http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 6
இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் உள்ள திருச்சிராப்பள்ளியில் 1982ல் முனைவர் இரா.கலைக்கோவனால் உருவாக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் மட்டுமே ஈடுபாடும் கருத்தும் கொண்டிருந்த இந்நிறுவனம், சிராப்பள்ளியிலும் அதைச் சுற்றி அமைந்துள்ள ஊர்களிலுமிருந்து சிற்பங்கள், புதிய கலெட்டுகள், அழிந்துபோன கோயில்களின் சுவடுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், முதன்முறையாக இத்தகு கண்டுபிடிப்புகளுக்காகவே இயங்கிவரும் அரசு சாராத ஆய்வு நிறுவனமாகத் தோற்றமெடுத்த மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டளவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகளையும், முப்பதிற்கும் மேற்பட்ட தனிச் சிற்பங்களையும் கண்டறிந்து வெளிப்படுத்தியதுடன், நூற்றுக்கணக்கான கோயில்களைக் கட்டடக்கலை நோக்கில் முழுமையான அளவில் ஆராய்ந்து தமிழர் கட்டடக்கலைத் திறத்தைப் பன்னாட்டாரும் உணர்ந்து தெளியுமாறு கட்டுரைகளாக வடிவமைத்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களைப் பற்றிய முழுமையான அளவிலான தனித்துவம் வாய்ந்த நூல்களும் இந்நிறுவனத்து ஆய்வறிஞர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. கள ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தரவுகளைத் தொகுத்துக் கட்டுரைகளாகவும் உரைகளாகவும் அமைத்த நிலையில்தான், தமிழ்மொழி வளர்ச்சியில் இந்நிறுவனம் பங்கேற்க முடிந்தது. திருக்கோயில்கள் தொடர்பான கட்டடம், சிற்பம், வார்ப்புரு, சுதையுரு, ஆடல், இசை, கல்வெட்டு எனும் அனைத்துத் துறைகளும் வடமொழிச் சார்புடையனவாகவே எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வந்த நிலையில் முழுமையும் தமிழில் கோயிற்கலை ஆய்வுத்தரவுகளைத் தரும் முயற்சியில் பல சிக்கல்கள் எழுந்தன. கோயிற்கலைகள் தொடர்பான தமிழ்நூல்களும் தமிழ்க்கட்டுரைகளும் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாக இருந்த காலக்கட்டமாக எண்பதுகளைக் குறிக்கலாம். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இரா.நாகசாமி, வை.கணபதி ஸ்தபதி முதலிய சிலரே தமிழில் கோயிற்கலைக் கட்டுரைகளைப் படைத்திருந்தனர். கல்வெட்டுகளைப் பற்றிய தமிழ் நூல்கள் வை.சதாசிவபண்டாரத்தார், மா.இராசமாணிக்கனார், மயிலை சீனி.வேங்கடசாமி முதலிய அறிஞர்களால் எழுதப்பெற்று வெளிவந்திருந்தன. கோயிற்கலை நூல்களோடு ஒப்பிடும்போது கல்வெட்டு நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் தமிழறிஞர்களாக இருந்தமையால் தூயதமிழ் மொழியில் இருந்தமையைக் குறிப்பிட்டாகவேண்டும். கலைச்சொற்கள் தொடங்கிய காலத்திலிருந்தே இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் கோயிற்கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுசெய்து பல அரிய, புதிய தரவுகளைக் கண்டறிந்தமையால், இவ்விரு துறைகள் சார்ந்தும் எழுத நேர்ந்த கட்டுரைகளில் கலைச்சொற்களைப் பயன்படுத்தும் நிலையில் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு கட்டமைப்பை, 'விமானம்' என்ற சொல்லால் குறிக்க அக்கட்டமைப்பு ஆறு அங்கங்கள் பெற்றிருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. இந்த ஆறு அங்கங்களின் பெயர்களும் அதிஷ்டானம், பிட்டி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்று வடமொழியிலேயே உள்ளன. இவற்றுள், 'அதிஷ்டானம்' என்ற சொல்லைத் தாங்குதளம் என எழுதத் தொடங்கினோம். 'தளம்' என்பதும் வடமொழிச் சொல்லே எனச் சிலர் குறித்தமையால், 'அடித்தாங்கல்' என்ற சொல்லாட்சியை அறிமுகப்படுத்தினோம். 'உபபீடம்' என்ற சொல்லிற்குத் 'துணைத்தாங்கல்' என்ற சொல் உருவானது. எங்கள் கட்டுரைகளைப் படித்த தமிழறிஞர் வீ.ப.கா. சுந்தரம், 'தளம்' எனும் சொல் தளியிலிருந்து பிறந்ததே, அதனால் அது தமிழ்ச் சொல்லே என்று உறுதிபட உரைத்ததும், 'தாங்குதளம்', துணைத்தளம்', 'மேற்றளம்' எனத் தளம் தொடர்பாகப் பல கலைச்சொற்களை உருவாக்குதல் எளிதாயிற்று. பிட்டியை ஏற்கனவே சுவர் என்று பலரும் எழுதிவந்தமையால், பிரஸ்தரத்தைக் கூரையாக்கி, அதன் உறுப்புகளான வாஜனம், வலபி கியவற்றை கம்பு, எழுதகம் எனுஞ் சொற்களால் குறிக்கமுடிந்தது. இவற்றுள், 'எழுதகம்' தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆய்வாளர்கள் பயன்படுத்திய தமிழ்ச் சொல்லாகும். பிரம்மகாந்தம், விஷ்ணுகாந்தம், இந்திரகாந்தம் எனும் பெயர்களில் அமைந்த தூண் வகைகள் தமிழில் நான்முக, எண்முக, பன்முகத் தூண்களாயின. ருத்ரகாந்தம் உருளைத் தூணாயிற்று. 'Gala pada' என்று ஆங்கிலத்திலும், 'கண்டபாதம்' என வடமொழியிலும் குறிக்கப்பட்ட தூண்களின் கீழ்ப்பகுதிகள் தூணடிகளாயின. இதுபோல் அரிதின் முயன்று கட்டடக் கலைச்சொற்கள் பலவற்றைத் தமிழில் உருவாக்கி, கட்டுரைகளை முழுமையும் தமிழில் அமைப்பதே நோக்கமாய்க் கொண்டு இயங்கிடும் இந்நிறுவனத்தின் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 1. அங்கணம் - தூணிடைவழி 2. சந்திரசீலா - நிலாப்படி 3. கண்டம் - கழுத்து 4. அதபத்மம் - கீழ்நோக்குத் தாமரை 5. ஊர்த்வ பத்மம் - மேனோக்குத் தாமரை 6. பிரதி - மேற்கம்பு 7. ஸ்தம்பம் - தூண் 8. குத்ய ஸ்தம்பம் - அரைத்தூண் 9. பத்ம பந்தம் - தாமரைக் கட்டு 10. மத்ய பந்தம் - இடைக்கட்டு 11. நாகபந்தம் - பாம்புப் படம் 12. மாலாஸ்தானம் - மாலையிடம் 13. கலசம் - பானை 14. தாடி - மூடி 15. கும்பம் - குடம் 16. தரங்கம் - அலை 17. கோஷ்டம் - மாடம் 18. லலாட பிம்பம் - நெற்றி வடிவம் 19. உத்தரம் - விட்டம் 20. கபோதம் - கூரை நீட்சி 21. ஹம்சமாலா - வாத்துவரி 22. ஹாரம் - மாலை 23. ஹாராந்தரம் - மாலை இடைவெளி 24. அர்பிதம் - ஒட்டிய மாலை 25. அனர்பிதம் - விலகிய மாலை 26. மஹா நாஸிகை - பெருஞ்சாளரம் 27. அல்ப நாஸிகை - சிறு சாளரம் 28. சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம் 29. அரமியம் - தளச்சுவர் 30. விமானம் - இறையகம் தமிழ்ப்படுத்த முடியாத கட்டடக் கலைச்சொற்கள் பலவாக உள்ளன. அவற்றின் வேர் அறிந்து தமிழ்ப்படுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக ஜகதி, குமுதம், அந்தரி, லிங்கம், வீரகண்டம் முதலிய சொற்களைக் கூறலாம். விமானம் என்பதை இறையகம் என எழுதி வந்தாலும் பொருள் பொருந்தும் சரியான கலைச்சொல் தேடல் நிலையிலேயே உள்ளது என்பதையும் குறிக்கவேண்டியுள்ளது. சிற்பங்களை வர்ணிக்கும் போது அவற்றின் நிலை, தோற்றம், ஆடையணிகலன்கள், கருவிகள், கையமைப்பு எனப் பலவும் உட்படுகின்றன. இவற்றைக் குறிக்கும் கலைச்சொற்கள் பெரும்பாலும் வடமொழிச் சொற்களாகவே உள்ளன. சிற்ப நூல்கள் அனைத்தும் வடமொழி நூல்களே. அதனால் இயன்ற வரையில் தமிழ்மொழியின் சிற்பக் கலைச்சொல் வளம் பெருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆசனம் அமர்வாகியது. சுஹாசனம் மகிழ்வமர்வு; இலளிதாசனம் அழகமர்வு; பத்மாசனம் தாமரையமர்வு எனவும் மற்றும் ஹஸ்தம் முத்திரையாகிப் பயன்பாட்டிற்கேற்பப் பெயர்கள் பெற்றது. வியப்பு, எச்சரிக்கை, காப்பு, அருள், விரிதாமரை என்பன சில. சிற்பங்களின் கைகளில் அமையும் கருவிகளுள் பெரும்பான்மையானவற்றைத் தேவாரப் பதிகங்களில் காணமுடிவதால் தமிழ்ச்சொல் கொள்வது எளிதாக இருந்தது. ஆடல்நிலைகளைத் தமிழ்ப்படுத்துவதிலும் துன்பமுற்றோம், என்றாலும் முயற்சி பயனளித்தது. 'ஊர்த்வஜாநு' உயர்த்தப்பட்ட முழங்காலாக, 'பார்ஸ்வஜாநு' பக்கமுயர்த்திய முழங்காலானது. 'கங்காவதரணம்' கங்கையேற்பாக, 'விஷ்ணுக்ராந்தம்' மாலடி எனவானது. ஆடற்கரணச் சொற்களைத் தமிழாக்கும் பணியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத்துறை பின்னாளில் முயன்று ஓர் ஆய்வமர்விற்கு வழியமைத்தமையையும் இங்கு நினைவுகூரலாம். மொழிநடை கோயிற்கலைகள் சார்ந்த பல்துறைத் தரவுகள் கட்டுரைகளாக வடிவம் பெற்றபோது, அவை வறண்ட மொழிநடையில் படிப்பார்க்குச் சோர்வூட்டுவனவாக அமைந்திருந்தமையாலும் அவற்றின் உள்ளீடு எளிமையற்று குழப்பமூட்டும் நிலையில் தரப்பட்டிருந்தமையாலும் இத்தகு கட்டுரைகளுக்கான மொழிநடையில் மாற்றம் காண இராசமாணிக்கனார் ஆய்வு நிறுவனம் முயற்சி எடுத்தது. உண்மைகள் மாறாமல், தரவுகளை எளிமைப்படுத்தி படிப்பார்க்கு அவை தெளிவுற உடன் சேருமாறும் படிக்க நினையாதாரையும் பார்த்தவுடன் அல்லது கேள்வியுற்றவுடன் ஈர்த்துப் படிக்கத் தூண்டுமாறும் செய்ய மொழிநடையில் சொல்லினிமையும் பொருளினிமையும் கூட்டப்பட்டன. தலைப்புகளில் பொருள் நிறைந்த ஈர்ப்பிருக்குமாறு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் ய்வுக் கட்டுரைகள் சிலவற்றின் தலைப்புகளை இங்குச் சுட்டுவது கடமையாகிறது. மிதக்கும் கோயில், முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல், பனமங்கலத்தில் ஒரு புதுமங்கலம், கரணக் குழப்பங்கள், புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள், காட்டுக்குள் ஒரு கலைக்கோயில், சுவடழிந்த கோயில்கள், அப்பர் எனும் அரிய மனிதர், சில நேரங்களில் சில கேள்விகள், கோயில்களை நோக்கி, கோவண நாடகம், கல்வெட்டுகளில் சமுதாயம் மறுபக்கம், புலிவலம் காட்டிய புதையல், ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை எனும் கட்டுரைத் தலைப்புகள் பேரளவில் சுவைஞர்களைப் பெற இந்நிறுவனத்திற்கு வழியமைத்துத் தந்தது. வரலாறு, கோயிற்கலை, கல்வெட்டுத் தொடர்பான கட்டுரைகளைப் படிக்க விழைவோர் அவை விளங்கும் தமிழில், எளிமையும் இனிமையும் பொருந்த அமைந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு நிறைவுதரும் வகையில் இக்கட்டுரைகள் அமைந்திருந்தமையை தமிழ்நாட்டில் இவ்வாய்வு நிறுவனம் பெற்ற வரவேற்பு நிறுவ வல்லது. தமிழறிஞர் ந. சஞ்சீவி, சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை முன்னாள் தலைவர் கே.வி.இராமன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேணாள் இயக்குநர்கள் இரா.நாகசாமி, அ. அப்துல்மஜீது, தமிழ் மேதை அ.மா. பரிமணம், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கல்வெட்டு மேதை ஐராவதம் மகாதேவன் என பல்துறை சார்ந்த அறிஞர்களும் இவ்வாய்வு நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கட்டுரைகளின் தமிழ்நடை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் உவந்து எண்ணற்பாலன. மொழிநடைச் சான்றுகள் சில காண்பது இங்குப் பயன் தரும். 1.1989ல் வெளியான ஒரு கட்டுரையின் (கல்வெட்டு: மே, ப.12) இரு பகுதிகளைக் காண்போம். 'கருவறையின் தேவ கோட்டங்களில் இடமிருந்து வலமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.' இத்தொடரில் பொருட் பிழைகள் உள்ளன. கருவறையில் தேவக்கோட்டங்கள் அமைவதில்லை. விமானத்தின் கீழ்த்தளப் புறச்சுவரில்தான் மாடங்கள் அமையும். தொடரில் உள்ள நான்முகன், கொற்றவைச் சிற்பங்கள் முகமண்டப மாடங்களுக்குரியவை. இதே கட்டுரையின் (ப.13) மற்றொரு பகுதி, 'விமானத்தின் கழுத்துப்பகுதியில் கிழக்குப் புறத்திலிருந்து இந்திரன் (கிழக்கு), தட்சிணாமூர்த்தி (தெற்கு), திருமால் (மேற்கு), பிரம்மா (வடக்கு) ஆகிய தெய்வங்களின் சிற்பங்களும் விமானத்தில் உள்ள கிரீவங்களில் நடராஜர் (தெற்கு), சோமாஸ்கந்தர் (கிழக்கு), வடக்கில் பிரம்மா கிய தெய்வ சிற்பங்களும் காணப்படுகின்றன. மேற்குப்புறத்தில் சிற்பங்கள் ஏதுமில்லை' என்கிறது. விமானத்தின் கழுத்துப்பகுதிதான் கிரீவம். கட்டுரைத் தொடர் கழுத்துப்பகுதி என்று ஒன்றையும் கிரீவங்கள் என்று பன்மையில் சிலவற்றையும் எழுதிக் குழப்புவது காண்க. 2. 2000ல் வெளியாகியிருக்கும் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களைப் பற்றிய தமிழ்நூலொன்றில் மண்டகப்பட்டுக் குடைவரைக் காவலர்களை வண்ணிக்குமிடத்து (ப.22), 'வலக்காலை நேராக நிறுத்தி இடக்காலை சிறிது வளைத்து நின்ற நிலையில் காணப்படும் இவர் முகத்தையும் உடலையும் குடைவரையை நோக்கியவாறு வளைந்து காணப்படுகிறார். மேற்குப்பக்கமுள்ள வாயிற்காவலர் நிமிர்ந்த நிலையில் நேர்கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கின்றார். இருப்பினும் குடைவரையை நோக்கியவாறு சிறிது சாய்ந்த நிலையில் இச்சிற்பம் காணப்படுகிறது' என்று அதன் சிரியர்கள் எழுதியுள்ளனர். இத்தொடர்களில் உள்ள தெளிவின்மையைக் காண்க. மொழிநடைக்குச் சான்றாக 1995 ஜனவரியில் வெளிவந்த ஒரு கட்டுரையின் (கல்வெட்டு ப.10) தொடக்க வரிகளைப் பார்ப்போம் 'திருநெல்வேலி அருகில் செங்காணி என்ற ஊர் உள்ளது. இதில் 14-ம் நூற்றாண்டைச் சார்ந்த சிவன் கோயில் உள்ளது. இதில் பிள்ளையார், சண்டிகேசுவரர், ஆறுமுக நயினார் போன்ற பரிவார ஆலயங்கள் உள்ளன.' காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி (செந்தமிழ்ச் செல்வி, ஏப்ரல் 1990) என்ற தலைப்பில் இராசமாணிக்கனார் ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட கட்டுரையின் தொடக்க வரிகள்: 'திருச்சிராப்பள்ளி கரூர்ச் சாலையில் சிராப்பள்ளியிலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூரே திருச்செந்துறை. காவிரியின் கைவீச்சால் இங்குக் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பசுமை தான். பறவைகளின் கீச்சொலியும் காவிரியின் சலசலப்பும் இவ்வூர் மக்களுக்குப் பழகிப்போன பூபாளம்.' மொழிநடை எளிமையாகவும் பொருள் பொதிந்தும் அப்பொருள் படிப்பார்க்குத் தெளிவுற விளங்குமாறும் தொடர்ந்து படிக்க அர்வமூட்டுமாறும் அமைவது இன்றியமையாதது. கோயிற்கலைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே விதைக்கப்பட வேண்டுமானால் அக்கலைகள் பற்றிய உரைகள், எழுத்துருக்கள் எனும் அனைத்தும் அவர்களுக்குப் புரியுமாறு, அவர்களை ஈர்க்குமாறு, ஆனால் உண்மைகள் நீர்த்துப் போகாமல் அமைக்கப்படல் மிகத் தேவையான ஒன்றாகும். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் பதிப்பிக்கும் அனைத்துக் கட்டுரைகளின் தலையாய நோக்கம் இதுதான். வரலாறு ஆய்விதழின் மொழிப் பங்களிப்பு எந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பல்துறை சார்ந்த விரிவும் வீச்சும் இன்றியமையாதவை. அதைக் கருத்தில் கொண்டே ஈடுபட்ட துறைகளில் எல்லாம் தமிழ்மொழியின் ஆற்றலைச் செழுமைப்படுத்தும் விழைவில் 1993 ஆகஸ்டில், 'வரலாறு' என்ற அரையாண்டு ய்விதழ் இவ்வாய்வு நிறுவனத்தால் தொடங்கப்பெற்றது. 148 பக்கங்களில் உருவான முதல் இதழ் பதினாறு புதிய கல்வெட்டுகளையும் இரண்டு செப்பேடுகளையும் மூன்று கட்டுரைகளையும் கொண்டிருந்தது. 'விட்டுப்போன தொடர்ச்சிகள்' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட புதிய பகுதி தமிழ்நாட்டுக் கல்வெட்டுப் பதிப்பு வரலாற்றின் முதல் முயற்சியாகும். இப்பகுதியில் ஏற்கனவே பதிவான கல்வெட்டுப் பாடங்களின் விடுபட்ட பகுதிகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. 'யாவரும் கேளிர்' என்ற பகுதி ஆய்வாளர்களை ஒருங்கிணைக்கப் பிறப்பெடுத்தது. இதன்வழி மொழிநலம் எண்ணும் ஆய்வாளர்கள் ஒரு குடைக்கீழ் இணைந்து பணியாற்றும் வாய்ப்பமைந்தது. 'உண்டாலம்ம இவ்வுலகம்' எனும் பகுதியில் வணக்கத்திற்குரிய அறிஞர் பெருமக்களின் பாடுகளும் பங்களிப்பும் பதிவாயின. 'பெருமைச் சுவடுகள்' துறை சார்ந்த பெருந்தகையரின் உழைப்பையும் வெளியீடுகளையும் அறிமுகப்படுத்தியது. சுருக்க உரைகளாக மட்டுமே அரசால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களை ய்வாளர்களுக்கு வழங்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட புதிய பகுதியே, 'பதிப்பிக்கப்படாத பாடங்கள்'. தமிழ்நாட்டின் வேறெந்த நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்படாத இம்முயற்சியால் இதுநாள்வரை நூற்றுக்கும் மேற்பட்ட அரிய கல்வெட்டுகளின் பாடங்கள் வெளியாகியுள்ளமையைக் குறிப்பிடவேண்டும். முதன்மைச்சான்றுகளுள் ஒன்றாய் இலக்கியங்களைக் குறிப்பிட்டாலும் வரலாற்றுலகம் இலக்கியச் சான்றுகளை மதிப்பதில்லை. இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வரலாற்று உண்மைகளை, கலைச்சொற்களை, தொடர்களை, பெயர்களை வரலாற்றறிஞர்கள் பரவலாகப் பயன்படுத்தாமை கண்கூடு. செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்துக் குன்றில் கிடைத்த முதலாம் மகேந்திரவர்மர் காலத் தமிழ்க் கல்வெட்டுச் சுட்டிய, 'கொம்மை' என்ற பழந்தமிழ்ச் சொல்லை இலக்கியங்களில் அடையாளப்படுத்தி, பல்லவப் பேரரசர் மகள் ஒருவர் கொம்மை எனப் பெயர் கொண்டிருந்தமை சங்கத் தமிழ்த் தொடர்ச்சியே என்று இம்மைய ய்வர்கள் நிறுவியதை இங்குச் சான்றாகக் காட்டலாம். வரலாறு இதழில் தொடங்கப்பெற்ற தமிழகக் கோயிற் கட்டடக்கலைத் தொடர் தொல்காப்பியத்தில் தொடங்கிச் சங்க இலக்கியங்கள் வரையிலான கட்டடக்கலைச் சொற்களைத் தொகுத்தளித்துள்ளது. இதன்வழி இதுநாள்வரையிலும் அறியப்படாதிருந்த கட்டடக்கலைத் தரவுகளும், கலைச்சொற்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் சங்க இலக்கியங்கள் சுட்டும் பொதியில்களின் கற்பதிவுகளே என்பதை இலக்கிய அடிகளின் துணையுடன் மெய்ப்பிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற முயற்சிகள் தமிழையும் வரலாற்றையும் ஒருங்கிணைக்க உதவியதுடன், கோயிற்கலைகள் சார்ந்த ஆய்வுகளில் தமிழின் ஆளுமையை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் துணையாயின. தமிழ் மொழியின் சொல்வளமையை உறுதிப்படுத்தும் நிலையில் வரலாறு ஆய்விதழ் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, 'அப்பரும் அவிநயமும்'. அபிநயம் என்று வடமொழியில் அறியப்படும் அவிநயத்தின் அனைத்து முகங்களையும் அப்பர் பெருமான் தம் பதிகங்களில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியிருப்பதையும் அவிநயத்தின் வேர்கள் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பரவியிருப்பதையும் இக்கட்டுரை தெளிவுற முன்வைத்துள்ளது. புதிதாகக் கண்டறியப்படும் கலெட்டுகளிலுள்ள பொருள் விளங்காச் சொற்களைத் தமிழறிஞர்களுக்கும் கல்வெட்டறிஞர்களுக்கும் எழுதி அவற்றின் பொருள் அறிய வரலாறு இதழ் மேற்கொண்ட முயற்சி, தமிழில் நுழைந்த சொற்களை இனம் காணவும் தமிழில் வழங்கிய சில சொல்லாட்சிகளை விளங்கிக் கொள்ளவும் வழியமைத்தது. கீரனூர்க் கிள்ளுக்கோட்டைச் சாலையிலுள்ள மலையடிப்பட்டிக் குன்றில் கிடைத்த கல்வெட்டு, 'கறையூர் ஆலங்காரிக்குப் பிச்சும் பிராந்தும் அமனி' என்ற தரவைத் தந்தது. பிச்சு, பிராந்து, அமனி எனும் மூன்று சொற்கள் குறித்தும் பல அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு வரலாறு இதழ் பதிவுசெய்துள்ளது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலிருந்து படியெடுக்கப்பட்ட தளிச்சேரிக் கல்வெட்டை மறுபடிப்பிற்கு உட்படுத்திய நிலையில் இரண்டு அரிய தமிழ்ச்சொற்களை இவ்வாய்வு நிறுவனம் தமிழறிஞர்களின் பார்வைக்குக் கொணர்ந்தது. 'காண பாட' எனும் தொழில் சார்ந்த தொடரும், 'கோயின்மை' எனும் தொழில் பெயரும் பொருள் அறியும் நோக்கில் மொழி அறிஞர்களுக்கும் கல்வெட்டறிஞர்களுக்கும் எழுதி அனுப்பப்பட்டன. இவ்விரண்டுமே முந்து படிப்பாளர்களால், 'கானபாடி' என்றும் 'கோலினமை' என்றும் பிழையாகப் படிக்கப்பட்டிருந்தமையை இங்கு நினைவுகூரலாம். கல்வெட்டுகளில் காணப்படும் சொற்கள் இலக்கியங்களிலும் இலக்கியங்களில் காணப்படும் சொற்கள் கல்வெட்டுகளிலும் இடம்பெறும் நிலையில், காலநிரலான சொல்வழக்குத் தொடர்ச்சியையும் இலக்கியம் ஆவணம் இரண்டிற்கும் இடையில் நிலவிய தொடரியல் ஒற்றுமை வேற்றுமைக் கூறுகளையும் ஆராயமுடியும். அது போலவே இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் வேறுபடும் சொல்வழக்குகள், தொடர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட சொற்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து வகைப்படுத்தி ஆராயின் மொழிவளர்ச்சி, மொழி நலம், மொழிக் கலப்பு அறிதல் கூடும். வரலாறு ஆய்விதழ் இத்தகு முயற்சியில் கருத்துச் செலுத்தி வருவதுடன், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோளான கோயிற்கலைகள் தொடர்பான தகுதி சான்ற தமிழ்ச் சொற் களஞ்சியத்தை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. மொழியின் வளர்ச்சியில் இத்தகு முயற்சிகள் இன்றியமையாத் தேவையெனலாம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |