http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 6

இதழ் 6
[ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

சுனாமி
சுனாமி
கதை 4 - கபிலன்
தஞ்சையில் முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா - ஒரு அறிவிப்பு
மத்தவிலாசப் பிரகசனம் - 4
மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும்
தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு
கல்வெட்டாய்வு - 5
கட்டடக்கலை ஆய்வு - 6
இராஜசிம்மன் இரதம்
Architectural traditions and innovations of Tamils
திருவையாறு தியாகராஜ உத்சவம்
சங்கச்சாரல் - 6
இதழ் எண். 6 > கலைக்கோவன் பக்கம்
மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும்
இரா. கலைக்கோவன்

தேவாரம் பாடிய மூவரில் அப்பர் தனித்தன்மையர். இறைநோக்கில் எழுந்த பாடல்கள்தான் அவருடையவை என்றாலும், அப்பாடல்களில் அவர் புதையலாய்ப் பொதிந்து வைத்திருக்கும் வரலாற்றுத் தரவுகள், அப்பர் காலச் சமுதாயத்தையும் சமயத்தையும் மட்டுமல்ல, தொன்று தொட்டு வழங்கி வந்த தொன்மங்களையும் அவர் ஓதியுணர்ந்த இலக்கியச் செய்திகளையும் கூடப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அத்தகு வியப்பூட்டும் சுவடுகளில் ஒன்றுதான் மன்றத்துப்புன்னை.

சங்க இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டனவாகக் கொள்ளப்படும் அகநானூற்றிலும் நற்றிணையிலும் விதந்து பேசப்படும் நெய்தல் நில மரங்களுள் ஒன்றே புன்னை. குடமுழவு போன்ற பருத்த அடிப்பகுதியையும் நீண்டு வளைந்து மேலோங்கி வளர்ந்த கிளைகளையும் கொண்ட இம்மரத்தின் அரும்புகள், உடைக்கப்பட்ட ஊர்க்குருவியின் முட்டை போன்று பேரளவின. மலர்ந்தபின் இப்பூங்கொத்துக்கள் சிந்தும் மகரந்தத்தூள் பொன் துகளாய்ச் சிதறி நெய்தல் மணலை வனப்பாக்கும். மணமும் தேனும் நிறைந்த இந்தப் புன்னை மலர்கள் உதிர்ந்து மணல் பரப்பில் உண்டாக்கியிருக்கும் மெத்தென்ற பூப்படுக்கையில் நெய்தல் காதலர் ஒன்றி மகிழ்வர்.

புன்னையின் நிழலில் ஆடுவதும் புன்னை மலர் பறித்துத் தொடுப்பதும் புன்னையைச் சந்திக்கும் களமாக்கிக் காதலர் வருகைக்காய்க் காத்திருப்பதும் நெய்தல் நங்கையர் செயல்கள். புன்னைச் சோலையில் ஞாழலும் பூச்சிந்தி மணமூட்டும். 'விளையாட்டாய் விதைத்த புன்னை விதை இன்று மரமாகி நிற்கிறது. இது உன் தங்கை என்கிறார் அன்னை. அதனால், அத்தான், உங்கள் காதல் மொழியும் கையணைப்பும் இவள் முன் வேண்டாம்' என்று, புன்னையைத் தங்கையாக்கி வேறு புகலிடம் தேடிய சங்கக் கண்மணிகள், மரத்தை நேசித்து உறவாய் வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் தணியாத சுடரொளிகள்.

கழியில் இரைதேடிக் களைத்த பறவைகளும் காலங்காலமாய் அதன் கிளைகளில் குடியிருக்கும் தலைமுறைப் பறவைகளும் கூடப் புன்னைக்கு உறவுதான். கீழைக்காற்றின் தழுவலிலும் கடல் அலைகளின் நீர்த்தெளியலிலும் சிலிர்க்கும் மலர்கள் சிந்தும் மகரந்தம் அந்தப் புள்ளுறவுகளின் சிறகு போர்த்த முதுகுகளில் நகைகளாய்ப் படியும். சோலைகள் போல நெய்தல் நில வீடுகளின் படப்பையிலும் புன்னை வளர்ந்து செழித்திருக்கும். அதன் நிழலில் நின்றவாறு, கடலுக்குள் செல்ல ஓதம் பார்த்துக் காலம் தேடிக் காத்திருக்கும் பரதவரின் தோணிகள் கூட அந்தப் புன்னையின் அடிமரத்தில்தான் பிணைக்கப்பட்டிருக்கும்.

பரதவர் முன்றிலில் பலர் கூடும் மன்றம் போல் பரவி நின்ற புன்னை நெய்தல் வளமையின் நிறைந்த குறியீடு. குறுநிலத் தலைவர்கள் இத்தகு வளஞ்சான்ற மரங்களுள் பழமையானதும் பேரளவினதும் வளம் கொழிப்பதுமான மரத்தைக் காவல் மரமாக்கிப் பெருமை கொண்டனர். திதியன் அத்தகையோருள் ஒருவராய்த் தொல்நிலைப் புன்னை ஒன்றைப் பெருமையோடு போற்றி வந்தார். வயதானாலும் பூத்துக் குலுங்கிப் புதுமணம் பரப்பிவந்த வளங்கெழுப் புன்னை அது. திதியனைப் போல மற்றொரு குறுநில அரசர் அன்னி. அவருக்குத் திதியனிடம் சினம். திதியனைப் போரில் வென்று, அவர் தம்முடைய புகழ் மரமாய்க் கருதிய புன்னையை, 'முழு முதல் துமியப் பண்ணிக் குறைத்து', அதன் வழிப் பெருமை வளர்க்கக் கருதிய அன்னியை, வளம்மிக்க ஊர்களையும் வேலேந்திய பெருவீரர்களையும் கொண்ட மற்றொரு குறுநிலத் தலைவரான எவ்வி, நன்மொழி கூறி, நன்னெறி காட்டித் தடுத்தாட்கொள்ள முயன்றார். எவ்வியின் எம்மொழியும் அன்னியின் சினமடக்கக் கூடாமையின், குறுக்கைப் பறந்தலையில் போர் மூண்டது.

பொன் போல் பூங்கொத்துக்களைப் பெற்று நறுமணம் வீசிய அந்தப் பழம் புன்னை அன்னியால் அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்டது. பல தலைமுறைப் பறவைகளுக்குத் தங்குமிடமாகவும் பல தலைமுறைக் காதலர்களுக்கு வாழ்க்கை வளர்த்த நிழல் மரமாகவும் அலைகளை வீசி நுரைப்பூக்களால் தழுவிக் களித்த கடற்காதலனின் ஆசைகளுக்கு இணங்கிப் பூத்து மணந்த மலர் மரமாகவும் இருந்த அந்தப் புன்னையை வெட்டி வீழ்த்திய அன்னி, அடியற்று வீழ்ந்த அந்தப் புன்னை போலத் தாமும் களத்தே வீழ்ந்து மாண்டார். மரத்தை வெட்டியது துன்பம் தந்த போதும், வெட்டிச் சாய்ந்தவர் வீழ்ந்து பட்டார் என்பதை அறிந்ததும் களம் சூழ்ந்து நின்ற வயிரியர் இன்னிசை பொங்க ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

சங்க காலத்தின் நெடிய கால ஓட்டத்தில் என்றோ நடந்தேறிய இந்த வரலாற்று நிகழ்வை வெள்ளிவீதியார், நக்கீரர், கயமனார், பெயர் தெரியாப் புலவரொருவர் செவிமடுத்தனர். அவர்தம் உள்ளத்தே குடிபுகுந்த இந்த அவலம் ஒவ்வொருவர் பாடலிலும் ஒவ்வொரு விதமாய் வெளிப்பட்டது.

களவுக் காதலனைப் பிரிந்து வாடிய காதலி ஒருத்தியின் உடலைப் பசலை மூடியது. சும்மா இருக்குமா ஊர்? 'என்னவோ, ஏதோ' என்றெழுந்த ஐயக்குரலின் ஓங்கிய ஓசை, வெள்ளிவீதியாருக்கு, வெட்டிய புன்னையோடு வீழ்ந்து மடிந்த அன்னியின் மரணத்திற்கு மகிழ்ந்து வயிரியர் எழுப்பிய இன்னிசை முழக்கினும் பெரிதாய்த் தோன்றியது. (அகம் 45).

சந்திக்க முடியாத காதலியை நினைத்து நினைத்து வருந்தித் தவித்த ஒரு காதலனின் நெஞ்சம் நக்கீரர் முன் நின்றது. திதியனுடன் பொருது புன்னையை வெட்டிய அன்னிபோல ஒருநாள் அந்த நெஞ்சம் வீழ்ந்து படுமோ என்றஞ்சிய நக்கீரர், மருதப் படப்பிடிப்பாய் அதைப் பாடி வைத்தார் (அகம். 126).

தலைவியைப் பிரிந்து பரத்தமை ஒழுகிய தலைவன் ஒருவன் திருந்தினான் போலத் திரும்பி வந்து வீட்டுக் கதவை விரைந்து தட்டினான். சினத்தொடு சீறித் திறக்க மறுத்தாள் தலைவி. இருவருக்கிடையில் விளைந்த பகையைத் தீர்க்க முயன்றால் தோழி. பலனே இல்லை. 'நான் ஒருத்தி இருப்பதால்தானே என்னை முன்வைத்து இருவரும் நேரிடையாகப் பேசாமல் பகை தொடர்கிறது, இருபெரும் வேந்தரான அன்னியும் திதியனும் குறுக்கையில் பொருதபோது, பூத்த புன்னையை அன்னி வெட்டிச் சாய்க்க, விழுந்த புன்னையொடு இருவர் பகையும் முடிந்தாற்போல, நான் இல்லாது போனால் இவர்களின் பகையும் முடிவுக்கு வரும்' என்று, தலைவனும் தலைவியும் கூடி ஒழுகத் தன் மறைவே நன்றெனத் துணிந்த தோழியைப் பெயர் தெரியாப் புலவர் பாடி உள்ளத்தில் விழுந்த புன்னைச் செய்தியைப் புறத்தே நீக்கினார் (நற்றிணை 180).

கயமனாரை வேந்தர்தம் பகையோ, அன்னியின் மறைவோ துன்பப்படுத்தவில்லை. புன்னையின் வீழ்ச்சிகூட அவரைத் தைக்கவில்லை. வீழ்த்தப்பட்டபோது, வீழ்த்தவென அடியோடு வெட்டப்பட்டபோது, பூத்துச் சிரித்த அந்த மன்றத்துப் புன்னை என்ன பாடுபட்டிருக்கும்! துடித்துப்போனார் கயமனார். புன்னை மீது விழுந்த ஒவ்வொரு வெட்டும் தம்மீதே விழுந்தது போல உணர்ந்து வாடிய அவர் நெஞ்சம், புன்னையின் துன்பத்தை முழுதாய் உணர்ந்தது. அதனால்தான், மகளின் தலைமுடியைப் பிடித்தபடி அடித்த கோல் உடையுமளவிற்கு அவள் முதுகில் அடித்துத் தன் சினம் தீர்த்துக் கொண்ட தாய் ஒருத்தி, வெகுளி மறைந்த அந்த நொடியிலேயே, தான் செய்த பிழையினை நினைத்து வருந்தி, 'அன்பாய் வளர்த்த அருமை மகளை இப்படி அடித்துவிட்டோமே, அடாத செயலைச் செய்தவை இந்தக் கைகள்தானே, இவை துன்பமடைவதாக' எனத் தனக்குத்தானே தண்டனை கேட்டு நின்றதைப் பார்த்தபோது, 'வெட்டப்பட்ட புன்னை அனுபவித்த துன்பத்தை இந்தக் கைகள் பெறுவதாக' என்று பாடல் வளர்த்தார்.

குறுக்கையில் வெட்டப்பட்ட புன்னை அடைந்த பெருந்துன்பத்தை, மகளை அடித்த கைகள் பெறுகவென்ற கயமனார் கண்களில் புன்னையின் துயரமே நின்றாற் போலத்தான், ஆறாம் நூற்றாண்டு அப்பரின் நினைவிலும் சங்கப் புன்னையின் துன்பத் துடிப்பு ஆழ உறைந்திருந்தது. அதனால்தான் அதிகை வீரட்டத்து அப்பனிடம் தம் துன்பமெல்லாம் கூறி, 'அயர்த்துப் போனேன்', 'அலமந்திட்டேன்' என்று தன்னிரக்கப்பட்ட நிலையில், 'மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரமெய்தி ஒன்றினால் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்' என்று கதற முடிந்தது. மன்றத்துப் புன்னை போல அப்பர் பட்ட பாடுதான் என்ன எனத் தெளிய நினைப்பார்க்கும் அவரே விடைகள் வைத்தார்.

கழித்திலேன் காமவெந்நோய் காதன்மை என்னும்பாசம்
ஒழித்திலேன் ஊன்கணோக்கி உணர்வெனும் இமைதிறந்து
விழித்திலேன் வெளிறுதோன்ற வினையெனும் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப்போனேன் அதிகை வீரட்டனீரே (4:26)

அப்பருக்குச் சங்க இலக்கியப் பயிற்சி இருந்தமைக்கு அவர் பதிகங்களில் சான்றுகள் பலவாய் உள்ளன, மன்றத்துப் புன்னை போல. அப்பரைச் சமய நெறியாளராய் மட்டுமே பார்க்கும் கண்களுக்கு அந்த வரலாற்றறிஞரின் பதிகப் பதிவுகள் புலப்படுதல் எங்ஙனம்? அதனால்தான் மரம் படு துயரம், 'ஆதவ வாத பய சாயை' யாகி, உரையாசிரியரின் வடமொழி வேட்கையில் நோயாய்ச் சுருண்டு நொடித்துப்போனது.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.