http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 6
இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
அந்த மலையைச் சுற்றி பறைகளும் கொட்டு முரசுகளும் இடைவிடாது முழங்கின.
கொம்பும் கூடவே சேர்ந்து "பூம் !" என்று பூமி அதிர உறுமிற்று. எக்காளம் வழக்கத்தைவிட அதிகமான அளவில் ஊதப்பெற்றது. "ஹோ ! ஹோ !" என்று அந்த மலைக்கோட்டையை சூழ்ந்து நின்ற படைகள் தத்தம் ஆயுதங்களின் கீழ்முனையை மலைப் பாறைகளில் இடித்து சப்தமெழுப்பியபடி முன்னேறின. அந்தச் சிறிய கோட்டையை அத்தனை பெரிய படை முற்றுகையிட்டு தயங்கித் தயங்கி முன்னேறியதில் ஏதோ ஒரு...கோழைத்தனம் தெரிந்தது. படை வீரர்களின் முகத்தில்கூட வீரக்களைக்கு பதில் ஒருவிதமான ஆணவமும் திமிருமே ஆக்கிரமித்திருந்தன. மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்த சேரன் சோழனைப் பார்த்து அகங்காரமாகச் சிரித்தான். "தப்பிக்க வழியில்லையே ?" "இல்லை - மலையைக் குடைந்தெல்லாம் சுரங்கம் அமைத்திருப்பார்களென்று தோன்றவில்லை ! அப்படியே அமைத்திருந்தாலும் அவன் வெளியில் வரத்தான் செய்வான் - வீரசுவர்கம் அழைக்கிறதல்லவா ?" "ஹா..ஹா..ஹா..! வீரசுவர்கம் ! முட்டாள்களை ஏமாற்றி உயிரிழக்க வைக்க புத்திசாலிகள் கண்டுபிடித்துள்ள மற்றொரு தத்துவம் ! சுவர்கத்தை நான் இங்கேயே அனுபவித்துக்கொள்கிறேன் !" - அவன் தன் அருகில் நின்ற வேளக்காரப் பெண்ணை கண்களில் காமவெறி பொங்கப் பார்த்தான். இவர்களுடைய பேச்செல்லாம் மூன்றாமவனாக அங்கு முகாமிட்டிருந்த பாண்டியன் காதில் விழவில்லை. கொற்கைக் கள்ளில் ஊறி ஊறி உடல்பெருத்து முகாமிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் அவன். மூவேந்தர்களும் ஓரணியாகக் கூடி ஒரு காரியத்தில் ஈடுபட்டிருப்பது தமிழகத்தின் சரித்திரத்தில் அதுவே முதல் முறை. ஆனால் -அந்தோ ! அது தமிழக சரித்திரப் பதிவுகளில் ஒரு கவிதையாகப் பதிவாகாமல் கறையாகப் பதிவாகிப்போனதுதான் சோகம். *********************************************************************************************** படைகள் அந்த பறம்புக் கோட்டையின் பிரதான கிழக்கு வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தன. இன்னும் ஒரு நாழிகையோ இரண்டு நாழிகையோதான் - அப்புறம் ஏதோ ஒரு செருக்கில் எழுந்து நிற்கும் இந்தக் கோட்டையும் அதன் வாயிலும் லட்சோபலட்சம் ஈட்டிகள், வாட்கள், வேல்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும். கோட்டை மண்ணோடு மண்ணாகப் போவது உறுதி. அந்த சேனையின் தலைவன் கோட்டை வாயிலின் உச்சியில் பறக்கும் பறம்பு நாட்டுக் கொடி இறக்கிவிடப்பட்டு சமாதான வெள்ளைக்கொடி ஏற்றப்படுகிறதா என்று வெகு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கொடி ஏறிவிட்டால் சுலபமாக வந்த காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு விடலாம். உயிர்ச்சேதம் மிச்சம். ஆனால் அந்தக் கோட்டைக்குள் இருப்பவன் சமாதானத்தை இந்த நிலையில் விரும்ப மாட்டான். அப்படியே ஒருவேளை சமாதானமாகச் சென்றாலும் அவனுக்கு உரிய மரியாதையை கீழே உள்ள மூவரும் தரத் தயாராக இல்லை. ஒரு வகையில் போராடி உயிரை விடுவதே இதுவரை அவன் சேமித்து வைத்துள்ள கெளரவத்தைக் காப்பாற்றும். கோட்டை வாயிலுக்குப் பின் ஏதோ ஏற்பாடுகள் நடைபெறுவதற்கான அரவங்கள் தெரிந்தன - ஆனால் கொடிமேடையின் கீழ் எந்த அசைவையும் காணவில்லை. அதில் சேனாபதிக்கு சற்று ஏமாற்றம்தான். அவன் சற்றே தலையைத் திருப்பி ஓங்காரக் கூச்சலிட்டு நிற்கும் தன் படைகளைப் பார்த்தான். சேரப் படைகள் - தெரிஞ்ச சோழப் படைகள் - சற்று தள்ளி கள்வாசனையுடன் தென்பாண்டிப் படைகள் ! மொத்தப் படையின் பலம் என்னவென்று எண்ணக்கூட முடியவில்லை - எண்ணுவதற்கு அவசியமுமில்லை - அத்தனை பெரிய முன்று கை மாசேனை....! ஒரு சிறிய கோட்டையைப் பிடிக்க அல்லது கைக்கொள்ள இத்தனை பெரிய சேனை நிச்சயம் தேவையில்லைதான். ஆனால் இந்தப் படைகள் கூடிநிற்கும் நோக்கம் வேறு. இந்தக் கோட்டை தோற்றால் மட்டும் போதாது. இது சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்படவேண்டும். இங்குள்ள கொத்தளங்கள் செதில் செதிலாக கழன்று விழவேண்டும். அரண்மனை தரைமட்டமாக்கப்படவேண்டும். கோட்டைக்குள் இருக்கும் அத்தனை ஆண்மகன்களும் கொன்றொழிக்கப்பட வேண்டும். இத்தனை அழித்தொழிக்கும் வேலைகளுக்கும் ஆட்கள் தேவையில்லையா ? அதனால்தான் இவ்வளவு படைகள் கூடிநின்கின்றன போலும். இருக்கும் வெறியில் பெண்டுகள் மற்றும் குழந்தைகளைக்கூட இந்த மிருகக்கூட்டம் சித்திரவதைக்கு உள்ளாக்கலாம் - அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. வந்திருக்கக் கூடாதோ ? வீரத்தின் நிழலில் மட்டுமே இதுவரை ஒதுங்கிநின்ற நாம் இப்படிப்பட்ட பேடித்தனமான சண்டையில் ஈடுபட்டிருக்கக்கூடாதோ ? வரமாட்டேன் என்று ஒதுங்கியிருந்திருக்க முடியுமா - எதைச் சொல்லி ஒதுங்குவது ? அப்படியே ஒதுங்க முயன்றால் பித்தம் பிடித்த நமது அரசன் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பானா ? நம்மையும் எதிரியின் கையாள் என்று முத்தரை குத்தி.... ம்ஹூம் ! நம்மால் முடிந்திருக்காது. வந்ததைப் பற்றி இனி யோசிப்பதற்கும் நேரமில்லை - இந்த பேடிப்போரில் நம்மால் என்னசெய்ய முடியுமென்று பார்ப்போம். முடிந்தால்.... மறந்துவிட்ட விஷயம் திடீரென்று ஞாபகம் வந்துவிட்டதுபோலும் அந்தப் பெருங்கோட்டையின் கதவுகள் சடாலென்று திறந்தன. ஏதோ லட்சக்கணக்கான எதிரிப் படைகள் கோட்டைக்குள்ளிருந்து ஒரு ஷணத்தில் முன்னேறி தங்களை அழித்துவிட வந்துவிட்டதைப்போல் வெளியில் சூழ்ந்து நின்ற சேனை சிலிர்த்துக்கொண்டது. வில்வீரர்கள் அவசர அவசரமாக தங்களது நாணில் அம்பு பூட்டினார்கள். வேலெறி வீரர்கள் கைவேல்களைக் கையிலெடுத்துக்கொண்டு குறிபார்த்தார்கள். புரவி வீரர்கள் சாட்டைகளைச் சொடுக்கியும் வாலைத் இறுக்கத் திருகியும் தத்தம் வாகனங்களுக்கு வெறியேற்றத் தயாரானார்கள். அத்தனை ஆவேசத்தையும் சட்டென்று தலைக்குமேல் நீண்ட சேனாபதியின் கரம் தடுத்தது. "நில் ! நான் சொல்லும்வரை ஒரு அடிகூட நகராதே !" என்பதற்கான ஆணை அது. படை ஒரு சிறிய வியப்புடன் பின்வாங்கி கோட்டை வாயிலை உற்று நோக்க தலைவனின் செயலுக்கான காரணம் விளங்கிற்று. கோட்டை வாயிலுக்குள் பெண்களும் சிறார்களும் முதியவர்களும் சிறு கூட்டமாகக் கூடி நின்றார்கள். அவர்களின் முகத்தில் பயம் அப்பிக் கிடந்தது. அந்தக் கூட்டத்திற்கு முன்னால் களை பொருந்திய இரண்டு பெண்களுடன் ஒரு மத்திம வயதினன் கம்பீரமாக கைகட்டி கால்கள் அகட்டி நேராக நின்றான். சற்றே ஒல்லியான உருவம். ஆடைகளும்கூட எளிமையானவைதான். ஆனால் இன்னதென்று விளக்கமுடியாத ஒரு ஒளி அவனைச் சூழ்ந்திருந்தது. அந்த ஒளி பார்வைக்குத் தெரியும் அவனுடைய உருவ அமைப்பைத்தாண்டி ஒருவித சோபையை அவனைச்சுற்றி படரவிட்டது. தன்முன்னால் மலைபோலக் குவிந்துகிடக்கும் எதிரிப்படைகளை ஒரு அலட்சியப் பார்வையில் புறந்தள்ளிவிட்டு இராஜ மத்தகம்போல் படைகளினூடே நடந்தான் அவன். அந்தச் சிறிய பெண்கள் இருவரும்கூட அஞ்சாமல் அவனைப் பின்தொடர்ந்தார்கள். "இங்கே சேனானித் தலைவர்கள் யாராவது உண்டா ?" - உருவம் ஒல்லியாக இருந்தாலும் என்னவொரு குரல் ! சேனாபதி கூட்டத்தினுள் தன் புரவியை முன்செலுத்திக்கொண்டு வந்தான் - "இதோ - நான்தான் இந்த அக்ரோணியின் தலைவன் ! தாங்கள் யார் ?" இரு மெலிந்த ஆனால் உறுதியான கரங்கள் அவனுக்கு முன் கூம்பின. "ஐயா - வணக்கம் ! என் பெயர் கபிலன். தமிழ்ப் புலவன். இவர்கள் இருவரும் என் மாணவிகள்.(அந்தப் பெண்டுகளும் கைகூப்பின). இந்தப் பெண்களின் சார்பாகவும் கோட்டைக்குள் இருக்கும் இதர பெண்டுகள், சிறுவர் மற்றும் முதியவர்கள் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் கோட்டையின் மேற்குவாசலில் அமைந்துள்ள கோட்டைக் காளி கோயிலின் முக மண்டபத்தில் போர் முடியும்வரை தங்கிக்கொள்கிறோம் என்று தெரிவிப்பதற்காகவே நான் வந்திருக்கிறேன். போரின் முடிவு எதுவாக இருப்பினும் (இந்த இடத்தில் குரல் ஒரே ஒரு கணம் தயங்கிற்று) - எதுவாக இருப்பினும் - தங்களை படைகளிடமிருந்து உரிய பாதுகாப்பை இவர்களுக்கு அளிக்குமாறு கோரவே நான் வந்துள்ளேன் !" - மெல்லிய குரலில் / சேனாபதியின் காதுகளுக்கு மட்டும் விழும் வகையில் அவன் கூறி முடித்தான். கபிலன் ! செந்தமிழின் அத்தனை அழகுகளையும் கோர்த்துக் கோர்த்து கவிதை படைத்து தமிழ் பேசும் உலகமெங்கிலும் மரியாதையோடு உணரப்படும் புலவன்! இந்தக் கோட்டைக் காவலனின் உற்ற நண்பனும் கூட.... சட்டென்று ஒருவித மரியாதை சேனைத் தலைவனைச் சூழ்ந்துகொண்டது. அந்த மனிதனின் கம்பீரத்துக்கான காரணம் புரிந்தது. இதற்குள் சேனையில் இந்தப் பேச்சு வார்தை என்னவாக இருக்குமென்று ஒருவித அவஸ்தை பரவி அது சப்தமாக உருவெடுக்க - மீண்டும் அதனைத் தன் வலது கரத்தை மேலே உயர்த்தி அடக்கினான் படைத்தலைவன். என்ன சொல்வது ? கீழிருக்கும் பெரிய மனிதர்கள் என்ன முடிவில் இருக்கின்றார்கள் என்பதை அவன் அறிவான். ஒட்டு மொத்த பறம்பு நாட்டையும் புல் பூண்டு விடாமல் சுடுகாடாக்கி விடுவதுதான் திட்டம். அவர்களிடம் இந்தப் புலவனின் கோரிக்கை சொல்லப்பட்டால் பயன் ஏதும் விளையாதது மட்டுமன்றி வேறு விபரீத ஆணைகளும்கூட பிறப்பிக்கப்படலாம். கூடாது. அவர்களிடம் இந்த விஷயம் போகவே கூடாது. பெண்களையும் சிறார்களையும் கொலைவெறிபிடித்த வாட்கள் கீறிக் கிழிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அது மன்னிக்க முடியாத ஈனத்தனம். இப்போதைக்கு நாமே இதனை கையாள வேண்டியதுதான். அவன் சில கணங்களில் முடிவெடுத்து விட்டான். "ஐயா - புலவர் பெருமானே ! நீங்கள் பெண்டுகளுடனும் மற்றவர்களுடனும் கோட்டைக்காளி கோயிலிலேயே தங்கிக் கொள்ளுங்கள் ! இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும்கூட சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள் ! இன்னும் இரு நாழிகை நேரம் கழிந்தபிறகே முற்றுகை ஆரம்பமாகும்....." "மிக்க நன்றி !" "ஒரே ஒரு கேள்வி - உங்கள் தலைவருக்கு சரணடைய விருப்பமிருந்தால் உடனடியாக கோட்டைவாயில்களுக்கு மேல் வெண்கொடியைப் பறக்கவிடச் சொல்லுங்கள் !" கபிலனிடமிருந்து ஒரு விரக்தி மிகுந்த புன்னகை வெளிப்பட்டது. மிகக் கூர்மையான வார்த்தைகளை அவன் அங்கே உதிர்த்திருப்பான் - ஆனால் சேனைத் தலைவனின் மரிதாதை கலந்த பேச்சு அவனை மெளனமாக்கிவிட்டது. மீண்டும் கைகூப்பினான். அந்த இடத்தை விட்டு அகன்றான். *********************************************************************************************** நிலவு உச்சி வானைத் தொட்டது. கோட்டைக்காளி கோயிலுக்குள்அதிக அரவமின்றி சேனாபதி இரண்டே வீரர்களுடன் நுழைந்தான். முகமண்டபத்தில் - இரண்டு மெல்லிய அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் - அந்தோ ! அவன் கண்ட காட்சி ! தத்தம் கணவர்களையும் தமையன்களையும் போருக்கு அனுப்பிவைத்த பெண்டுகள் ஆங்காங்கே தூணில் சாய்ந்துகொண்டு சொல்ல முடியாத சோகத்தை கண்களில் தேக்கி விட்டத்தை வெறித்து நோக்கிக் கிடந்தார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் கண்ணீர் அவர்தம் கன்னங்களில் வழிந்து வழிந்து உப்பேறிப் போயிருப்பது தெரியும். வெளியில் நடந்துகொண்டிருக்கும் அவலத்தை அறியாத சிறார்கள் அவர்களின் நீட்டிய கால்களில் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில முதிய தாய்கள் தத்தம் பிள்ளைகளை நினைத்து மெல்லிய குரலில் புலம்பிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது. ஈசான மூலைத் தூணொன்றில் கபிலன் கண்களை மூடியபடி சாய்ந்து கிடந்தான். அவனுடைய மடியில் தலைவைத்து இரண்டு பெண்களும் பக்கத்திற்கொன்றாய் படுத்துக்கிடந்தன. அவர்களுடைய அசையும் இமைகளிலிருந்து மூவருமே இன்னமும் உறங்கவில்லையென்று தெளியலாம். சிலர் சேனாதிபதியை பார்த்ததும் எழுந்த நிற்கத் தலைபட்டார்கள். அவர்களை அமர்ந்திவிட்டு அவன் கபிலனை நெருங்கினான். மெல்லிய குரலில் - "ஐயா, புலவர் பெருமானே !" சடாரென்று விழித்தன கண்கள் - "யாரது - சேனாபதியா ! என்ன இந்த நேரத்தில் ?" "அவசரச் செய்தி - உடனடியாக நீங்களும் இந்த பெண்டு பிள்ளைகளும் கோட்டையின் வடக்கே அமைந்திருக்கும் திட்டிவாசல் வழியாக இன்னும் ஒருஜாம நேரத்தில் வெளியேறியாக வேண்டும். நீங்கள் கும்பலாக எங்கோ பெண்டு பிள்ளைகளுடன் தங்கியிருப்பது வேந்தர்களுக்குத் தெரிந்துவிட்டது - அவர்கள் இருக்கும் நிலையில் உங்களை உயிரோடு விடுவார்களென்று சொல்வதற்கில்லை. ஆதலால் உடனடியாக கோட்டையை விட்டு வெளியேறி விடுவதுதான் உயிர் பிழைக்க ஒரே வழி..." "ஐயோ - என்னவொரு அவலம் ! அத்தனை ஈவிரக்கமில்லாமல் போய்விட்டதா இந்த வேந்தர்களுக்கு...!" "அதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை ஐயா ! படைகள் தெற்கே முகாமடித்துத் தங்கியிருப்பதால்தான் வடக்கு வாயில் வழியாக உங்களை அனுப்புகிறேன் - வடக்கே மலைமுகடு முடிந்தவுடன் காடுகள் ஆரம்பமாகிவிடுகின்றன - சற்று முயன்றால் நீங்கள் பொழுது புலர்வதற்குள் காட்டுக்குள் நுழைந்துவிடலாம் ! உங்களுக்குத் துணையாக என் அணுக்கச் சேவகர்கள் நால்வரை அனுப்புகிறேன் - உடனடியாக வெளியேறிவிடுங்கள் !" "அன்னை சக்திதேவி உங்களைக் காப்பாள் - நன்றி !" - கபிலன் கைகூப்பினான். "சரி - விரைவில் கிளம்புங்கள் !" "ஒ...ஒரு கேள்வி - போரின் தற்போதைய நிலை பற்றி...." "அதைப் பற்றி சொல்தற்கு என்ன இருக்கிறது ? பறம்பு நாட்டின் ஒவ்வொரு வீரனையும் எங்கள் படைகளில் குறைந்தது பத்துபேர் சூழ்ந்துகொண்டு..." கபிலன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. எதிர்பார்த்ததுதான் - இருந்தாலும் இத்தனை அவலமாகவா பறம்பின் கதை முடியவேண்டும் ? "ஐயா - பறம்பு அரசரின் நிலை..." "மிக வீரமாகப் போர்புரிந்து களத்திலேயே வீரசுவர்கமடைந்தார் - உடலைக்கூட சகல மரியாதைகளுடன் எரியூட்ட ஏற்பாடு செய்து விட்டேன் !" ஐயோ பாரி ! கபிலனின் நெஞ்சில் படீரென்று ஏதோ ஒரு ஆதார நாதம் அறுந்து விழுந்தது.... நண்ப ! இறந்துவிட்டாயா ? என்னை தனியே தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிட்டாயா ? ஐயோ - இது நிஜமானா ? இந்தச் செய்தியைக்கேட்ட பிறகும் என் ஆவி அவிந்து அடங்கிவில்லையே - என் இதயம் இன்னமும் வெடித்துவிடாமல் இருக்கிறதே - உடல் இன்னமும் உயிர்தரித்திருக்கிறதே... ஆ ! அதற்குக் காரணம் உள்ளது - பாரி கடைசியாக எனக்கு அளித்துவிட்டுச் சென்றுள்ள இரு பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெரும்பொறுப்பு எனக்குள்ளது... அதன்பொருட்டுத்தான் இன்னமும் உயிரோடிருக்கிறேன் போலும்.... வெளியே செல்லத் தலைப்பட்ட சேனாபதி மீண்டும் திரும்பி - "....ஐயா - ஒரே ஒரு கேள்வி - உங்கள் கூட்டத்தில் அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்டுகள் யாராவது உண்டா ? அப்படி இருந்தால் உங்களுக்கும் ஆபத்து - எனக்கும் ஆபத்து !" கபிலனின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் ஒரு கொந்தளிப்பாக எழுந்து அடங்கின. "இல்லை" என்பதாக தலையசைத்தான். அது உண்மைதான். பாரி தன் மகளிர் இருவரையும் கபிலனுடைய மக்களாக அறிவித்து அவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டான். "இவர்களுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன்...அது நடக்காது போலிருக்கிறது ! நண்ப ! இனி இவர்கள் என் மக்களல்ல - உன் மக்கள் ! உன்னிடம் இவர்களை ஒப்புவித்துவிட்டதால் இனி நான் நிம்மதியாக..." தழுதழுத்த பாரியின் குரல் இன்னமும்கூட கபிலனின் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன... *********************************************************************************************** எல்லாம் முடிந்தது. பறம்புக் கோட்டையின் ஒவ்வொரு வீடும் செங்கல் செங்கலாக பிரித்தெறியப்பட்டது. அரண்மனை அடித்து நொறுக்கப்பட்டது. பாரியின் இரு மனைவியரும் அவனுடன் சிதையில் தீக்குளித்ததை கள்ளருந்தியபடி மூவேந்தர்களும் வேடிக்கை பார்த்தனர். பாரியின் மகளிர் கபிலன் என்னும் புலவனுடன் தப்பிச்சென்றுவிட்ட செய்தி கிடைத்தது. அவர்களுக்கு எந்த சிற்றரசும் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று ஒரு அவசர எச்சரிக்கை ஓலை பறந்தது. "மீறி அடைக்கலம் கொடுத்தால் பறம்பு நாட்டின் கதிதான் உங்கள் நாட்டிற்கும் ஏற்படும் !" என்று பகிரங்க மிரட்டல் அந்த ஓலையில் இருந்தது. *********************************************************************************************** ஆறு திங்கள்(1) கழித்து கபிலனை திருக்கோவலூர் மலையமானின் அரசவையில் சந்திக்கிறோம். உடல் உருக்குலைந்து கிடப்பது பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது. ஆடைகளில் புழுதியும் கிழிசலும் தெரிகின்றன. வயிறு ஒட்டிக் கிடக்கிறது. அந்த நிலையிலும் அவனுக்குள் எரிந்துகொண்டிருந்த தழலானது அவனது தேகத்திற்கு ஒரு செம்மையையும் வீச்சையும் கொடுத்துள்ளதையும் காண்கிறோம். இரு கைகளையும் கூப்பி நிற்கிறான் கபிலன். கண்களில் நீர். "வேந்தே - நான் புலவன்தான் ! ஏழைதான். என்றாலும் எவரிடமும் எதையும் யாசித்ததில்லை. ஆனால் கடந்த ஆறு திங்களாக நான் ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி ஒவ்வொரு வேந்தனிடமும் ஒரு வரத்தை யாசித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால் கொடுப்பார் எவருமில்லை ! கான நாட்டு விச்சிக்கோனிடம் சென்றேன் - கொடும்பாளுர் இருங்கோ வேளிடம் சென்றேன் - தகடூர் அதியமானிடம் சென்றேன் - இப்போது இறுதியாக உன்முன் நிற்கிறேன்....நீயும் மறுத்துவிட்டால்...." "புலவர் பெருமானே ! தாங்கள் யாசிப்பது என்னவென்பதை நான் மட்டுமல்ல - நாடே அறியும் ! இதுவரை நானும் என்னிடம் யாசித்து வந்தவர்களை திருப்பியனுப்பியதில்லை - என்னுடைய உயிரைக் கேட்டால்கூட உடனே எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன் - ஆனால் நீங்கள் கேட்பதோ என் கண்ணுக்குக் கண்ணான நாட்டுக்கே கேடு விளைவிப்பது - பாரி மகளிரை திருமணம் செய்துகொண்டு மூவேந்தர் படையெடுப்பை சமாளிக்க யாரால் முடியும் ஐயா ?" அரசவையில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கண்களில் கனல்பொங்க சற்று தள்ளாடியபடி எழுந்திருக்கிறாள். "அரசே ! நீங்கள் கபிலரின் வேண்டுகோளை ஏற்கத்தான் வேண்டும் ! நியாயத்தின் பக்கம் நின்று அதன் பின்விளைவுகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும். அதற்கு இந்த ஒளவை துணையிருப்பாள் ! நான் வணங்கும் தமிழின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் - உனக்குக் கேடு விளைவிக்க அந்த மூவரும் நினைத்தால் அவர்களை என் தமிழ் சுட்டெரிக்கும் - இது சத்தியம் !" ஒளவையின் வார்த்தைகள் வேண்டுகோளா அல்லது ஆணையா ? அவள் வார்த்தையை மீறும் சக்தி மலையமானுக்கு இல்லை. மெளனமாக நிற்கிறான். "இந்தத் திங்களில் அமையப்போகும் ஒரு நன்னாளில் பாரி மகளான சங்கவைக்கும் மலையமானுக்கும் திருமணம் ! அனைத்து ஏற்பாடுகளும் நடக்கட்டும் !" ஒரு உத்தரவே போடுகிறாள் அந்த மூதாட்டி. கபிலன் அவளை நன்றியுடன் நோக்கி வணங்கி நிற்கிறான். *********************************************************************************************** பெண்ணையாற்றங்கரையில் ஒரு நெருப்புக் குழி தயாராகிக்கொண்டிருக்கிறது. காற்று நெருப்பை அதிகம் கலைக்காமலிருக்கும்பொருட்டு அந்தக் குழியானது ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெரும் பாறையொன்றின் பக்கலில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் ஒரே கூட்டம். குழியின் நெருப்பு முதலில் மிதமாக - தணலாக எரிய ஆரம்பித்து விரைவில் மேலும் மேலும் விறகுகளை உட்கொண்டு ஆளுயரத்திற்கு தழல்களைப் பரப்பி நிற்கிறது. தழல்கள் குறைந்துவிடாமலிருக்க இருவர் தொடர்ந்து விறகுகளை இட்டவண்ணம் உள்ளனர். "விலகுங்கள் ! விலகுங்கள் !" - குரல் வரும் கிழக்கு திசையை சற்றே உற்று நோக்குகிறோம். கபிலன். பெண்ணையாற்றங்கரையில் முங்கி எழுந்து ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பின்பற்றி பாரியின் ஒரு மகளான அங்கவை ஒரு அந்தணருடன் நடந்து வந்துகொண்டிருக்கிறாள். சற்று தூரத்தில் அவளுடைய தமக்கை சங்கவை மலையமானுடன் வந்து கொண்டிருப்பது தணல் வெளிச்சத்தில் தெரிகிறது. அவர்களையும் தொடர்ந்து தடியூன்றி வருபவர் ஒளவை மூதாட்டி போலும். கூட்டத்தின் சலசலப்பு திடீரென்று நின்றுவிட்டது. ஒரு சிலர் மட்டும் மிக மிகத் தணிந்த குரலில் பேசிக்கொள்கின்றனர் - "அதுதான் புலவரா ? ஐயோ பாவம் !" "இது என்னடி என்றுமில்லாத விசித்திரமாயிருக்கிறது - நட்பு தேவைதான் என்றாலும் இது சற்று அதிகமில்லையா ?" "அட நீவேறு - இந்தப் புலவர்களே இப்படித்தான். அரசர்கள் கொஞ்சம் கருணை காட்டிவிட்டால் அவர்களுக்காக உயிரையே விட்டு விடுவார்கள்...இப்படித்தான் பல வருடங்களுக்குமுன் ஒரு புலவன் சோழநாட்டில் வடக்கிருந்து உயிர்துறந்தானென்று என் பாட்டன் சொல்லக் கேள்வி..." "உஸ் - அவர்கள் நெருங்கிவிட்டார்கள் - பேசாதே !" நெருப்புக் குழியை கபிலன் நெருங்கிவிட அவன் உருவத்தை நம்மால் நன்றாகவே காண முடிகிறது. அடடா ! மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவனுடைய முகத்தில் ஒரு மந்தகாசத்தையும் நிம்மதியையும் காண்கிறோம்... நடையில்கூட பழைய கம்பீரம் வந்துவிட்டதே ? குழிக்கு மிக அருகில் வந்து நிற்கிறான் கபிலன். அனைவரையும் கண்களில் பொங்கும் நேயத்துடன் பார்க்கிறான். கை தலைக்கு மேல் உயர்கிறது. கண்களில் நன்றி பொங்க அனைவரையும் வணங்கி நிற்கிறான். சென்று வருகிறேன் ! எனக்கு உயிரளித்த மண்ணே - சென்று வருகிறேன் ! என் சுவாசத்திற்கு பிராணனளித்த வளியே - சென்று வருகிறேன் ! கல்லாய்க் கிடந்த என்னை உயிராக்கிய உளியே - தமிழே ! சென்று வருகிறேன் ! மீண்டுமொரு பிறப்பமைந்தால் இதே பூமியில் இதே போல் கவிஞனாகவே பிறப்பேன் என்ற நம்பிக்கையுடன் சென்று வருகிறேன் ! நன்றி - மிகுந்த நன்றி ! பஞ்ச பூதங்களுக்கும் நன்றி ! வானுக்கும் பூமிக்கும் நன்றி ! இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் நன்றி ! மிகுந்த நிறைவான வாழ்வு வாழ்ந்துவிட்டேன். இந்த வாக்கியம் முடிந்துவிட்டது. இனி முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான். அந்த நிலையில் ஒளவைக்குத்தான் கபிலனை நெருங்கும் தைரியம் இருந்தது. அவள் பாரி மகளிர் இருவருடன் கபிலனை நெருங்குகிறாள். அங்கவையும் சங்கவையும் அந்தப் புழுதி படிந்த பாதங்களில் தலையை வைத்து வணங்கி எழுகின்றனர். அவர்களின் கண்ணீர் முத்து அந்தப் பாதத்தில் படிந்துள்ள மணலோடு கலக்கின்றன. மனம் குளிர அவர்களின் தலையில் கைவைத்து வாழ்த்துகிறான் கபிலன் - "நன்று வாழ்வீர்கள் மக்களே - நன்று வாழ்வீர்கள் !" ஒளவை கபிலனை நெருங்கி தீர்க்கமாக அவனை நோக்குகிறாள். ஒரு விசித்திரமான புன்னகை அவள் முகத்தில் அரும்புகிறது. "கபில ! ஓ - என்னவொரு புனிதன் நீ ! உன் பெயர் வானமும் பூமியும் உள்ளவரை நிலைக்கும் ! உன் சரித்திரம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்வரை பேசப்படும் ! நட்பின் இலக்கணமே ! நீ வாழி - நின் புகழ் வாழி!" உதடு பிரியாமலே உச்சரிக்கப்பட்ட அந்த ஆசிகள் கபிலனை சென்றடைகின்றன. அந்த மூதாட்டியின் கால்களில் விழுந்து வணங்குகிறான் கபிலன். அதோ ! காற்றில் தணல் சற்று பிரிய அதில் பாரியின் உருவம் கபிலனுக்குத் தெரிகிறது.... அதோ - இரு கரம் நீட்டி எதிர்கொண்டழைத்து வரவேற்கிறான் பாரி ! முகத்தில் அதே பரவசப் புன்னகை ! "வரவேண்டும் ! வரவேண்டும் ! புலவர் பெருமானே - இப்போதுதான் நாமிருக்குமிடத்திற்கு வழி தெரிந்ததா ? வருக ! வருக !" எங்கிருந்தோ பூமாரி பொழிகிறது....பாரிக்குப் பின் அவன் மனைவியர் ஆர்வத்துடன் கபிலனை வணங்கி நிற்கின்றனர்... "நண்பா ! நண்பா ! எத்தனை நாட்களாயிற்று உன்னைப் பார்த்து !" கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் முகத்தில் புன்னகை தேக்கி இரு கரங்களையும் நீட்டியபடி ஆர்வத்துடன் நெருப்புக் குழிக்குள் செல்பவனை உறைந்துபோய்ப் பார்த்தபடி நிற்கிறது அந்தக் கூட்டம். (முற்றும்) அடிக்குறிப்புக்கள் : (1) ஆறு மாதம் கல்வெட்டுச் செய்தி திருக்கோவலூர். சிவபிரானின் அட்டவீரத் தலம். இங்குள்ள வீராட்டனேசுவர் திருக்கோயில் கருவறையில் அமைந்துள்ள மிக அரிய - நீண்ட - கல்வெட்டுப் பாடலொன்று மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அவையில் அறங்களை எடுத்துக்கூறும் உயர்நிலை அலுவலனான சோழநாட்டு ஆலங்குடியான் கம்பன் ஆதிவிடங்கன் என்பான் செய்த அறக்கொடைகளை விவரிக்கிறது. இந்த விவரிப்பில் திருக்கோவலூரின் பெருமைகளாக இரண்டு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது - திருக்கோவலூர் மலையமானின் மகளும் இராஜராஜன் என்னும் புலியைப் பயந்த பெண்மானுமான வானவன் மாதேவி தன் கணவன் சுந்தரச் சோழனுடன் சிதையேறிய நிகழ்வு. இரண்டாவது - பாரியின் பிரிவை / மரணத்தை தாங்கமாட்டாத அவனுடைய நண்பன் - கவிஞன் கபிலன், பாரியின் மகளை மலையமானுக்கு மணமுடித்துவிட்டு நெருப்பில் புகுந்து உயிர் நீத்த நிகழ்வு. இரண்டையுமே மிக உருக்கமான வார்த்தைகளில் அற்புதமான அகவற்பாவாக விவரிக்கிறது கல்வெட்டு. இதில் கபிலனைப் பற்றி வரும் பகுதியை மட்டும் நோக்குவோம். திருக்கோயில் - திருக்கோவலூர் வீராட்டனேசுவர் திருக்கோயில் இடம் - மையக் கோயில் கருவறைச் சுவர் காலம் - முதலாம் இராஜராஜரின் 27ம் ஆட்சியாண்டு (கி.பி.1012) கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - South Indian Inscriptions Vol VII, No.863 கல்வெட்டுப் பாடம் " ...வன்கரைப் பொருது வருபுணற் பெண்ணைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பின் வீடுபோறெண்ணிக் கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட்டான வீராட்டனம் அனைத்தினு மநாதி யானது... " (முழு கல்வெட்டுப் பாடத்தையும் நீளம் காரணமாக கொடுக்க இயலவில்லை) சங்க காலத்தவனான கபிலனை "தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்" என்று இந்தப் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு மிகுந்த நேயத்தோடு அழைப்பதை கவனிக்கவும். புறநானூறு கபிலன் வடக்கிருந்து உயிர் துறந்ததாகத்தான் பதிவு செய்கிறது. ஆனால் கல்வெட்டு கபிலனின் இறுதிக் கணங்களை வேறுமாதிரியாகச் சொல்கிறது. பல்வேறு இடைச்சொருகல்களோடும் மாறுதல்களோடும் கிடைத்திருக்கும் சங்க இலக்கியச் செய்திகளைவிட இந்த பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுச் செய்தி நம்பகமானது என்று துணியலாம். கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டின் திருக்கோவலூர்ப் புராணத்தில் கதையே மாறி விடுகிறது.. தமிழ்ப் புலவனாகிய கபிலன் கபிலமுனியாகிவிடுகிறான் - கபிலக் கல்லின்மேல் அமைந்துள்ள கோயிலும் கபிலேஸ்வரமாகிவிடுகிறது ! இதனால்தான் புராணச் செய்திகள் நம்பகத் தன்மையை முற்றிலும் இழக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த மரணம் இன்றும் நம்மை உலுக்குகிறது. பாரியை படையெடுத்து அழித்த மூவேந்தர் பெயர்கள்கூட இன்றைக்கு நமக்கு தெரியாது. காலவெள்ளத்தில் அவர்களும் அவர்களின் அதிகாரமும் ஆணவமும் அவர்கள் நின்று கோலோச்சிய அரண்மனைகளும் மாட மாளிகைகளும் சுவடு தெரியாமல் அழிந்துவிட்டன. ஆனால் தனிப்பட்ட வாழ்வில் எந்த இழப்பும் இல்லாமல் நண்பனின் பிரிவுக்காக ஏங்கி உயிர்துறந்த பிசிராந்தையும் கபிலனும் அரசர் - புலவர் என்ற பாகுபாடுகளை மீறிச் செழித்த மிக ஆழமான தமிழ் நட்புக்கு உதாரணங்களாய் - வழிகாட்டிகளாய் - வரலாறாகிவிட்டனர். கபிலன் உயிர்துறந்த இடத்தில் இருக்கும் பாறையை கபிலக்கல் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அந்தக் கல் அல்லது பாறை இன்றைக்கும் உள்ளது. அந்தக் கல்லின் கீழ் நண்பர்கள் அக்காலத்தில் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டிருக்கலாம். மன வேறுபாடு காரணமாகப் பிரிந்த நண்பர்கள் அந்தக் கல்லின் நிழலில் மீண்டும் ஒன்றுகூடி இருக்கலாம். நண்பன் பொய்சொல்கிறான் என்று சந்தேகிக்கும் பட்சத்தில் அவனை கபிலக்கல்லின்மேல் சத்திதம் செய்யச்சொல்லும் வழக்கம் அப்பகுதிகளில் இருந்திருக்கலாம். நட்பை கற்பின் திறத்திற்கு உயர்த்திய அந்தக் கவிஞன் கனல் புகுந்த அந்தக் கடைசிக் கணங்களை நினைக்கிறேன்.. அந்தப் புனிதக் கணங்களின் ஒரே சாட்சியாக இன்றைக்கும் ஓங்கி நிற்கும் கபிலக் கல்லை நினைக்கிறேன்... கண்களில் நீர் கோர்க்க மேற்கொண்டு எதுவும் எழுதத் தோன்றாமல் நானும் அப்படியே கல்லாய்ச் சமைந்து போகிறேன்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |