும் இணைக்க உருவாக்கப்பட்டதுதான் பூமிதேசம். பூமிதேசத்தில் யாளிவரி ?ருக்கும். பூமிதேசம் இருந்தால் அத்துடன் ஒரு தளம் முடிவடைந்து விட்டது என்று பொருள். பூமிதேசங்களை வைத்துத்தான் தளங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவேண்டும். இதுவரை மற்ற உறுப்புகளை விளக்கக் கொடும்பாளூர் மூவர் கோயில் படத்தையே உபயோகப்படுத்தியதால், பூமிதேசத்திற்கு மேலுள்ள சாலை, பஞ்சரம், கர்ணகூடம், அரமியம், உருளைச்சிறுதூண் (வ்ருத்தஸ்புடிதம்), கிரீவம், சிகரம் மற்றும் தூபி ஆகியவற்றை விளக்கவும் அதையே உதாரணமாகக் கொள்வோம். கொடும்பாளூர் மூவர் கோயில் விமானம் பூமிதேசத்திற்கு மேல் உள்ள சுவரை, நம் வீட்டு மொட்டை மாடியிலுள்ள கைப்பிடிச்சுவருடன் ஒப்பிடலாம். மேலே உள்ள படத்தில் பாருங்கள். சுவரின் இருபுறமும் தேர் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. அதைக் கர்ணகூடம் என்று அழைப்பார்கள். சென்ற இதழில் கூறியிருந்ததைப்போல், மூன்று பத்திகள் (கர்ணபத்தி, சாலைப்பத்தி, கர்ணபத்தி) காணப்படுவதைக் கவனியுங்கள். இரண்டு கர்ணபத்திகளின் மேல் இரண்டு கர்ணகூடங்கள் இருக்கின்றன. அதேபோல், சாலைப்பத்தியின் மேலுள்ளதைச் சாலை என்பார்கள். இந்தச் சாலையும் கர்ணகூடுகளும் இருப்பதால்தான் பத்திகளுக்கே அப்பெயர்கள் வந்தன. இப்போது கர்ணகூடுகளுக்கும் சாலைக்கும் இடையே உள்ள சுவரை ஆரச்சுவர் என்பார்கள். இந்த ஆரச்சுவரில் இரண்டிரண்டு நாசிகைகள் இருப்பதைக் கவனியுங்கள். இவற்றிற்குச் சூத்ரநாசிகைகள் என்று பெயர். இதேபோன்ற நாசிகைகள் கர்ணகூடத்திலும் சாலையிலும் இடம்பெறும். அவை அளவில் இவற்றை விடச் சற்று பெரியதாக இருப்பதால் அவற்றை அல்ப நாசிகை என்பர். பஞ்சரம் என்னும் ஆர உறுப்பு சாலைக்கும் கர்ணகூடத்திற்கும் இடையிலுள்ள ஆரச்சுவரில் அமையும். இது பொதுவாக மிகச்சில விமானங்களிலேயே அமையும். அத்யந்தகாமத்தின் கீழ்த்தள முன்றிலின் ஆரத்தில் இருக்கிறது. கொடும்பாளூரில் முதல் தளத்தில் மொத்தம் நான்கு கர்ணகூடுகளும் நான்கு சாலைகளும் உள்ளன. இந்தச் சுவருக்குப் பின்னால் இருப்பது இரண்டாம் தளக்கட்டுமானம். பஞ்சரங்களுக்குப் பின்னால் இருக்கும் இரண்டு உருளை வடிவத்தூண்களுக்கு வ்ருத்தஸ்புடிதம் என்று பெயர். இந்த வ்ருத்தஸ்புடிடா அமைந்துள்ள சுவருக்குப் பெயர்தான் அரமியம். ஆனால் எல்லா அரமியங்களிலும் வ்ருத்தஸ்புடிதங்கள் அமைந்திருக்கும் என்று கூறமுடியாது. எங்கெல்லாம் கட்டுமானத்தின் தாங்குதிறனை அதிகரிக்க வேண்டுமோ அங்கெல்லாம்தான் இருக்கும். இந்த அரமியத்துக்கும் சாலைக்கும் இடையே இடைவெளி இருந்தால் அதை அற்பிதா என்று சொல்வோம். அவ்வாறு இடைவெளி இல்லாமல் இருந்தால் அனற்பிதா. இந்த அற்பிதா, அனற்பிதா ஆகியவற்றின் அர்த்தங்களை சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூறலாம். கொடும்பாளூரில் அரமியத்திற்கும் சாலைக்கும் இடையே இடைவெளி ?ல்லை. ஆனால் நார்த்தாமலையிலும், மாமல்லபுரம் அத்யந்தகாமத்திலும் உள்ளன. சிவாலயங்களில் உச்சித்தளத்தில் நந்திகள் இருக்கும். உச்சித்தளத்தின் நடுப்பகுதியில் அமையும் விமானத்தின் கழுத்துப்பகுதியே கிரீவம். ??? சற்று உள்தள்ளி இருப்பதைப் பாருங்கள். கிரீவத்திற்கு மேலுள்ள சிகரத்தை மனித உடலின் தலையாகக் கொண்டால், தலைக்குக்கீழே சற்று உள்தள்ளி இருக்கும் கழுத்தைக் கிரீவம் என்று சொல்லலாம். சமஸ்கிருதத்தில் கழுத்திற்குக் கிரீவம்தானே? சிகரங்களில் பலவகைகள் உள்ளன. சதுரமாக இருந்தால் நாகரம், வட்டமாக இருந்தால் வேசரம், எண்பட்டையாக இருந்தால் திராவிடம். இங்கு இருப்பது நாகர சிகரம். விமானமும் நாகரம். ஆக, இது ஓர் இருதள தூய நாகர விமானம். ஆனால் தஞ்சை இராஜராஜீசுவரத்தின் விமானம் நாகரத் தளங்களும் திராவிட சிகர???? கொண்டு அமைந்துள்ளது. அதனால் அதைக் கலப்பு?? திராவிடம் என்று சொல்வார்கள். சிகரத்தின் உச்சியிலுள்ளதுதான் தூபி. இங்கு கல்லிலேயே வடிக்கப்பட்டுள்ள ஸ்தூபி, இராஜராஜீசுவரத்தில் உலோகத்தால் ஆனது. உயரம் 12 அடி. விமானத்தின் உயரத்திற்கும் தூபியின் உயரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் (proportion) இருக்கிறதென்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவை உண்மையா என்பது ஆகமங்களைப் படித்தால்தான் தெரியும். (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |